Monday, November 29, 2010

ராகி சேமியா முளைகட்டிய பயறு - Sprouts Ragi Semiya


Ingredients :

Ragi semiya - 100 gm

Green gram sprouts - half cup

Onion - 100 gm

Green chilli -1

Chopped ginger - 1 tsp

Oil - 1 tbsp

Mustard seeds - half tsp

Black gram dhal - 1 tsp

Curry leaves - few

Chopped Coriander leaves -2 tsp

Lime juice - 1 tsp

Salt - to taste


Method :

1.Slice the onoin and finely chop the green chilli ,ginger and coriander leaves.
2.In a bowl add ragi semiya , hot boiling water and salt,let it stand for 2 minutes and then drain it.
3.Heat oil in a pan,add mustard seeds and black gram dhal when they splutter add curry leaves then chopped ginger,chilli and sliced onions then fry for 2 minutes.

4.Then add the green gram sprouts and mix well, add drained ragi semiya and again mix it, add salt and lime juice to taste.

5.Serve garnished with coriander leaves.



-Asiya Omar


தேவையான பொருட்கள்;

ராகி சேமியா – 100 கிராம்
பச்சை பயறு முளைகட்டியது – அரை கப்
வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிள்காய் – 1
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
மல்லி இலை நறுக்கியது – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு

செய்முறை :

1.வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் ராகி சேமியா எடுத்து அத்துடன் கொதிக்கும் நீரை சேர்த்து உப்பு போட்டு 2 நிமிடம் வைத்து வடிகட்டி வைக்கவும்.
3.ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்கவும் கருவேப்பிலை போட்டு நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4.அத்துடன் முளைகட்டிய பயறு,சேர்த்து வதக்கி,வடிகட்டிய ராகி சேமியா சேர்த்து கிளறவும்.அத்துடன் சுவைக்கு எலுமிச்சை சாறு,உப்பு சிறிது சேர்த்து பிரட்டி இறக்கவும்.
5.நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
6.சுவையான ஆரோக்கியமான சத்தான ராகி சேமியா முளைகட்டிய பயறு ரெடி.
பின் குறிப்பு :பச்சை பயறு முளைகட்ட பச்சை பயறை காலையில் ஊறவைத்து நன்கு ஊறியவுடன் தண்ணீர் வடிகட்டி ஒரு பனியன் போன்ற துணியில் பொதிந்து வைக்கவும். ஹாட் பேக்கை வெந்நீரில் அலசி, துணியில் பொதிந்த ஊறிய பயறை வைத்து மூடவும்.மறுநாள் திறந்து பார்த்தால் முளைகட்டிய பயறு ரெடி.

-ஆசியா உமர்.

Sunday, November 28, 2010

அல் ஐன் - பகுதி-1, விருந்தும்,விருதுகளும்



அல்-ஐன் பற்றிய இந்த பதிவில் கிரீன் முபஸ்ஸரா,ஜெபல் ஹஃபீத் என்ற சுற்றுலா இடங்கள் பற்றி பார்ப்போம்.ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் ஐன் சிட்டி ஒரு அழகான ஒயாசிஸ்(பாலைவனச்சோலை),துபாயில் இருந்து அல்- ஐன் சுமார் 2 மணி நேர பயணம்.(100கி.மீ வேகத்தில் வந்தால்)முதல்படம் ஜெபல் ஹஃபீத் என்ற மலைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கிரீன் முபஸ்ஸரா.இந்த சிறிய சுடு நீர் ஊற்று(ஹாட் ஸ்ப்ரிங் ஸ்பாட்)முக்கியமான இடம்.
இது ஜெபல் ஹஃபீத் ஏறியவுடன் அங்கு உச்சியில் உள்ள ஜெபல் டாப் ரெஸ்டாரண்ட்(சின்ன கட்டிடம்)அந்த மலை இரவின் வெளிச்சத்தில் அழகோ அழகு.
இது ஜெபல் ஹஃபீத்தில் இருந்து எடுக்கப்பட்ட அல்-ஐன் ஊரின் ஒரு பகுதி.இந்த மலைப்பாதை உலக டாப் 10 (mountain drive) மலைப் பயண பாதைகளுள் ஒன்றாகும்.

இதுவும் ஜெபலில் இருந்து எடுக்கப்பட்ட அல் -ஐன் ஊர் தான்.

சுடு நீர் ஊற்றில் இருந்து வரும் ஓடையில் குழந்தைகள் விளையாடும் அழகை பாருங்களேன். கிரீன் முபஸ்ஸராவில் இருக்கும் இந்த கட்டிடம் ஹாட் வாட்டர் ஸ்விம்மிங் பூல்.குளிக்க விருப்பமுள்ளவர்கள் சென்று குளிக்கலாம்.கட்டணம் 5 திர்ஹம்.குளிர் காலத்தில் அங்கு குளிப்பதற்கு இதமாக இருக்கும்.

