Monday, January 31, 2011

யாமுக்கா! யாமுக்கா!


வண்டிக்கார லெப்பை நாலு மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்தார்.
”பள்ளிக்கூடம் நாலு பத்துக்கு விடும், மணி நாலரையாவுதே, இன்னும் பிள்ளைகளை காணோமே..” என்று எட்டி எட்டி பார்த்தார்..

ஒரு கையில் ஜவ்வு மிட்டாயும், மறுகையில் பையுமாக ஓடி வந்து கொண்டிருந்தாள் இரண்டாம் வகுப்பு படிக்கும் பாத்திமா. அப்பாடா இனி எல்லாப்பிள்ளைகளும் வந்திடுவாங்க என்று, வைக்கோல் தின்னுகிட்டிருந்த மாடுகளை அவிழ்த்து வண்டியில் கட்டிவிட்டு பிள்ளைகள் பைகளை வாங்கி வண்டி அடியில் தொங்கிய கயிற்றுப் பின்னலில் போட்டு விட்டு எல்லோரையும் ஏற்றி சரி பார்த்து கொண்டார், “பதினோறு பிள்ளைகளும் இருக்கா?... எண்ணிப்பாருங்கடா...” என்று சொன்னார்.
கோசுப்பெட்டியில் இரண்டு, பின்னாடி மூணு, உள்ளே ஆறு மொத்தம் பதினொன்று என்று கணக்கு சரியாக வந்தது.

பாத்திமா வண்டி பின்னாடி இருக்க அவ மாமா பையன் ரியாஸிற்கு ஐந்து பைசாவிற்கு வேர்க்கடலை வாங்கி கொடுத்து இடத்தை பிடித்து ஜாலியாக காலை ஆட்டி கொண்டு உட்கார்ந்திருந்தாள், உள்ளே இருந்த பிள்ளைகளுக்கெல்லாம் நிம்மதி, பாத்திமா பின்னாடி இருந்ததால் நெருக்காம வசதியாக இருந்தாங்க, இல்லாவிடில் எப்பவும் புழு நெளிவது போல் நெளிஞ்சுகிட்டு இருப்பான்னு சந்தோஷமாக பேசிகிட்டாங்க.

ரியாஸ் பக்கம் தள்ளி உட்கார்ந்து அவனை நசுக்கி போட்டா பாத்திமா.
“ஏய் பாத்திமா, நாளைக்கு பத்து பைசா தந்தா கூட நீ பின்னாடி வேண்டாம்னு” அவன் சொன்னதை கூட காதில் வாங்காமல், காலை வேகமாக ஆட்டி கொண்டு இருந்தா பாத்திமா. “இந்த பிள்ளை ஏன் நம்ம வண்டியில வருதோ! இந்த சேட்டைக்காரியை நாளை முதல் எல்லோரிடமும் சொல்லி பஸ்ஸில் போகச்சொல்லனும்” என்று நினைத்து கொண்டான் ரியாஸ்.

“ஹை ஹை ஹை “ என்று கம்பை வைத்து வண்டிக்கார லெப்பை ஒரு தட்டு தட்டியவுடன் சீரிப் பாய்ந்தன வெள்ளைக்காளைகள். ஸ்கூல் வண்டிகென்றே இந்த இரண்டு காளைகள் பழக்கபட்டிருந்தன அரைமணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் போய் விடும், இன்னும் தட்டினால் வண்டி பறக்கும். பிள்ளைகள் அதிகம் என்பதால் வண்டிக்காரர் தான் மெதுவாக ஒட்டுவார்.

வீடு வந்து சேரவும், பையை தூக்கி பாய் அட்டி கீழே வைத்து விட்டு கையை காலை கழுவிட்டு சின்னவாப்பா வீட்டிற்கு ஓடினாள் பாத்திமா. அங்கே, சாச்சி சூடாக பானை நிறைய கருப்பட்டி சாயா போட்டு வைத்திருப்பாங்க. பாலும் பக்கத்தில் இருக்கும், தேவைக்கு ஒரு பெரிய கிளாஸ் நிறைய குடிக்கலாம் என்று எப்பவும் அங்கு ஓடுவது தான் வழக்கம், இங்கு வீட்டில் பாத்திமாவின் அக்கா என்ன கத்து கத்தினாலும் காதில் வாங்குவதில்லை.

