Monday, January 31, 2011

யாமுக்கா! யாமுக்கா!


வண்டிக்கார லெப்பை நாலு மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்தார்.
”பள்ளிக்கூடம் நாலு பத்துக்கு விடும், மணி நாலரையாவுதே, இன்னும் பிள்ளைகளை காணோமே..” என்று எட்டி எட்டி பார்த்தார்..

ஒரு கையில் ஜவ்வு மிட்டாயும், மறுகையில் பையுமாக ஓடி வந்து கொண்டிருந்தாள் இரண்டாம் வகுப்பு படிக்கும் பாத்திமா. அப்பாடா இனி எல்லாப்பிள்ளைகளும் வந்திடுவாங்க என்று, வைக்கோல் தின்னுகிட்டிருந்த மாடுகளை அவிழ்த்து வண்டியில் கட்டிவிட்டு பிள்ளைகள் பைகளை வாங்கி வண்டி அடியில் தொங்கிய கயிற்றுப் பின்னலில் போட்டு விட்டு எல்லோரையும் ஏற்றி சரி பார்த்து கொண்டார், “பதினோறு பிள்ளைகளும் இருக்கா?... எண்ணிப்பாருங்கடா...” என்று சொன்னார்.
கோசுப்பெட்டியில் இரண்டு, பின்னாடி மூணு, உள்ளே ஆறு மொத்தம் பதினொன்று என்று கணக்கு சரியாக வந்தது.

பாத்திமா வண்டி பின்னாடி இருக்க அவ மாமா பையன் ரியாஸிற்கு ஐந்து பைசாவிற்கு வேர்க்கடலை வாங்கி கொடுத்து இடத்தை பிடித்து ஜாலியாக காலை ஆட்டி கொண்டு உட்கார்ந்திருந்தாள், உள்ளே இருந்த பிள்ளைகளுக்கெல்லாம் நிம்மதி, பாத்திமா பின்னாடி இருந்ததால் நெருக்காம வசதியாக இருந்தாங்க, இல்லாவிடில் எப்பவும் புழு நெளிவது போல் நெளிஞ்சுகிட்டு இருப்பான்னு சந்தோஷமாக பேசிகிட்டாங்க.

ரியாஸ் பக்கம் தள்ளி உட்கார்ந்து அவனை நசுக்கி போட்டா பாத்திமா.
“ஏய் பாத்திமா, நாளைக்கு பத்து பைசா தந்தா கூட நீ பின்னாடி வேண்டாம்னு” அவன் சொன்னதை கூட காதில் வாங்காமல், காலை வேகமாக ஆட்டி கொண்டு இருந்தா பாத்திமா. “இந்த பிள்ளை ஏன் நம்ம வண்டியில வருதோ! இந்த சேட்டைக்காரியை நாளை முதல் எல்லோரிடமும் சொல்லி பஸ்ஸில் போகச்சொல்லனும்” என்று நினைத்து கொண்டான் ரியாஸ்.

“ஹை ஹை ஹை “ என்று கம்பை வைத்து வண்டிக்கார லெப்பை ஒரு தட்டு தட்டியவுடன் சீரிப் பாய்ந்தன வெள்ளைக்காளைகள். ஸ்கூல் வண்டிகென்றே இந்த இரண்டு காளைகள் பழக்கபட்டிருந்தன அரைமணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் போய் விடும், இன்னும் தட்டினால் வண்டி பறக்கும். பிள்ளைகள் அதிகம் என்பதால் வண்டிக்காரர் தான் மெதுவாக ஒட்டுவார்.

வீடு வந்து சேரவும், பையை தூக்கி பாய் அட்டி கீழே வைத்து விட்டு கையை காலை கழுவிட்டு சின்னவாப்பா வீட்டிற்கு ஓடினாள் பாத்திமா. அங்கே, சாச்சி சூடாக பானை நிறைய கருப்பட்டி சாயா போட்டு வைத்திருப்பாங்க. பாலும் பக்கத்தில் இருக்கும், தேவைக்கு ஒரு பெரிய கிளாஸ் நிறைய குடிக்கலாம் என்று எப்பவும் அங்கு ஓடுவது தான் வழக்கம், இங்கு வீட்டில் பாத்திமாவின் அக்கா என்ன கத்து கத்தினாலும் காதில் வாங்குவதில்லை.