கிரீன் முபஸ்ஸராவில் உள்ள அமைதியான,அழகான ரெஸ்டாரண்ட்.ஆனால் நாங்கள் அங்கு போகும் பொழுது எல்லாம் கையிலேயே சமைத்து எடுத்து சென்று விடுவது வழக்கம்.



இந்த வியூவையும் பாருங்க,மலை பாறையில் புல் வளர்த்து எவ்வளவு அழகாக இருக்கு.


புல்மலையில் ஏறினால் இந்த அழகான ஃபவுன்டெய்ன்.

இருட்ட ஆரம்பித்தவுடன் விளக்கு வெளிச்சத்தில் கிரீன் முபஸ்ஸரா.


குழந்தைகள் உல்லாசமாக விளையாடும் பகுதி.

ஆங்காங்கு இப்படி பார்ப்பிகியூ அடுப்புகள் நெருப்பு கங்குடன் இருக்கும்,நாம் அடுப்பு எடுத்து சென்றால் கங்கு உண்டாக்க நெருப்பு இங்கிருந்து எடுத்து கொள்ளலாம்.அங்கிருக்கும் அடுப்பில் கூட பார்பிகியூ செய்து அசத்தலாம்.

சுற்றி பார்க்க குதிரை வண்டி. ஒய்வெடுக்க அங்கங்கு கூடாரங்களும் உண்டு. அப்புறம் toboggon run இருக்கு.5 திர்ஹம் கொடுத்தால் திரில்லாக குதூகலிக்கலாம்.அதன் படம் எடுக்க தவறி விட்டேன்.

குழந்தைகளை விளையாடவிட்டு விட்டு நாம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.நாங்க எடுத்த ஒரு சில படங்கள் தான் இவை. நல்ல ரசித்திருப்பீர்கள், அடுத்து அல்-ஐனின் மற்றொரு இடத்தில் சந்திக்கலாம்.


விருந்து

இது தீபாவளிக்கு என் கணவரின் நண்பர் பாலசுப்ரமணியம்,லக்‌ஷ்மி தம்பதியினர் தந்த விருந்து.என் கணவரும் அவருடைய நண்பரும் கல்லூரியில் ஒன்றாக பயின்று,பின்பு தமிழ்நாடுமின்சாரவாரியத்தில் வேலை பார்த்து,இப்ப இங்கும் ஒன்றாக வேலை பார்ப்பதால் நட்பு அன்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒயிட் ரைஸ்,ரசம்,மோர்,வடை பாயாசம் எல்லாம் இருந்தது,பேச்சு சுவாரசியத்தில் படங்கள் எடுக்காமல் விட்டு விட்டேன்.


விருது

சரி இப்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான தருணம்.எனக்கு ரசிகன் ப்ளாக்ஸ்பாட் சகோ.சௌந்தர் இந்த எனது மண் எனது கலாச்சாரம் விருதை தந்து அசத்தி இருக்கிறார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதைப்பார்த்தவுடன் எங்கள் வயல்,எங்கள் வீட்டு உழவன்,உழவி நினைவும்,என் கல்லூரி நாட்களில் எனக்கு அங்கு தந்த 5 சென்ட்டில் நெற்பயிர் விளைவித்து,அறுவடை செய்ததும் மலரும் நினைவுகளாய் மனதை மகிழ்விக்கிறது.

இது மகிகிச்சன் ப்ளாக்ஸ்பாட் தோழி மகி தந்த லவ்லி ப்ளாக் விருது.மிக்க நன்றி மகி.

இந்த இரண்டு விருதையும் நான் ஸாதிகா,மனோஅக்கா,ஜலீலா,கவிசிவா,இலா,கௌசல்யா,சிநேகிதி,அஸ்மா,தளிகா,ஆமினா,குறிஞ்சி,கிருஷ்ணவேணி,காஞ்சனா, ஆகியவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எல்லாருக்கும் கொடுக்கணும் என்று ஆசை தான் மற்ற தோழிகளும் பகிரவேண்டாமா?


--ஆசியா உமர்.

Friday, November 26, 2010

சின்னஞ் சிறிய உலகம் - பகுதி - 3


பகுதி – 1 இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.

பகுதி – 2 இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.

இன்ஸ்ட்டியூட்டே அல்லோகலப்பட்டது.டைரக்டர் ஓடி வந்து எங்களிடம் விஷயத்தை தெரிவித்து விட்டு அவர் சிசிடிவியை வாட்ச் செய்ய அவர் கேபினுக்குள் சென்றுவிட்டார்.

அட்டெண்டர்ஸ் இங்கு மங்கும் ஓடி தேடுகின்றனர்.எல்லா ரூமும் பளிச்சென்று கண்ணாடி அறை என்பதால் பார்க்கும் படி தான் இருக்கும். ஆனால் நான் தேடியமட்டும் எங்கும் பார்க்க முடியவில்லையே,டைரக்டர் ரூம் சென்று கேட்கவோ,டிவியை பார்க்கவோ முடியலை.இறுதியில் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவந்தது,ஆனால் அந்த ரூமை வெளியில் இருந்து பார்க்கமுடியாது,

அது ப்ரேயர் ரூம்.வெளியே நாங்கள் எல்லாம் கூடி நின்றுவிட்டோம். “ஷாஜூ,லிசா” என்று நான் சத்தமாக அழைத்த வண்ணமிருந்தேன்.ரூமை ஷாஜு மூடி தாழ் போட்டு விட்டதால் என் உயிரே என் கையில் இல்லை.

