Tuesday, August 31, 2010

மட்டன் போன் கஞ்சி



தேவையான பொருட்கள் ;
ஆட்டு எலும்பு - 400 கிராம்
பச்சரிசி - அல்லது பச்சரிசி குருணை - 200 கிராம்
விரும்பினால் ஒரு குத்து பாசிபருப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
வெங்காயம்- 2
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 4
தேங்காய்ப்பால் - பாதி காயில்
எண்ணெய் +நெய் - த்லா 1 டேபிள்ஸ்பூன்
மல்லி ,புதினா,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு

கஞ்சிப்பொடிக்கு
சீரகம்- ஒன்னரை டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்-அரைடீஸ்பூன்
ஏலம்-2
கிராம்பு - 3
பட்டை -சிறிய துண்டு
மேற்சொன்ன ஆறு பொருளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

குறுக்கெலும்பு அல்லது கிடைக்கும் எலும்பை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகெட்டி வைக்கவும்.எலும்பில் கொழுப்பு இருக்கக்கூடாது.

குக்கரில் அரிசியுடன் எலும்பை போட்டு தேவைக்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.


பாசிப்பருப்பு ஒரு குத்து,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட், மேற் சொன்ன படி பொடித்த கஞ்சிப்பொடி,மல்லி,புதினா ,உப்பு சேர்த்து அரிசிக்கு 6 - 7 மடங்கு தண்ணீர் வைத்து கொதிவரவும் மூடி விடவும்.


முதல் விசில் வரவும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும்,வெந்ததும் சூட்டோடு மசித்து விடவும்.

கடாயில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் சிறிது போட்டு வதக்கி சிவறவும் கருவேப்பிலை போட்டு வெடித்து தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ,உப்பு சேர்த்து கொதிவரவும் இறக்கவும்.

ரெடி செய்த தேங்காய்ப்பாலை வெந்த கஞ்சியில் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.நன்கு கலந்து பரிமாறவும்.



சுவையான மட்டன் போன் கஞ்சி ரெடி.இது மிகவும் மணமாக பதமாக இருக்கும்.நாம் மசாலா எதுவும் சேர்க்காமல் இப்படி வெள்ளையாக வைத்தால் அருமையாக இருக்கும்.கஞ்சியில் உள்ள மட்டன் போன் எடுத்து சாப்பிட ருசியாக இருக்கும்.வெஙகாய பக்கோடாவுடன் பரிமாறவும்.நான் 200கிராம் அரிசிக்கு தகுந்தபடி சேர்க்கும் பொருட்கள் கொடுத்திருக்கேன்,நீங்கள் செய்யும் அளவிற்கு தகுந்தபடி பொருட்கள் அளவை எடுத்து கொள்ளவும்.


-ஆசியா உமர்.


Sunday, August 29, 2010

நோன்பு ஸ்பெஷல் - கூல் வெரைட்டி புட்டிங்ஸ் / IFTAR SPECIAL COOL VARIETY PUDDINGS.

ஆப்பிள் புட்டிங்


தே.பொ :
அகார் அகார் - ரெட் கலர் - ஒரு கைளவு
ஆப்பிள் -1
சீனி - 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரை லிட்டர்

அகார் அகாரை மிக்ஸியில் பொடித்து விட்டு தண்ணீரில் கால் - அரை மணி நேரம் ஊறவைத்து அடுப்பில் வைத்து கரையும் வரை காய்ச்சி,சீனி சேர்த்து கலந்து ஆறவிடவும்.

ஆப்பிள் தோல் நீக்கி சிறிய துண்டாக கட் செய்து வைக்கவும்.
ரெடி செய்த அகார் அகாரில் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து ஃப்ரிட்ஜில் உறைய வைக்கவும்.உறைந்த பின்பு துண்டாக கட் செய்தும் பரிமாறலாம்.ஆப்பிள் பார்ப்பதற்கு அழகாய் மேலே மிதந்து கொண்டிருக்கும்.

அப்படியே பவுலில் விட்டு செட் செய்தும் பரிமாறலாம்.