சாச்சி வீட்டில் வாத நோயில் அவதிப்படும் சின்னவாப்பாவால் வாய் பேச முடியாது, எழுந்து நடக்கவும் முடியாது. படுத்தால் படுத்த படுக்கை, யாராவது தூக்கி வைத்தால் உட்காருவார், தினமும் காலையும் மாலையும் நடை காட்டுவாங்க, இப்படி இருந்தாலும் சின்னாப்பாவிற்கு எல்லோரும் பயப்படுவாங்க. அவர் பேசும் ஒரே வார்த்தை “யாமுக்கா” தான். சின்னவங்க முதல் குடும்பத்தில் எல்லோருக்கும் அவர் “சின்னாப்பா“ தான்.

அவருக்கு இந்த பாத்திமாவை கண்டால் பிடிக்காது.
வந்தவுடனேயே “யாமுக்கா! யாமுக்கா!” என்று சத்தம் போடுவார். சாச்சிக்கு தான் சின்னாப்பா சொல்வது புரியும். “வாப்பா என்ன சொல்றாங்க?” என்று பாத்திமா கேட்டாள்,
“நீ கட்ட பாவாடை உடுத்தியிருக்கியாம், முழுப்பாவாடை உடுக்கச்சொல்றாங்க” என்று சொன்னாங்க சாச்சி. விடாமல் “யாமுக்கா! யாமுக்கா!” என்று ஒரே சத்தம்.
“வாப்பா சத்தம் போடாதீங்க ,நாளைக்கு முழுப்பாவாடை உடுக்கும்” என்று சமாதானப்படுத்தினாங்க, சாச்சி.
மறு நாள் லீவு என்பதால் விளையாடப் போனா பாத்திமா.
சின்னாப்பா ஒரே இடத்தில் இருப்பதால் பாத்திமாவிற்கு அப்ப அப்ப வாப்பாவை போய் பார்க்கனும்னு ஒரு நினைப்பு. ஆனால் வாப்பா இந்த பிள்ளையை கண்டால் ஒரே சத்தம், உம்மாவை சின்ன வயசிலேயே முழுங்கிட்டான்னு கோபமான்னு தெரியலை.
“யாமுக்கா! யாமுக்கா! யாமுக்கா!” என்று பெரிய சத்தம்..
சாச்சிக்கும் கோபம், “அந்த இளவு இப்ப எங்க இங்க வந்துச்சு, முதல்ல வெளியே போவச்சொல்லு, வாப்பா சத்தம் போடுறாங்க”, அப்படின்னு சொன்னாங்க.
சரின்னு பாத்திமாவும் தெருவில் விளையாட போயிட்டா.

காலை நேரம் தெருவில் களை கம்பு கெட்டி பாவு ஆத்தி கிட்டு இருந்தாங்க, எல்லார் வீட்டிலும் தறி இருப்பதால் காலை வேலையில் நூலை கஞ்சி தடவி ஆற போட்டு பிரிச்சி கெட்டுற வேலை நடக்கும்.
கொஞ்சம் குசும்பு பிடிச்சவ தான் பாத்திமா. பாவு ஆத்திகிட்டு இருக்கிறவங்க காலை கீழே குனிந்து கிள்ளி விட்டு ஓடிடுவா. அவர்கள் திரும்பி பார்ப்பதற்குள் யார் வீட்டு தறியிலாவது போய் ஒளிந்து கொள்வது வழக்கம். “இந்தப்பிள்ளை நாளைக்கு வரட்டும் களைக் கம்பாலயே நாலு சாத்து சாத்தனும்” என்று எல்லோரும் சொல்வாங்க. ஆனால், எதுக்கும் பயப்படாமல் இந்த கிள்ளு விளையாட்டை விளையாடிக் கொண்டுதான் இருப்பா.

