Friday, September 30, 2011

மேலப்பாளையம்.


எங்க ஊரு நல்ல ஊரு - தொடர் பதிவுமே 11 ஆம் தேதி கொஞ்சம் பிஸின்னு போய்விட்டு கொஞ்சம் நீண்ட இடைவெளிக்கு பின்பு செப்டம்பர் 5ஆம் தேதி திரும்பி வந்தேன், எனவே நிறையவே திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் இணையம் தந்த இனிய தோழி ஸாதிகா அழைத்த தொடர்பதிவை எழுத வேண்டிய கடமை. ஆஹா ! சித்ரா கிருஷ்ணாவும் இதே தொடர் பதிவிற்கு அழைச்சிருக்காங்க ! கொஞ்சம் சோம்பல் தான் தாமதத்திற்கு காரணம். போதும் போதும் , மேட்டருக்கு வாம்மேன்னு யாரோ குரல் கொடுப்பது தெரியுது.

எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருநெல்வேலிச் சீமையில் அமைந்திருக்கின்ற முக்கியமான ஊர்களில் ஒன்றான மேன்மை மிகு மேலப்பாளயம் தாங்க எங்கள் ஊர்.

முன்னேறத் துடிக்கும் மக்கள் நிறைந்த ஊர் . எல்லாம் வல்ல இறைவன் எம் ஊருக்கும் மக்களுக்கும் சகலவித அருட்கொடைகளையும் வழங்கி அருள்வானாக!

எங்கள் ஊர் திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு அங்கமாக உள்ளது. கூகிள் மேப்பில் பார்த்தால் முயல் தலை அல்லது மான் தலை போல் காட்சியளிக்கும். 2x2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் மேல் மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஊர். தமிழ் நாட்டில் இஸ்லாமிய ஜனத்தொகை அதிகம் கொண்ட ஊர் என்றும் சொல்லலாம். 300 வருட வரலாற்று உண்மைகளைக் கொண்டுள்ள மிகப் பழமையான ஊர். இது பற்றிய தகவல்களை எங்கள் ஊர் புலவர்களுள் ஒருவரான த.மு.சா. காஜாமுகைதீன் அவர்கள் திரட்டி வருகிறார்கள். வெளிவரும் நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்தும் மற்றும் டவுண், பாளயங்கோட்டை - யிலிருந்தும் கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர், தொலைவில் தான் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. 10 ஆம் நம்பர் பஸ்,பாளை பஸ் நிலையம், ஜங்ஷனில் இருந்தும் 22 -ஆம் நம்பர் பஸ் டவுனில் இருந்தும் அடிக்கடி வந்து போகும் வசதி கொண்ட ஊர். திருநெல்வேலியைச் சுற்றி பரந்து ஓடும் தாமிரபரணியின் செழிப்பை எம்மூரிலும் காணலாம். ஒவ்வொரு தெருவின் முடிவிலும் பாளயங் கால்வாய் தொட்டு செல்லும். அந்த வாய்க்காலில் தான் நாங்கள் கும்மாளமாய் நீச்சல் அடித்து பழகியிருக்கிறோம். 1990 வரையிலும் ஊரில் பெரும்பாலும் அனைவரும் வாய்க்காலையும், ஆற்றையும் தான் குளிக்க, துணிதுவைக்க, வீட்டுக்கு தேவையான தண்ணீர் எடுக்க உபயோகித்து வந்தோம். தற்போதுள்ள தண்ணீர் சுத்தமில்லாததால் யாரும் பயன்படுத்தவில்லை. எம் ஊரைச் சுற்றிய வயல்வெளிகளுக்கு இந்தக் வாய்க்காலே ஆதாரம்.

எங்கள் ஊரில் செவ்வாய்க் கிழமை நடக்கும் சந்தை சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். ஆடு, மாடு, கோழி போன்றவைகளை வாங்க,விற்க என்று உள்ளூர்,வெளியூர் கூட்டத்தால், சந்தையன்று மேலப்பாளையமே களை கட்டி விடும். மற்றும் உழவர் சந்தையும் உண்டு, நியாய விலையில் புத்தம் புதிதாய் காய்கறிகள் தினமும் விற்பனைக்கு வருகிறது. தற்சமயம் நடையின் முக்கியத்துவம் அறிந்த மக்கள்,பெண்கள் உட்பட, அதிகாலை கூட்டம் கூட்டமாக நடந்து சென்று காய்கறி வாங்கி வரும் அழகு நான் ரசித்த காட்சிகளுள் ஒன்று.

ஊரின் மையத்தில் இறைச்சி மார்க்கெட், மீன் மார்க்கெட்டில் வியாபாரம் மிகப் பலமாய் நடக்கும், நெல்லை ஜங்ஷன், டவுண். பாளையங்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து எங்க ஊர் மார்க்கெட்டிற்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம். மேலப்பாளயம் நெருக்கடியான ஜனத்தொகை கொண்ட ஊர் என்பதால், ஊர் கடைத்தெருவில் உள்ள ஆசாத் ரோடு எப்பவும் ஜே ஜே என்று இருக்கும். ஊரிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும் திருமண மற்றும் பண்டிகைக்கால விஷேச நாட்களுக்கு துணிமணிகள், பாத்திர பண்டங்கள் வாங்க பக்கத்தில் உள்ள நெல்லை டவுண், ஜங்ஷனுக்கு சென்று வருவதுண்டு. ஊரைச்சுற்றி சில கிலோமீட்டர் தொலைவில் சுற்றுலாத்தளங்கள் நிறைய உண்டு.

