Tuesday, March 29, 2011

ஓடு ஓடு பத்து கிலோ மீட்டர் ஓடு / Run Run 10 kilometres Run


குளிர் எல்லாம் போய் அழகான தட்பவெட்பநிலை வந்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆகுது, குளிருக்கு பயந்து ப்ளாங்கட் போட்டு மூடி தூங்கிய காலம் மலையேறி போச்சே. ஊரு முழுவதும் போட்ட ஏசியை யாரோ டக்கென்று ஆஃப் செய்த மாதிரி ஒரு ஃபீலிங், இனிமேல் வீட்டில் ஏசி போடாம இருக்க முடியாது.ஏதோ காலையில் எழுந்தோமா,அவரை ஆஃபிஸ் அனுப்பினோம்மா,பிள்ளைகளை லீவில் சமாளிச்சோமா, நாலு பதிவை பார்த்தோமான்னு இருந்த என்னை இப்ப எப்ப பார்த்தாலும்,ஓடு ஓடு பத்து கிலோ மீட்டர் ஓடுன்னு ஒரே தொந்திரவு.


சரின்னு வீட்டை விட்டு வெளியே வந்தால், பக்கத்தில் உள்ள குட்டீஸ் பார்க் அமைதியாக என்னை சறுக்கு விளையாட கூப்பிட்டுச்சு, உள்ளே நுழைந்தால் என்னைக் கண்டவுடன் புறாக்கூட்டம் பறந்து வந்துச்சு, என்னடா இது நாம வெளியே வந்தால்,புறா,மைனா,குருவி,கோழின்னு நம்ம கூட ஒரு கூட்டமே வருது ஆனால் பழக தான் ஒரு ஆளையும் காணோம்னு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.கொஞ்சும் மைனாக்களும், கீச்சுக்குருவிகளும், பக் பக் என்று கூப்பிடும் புறாக்களும் அட்டகாசமாக இருந்துச்சு ஊர்.

வழியில் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் யாரோ ஒரு பெண் புர்காவெல்லாம் போட்டு உட்கார்ந்து சிட் அப்ஸ்,புல் அப்ஸ் எல்லாம் செய்து கிட்டு இருந்தாங்க,மெதுவாக போய் பேச்சு கொடுக்கலாம் என்று ஹலோ சொன்னால் அந்தம்மாவிற்கு சிரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியலை.
நமக்கு இந்த ஊரில் இப்போதைக்கு பேச்சு துணைக்கு,பழக ஆள் கிடைச்ச மாதிரி தான் என்று வந்தால், பக் பக், கொக் கொக் என்று ஒரே சத்தம், அட கோழிக்கூட்டமே என்னை கூப்பிடுது, வரும் வழியில் உள்ள வீட்டில் எட்டி பார்த்தால் ஆந்தையை கண்ட மாதிரி அத்தனை அலறல்,அடிச்சி பிரண்டு ஓடி வந்திட்டேன், கோழிகளுக்கு அவங்களை பிடிச்சி குழம்பாக்கிடுவாளோன்னு பயமோ என்னவோ.
பொன்னாங்கண்ணி கீரை இருந்தால் பறிக்கலாம்னு பையோடு வந்திருந்தேன்,ஆனால் பாருங்க,எனக்கு பயந்தே பொன்னாங்கண்ணிக்கு பதில் இப்ப எங்க பார்த்தாலும் இந்த செடி.


பத்து கிலோ மீட்டர் ஓடச்சொன்னாரே, அட்லீஸ்ட் மூணு கிலோ மீட்டராவது நடக்கனும்னு நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கிட்டே இருக்கேன், ஒருத்தரையும் காணோம். அட மணத்தக்காளி கீரை மாதிரி தெரியுதேன்னு கண்ணை நல்லா திறந்து பார்த்தால், ஆமா அதே தான்,விடலாமா, பொன்னாங்கண்ணி கிடைக்கலைன்னால் என்ன மணத்தக்காளியை நைஸாக ஆட்டையை போட்டுட்டேன்.
கீரை கிடைத்த கையோடு வீட்டிற்கு நடையை கட்டிட்டேன்.இனி கீரையை ஆய்ந்து சமைத்து உங்களுக்கு தரனுமே.
கீரையோட அழகான மணத்தக்காளி அதை தனியாக எடுத்து வச்சிருக்கேன், யாராவது எப்படி இதனை சமைக்கன்னு சொல்லுங்கபா. இல்லாட்டி நானா யோசித்து குட்டையை குழப்பிடுவேன் ஆமா.
ஃப்ரெஷ் கீரை ஆய்ந்து கழுவி எடுத்தாச்சு, இனி நறுக்கி சமைக்க வேண்டியது தான்.