சாச்சி வீட்டில் வாத நோயில் அவதிப்படும் சின்னவாப்பாவால் வாய் பேச முடியாது, எழுந்து நடக்கவும் முடியாது. படுத்தால் படுத்த படுக்கை, யாராவது தூக்கி வைத்தால் உட்காருவார், தினமும் காலையும் மாலையும் நடை காட்டுவாங்க, இப்படி இருந்தாலும் சின்னாப்பாவிற்கு எல்லோரும் பயப்படுவாங்க. அவர் பேசும் ஒரே வார்த்தை “யாமுக்கா” தான். சின்னவங்க முதல் குடும்பத்தில் எல்லோருக்கும் அவர் “சின்னாப்பா“ தான்.

அவருக்கு இந்த பாத்திமாவை கண்டால் பிடிக்காது.
வந்தவுடனேயே “யாமுக்கா! யாமுக்கா!” என்று சத்தம் போடுவார். சாச்சிக்கு தான் சின்னாப்பா சொல்வது புரியும். “வாப்பா என்ன சொல்றாங்க?” என்று பாத்திமா கேட்டாள்,
“நீ கட்ட பாவாடை உடுத்தியிருக்கியாம், முழுப்பாவாடை உடுக்கச்சொல்றாங்க” என்று சொன்னாங்க சாச்சி. விடாமல் “யாமுக்கா! யாமுக்கா!” என்று ஒரே சத்தம்.
“வாப்பா சத்தம் போடாதீங்க ,நாளைக்கு முழுப்பாவாடை உடுக்கும்” என்று சமாதானப்படுத்தினாங்க, சாச்சி.
மறு நாள் லீவு என்பதால் விளையாடப் போனா பாத்திமா.
சின்னாப்பா ஒரே இடத்தில் இருப்பதால் பாத்திமாவிற்கு அப்ப அப்ப வாப்பாவை போய் பார்க்கனும்னு ஒரு நினைப்பு. ஆனால் வாப்பா இந்த பிள்ளையை கண்டால் ஒரே சத்தம், உம்மாவை சின்ன வயசிலேயே முழுங்கிட்டான்னு கோபமான்னு தெரியலை.
“யாமுக்கா! யாமுக்கா! யாமுக்கா!” என்று பெரிய சத்தம்..
சாச்சிக்கும் கோபம், “அந்த இளவு இப்ப எங்க இங்க வந்துச்சு, முதல்ல வெளியே போவச்சொல்லு, வாப்பா சத்தம் போடுறாங்க”, அப்படின்னு சொன்னாங்க.
சரின்னு பாத்திமாவும் தெருவில் விளையாட போயிட்டா.

காலை நேரம் தெருவில் களை கம்பு கெட்டி பாவு ஆத்தி கிட்டு இருந்தாங்க, எல்லார் வீட்டிலும் தறி இருப்பதால் காலை வேலையில் நூலை கஞ்சி தடவி ஆற போட்டு பிரிச்சி கெட்டுற வேலை நடக்கும்.
கொஞ்சம் குசும்பு பிடிச்சவ தான் பாத்திமா. பாவு ஆத்திகிட்டு இருக்கிறவங்க காலை கீழே குனிந்து கிள்ளி விட்டு ஓடிடுவா. அவர்கள் திரும்பி பார்ப்பதற்குள் யார் வீட்டு தறியிலாவது போய் ஒளிந்து கொள்வது வழக்கம். “இந்தப்பிள்ளை நாளைக்கு வரட்டும் களைக் கம்பாலயே நாலு சாத்து சாத்தனும்” என்று எல்லோரும் சொல்வாங்க. ஆனால், எதுக்கும் பயப்படாமல் இந்த கிள்ளு விளையாட்டை விளையாடிக் கொண்டுதான் இருப்பா.

பாத்திமாவிற்கு ஒரே கவலை யாமுக்கா வாப்பா பெரிய சத்தம் போட்டாங்களே. “என்னன்னு போய் பார்ப்போம்” என்று, வாப்பா தூங்கும் நேரம் சாச்சி கிட்ட போய், “ஏமா சத்தம் போட்டான்னு?” கேட்டா, சாச்சியும் “உன் தலை செம்பட்டையா பரட்டை மாதிரி இருக்காம், தலைய ஒழுங்கா எண்ணெய் தேய்ச்சி கெட்டனுமாம்” என்று சொன்னாங்க..

