Tuesday, February 8, 2011

கிழவனும் கடலும் - நோபல் பரிசு பெற்ற குறுநாவல்


எர்னெஸ்ட் ஹெமிங்வே

எனக்கு பல வருடங்கள் கழித்து நாவல் படிக்கும் வாய்ப்பும் நேரமும் கிடைத்தது. இந்நாவலை அமெரிக்காவின் புகழ் பெற்ற இலக்கிய எழுத்தாளர்,பத்திரிக்கையாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே (ஜூலை 21 - 1899 – ஜூலை 2 -1961) எழுதியிருக்கிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசும், புலிட்சர் விருதும் பெற்ற இந்நாவலை இது வரை வாசிக்காதவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதன் விமர்சனத்தை எழுத விழைந்தேன்.


சான்டியாகோ என்ற பெயருடைய அதிர்ஷ்டமில்லாத ஒரு மீனவக் கிழவர், அவர் மீது அதீத அன்பு செலுத்தும் மனோலின் என்ற சிறுவன், கிழவரிடம் சிக்கிய பெரிய மீன், கடல் இவற்றை கொண்டே இந்த கதை பின்னப்பட்டுள்ளது.

கிழவரும், சிறுவனும் ஒன்றாக தினமும் படகில் மீன் பிடிக்க சென்று நாற்பது நாட்கள் மீன் எதுவும் கிடைக்காமல் திரும்பி வருகின்றனர், சிறுவனுடைய பெற்றோர் கிழவர் அதிர்ஷ்டமில்லாதவர் என்று கூறி, அவனுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று, மற்றொருவருடன் அனுப்புகின்றனர். அதன் பின் கிழவர் தனியாக மீன் பிடிக்க செல்கிறார். இப்படியே எண்பத்தி நான்கு நாட்களாய் சென்றும் மீன் எதுவும் இல்லாமல் திரும்பி வருகிறார். அந்த சிறுவனுக்கோ கிழவருடன் தினமும் மீன் பிடிக்க செல்லவே ஆசை,முடியாத காரணத்தால் அவருக்கு பணிவிடை செய்து தன் அன்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்துவது அருமையாக இருக்கும்.

கிழவர், எண்பத்தைந்தாவது நாள் தனக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் தரும் என நம்பி கடலுக்கு வெறும் தண்ணீர் பாட்டிலுடன் படகில் தனியாக கிளம்பி செல்கிறார். கடல் பயணத்தின் போது தனக்கு தானே பேசிக்கொள்வதும், கடலோடும், சுறா, டால்பின் போன்ற மீன்களோடும், பறவைகளோடும் பேசிக்கொள்வது மிகவும் ரசிக்கும்படி இருக்கும். இப்படியே கடலுக்குள் வெகு தூரம் சென்று ஆழமான பகுதியை அடையும் பொழுது, மிகவும் போராடி ஒரு நாள் கழிந்த பின்பு அவர் தூண்டிலில் பெரிய மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் கிழவரை கடலில் பல இடங்களுக்கு இழுத்து செல்கிறது. பசி எடுக்கும் பொழுது கடலில் சிறிய மீன்களை பிடித்து,துண்டாக்கி,சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடித்து பசியை தணிக்கிறார்.தொட்டு கொள்ள உப்பும் எலுமிச்சையும் இருந்தால் அருமையாக இருக்குமே என்ற எண்ணம் வெளிப்படுத்துவது மனதை தொடுகிறது. தூண்டிலில் சிக்கிய அந்த மீனை கொல்வதற்கு மறுநாள் ஆகிறது. மீன் படகை விட பெரியதாக இருந்ததால் அதனை படகில் கட்டி கரை வரை இழுத்து வருவதே கதை.கிழவரால் முடியாத பொழுதெல்லாம், அடிக்கடி “அந்த சிறுவன் இருந்திருந்தால்” என்று சொல்லி அவனை நினைவு கூறுவது, தனிமையில் முதுமை எவ்வளவு கொடுமையானது என்பதை கதாசிரியர் உணர்த்துகிறார். குத்தீட்டியால் அந்த மீனைக் கொன்றதால் மீனில் இருந்து கசிந்த இரத்த வாடைக்கு சுறாக்களும் அந்த மீனை அவ்வப்பொழுது குதறி எடுத்து சென்று விடுவதும், அந்த சுறாக்களுடன் போராடி கிழவர் களைத்து போனாலும் எப்படியும் பாதி மீனையாவது கொண்டு போய் விடலாம் என்று நம்பிக்கையாய் இருப்பதும், அந்த வேலையில் சுறா கூட்டமாக வந்து தாக்குவதும் தனியாளாய் தன்னிடம் இருக்கும் கத்தி, தடி கொண்டு விரட்டுவதும் அருமையாக விவரிக்கப் பட்டிருக்கிறது. மூன்றாவது நாள் முழு மீனையும் சுறாக்கள் துவம்சம் செய்து விட பதினெட்டு அடி நீளமுள்ள வெறும் மீனின் எழும்புக்கூடுடன் கரை வந்து சேர்வது தான் கதை. மீன் கிடைத்தும் அதிர்ஷ்டம் இல்லை என்ற தோல்வியிலும் கூட அயர்ச்சியில் தூங்கி மறுநாள் நம்பிக்கையோடு மீன் பிடிக்க கிளம்ப எண்ணும் கிழவரை பற்றிய இந்த கதை என்னை மிகவும் பாதித்தது. முடிவில் அந்தச் சிறுவனும் கிழவரோடு மீன் பிடிக்க செல்ல முடிவெடுப்பது நாவலின் முடிவை மேன்படுத்தி காட்டுகிறது.

