Wednesday, December 29, 2010

விஜியின் அழைப்பு - புத்தாண்டு தொடர் பதிவு

அன்புடன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2011) நல்வாழ்த்துக்கள்.

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்று கற்பனையுடன் கனவு காண்பது வழக்கம். இந்த வருடமும் நிறைய எண்ணங்கள் இருக்கு.
2011 –ல் என் மகனின் கல்லூரி வாழ்க்கை ஆரம்பமாகப் போகிறது, என் மகள் பத்தாம் வகுப்பு, எல்லாம் வல்ல இறைவன் அருளால் எந்த இடையூறும் இல்லாமல் என் மகனின் கல்லூரி,மற்றும் மகளின் பள்ளி வாழ்க்கையும் வெற்றிகரமாக நல்லவிதமாக இருக்கவேண்டும் என்பது தான் எங்களின் முதல் எண்ணம்.
இரண்டாவது எண்ணம் என்னுடைய எடையை குறைக்க வேண்டும்,வருஷம் வருஷம் எடையை குறைக்கிறேன்னு சபதம் எடுத்து குறைத்தபாடில்லை,என்ன செய்வது? எடையை குறைத்தால் ஒட்டியாணம் வாங்கித் தருவதாய் ஒருத்தர் ஒத்த காலில் நிற்கிறார்.எப்படியாவது இந்த வருடமாவது அவர் சொன்ன அளவு எடையை குறைக்க வேண்டும் என்ற வைராக்கியம், பார்ப்போம்.

2010 டயரி குறிப்பு :
ஜனவரி :
முந்தைய வருடம் நெல்லையில் மாமாவிற்கு உடல் நலமில்லை என்று இருந்ததால் எல்லாருக்கும் வந்த சிக்கன் குனியா எனக்கும் வந்து என்னை முடக்கி போட்ட சோகம் மறக்க முடியாதது.

பிப்ரவரி : சிக்கன் குனியாவினால் பாதிக்கபட்டதால் பொழுதும் போகாமல் சோகத்தில் இருந்து மீள இந்த சமைத்து அசத்தலாம் ப்ளாக் ஆரம்பித்த சந்தோஷமான மாதம்.

மார்ச்: மாமாவும் உடல் நலம் தேறி வெளியே போகவர இருந்தது மகிழ்ச்சி.ப்ளாக் நிறைய நேரத்தை எடுத்து கொண்டது.

ஏப்ரல்: -யு.ஏ.இ கிளம்ப ஏற்பாடு,ரொம்ப பிஸியாக கழிந்த மாதம். 15 ம்தேதி மகனையும் அவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.மகள் ஸ்கூல் சேர்த்தது,ப்ளாக் இடுகைகள் தொடர்ந்தது, அப்புறம் மிக முக்கிய செய்தி பிரபலபதிவர் ஸாதிகாவின் அமீரக வருகை, அவரை துபாயில் சென்று சந்தித்தது தோழி ஜலீலா, மனோ அக்கா மற்றும் பலரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது.அடுத்த நாள் ஸாதிகா அல் ஐன் வந்த பொழுது என்னை பார்க்க வந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

மே:- ப்ளாக்கில் 30 இடுகை போட்டு அசத்தினேன்,என்னுடைய திருமணநாள் கொண்டாட்டம்.அதன் பிறகு மங்களூர் விமான விபத்து மனதை பிரட்டி போட்டதும் நிஜம்.நெல்லையை சேர்ந்த ஜாஸ்மின் என்ற மாணவி பத்தாம் வகுப்பில் முதலாக தேர்வு பெற்றது மகிழ்ச்சியை தந்தது.

ஜூன்: –தொடர்ந்து ஜூனிலும் 30 இடுகை.என்னுடைய நூறாவது பதிவு, முதல் கதை ஆஷாகுட்டியை எழுதினேன் என்பதும் மகிழ்ச்சி. பிள்ளைகளின் பரீட்சை முடிந்து விடுமுறை,ஊர் கிளம்ப ஆயத்தம்.