என் பொறுப்பில் இருந்த இரண்டு குழந்தைகள், “நான் என்ன செய்வேன்”,என்று பதட்டத்துடன் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.கதவை உடைக்க ஏற்பாடு நடந்து விட்டது. திடீரென்று ஒரு ஐடியா வந்து, நான் ”ஷாஜு, உனக்கு பிரியாணி வாங்கி வந்திருக்கிறேன்” என்று சத்தம் கொடுத்தேன்,அதற்கு “ஆசியா டீச்சர்!” என்று ஷாஜு சொல்வது கேட்டது. நானும் விடாமல் ”சாஜு உனக்கு மட்டும் தான் பிரியாணி லிசாவை விட்டு விட்டு உடனே வந்தால் தருவேன்” என்று சொன்னது தான் தாமதம், கதவு திறந்து வெளியே வந்தான் ஷாஜு. எல்லா ஸ்டாஃபையும் ஒரே இடத்தில் பார்த்ததில் பிரியாணியை கூட மறந்து, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குற்ற உணர்ச்சியுடன் கிளாஸ்ரூம் சென்று தலையை கவிழ்த்து படுத்து கொண்டான்.


“அப்பாடா!”,எனக்கு போன உயிர் திரும்பி வந்தது.அதற்குள் நான் சென்று லிசாவின் கசங்கிய ஆடைகளை சரி செய்து அழைத்து வந்தேன்,எந்த அசம்பாவிதமும் நடக்கும் முன்பு உஷாரானது, நான் செய்த புண்ணியமோ என்று நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவது தவிர எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதற்குள் பிள்ளைகளை அழைத்து செல்ல பெற்றோர் வரவும்,பத்திரமாய் ஒப்படைத்து விட்டு டைரக்டர் ரூம் சென்று சாரி சொன்னேன்.
அவரும், “It’s o.k .you are such a talented lady ” என்று சமாதானமாக சொன்னார்.
நிம்மதியான மனதுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

--ஆசியா உமர்.

படம் - நன்றி கூகிள்.

Thursday, November 25, 2010

சின்னஞ் சிறிய உலகம் - பகுதி- 2


பகுதி -1 பார்க்க இங்கே ( கிளிக்கவும்) செல்லவும்.


இது நடந்தது 2005 அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மூன்று மாதம் அந்த இன்ஸ்ட்டியூட்டில் வேலை பார்த்தேன்.அங்கிருந்து வந்தவுடன் சும்மா இருக்கலை,எங்கள் வீட்டு பக்கம் உள்ள ஏழு பள்ளிகளுக்கும் நானே ஒரு சிவியை தயார் செய்து கொடுத்து விட்டு வந்தேன்.அங்குள்ள அனுபவத்தை பின்பு பார்ப்போம்.

இன்ஸ்ட்டியூட்டில் என் பொறுப்பில் இருந்த லிசா(எத்தியோப்பியா)வயது – 13,சபா – 6(பாகிஸ்தான்)சாஜு(கேரளா) வயது – 21 பற்றியும் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும இந்த பகுதியில் சொல்றேன்.
.
லிசா வாய் பேசமாட்டாள், எப்பொழுதும் எச்சி வடிந்து கொண்டு இருக்கும் இவளுக்கு எதுவும் சொல்லி கொடுக்க வேண்டாம், ஜஸ்ட் கவனித்தால் போதும்,அவளை இன்ஸ்ட்டியூட்டில் விட்டு செல்ல அவளது அப்பாவும்,அழைத்து செல்ல அம்மாவும் வருவதுண்டு.அவளால் எந்த தொந்திரவும் எனக்கு இருந்ததில்லை.ஆனால் அவளை மற்ற குழந்தைகளிடம் இருந்து பாதுகாப்பது தான் பெரிய சிரமம்.

சபா அழகு குட்டி,ஒரு இடத்தில் இருக்க மாட்டாள்,எங்காவது ஓடி ஒளிந்து விளையாடுவது இவளுக்கு ரொம்ப பிடிக்கும்.ஹைப்பர் ஆக்டிவ்,அவளை கவனித்து 3 மணி நேரம் பாதுகாப்பதே பெரிய வேலை,இதற்கிடையில் அவளை எழுத வைக்க வேண்டும்.ஒரு எழுத்து கூட எழுத தெரியாத அவளுக்கு ஆங்கில எழுத்துக்கள் சில,சில எண்கள் மட்டுமே நான் பணியாற்றிய நாட்களில் என்னால் கற்று கொடுக்க முடிந்தது.அவள் என்னுடன் வேனில் வந்து எனது பில்டிங்கில் இருந்து மூன்றாவது பில்டிங்கில் இறங்குவதால் அவளை இறக்கி விடும் வரை அவள் என் பொறுப்பு. ஒரு நாள் அவளின் அம்மா அழைத்து செல்ல வரவில்லை.