பாத்திமாவிற்கு ஒரே கவலை யாமுக்கா வாப்பா பெரிய சத்தம் போட்டாங்களே. “என்னன்னு போய் பார்ப்போம்” என்று, வாப்பா தூங்கும் நேரம் சாச்சி கிட்ட போய், “ஏமா சத்தம் போட்டான்னு?” கேட்டா, சாச்சியும் “உன் தலை செம்பட்டையா பரட்டை மாதிரி இருக்காம், தலைய ஒழுங்கா எண்ணெய் தேய்ச்சி கெட்டனுமாம்” என்று சொன்னாங்க..

வீட்டிற்கு வந்த பாத்திமாவிற்கு, அக்கா ஜெஸிமா அழகாக தலை சீவி தன் சாட்டை போன்ற முடியை கெட்டி வச்சிருந்ததை பார்த்தவுடன் கோபம் வந்து விட்டது. அவள் சடையை பிடித்து ஆட்டு ஆட்டுன்னு ஆட்டியதில் வீடே அலறியது.
“இப்ப எதுக்கு இப்படி ஆட்டுறே..” என்று எல்லோரும் கேட்க, “என் தலைய யாரும் கெட்டலை, சின்னாப்பா சத்தம் போடுறா..”.
“சரி இப்ப அவ முடியை விடு. உன் தலைய யாரால சிக்கு எடுக்க முடியும்?..” என்று சலிச்சுகிட்டா பெரியக்கா மீரா.

சாயும் காலமாச்சு, அக்கா இருவரும் டவுணுக்கு துணி எடுக்க கிளம்பினாங்க. 30 பைசா தந்தால் தான் விடுவதாய் மீராவின் சேலையை பிடித்து ஒரே அடம் பிடித்தாள் பாத்திமா. சரி என்று, 30 பைசாவை கொடுதது விட்டு “ஒழுங்கா இருக்கனும்” என்று சொல்லி விட்டு இருவரும் கிளம்பி போனாங்க.

பாத்திமாவும், முப்பது பைசாவை எடுத்துக் கொண்டுப் போய், தெருகோடியில் இருக்கும் பார்பர் ஷாப்பில் மொட்டை போட்டுவிட்டு வந்தாள். வரும் வழியில் தெருவில் எல்லோரும் பார்த்து சிரிப்பதை கூட சட்டை செய்யாமல் நடந்தாள் பாத்திமா.
டவுணில் இருந்து வந்த அக்கா மீராவும், ஜெஸிமாவும், பாத்திமாவை பார்த்து அதிர்ந்து போய்ட்டாங்க. “இந்த பிள்ளை பண்டம் வாங்கி திங்கும்னு பைசா கொடுத்தா.., இப்படி மொட்டை போடும்னு யாருக்கு தெரியும்..!” என்று ஒரே புலம்பல்.

மறுநாள் சின்னாப்பாவை பார்க்க தலையில் சந்தனம் பூசி, திருஷ்டி விழாமல் இருக்க வேலை பார்க்கிற சுபைதாமா பூசிய அடுப்புக்கரியோடு கிளம்பி சென்றாள் பாத்திமா.
“சின்னவாப்பா என்ன செய்றாங்க..” என்று மெதுவாக அடி மேல் அடி வைத்து நடந்து உள்ளே போனாள் பாத்திமா.
சாச்சி வாப்பாக்கு சோறு ஊட்டிகிட்டு இருந்தாள், பாத்திமா வந்ததை பார்த்து விட்டு
“மூத்தவ... முழுப்பாவாடை உடுத்தி, மொட்டை போட்டுட்டு வந்திருக்கா பாருங்க வாப்பான்னு” சாச்சி சொன்னாங்க..
“தலைய சீவி கெட்ட சொன்னா.. ஏம்ளா மொட்டை போட்டே?”
“இல்லை சாச்சி, என் முடி பம்பக்கடா முடி மாதிரி இருக்கா.., சிக்கு எடுக்க முடியலை அதான் மொட்டை போட்டேன்.” என்று” வெள்ளை மனதுடன் சொன்னாள் பாத்திமா.
சாச்சிக்கு அழுகையே வந்து விட்டது. சின்ன வயசில் பிள்ளையை விட்டுட்டு போன, தன் தமக்கையின் நினைவு வந்து விட்டது போலும்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாமுக்கா வாப்பா, பாத்திமாவின் கையை இருகப் பிடித்து தன்னிடமிருந்த ஆரஞ்சு மிட்டாய் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

“அப்பாடா..! எப்பவும் சத்தம் போட்டு விரட்டுற வாப்பா கிட்ட இருந்து, மிட்டாய் வாங்கியாச்சு..” என்று நிம்மதியாக வீட்டை நோக்கி ஓடினாள் பாத்திமா.
--ஆசியா உமர்..