வீட்டிற்கு வந்த பாத்திமாவிற்கு, அக்கா ஜெஸிமா அழகாக தலை சீவி தன் சாட்டை போன்ற முடியை கெட்டி வச்சிருந்ததை பார்த்தவுடன் கோபம் வந்து விட்டது. அவள் சடையை பிடித்து ஆட்டு ஆட்டுன்னு ஆட்டியதில் வீடே அலறியது.
“இப்ப எதுக்கு இப்படி ஆட்டுறே..” என்று எல்லோரும் கேட்க, “என் தலைய யாரும் கெட்டலை, சின்னாப்பா சத்தம் போடுறா..”.
“சரி இப்ப அவ முடியை விடு. உன் தலைய யாரால சிக்கு எடுக்க முடியும்?..” என்று சலிச்சுகிட்டா பெரியக்கா மீரா.

சாயும் காலமாச்சு, அக்கா இருவரும் டவுணுக்கு துணி எடுக்க கிளம்பினாங்க. 30 பைசா தந்தால் தான் விடுவதாய் மீராவின் சேலையை பிடித்து ஒரே அடம் பிடித்தாள் பாத்திமா. சரி என்று, 30 பைசாவை கொடுதது விட்டு “ஒழுங்கா இருக்கனும்” என்று சொல்லி விட்டு இருவரும் கிளம்பி போனாங்க.

பாத்திமாவும், முப்பது பைசாவை எடுத்துக் கொண்டுப் போய், தெருகோடியில் இருக்கும் பார்பர் ஷாப்பில் மொட்டை போட்டுவிட்டு வந்தாள். வரும் வழியில் தெருவில் எல்லோரும் பார்த்து சிரிப்பதை கூட சட்டை செய்யாமல் நடந்தாள் பாத்திமா.
டவுணில் இருந்து வந்த அக்கா மீராவும், ஜெஸிமாவும், பாத்திமாவை பார்த்து அதிர்ந்து போய்ட்டாங்க. “இந்த பிள்ளை பண்டம் வாங்கி திங்கும்னு பைசா கொடுத்தா.., இப்படி மொட்டை போடும்னு யாருக்கு தெரியும்..!” என்று ஒரே புலம்பல்.

மறுநாள் சின்னாப்பாவை பார்க்க தலையில் சந்தனம் பூசி, திருஷ்டி விழாமல் இருக்க வேலை பார்க்கிற சுபைதாமா பூசிய அடுப்புக்கரியோடு கிளம்பி சென்றாள் பாத்திமா.
“சின்னவாப்பா என்ன செய்றாங்க..” என்று மெதுவாக அடி மேல் அடி வைத்து நடந்து உள்ளே போனாள் பாத்திமா.
சாச்சி வாப்பாக்கு சோறு ஊட்டிகிட்டு இருந்தாள், பாத்திமா வந்ததை பார்த்து விட்டு
“மூத்தவ... முழுப்பாவாடை உடுத்தி, மொட்டை போட்டுட்டு வந்திருக்கா பாருங்க வாப்பான்னு” சாச்சி சொன்னாங்க..
“தலைய சீவி கெட்ட சொன்னா.. ஏம்ளா மொட்டை போட்டே?”
“இல்லை சாச்சி, என் முடி பம்பக்கடா முடி மாதிரி இருக்கா.., சிக்கு எடுக்க முடியலை அதான் மொட்டை போட்டேன்.” என்று” வெள்ளை மனதுடன் சொன்னாள் பாத்திமா.
சாச்சிக்கு அழுகையே வந்து விட்டது. சின்ன வயசில் பிள்ளையை விட்டுட்டு போன, தன் தமக்கையின் நினைவு வந்து விட்டது போலும்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாமுக்கா வாப்பா, பாத்திமாவின் கையை இருகப் பிடித்து தன்னிடமிருந்த ஆரஞ்சு மிட்டாய் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

“அப்பாடா..! எப்பவும் சத்தம் போட்டு விரட்டுற வாப்பா கிட்ட இருந்து, மிட்டாய் வாங்கியாச்சு..” என்று நிம்மதியாக வீட்டை நோக்கி ஓடினாள் பாத்திமா.
--ஆசியா உமர்..

பழைய கருப்பு வெள்ளை படம் - எங்கள் மாமா MCS அவர்கள் எடுத்தது.

47 comments:

அமைதிச்சாரல் said...

பாத்திமா உருக வெச்சுட்டாங்க..

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா..

பாத்திமாவின் குறும்பு மனக்கண்ணில் ஓடுகிறது..தாயின்றி வளரும் குழந்தையின் சங்கடங்கள் கண்முன்னே...கடைசியில் பாத்திமா,மனதை பிசைந்துவிட்டாள்...