சுவையான சத்தான கூல் ஆப்பிள் புட்டிங் ரெடி.
பைன் ஆப்பிள் புட்டிங்:
மேற்சொன்ன முறையில் ஒயிட் அகார் அகாரை காய்ச்சி வடிகட்டி அதனில் தேவைக்கு
எல்லோ கலர் 2 சொட்டு விட்டு பைன் ஆப்பிளை கட் செய்து போடவும்.ஆப்பிள் லேசாக இருப்பதால் மேலே மிதக்கும்,ஆனால் பைன் ஆப்பிள் அடியில் சென்று தங்கிவிடும்,
ஃப்ரிட்ஜில் வைத்து உறைந்த பின்பு துண்டாக கட் செய்து பரிமாறலாம்.
சுவையான டேஸ்டி பைன் ஆப்பிள் புட்டிங் ரெடி.

சாக்லேட் புட்டிங் :
தே.பொ :
பால் - அரை லிட்டர்
சீனி - 6 டேபிள்ஸ்பூன்
சாக்கோ புட்டிங் மிக்ஸ் - 2 -3 டேபிள்ஸ்பூன்
அல்லது கோகோ பவுடர் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தால் அகார் அகார் ஒரு கை பிடியளவு பாலுடன் சேர்த்து காய்ச்சவும்.ஆறியவுடன் அதனை பவுலில் விட்டு ஃப்ரிட்ஜில் செட் செய்து பரிமாறவும்.சாக்லேட் விரும்பிகளுக்கு இந்த டேஸ்ட் பிடிக்கும்.


சுவையான யம்மி சாக்லேட் புட்டிங் ரெடி.
கிரீம் கேரமல் புட்டிங்:
தேவையான பொருட்கள் ;
பால் - அரை லிட்டர்
க்ரீம் கேரமல் மிக்ஸ் -ரெடி மிக்ஸ்

[இந்த பேக்கில் கீரீம் கஸ்டர்ட் ,கேரமல் மிக்ஸ் இருக்கும்}அரை லிட்டர் பாலுடன் மிக்ஸை சேர்த்து காய்ச்சி ஆற வைக்கவும் சுகர் அதிலேயே இருக்கும்.பவுலில் முதலில் கேரமல் பின்பு காய்ச்சிய கீரீம் கஸ்டர்ட் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
அல்லது அரை லிட்டர் பால் காய்ச்சியதும் அடுப்பை அணைத்து பின்பு 2 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் சிறிது பாலுடன் மிக்ஸ் செய்து சூடான காய்ச்சிய பாலில் கலந்தால் கெட்டியாகி விடும்,5 டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து கலக்கவும்.அதனை பவுலில் விட்டு செட் செய்யவும்.

ஃப்ரிட்ஜில் 1-2 மணி நேரம் வைத்து செட்டானதும் பரிமாறவும்.ஃப்ரூட் மிக்ஸ் செய்தால் ஃப்ரூட் கஸ்டர்ட் ரெடி. நான் கட் செய்த ஆப்பிள்,மாம்பழம்,கருப்பு,பச்சை திராட்சை சேர்த்துள்ளேன்.அழகுக்காக கருப்பு,பச்சை திராட்சையை மேலே தூவி உள்ளேன்.





ரெடிமேட் கேரமல் சாஸ் விட்டு பரிமாறவும்.சுவையான கீரீம் கேரமல் புட்டிங் ரெடி.

மில்க் அகார் அகார் இங்கு சென்று பார்க்கவும்.மில்க் அகார் அகார் ரெடி செய்த பின்பு செட் செய்வதற்கு முன்பு நாம் அவற்றில் வெனிலா ப்லேவர் ரோஸ்மில்க் ஃப்லேவர்,பாதாம் மில்க் ஃப்லேவர், சேர்த்தால் பாதாம், ரோஸ்மில்க் ஃப்லேவருடன் அகார் அகார் ரெடியாகிவிடும்,எல்லாம் நம் விருப்பம் தான்.வெறும் தண்ணீர், அகார் அகார்,சீனி சேர்த்து காய்ச்சிய பின்பு ரூஹ் ஆஃப்ஸா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்தால்ரூஹ் ஆஃப்ஸா அகார் அகார் ரெடி.



 Rooh Afza Agar Agar

குறிப்பு :
கேரமல் சாஸ் வீட்டில் செய்ய ப்ரவுன் சுகர் அல்லது நார்மல் சுகருடன் பட்டர் சேர்த்து கருகாமல் சிம்மில் வைத்து கரைய வைத்து பால் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் சிறிது சேர்த்து கெட்டியானவுடன் பக்குவமாக காய்ச்சி இறக்கினால் கேரமல் ரெடி.


