Wednesday, November 25, 2015

மீன் வடை / Fish Vadai


தேவையான பொருட்கள்;
மீன் – 400 கிராம்(சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்தது)
(மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் தேவைக்கு உப்பு போட்டு பிரட்டிய மீனை அவித்து அல்லது சும்மா பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த முள் நீக்கிய மீன் – 2 கப் வரும் 
(தண்ணீர் இல்லாமல் புட்டு மாதிரி இருக்க வேண்டும்)
முட்டை – 1
சின்ன வெங்காயம் நறுக்கியது – 1 கையளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
நறுக்கிய மல்லி இலை – சிறிது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகதூள்- தலா அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – சிறிது
தவா ஃப்ரை செய்ய தேங்காய் எண்ணெய் – 3 - 4 டேபிள்ஸ்பூன் ( தவா ஃப்ரை செய்ய)

செய்முறை:
ஒரு தட்டில் உதிர்த்த மீனோடு எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து நன்கு கையால் விரவி கொள்ளவும்.
சிறிய உருண்டையாக பிரித்து லேசாக தட்டி வைக்கவும்.


தவாவில் எண்ணெய் சூடு செய்து தட்டிய வடையை போட்டு இருபுறமும் சிவற பொரித்து எடுக்கவும்.

மீன் வடை ரெடி.குறிப்பு:
அவித்த மீனில் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் தவாவில் பொரிக்கும் பொழுது எண்ணெய் பொங்கும். முட்டை சேர்த்து விரவினால் சிக்கென்று இருக்க வேண்டும். அப்படி லூசாகிவிட்டால் பொடித்த பொட்டுக்கலடலை மாவு சேர்த்து கலந்து சுடவும்.

Friday, November 20, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 29. திருமதி நிஷா சலீம் - தஞ்சாவூர் தம்ரூட் -Guest Post -Mrs.Nisha Saleem /Tanjore Dumroot

இன்றைய சிறப்பு விருந்தினர், திருமதி. நிஷா சலீம், தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அன்பான கணவர், அருமை மகன் என்ற இனிமையான குடும்பம். இவர் எனக்கு, ஐக்கிய அரபு அமீரகம், அல் ஐன் தமிழ் குடும்பம் மூலம்  அறிமுகமானவர். ஆனால் இவருக்கோ என்னை முன்பே தெரியுமாம். என்னுடைய வலைப்பூவை நீண்ட காலமாகத் தொடர்ந்து பார்வையிட்டு வருவதாகச் சொன்னார்.
கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றிமா.

இவரை ஒரு கிச்சன் கில்லாடின்னு சொல்லலாம். நிஷாவிற்கு சமையல் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்ற அனுபவம்  உண்டு. இவர் ஒரு ஆல்ரவுண்டர்னு சொல்லலாம். இவருக்கு பயணம் செய்வது குறிப்பாக மிகவும்  பிடிக்குமென்கிறார்.
அல் ஐயினில் கடந்த தீபாவளி ஒன்றுகூடலின் போது  அவரிடம் தற்செயலாக அவரை  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். அவங்க  ஊர் பக்கம் எது பிரசித்தமோ அந்த ரெசிப்பியைப் பகிரலாம்னு சொன்னேன்,உடனே  ஒப்புக் கொண்டதோடல்லாமல் பெருந்தன்மையாக  தஞ்சாவூர் தம்ரூட் குறிப்பை நமக்காகச் சுவையாக செய்து அசத்தியிருக்கிறார்.
நல்வாழ்த்துக்கள் நிஷா. 
இனி தம்ரூட்  குறிப்பிற்கான பொருட்களைப் பார்ப்போம்.தேவையான பொருட்கள்;
ரவை - 500 கிராம்
(நைசாக இருந்தால் நல்லது)
சீனி - 600 கிராம்
முட்டை - 9
(சிறியதாக இருந்தால் - 9 அல்லது மீடியம் சைஸ் என்றால் 7 எண்ணம் போதுமானது)
வெண்ணெய் -250 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் - 150 மில்லி
முந்திரி பருப்பு -  தேவைக்கு அலங்கரிக்க
ஏலக்காய் - 5
உப்பு - பெரிய பின்ச்.