இந்த கதையில் கிழவர் கடலில் மூன்று நாள் போராடி அந்த மீனை பிடித்து கொன்று கரைக்கு கொண்டு வரும் வேளையில் அது வெறும் எலும்பு கூடாக காட்சியளித்தாலும், அந்த கிழவர் தான் தோற்றுவிட்டதாக நினைக்கவில்லை என்பதை இந்த கதை உணர்த்தும் பொழுது, போராடுபவர்கள் நினைத்ததை அடையும் வரை போராடிக்கொண்டு தான் இருப்பார்கள், வெற்றியில்லை எனில் இறந்து போவார்களே ஒழிய அவர்கள் தோற்பதில்லை என்பதை உணர்த்துவதாகவே எனக்கு படுகிறது.

இதனை நான் இந்த மாதம் http://www.nakkheeran.in/- இனிய உதயம் பகுதியில் படித்தேன்.
நீங்கள் அங்கு சென்று படிக்கலாம்.

பின் குறிப்பு :
என் கணவர் அடிக்கடி சொல்வதுண்டு, நிறைய வாசி, அப்ப தான் உன்னால் திறம்பட எழுத முடியும் என்று. எனவே தற்சமயம் எழுதுவதை விட அதிகம் வாசிக்க நேரம் செலவழிக்கிறேன்.

என் சகோதரர் இந்த நாவலை தன்னுடைய முதுகலையில் படித்ததாகவும், படித்த கால கட்டத்தில் ஒரு மீனவரோடு கடலுக்குள் கட்டுமரத்தில் சென்று வர ஆசைப்பட்டதாகவும், ஹாஸ்டல் வார்டன் அனுமதிக்காததால், கட்டுக்கடங்கா ஆசையுடன் ஹார்பரில் நண்பரின் உதவியுடன் கடலில், படகில் பயணம் செய்து அந்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்ததை நினைக்கும் பொழுது, இந்த கதையை படிக்கும், படித்த ஒவ்வொருவருக்கும் கடலில் பயணம் செய்ய ஆசை வரும் என்பதில் ஐயமில்லை. பின்பு பேராசிரியராக இந்தக் கதையை போதித்த பொழுது, இதனை தமிழாக்கம் செய்ய வேண்டுமென்று நினைத்ததை கூறியதை வைத்து தான், எனக்கு இந்நாவலின் தமிழாக்கம் கிடைத்தவுடன் மிகவும் ஆவலோடு வாசிக்கும் எண்ணம் வந்தது. பின்பு தான் தெரிந்தது எத்தகையதொரு தத்துவங்கள் நிறைந்த இலக்கியம் என்று.