- ஆசியா உமர்.

Saturday, August 28, 2010

களச்சாப்பாடு - எஙக ஊர் பழக்கம்.



எங்க ஊரில் விஷேசம் என்றால் களத்தில் வைத்து சாப்பாடு பரிமாறுவது வழக்கம்.முன்பு நான்கு நபராக அமர்ந்து சாப்பிடுவாங்க,இப்ப பெரியவங்க என்றால் 3 நபர் தான்.களத்தில் அமர்ந்து சாப்பிடும் பொழுது அது ஒரு தனி சந்தோஷம்,ஒரு குடும்பமே ஒரு ப்லேட்டில் இருந்து சாப்பிட்டால் எவ்வளவு ஜாலியாக இருக்கும்.



இப்ப காலம் மாறி வந்தாலும் இந்த பழக்கம் இன்னமும் இருக்கு.எங்க பிள்ளைங்க ஊர் சென்றவுடன் உம்மா களத்தில் இருந்து சாப்பிடனும் என்று ஆசையாக சொல்வாங்க,இங்கே கூட பெரிய களம் வாங்கி வைத்து இருக்கிறேன்,ஆசைக்கு எப்பவாவது சாப்பிடுவது வழக்கம்.ஆனால் பிள்ளைங்க ,உம்மா எங்காவது விருந்து வீடு சென்று களத்தில் சாப்பிட்டால் தான் நல்லாயிருக்கும்னு ஒரு கமெண்ட் வேறு.


இந்த களத்தில் சோறு சுற்றி வைத்து நடுவில் கறிவைத்து,பின்பு தால்ச்சா ,சாப்பாடு தனியாக சப்ளை வரும்.கறி மறுபடி வராது.


இப்ப கொஞ்சம் மாறியதால் சின்ன சின்ன தட்டில் வெங்காயப்ச்சடி,சுருட்டு கறி,ஸ்வீட் என்று சைட் டிஷ் வைக்க ஆரம்பிச்சாச்சு.


இதிலே ஸ்பெஷல் என்னவென்றால் பகிர்ந்து சாப்பிடுவது.அவங்க முன்பு இருப்பதை சாப்பிடனும்,மற்றவரை அனுசரித்து சாப்பிடனும். சின்ன பிள்ளங்க என் முன்னாடி இருந்த கறியை அவன் எடுத்துக்கிட்டான்ன்னு செல்லமாக சிணுங்குவதும் நடக்கும்.அப்புறம் கறி காலியானதும் தால்ச்சாவை சோறு நடுவில் பாத்தி கட்டி சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும்.


களச்சாப்பாட்டில் நம்ம தேவைக்கு வாங்கி வைத்து கூச்சப்படாமல் அவரவர் வயிற்றுக்கு சாப்பிடலாம்.தெரிஞ்சவங்க சேர்ந்து இருந்து சாப்பிடுவாங்க,சிலசமயம் வீட்டில் ஒருவர் வீதம் விருந்துக்கு போனால் யார் இருக்காங்களோ அவங்களோட இருந்து சாப்பிட்டு கிட்டு போய்ட்டே இருப்பாங்க.



இந்தக்களத்தை எங்க ஊரில் தாலான்னு சொல்வாங்க,இந்த தாலாவில் சாப்பிட்டால் அளவே தெரியாது வைத்து வைத்து சாப்பிட்டு,சாப்பாடு அளவு கூடிவிடும்.


கையும் வாயும் மணக்கும் சாப்பிட்டு எழுந்தால்,அவ்வளவு மணம் ருசியாக அசத்தலாக இருக்கும்.அவங்க அவங்க வசதிக்கு தகுந்தபடி வெருஞ்சோறும், கறி ,கத்திரிக்காய் ஆனம் என்றும் நெய்ச்சோறு,தேங்காய்ச்சோறு தால்ச்சா,மட்டன் குருமா,இன்னும் பிரியாணி சைட் டிஷ் உடனும் பரிமாறுவது வழக்கம்.