மணத்தக்காளி கீரைக் கடைசல்:

தேவையான பொருட்கள் ;

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு

பெரிய வெங்காயம் - 1

தக்காளி -1

பூண்டு - 4பல் பச்சை மிளகாய் -2

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

சீரகத்தூள் -அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்

பாசிப்பருப்பு - ஒரு கையளவு

உப்பு - தேவைக்கு

தாளிக்க எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்

சீரகம் -அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்

மிளகாய் வற்றல் -2

தேங்காய் துருவல் -2டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கீரை,பாதி வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய்,மஞ்சச்,சீரக,மிளகு தூள்கள்,ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து,அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2விசில் விட்டு வேக விடவும்.
குக்கரை திறந்தால் வெந்து இப்படி இருக்கும்.நன்கு மத்து அல்லது அகப்பை கொண்டு மசித்து கடைந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,உளுத்தம் பருப்பு,வற்றல் தாளிக்கவும்.
நறுக்கிய பாதி வெங்காயம் போட்டு வதக்கவும்.
கடைந்த கீரையில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி வைக்கவும்,தாளித்ததை சேர்க்கவும்.
பின்பு நன்கு கீரையை கலந்து விடவும். உப்பு சரி பார்க்கவும்.லேசாக கசப்பு இருக்கும், ஆனால் மருத்துவ குணமுள்ள

கீரை. சாப்பிட்டே ஆகனும், வாய், வயிற்று புண் வராதாம்.
சுவையான சத்தான மணத்தக்காளி கீரை ரெடி.
இதுக்கு 3கிலோ மீட்டர் ஓடினால் போதாதா?

நான் முன்பு எழுதிய குறுக்கே கோழியும்,முருங்கைக்கீரையும் பார்க்க இங்கே கிளிக்கவும்.


--ஆசியா உமர்.


54 comments:

அமைதிச்சாரல் said...

ஹ்ம்ம்.. எப்பவோ போனஜென்மத்துல பார்த்த மணத்தக்காளி :-))).

வற்றலாக்கித்தான் வத்தக்குழம்பு செய்யணுமா?? பச்சை மணத்தக்காளிகளை வதக்கி செஞ்சுட்டு ரெசிப்பி போடுங்களேன் :-))

Jay said...

awesome post..very interesting..lovely tempting clicks..
Tasty Appetite

சசிகுமார் said...

காலையிலேயே இப்படி பத்து கிலோமீட்டர் ஓட சொல்றீங்களே இது உங்களுக்கே நியாயமா

மகி said...

ஆஹா..ஆசியாக்கா,உங்களுக்கு ப்ரெஷ் மணத்தக்காளி கீரையும் கிடைக்குதா? என்ஜாய்..என்ஜாய்!(என் காதிலே புகையெல்லாம் வரல,நம்புங்க!:) )

கீரையை பொரியல்தான் செய்திருக்கோம்..கடைசல் புதுசா இருக்கு எனக்கு.நாங்க இதை சுக்குட்டி கீரைன்னு சொல்லுவோம்.இந்தக்காயை (பச்சை சுண்டைக்காய் வத்தக்குழம்பு வைப்பது போல) புளிக்குழம்பா வைப்போம்.சூப்பரா இருக்கும்..

மகி said...

வாக்கிங் போனா கீரை கிடைக்குதே உங்க ஊர்ல..சூப்பர்!ஹேப்பி வாக்கிங்!

Exercise gives you endorphins. Endorphins make you happy. Happy people just don't shoot their husbands!! ஹஹ்ஹா!! அடிக்க வராதீங்கோ.இது ஒரு ஃபேமஸ் சினிமா டயலாக்! ;)

அமுதா கிருஷ்ணா said...