வேனில் இருந்து குதித்து பில்டிங்கை நோக்கி ஓடி விட்டாள்,வேன் ட்ரைவரோ அவளை அம்மாவிடம் விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டதால் எனக்கு படபடப்பு, மூன்று மாடி பில்டிங் தான் என்பதால் அன்று இலகுவாக கண்டு பிடிக்க முடிந்தது.அவள் பின்னாலேயே ஓடி வந்து பார்த்தால் லிஃப்ட் கிரவுண்ட் ப்ளோரில் இருக்கு,சபாவை காணோம்,அவள் ஒளிந்து விளையாடும் குணம் தெரியுமாதலால் மாடி படிகட்டு போகும் வழியில் மறைந்து இருப்பாளோ என்ற எண்ணத்தில் போய் பார்த்தால் அவள் பை இருக்கு அவளை காணோம்,மடமடவென்று படி ஏறி பார்த்தால் மூன்றாவது மாடியின் கதவருகே நிற்கிறாள்,இதற்குள் அவங்க அம்மாவும் வரவே அவளை ஒப்படைத்து விட்டு வருவதற்குள் போதுமென்றாகிவிட்டது. என் கணவரிடம் நடந்த விஷ்யத்தை வந்து சொன்னால் அவருக்கு பயங்கர கோபம்,உனக்கு எதுக்கு இந்த வேலை,ஏன் சிரமப்படுறேன்னு சத்தம் போட்டார்.


அடுத்து நம்ம சாஜூவை பற்றி சொல்றேன்,கேளுங்க,நல்ல குண்டான தேகம்,மீசை தாடியுடன் பெரிய பையன்,அவனுடைய கனவு அவங்க அப்பா வேலை பார்க்கும் ஆபிஸில் ஆபிஸ் பாய் ஆகவேண்டும் என்பது,அப்பா கூடவே இருக்கலாமாம், இந்த ஐடியா எப்படி அவனுக்கு வந்ததுன்னு தெரியலை,தினமும் சொல்வான்,அதற்கு அவனை தயார் படுத்த அவன் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் தினமும் கேட்பதும் அவனுக்கு எடுத்து சொல்வதும் அன்றாட வேலையில் ஒன்று.எந்த பொருள் புதிதாக யார் கொண்டு வந்தாலும் மாயமாய் மறைந்து விடும், அவன் பையில் தேடினால் இருக்கும்,அவனிடம் இருந்து வாங்கவும் முடியாது,மறுநாள் அவனுடைய அப்பா தான் கொண்டு வந்து தருவார்கள்.பிரியாணி என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்று எப்பவும் என்னிடம் சொல்வான்,அவன் அடிக்கடி எனக்கு பிரியாணி சமைக்க தெரியுமா என்று கேட்பதுண்டு,ஒரு நாள் அவனுக்காக பிரியாணி கூட செய்து எடுத்து போனேன்..எப்பவும் அவனுடன் சிரித்து பேசவேண்டும்.சிரிக்கவில்லை என்றால் ஒரு வேலையும் நடக்காது.ஒரு நாள் தீடீரென்று கொஞ்சம் கவனக்குறைவாய் மற்ற குழந்தைகள் பக்கம் திரும்பிவிட்டேன்.திரும்பினால் சாஜூவையும்,லிசாவையும் காணோம்,வகுப்பறைகள் முழுவதும் கண்ணாடி அறை தான்,நான் ஓடி தேடுவதற்குள் டைரக்டர் சிசிடிவியில் நடந்ததை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டார்.
அவர் டிவியில் பார்த்ததை சொன்ன பொழுது
என் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது..

-அனுபவங்கள் தொடரும்.


-ஆசியா உமர்.

பகுதி - 3 - பார்க்க இங்கே (கிளிக்கவும்) செல்லவும்.

படம் - நன்றி கூகிள்.

Tuesday, November 23, 2010

சின்னஞ் சிறிய உலகம்

பகுதி - 1

நாங்கள் அபுதாபிக்கு வந்த புதிது பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல பஸ் ஏறியவுடன் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கம்.
எங்கள் ஏரியா பள்ளிக்கூடங்கள் நிறைந்தது.அவசர அவசரமாய் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளில் விட்டு செல்லும்
அந்த அழகையும்,படபடப்பாய் நுழையும் ஆசிரியைகளையும் ரசித்து விட்டு தான் வீட்டினுள் செல்வேன்.

