Sunday, October 31, 2010

மஷ்ரூம் டோபியாஸா /Mushroom Dopiaza

தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
முந்திரி பருப்பு -8
தக்காளி மீடியம் சைஸ் -1
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு



வெங்காயத்தில் பாதியை இப்படி துண்டாக நறுக்கி உதிர்த்து கொள்ளவும் மல்லி இலை நறுக்கி வைக்கவும்,காளான் சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு இளஞ்சிவப்பாக வதக்கி எடுக்கவும்.


மீதி வெங்காயத்தை முந்திரி பருப்புடன் அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சிபூண்டு,கரம்மசாலா வதக்கி கொள்ளவும்.

அத்துடன் அரைத்த வெங்காயம் முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.2 நிமிடம் வதக்க வேண்டும்.



வதக்கிய மசாலாவுடன் சுத்தம் செய்து வெந்நீரில் கழுவி நறுக்கிய காளான் சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.

அத்துடன் நறுக்கிய தக்காளி,மிளகாய்  சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.மூடி போட்டு வேகவிடவும்,தண்ணீர் ஊறும்,வற்றியவுடன் வதக்கிய வெங்காயம் சேர்த்து பிரட்டி சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.மல்லி இலை தூவி பரிமாறவும்.



சுவையான மஷ்ரூம் டோபியாஸா ரெடி.இதனை நாண்,சப்பாத்தி,ரொட்டி வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஃப்ரைட் ரைஸ் உடனும் அசத்தலாக இருக்கும்.சிக்கனிலும் இப்படி செய்யலாம்.
இன்னும் கிரேவி வேண்டுமானால் புளிப்பில்லாத கெட்டி தயிர் 2 டேபிள்ஸ்பூன் நன்கு அடித்து சேர்க்கலாம் அல்லது ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கலாம்.


--ஆசியா உமர்.

Thursday, October 28, 2010

மஞ்சள் பூசணி கறி

Padhu's Pumpkin Curry


தேவையான பொருட்கள் ;

மஞ்சள் பூசணி நறுக்கியது - 2 கப்

புளி - சிறிய நெல்லி அளவு

மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்

சாம்பார் பொடி - ஒன்னரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா அரைடீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

வெங்காயம் - 1

பெருங்காயம் - பின்ச்

கருவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு - தேவைக்கு




மஞ்சள் பூசணி தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.



நறுக்கிய பூசணி,மஞ்சள் பொடி,உப்பு,புளிக்கரைசல் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வேக வைக்கவும்.



10 நிமிடத்தில் வெந்து இப்படி காணப்படும்.புளித்தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை சேர்த்து வெடித்ததும்,பெருங்காயப்பொடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



பின்பு வேகவைத்த பூசணியை சேர்க்கவும்,பிரட்டி விடவும்.



தாளித்த பூசணியில் சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,உப்பு சரிபார்க்கவும்,ஏற்கனவே உப்பு சேர்த்து வேக வைத்ததால் பார்த்து உப்பு போடவும்.5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.


சுவையான மஞ்சள் பூசணி கறி ரெடி.
இதனை சாதம்,சப்பாத்தியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.இந்த முறையில் சமைத்தால் இனிப்பு சுவை தெரியாமல் தொட்டு கொள்ள அசத்தலாக இருக்கும்.



--Thanks Padhu.





PADHU - வின் குறிப்பை காண இங்கு(கிளிக்கவும்) செல்லவும்.

-ஆசியா உமர்.


Wednesday, October 27, 2010

பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார்



பருப்பை முதலில் நன்கு அலசி கால் மணி நேரம் ஊறவைக்கவும்.குக்கரில் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள்பொடி, பெருங்காயம்,1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 3 விசில் வைத்து இறக்கவும்.வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.


தேவையான பொருட்கள் ;
துவரம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - கால்டீஸ்பூன்
ரெடிமேட் சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்+ அரைடீஸ்பூன்
கடுகு-அரைஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - சிறியது 5
பீன்ஸ் - 10
கேரட் - 1
கருவேப்பிலை ,மல்லி இலை -சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4-6


கத்திரிக்காய்,முருங்கைக்காய்,பீன்ஸ்,கேரட்,,தக்காளி,மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய காய்கறியோடு,சின்ன வெங்காயம் 10,தக்காளி,புளிக்கரைசல்,தேவைக்கு உப்பு,சாம்பார் பொடி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைக்கவும்.காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்குமாறு வைக்கவும்.ஒரு விசில் தான் வைக்கவேண்டும்.அதிக நேரம் வைத்தால் காய் குழைந்து விடும்.விருபினால் 5 சின்ன வெங்காயத்தை தாளிக்க நறுக்கி வைக்கவும்.இல்லாவிடில் வெங்காயம் சேர்க்காமலும் தாளிக்கலாம்.

குக்கரை திறந்தால் சாம்பாருக்கான காய் வெந்து இப்படி காணப்படும்.நேரம் இருந்தால் தனியாக பாத்திரத்திலும் காய் வேக வைக்கலாம்.


அத்துடன் வேகவைத்த பருப்பை கலந்து மல்லி இலை தூவி கொதிக்க விடவும்.உப்பு சரி பார்க்கவும்.கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.

பின்பு தாளித்து கொட்ட ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம்,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை வெடித்ததும் சின்ன வெங்காயம் சிறிது நறுக்கியது சேர்த்து வதக்கி,அரைஸ்பூன் சாம்பார் பொடி,பின்ச் பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கி உடன் ரெடியான சாம்பாரில் கொட்டவும்.


தாளித்து கொட்டியதும் கலந்து விடவும்.


கமகமக்கும் பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் ரெடி.