பழைய கருப்பு வெள்ளை படம் - எங்கள் மாமா MCS அவர்கள் எடுத்தது.

Saturday, January 29, 2011

மீனவப் பெண்மணிகளின் கண்ணீரை துடைங்க ...
தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு கொல்லப்படுவதை நாம் அனைவரும் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்.
அவர்களால் முடியாததை நாம் சாதித்து காட்ட வேண்டும்.
ஒன்று சேர்ந்து செயல்படுவோம் பதிவுலக நட்புள்ளங்களே !


நம் உணர்வுகளை இங்கு சென்று தெரிவியுங்கள்.

Friday, January 28, 2011

முதபல் & ஹமூஸ்

முதபல் என்பது கத்திரிக்காய் எள் சேர்ந்த பேஸ்ட், ஹமூஸ் என்பது கொண்டைக்கடலை,எள் சேர்த்து செய்வது,இதனை அரபிக் முறையில் நானும் என் டேஸ்டுக்கு செய்து இருக்கிறேன்.


தேவையான பொருட்கள்;
வயலட் கத்திரிக்காய் -300கிராம்
பூண்டு-4பல்
சின்ன வெங்காயம்-2
எலுமிச்சை-1
தகினா(எள் பேஸ்ட்)-2டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வேக வைத்த கொண்டைக்கடலை- ஒரு டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- தேவைக்கு
கத்திரிக்காய்,பூண்டு,வெங்காயம் வைத்து ஓவனிலோ அல்லது தணல் அடுப்பிலோ சுட்டு எடுக்கவும். வெங்காயம் சேர்க்காமலும் செய்யலாம்.


முற்சூடு செய்த அவனை இருநூறு டிகிரி செட் செய்து பத்து நிமிடம் வைத்து திரும்ப,கத்திரிக்காயை திருப்பி வைத்து பத்து நிமிடம் வைத்து எடுத்தால் கத்திரிக்காய் நன்கு சுட்டு விடும்,அவரவர் ஓவன் படி நேரம் வேறுபடும், கவனமாக பார்த்து எடுக்க வேண்டும்.
இப்படி தோல் உரித்து கத்திரிக்காயை எடுத்து கொள்ளவும்.


சுட்டு தோல் உரித்த கத்திரிக்காய்,பூண்டு,வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.விரும்பினால் கால்ஸ்பூன் மிள்குத்தூள் சேர்க்கலாம்.

அரைத்த கத்திரிக்காயுடன்,தகினா பேஸ்ட் (எள்ளு பேஸ்ட்) சேர்த்து மிக்ஸ் செய்யவும்,விரும்பினால் 1டேபிள்ஸ்பூன் வேகவைத்த ஊறிய கொண்டைக்கடலயும் சேர்த்து சுட்ட கத்திரிக்காயுடன் அரைத்தால் நல்ல கெட்டியாக இருக்கும்.நான் கொண்டைக்கடலை சேர்க்கலை.தேவைக்கு புளிப்பு சுவைக்கு லைம் ஜூஸ் சேர்த்து கொள்ளவும்.எல்லாம் சேர்ந்து கலந்த பின்பு ஆலிவ் ஆயில் கலந்து வைக்கவும்.

சுவையான முதபல் ரெடி. இதனை கிரில் சிக்கன் குபூஸ்,ரொட்டி வகைகளுடன் பரிமாறலாம்.விரும்பினால் பார்ஸ்லி இலை சாப் செய்து சிறிது முதபலில் சேர்க்கலாம்,பார்ஸ்லி இலை கொத்தமல்லி இலை போலவே மணமில்லாமல் இருக்கும்.