கீரை செய்வதற்கு முன்னால் செய்த பில்டப்பு அருமை

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கு மகிழ்ச்சி.நீங்க சொன்னபடியே வதக்கி குழம்பு செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

ஜெ வருகைக்கு மிக்க நன்றி,கருத்திற்கு நன்றி.

asiya omar said...

சசிகுமார் காலை அல்லது மாலை ஓடினால் போச்சு,மெலியனும்னா பத்து கிலோ மீட்டர்,அப்படியே இருக்கனும்னா அட்லீஸ்ட் மூணு கிலோ மீட்டர்,உங்க வசதி சகோ.ஆனால் இந்த ஊரில் வெயிட் போடுவதை கட்டுபடுத்த முடியலை.

கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

மகி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
உங்க டயலாக் நல்லாயிருக்கே.

asiya omar said...

அமுதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

middleclassmadhavi said...

வெஜ் மட்டும் எடுத்துக்கறேன். தாங்க்ஸ்!

ராமலக்ஷ்மி said...

சின்ன வயதில் எங்க தோட்டத்தில் மணத்தக்காளி உண்டு.

ஓடிஓடி பறித்து வந்து எங்களுக்காக சமைத்திருக்கும் கீரை கடைசலுக்கு நன்றி:)!

athira said...

என்னது அங்கெல்லாம் சும்மா பிடுங்கக்கூடியளவுக்கு மணத்தக்காழி கிடைக்குதோ? அவ்வ்வ்வ்வ் கொடுத்து வச்சனீங்கள்.

எந்த இலையானாலும் எனக்கு பிடிக்கும்.... கிடைக்கோணுமே....

மீன் பொரியலோடு ஒரு அவிச்சகோழி முட்டையும் வச்சிருக்கலாமே கர்ர்ர்ர்ர்ர்.

குறிப்பு சூப்பர்.

kavisiva said...

மணத்தக்காளி கீரை ஓசியிலேயே கிடைக்குதா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

மணத்தக்காளிக் காயை தேங்காயுடன் சின்ன வெங்காயம் சீரகம் மிளகாய்வற்றல் மஞ்சள் சேத்து அரைத்து அவியல் மாதிரி செய்வாங்க. ஆனா எனக்குப் புடிக்காது :). உடலுக்கு நல்லதாச்சேன்னு விழுங்குவேன் :(. வேற ஏதாச்சும் நல்ல ரெசிப்பி சிக்கினா சொல்லுங்க :)

Nandini said...

Miga arumaiyana post. Patthu kilometeraaa??? Inga weight reduce panruthu romba kashtama irukku. Manaththakkaliyil puli kuzhambu senchu paarungu. Ungalakku pidikkum.

asiya omar said...

மாதவி வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ராமலஷ்மி கருத்திற்கும்,வருகைக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா வாங்க,இங்கே எல்லா கீரையும் இப்ப மார்க்கெட்டில் கிடைக்கும்,ஆனால் மணத்தக்காளி பார்த்ததில்லை,கிடைத்தவுடன் அப்படியொரு மகிழ்ச்சி,பொரித்த மீனுடன் அவித்த முட்டையோ!ம்ம் சூப்பர்.

asiya omar said...

கவிசிவா ஊரில் இருந்து வந்த செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி,இனி ட்ராஃபிக்கில் ஜக்கார்த்தாவை பார்க்கலாம்.நீங்க சொன்ன முறையும் நல்லாயிருக்கே,அரைத்தால் கொஞ்சம் கசக்குமே.மிக்க நன்றி.

asiya omar said...

நந்தினி வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஆமா,இங்கேயும் முடியலை தான்.

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு பிடித்த கீரை , மணத்தக்காளி காயை வைத்து கீதா ஆக்ஸல் இட்லி சாம்பார் வச்சுஇருந்ததாங்க ரொம்ப நல்லா இருந்த்துச்சு டிரை பண்ணி பாருங்க.

இலா said...

Nice post! There is a mistake in the recipe ;). You have to say " sutta" manathakali keerai 1 kattu :)))
mee esss

S.Menaga said...

தலைப்பை படிச்சு என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்,படிச்சப்புறம் தான் தெரிந்தது.சுவராஸ்யம்..எனக்கு ரொம்ப பிடித்த கீரை...அருமையாக இருக்கு...

