Saturday, February 20, 2010

தோசை கூட சுடத் தெரியாத நான்


இது பல வருடங்களுக்கு முன்னாடிங்க,இப்பவும் அப்படி ஒண்ணும் பாராட்டு கிடைக்கலை,அவர் சாப்பிடும்பொழுது நல்லாயிருக்கான்னு கேட்டால் ஒரே பதில் தாங்க not bad.ஆகா என்ன ருசின்னு சொல்வார்ன்னு எதிர்பார்த்து தினமும் கேட்பதுண்டு,அவரும் பதிலை மாத்துறதாக இல்லை,நானும் கேட்பதை விடப்போவதில்லை.

எங்க வீட்டில் ஒன்பதாவதுங்க (கடைக்குட்டி) நான்.ஆறு அண்ணன்,இரண்டு அக்கான்னு பெரிய குடும்பம்.அதனால எனக்கு கிச்சன் உள்ளே நுழைய இடமே எப்பவும் கிடைத்தது இல்லை.செல்லமாக வெளியூர் எல்லாம் அனுப்பி படிக்க வைச்சாங்க.நானும் சொந்த மாமா மகனுக்கே வாக்கப்பட்டு போனேன்,அங்கு என்னன்னா நான் தான் மூத்த மருமகள்,அவர்,மாமா,மாமி,ஒரே மைனி,2 கொழுந்தன்னு சந்தோஷமான குடும்பம்.மாமி உடம்புக்கு முடியாதவங்க என்பதால மைனி தான் பொறுப்பு எல்லாம்,அதனால் மருமகள் வரும் பொழுது மகளை திருமணம் செய்து அனுப்பனும் என்று இருந்தாங்க,இருவருக்கும் ஒரே நாள் திருமணம்.மைனி போனால் அப்ப நான் தானே எல்லாம் செய்யணும்.ஒரே பயம் எதற்கெடுத்தாலும் பயம்,தெனாலி கமல் அளவிற்கு இல்லைன்னாலும் எப்பவும் பயத்துடன் தான் இருப்பேன்,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்,விவேக் காமெடி தாங்க.

இதில் எங்கிருந்து தோசை வருதுன்னு கேக்கறீங்களா ? விழுந்து விழுந்து எங்க வீட்டில மீன் ஆய்வதில் இருந்து ஆட்டுக்கால் சுத்தம் செய்யன்னு கஷ்டமான வேலை எல்லாம் சொல்லி தந்தாங்கஆனால் ,இந்த தோசையை சுட்டு பாருன்னு யாரும் சொல்லலை,நானும் சுட்டுப்பார்க்காமலே புகுந்த வீடு வந்து சேந்தாச்சு.

திருமணம் ஆன புதிதில் கூட்டமாக எல்லாரும் இருந்ததால் ஜாலியாக இருந்திச்சு.நானே சமைக்க வேண்டிய நேரம் வந்தது,மாமி இன்னைக்கு தோசை சுடுறியாமன்னு ஒரு நாள் கேட்டாங்க,தோசை தானேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்.ஓவ்வொருத்தராக சாப்பிட உட்கார்ந்தாங்க,தோசைக்கல்லை எண்ணெய் ,வெங்காயம் தேய்த்து ரெடி பண்ணீயாச்சு,ஒட்டாமல் வரணும் என்று வேண்டிகிட்டே ஊற்றினேன்,திருப்பி போட்டேன்,அழகாக வந்தது.ஆனால் சேப் தாங்க அமீபா,யுக்ளினா மாதிரி வந்திச்சு.எப்படியோ 10 தோசை சுட்டு வைத்து விட்டேன்,எல்லாரும் சாப்பிட்டு விட்டு ஒண்ணும் சொல்லலை,மாமா சாப்பிடனும்,திக் திக் னு இருந்திச்சு.அப்ப பார்த்து எங்க உறவினப்பெண் நல்ல தண்ணீர் எடுக்க எங்க வீட்டீற்கு வந்தா,என்னை விட 8 வ்யது சின்ன பொண்ணு,அவளிடம் நான் உனக்கு தோசை சுடத்தெரியுமான்னு பாவம் போல் கேட்டேன்,ம்ம் நல்ல சுடுவேனே ! அப்படின்னா, கொஞ்சம் தோசை சுடு நான் உனக்கு தண்ணீர் அடித்து தருகிறேன்னு ஒரு அக்ரிமெண்ட் போட்டுட்டு.நான் தண்ணீர் அடிக்க, அவள் தோசை சுட்டு முடிக்க மாமா வரவும் சரியாக இருந்தது. பயம் இல்லாமல் சூப்பர் தோசையை மாமாவிற்கு பரிமாறினேன்.இப்படி கொஞ்ச நாள் ஓட்டி எப்படியோ எல்லாம் செய்ய கற்றுக்கொண்டாச்சு.