என் கணவர், நான் யாரையாவது மரியாதை குறைவாக பேசினால், விளையாட்டாக இப்படி சொல்வதுண்டு, “அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்” என்று. இந்த கதையை நான் மொழி பெயர்த்து இருந்தால் கிழவரும் கடலும் என்று தான் பெயரிட்டு இருப்பேன். இந்தக்கதையை படித்த பின்பு இந்தக்கதையின் கதாநாயகராகிய மீனவ முதியவரை கிழவன் என்று சொல்ல எனக்கு உடன்பாடில்லை.

வாழ்க்கை தோல்வியினால் சோர்வு அடைபவர்கள் இக்கதையை படித்தால் நிச்சயம் புத்துணர்ச்சியும்,ஒரு நல்ல இலக்கியம் படித்த திருப்தியும் கிடைக்கும். நேரம் வாய்ப்பின் வாசித்து தவறாமல் கருத்துக்களை தெரிவிக்கவும்.இது என் இருநூற்று ஐம்பதாவது இடுகை.
--ஆசியா உமர்.
படங்கள் - கூகிள் உதவி -நன்றி.

48 comments:

Chitra said...

நிச்சயமாக உங்கள் எழுத்தில் நிறைய வித்தியாசம் தெரிகிறது. நல்ல கருத்துக்களுடன், இன்னும் நிறைய புத்தகங்கள் வாசித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

இளம் தூயவன் said...

சகோதரி நிறைய படித்து அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்களும்!

Mahi said...

நல்லகதையைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி ஆசியாக்கா!நான் இன்னும் உங்க விமர்சனத்தைப் படிக்கல,கதையை முதலில் படித்துட்டு அப்புறம் வரேன்.:)

எல் கே said...

நீங்களும் இலக்கியவாதி ஆகிட்டு இருக்கீங்களா ? படிச்சிட்டு வரேன்

asiya omar said...

மிக்க நன்றி சித்ரா,உங்களின் முதல் கருத்தை கண்டு மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.இளம்தூயவன் தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்திற்கு நன்றி.

asiya omar said...

மகி,விமர்சனத்தை வாசித்து கருத்து சொல்லுங்க, படிப்பவர்களின் விருப்பம் எப்படின்னு தெரியலை,எனக்கு பிடிச்சிருந்தது.நாவல் படித்து முடிக்க 3 மணி நேரம் எனக்கு ஆனது.

asiya omar said...

எல்.கே. அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது,நேரம் கிடைக்கும் பொழுது வாசியுங்க.கருத்திற்கு மிக்க நன்றி.

FOOD said...

நல்ல பகிர்விற்கு நன்றி.

ஸாதிகா said...

படித்ததை அழகுற பகிர்ந்து எஙகளயும் வாசிக்க தூண்டி விட்டீர்கள்.

ரமா said...

ஆசியா வாழ்த்துக்கள் உங்க 250 பதிவிற்கு. நீங்க இன்னும் நிறைய பதிவுகள் எழுதவேண்டும்.உங்களிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.ஆதரவுக்கு நாங்கள் இருக்கின்றோம்.
நீங்க வாசித்த கதையை{நல்ல ஒரு கதை}எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி.
உண்மையில் நீங்க சொன்ன மாதிரி படகில் பயணம் செய்யத்தூண்டுகிறது.
கதையைப்படிக்கும்போதே எனக்குள் அந்த உணர்வு ஏற்பட்டுவிட்டது.நன்றி ஆசியா.

சசிகுமார் said...

உண்மையிலேயே மிகவும் புத்துணர்ச்சி அளிக்ககூடிய கதை அக்கா, எழுதிய ஆசிரியர்க்கு என் நன்றிகள். மற்றும் எளிய தமிழில் எங்களுக்காகா கதையின் உட்கருவை அழகாக விவரித்து கூறி இருக்கீங்க அக்கா மிக்க நன்றி. மேலும் இது போன்ற புகழ் மிக்க கதைகளை எளிய தமிழில் உங்கள் நடையில் தொடர்ந்து தரவும்.

