Tuesday, March 29, 2011

ஓடு ஓடு பத்து கிலோ மீட்டர் ஓடு / Run Run 10 kilometres Run


குளிர் எல்லாம் போய் அழகான தட்பவெட்பநிலை வந்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆகுது, குளிருக்கு பயந்து ப்ளாங்கட் போட்டு மூடி தூங்கிய காலம் மலையேறி போச்சே. ஊரு முழுவதும் போட்ட ஏசியை யாரோ டக்கென்று ஆஃப் செய்த மாதிரி ஒரு ஃபீலிங், இனிமேல் வீட்டில் ஏசி போடாம இருக்க முடியாது.ஏதோ காலையில் எழுந்தோமா,அவரை ஆஃபிஸ் அனுப்பினோம்மா,பிள்ளைகளை லீவில் சமாளிச்சோமா, நாலு பதிவை பார்த்தோமான்னு இருந்த என்னை இப்ப எப்ப பார்த்தாலும்,ஓடு ஓடு பத்து கிலோ மீட்டர் ஓடுன்னு ஒரே தொந்திரவு.


சரின்னு வீட்டை விட்டு வெளியே வந்தால், பக்கத்தில் உள்ள குட்டீஸ் பார்க் அமைதியாக என்னை சறுக்கு விளையாட கூப்பிட்டுச்சு, உள்ளே நுழைந்தால் என்னைக் கண்டவுடன் புறாக்கூட்டம் பறந்து வந்துச்சு, என்னடா இது நாம வெளியே வந்தால்,புறா,மைனா,குருவி,கோழின்னு நம்ம கூட ஒரு கூட்டமே வருது ஆனால் பழக தான் ஒரு ஆளையும் காணோம்னு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.கொஞ்சும் மைனாக்களும், கீச்சுக்குருவிகளும், பக் பக் என்று கூப்பிடும் புறாக்களும் அட்டகாசமாக இருந்துச்சு ஊர்.

வழியில் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் யாரோ ஒரு பெண் புர்காவெல்லாம் போட்டு உட்கார்ந்து சிட் அப்ஸ்,புல் அப்ஸ் எல்லாம் செய்து கிட்டு இருந்தாங்க,மெதுவாக போய் பேச்சு கொடுக்கலாம் என்று ஹலோ சொன்னால் அந்தம்மாவிற்கு சிரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியலை.
நமக்கு இந்த ஊரில் இப்போதைக்கு பேச்சு துணைக்கு,பழக ஆள் கிடைச்ச மாதிரி தான் என்று வந்தால், பக் பக், கொக் கொக் என்று ஒரே சத்தம், அட கோழிக்கூட்டமே என்னை கூப்பிடுது, வரும் வழியில் உள்ள வீட்டில் எட்டி பார்த்தால் ஆந்தையை கண்ட மாதிரி அத்தனை அலறல்,அடிச்சி பிரண்டு ஓடி வந்திட்டேன், கோழிகளுக்கு அவங்களை பிடிச்சி குழம்பாக்கிடுவாளோன்னு பயமோ என்னவோ.
பொன்னாங்கண்ணி கீரை இருந்தால் பறிக்கலாம்னு பையோடு வந்திருந்தேன்,ஆனால் பாருங்க,எனக்கு பயந்தே பொன்னாங்கண்ணிக்கு பதில் இப்ப எங்க பார்த்தாலும் இந்த செடி.


பத்து கிலோ மீட்டர் ஓடச்சொன்னாரே, அட்லீஸ்ட் மூணு கிலோ மீட்டராவது நடக்கனும்னு நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கிட்டே இருக்கேன், ஒருத்தரையும் காணோம். அட மணத்தக்காளி கீரை மாதிரி தெரியுதேன்னு கண்ணை நல்லா திறந்து பார்த்தால், ஆமா அதே தான்,விடலாமா, பொன்னாங்கண்ணி கிடைக்கலைன்னால் என்ன மணத்தக்காளியை நைஸாக ஆட்டையை போட்டுட்டேன்.
கீரை கிடைத்த கையோடு வீட்டிற்கு நடையை கட்டிட்டேன்.இனி கீரையை ஆய்ந்து சமைத்து உங்களுக்கு தரனுமே.
கீரையோட அழகான மணத்தக்காளி அதை தனியாக எடுத்து வச்சிருக்கேன், யாராவது எப்படி இதனை சமைக்கன்னு சொல்லுங்கபா. இல்லாட்டி நானா யோசித்து குட்டையை குழப்பிடுவேன் ஆமா.
ஃப்ரெஷ் கீரை ஆய்ந்து கழுவி எடுத்தாச்சு, இனி நறுக்கி சமைக்க வேண்டியது தான்.