ஜூலை:- விடுமுறையை கழிக்க நெல்லை வருகை. என் கணவரின் பிறந்தநாள், அடுத்த மகிழ்ச்சியான நிகழ்வு அண்ணன் மகனுக்கு அக்காள் மகளை திருமணம் செய்தது இரண்டும் சொந்தம் என்பதால் திருமண கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக கழிந்தது. 2003 –ல் கிரகப்பிரவேஷம் செய்து அதன் பின்பு ஒரிரு வருடங்கள் தங்கி பின்பு பூட்டிய வீட்டை திறந்து திரும்ப சொந்தம் பந்தம் நட்பு என்று 300 நபர்களை அழைத்து எங்கள் வீட்டு விசேஷத்தில் ஒரு பெரிய கெட்டுகெதர், விருந்து விசேஷம் என்று மகிழ்ச்சியாக கழிந்த மாதம்.
ஆகஸ்ட்: – திரும்ப யு.ஏ.இ பயணம்.கோடை விடுமுறை என்றாலும் பையன் +2 என்பதால் டியூசன் படிப்பு என்றும் .நோன்பு மாதம் என்பதால் நேரம் வேகமாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.என்னுடைய பிறந்த நாளும் இந்த மாதம் தான்.

செப்டம்பர்:- புனித நோன்பு பெருநாள் கொண்டாட்டம், விடுமுறை என்று சந்தோஷமாக கழிந்தது.எந்திரன் படம் ரிலீஸ் வேறு தமிழ் நாட்டை அல்லோகலப்படுத்தியதை மறக்க முடியுமா?

அக்டோபர்:- என் இரண்டு குழந்தைகளின் பிறந்த தினங்கள் கொண்டாட்டம்,ப்ளாக்கில் 200 வது பதிவு.
நவம்பர்: – கொஞ்சம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சரியானது.தொடர்ந்து அக்காவின் யு.ஏ.இ வருகை,ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறை கொண்டாட்டம், பிக்னிக்ஸ் என்று மகிழ்ச்சியாக கழிந்தது.
டிசம்பர்: – யு.ஏ.இ யின் தேசிய தின கொண்டாட்டம் விடுமுறை,விண்டர் ஹாலிடேய்ஸ், படிப்பு என்று குழந்தைகளுடன் நேரம் கழிந்து கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த வருடம் நிறைய நல்ல விஷயங்கள் மற்றும் மறக்க முடியாத சம்பவங்களும் நடந்தது.

பிறக்கின்ற புது வருடத்தில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று புதுப்பொலிவுடன் நிறைவான வாழ்க்கை வாழ என் நல்வாழ்த்துக்கள்.
விஜி நிறைய தகவல்கள் கேட்டிருந்தாங்க,நானும் அப்ப அப்ப ப்ளாக்கில் பகிர்ந்து கொண்டு வந்தமையால் திரும்ப ரிப்பீட் செய்தால் போரடித்து விடும்.
இந்த தொடர் குறித்த விபரத்தை தோழி விஜியின் ப்ளாக் சென்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். (கிளிக்கவும்)
விஜி பத்து நபர்களை ஏற்கனவே அழைத்து இருக்காங்க.
நான் இதனை தொடர அழைப்பது மனோஅக்கா,மேனகா,மகி,புவனேஸ்வரி,கௌசல்யா,வானதி,அஸ்மா,ஆமினா,சகோ.எல்.கே,சகோ.இளம் தூயவன்.

--ஆசியா உமர்.

Tuesday, December 28, 2010

தமிழ்மண விருதுகள் -இரண்டாம் சுற்று.

பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் போட்டியில் இரண்டாம் சுற்றில் என் சிறுகதையான எம்மா -வும் இடம் பெற்று இருக்கு.கதையை படித்து பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.வாக்களிக்க இங்கு செல்லவும்.