சே.குமார் said...

நல்லகதையைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.

Congrats for 250....!

கோமதி அரசு said...

நல்ல கதை ஆசியா.

பகிர்வுக்கு நன்றி.

நிறைய புத்தகங்கள் படித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

asiya omar said...

food,வாங்க வருகைக்கு நன்றி.உங்க நெல்லை செய்திகளை நான் அடிக்கடி பார்வையிடுவதுண்டு.

asiya omar said...

தோழி ஸாதிகா, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.கதையை படிங்க,தினமும் ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி கூட படிக்கலாம்.வீட்டு வேலைகளுக்கு மத்தியில் நேரம் கிடைப்பது தான் சிரமமாயிருக்கிறது.

asiya omar said...

ரமா,உங்களோட அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.உங்களோட வருகைக்கு நன்றி.நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் மிக்க உற்சாகத்தை தருகிறது.நன்றி.

asiya omar said...

சசி குமார் வாங்க,நிச்சயம் நல்ல படைப்புக்கள் தர முயற்சிப்பேன்.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

தம்பி குமார் உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

கோமதி அரசு வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் said...

நல்லதொரு கதையை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி ஆசியா. இப்பவே வாசிக்கப்போறேன்.

கோவை2தில்லி said...

நல்லதொரு நூல் விமர்சனம். 250 க்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் உங்கள் எழுத்து பணி தொடர வேண்டும்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல கதை.பகிர்விற்கு நன்றி.வாழ்த்துக்களும்!

உங்கள் விருதை என் பிளாக்கில் வைத்துள்ளேன். பார்த்தீர்களா ?

சாருஸ்ரீராஜ் said...

nice story thanks for sharing with us

ஜீவன்பென்னி said...

எர்னால்ட் ஹெமிங்க்வே எழுத்து அவரோட வீழ்த்தப்பட்டவர்கள் என்ற தமிழ் மொழி பெயர்ப்பு மூலமா முதல்ல அறிமுகமானார். அது ஒரு புரட்சிக்காரனின் கதை. இந்த படைப்பு ஒரு எனர்ஜி டானிக்தான் போல. படிச்சிட வெண்டியதுதான்.

Mano Saminathan said...

முதலில் 250 ஆவது இடுகைக்கும் அதன் பின் இருக்கும் உங்களது உழைபிற்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள் ஆசியா! இந்தப் பதிவு ரொம்பவும் அருமை! வயது முதிர்ந்திருந்தாலும் தொடர் தோல்விகள் கிடைத்தும் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கவில்லை பாருங்கள் அந்த முதியவர்! இந்த கால இளைஞர்கள் அவசியம் இந்தத் தன்னம்பிக்கைக்கதையை படிக்க வேண்டும். அப்புறம் ஓவியங்கள் அனைத்தும் அற்புதம்!

S.Menaga said...

நல்ல கதையை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா....நாவலை படித்த திருப்தி தருகிறது..

vanathy said...

நல்லா இருக்கு கதை. நிறைய படித்தால் அறிவும் வளரும், கற்பனையும் கரை புரண்டு ஓடும்.

Kanchana Radhakrishnan said...

நல்ல கதை.வழ்த்துகள் உங்கள் 250 வது பதிவிற்கு.

Akila said...

kathai migavum arumai... nichayam muzhu puththakaththaiyum padikinren...

Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

Thanglish Payan said...

mm.. very good post ..and very good novel.

Geetha6 said...

வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

உங்கள் கணவர் சொன்னது மிகச் சரியானது.. உங்கள் பதிவு அருமையாய் இருந்தது. வாழ்த்துக்கள்.

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

mahavijay said...

நிறைய கதைகளை படித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

ரொம்ப அழகான நடையில் எழுதி இருக்கீங்க..

தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்..!

Riyas said...

அருமையாக அழகாக சொல்லியிருக்கிங்க அக்கா.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

"Sharing is Caring"

Thanks for sharing your knowledge...

வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

romba arumai.
ungkaLukku ithai padiththu mudikka eppadi than porumai irunthussoo.

Gopi Ramamoorthy said...

இலக்கியவாதி ஆயிட்டீங்க:-)

அப்பப்போ படிக்கிறதை இந்த மாதிரி பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வாசிப்பனுவம் பத்தி எழுத நல்லா வருது.

கீப் இட் அப்

asiya omar said...

அருமையான கருத்துக்களை தெரிவித்த நட்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.மிக்க மகிழ்ச்சி.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா... முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இது போன்ற நாவல்கள் என் கணவருக்குதான் மிகவும் விருப்பம். அவரிடம் இதை பற்றி நிச்சய சொல்கிறேன்.
நீங்கள் எழுதியிருப்பதே எனக்கு அத்தனை சுவாரஸ்யமாக உள்ளது.இது போன்ற நல்ல நல்ல விஷ்யனக்களையெல்லாம் எங்களோடு பகிர்ந்து கொள்வதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு மனமார்ந்த பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

எம் அப்துல் காதர் said...

அதானே பார்த்தேன். எழுத்தில் இப்பல்லாம் நெளிவு சுளிவு அழகா வருதேன்னு!! விஷயம் இதுதானா? ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்!! வாழ்த்துகள் டீச்சர்!!

எம் அப்துல் காதர் said...

சொல்ல மறந்துட்டேனே 250-க்கு வாழ்த்துகள்!!

Gopi Ramamoorthy said...

வலைச்சரத்தில் இன்று உங்கள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_08.html

asiya omar said...

மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ.கோபி..

Dhanalakshmi said...

nalla padhivu....

chandhan-lakshmi.blogspot.com

தீனா புகழேந்தி said...

தங்கள் விமர்சனம் அருமை. மெய்யாகவே அந்தக் கதை மிகச் சிறந்த கதை. அதை குறுநாவல் என்று சிலரும் நாவல் என்று சிலரும் சொல்கின்றனர். சில ஆண்டுகளாக 'மொக்கை கதை'களை எழுதிய ஹெமிங்வேயிடமிருந்து ஒரு சிறந்த கதையை அவர் வாசகர்கள் எதிர்பார்த்தனர். அதன் விளைவுதான் இந்தப் படைப்பு. கதையில் வரும் கிழவருக்கும் சிறுவனுக்கும் இடையேயான உறவு மிக ஆழமானது. 97 பக்கம் மட்டுமே கொண்ட ஒரு புத்தகத்துக்கு நோபல் பரிசு என்றால் அதன் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்!அதுவே ஒரு குறுநாவல். அதையும் குறுக்கி கதையை எளிமையாக விமர்சித்த தங்களுக்கு என் ஆழ்மன பாராட்டுகள். தங்கள் எழுத்து வாசிக்கத் தூண்டும்படி உள்ளது.

தீனா புகழேந்தி said...

தங்கள் விமர்சனம் அருமை. மெய்யாகவே அந்தக் கதை மிகச் சிறந்த கதை. அதை குறுநாவல் என்று சிலரும் நாவல் என்று சிலரும் சொல்கின்றனர். முடிவான வகைபாட்டுக்குள் இன்று வரை வரவில்லை. சில ஆண்டுகளாக 'மொக்கை கதை'களை எழுதிய ஹெமிங்வேயிடமிருந்து ஒரு சிறந்த படைப்பை அவர் வாசகர்கள் எதிர்பார்த்தனர். அதன் விளைவுதான் இந்தப் படைப்பு. கதையில் வரும் கிழவருக்கும் சிறுவனுக்கும் இடையேயான உறவு மிக ஆழமானது. 97 பக்கம் மட்டுமே கொண்ட ஒரு புத்தகத்துக்கு நோபல் பரிசு என்றால் அதன் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்! அதுவே ஒரு குறுநாவல். அதையும் குறுக்கி கதையை எளிமையாக விமர்சித்த தங்களுக்கு என் ஆழ்மன பாராட்டுகள். தங்கள் எழுத்து வாசிக்கத் தூண்டும்படி உள்ளது.