Thursday, June 24, 2010

நெல்லை மட்டன் தக்கடி / Nellai Mutton Thakkadi

தேவையான பொருட்கள் ;

வறுத்த அரிசிமாவு (புட்டு மாவு) - 400 கிராம்

மட்டன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா (ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)-அரைஸ்பூன்

கறி மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - கால் கிலோ

தேங்காய்த்துருவல் - பாதி தேங்காய்

பச்சை மிளகாய் -3

மல்லி கருவேப்பிலை புதினா - சிறிது

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு- தேவைக்கு
மாவுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் , மல்லி,கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய் விட்டு சிறிது வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,கறிமசாலா, மல்லி,புதினா,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு சுத்தம் செய்து கழுவிய மட்டனை சேர்த்து ,கறிமசாலா ,உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மூடி 3 விசில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.இப்ப தக்கடிக்குண்டான மட்டன் கிரேவி ரெடி.

ரெடி செய்து வைத்த மாவில் அந்த கிரேவியை மட்டும் மாவு கொள்ளும் அளவு விட்டு கலந்து விடவும்.

இப்ப தக்கடிக்கான மாவு ரெடி.


மட்டனை தனியாக எடுத்து விட்டு மாவிற்கு மூன்று மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.ரெடி செய்த தக்கடி மாவை கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.இருபது கொழுக்கட்டை மீடியம் சைசில் வரும்.

2 கொழுகட்டைக்கான மாவை மீதி வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதி வரவும் நெருப்பை கூட்டி வைத்து கொழுக்கட்டையை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.கொழுக்கட்டை வெந்து வரும் வரை அகப்பை போடக்கூடாது.கொழுக்கட்டி வெந்து மேலே வந்தவுடன்,தனியாக எடுத்து வைத்த 2 கொழுக்கட்டை அளவு மாவை தூவி விடவும். மூடி போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும், அந்த மாவு கூட்டு போல் ஆகிவிடும்.
பாத்திரத்தின் மூடியை திறந்து வேகவைத்து எடுத்து வைத்த மட்டனை போடவும்.கொழுகட்டை உடையாமல் மிக்ஸ் செய்யவும். மட்டனை எடுக்காமல் கொத்திக்க வைத்தால் மட்டன் பாத்திரத்தில் அடியில் இருக்கும் எடுப்பது சிரமம்.இப்படி மேலே போடும் பொழுது கலந்து எடுக்க வசதியாக இருக்கும்.

சுவையான நெல்லை மட்டன் தக்கடி ரெடி.

சூடாக ப்லேட்டில் கொழுகட்டை மட்டன் கிரேவியுடன் பரிமாறவும்.


--ஆசியா உமர்.


குறிப்பு : தலைக்கறியில் தக்கடி போட்டால் சூப்பராக இருக்கும். நாங்க இதற்கு எங்க ஊர் கறி மசாலாவை உபயோகிப்போம்.மசாலா குறிப்பில் உள்ளது.

27 comments:

Kousalya said...

மட்டனை வைத்து எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமா செய்றீங்க?! சும்மா அசத்துறீங்க தோழி.

LK said...

present

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்லாத்தான் இருக்கும்.. நெல்லை பகுதி ஹோட்டல்களில் இந்த வகை தக்கடி கிடைக்குமா..

மங்குனி அமைச்சர் said...

பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு . (பாக்க மட்டும் தான் நல்லா இருக்குமோ ????)


சும்மா தமாசு மேடம்

ஹைஷ்126 said...

சூப்பர் ரிசிபி. அடுத்த விடுமுறையில் செய்து பார்க்கிறேன். நன்றி.

வாழ்க வளமுடன்

Chitra said...

ம்ம்ம்ம்...... இதை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. செய்துங்கநல்லூரில், அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டது. நெய் சாதத்துடன் சாப்பிட்டோம். அருமை. :-)

asiya omar said...

எல்.கே

கௌசல்யா

கேஆர்பி ஹோட்டலில் கிடைக்குமான்னு தெரியலை.

மங்குனி அமைச்சர்

சகோ.ஹைஷ்

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா இதை எப்படி நெய் சாதத்துடன் சாப்பிடமுடியும்,இது தனியாக சாப்பிடக்கூடிய டிஃபன்,இது தான் மெயின் டிஷ்.

ஜெய்லானி said...