நல்லா இருக்கு...

அன்புடன்
ரஜின்

சே.குமார் said...

அக்கா...
அருமையா கதை சொல்லியிருக்கீங்க...
எதார்த்தமான எழுத்தில் பிஞ்சு மனதை புரிய வைத்து விட்டீர்கள்...
இனி அடிக்கடி கதை சொல்லுங்க...

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல கதை ஆசியா. வாழ்த்துக்கள்.

Chitra said...

அடுத்த வருட தங்க விருதுக்கு, பதிவு ரெடி! சூப்பர், மா!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. தாயில்லாக் குழந்தை படும்பாடு கண்ணில் தெரிகிறது!

Kurumbukkaran said...

அனைவருக்குமான, அற்புதமான கதை.

asiya omar said...

அமைத்திச்சாரல் கருத்திற்கு மிக்க நன்றி.

ரஜின்,வஅலைக்கும் ஸலாம்(வரஹ்), உங்க உள்ளத்தில் உள்ளதை அப்படியே கருத்திட்டமைக்கு நன்றி.

asiya omar said...

சே.குமார் நிச்சயம் இனி நேரம் கிடைக்கும் பொழுது கதை எழுதுவேன்.

சங்கரி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

asiya omar said...

சித்ரா மிக்க நன்றி, தமிழ்மணம் விருது தந்து ஊக்கப்படுத்தியதால் கதை எழுத வேண்டும் என்ற பொறுப்பு அதிகரித்திருப்பது உண்மை தான்..

வெங்கட் நாகராஜ் கருத்திற்கு நன்றி.

நட்புள்ளங்களே! கதையில் ஏதாவது தவறு இருந்தாலும் தயங்காமல் சுட்டி காட்டுங்க.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

உங்களுடைய படைப்புகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு எனக்கு...

சிநேகிதன் அக்பர் said...

கதை அருமை. இது போல தொடர்ந்து எழுதுங்க.

ஸாதிகா said...

அருமையான கதை.சிறு வயதில் ஒற்றை மாட்டுவண்டியில் பள்ளி சென்றது எல்லாம் ஞாபகம் வருகின்றது.

எல் கே said...

இதில் எதுவும் தவறு இருப்பதாக தெரியவில்லை. நல்ல இயல்பான நடை. மனதில் ஒட்டும் ஒரு கரு

asiya omar said...

ஹாஜி வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி.

அக்பர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா,வேலைக்கு மத்தியிலும் வந்து என் இடுகைகளுக்கு கருத்து சொல்வது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.பாராட்டிற்கு நன்றி.

asiya omar said...

எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி சகோ,சில சமயம் எழுத்துப் பிழை இருக்கும்.என் கண்ணிற்கு தெரியாது,அதனையே தெரிவித்து இருந்தேன்.கருத்திற்கு மிக்க நன்றி..

S.Menaga said...

நல்ல கதை,வாழ்த்துக்கள் அக்கா!!

ஜெய்லானி said...

@@@Chitra
அடுத்த வருட தங்க விருதுக்கு, பதிவு ரெடி! சூப்பர், மா! //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

angelin said...

very nice and touching.

எம் அப்துல் காதர் said...

அஞ்சு பைசா பத்து பைசா வேர்கடலை எனும் போது பால்ய வாழ்க்கை அசைபோடப் பட்டிருக்கிறது. கண் பார்த்ததை கை எழுதிவிட்டது சரியா??

இது கதையல்ல நிஜம் தானே டீச்சர்! "யாமுக்கா யாமுக்கா" என்பது எந்த பேருடைய மருவு!!

பாத்திமாவின் வாழ்க்கையில் துள்ளல் இருந்தாலும், அவளுடைய சோகம் நெகிழ வைத்து விட்டது! நிச்சயமாய் இந்தக் கதையும் உங்களுடைய பெயரைச் சொல்லும்!!

savitha ramesh said...

En kangal panikkindarana......
Oru unmai kadhai en mana kannill...
Niraivana kadhai...
endha thaayum kan kalangum kadhai....
thodarga ungal ezhuthu pani....

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

ஏஞ்சலின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஜெய்லானி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

தங்கராசு நாகேந்திரன் said...