எத்தனை நாள் தான் வேடிக்கை பார்ப்பது நாமும் இங்குள்ள பள்ளிகளில் வேலை தேடினால் என்ன?என்ற யோசனை வரவே என் கணவரிடம் கேட்டேன்,அவரோ போரடிச்சுதுன்னா கம்ப்யூட்டர் கிளாஸ் போயேன் என்று 500 திர்ஹம் கொடுத்து சேர்த்து விட்டார்,நானும் 24 மணி நேரத்தில்(தினமும் ஒரு மணி நேரம்,24 நாட்கள்) ஏதோ படித்து முடித்து விட்டேன்,டிப்ளமா சர்டிஃபிகேட்டுடன் வெளிவந்தது தான் மிச்சம்.

அந்த இன்ஸ்டியூட்டில் special need children கவனித்து பாடம் சொல்லி கொடுக்கும் பகுதி இருந்தது.என்னுடைய கம்ப்யூட்டர் கோச் நீங்க வேண்டுமானால் ட்ரைனியாக சேருங்கள் ஒரு மாதத்தில் உங்களை நிரந்தர பணியாளராக நியமித்து விடுவார்கள்,என்று சொன்னதால் நானும் சந்தோஷப்பட்டு சேர்ந்தேன்,நமக்கு தான் நேரம் போகலையே !

மனநலம் உடல் நலம் குறைந்த அந்த குழந்தைகளோடு தினமும் காலை ஒன்பது மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை நேரத்தை செலவழித்து வந்ததில் ரொம்ப பிஸியாகிப் போனேன்.என் குழந்தைகள்,கணவரை விட அந்தக்குழந்தைகளின் கவலையே எனக்கு பெரிதாகிப்போனது.

எனக்கு ஆறு குழந்தைகள் கொடுக்கப்பட்டது,எகிப்து,சூடான்,எத்தியோப்பியா,இந்தியா,இலங்கை,பாகிஸ்தான் என்று மல்டிநேஷனல் ஒவ்வொரு குழந்தையுடனும் ஒவ்வொரு அனுபவம்.அதனை எழுதினால் இந்த இடுகை பற்றாது.வகுப்பறையில் கேமரா இருக்கும்,இன்ஸ்ட்டியூட்டின் டைரக்டர் அப்ப அப்ப குழந்தைகளையும் என்னையும் கவனித்து கொண்டு இருப்பார்.ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு என்ன கற்று கொடுக்கப்பட்டது,என்றும்,அவர்களுடைய நடவடிக்கை பற்றியும் நோட்ஸ் பெற்றோருக்கும்,இன்ஸ்ட்டியூட்டிற்கும் சப்மிட் செய்ய வேண்டும்.

ஒரு மாதம் கடந்தது,குழந்தைகளின் பெற்றோருக்கு என்னை மிகவும் பிடித்து போனது,வருகிறவர்கள் எல்லாம் மிஸ் நீங்களாவது மாறாமல் இருக்க வேண்டும் என்று விடாமல் கேட்டு கொண்டார்கள்,அதன் அர்த்தம் அப்ப எனக்கு புரியலை.

மூன்று மாதம் கழிந்தது,அப்பொழுது தான் சம்பளம் இல்லாமல் ட்ரைனியாக எவ்வளவு நாள் இருப்பது,நிரந்தர வேலை கேட்போம் என்று டைரக்டரை சந்திக்க சென்றேன்,.அதுவரை என்னை அன்பாக நடத்தியவர்கள் நான் சம்பளம்,வேலை என்று கேட்டவுடன் கடுமையாக மேடம் உங்களுடைய டிகிரியோ வேளாண்மை,நாங்க நிரந்திர வேலை தர முடியாது,வேலையை விட்டு நின்று கொள்ளலாம் என்று நாக்கூசாமல் சொன்னவுடன் மனம் கனத்து அப்படியே வீட்டிற்கு வந்து விட்டேன்.அவர்கள் தான் என்னை அழைத்தது,நானா வேலை கேட்டேன்.

என்னுடைய ப்ரெண்ட்ஸ் ஏதாவது சம்பளம் உண்டா என்று கேட்டுப்பார் என்று சொன்னதால் நானும் போய் கேட்டேன்,நீங்க ட்ரெய்னி தான் நோ சாலரின்னு அங்குள்ள அக்கவுண்டண்ட் சொல்லிவிட்டார்,சரி என்று 3 மாதம் வேலை செய்ததற்கு ஒரு ட்ரெய்னி சர்டிபிகேட் கொடுங்க என்று டைரக்டரிடம் சென்று கேட்டேன்,அப்படி கொடுக்கும் வழக்கம் இல்லை,நாங்க ட்ரெய்னிங் ஸ்கூல் நடத்தலைன்னு கொஞ்சம் கடுமையாக பதில் வந்தது.ஒ.கே.சார் பை ..ன்னு சொல்லிட்டு வந்து விட்டேன்.


இது என் அனுபவம்,ஆழம் தெரியாமல் எங்கேயும் காலை விடக்கூடாது.நானும் அந்த குழந்தைகளுக்கு சேவை செய்ததாக மனதை தேற்றிகொண்டேன்.,இதனை ஒரு சமூக நல அமைப்பிற்கு செய்திருந்தால் மனதிற்கு நல்ல சந்தோஷமாவது கிடைத்து இருக்கும்..ஒரு குழந்தைக்கு மாதம் குறைந்தது 1000 திர்ஹம் வாங்கும் இடத்தில் எதற்கு சும்மா வேலை செய்யவேண்டும். ?இது மாதிரி அங்கு படிக்க வருபவர்களை இப்படி வேலை வாங்கி அனுப்புவது அங்கு சாதாரணம் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.