நல்லா இருக்கு..!!

மட்டன் கொழுக்கட்டைன்னு சொல்வதுண்டு. இதுக்கு தக்கடி பேரான்னு தெரியல


பெரிய ஸைஸ் இராலில் வீட்டில் (ஊரில் )செய்வதுண்டு. பேர் இறால் கொழுக்கட்டை.. சேம் ரெஸிபி

GEETHA ACHAL said...

ஆஹா..அழகாக தெளிவாக விளக்கி இருக்கின்றிங்க...ஆசியா அக்கா...இங்கு நாங்கள் மட்டன் வாங்குவதில்லை...இதனை சிக்கனில் செய்யலாமா...அதே சுவையில் இருக்குமா....எனக்கு இப்வே சாப்பிடனும் போல இருக்கே...உங்க வீட்டுக்கு வரலாமா....

Mrs.Menagasathia said...

மிக அருமையாக இருக்கு..இட்லி,தோசைக்கு அருமையாக இருக்கும் போல் இருக்கு..

athira said...

சூப்பர். புது டிஷ் ஆக இருக்கு, நான் கண்டதில்லை இப்படி.

asiya omar said...

ஜெய்லானி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
நாங்களும் கூனி இறால் போட்டு கொழுக்கட்டை அவிப்பதுண்டு.நன்றி.

asiya omar said...

கீதா ஆச்சல் சிக்கன் என்றால் குக்கர் வேண்டாம்,தாராளமாக செய்யலாம்.நிச்சயம் செய்து பாருங்க,முதலில் 200 கிராம் மாவில் செய்து பாருங்க.கருத்திற்கு மகிழ்ச்சி,வாங்க வீட்டிற்கு,செய்து தருகிறேன்.

asiya omar said...

மேனகா இதுதான் மெயின் டிஷ்,இதில் அரிசி மாவு கொழுக்கட்டையை எடுத்து மட்டன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

நாடோடி said...

புதுசா இருக்கு... நான் கேள்வி ப‌ட்ட‌தே இல்லை..

ஸாதிகா said...

நாங்கள் தக்கடியில் போடும் கொழுக்கட்டை மாவில் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்ப்பதில்லை.உங்கள் முறையில் அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

நாடோடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா எங்க ஊரில் இப்படி தான் செய்வது வழக்கம்,கொழுக்கட்டை சேப் உருண்டையாகவும் போடலாம்.

எம் அப்துல் காதர் said...

//மட்டன் கொழுக்கட்டைன்னு சொல்வதுண்டு. இதுக்கு தக்கடி பேரான்னு தெரியல//

சரியாச் சொன்னீங்க..

ரொம்ப டேஸ்டியா இருக்கும் ம்ம்ம் வாய் ஊருது..

Ayesha said...

நெல்லை ரெசிப்பிகளில் இது ஒண்ணுதான் இன்னும் போடலன்ணு நெனைசேன். அதுவும் வந்துருச்சு. என் உம்மா செய்து தருவாங்க. அருமையா இருக்கும்.

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கு மகிழ்ச்சி.தக்கடின்னு தான் சொல்லுவோம்.

ஆயிஷா கருத்திற்கு மிக்க நன்றி.

kavisiva said...

மட்டன் தக்கடி பார்க்கவே சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. சிக்கனில் செய்யலாமா?

சூப் கொழுக்கட்டை என்று ஏறக்குறைய இதே போல் செய்வோம்.

vanathy said...

அக்கா, அருமையான ரெசிப்பி. அழகான படங்கள்.

asiya omar said...

thanks vamathy.

Mahi said...

ஆசியாக்கா,இதுக்கு வெஜிடேரியன் வர்ஷன் சீக்கிரமா குடுங்க! :)

asiya omar said...

மகி அப்படியே மட்டன் போடாமால் மசாலா தக்கடி செய்ய வேண்டியது தான்.நான் அறுசுவை கூட்டாஞ்சோறுவில் கொடுத்திருக்கேன்.

Tharifa said...

ஆசியா அக்கா ,தக்கடி ரெசிபி அருமை.அப்படியே என் அம்மா செய்தது போல இருக்கு.நான் எப்படி செய்தாலும் கொழுக்கட்டைகள் உடைந்து விடுகின்றது.
எனக்கு உடனே இந்த லின்க் தந்தமைக்கு நன்றி.