இப்ப என்னன்னா என் மகள் இப்பவே நான் சமைப்பேன் என்று களத்தில் இறங்கி அட்டகாசம்,நானும் சரின்னு முடிந்ததை செய்யுன்னு விட்டுட்டேன்,என் மகன் நானும்னு,அவனும் சமைப்பான்,அவன் நூடுல்ஸ்,சாண்ட்விச் ஸ்பெஷலிஸ்ட்ங்க.அவருக்கு நல்ல டீ,காபி போடத்தெரியும்.மற்றவங்களுக்கு டீ தைரியமாக போட்டுவிடுவேன்,அவருக்குன்னா இன்னமும் பயம்.
மாமா வீட்டிலே யாரும் சமைத்ததை குறை சொல்லாததால் தட்டித்தடுமாறி இப்ப not bad –ன்னு சொல்ற அளவுக்கு சமைக்க கற்றுக்கொண்டேன்.அப்ப்டி இப்படின்னு கற்றுக்கொண்டதை தாங்க இங்க போட்டு அசத்தப்போறேன் .

ஆசியா உமர்.

18 comments:

ஜெய்லானி said...

நல்ல வேளை போன இடத்தில் சுடுதண்ணி வைக்க தெரியுமான்னு கேட்காம விட்டாங்களே!! தப்பிச்சீங்க

kavisiva said...

ஆசியா அமீபா மாதிரி தோசை சுட்டீங்களா?!

நானும் முதன்முதலா தோசை சுட்டப்போ அப்படித்தான் இருந்துச்சு! யாரவது ஏன் இப்படி இருக்குன்னு கேள்வி கேட்டா(எங்க அண்ணன் மட்டும்தான் இப்படி கேட்பார். மற்றவங்களுக்கு என்கிட்ட கேட்க பயம் :-))தோசையை பிய்ய்ச்சுத்தான சாப்பிடப் போறீங்க அப்படியேவா முழுங்கப் போறீங்க சும்மா சத்தம் போடாம சாப்பிடுங்கன்னு மிரட்டுவேன் :-) இதெல்லாம் பிறந்த வீட்டுல நடக்கும்.

sarusriraj said...

ம் வாழ்த்துக்கள் ,சீக்கிரம் ஆராம்பமாகட்டும் உங்கள் அட்டகாசங்கள் (சமையல்)

asiya omar said...

ஆமாம்,ஜெயலானி அதை நான் யோசிக்கவே இல்லையே.தப்பித்தேன்,அது தானே கஷ்டமான வேலை.

asiya omar said...

கவி,கத்துகுட்டிங்க எல்லாரும் முதல்ல அமீபா மாதிரி தான் சுடுவாங்க போல ,என்னை எல்லாரும் மிரட்டினா பத்தாதா?

asiya omar said...

சாரு ,முதல்ல ஏற்கனவே அயிர மீன் கூட்டை போட்டு தூள் கிளப்பியிருக்கேனே !இன்னும் வரும் அசததலாய் .

Mrs.Menagasathia said...

ஆசியாக்கா தோசையை நாந்தான் அமீபா ஷேப்ல சுட்டேன் நினைச்சுட்டுருந்தா நீங்களுமா??அப்போ நமக்கு நிறைய கூட்டணி இருக்குப்போல...இப்பமாட்டும் என்னவாம் தோசை மட்டும் எனக்கு அழகா வராது.அதே அமீபா மாதிரிதான் வரும்...

asiya omar said...