அந்தக்காலத்தில் களத்தில் ஒற்றைக்காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவாங்க,இப்ப நாகரீகம் வளர்ந்து விட்டதால் சப்பணம் போட்டு இருந்து சாப்பிடுறாங்க.சப்பணம் போட்டால் அளவு தெரியாது,ஒற்றைக்கால் போட்டு சாப்பிடும் பொழுது கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கும்.


அப்ப களம் எனாமல்,செம்பு,பித்தளை(ஈயம் பூசி சூப்பராக இருக்கும்).இப்ப எவர்சில்வர்,அலுமினியம்,,அன்ப்ரேக்கபில் கூட வந்து விட்டது.



வெளியூர்வாசிகள் வரும்பொழுது அவர்களை தனியாக அமரவைத்து சாப்பாடு கொடுப்பது வழக்கம்.சிலருக்கு இப்படி களத்தில் உட்கார்ந்து சாப்பிட மனம் ஒப்பாது.எங்க ஊரில் சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லை. கூடி சாப்பிடுவதையும் அனுபவிக்கனும்.


அந்தக்காலத்தில் திருமண வைபவங்கள் வீட்டில் மட்டும் தான் எங்க ஊரில் நடத்தினாங்க,அப்ப இந்தக்களச்சாப்பாடு எவ்வளவு கூட்டம் வந்தாலும் 2000 பேருக்கு 2 மணி நேரத்தில் சாப்பாடு பந்தி முடிந்து விடும்.இப்பமும் நடந்து கொண்டு தான் இருக்கு.இல்லாவிடில் தெருச்சாப்பாடு ,ஊர்ச்சாப்பாடு வைக்க முடியாதே.


எங்க ஊரில் 1990 -க்கு பின்பு மண்டபத்தில் அதிக திருமணம் நடக்க ஆரம்பித்து இருப்பதால் மண்டபத்தில் தனிச்சாப்பாடு தானே. இப்ப நிறைய வேஸ்ட் ஆவதை தடுக்க தனிச்சாப்பாடு நிறைய பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க.


நிறைய சிரமம் இருந்தாலும் இந்த களச்சாப்பாடு பழக்கத்தை எங்க ஊர் மக்கள் விடுவதாய் இல்லை.




-- ஆசியா உமர்.

சிக்கன் ப்ரெட் பக்கோடா

இந்த குறிப்பை படங்களுடன்   இங்கு (தமிழ்குடும்பம்)சென்று பார்க்கவும்.
தேவையான பொருட்கள்;
ப்ரெட் துண்டுகள் - 6  சிறியது
சிக்கன் கீமா- 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  - அரை + கால்டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை +கால் டீஸ்பூன்
கடலை மாவு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா -சிறிது
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
 
1. சிக்கன் கீமாவை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்,பின்பு நறுக்கிய மிளகாய்,மல்லி புதினா சேர்த்து பிரட்டவும்.சிக்கன் சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள்,மி;ளகாய்த்தூள்களை சேர்க்கவும்.
 
2. நன்கு பிரட்டி மூடி போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்.சிக்கன் கீமா மசாலா ரெடி.
 
3.ப்ரெட் ஓரம் கட்செய்து கொள்ளவும்.ஒரு ப்ரெட் துண்டில் ரெடி செய்த சிக்கன் கீமா மசாலா வைத்து இன்னொரு ப்ரெட் மூடி மெதுவாக அழுத்தி வைக்கவும்.அதனை குறுக்கே கட் செய்து வைக்கவும்.
 
4.இப்படியே 3 செட் ரெடி செய்து கொள்ளவும்.
 
5.ஒரு பவுலில் அரை கப் கடலை மாவு,கால்ஸ்பூன் மஞ்சள் தூள்,கால்ஸ்பூன் மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து தளர்வாய் கரைத்து கொள்ளவும்.மாவு உள்ள பவுலில்  தயார் செய்த ப்ரெட் துண்டை வைத்து ஸ்பூனால் மாவை எடுத்து ப்ரெட் மீது விடவும்.
 
6.கடாயில் தேவைக்கு எண்ணெய் காயவைத்து காய்ந்தவுடன் மாவில் தோய்த்த ப்ரெட் துண்டை போட்டு இருபுறமும் சிவற பொரித்து எடுக்கவும்.பேப்பர் டவலில் வைக்கவும்.
 