அடாடா நல்ல நடை மண்ணுக்கே உரிய வார்த்தைகளுடன் மிக நன்றாக இருந்ததது பாராட்டுக்கள்

asiya omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
உண்மைச் சம்பவங்களை பின்னி கற்பனையும் கலந்து எழுதப்பட்ட கதை தான்.வாதத்தினால் வாய் பேச முடியாமல் போன பின்பு அந்த பெரியவர் உச்சரித்த ஒரே வார்த்தை “யாமுக்கா” தான். அந்த வார்த்தையை நான் மாற்றவில்லை.

Kanchana Radhakrishnan said...

நல்ல கதை.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அருமையா கதை சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

Krishnaveni said...

wow, super story, beautiful theme, excellent

இளம் தூயவன் said...

நல்ல உணர்வு பூர்வமான கதை,அருமை.

.

vanathy said...

super story, akka.

asiya omar said...

சவீதா மிக்க நன்றி.

தங்கராசு உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

asiya omar said...

ஆயிஷா மிக்க நன்றி.

கிருஷ்ணவேணி மிக்க நன்றி.

சகோ.இளம் தூயவன் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

Mahi said...

கதை அருமையா இருக்கு ஆசியாக்கா! மெய்ல் அனுப்பியிருக்கேன்,பாருங்க. :)

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...,கதை மிகவும் எழிய நடையில் அருமையாக இருந்தது.
மாட்டுவண்டியில் செல்லும் காட்சி சிறுவயதில் சென்று வந்த நினைவை ஏற்படுத்திவிட்டது.ரசிச்சு எழுதியிருக்கீங்கன்னு தெரியுது.
நானும் ரசிச்சு படித்தேன்.
கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனசு பாத்திமாவை அழகாக காட்டியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் ஆசியா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

மகி மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

கதை உணர்வுப்பூர்வமா நல்லாயிருந்தது. வாழ்த்துக்கள்.

Jay said...

fantastic writeup...love your presentation..
first time here..happpy to follow u...
do drop by mine sometime...
Tasty appetite

mahavijay said...

கதை அழகா எழுதி இருக்கீங்க.
“மூத்தவ” இப்படி தான் எங்க பெரிய அம்மா சொல்லுவாங்க.
மாட்டு வண்டி பயனம் அற்புதம்.

Jaleela Kamal said...

யாமுக்கா, பெரியவர் மற்றும் பாத்திமாவின் குறும்பு பதிவு , உண்மை நிகழ்வு என்பதால் கதைக்கு உயிர் இருக்கு

Jaleela Kamal said...

அருமையன கதை ஆசியா

Gopi Ramamoorthy said...

சூப்பர் கதை. பின்னிட்டீங்க போங்க.

asiya omar said...

கோவை2தில்லி மிக்க நன்றி.

ஜெய் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

அழகான நடையில் நெகிழ்வான கதை.

//பம்பக்கடா //

நம்ம ஊருல மட்டுமே கேட்கக் கூடிய சொற்பிரயோகங்கள்:)!

அஹமது இர்ஷாத் தந்த வருது ‘எம்மா’வைப் படைத்தது. தமிழ்மணம் விருது ‘யாமுக்கா’வைத் தந்துள்ளது.
நிறைய்ய்ய்ய எழுதுங்கள். வாழ்த்துக்கள் ஆசியா.

asiya omar said...

ராமலஷ்மி அருமையான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நிச்சயமாக எழுதுவதும் வாசிப்பதும் ஒரு நல்ல பொழுது போக்கு தான்,அது எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு,ஆனால் எழுதும் பொழுது சரியாய் அமைய வேண்டும் என்ற பயம் எப்பொழுதும் உண்டு.

etismail said...

அருமையான சிறு கதை,தலைப்பை தேர்ந்தெடுத்த விதத்தில் தங்களுடைய முத்திரையை பதிந்துள்ளீர்கள்,மேலும் பாத்திமா என்ற கதாபாத்திரத்தினை மிக அழகாக செதுக்கியுள்ளீர்கள். மேலும் தங்களுடைய உள்ளுர் தமிழ் வழக்கினால் மிகுந்த உணர்வு பூர்வமாக உள்ளது.பாவு, கருப்பட்டி சாயா,இளவு போன்ற உள்ளூர் தமிழ் வழக்கு மிக அருமை.
இப்படிக்கு,
ஈட்டி இஸ்மாயில்

asiya omar said...

சகோதரர் etismail கருத்திற்கு மிக்க நன்றி.எதுவும் பிழையிருந்தாலும் தயங்காமல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்,நான் தேர்ந்த எழுத்தாளர் இல்லை,ஆரம்ப நிலையில் உள்ளவள் என்பதால் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.