மேனகா,போற போக்கை பார்த்தால் அமீபா தோசைன்னு ஒரு குறிப்பு வந்திடும் போல.

ஸாதிகா said...

ஆசியா உங்களுக்காவது அமீபா,யுக்ளினா மாதிரியாவது தோசை வந்து புக்ககத்தினரருக்கு வயிறார தோசையாவது சுட்டு போட்டீர்களே,எனக்கு அப்போ தோசை சட்டியை விட்டே வராது.கடையில் வாழையில் இலையில் சுருட்டி வரும் தோசையைத்தான் சாப்பிட்டு இருக்கிறோம்.

இதெல்லாம் திரும்
ணமான புதிதில் என் மாமனாருக்கு உடம்புக்கு முடியாமல் இருந்த பொழுது என் மாமியார் வீட்டில் தங்கி இருந்த பொழுது நடந்தது.அது பற்றி எதுவுமே குறை சொல்லாமல் மாமனார் இருந்த அந்த மோசமான நிலையிலும் சரி,அதன் பின்னும் சரி என் மாமியார் எந்த குறையுமே சொல்லாமல் வாழ்ந்து மறைந்து போனது இப்பொழுது நினைவு கூர்ந்து என் கண்களை குளமாக்கிவிட்டது.

ஹைஷ்126 said...

அது எப்படி எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி அமீபா, உலக வரைபடம் அல்லது 5 கண்டங்களில் ஏதாவது ஒரு கண்டம் போலவே தோசை சுடுகிறீகள்.

நானும் திருமணம் ஆன புதிதில் அமீபாவைப் பார்த்து லதாவுக்கு ட்ராப்டிங் மெஷின் வைத்து எப்படி வட்டமாக தோச்சை சுடலாம் என சொல்லிக் கொடுத்து இருக்கேன்...:)

asiya omar said...

ஆமாம் ஸாதிகா பெரியவங்க(அனுபவசாலிகள்} கிட்ட நிறைய நல்ல விஷ்யம் இருக்கும்,குறை சொல்லாமல் இருப்பது எவ்வளவு நிம்மதியை தரும் தெரியுமா?நாமே குறையை கண்டு பிடித்து மனவருத்த மில்லாமல் திருத்திக்கொள்கிறோமே.

asiya omar said...

சகோ.ஹைஷ் மீண்டும் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

prabhadamu said...

ஆசியாக்கா தோசையை நாந்தான் அமீபா ஷேப்ல சுட்டேன் நினைச்சுட்டுருந்தா நீங்களுமா??


நானும் தான்....

asiya omar said...

ப்ரபா எல்லாரும் முதல்ல இப்படி தான் சுட்டு பழகிருக்காங்கன்னு இப்ப தான் தெரியுது.

sridharan said...

முதன் முறையாக தோசை சுடும் போது வேற்று கிரக உயிரினங்கள் போல் வருவது சகஜம். இது ஒன்றும் மாற்றமுடியாத விஷயம் இல்லை. இப்பொழுது நன்றாக வருகிறது என்று வேறு சொல்லயுல்லிர்கள். இருந்தாலும் அன்றைய விசயத்தை இன்றும் நினைக்கும் போது சிரிப்பு தான் வரும்.

நான் எனது வருங்காலம் பற்றி அறிய ஒரு உபயோகமான இணையதளத்தை பார்த்தேன். அது எனக்கு முழுமையான தேடலுக்கு விடை கிடைத்தது. நீங்களும் உங்களின் எதிர் காலம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணையம் பயனாக இருக்கும். www.yourastrology.co.in

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - கடைக்குட்டியா - பலே பலே - செல்லம் ஜாஸ்தி இருந்திருக்குமே நானும் 10 பேர்ல மூணாவது. மேலே 2 அண்ணனுங்க - கீழே 2 தங்கச்சிங்க மற்றும் 5 தம்பிங்க - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - புகுந்த வீட்டுல வந்து கத்துக் கிட்டு அசத்துறீங்க போல - ம்ம்ம் - NOT BAD - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கோவை2தில்லி said...

தோசை சுட்ட கதை சூப்பரா இருக்குங்க....இப்பத் தான் சமைத்து அசத்தறீங்களே.....:))


வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.