7.சுவையான ரிச் டேஸ்டி சிக்கன் ப்ரெட் பக்கோடா ரெடி.
சிறிய துண்டாக கட் செய்து விரும்பியபடி அலங்கரித்து பரிமாறவும்.ரெட்,யெல்லோ,கீரீன் கேப்ஸிகம் கட் செய்து உடன் பரிமாறியுள்ளேன்.அதனுடன் இந்த சிக்கன் ப்ரெட் பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும்.
 
குறிப்பு :  3 - 4 செட் , நான்கு நபருக்கு போதுமானது.எண்ணெய் பதார்த்தம் என்பதால் அளவாய் சாப்பிடுவது நல்லது.



 -ஆசியா உமர்.

Tuesday, August 24, 2010

150 -வது பதிவு


சும்மா நானும் ப்ளாக் ஆரம்பிக்கிறேன் என்று பதிவுலகில் நுழைந்து ஆறுமாதமாகிறது.என்னை பின் தொடர்பவர்களுக்கும் , கருத்தளித்து,ஓட்டு போட்டு ஊக்கம் கொடுத்தவர்களுக்கும்,விருது வழங்கி தங்களின் அன்பை தெரிவித்தவர்களுக்கும், என் சமையல் குறிப்பை செய்து பார்த்து அசத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சி, நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.


எனக்கு சமையல் தவிர மற்றதும் எழுதவேண்டும் என்பதே ஆசை.நான் கொடுக்கும் சமையல் குறிப்புக்கள் அன்றாடம் வீட்டில் செய்யும் என் சொந்தக்குறிப்புக்களே.புதியதாக அதிகம் முயற்சிப்பது இல்லை.ஏதாவது முயற்சி செய்து அது வீட்டில் ஓ.கே –ன்னு சொன்னால் அதனை குறிப்பாக கொடுப்பது வழக்கம்.


இந்தப்பதிவில் எனக்கு வந்த ஒரு அவார்டை பார்வையிட வைப்பதில் பெருமகிழ்ச்சி என்றால் அது மிகையாகாது,
டேஸ்ட் ஆஃப் பேர்ல் சிட்டி நடத்திய இஃப்தார் போட்டியில் கலந்து கொண்டு சமையல் குறிப்புக்கள் அனுப்பியமைக்கு எனக்கு சூப்பரான பார்டிசிபேசன் அவார்ட் அனுப்பியிருக்காங்க.மிக்க நன்றி உம் மைமூனா.




-ஆசியா உமர்.


Monday, August 23, 2010

சிக்கன் சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள்:

சேமியா - முக்கால் கிலோ
சிக்கன் முக்கால் கிலோ
தயிர்- 100 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -முக்கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சை - 1
பச்சை மிளகாய் - 4
மல்லி,புதினா - தலா ஒரு கைபிடியளவு
தேங்காய்ப்பால் - அரைதேங்காயில்
எண்ணெய் -100 மில்லி
நெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு

சேமியாவை இப்படி இளஞ்சிவப்பாக வறுத்து கொள்ளவும்.வறுத்து இறக்கும் பொழுது 2 டீஸ்பூன் நெய் விட்டு மணத்திற்கு பிரட்டி எடுக்கவும்.
சிக்கனை கழுவி சுத்தம் செய்து தயிர்,அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முழுவதும் வதக்கி சிவந்ததும் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்,அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போடவும்.எண்ணெய் தெளிந்து தக்காளி வதங்கியதும் தயிரில் ஊறிய சிக்கனை போடவும்.மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் விட வேண்டாம்.சிக்கனிலேயே தண்ணீர் விடும்.

வெந்த பின்பு அரைத்தேங்காயில் பால் எடுத்து பாலுடன் சேமியாவிற்கு மொத்தம் ஒன்றரை அளவு தேங்காய்ப்பாலும் தண்ணீரும் கலந்து வெந்த சிக்கனில் விடவும்.கோகனெட் மில்க் பவுடர் என்றால் 3 டேபிள்ஸ்பூன் கலந்து விடவும்.நன்கு கொதிவரவிடவேண்டும்.

கொதிவந்த பின்பு வறுத்த சேமியாவை தட்டவும்.பிரட்டி விடவும்.எலுமிச்சையை பிழிந்து விடவும்,சேமியாவை பிரட்டி பாத்திரத்தை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.