மணத்தக்காளி கீரைக் கடைசல்:

தேவையான பொருட்கள் ;

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு

பெரிய வெங்காயம் - 1

தக்காளி -1

பூண்டு - 4பல் பச்சை மிளகாய் -2

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

சீரகத்தூள் -அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்

பாசிப்பருப்பு - ஒரு கையளவு

உப்பு - தேவைக்கு

தாளிக்க எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்

சீரகம் -அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்

மிளகாய் வற்றல் -2

தேங்காய் துருவல் -2டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கீரை,பாதி வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய்,மஞ்சச்,சீரக,மிளகு தூள்கள்,ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து,அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2விசில் விட்டு வேக விடவும்.
குக்கரை திறந்தால் வெந்து இப்படி இருக்கும்.நன்கு மத்து அல்லது அகப்பை கொண்டு மசித்து கடைந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,உளுத்தம் பருப்பு,வற்றல் தாளிக்கவும்.
நறுக்கிய பாதி வெங்காயம் போட்டு வதக்கவும்.
கடைந்த கீரையில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி வைக்கவும்,தாளித்ததை சேர்க்கவும்.
பின்பு நன்கு கீரையை கலந்து விடவும். உப்பு சரி பார்க்கவும்.லேசாக கசப்பு இருக்கும், ஆனால் மருத்துவ குணமுள்ள

கீரை. சாப்பிட்டே ஆகனும், வாய், வயிற்று புண் வராதாம்.
சுவையான சத்தான மணத்தக்காளி கீரை ரெடி.
இதுக்கு 3கிலோ மீட்டர் ஓடினால் போதாதா?

நான் முன்பு எழுதிய குறுக்கே கோழியும்,முருங்கைக்கீரையும் பார்க்க இங்கே கிளிக்கவும்.


--ஆசியா உமர்.


Monday, March 28, 2011

கிரில்டு சிக்கன் ப்ரெஸ்ட் /Grilled chicken breast


அகிலாஸ் கிச்சன் இவெண்ட்டிற்கு இந்த ரெசிப்பியை அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள்;

சிக்கன் ப்ரெஸ்ட் - 1கிலோ (8துண்டுகள்)

சிக்கன் டிக்கா மசாலா -2டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1டீஸ்பூன்

இஞ்சு பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்

கசூரி மேத்தி பவுடர்- 2டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் -2டீஸ்பூன்

லைம் ஜூஸ் - 2டேபிள்ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1டேபிள்ஸ்பூன்

பட்டர் - 1டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு


சிக்கனை கழுவி துண்டு போட்டு தண்ணீர் வடிகட்டி சிக்கன் துண்டுகளை கீறிவிட்டு வைக்கவும்.
சிக்கன்,பட்டர் தவிர குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

கலந்த மசாலாவை சிக்கனில் தடவி குறைந்தது 4மணி நேரம் ஊற வைக்கவும்.முதல் நாள் கூட ரெடி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
விரும்பினால் ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து மசாலா தடவினால் பார்க்க அழகாக இருக்கும்.
குக்கிங் ரேஞ்சில் (கேஸ் ஓவனில்) 250டிகிரி செட் செய்து மேலும் கீழும் ஃப்லேம் ஆன் செய்து 5நிமிடம் முற்சூடு செய்யவும். ரெடி செய்த சிக்கன் துண்டுகளை ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் போட்டு கிரில் வைத்து,அதன் மீது சிக்கன் துண்டுகளை அடுக்கி அடுப்பில் வைக்கவும்.
வெந்து இப்படி இருக்கும் 10நிமிடம் கழித்து திருப்பி வைக்கவும். இரண்டு புறமும் சிவந்தவுடன் எடுக்கவும். இது கலர் சேர்க்காத சிக்கன் ப்ரெஸ்ட் துண்டுகள்.
கிரில் செய்து வெளியே எடுத்தவுடன் பட்டர் மேலே தடவி சூட்டோடு பரிமாறவும்.அல்லது அலுமினியம் ஃபாயிலில் கவர் செய்து ஹாட்பேக்கில் வைத்தால் பின்பு பரிமாறிக் கொள்ளலாம்.
சுவையான கிரில்டு சிக்கன் ப்ரெஸ்ட் ரெடி. இதனை வெஜ் சாலட்,ரொட்டி, நாண்,ஃப்ரைட் ரைஸ்,கப்ஸா ரைஸ் உடன் சைட் டிஷாக பரிமாறாலாம்.