சகோ. அப்துல்காதர் வழங்கிய ஆஹா பக்கங்களின் அட்டகாசமான விருதுகள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. இது காயத்ரி குக்ஸ்பாட் வழங்கிய அழகான விருது. மிக்க நன்றி. மகிழ்ச்சி.
இந்த விருதை பெற்றுக்கொள்ள என்னை பற்றி ஏழு விஷயம் சொல்லனுமாம். உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறேன்.
1. சொந்த ஊர் நெல்லை மாவட்டம். வசிப்பது அல் ஐன்- யு.ஏ.இ.
இப்போதைக்கு சமையற்கட்டே உலகம்னு வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு.சமைப்பதும் பரிமாறுவதும் பிடித்தமான ஒன்று.
2. சொந்த பந்தம் நட்பு என்று என்னை சுற்றி பெரிய பாசக்கார வட்டமே இருக்கு.
3. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தூங்குவது, அதனால தூங்கு மூஞ்சி நினைச்சிடாதீங்க.சுறுசுறுப்புக்கு மறுபெயர் கூட நான் தான் என்றும் வைத்து கொள்ளலாம்.தூங்கி விழிக்கும் பொழுது கிடைக்கிற புத்துணர்ச்சியே தனிதான்.
4. அழகானவர்களை விட அன்பானவர்களை ரொம்ப பிடிக்கும்.
5. பொழுதுபோக்காக புத்தகம் படிப்பது ஆனால் இப்ப ப்ளாக்கே என் நேரத்தை எடுத்து கொள்கிறது.
6. விருப்பையும் வெறுப்பையும் நெருங்கியவர்களிடம் உரிமையோடு உடனே காட்டிவிடுவது என் இயல்பு.
7. தனிமை கிடைக்கும் பொழுது இறைவனை வழிபடுவது பிடிக்கும்.
இந்த விருதுகளை வெங்கட் நாகராஜ்,ஜெகதீஸ்,மஹா,சாருஸ்ரீ ஆகியவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மறக்காமல் உங்களை பற்றியும் சொல்லுங்க.
--ஆசியா உமர்.


Monday, December 27, 2010

மாங்காய் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்;
மீன் - அரை கிலோ
மாங்காய் - 1
சின்ன வெங்காயம் - 15
அல்லது பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 6 பல்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1- ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 சிறிய கப்
அல்லது அரைத்த தேங்காய் விழுது - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைஸ்பூன்
வெந்தயம் - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மீனை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் உப்பு போட்டு அலசி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு,மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.சதை பற்றான கொட்டையில்லாத சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.புளி ஊறவைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்,தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடவும்,நன்கு மசிந்து விடும்,அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கி மணம் வரவேண்டும்.

நன்கு கொதி வரவும் மீனை போடவும்.


சிறிது கொதி வரவும் நறுக்கிய மாங்காய் சேர்க்கவும்.மாங்காயும் மீனும் வெந்து வரும்.அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.நன்கு கொதிவரவும் அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரவும் குழம்பு ரெடி. விரும்பினால் மல்லி இலை தூவி இறக்கவும்.


சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி,நறுக்கிய மாங்காய்,சிறிது நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்வதால் குழம்பு சூப்பராக இருக்கும். காரத்திற்கு தகுந்தபடி மிளகாய்த்தூளை குறைத்து கொள்ளலாம்.


--ஆசியா உமர்.
Wednesday, December 22, 2010

பேக்(கிங்)கும், ஆனி ஆன்ட்டியும் / Baking & Annie Auntyஅபுதாபியில் இருந்த சமயம் என் மகளை ஆர்ட் & கிராஃப்ட் கிளாஸ்க்கு உமா என்கிற தோழி வீட்டிற்கு அனுப்பி வந்தேன்,அப்படியே அங்கு நானும் தையல் கற்று கொண்டேன்.எத்தனையாவது முறைன்னு யாரோ கேட்கிற மாதிரி இருக்கு? எனக்கே தெரியலை,எல்லாரும் பாவாடை தாவணியில் இருந்து சுடிதாருக்கு மாறினாங்க,நான் மட்டும் என்னவாம்?சேலையில் இருந்து சுடிதாருக்கு மாறினேன், சுடிதார் தைக்க பழகத்தான் போனேன், தைக்க படிக்க பத்து வகுப்புகள், 250 திர்ஹம்,படித்ததோடு சரி,எனக்கு மட்டும் ஒரு சில சுடிதார் தைத்தேன், நான் தைத்த சுடிதார் தான் எனக்கு பிடித்தது, சோம்பல் தான் காரணம்,என்ன செய்ய? எதையும் உருப்படியாக செய்ததாக சரித்திரம் நம்ம கிட்ட இல்லை.