அரபிக் பிக்கிள்;
நம்ம ஊரில் ஊறுகாய் சாப்பிடுவது போல் இங்கு எல்லாக்காயும் சேர்த்து இப்படி உப்பு,வினிகர்,தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆலிவ்,வெள்ளரி,கேரட்,முள்ளங்கி,எலுமிச்சை,பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்தது இது.நிறைய வெரைட்டி இருக்கு,இது பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்துவது.

ஹமூஸ்
தேவையான பொருட்கள்:
டின் சிக்பீஸ் அல்லது (ஊறவைத்து அவித்த கொண்டக்கடலை)-200கிராம்
தகினா பேஸ்ட்(எள் பேஸ்ட்)-2டேபிள்ஸ்பூன்
பூண்டு-2பல்
சின்ன வெங்காயம்-பாதி அல்லது நாட்டு உள்ளி 1 (விரும்பினால்)
உப்பு-சிறிது
ஆலிவ் ஆயில் -தேவைக்கு

மிக்ஸியில் சிக் பீஸ்,பூண்டு,வெங்காயம்(விரும்பினால்) நாட்டு உள்ளி ஒன்று ,தகினா பேஸ்ட் சேர்த்து மிக்ஸியில் அரைத்து  எடுக்கவும்,அத்துடன் ஆலிவ் ஆயில் கலந்து பரிமாறவும்.நான் சிக்பீஸ்,தகினா எல்லாம் ரெடிமேட் தான் உபயோகித்து செய்திருக்கேன். டின் சிக்பீஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம்.

சுவையான வீட்டிலேயே தயார் செய்த ஹமூஸ் ரெடி. இதனை குபூஸ் ரொட்டி,கிரில் சிக்கன்,பிக்கிள் உடன் பரிமாறலாம்.


பின்குறிப்பு:

எள் பேஸ்ட் ரெடிமேடாக கிடைக்காதவர்கள் எள்ளை மணம் வர வறுத்து,சிறிது ஊற வைத்து அரைக்கும் பொழுது சேர்த்து அரைக்கலாம்.
டின் சிக்பீஸ் வடிகட்டியும் அரைக்கலாம் அல்லது அப்படியே அதில் இருக்கும் கரைசலை சேர்த்து அரைத்தாலும் நல்லா இருக்கும்.இப்ப எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் கொண்டைக்கடலை,தகினா ரெடிமேடாக கிடைக்கிறது.முதபல்,ஹமூஸ் குறிப்பு கேட்ட தோழிகளுக்காக கொடுத்து இருக்கிறேன்.

--ஆசியா உமர்.

Wednesday, January 26, 2011

வியத்தகு இந்தியா


நேற்று பக்கத்தில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் போனால் Incredible India – Festival of India

ஏகப்பட்ட சமாச்சாரம் நம்ம சமையல் ப்ளாக் அதில் என்ன போடுறதுன்னு நினைச்சேன். ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுச்சு, போய் பார்த்தால் கிட்ட தட்ட எல்லா மாநிலவாரியாகவும் பிரியாணி போட்டு வச்சிருந்தாங்க.. உடனே நம்ம கேமரா(மொபைல்) விழித்து கொண்டது.. 24 வகை பிரியாணி, தமிழ் நாடு – காஷ்மீர்.