--ஆசியா உமர்.

Saturday, March 26, 2011

சோயா மிக்ஸ்ட் வெஜிடபிள் பிரியாணி

அசைவம்  சாப்பிடாதவர்களுக்கு இந்த பிரியாணி அந்த சுவையைத் தரும்.செய்து பாருங்க.மிகவும் ஆரோக்கியமும் சத்தானதும் ஆகும்.

தேவையான பொருட்கள்;பிரியாணி அரிசி - 800கிராம்
எண்ணெய் - 100மில்லி
நெய் - 100மில்லி
வெங்காயம் - 200கிராம்
தக்காளி - 300கிராம்
மல்லி,புதினா - தலா அரைகப்
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 5
எலுமிச்சை -1
தயிர் - 200மில்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் -2-3டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்(ஏலம்பட்டை கிராம்புதூள்)
சோம்பு தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
மஞ்சள்,ரெட்கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு.
தேவையான காய்கறிகள்,சோயா பால்ஸ் சேர்த்து மொத்தம் அரிசி அளவிற்கு எடுத்து கொள்ளவும். நான் 800கிராம் அரிசிக்கு 800கிராம் காய்கறிகள் எடுத்துள்ளேன்.
நான் எடுத்து கொண்ட காய்கறிகள்
சோயா - 100கிராம்
கேரட் -200கிராம்
காளிப்ளவர் -200கிராம்
பீன்ஸ் -100கிராம்
பச்சைபட்டாணி -100கிராம்
உருளைக்கிழங்கு -100கிராம்
காளான் - 100கிராம்
காய்கறிகளை இப்படி நறுக்கி வைக்கவும்.

சோயா பால்ஸ் கொதிக்கும் நீரில் 10நிமிடம் போட்டு நன்கு தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.

காய்கறிகள்,சோயாபால்ஸ்,தயிர்,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைக்கவும்.பிரியாணி அரிசியையும் அலசி சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு
காய்ந்ததும்,பிரியாணி இலை நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவற வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,சிறிது உப்பு சேர்த்து மூடி மசிய விடவும்.


தக்காளி சேர்ந்து மசிந்த பின்பு, 1டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

ரெடி செய்த காய்கறிகளை சேர்க்கவும்.

மூடி போட்டு வேக விடவும்.ஓரளவு வெந்த பின்பு உப்பு சரி பார்த்து கொள்ளவும்.ஊறிய அரிசியை ,தாராளமாய் தண்ணீர் கொதிக்க வைத்து, முக்கால் பதத்திற்கு உப்பு தேவைக்கு சேர்த்து வெந்து வடித்து வைக்கவும்.காய் வேகும் நேரத்தில் இதனை செய்தால் அருமையாக வரும். வடித்த உடன் சூட்டோடு தட்ட வேண்டும்.

வடித்த அரிசியை பிரியாணிக்கு ரெடி செய்த காய்கறி கலவையில் போட்டு,எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும் ,பின்பு விரும்பினால் ரெட்,மஞ்சள் கலர் சிறிது தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்.

மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.அடிபிடிக்காமல் இருக்க பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரத்தின் அடியில் வைத்து தம் போடலாம்.அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்து திறந்து பிரட்டவும்.

திறந்து இப்படி ஒரு போல் கலந்து சாதம் உடையாமல் பிரட்டி விடவும்.சிறிது மூடி வைக்கவும்.பின்பு சூடாக பரிமாறவும்.

சுவையான சோயா மிக்ஸ்ட் வெஜிடபிள் பிரியாணி ரெடி. வடித்து தட்டாமல் தண்ணீர் அளந்து வைத்தும் சமைக்கலாம்.ஒரு அளவு அரிசிக்கு ஒன்னரை அளவு தண்ணீர் வைக்கவும்,நான் எப்பவும் வடித்து தட்டி தான் பிரியாணி செய்வது வழக்கம். நான் சீரக சம்பா பச்சை அரிசி உபயோகித்துள்ளேன். அவித்த முட்டையை கட் செய்து கொஞ்சம் சாட் மசாலா தூவி பரிமாறவும்.
வெஜ் பிரியாணி என்றால் தயிர் பச்சடி, பொட்டட்டோ சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்.


-ஆசியா உமர்.