அந்த சமயம் என்னைப்போல் அங்கு வந்த ஆனி ஆன்ட்டியை பார்த்து ஆச்சரியமாக இருந்தது வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.என்னிடம் ரொம்ப பிரியமாக பழகினாங்க,வீட்டிற்கு வரும்படி அடிக்கடி அழைத்ததால் நானும் சென்று வந்தேன்,அங்கு போனால் ஒரு ஆர்ட் கேலரிக்குள் நுழைந்த உணர்வு.அப்படியொரு அழகாக வீட்டை வைத்திருந்தாங்க,இரண்டு மகன்கள் என்றும் அவர்கள் இருவரும் மருத்துவர்கள் என்றும் ஒருவர் துபாயில்,மற்றொருவர் இந்தியாவில் இருப்பதாகவும்,பொழுது போக எல்லாம் கற்று கொண்டதாகவும், அவர்களின் சுறுசுறுப்பை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சரியம்,போரடித்து இருந்த எனக்கு அவர்கள் பழக்கம் கிடைத்ததும் புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது.

பொதுவாக என்னுடைய நட்பு எப்பொழுதும் என்னுடன் வயது மூத்தவர்களுடன் தான், என்பதாலோ என்னவோ,நிறைய அக்கா,ஆன்ட்டிஸ் பழக்கம். ஆன்ட்டி நிறைய செய்முறை வகுப்புக்கள் பொழுது போக்காக எடுத்து வந்தாங்க.ஒரு பெரிய லிஸ்டே வைத்திருந்தாங்க,சரி என்று நான் பேக்கிங் செலக்ட் செய்து அந்த கிளாஸ்க்கு வருவதாக சொன்னேன்,நான்கு வகுப்பு ஒரு செட் என்றும், முன் பணமாக 200 திர்ஹம் கொடுத்து விட்டால் நான்கு கேக் வகை சொல்லி தருவதாயும்,எதுவும் வகுப்பிற்கு எடுத்து வரவேண்டாம் என்றும் சொல்லியதால் மகிழ்ச்சி.

நானும் வாரம் ஒரு நாள் என்று மாதத்தில் நான்கு நாட்கள் சென்று வெரைட்டியாக கேக்குகள் செய்யவும் கற்று கொண்டேன்,கேக் செய்து 2/3 எனக்கு,1/3 ஆண்ட்டிக்கு என்று பகிர்ந்து கொள்வது வழக்கம்.ஆனால் ஒவ்வொரு நாளும் ஹோம்வொர்க் தருவாங்க மறுவாரம் அவங்க சொன்ன விதமாய் கேக் செய்து எடுத்துட்டு போகனும், ஓவனோ அல்லது குக்கிங் ரேஞ் இருந்தால் கேக் செய்து விடலாம்,ஒரு சில சாமான் வாங்கினால் போதும்,என்று ஒரு பெரிய லிஸ்டே தந்தாங்க,நானும் ஆசையாக வாங்கி கேக் செய்து பார்த்து நன்கு தெரிந்து கொண்டேன்.

அவங்க சொல்லி தந்த விக்டோரியா சாண்ட்விச் கேக் (Victoria Sandwich Cake)என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.சாதாரண ஃபோம் கேக் செய்து அதனை கட் செய்து இடையில் Kissan Jam தடவி லேயர் லேயராக வைத்து மூடி கட் செய்து பரிமாறும் பொழுது குட்டீஸ்கு மிகவும் பிடித்திருந்தது.அப்புறம் தான் தெரிந்தது Kissan Jam காரணம் என்று. இப்ப என்னுடைய குழந்தைகள் வளர்ந்தாலும் கிஸான் ஜாம் மீது உள்ள ஆசை மட்டும் போகவில்லை.


