Thursday, September 30, 2010

ஓட்ஸ் தேங்காய் லட்டு





தேவையான பொருட்கள் ;
ஓட்ஸ் - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பால்- 2 டேபிள்ஸ்பூன்
சீனி - 4 - 5 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
கிஸ்மிஸ் -10
ஏலப்பொடி - 1 பின்ச்



கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி,கிஸ்மிஸ் போட்டு இளஞ்சிவப்பாக வறுக்கவும்.


அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் மணம் வர வதக்கவும்.

பின்பு ஓட்ஸ் சேர்த்து வதக்கவும்.லேசாக வறுத்த மணம் வரும்.

உடன் பால் 3 டேபிள்ஸ்பூன் விட்டு கிளறவும், பின்பு சீனி சேர்க்கவும்.

சீனி இலகி இருகும் வரை பிரட்டவும்.ஏலப்பொடி சேர்க்கவும்.ஒரு போல் பிரட்டி விடவும்.

தட்டில் வைத்து ஆறவைக்கவும்.


லேசான சூட்டில் லட்டாக பிடிக்கவும். சிறிய எலுமிச்சை அளவில் 10 லட்டு உருண்டை வரும்.இதனை ரொம்ப சிம்பிளாக ஈசியாக செய்து விடலாம்.ருசியும் அபாரம்.

சுவையான சத்தான ஒட்ஸ் தேங்காய் லட்டு ரெடி.

-ஆசியா உமர்.

இந்த குறிப்பை நிதுபாலாவின்(கிளிக்கவும்) லட்டு இவெண்டுக்கு அனுப்புகிறேன்.


பேச்சிலர்ஸ் ப்லைன் ரவா கிச்சடி


தேவையான பொருட்கள்;
ரவை - 300 கிராம்
தண்ணீர் - 900 மில்லி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
மல்லி,கருவேப்பிலை,புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்பு தூள்)
மிளகாய்த்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

ரவையை நல்ல மணம் வர மிக நன்கு வறுத்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி புதினா கட் செய்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி கொள்ளவும்.நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்க்கவும்.



நன்கு வதக்கவும்,தக்காளி,மல்லி,புதினா,கருவேப்பிலை,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும், மூடி சிம்மில் போடவும்.
திறந்து வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.



நன்கு சேர்த்து வதக்கவும்.எண்ணெய் தெளிந்து மேல் வரும்.


ரவைக்கு 3 அளவு தண்ணீர் சேர்க்கவும்,அல்லது நான் குறிப்பிட்ட அளவு சேர்க்கவும்.நுரை கூடி கொதி வரும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பாருங்க.


ரவையை சிறிது சிறிதாக தட்டி கிண்டவும்.ரவையை நன்கு வறுத்து இருப்பதாலும்,அடுப்பை சிம்மில் வைப்பதால் ரவை கட்டி பிடிக்காது.


ரவை கிண்டும் பொழுது இப்படி அழகாய் திரண்டு வரும்.இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மறுபடி கிளறவும்.கிச்சடி ரெடியாயிடுச்சி.



ரெடியான சுவையான ப்லைன் ரவா கிச்சடியை சுடச்சுட அருமையாய் பரிமாறுங்க.

-ஆசியா உமர்.

Wednesday, September 29, 2010

சேனைக்கிழங்கு பொரியல்



தேவையான பொருட்கள் ;

சேனைக்கிழங்கு - 300 கிராம்

கடுகு,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்

மிளகாய் வற்றல்-2

மல்லி,கருவேப்பிலை - சிறிது

பெரிய வெங்காயம்- 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைஸ்பூன் (விரும்பினால்)

அல்லது பெருங்காயம் - 2 பின்ச்

மஞ்சள் தூள் - அரைஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால்ஸ்பூன்

சீரகத்தூள்- கால்ஸ்பூன்

பெருஞ்சீரகத்தூள் -கால்ஸ்பூன்(விரும்பினால்)
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு


சேனைக்கிழங்கை தோல் சீவி இப்படி துண்டாக கட் செய்து கொள்ளவும்.