Wednesday, March 23, 2011

ரசப் பொடி,சிம்பிள் ரசம் ,பருப்பு ரசம் & மேலப்பாளையம் புளிச்சாறு & கட்டிப்பருப்பு

ரசப்பொடி தேவையான பொருட்கள் ; மிளகு -1டேபிள்ஸ்பூன் சீரகம் -1டேபிள்ஸ்பூன் மல்லி - 2டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு - 2டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ்பூன் பெருங்காயப்பொடி - 1டீஸ்பூன் மஞ்சள்பொடி - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 கருவேப்பிலை - ஒரு கைப்பிடி மஞ்ச்ள் பொடி,பெருங்காயப்பொடி பொடி தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொறுமையாக லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்த பின்பு அத்துடன் மஞ்சள் பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ரசப்பொடி ரெடி.
ரெடி செய்த ரசப்பொடியை ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் தேவைக்கு உபயோகிக்கலாம்.

சிம்பிளாக ரசம் வைக்க புளியைக் கரைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு தட்டிய பச்சை மிளகாய்,பூண்டு போட்டு வதக்கி,ரசப்பொடி சேர்த்து,கரைத்த புளியை விட்டு,உப்பு சேர்த்து,மல்லி இலை நறுக்கி போட்டு,நுரை கூடியதும் அடுப்பை அணைத்தால் சிம்பிள் ரசம் ரெடி,வேண்டுமானால் சிறிய தக்காளி பிணைந்து விடலாம்.


பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்;

பருப்பு - ஒரு கையளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு - 4பல்

தக்காளி -1

மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்

ரசப்பொடி - 1டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -1

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

கடுகு - அரைஸ்பூன்

மிள்காய்வற்றல் - 1

உப்பு - தேவைக்கு

ஊறிய பருப்பு, நறுக்கிய தக்காளி, 2பல்பூண்டு, மஞ்சள் பொடி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
மிக்ஸியில் ரசப்பொடி, சிறிது கருவேப்பிலை,மல்லி இலைகாம்பு, 2பல் பூண்டு, பச்சை மிளகாய், விரும்பினால் 2சின்ன வெங்காயம் சேர்த்து பரபரவென்று சுற்றி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து மிக்ஸியில் சுற்றியதை போட்டு,கொதிக்க விடவும்.
பருப்பு வெந்து இப்படி காணப்படும்.
புளி இப்படி கொதி வரவும், வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.ரசத்தில் நுரை கூடியவுடன் இறக்கவும்.
சுவையான பருப்பு ரசம் ரெடி. 

மேலப்பாளையம் புளிச்சாறு :


தேவையான பொருட்கள்;

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகு - 1டீஸ்பூன்

சீரகம் - அரைஸ்பூன்

வெந்தயம் - கால்ஸ்பூன்

கடுகு - கால் + அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

சிறிய தக்காளி - 1

சிறிய பச்சை மிளகாய் -1

பூண்டு - 4பல்

சின்ன வெங்காயம் - 2

மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்

எண்ணெய் -3டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

மிளகு சீரகம் அம்மியில் அரைத்து, அத்துடன், வெங்காயம், தக்காளி, பூண்டு, சிறிது மல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய், கால்ஸ்பூன் கடுகு வைத்து தட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், உ.பருப்பு, வற்றல், கருவேப்பிலை தாளித்து, ரசத்திற்கு அரைத்தவற்றை போட்டு,மஞ்சப்பொடியும் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளிக்கரைசல் விடவும்.உப்பு சரியாகப் போடவும்.
ரசம் இப்படி நுரை கூடி கொதி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மேலப்பாளையம் புளிச்சாறு ரெடி.
எங்க ஊரில் வெறுஞ்சோறு, கட்டிப்பருப்பு, புளிச்சாறு,சுருட்டு கறி எல்லார் வீட்டிலும் செய்யக்கூடிய காம்பினேஷன், சூப்பராக இருக்கும்.


எங்க ஊர் கட்டி பருப்பு செய்ய
100கிராம் பருப்புடன்,மிகச்சிறிய தக்காளி,ஒரு சிறிய வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய்,ஒரு டீஸ்பூன் எங்க ஊர் மசாலா,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி இலை சிறிது, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வெந்த பின்பு வழக்கம் போல் கடுகு,வற்றல்,கருவேப்பிலை,வெங்காயம் தாளித்து கொட்டவும். ருசி செமையாக இருக்கும்.
--ஆசியா உமர்.