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.முதலில் முட்டை,சீனியை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.சீனி நன்கு கரைய வேண்டும்.அத்துடன் ரவை, கண்டென்ஸ்ட் மில்க், சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஏலக்காயை பொடித்து அதன் தோலை நீக்கி விட்டு பொடித்த விதையை மட்டும் சேர்க்கவும்.கலந்து விடவும்.பின்ச் உப்பும் சேர்த்து கலக்கவும்.
தம்ரூட்டிற்கான மாவுக் கலவை தயார் ஆகிவிட்டது.


பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பட்டர் உருக்க வேண்டும், அதனுடன்  மேற்குறிப்பிட்ட அளவு எண்ணெயும் சேர்க்கவும். சூடானவுடன் அதனில் முந்திரியை லேசாக வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில்  தயார் செய்த தம்ரூட்  கலவையை விடவும்.மீடியம் நெருப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.கீர் போன்ற பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.


ஒரு ஓவன் சேஃப் பவுலில் வெண்ணெய் தடவவும். அதனில் நாம் அடுப்பில் வைத்து தயார் செய்த தம்ரூட் கலவையை விடவும்.
மேலே வறுத்த முந்திரியை அழகாக எல்லா இடத்திலும் வருமாறு வைக்கவும்.
அலுமினியம் ஃபாயில் கொண்டு பவுலை கவர் செய்யவும்.

பின்பு குக்கிங் ரேஞ்ச் அல்லது அவனில் 180 டிகிரி வெப்பநிலையில் கன்வென்ஷனில் அதாவது கீழ் தட்டில் 20 நிமிடம்   மேல் தட்டில் 10  நிமிடம்  (கிரில் மோட்) வைத்து எடுக்கவும்.
கவனமாக வெளியே எடுத்து ஈரமில்லாத இடத்தில் வைக்கவும்.
ஆறிய பின்பு திறக்கவும்.
சூப்பர் மணத்துடன் சாஃப்டாக தஞ்சாவூரின் பாரம்பரிய தம்ரூட் தயார்.
விரும்பிய வடிவில் துண்டு போட்டுப் பரிமாறவும்.

கல்யாணமான புதிய மாப்பிள்ளைக்கு இப்படி ஸ்பெஷலாக செய்து தம்ரூட் பரிமாறுவார்களாம்.

ஆஹா ! கெஸ்ட் போஸ்டிற்காக நிஷா செய்த  அந்த டக்கரான தம்ரூட்டை எனக்கும் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிரமம் பாராமல் வீட்டிற்கு எடுத்து வந்து அன்புடன் தந்தாங்க. செமையாக இருந்தது. மனமார்ந்த நன்றி, மகிழ்ச்சி.
டயட் இருந்த என்னை இந்த தம்ரூட் திரும்பி பார்க்க வைத்து விட்டது என்பது தான் உண்மை.
மீண்டும் ஒரு நல்லதொரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன், 
ஆசியா உமர்.

Tuesday, November 17, 2015

காளிஃப்ளவர் சுக்கா / Cauliflower Chukka

தேவையான பொருட்கள்;-
காளிஃப்ளவர் – அரைக்கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – ஒரு கைப்பிடி.

செய்முறை:

காளிஃப்ளவரை சிறு சிறு பூக்களாகப் பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காளிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி விடவும்.
ஒரு கடாயில்  எண்ணெய் சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற விடவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
காளிஃப்ளவர் துண்டுகள் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும். மேற்குறிப்பிட்ட  மசாலா பொருட்கள் மிளகாய்த்தூள், மிளகு சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்க்கவும். பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். 
மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். அடுப்பை குறைத்து வைக்கவும். உப்பு  சேர்த்து சரி பார்க்கவும்.மசாலா வாடை நன்கு அடங்கி காளிஃப்ளவர் சுருண்டு வர வேண்டும். 
நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டு விடவும். அடுப்பை அணைக்கவும்.
சுவையான காளிஃப்ளவர் சுக்கா ரெடி.
இதனை பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.
இதனை சப்பாத்தி, ப்லைன் ரைஸ், ஃப்ரைட் ரைஸ் மற்றும் பிரியாணி வகைகளுடன் பரிமாறவும்.