Monday, February 22, 2010

என் வீட்டுத்தோட்டத்தில்


என்னை துயில் எழுப்பியது யார்?
விழித்தால் விழித்திரையில் ஓடியது
என் வீடும் தோட்டமும்.
உடனே ஆட்டோவிற்கு அழைப்பு
ஏறினேன் இறங்கியது தான்
தெரியும்.

வாசற்கதவை திறந்தேன்
என்னை எதிர்கொண்டு அழைக்க
ஒருவரும் இல்லை.

சில்லென்று இருக்கும்
என் தோட்டம்
சினம் கொண்டதோ !

கண்ணடித்து சிரிக்கும்
கிறிஸ்த்மஸ் மரம்
கண்மூடிக் கிடந்தது .

லாலா பாடும் லானும்
கண்டு கொள்ளவில்லை
என்ன ஆனது?

என்றும் இளமையான
இலட்சை கொட்டை மரம்
இறுமாப்புடன் இருந்தது .

கொய்யா என்னை
கொல்லத்தான் இல்லை
குரைத்தது.

பச்சை பசேலென்று இருக்கும்
கருவேப்பிலை
கறுத்துக் கிடந்தது.

முருங்கை மரமோ
முத்திய காய்களுடன்
என்னை அடிக்க வந்தது.

தென்னை மட்டும்
என்னவாம்
தேம்பித் தேம்பி அழுதது.

ஒரு பக்கம் இப்படி
மறுபக்கம் போனால்

மனதை மயக்கும் மல்லி
மாண்டும் விடும் போல்
இருந்தது.

ராஜாவை மயக்கும் ரோஜா
ராட்சசியாய்
காட்சியளித்தது

மருதாணி மரித்தே விட்டது
மாதுளை மயங்கிக் கிடந்தது
வாழை வாடியிருந்தது
செல்லமாய் வளர்த்த குரோட்டன்ஸ்
சுருண்டுக் கிடந்தது
என்னடா செல்லம் என்றேன்

நான்கு நாட்களாய்
வாட்ச்மேன் வரலையாம்
அதனால் வாட்டமாம்

விழுந்தடித்து அவற்றின்
தாகம் தீர்க்க
தண்ணீர் தந்தேன்

நான் தவமிருந்து
வளர்த்த செல்லங்களுக்கு.

சிறிது நேரம் கழிந்தது
சீறிய தோட்டம்
சிந்து பாடியது

கிளம்பினேன்
கதவை மூடினேன்,

அம்மா என்று சத்தம் வரவே
திரும்பினால் மணிப்ளாண்ட்
மன்னித்து விடம்மா
உன்னை மறந்து விட்டேனே
எதுவும் வேண்டாமம்மா
நானும் வருவேன்
உன்னோடு என்றது.

-ஆசியா உமர்

15 comments:

சிநேகிதி said...

ஆசியா நீங்கள் கவிதை கூட எழுதுவிங்களா மிகவும் அருமையாக இருக்கு.
என் வீட்டு தோட்டமும் என் கண்முன்னே வந்தது.. ஊருக்கு போய்தான் செடிகள் பேசுவதை கேட்கனும்..

ஜெய்லானி said...

இதுக்குதான் தூங்க போகும் போது ஓதிவிட்டு படுக்கனும். யாரும் சொல்லி தரலையா?.

ஜெய்லானி said...

அடடா கடைசி வரியை பாக்காமல் கமெண்ட போட்டுட்டேனே.

ஜெய்லானி said...

//மணிப்ளாண்ட்மன்னித்து விடம்மா உன்னை மறந்து விட்டேனே எவும் வேண்டாமம்மாநானும் வருவேன்உன்னோடு என்றது.//
உங்க மேலே அவ்வளவு நம்பிக்கை!!!


கவிதை சூப்பர். இது போல அப்ப அப்ப நிறைய எழுதுங்க!!

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் ஆசியாக்கா!!செடிகளின் உணர்வை இந்த கவிதையில் அழகா உணர்த்திருக்கிங்க..

asiya omar said...

சிநேகிதி புது வீடு கட்டி ஏழு வருடம் ஆகிறது,மாமா வீட்டில் நாங்கள் இருப்பதால் அப்ப அப்ப வீட்டிற்கு சென்று தோட்டத்தில் செடிகளையும், வீட்டையும் திறந்து பர்ர்த்து விட்டு வருவது வழக்கம்,இந்த தடவை போன போது நான் கண்ட காட்சி என்னை இப்படி எழுத வைத்து விட்டது.வருகைக்கு நன்றி.

asiya omar said...

ஜெய்லானி அப்ப இதை கவிதங்கிறீங்க,மகிழ்ச்சி.நெட்டில் இருந்து எழுந்தால் கண்ணை சொக்கும் தூக்கம்,அதுக்குத்தானே உட்கார்றது.இனி ஓதிட்டா போச்சு.

asiya omar said...

மேனகா உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி.இதை மாதிரி நிறைய எப்பவாவது தோணும், இனி எழுதிட வேண்டியது தான்.

Jaleela said...

உங்கள் வீட்டு தோட்ட கவிதை ரொம்ப நல்ல இருக்கு ஆசியா. வெளியில் படர்ந்துள்ளது மணி பிலாண்டா?

asiya omar said...

ஜலீலா வருகைக்கு நன்றி.படம் நெட்டில் இருந்து பிடிததது.வெளியில் படர்ந்துள்ளது மணிப்லாண்டாக இருக்கலாம்.என் வீட்டின் ஒரிஜினல் போட்டோவையே இணைத்து இருக்கலாம்.

ஜெய்லானி said...

உங்களுக்காக எனது வரும் முன் காக்க!!வில் டிப்ஸ் போட்டுள்ளேன்.

kavisiva said...

ஆசியா கவிதை அருமை. ஏதோ தோட்டத்தினுள் நுழைந்த உணர்வு.

ஹ்ம்ம்... நானும்தான் தினம் தினம் என் தோட்டத்திற்கு தண்ணீர் விடுகிறேன். ஒரு செடி கூட என்கிட்ட பேச மாட்டேங்குது :-(

asiya omar said...

கவி,அவங்களுக்கு பாட்டு கூட போட்டு விடுவேன்,ஒவ்வொரு செடியையும் உற்றுப்பாருங்கள்,உங்களுக்கும் புரியும்.பொழுது போகாத நேரம் இதெல்லாம் நடக்கும்.செடிகளுக்கு வலிக்காமல் அவற்றை பராமறிக்கனும்னு நினைப்பேன்.ஆனால் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பதால்,நிறைய பேர் தீடீர்னு காணாப்போய்டுவாங்க,அப்ப நிஜமாகவே வருத்தமாக இருக்கும்.ஏற்கனவே வந்தவங்க தான் இருக்காங்க.புதுசாக யாரையும் கொண்டு வரலை.

இமா said...

வாவ்! சூப்பர் ஆசியா. அனுபவிச்சு எழுதி இருக்கிறீங்க.

asiya omar said...

நன்றி இமா வருகைக்கு.