ஆஹா இங்கேயும் சமைத்து அசத்திருக்காங்கன்னு கிளிக்க ஆரம்பிச்சேன்


தமிழ்நாடு -வான்கோழி பிரியாணிக்கு பிரசித்தமாம்.
கேரளா கிங் ஃபிஷ் பிரியாணி
மஹாராஸ்ட்ரா மட்டன் பிரியாணி
சட்டீஸ்கர் -குயில் பிரியாணி
மேற்கு வங்காளம் -மீன் பிரியாணி
நாகலாந்து - பீஃப் பிரியாணி
திரிபுரா- இறால் பிரியாணி
காஷ்மீர் - வெஜிடபிள் பிரியாணி.24வகையும் படம் பிடிக்க முடியலை,28மாநிலமாச்சே,மீதி 4எங்கேன்னு யார் கிட்ட கேட்க..
அட இங்க பாருங்க,மால் நடுவில் பெரிய தோசைகல்லை வைத்து மசால் தோசை சுட்டு கொடுக்கிறாங்க,குடியரசு தினத்தை எப்படில்லாம் கொண்டாடுறாங்கபா..
இத்தனை போட்டோ எடுத்துட்டு ஏதாவது வாங்காம வருவதான்னு நம்ம தமிழ்நாட்டு வான்கோழி பிரியாணி வாங்கிட்டு வந்தோம்..செம டேஸ்ட் ருசி பார்த்தாச்சுல்ல,இனி சமைக்கனும்,ஆனால் இங்க ஒரு கிலோவில் வான்கோழி கிடைக்கமாட்டேங்குதே!
திரும்பி வரும் பொழுது பார்த்தால் ஏகப்பட்ட லட்டு, ஜாங்கிரி.. இன்று குடியரசு தினம்,நாம லட்டாவது கொடுக்கலாம்னு நினைச்சு இந்த படம்.


குடியரசு தின வாழ்த்துக்கள்..--ஆசியா உமர்.


Monday, January 24, 2011

முட்டை பூந்தி,பாம்பே பன் டோஸ்ட்

தேவையான பொருட்கள்:
முட்டை -2
சீனி -4 டேபிள்ஸ்பூன்
பசும் பால் - 50 மில்லி
முந்திரி,கிஸ்மிஸ் -சிறிது விரும்பினால்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்

முதலில் பாலை காய்ச்சி வெது வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது அதில் சீனி போட்டு கரைத்து அத்துடன் முட்டை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.ஒரு பேனில் நெய் விட்டு காயவும் அடித்த முட்டை கலவையை விடவும்.நன்கு இப்படி திரண்டு வருமாறு கிளறவும்.அடுப்பை குறைக்கவும்.சிவறக்கூடாது,இப்படி மணி மணியாக வரவேண்டும்,கலர் மஞ்சள் கரு கலரில் வரும்,பால் முழுவதும் முட்டை உள் வாங்கி பஞ்சி போல் இருக்கும்.அடுப்பை அணைக்கவும்.சுவையான முட்டை பூந்தி ரெடி.விரும்பினால் முந்திரி திராட்சை வறுத்து அலங்கரிக்கலாம்.இதனை அப்படியே ஸ்வீட் போலவும் சாப்பிடலாம்.முட்டை வாடை சுத்தமாக இருக்காது.


இதனை பரோட்டா,இடியப்பம்,ப்ரெட்டுக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

பாம்பே பன் டோஸ்ட்

தேவையான பொருட்கள்;

பன் -2

முட்டை-2
பால்- அரை கப்

சீனி-6டேபிள்ஸ்பூன்

எண்ணெய் நெய் கலவை- 3டேபிள்ஸ்பூன்


பொதுவாக இந்த டோஸ்ட்டை ப்ரெட்டில் செய்வோம்,இதனை பன்னில் செய்து பாருங்க,அப்படியே ஜுஸியாக இருக்கும்.இப்படி பன்னை கட் செய்து வைக்கவும்.லாங் பன் அல்லது ரவுண்ட் பன் எதுவானாலும் சரி.


முட்டை பால் சீனி சேர்த்து அடித்து வைக்கவும்.


இப்படி பன்னை முழுவதும் ஊறுவது போல் டிப் செய்யவும்.
தோசைக்கலத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பன்னை போடவும்.லேசாக சிவறவும்,திருப்பி போடவும்.


கரிந்து விடாமல் இப்படி பொரித்து எடுக்கவும்.பேனிலேயே எடுத்த பின்பு விட்ட எண்ணெய் நெய் இருக்கும் அத்துடன் தேவையானால் சிறிது எண்ணெய் நெய் சேர்த்து மீண்டும் இதே போல் இருக்கும் பன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.


சுவையான பாம்பே பன் டோஸ்ட் ரெடி.நான் இங்கு பசும்பால் சேர்த்து இருக்கேன்,எங்க ஊரில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வாங்க.