அனுபவங்கள் தொடரும்..

--ஆசியா உமர்.

படம் - நன்றி கூகிள்.

பகுதி - 2 படிக்க இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.
பகுதி - 3 படிக்க இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.

Monday, November 22, 2010

இறால் பார்பிகியூ / Prawn Barbecue


தேவையான பொருட்கள் ;
இறால் - 1 கிலோ
சிக்கன் டிக்கா பார்பிகியூ மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
லைம் பெரியது -1
கொடைமிளகாய் - 2
வெள்ளை வெங்காயம் - 2
தக்காளி - 2
ஆலிவ் ஆயில் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது



இறாலை வாலுடன் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.நன்கு அலசி தண்ணீர் வடிகெட்டவும்.பின்பு பார்பிகியூ மசாலா, லைம் ஜூஸ்,உப்பு,ஆலிவ் ஆயில் சேர்த்து ஊறவைக்கவும்.வெங்காயம்,கொடைமிளகாய்,தக்காளி ஆகியவற்றை சதுர துண்டாக கட் செய்து கொள்ளவும்.
இறால் நன்கு ஊறிய பின்பு பார்பிகியூ ஸ்டிக்கில் கொடைமிளகாய்,இறால்,வெங்காயம்,இறால்,தக்காளி,இறால்,கொடைமிளகாய்,
இறால்,தக்காளி,வெங்காயம் இப்படி வரிசைப்படி அடுக்கி ரெடி செய்து கொள்ளவும்.ஒரு ஸ்டிக்கில் நான்கு இறால் வரும் படி அடுக்கி ரெடி செய்து வைத்து கொள்ளவும்.

பார்பிகியூ அடுப்பில் நெருப்பு உண்டானவுடன் நாம் ரெடி செய்த இறால் ஸ்டிக்கை இப்படி கம்பி ப்லேட்டில் அடுக்கி சுடவும்.

லேசாக வெந்து சிவக்க ஆரம்பிக்கும் பொழுது திருப்பி வைக்கவும்,மறுபடியும் திருப்பி வைக்கவும்.வெந்து மணம் வரும் பொழுது எடுக்கவும்.
சுவையான ப்ரான் பார்பிகியூ ரெடி.
அப்படியே அடுக்கி வைத்து சுட்ட பின்பு குபூஸ்,ஹமூஸ்,சாஃப்ட் ட்ரிங்ஸ் அல்லது ப்ளாக் டீயுடன் அருமையாக இருக்கும்.

சுட்ட பின்பு யார் பார்த்து கொண்டு இருப்பாங்க,அப்படியே ஒவ்வொரு ஸ்டிக்காக எடுத்து சுடச்சுட சாப்பிடவேண்டியது தான். இது தவிர சிக்கன் ,மட்டன் பார்பிகியூவும் ரெடியாச்சு.நாங்க லேடீஸ் வாக்கிங் போய் வருவதற்குள் அவர்கள் சுட்டு முடித்து விட்டார்கள்.வந்தவுடன் ஆர்வத்துடன் சாப்பிட்டதில் போட்டோ எடுக்க மறந்து விட்டது.
என்னுடைய சிக்கன் பார்பிகியூவை பார்க்க இங்கு (கிளிக்கவும்)செல்லவும்.


-ஆசியா உமர்.

Sunday, November 21, 2010

மட்டன் போன் சால்னா

தேவையான பொருட்கள்;
மட்டன் போன் - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி -2
பச்சை மிள்காய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
கறிமசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மிளகுத்தூள் - அரைஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 4
அல்லது அரிசி(கூட்டு) மாவு - 1 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
தாளிக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
சிக்கன் சூப் கியூப் - 1 (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
முதலில் எலும்பை நன்கு 5 தண்ணீர் கழுவி வடிகட்டி கொள்ளவும். குக்கரில் எலும்பு முழுவதும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.மேலே கசடு போல் மிதக்கும் அவற்றை கொட்டி விட்டு திரும்ப தண்ணீர் சேர்க்கவும்.கொதி வரும்.

பின்பு குறிப்பிட்ட மசாலா தூள் வகைகளை சேர்க்கவும்.


நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,பச்சை மிள்காய்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,உப்பு,தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.


எல்லாம் சேர்ந்து கொதி வரும். குக்கரை மூடி வெயிட் போடவும். அடுப்பை குறைத்து அரைமணி நேரம் வைத்து இறக்கவும்.

மட்டன் எலும்பு வெந்து இப்படி காணப்படும்.வெந்து சூப் இறங்கியதற்கு அடையாளம் சால்னா பிசு பிசுன்னு இருக்கும்.