காயை குழம்பு அல்லது சாம்பார் வைத்து பாருங்க,ரொம்ப டேஸ்டியாக இருக்கும்...

GEETHA ACHAL said...

சூப்பர்ப்....

எங்க போனாலும் பராவயில்லை..எதாவது ஒரு கீரை உங்களுக்கு கிடைத்துவிடுது..

ஆஹா...கடைசி படம் பார்த்தவுடம் பசிக்குது...

GEETHA ACHAL said...

ஏன் யாரவது தினமும் இவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்று சொன்னாங்களா...

FOOD said...

சமையலுக்கு செம பில்ட் அப்.

vanathy said...

10 கிலோ மீட்டர் ஓடணுமா? என்ன ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ளப் போறீங்களா? மணத்தக்காளி சூப்பர்.

Anonymous said...

உங்கள ஓட சொன்னா கீரை பரிச்சிட்டு வர்ரீங்களா...

நானும் இப்படிதான் எடையை குறைக்க நாளைக்கு நடக்கனும் நாளைக்கு நடக்கனும்னு நினைப்பேன் ஆனால் இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை.

Gopi Ramamoorthy said...

மணத்தக்காளி லேசாக் கசக்கும்:-)

எம் அப்துல் காதர் said...

கதை சொல்லி சாப்பிட வைக்கிறதுன்னா இதுதானா?? எங்களை எல்லாம் சின்ன பிள்ளை ஆக்கிட்டீங்க!! அருமை!!

Kanchana Radhakrishnan said...

காயை வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காயோடு சேர்த்து சாம்பார் செய்யலாம்.
அல்லது மணத்தக்காளி காயுடன் தயிர்,உப்பு,மிளகுதூள் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அப்படியே சாப்பிடலாம்.

எல் கே said...

பார்க்கவே நல்லா இருக்கு ,. நன்றி சகோ

asiya omar said...

சாருஸ்ரீ வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

இலா கருத்திற்கு மகிழ்ச்சி.சுட்ட கீரைன்னால் ஊதி ஊதி தானே சாப்பிடனும்.சுட்ட நாவற்பழம்(திருவிளையாடல் தான்)நினைவு வந்து விட்டது.

asiya omar said...

மேனகா வருகைக்கு மகிழ்ச்சி.நிச்சயம் குழம்பு வச்சிட்டு போடுகிறேன்.

கீதா ஆச்சல் 10 கிலோ மீட்டரை ஒரேடியாக ஓடனும்னு தேவையில்லை.ஒரு நாளில் பிரித்து கொள்ளலாம்.கல்ஃப் நியுஸில் 124 கிலோ இருந்த ஒருவர் டயட் சாப்பாட்டோடு தினமும் காலை 5 கிலோ மீட்டர் மாலை 5 கிலோ மீட்டர் ஒடினாராம்,ஒரு வருடத்தில் 80 கிலோவாகி விட்டாராம்.போகும் முன்பு வாட்டர் மெலான அல்லது வெள்ளரி அரை மணி நேரம் முன்பு ஒரு பவுலில் எடுத்து கொண்டால் களைப்பு தெரியாமல் இருக்குமாம்.

asiya omar said...

ஃபுட் வருகைக்கு மிக்க நன்றி.

வானதி எனக்கு ஒரு 10 கிலோ எடை குறையனும்.50 kg தாஜ்மஹால் ஆக ஆசை,அதுக்கே சான்ஸே இல்லை,கூடாமல் இருந்தால் சரி.நான் ஓலிம்பிக்கில் ஓடினால் அவ்வளவு தான்...கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மஹாவிஜய் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

சகோ.கோபி மணத்தக்காளி கசப்பு என்றால் உங்களுக்கு அப்ப்டியொரு மகிழ்ச்சி.வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

காஞ்சனா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சகோ.எல்.கே,கருத்திற்கு மகிழ்ச்சி.

அன்னு said...

