Wednesday, March 10, 2010

தலைக்கறி மஜா

சுத்த அசைவப்பிரியர்களுக்குசிலபேருக்கு இந்த தலைக்கறி ருசி ரொம்ப பிடிக்கும்,ஆனால் அதை எப்படி சுத்தம் செய்வது சமைப்பதுன்னு யோசிச்சு வாங்காம இருப்பாங்க.பெங்களூர்,சென்னை போன்ற ஊர்களில் தோலோட வக்கி சுத்தம் செய்யப்பட்டு கிலோ கணக்கில் விற்பாங்க.அதன் ருசி அலாதியாக இருக்கும்.ஆனால் நெல்லையில் உறித்து கட் பண்ணி தருவாங்க,மூளையும் அதன் உடன் தந்திடுவாங்க.மூளையை தவிர மற்றதை எலும்பு தனியாக,கறி தனியாக பிரித்து எடுத்து வெண்ணீரில் போட்டு தேவையில்லாத தோல் போன்றவற்றை உரித்து எடுக்க வேண்டும். ஒரு ஆட்டு தலையின் விலை 30 முதன் 50 ருபாய் தான் ,ஆனால் அதன் மணம்,ருசியில் வீடே அமர்களப்படும்.தலைக்கறியை பிரித்து நாங்க மூன்று விதமாக சமைப்போம்.
ஆட்டு மூளை  மசாலா :
மூளையை  ஒரு பவுலில் தண்ணீர் வைத்து அலசி அதன் மேல் படிந்திருக்கும் மெல்லிய ஏடு போன்ற பகுதியை நகத்தை கொண்டு லேசாக எடுத்தால் சட்டை போல் கழ்ண்டு விடும்.அதன் பின்பு துண்டாக்கி கொள்ளவும்.
இரண்டு மூளையை சமைக்க:
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சிபூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா – கால்ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் –அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
முட்டை – 1-2 (விரும்பினால்)
உப்பு – தேவைக்கு
மல்லி கருவேப்பிலை – சிறிது


செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டுபேஸ்ட்,கரம்மசாலா,போட்டு வதக்கி,பச்சை மிளகாய்,தக்காளி,மல்லி கருவேப்பிலை சேர்த்து,உப்பு போட்டு சிறிது மூடி வதங்கியவுடன் மசாலா தூள் அனைத்தும் சேர்த்து பிரட்டவும்.

பின்பு முளையை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.மூளை வெந்தவுடன் முட்டையை அடித்து ஊற்றி பிரட்டி விட்டால் வெந்துவிடும்.

ருசியான மூளை முட்டை பொரியல் ரெடி.இதனை சாதம் சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.கொலஸ்ட்ரால் உள்ளவங்க தவிர்த்து விடவும்.

தலைக்கறி ஆனம் :


தேவையான பொருட்கள்:
தலக்கறியில் உள்ள எலும்பு பகுதி
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
கறிமசாலாத்தூள் (குழம்பு மசாலா)- 1 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
தேங்காய் முந்திரி அரைத்தது -அரைகப்
உப்பு - தேவைக்கு
முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்த்து,தக்காளி,மிளகாய்,மல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


தலைக்கறியை சேர்த்து மசாலா தூள்,சில்லி பவுடர் சேர்த்து எலும்பு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில் விடவும்.ஆவியடங்கி திறக்கவும்.அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதித்து சிம்மில் வைத்து இறக்கவும்.

சுவையான தலைக்கறி சால்னா ரெடி.இதனை சாதம்,சப்பாத்தி,பரோட்டா,அரிசிமாவு ரொட்டியுடன் பரிமாறலாம்.
சுருட்டுக்கறி :
தலைக்கறியில் உள்ள சதைப்பகுதியை எடுத்து சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
தேவையான பொருட்கள்;
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -1
தக்காளி -சிறியது 1
மிளகாய் -1
மல்லி இலை -சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் -கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளி,மிளகாய்,இஞ்சி பூண்டு,மல்லி இலை,பச்சை மிளகாய்,உப்பு போட்டு வதக்கவும்.

சில்லி பவுடர் ,சீரகத்த்தூள் ,மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி கறி சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 -5 விசில் விடவும்.திறந்து கறியை சுண்ட வைக்கவும்.

சுவையான சுருட்டுக்கறி ரெடி.சாதம், ஆனத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். தலைக்கறி முழுவதையும் பயன்படுத்தி தக்கடி போட்டும் சாப்பிடலாம்.
--ஆசியா உமர்.

13 comments:

kavisiva said...

ஆசியா நான் தலைக்கறி சாப்பிட்டதில்லை. பார்க்க நல்லாயிருக்கு.

Jaleela said...

முன்று ரெசிபியுமே இஸ்லாமிய இல்ல சூப்பர் ஹிட் பேமஸ் சமையல், அசத்தல்கள். தலைகறியில் தக்குடி போட்டா ம்ம் சூப்பர்

asiya omar said...

நன்றி,கவிசிவா.

asiya omar said...

ஜலீலா மிக்க மகிழ்ச்சி.தக்கடி போட்டால் சூப்பராக இருக்கும்.போட்டோ திருப்தியாக வரலை.

Chitra said...

நீங்க நெல்லையில் எந்த பக்கம்? செய்துங்கநல்லூர் ஏரியாவில் அப்பாவின் நண்பர்கள் வீட்டில் இப்படி சாப்பிட்டு இருக்கேன். வாயில் நீர் ஊருது.

மகி said...

//சுத்த அசைவப்பிரியர்களுக்கு// மீ த எஸ்கேப் ஆசியாக்கா!!;)

asiya omar said...

மகி,பார்வையிட்டமைக்கு மகிழ்ச்சி.உங்கள் ப்ளாக் டெக்னிக்ஸ் அசத்தலாக இருக்கு.

ஸாதிகா said...

தலைக்கறியில் தக்கடி..அடடா..படத்தைப்பார்த்ததும் உடனே சமைத்து விட ஆசையைத்தூண்டிவிட்டுவிட்டது,

athira said...

ஆசியா... கறியைப் பார்க்க ஆசையாக இருக்கு... ஆனால் தலக்கறி என்றால் என்ன? ஒருவகை மீனோ? அல்லது ஏதாவதொன்றின் தலையோ? படத்தில் ஏதும் எனக்கு விளங்கவில்லை. சும்மா செய்து காட்டிப் படம் போட்டால் பார்த்துக்கொண்டு நாங்கள் எப்படி இருப்பது? ஒரு பெரிய பார்ஷல் பிளீஸ்ஸ்...

asiya omar said...

ஸாதிகா,ஆமாம் தலைக்கறி என்றாலே தக்கடி போடத்தான் தோன்றும்.வாங்கி செய்து விட்டால் போச்சு.

asiya omar said...

ஆட்டுத்தலைக்கறிதான் அதிரா,நான் குறிப்பிட்டு உள்ளேனே!பக்குவமாக சமைத்தால் அதன் ருசியே தனிதான்.பார்சல் தானே அனுப்பிவிட்டால் போச்சு.அதையும் மெயில் மாதிரி அனுப்ப வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Jaleela said...

எங்க மாமியார் சொன்னாங்க அவர்களும் சாரா டெக்கில் தான் படித்தார்களாம்..

asiya omar said...

ஜலீ,உங்கள் பூர்வீகம் நெல்லை தானே!லலிதா ராகினி பத்மினி கதை தானே.எங்கோ படித்த நினைவு.