சேமியா வெந்து மேலெழும்பி வரும் .சிக்கன் சேமியாவை நன்கு ஒரு சேர பிரட்டி அடுப்பை அணைத்து சிக்கென்ற மூடியால் மூடி விடவும்.சேமியா புழுங்கி பத்து நிமிடத்தில் ரெடியாகிவிடும்.திறந்து சுடச்சுட பரிமாறவும்.


சுவையான சூப்பர் சிக்கன் சேமியா பிரியாணி ரெடி.ரைத்தாவுடன் பரிமாறவும்.
இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய இந்த சேமியா பிரியாணி மிகவும் பிரசித்தம்.
--ஆசியா உமர்.

Sunday, August 22, 2010

வெஜ் சமோசா


நான் இஃப்தாருக்கு செய்த இந்த வெஜ் சமோசா குறிப்பை தமிழ்குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன்.

இதோ குறிப்பு உங்களுக்காக:
தேவையான பொருட்கள்
கேரட் – 1 சிறியது

உருளைக்கிழங்கு – 2 சிறியது

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

கரம்மசாலா கால்டீஸ்பூன்

மிளகாய்த்தூள் கால்டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால்டீஸ்பூன்

மல்லி இலை சிறிது

உப்பு , எண்ணெய்  - தேவைக்கு

சமோசா சீட்ஸ் - 12

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

 
செய்முறை :

1.
சமோசா சீட்ஸ் -சை முதலில் ஃப்ரீசரில் இருந்து 2 மணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து கொள்ளவும்.கேரட் வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.

3.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி லேசாக சிவறவும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு வதக்கவும்.

4.
பின்பு கேரட்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் வேகவைத்த உருளையை மசித்து போடவும்.பின்பு தேவைக்கு உப்பு,மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.மசாலா வாடை அடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.கட் செய்த மல்லி இலை தூவவும்.இப்ப சமோசாவிற்கான மசாலா ரெடி.

மைதாவை ஒரு பவுலில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கரைத்து வைத்து கொள்ளவும்.

சமோசா சீட்டின் ஒரு ஓரத்தில் 1 டேபிள்ஸ்பூன் மசாலா வைத்து அதனை முக்கோணமாக மடித்து அப்படியே தொடர்ந்து முக்கோணமாக மடித்து மைதா பேஸ்ட்டினால் முடிவை ஒட்டி ரெடி செய்து வைக்கவும்.இப்படியே தேவையான எண்ணிக்கைக்கு சமோசா ரெடி செய்து வைக்கவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் சமோசாவை போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எண்ணெய் வடித்து எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.

எண்ணெய் குடிக்காத மொறு மொறு டேஸ்டி வெஜ்  சமோசா ரெடி..

செய்முறையை படங்களுடன் தமிழ்குடும்பம் சென்று பார்க்கவும்.


மிக்க நன்றி.

-ஆசியா உமர்.


Saturday, August 21, 2010

கத்திரிக்காய் பச்சடி / Brinjal Pachadi

தேவையான பொருட்கள் ;

கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன அல்லது பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - சிறியது 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
புளி - நெல்லியளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு

சிறிய பிஞ்சி வயலட் கத்திரிக்காயாக பார்த்து வாங்கவும்.

நறுக்கிய கத்திரிக்காய்,சின்ன வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரகத்தூள்,புளிக்கரைசல்,தேவைக்கு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வைக்கவும்.
இப்படி நன்றாக குழைய வெந்து விடும்.


வெந்த கத்திரிக்காயை இப்படி நன்கு மசித்து விடவும்.

கடாயில் எண்ணெய் காயவும்,கடுகு உளுத்தம்பருப்பு,வற்றல் தாளிக்கவும்,பின்பு அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.

தாளித்தவற்றுடன் குக்கரில் வெந்து மசித்த கத்திரிக்காயை சேர்க்கவும்.