தேங்காய் முந்திரி பருப்பு அரைத்து அத்துடன் விரும்பினால் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.அல்லது கோகனட் மில்க் பவுடர் மூன்று டேபிள்ஸ்பூன் உடன் 1 டேபிள்ஸ்பூன் அரிசிமாவு தண்ணீரில் கலந்து வைக்கவும்.

குக்கரில் வெந்த எலும்பு சூப்பில் தேங்காய் கலவை விடவும்.
நன்கு கொதி வரும்.தேங்காய் வாடை மடங்கி சால்னா மணம் வரும்.விரும்பினால் வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கி கருவேப்பிலை தாளித்து கொட்டலாம்.நான் தாளிக்காமல் அப்படியே பரிமாறுவதுமுண்டு.

சுவையான மட்டன் போன் சால்னா ரெடி.
இதனை,சப்பாத்தி,பரோட்டா,ரொட்டி,ஆப்பம்,இடியாப்பம்,சாதத்துடன் பரிமாறலாம்.குர்பானி கொடுத்து கறி எலும்பு என்று நிறைய இருந்தால் இப்படி சால்னா வைத்து அசத்தலாம். மட்டன் போன் தனியாக கிடைக்கும்.வாங்கியும் சமைக்கலாம்.வெளிநாடுகளில் தனியாக பேக் செய்து வைத்து இருப்பார்கள்.கொழுப்பு இல்லாததாய் பார்த்து வாங்க வேண்டும்.கறியை விட விலையும் குறைவு.சத்தானதும் ஆகும்.

-ஆசியா உமர்.

Friday, November 19, 2010

சுறாப்புட்டு

தேவையான பொருட்கள் ;
சுறாமீன் துண்டுகள் - அரைகிலோ
வெங்காயம் - அரைகிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு( விரும்பினால்)
பூண்டு - முழுபூண்டு(15 -20 பூண்டு பல்)
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
தேங்காய் துருவல் - 3 - 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1- அரைடீஸ்பூன்(விரும்பினால்)
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன் ( சுவைக்கு ஏற்ப)
உப்பு - தேவைக்கு

மீனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி இலை, இஞ்சி,பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்பு கொதிக்கும் நீரில் மீன்,உப்பு போட்டு 5 நிமிடம் மீனை வேக வைத்து,வெந்து விட்டதா என்று பார்த்து உடன் எடுக்கவும்.


வேகவைத்து எடுத்த மீனை முள் இல்லாமல் உதிர்த்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் உதிர்த்த மீனை போட்டு பிரட்டவும்.மீன் வெங்காயத்துடன் சேர்ந்து நல்ல புட்டு மாதிரியானதும்,தேங்காய் துருவல் சேர்த்து சிறிது பிரட்டவும்.உப்பு சரிபார்க்கவும்.காரத்திற்கு விரும்பினால் மிளகுத்தூள் சேர்க்கலாம்.நறுக்கிய மல்லி இலை சிறிது தூவி இறக்கவும்.



சுவையான சுறாப்புட்டு ரெடி.இதனை சாதம்,குழம்பு,ரசம் இவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.அப்படியேயும் சாப்பிடலாம்.காரம் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தபடி மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.சுறாப்புட்டை பலரும் பலவிதமாய் செய்வார்கள்,இது ஒரு வகை.
-ஆசியா உமர்.

Sunday, November 14, 2010

இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் - குர்பானி - சிறுகதை

மற்றும் குர்பானி சிறுகதை

பெருநாள் விருந்து



புனித தியாகப் பெருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் எங்களின் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த சிறப்பு சிறுகதையை படித்து மறக்காமல் கருத்து சொல்லுங்க.

குர்பானி

மழை கொட்டி தீர்த்து லேசாக தூரல் விழுந்து கொண்டிருந்தது, வாசலில் கெட்டிகிடந்த மழைநீரில் பேத்திகளுக்கு காகிதக்கப்பல் செய்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தார் சாகுல் ஹமீது. பேத்திகள் லுப்னா, ஷமீரா, ரிஃப்கா மூவரும் அவரை விட்டு சிறிது நேரம் கூட பிரிவதில்லை. அவர் பொழுது எப்பொழுதும் பேத்திகளுடனேயே கழிந்து கொண்டிருந்தது.
வாப்பா,வாப்பா...

“என்னமா லுப்னா ?” என்று பாசத்துடன் ஆறாம் வகுப்பு படிக்கும் தன் செல்ல பேத்தியின் தலையை கோதி விட்டார் சாகுல் ஹமீது.

“ஹஜ்ஜுப்பெருநாள் வருதே நம்ம வீட்டுல கிடா பிடிக்கலையா ?”

“பிடிக்கனும், செவ்வாய்க்கிழமை சந்தையில போய் தான் பிடிக்கனும், ஏமா, இப்ப என்ன அவசரம், ஒரு வாரத்திற்கு முன்னாடியே பிடிச்சிடலாம்” என்றவரிடம் ,

“வாப்பா நாம இந்த வருஷம் குர்பானி கொடுக்க வேண்டாம்,
போனதடவை ஹஜ்ஜுப் பெருநாளப்ப தான் சிக்கன் குனியா வந்துச்சு, ஊரெல்லாம் காய்ச்சல், நடக்க முடியாம எத்தனை பேர் நம்ம ஊரில் கஷ்டப்பட்டாங்க” என்றாள் லுப்னா.