அரிசி களைந்த நீர் இருந்தால் அதில் சேனைகிழங்கை போட்டு அத்துடன் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

இப்படி வெந்து விடும்.குழைந்துவிடக்கூடாது.



வெந்த கிழங்கை தண்ணீர் வடிகட்டி விட்டு சிறிய துண்டாக கட் செய்து கொள்ளவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவிடவும்.



பின்பு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.



நறுக்கிய சேனைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்,மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,பெருஞ்சீரகத்தூள் (விரும்பினால்) சேர்க்கவும்.பிரட்டி விடவும். சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.


தேங்காய்த்துருவல்,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் சென்று இறக்கவும்.

சுவையான சேனைக்கிழங்கு பொரியல் ரெடி.


--ஆசியா உமர்.

Tuesday, September 28, 2010

Easy kerala spicy fish curry / ஈசி கேரளா ஸ்பைசி மீன் கறி

Easy Kerala Spicy Fish Curry


தேவையான பொருட்கள்;

மீன் - 1 கிலோ (கோலா மீன்)


கொடம்புளி - 4 துண்டு பெரியது அல்லது சிறியது என்றால் 8

தேங்காய் எண்ணெய் - 100 மில்லி

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

இஞ்சி- 50 கிராம்

பூண்டு - 50 கிராம்

கருவேப்பிலை - 3 இணுக்கு

உப்பு - தேவைக்கு.


செய்முறை:

இஞ்சி பூண்டை தோல் நீக்கி இப்படி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடேறியதுன் நறுக்கிய இஞ்சி பூண்டை ஒரு கடாயில் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு சிவற வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.
வதக்கி ஆறவைக்கவும்.


வதக்கிய மசாலாவை நைசாக அரைத்து எடுக்கவும்.

கேரளாவில் மீன் கறி மண்சட்டியில் தான் சமைப்பதுண்டு.எனவே நானும் மண்சட்டியில் மீதமுள்ள தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு ,வெந்தயம் போட்டு வெடித்ததும் கருவேப்பிலை போட்டு அரைத்த மசாலாவை போட்டு சிறிது வதக்கவும்.


இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

சுத்தம் செய்து மஞ்சள் உப்பு போட்டு அலசிய மீன் துண்டுகளை போடவும்.பெரிய துண்டாக கட் செய்து இருப்பதால் இடையில் கீறி விட்டுக்கொண்டேன்.அத்துடன் கொடம்புளியை தண்ணீரில் அலசி போடவும்.மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.இறக்கும் முன்பு 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விரும்பினால் விட்டு இறக்கவும்.

சுவையான ஈசி ஸ்பைசி கேரள மீன் கறி ரெடி.இதனை 3 நாட்கள் வெளியே வைத்து சாப்பிட்டாலும் கெடாது.ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைக்கலாம்.வெங்காயம்,தக்காளி,தேங்காய் சேர்க்கவில்லை.ஆனாலும் கேரள உணவு விரும்பிகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.



-ஆசியா உமர்.

Sunday, September 26, 2010

வெண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - கால் கிலோ
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கருவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு

வெண்டைக்காய் கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைக்கவும்.புளி கரைத்து வைக்கவும்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்,அருமையான மணம் வரும்.

நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய வெண்டைக்காய்,சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்,வெண்டைக்காய் வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

மசாலா வாடை அடங்கியதும் புளிக்கரைசல் விட்டு கொதிக்க விடவும்.

தனியே வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்.

வெண்டைக்காய் சேர்த்து நன்கு கொதிவரும், மூடி போட்டு 5 நிமிடம் மீடியம் நெருப்பில் வைக்கவும்.

பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்,குழம்பு கெட்டி தன்மைக்கு தகுந்தபடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்,உப்பு சரிபார்க்கவும்.சிம்மில் வைத்து தேங்காய் வாடை மடங்கி அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெயில் இரண்டு வற்றல் சிவற வறுத்து கொட்டவும்.
சூப்பர் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி.இதனை சாதத்தில் விட்டும் சாப்பிடலாம்,தொட்டும் சாப்பிடலாம்,இட்லி,தோசை
சப்பாத்திக்கு கூட பொருத்தமாக இருக்கும்.


-ஆசியா உமர்.