நன்கு கலந்து பிரட்டி விடவும்.உப்பு,புளி சரிபார்க்கவும்.கெட்டியாக இருக்க வேண்டும்.
சுவையான கத்திரிக்காய் பச்சடி ரெடி.விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிது தூவி அலங்கரிக்கலாம்.
இது நோன்பு கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள நல்ல பொருத்தமாக இருக்கும்.சாதத்துடன் தொட்டும், பிரட்டியும் சாப்பிடலாம்.இட்லி தோசை,சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்

Thursday, August 19, 2010

நோன்பு ஸ்பெஷல் - வெரைட்டி கஞ்சி

ப்லைன் மசாலா கஞ்சி :
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு -கையளவு
பூண்டு - 5 பல்
கறிமசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
வெந்தயம் - அரைஸ்பூன்
சோம்பு - கால்ஸ்பூன்
ஏலம் - கிராம்பு - தலா-2
பட்டை - சிறிய துண்டு
தக்காளி -சிறியது 1
வெங்காயம்- பெரியது 1
பச்சை மிளகாய் -1- 2
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் +நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1கப் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு

அரிசி பாசிபருப்பை ஊறவைக்கவும்.



ஏலம் பட்டை கிராம்பு,சீரகம்,சோம்பு,,வெந்தயம் சேர்த்து பொடித்து கொள்ளவும்.வெங்காய்ம் தக்காளி மல்லி புதினா நறுக்கி கொள்ளவும்.


ஊறிய அரிசியுடன் 5 லிட்டர் குக்கரில், பாதி தண்ணீர் வைத்து பொடி செய்த கஞ்சிப்பொடி,கறிமசாலா,இஞ்சிபூண்டு பேஸ்ட்,நறுக்கிய பூண்டு பல்,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி,புதினா உப்பு சேர்த்து கொதி வரவும் குக்கரை மூடி ஆவி வரவும் வெயிட் போடவும்.முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து வைத்து 20 நிமிடம் கழித்து இறக்கவும்.



குக்கர் ஆவியடங்கியவுடன் திறந்து உடன் வெந்த கஞ்சியை சூட்டோடு நன்கு மசித்து விடவும்.


பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்த்து வதக்கி கருவேப்பிலை சேர்த்து தாளித்து,தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நுரை கூடி வரவும் அடுப்பை அனைத்து ,அதனை குக்கரில் உள்ள வெந்து வந்த கஞ்சியில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.கஞ்சி குடிக்கும் பதத்தில் கெட்டித்தன்மை இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.அவரவர் ருசிக்கு தகுந்தபடி தேங்காய் பால் அல்லது வெந்நீர் சேர்த்து மிக்ஸ் செய்து உப்பு சரி பார்த்து கொள்ளவும்.

சுவையான மசாலா கஞ்சி ரெடி.



கேரட் பொட்டட்டோ கஞ்சி :


பச்சரிசி -100 கிராம்
சிறிய கேரட் - 1
மிகச் சிறிய உருளைக்கிழங்கு - 1
வெந்தயம் -அரைஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
பூண்டு பல்- 8
வெங்காயம் - 1
பச்சை மிள்காய் - 2
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் + நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பசும்பால் - கால் லிட்டர்.


கேரட்,உருளை,பூண்டு,மல்லி புதினா ,வெங்காயம் கட் செய்து வைக்கவும்.

அர்சியுடன் கேரட்,உருளைக்கிழங்கு ,வெங்காயம்,பச்சை மிளகாய்,வெந்தயசீரகப்பொடி,மல்லி புதினா,உப்பு , தண்ணீர் பாதி குக்கர் சேர்த்து கொதிவரவும்.மூடி முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து 20 நிமிடம் வைத்து இறக்கவும்.




கஞ்சி வெந்ததும் மசித்து விடவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் கருவேப்பிலை தாளித்து காய்ச்சிய பால் சேர்த்து வெந்த கஞ்சியில் கொட்டவும்.



நன்கு கலந்து பரிமாறவும்.



சுவையான கேரட்,உருளை கஞ்சி ரெடி.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.


அரிசி பருப்பு கஞ்சி : மட்டன் கீமா கஞ்சி



மட்டன் கீமா கஞ்சி என்றால் 200 கிராம் மட்டன் கீமா நன்கு தண்ணீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.பின்பு அதனுடன் கறிமசாலா 1 டீஸ்பூன்,இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன்,கரம் மசாலா அரைஸ்பூன்,உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.விரும்பினால் பாதி வெங்காயம்,தக்காளி சேர்க்கலாம்.