நான் படித்ததை இலவசமாக எனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்தேன்,ஜாலியாக இருந்தது.என்னுடைய செய்முறை நோட்ஸ் பல இடம் சுற்றி பின்பு தொலந்தே போனதுன்னா பார்த்துகோங்க.நிறைய அவங்க கிட்ட இருந்து கத்துகிட்டேன்,இப்ப அவங்க கேரளாவில் எங்க இருக்காங்கன்னு தெரியலை,என்னோட மெயில் ஐ.டி கொடுத்தேன்,அவங்க ஐ.டி வாங்காமல் விட்டு விட்டேன்,இல்லாட்டி நிறைய டவுட் கேட்டு தெரிந்திருக்கலாம்.
கிறிஸ்துமஸ், புது வருடம் வரவும் ஆனி ஆன்ட்டி நினைவு வந்து விட்டது.
பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு இடுகையிட்டு நாளாவதால் என் பேக்கிங் பாத்திரங்கள் பற்றி இங்கு சிலவற்றை பகிர்ந்து இருக்கிறேன்.


இந்த பேக்கிங் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது,இதில் கேக் மாவு ஊற்றி வைத்தால் எடுப்பது ஈசி. 3 பகுதியாக இருக்கும்.

இதில் வெறுமே ரவுண்டாகவும் செய்யலாம்,நடுவில் இடைவெளி விட்டும் செய்யலாம்.இந்த ஹார்ட் பேக்கிங் ட்ரே எனக்கு மிகவும் பிடிக்கும்.


இதுவும் இரண்டு பகுதியாக இருக்கும்.கேக் பேக் செய்து எடுப்பது ஈசி.

கப் கேக் மஃபின் ட்ரே..


மேலும் நான் அடிக்கடி பேக்கிங் செய்ய பயன்படுத்தும் இன்னும் சில பாத்திரங்கள், உபகரணங்கள்.


மெசரிங் கப் வாங்கினேன்..ரொம்ப உபயோகம்.

இந்த மெசரிங் ஸ்பூன் அளவு கரெக்டாக இருக்க வாங்கியது.

இந்த பவுல் எனக்கு மிக்ஸிங் செய்வதற்கு ரொம்ப வசதியாக இருக்கும்.


இது ஐஸிங் டிசைன் செய்ய உபயோகப்படுத்துவது.

இந்த கேக் ஸ்டாண்ட்  அலங்கரிக்கப்  பய்ன்படுத்துவது.

இதெல்லாம் ஆன்ட்டி சொல்லி வாங்கிய பொருட்கள்,எல்லாம் அலமாரியில் தூங்கிட்டு இருந்துச்சு,இப்ப தான் அவைகளை வெளியே எடுத்தேன்.

சரி என்று ப்ளாக்கில் போட்டாச்சு.

கேக் செய்ய ஆர்வம் தான்.பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்காக என்னுடைய ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட்ஸ் கேக் செய்து பாருங்க.இதனை பார்க்க அறுசுவையை கிளிக் செய்யவும்.இது எனக்கு ஆனி ஆன்ட்டி சொல்லி தந்தது.நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த அந்த கேக்கின் ருசி இன்றும் என் நாவிலும் நினைவிலும் இருக்கு.அருமையாக வந்திருந்தது.


நான் 2008 -ல் அறுசுவையில் கொடுத்த இந்த கேக் ரெசிப்பியை பிரபல தின நாளிதழ் ஒன்று அப்படியே காப்பி பேஸ்ட் செய்து 2009 -ல் போட்டிருக்காங்க பாருங்க.
அதனை பார்க்க இங்கே செல்லவும்(கிளிக்கவும்).அந்த நாளிதழுக்கு நானும் என் பெயரையாவது குறிப்பிடும் படி மெயில் அனுப்பியும்,கமெண்ட்டிலும் தெரிவித்தும் பலனில்லை,இந்த ஒரு ரெசிப்பி மட்டும் இல்லை,இன்னும் சில கேக் ரெசிப்பிக்கள்,மற்றும் பல சமையல் குறிப்பும் காப்பி செய்து போட்டிருக்காங்க,உதாரணத்திற்கு இந்த ஒன்றை மட்டும் கோடிட்டு காட்டி இருக்கிறேன்.எல்லாம் நம்ம மக்கள் தானே பயன்பெறப் போறாங்கன்னு பேசாம இருந்திட்டேன், நமக்கு முட்டி மோத கொம்பு இல்லை.