இதனை காலையில் இட்லி,தோசைக்கு வைத்து சாப்பிடலாம்,மதியம் சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள வெறும் அப்பளம் இருந்தாலே போதும்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.


--ஆசியா உமர்.

Tuesday, October 26, 2010

சிக்கன் ட்ரம்ஸ்டிக்



இது என் இருநூறாவது பதிவு.
தேவையான பொருட்கள் ;
சிக்கன் லெக் பீஸ் - 10 (பெரியது)
சில்லி பவுடர் - 1-2 டீஸ்பூன்
லெமன் ஜுஸ்- 2 டீஸ்பூன் அல்லது கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா- கால் ஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ஸ் - 1 -2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1 (விரும்பினால்)
டொமட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு அல்லது சூப் கியுப் 1 - தேவைக்கு
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மசாலா இறங்க ஏதுவாக கீறிவிட்டு கொள்ளவும்.கழுவி தண்ணீர் வடிகட்டவும்.பின்பு அத்துடன் எண்ணெய் தவிர மேல் குறிப்பிட்ட அத்தனை பொருட்களையும் சேர்த்து கலந்து குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும்.

க்டாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் நெருப்பை கூட்டி வைத்து சிக்கன் பீஸை போடவும்.பின்பு மீடியம் நெருப்பில் வைத்து சிவற பொரித்து எடுக்கவும்.பேப்பர் டவலில் வைத்து எடுத்து பரிமாறவும்.

சிக்கன் லெக் பீஸ் தவிர மற்ற பீஸையும் இப்படி பொரிக்கலாம்.
கேரட் ,வெள்ளரி,லைம் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

பார்ட்டியில் ஸ்டார்டராக பரிமாறலாம்.பிரியாணி ,ஃப்ரைட் ரைஸ் ,நாண் ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆகவும் பரிமாறினால் அருமையாக இருக்கும்.
கோட்டிங் மிக்ஸ் சிக்கனில் உங்கள் தேவைக்கு தகுந்தபடி சேர்க்கும் பொருளின் அளவை உங்கள் விருப்பத்திற்கு கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.


--ஆசியா உமர்.

Sunday, October 24, 2010

வறுத்தரைத்த மோர் குழம்பு

தேவையான பொருட்கள் ;
வெண்டைக்காய் - கால் கிலோ
மோர் - 300- 500 மில்லி
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1டீஸ்பூன
அரிசி - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2+1
மிளகு - கால்ஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
கருவேப்பிலை- 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
து.பருப்பு,க.பருப்பு,அரிசி மூன்றையும் வறுத்து கொள்ளவும்,இளஞ்சிவப்பாக எடுக்க வேண்டும்.

பின்பு அதே வாணலியில் மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் போட்டு வறுத்து எடுத்து,பின்பு தேங்காய் துருவல் போட்டு வறுத்து எடுக்கவும்.


பின்பு வறுத்த அனைத்து பொருட்களும் ஆறிய பின்பு பொடி செய்து அத்துடன் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வெங்காயம்,வெண்டைக்காய் சுத்தம் செய்து கழுவி நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.பெருங்காயப்பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு காய் வதங்க வேண்டும்.


வெண்டைக்காய் வதங்கிய பின்பு வறுத்தரைத்த விழுதை சேர்க்கவும்.


ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்,கொதிக்க விடவும்.


குழம்பு நன்கு கொதித்து நிறம் மாறி வரும்.கொழ கொழன்னு இருக்கும்.அதனில் மோர் சேர்க்கவும்.கொழ கொழப்பு மாறிவிடும்.இப்ப குழம்பு ஊற்றி சாப்பிடும் பதத்தில் இருக்கும் படி தேவைப்பட்டால் இன்னும் மோர் சேர்க்கவும்.கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.

மோர் சேர்த்தவுடன் குழம்பு பதமாக ஆகிவிடும்.நுரை கூடி கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.

சுவையான வறுத்தரைத்த வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.
இது சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்,குழம்பில் உள்ள வெண்டைக்காயின் ருசி அசத்தலாக இருக்கும்.
-ஆசியா உமர்.


Saturday, October 23, 2010

முட்டைகோஸ் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள் ;
முட்டை கோஸ் - கால் கிலோ
முட்டை -2
வெங்காயம் - 2
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் -2
கடுகு ,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிள்குத்தூள் - கால்ஸ்பூன்
கரவேப்பிலை,மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முட்டை கோஸ், வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை சிறிது உப்பு,மிள்குத்தூள் போட்டு அடித்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,வெங்காயம்,பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும்,அத்துடன் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.வதங்கியதும்,நறுக்கிய முட்டை கோஸ் சேர்க்கவும்,பிரட்டி விடவும்.மஞ்சள்,சீரக,பெருஞ்சீரகதூள்களை சேர்க்கவும்.
கோஸ் நன்கு வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.




பின்பு அடித்து வைத்த முட்டை சேர்க்கவும்.பிரட்டி சிறிது மூடி போட்டு வேக விடவும்.


கோஸ்,முட்டை இரண்டும் சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்க்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி விடவும்.



சுவையான முட்டைகோஸ் முட்டை பொரியல் ரெடி.



கோஸ் முட்டையும் சேர்ந்து பொரியல் செய்யும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.மூளை பொரியல் போன்று மணக்கும்.விரும்பினால் தக்காளி,மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.உப்பு அளவாய் போடவும்,கொஞ்சம் கூடினால் கூட கடுத்த மாதிரி இருக்கும்.விரும்பினால் கரம் மசாலா,தேங்காய் சேர்க்கவும்,சேர்க்காமலும் அருமையாக இருக்கும்.
--ஆசியா உமர்.