//கோழிகளுக்கு அவங்களை பிடிச்சி குழம்பாக்கிடுவாளோன்னு பயமோ என்னவோ. //
கீரைய கண்டாலே விட மாட்டேங்கறீங்க. பின்ன கோழிய பிடிச்சு எப்படி உறிப்பதுன்னு ஒரு வீடியோ பதிவு போட்டுட்டீங்கன்னா...ஹெ ஹெ...அதான் கோழிகள் உயிரை காப்பதற்காக ஓடின...ஓடின... வீட்டின் ஓரத்திற்கே ஓடின... ஹெ ஹெ :))

10 கிமீ ஓடச் சொன்னால் 3 கிமீ மட்டுமெ ஹாயா கேமராவோட நடந்து வந்திட்டு, மீனும் கீரையுமா கட்டறீங்க. தேறிடும் உடம்பு!!
ஹெ ஹெ ஹெ

(சாரிக்கா.. செம பிஸி. எங்கயுமே நிதானமா எழுதும் அளவிற்கு டைம் இல்லை. அதேன் இவ்வளவு லேட்டு )

ஹேமா said...

இங்க எங்க மணத்தக்காளி.10 கி.மீ ஓடினால் கொஞ்சம் ....றோட்டில ஒரு குப்பைகூட இல்லை !

மணத்தக்காளி இலையோடு தேங்காய், செத்தல்மிளகாய்,கடலைப்பருப்பு வதக்கி் உள்ளியும் சேர்த்து ஊரில் சம்பல் செய்வார்கள் !

இளம் தூயவன் said...

அதாவது கடைசியா இறங்கிய காரியத்தை முடிக்கவில்லை.

Chitra said...

அப்படியே அந்த தட்டை எனக்கு அனுப்பிடுங்க.. கீரை பருப்பு, மீன் வறுவல் .... வேறு என்ன வேண்டும்? ஆங் ...அப்பளம். போதுமே!

asiya omar said...

அன்னு வாங்க,வருகைக்கு மகிழ்ச்சி,கருத்திற்கு நன்றி.

ஹேமா,உங்க செய்முறையும் சூப்பர்,இனி செய்து பார்க்கிறேன்,மிக்க நன்றி.

asiya omar said...

இளம் தூயவன் இன்னும் எடுத்த காரியத்தை முடிக்க அந்த ஆர்வம் வரமாட்டேங்கிறது,எப்பவும் இதில் உட்கார்ந்ததால் வந்த பிரச்சனை.


சித்ரா வாங்க,ஆமாம் தினமும் அப்பளம் உண்டு,அதை ஏன் கேட்கறீங்க.கருத்திற்கு மகிழ்ச்சி சித்ரா.

தோழி பிரஷா said...

அருமை ...

மாதேவி said...

ஆசியா!
காயை வதக்கி குழம்பு வைக்கலாம்.

சட்னி முன்னர் பதிவிட்டுள்ளேன்.

asiya omar said...

தோழி பிரஷா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மாதேவி வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி,நன்றி.

Krishnaveni said...

super healthy keerai recipe, nice pictures, great

angelin said...

மணதக்காளி எல்லாம் கண்ணால் பார்த்து வருஷ கணக்காகுது
அந்த செடியில் கருப்பா பழம் எதுவுமில்லையா .அந்த பழத்தை அப்டியே சாப்பிடலாம்.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,உங்களுக்காக எனது நினைவாக ஒரு சிறிய சான்றிதழை வழங்கியுள்ளேன்.
முடிந்த போது எனது இல்லம் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Lakshmi said...

உங்க மார்னிங்க் வாக்கும் அருமை போனசா மணத்தங்காளி குறிப்பும் அருமை.

செ.சரவணக்குமார் said...

அடடா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? மார்னிங் வாக் போய்க்கிட்டே சுவையா ஒரு பதிவைக் கொடுத்திட்டீங்களே சகோதரி.

மணத்தக்காளி.. சிம்ப்ளி சூப்பர்ப்.

asiya omar said...

கிருஷ்ணவேணி மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.அவார்ட் பெற்றுக்கொள்கிறேன்,மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சரவணக்குமார் வாங்க,நலமா?கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

சி.பி.செந்தில்குமார் said...

>>,ஓடு ஓடு பத்து கிலோ மீட்டர் ஓடுன்னு ஒரே தொந்திரவு.

மேக்சிமம் 4 கிமீ தான் ஓடனும்...


டைட்டிலைப்பார்த்ததும் ஜாகிங்க் பற்றின கட்டுரைன்னு பார்த்தா உங்க ட்ரேட் மார்க் சமையலுக்கு வந்துட்டீங்களே.. ம் ம்