தேவையான பொருட்கள் ;
பச்சரிசி - 100 -கிராம்
பாசிபருப்பு - ஒரு கைகுத்து
கடலை பருப்பு - ஒரு கைகுத்து
வெங்காய்ம் - 1
தக்காளி -1
பச்சை மிள்காய் - 2
சீரகம்,வெந்தயம் பொடி செய்தது- தலா அரைஸ்பூன்
கரம் மசாலா,சோம்பு பொடி - தலா கால்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் -பாதிகாயில் (தேவைக்கு)
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் + நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


அரிசி பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
அரிசி பருப்பு,தண்ணீர்,சீரகவெந்தயப்பொடி,கரம் மசாலா,சோம்பு பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,வெங்காய்ம்,தக்காளி,மிளகாய்,மல்லி புதினா,உப்பு சேர்த்து கொதி வரவும் வெயிட் போட்டு முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து 20 நிமிடம் வைத்து இறக்கவும்.





உடன் வெந்த கஞ்சியை சூட்டோடு நன்கு மசித்து விடவும்.இதனை தேங்காய்ப்பால் தாளித்து கொட்டி கலந்து பரிமாறினால் சுவையான சத்தான அரிசி பருப்பு கஞ்சி ரெடி.



மட்டன் கீமா கஞ்சி


ரெடி செய்ய தயார் செய்த அரிசி பருப்பு கஞ்சியுடன் வேகவைத்த மட்டன் கீமாவை தேவைக்கு சேர்க்கவும்.கலந்து விடவும்.


பின்பு எண்ணெய் நெய் சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்த தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ,உப்பு சிறிது சேர்த்து நுரை கூடி வரவும் அடுப்பை அணைத்து ரெடி செய்த மட்டன் கீமா,அரிசி பருப்பு கஞ்சியுடன் சேர்க்கவும்.



தாளித்த தேங்காய்பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.




சுவையான மட்டன் கீமா கஞ்சி ரெடி.





குறிப்பு :


தண்ணீர் , பேரீச்சம் பழம் , ஜூஸ் பழம்,புட்டிங் வகைகளுடன் நோன்பு திறந்து பின்பு கஞ்சி குடித்தால் தான் நோன்பு திறந்தது போல் இருக்கும்.நோன்பு திறந்தவுடன் எல்லாம் நிறைய சாப்பிட முடியாது,கொஞ்சம் கொஞ்சம் அதனை சத்தானதாக வாயிற்கு ருசியாக வெரைட்டியாக நோன்பாளிகளுக்கு செய்யும் பொழுது ஒரு திருப்தி மனசுக்கு.
100 கிராம் அரிசி சேர்த்தால் 4 பேருக்கு கஞ்சி சரியாக இருக்கும்.அதிகம் வேண்டுமானால் கூட்டி குறைத்து கொள்ளவும்.இந்த வெரைட்டி கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் பச்சடி அருமையான காம்பினேஷன்.எங்க ஊர் பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் மண்கொட்டராவில் கஞ்சியும்,கத்திரிக்காய் பச்சடி அல்லது கடலை பருப்பு கத்திரிக்காய் பரிமாறுவது வழக்கம்.தினமும் கஞ்சி செய்ய வேண்டியதிருப்பதால் நாளுக்கொரு கஞ்சி செய்து அசத்தலாம்.அல் ஐனில் எங்கள் வீட்டின் இருபுறமும் பள்ளிவாசல் இருப்பதால் என் மகன் எப்பவாவது அங்கு சென்று நோன்பு திறக்க ஆசைப்படுவான் அங்குள்ள அரீஸ்,மந்தி ரைஸ் டேஸ்டிற்காக. யு.ஏ.இ -யில் நோன்பு நேரத்தில் அங்கங்கு கூடாரம்.பள்ளி வாசல்களில் நோன்பு திறக்க பலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மிக பிரமாதமாக இருக்கும்.என்றாலும் என் கணவர் வீட்டில் தான் நோன்பு திறப்பது வழக்கம்.எனவே எப்பவும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சமையற் கட்டு கலகலப்பாக இருக்கும்.ஓதல் தொழுகையுடன் நோன்பும் சேர்ந்து இந்த ரமளான் மாதம் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும்.ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்திற்காக எதிர்பார்த்து இருப்பதே ஆனந்தம்.


--ஆசியா உமர்.