“சரிமா, ஆனால் குர்பானி கொடுப்பது நம்ம கடமைம்மா, இத்தனை வருஷமா கொடுத்திட்டு வர்ரோம்லே” என்றார்.

“வாப்பா எல்லாரும் மதராஸாவிற்கு பணம் கொடுக்கறாங்களாம், அங்க நம்ம சார்பா குர்பானி கொடுத்திடுவாங்களாம், அப்படி செய்வோமா?” என்றாள் விடாப்பிடியாக லுப்னா.

“இல்லமா நம்ம வாசலில் வைத்து தான் கொடுக்கணும், அது தானே முறை, இத்தனை வருஷமாக அப்படி தானேமா நடக்குது,”

“வாப்பா எல்லாரும் வாசலில் வைத்து கொடுத்து இரத்தம் எல்லாம் அப்படியே கிடக்கும்,மண்ணை போட்டு மூடினாலும், இப்ப மழை காலம் மழை பேய்ஞ்சா நாறிப்போகும், கொசு வரும், திரும்ப எல்லாருக்கும் காய்ச்சல் வரும்”.

“ஆமா, என்னமா செய்ய, நாம் கிடா கொடுத்து நம்ம சொந்தபந்தம், அக்கம் பக்கம், வசதியில்லாத ஏழை ஜனங்கள் எல்லாருக்கும் கறி கொடுத்து பழகிட்டோமே? அதை எப்படி நிறுத்தறது?”

“வாப்பா நம்ம ஊரில் slaughtering house இருக்கா?”

“அப்படின்னா என்னமா?”


“அது தான் வாப்பா ஆடு, மாடு வெட்டற இடம்.”

“அட ஆமா இருக்கு, அரசாங்கமே கெட்டி போட்டிருக்கே!
போன வருஷம் கூட சட்டம் கொண்டாந்தாங்களே, கறிக்கடைகாரங்க எல்லாம் அங்க போய் தான் வெட்டி கொண்டு வரணும் என்று, அதற்கு கூட போராட்டம்,கடையடைப்பு நடந்துச்சே!
இப்ப யாரும் அங்க போய் வெட்டுறமாதிரி தெரியலையே, ஒரு கிடாவிற்கு ரூபாய் இருபத்தைந்து கொடுக்கணும் என்று அரசாங்கம் சட்டம் போட்டது அது முடியாதுன்னு எல்லாரும் கடையை அடைச்சாங்க, அதனை எட்டு ரூபாயாக குறைக்க சொல்லி தான் போராட்டம்.
நம்ம ஊர் மக்களுக்கு தான் தினமும் கறி சாப்பிடனுமே, ஊர் எப்படி நாறிப்போனாலும் பரவாயில்லை, நோய் வந்து அவதிப்பட்டாலும் புரியலை, சுத்தம் சுகாதாரம் யார் பார்க்கிறா?”என்றார் சாகுல் ஹமீது.

“வாப்பா மற்றவங்களை பற்றி பேசவேண்டாம்,நாம ஆரம்பிச்சு வைப்போம், அங்கே கொண்டு போய் குர்பானி கொடுத்து, வெட்டி சுத்தமாக கறியை மட்டும் எடுத்து வந்து நம்ம வீட்டில் வைத்து பங்கீடு செய்யலாம்”.

“இதுவும் நல்ல யோசனை தான்”.


“நாம இந்த வருஷம் செய்தால் நம்மளை பார்த்து நாலு பேர் செய்வாங்க, அப்படியே எல்லாரும் இப்படி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பெருநாள் சமயம் ஊர் சுத்தமாக இருக்கும்,
நம்ம ஜனங்க இருக்கிற இடத்தில் கொடுப்பதால் தானே புதுசு புதுசாக நோய் வருதுன்னு டிவியில் கூட சொன்னாங்க போன வருஷம், நம்ம இஸ்லாமியர்கள் இருக்கிற ஊர்களை தான் இந்த சிக்கன் குனியா அதிகம் தாக்கியதாக டிவியில் காட்டினாங்களே வாப்பா”

“ சரிமா, ஆனால் அது சிரமமாச்சே!”என்றார் சாகுல் ஹமீது.

“வருஷத்தில் ஒரு நாள் சிரமம் பார்த்தால் முடியுமா வாப்பா? நம்ம ஊருக்கும் மக்களுக்கும் எது நல்லதோ அதை கடைபிடிக்கணும், அப்ப தான் எல்லாரும் நல்லாயிருப்பாங்க”.

என்ற பேத்தியின் அறிவான பேச்சை கேட்டு வாயடைத்து போனார் சாகுல்ஹமீது.

--ஆசியா உமர்