என்னோட ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கேக்கை செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.உங்கள் அனைவருக்கும் என்னுடைய
இனிய கிறிஸ்த்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கேக் படம் உபயம் - கூகிள் - நன்றி.
---ஆசியா உமர்.

Tuesday, December 21, 2010

பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 300 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பாசிப்பருப்பு- 50 கிராம்
மிளகாய் வற்றல் - 4
சீரகம்- அரைடீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு

பீட்ரூட்,வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்,பாசிப்பருப்பை லேசாக வெதுப்பி உதிரியாக வேக வைத்து எடுக்கவும்,சீரகம், 3 மிளகாய் வற்றல் மிக்சியில் சுற்றி,அத்துடன் தேங்காய் சேர்த்து பரபரவென்று அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம்,பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.சிறிது மூடி விடவும்.

பீட்ரூட் வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்,சிறிது உப்பு சேர்க்கவும்,சிறிது உப்பு கூடினாலும் கடுத்தது போல் ஆகிவிடும்.


அரைத்த தேங்காய்,மிளகாய்வற்றல்,சீரகம் விழுதை சேர்க்கவும்.நன்றாக பிரட்டி பச்சை வாடை போக விடவும்.

நறுக்கிய மல்லி இலை தூவவும்.
சுவையான சத்தான பீட்ரூட் பொரியல் ரெடி.

இது சாதம் சப்பாத்தியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

-ஆசியா உமர்.

Saturday, December 18, 2010

சுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்


தேவையான பொருட்கள் ;
காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு
நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன்
முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6-8
கடுகு - கால்ஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
கடலை பருப்பு- 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு பெரிய பல் -3
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்குமுதலில் வெறும் வாணலியில் மல்லி,சீரகம்,மிளகு,கடுகு,வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்,அதிலேயே பாதி சுண்டவத்தலை(15-20) வறுத்து எடுத்து அரைக்க எடுத்து வைக்கவும்.பாதியை குழம்பில் போட வைக்கவும்,இதனில் பாதி சுண்ட வத்தலையும் சேர்த்து அரைப்பதால் குழம்பு காரம்,கசப்பு,புளிப்பு என்று சுவை அருமையாக இருக்கும்.பின்பு அதே வாணலியில் பூண்டு,கருவேப்பிலை வறுத்து அத்துடன் அணைத்து பொருளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி ஆறவைக்கவும்.புளியை ஊறவைக்கவும்.வறுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
புளிக்கரைசலோடு அரைத்தவற்றை சேர்த்து கரைத்து தேவைக்கு உப்பு சேர்த்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு பாதி சுண்டவத்தலை எண்ணெயில் போட்டு பொரிய விடவும்.


சுண்ட வத்தல் பொரியவும் அரைத்த விழுது புளிக்கரைசலை சேர்க்கவும்.


நன்கு கொதி வரும்,சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் வற்ற விடவும்.குழம்பு வற்றி இப்படி வரும்.


குழம்பு சிவப்பாய் பார்க்க அழகாய் இருக்க ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து உடன் ரெடி ஆன வத்தக்குழம்பில் கொட்டி கலந்து விடவும்.நன்கு கலந்து விடவும்.


சுவையான சூப்பரான வத்தக்குழம்பு ரெடி.அப்பளம் ஓவனில் சுட நான்கு அப்பளத்தை இப்படி 40 செகண்டு வைத்து எடுக்கவும்.


இப்படி பொங்கி சூப்பராக வரும்.இப்ப 40 நொடியில் சுட்ட அப்பளம் ரெடி.


சுடசுடச்சாதம்,சுண்ட வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம் ரெடி.

இது எங்க பெரியம்மா மகள் ரஹ்மத் அக்கா சொல்லித் தந்தது.வெங்காயம்,தக்காளி,தேங்காய் சேர்க்காததால் ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். அஞ்சறைப்பெட்டியில் உள்ள அனைத்து பொருளும் சேரும் இந்த வத்தக்குழம்பு சூப்பராக இருக்கும். காரம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றல் கூட்டி கொள்ளலாம்.என் மாமாவிற்கு இந்த வத்தக்குழம்பு செய்தால் மிகவும் பிடிக்கும்.


--ஆசியா உமர்.