இந்த இரண்டு ரெசிப்பியும் சின்ன குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க,பன்னில் செய்து கொடுத்து பாருங்க.அடிக்கடி செய்து கேட்பாங்க.


-ஆசியா உமர்.

Sunday, January 23, 2011

காளிப்ளவர் தண்டு கூட்டு - பட்டான் ரொட்டி

தேவையான பொருட்கள்;
காளிப்ளவர் தண்டு இலையுடன் - இரண்டு கைபிடி
து.பருப்பு அல்லது பாசிபருப்பு - ஒரு கைபிடி
வெங்காயம்- 1
பூண்டு- 2பல்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
சீரகத்தூள்- கால்ஸ்பூன்
மிளகாய்தூள்- கால்ஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு- 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 1
மல்லி,கருவேப்பிலை -சிறிது
தேங்காய்துருவல்- விரும்பினால்
உப்பு - தேவைக்கு


காளிப்ளவர் வாங்கும் பொழுது இளம் தண்டு இலையுடன் இருந்தால் துக்கி போடாமல் இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நன்கு அல்சி எடுத்து கொள்ளவும்,பருப்பு ஊற வைக்கவும்,பூண்டு,வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.சேர்க்காமலும் செய்யலாம்.

குக்கரில் ஊறிய பருப்பு,நறுக்கிய தண்டு,குறிப்பிட்ட மசாலா வகை,பாதி வெங்காயம்,பூண்டு போட்டு தேவைக்கு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் மீதி பாதி வெங்காயம் வதக்கி வேக வைத்த பருப்பு தண்டு கூட்டை சேர்த்து உப்பு சிறிது சேர்க்கவும்.விரும்பினால் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.

சுவையான காளிப்ளவர் தண்டு கூட்டு ரெடி.இதனை சப்பாத்தி,சாதமுடன் பரிமாறலாம்.
தந்தூரி ரொட்டி
இது நான் சுட்டது இல்லைங்க.எங்க வீட்டு பக்கத்தில் ரொட்டி ஷாப் இருக்கு,வாரம் இருமுறை நிச்சயம் இந்த ரொட்டி உண்டு,மற்ற நேரம் போனா போகுதுன்னு நானே சுட்டு விடுவேன்.எனக்கு யு.ஏ.இ யில் பிடித்தமான ஒன்று இந்த ரொட்டி.இதனை என் பிள்ளங்க பட்டான் ரொட்டின்னு சொல்லுவாங்க,பாகிஸ்தானிய பட்டான்ஸ் 3நேரமும் இந்த ரொட்டி தான் சாப்பிட வாங்குவாங்க.அவங்க அல்லது அஃப்கானிஸ்தான் மக்கள் தான் இந்த ரொட்டியை சுடுவாங்க.நான் வந்த புதிதில் 50ஃபில்ஸ் ஆக இருந்தது இப்ப 1திர்ஹம் ஆகிவிட்டது.ஆனாலும் ஹெல்தி ரொட்டி,வெறும் உப்பு,மாவு தண்ணீர் மட்டும் சேர்த்து பிசைந்து சாஃப்ட்டாக ரொட்டி யார் சுட்டு தருவாங்க.
எவ்வளவு பெரிசு பார்த்தீங்களா?

நான்காக மடித்து வைத்திருக்கிறேன்.
மதியம் வாங்கினால் இரவிற்கும் டிஃபன் கவலை இல்லை,ஏதாவது கிரேவி,சப்ஜி இருந்தால் என் வீட்டில் விருப்பமாக சாப்பிடுவார்கள்,என் பிள்ளைகளுக்கு மதியம் கூட ரைஸ் கொடுக்காமல் இந்த ரொட்டி கொடுத்தால் போதும்,அவ்வளவு விருப்பம்.காளிப்ளவர் ஃப்ரை,கூட்டு,ரொட்டி,சாதம்,ரசம் , பப்பட்,பிக்கிள்,தயிர் இதுவே சூப்பராக இருக்கும்.

நிறைய பேர் இந்த காளிப்ளவர் இலையை தூக்கி போடுவாங்க,ஒரு முறை செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.சத்தானதும் கூட.
--ஆசியா உமர்.