எங்கள் ஊரும் கல்வி வளர்ச்சியில் அதீத முன்னேற்றம் அடைந்துள்ளது. பழமையான முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி, ரஹ்மானிய்யா மேல்நிலைப்பள்ளி, கோல்டன் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி,காயிதே மில்லத் மாநகராட்சிப் பள்ளி, பெண்களுக்கான தனி மேல்நிலப்பள்ளி, அன்னை ஹாஜரா பெண்கள் கல்லூரி, ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி அரபி மதரஸாக்கள் என்று கல்வியில் சில அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளது. பெண்களுக்கான கல்லூரி ஆரம்பித்த பின்பு ஊரில் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதை நிச்சயம் மகிழ்ச்சியாக குறிப்பிடவேண்டும். இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், ப்ளஸ் 2தேர்வில் நான்காம் இடத்தையும் எம் ஊர் மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி தென்னகத்தின் ஆக்ஸ்போர்டான பாளையங்கோட்டை எம்மூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளதால் அங்கு மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, பழமை வாய்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இது தவிர தடுக்கி விழுந்தால் நல்ல கட்டுக்கோப்புள்ள தனியார் கல்லூரிகளின் அணிவகுப்பு வேறு என்று அனைத்து கல்வி வசதியும் அமைந்துள்ளது.

ஊர் மக்கள் பழங்காலம் தொட்டு ஆண்கள் லுங்கி, சட்டை, துண்டும், பெண்களூம் கூட லுங்கியும் துப்பட்டவும் அதிகம் உடுத்தி வந்தனர். அந்தக்காலத்தில் கொஞ்சம் நாகரீகமானவங்களை அங்குமிங்கும் சேலையில் பார்க்கலாம். பெண்கள் சேலையணிந்து முக்காடு போடும் முறை தான் எனக்கு தெரிந்து எங்க ஊரில் ரொம்ப நாளாய் இருந்தது, இப்ப அரபு நாடுகளுக்கு ஆண்கள் போய் வந்த பின்பு கருப்பு புர்கா போடும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் உள்ளூரிலேயே சம்பந்தம் செய்து வந்தனர், இந்த தலைமுறையில் தான் சிறிது சிறிதாக வெளியூர் பக்கம் எட்டிப் பார்க்க தொடங்கியிருக்கின்றனர் என்றாலும் பெரும்பாலும் வெளியூர் சம்பந்தத்தை விரும்புவதில்லை. ஊரிலேயே அம்மா வீடு, மாப்பிள்ளை வீடு என்று மாறி மாறி இருந்து சுகம் கண்டு விட்டதாலோ என்னவோ! ஊரிலேயே சம்பந்தம் செய்வதால் ஒரு சின்ன விஷேசம் என்றாலும் விருந்து பெரிய அளவாகத்தான் இருக்கும். எங்க ஊரில் நாளொன்றுக்கு சில ஆயிரக்கணக்கில் கிலோ இறைச்சி விற்று தீர்வதாக தகவல் சொல்கிறது. எங்க ஊர் மக்கள் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் அல்ல.

உணவு வகைகளில் பெரும்பாலும் அரிசியை அடிப்படையாக வைத்து செய்யும் பதார்த்தங்களான அரிசி மாவு ரொட்டி, புட்டு, கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் காரம்) இடியாப்பம், தக்கடி, சீனிப்பணியாரம், மடக்கு பணியாரம்,ஓட்டு மாவு மற்ற வகைகள் பார்க்கும் பொழுது கோதுமைப் பணியாரம், சேமியா பிரியாணி, மருந்து சோறு, தேங்காய்ச்சோறு, நெய் சோறு, பிரியாணி, வெறுஞ்சோறு கறி கத்திரிக்காய் ஆணம் இவையும் அடங்கும். பணியாரம் வகைகளை ஆர்டரின் பேரில் வாங்கி சீராகக் கொடுப்பதும் வழக்கம். நெல்லையின் பெயரைச் சொல்லும் அல்வாக் கடைகள் எங்க ஊரிலும் உண்டு. முகைதீன் ஸ்டோர், சீனி லாலா ஸ்வீட்ஸ் பிரசித்தம்.

ஆடம்பரமில்லாத மிக எளிமையான ஊர் தான் எங்கள் ஊர். எம்மூர் மக்கள் முந்தைய காலத்தில் முக்கியமாக நிழக்கிழார்களாக இருந்து வந்தனர், நெல்லையை சுற்றியுள்ள பல பல இடங்களை வளைத்து போட்டிருந்தனர், படிப்பறிவில்லாததால் முறையான பத்திரம், பாதுகாப்பு அவசியம் தெரியாமல் அத்தனையும் கையை விட்டு போனதாக தகவல் சொல்கிறது. 1970ஆம் ஆண்டு வரையிலும் நெசவுத் தொழில் பிரதானமாக இருந்தது, நெசவு செய்து இலங்கை,பர்மா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளாகவும் இருந்து வந்தனர். நெசவு நலிவடைந்த பிறகு பீடித்தொழில் பிரதானமாக உள்ளது. பலவிதமான வணிகத்தில் ஈடுபட்டும் வந்த எம் மக்கள் இப்பொழுது உள்ள தலைமுறையில் உள்நாடு, வெளிநாடு என்று படித்து வேலையில் அமர்ந்து முன்னேறி வருகின்றனர்.

திருமணத்தை பெரும்பாலும் வீட்டு முன்பாக பந்தல் போட்டும் அல்லது பள்ளிவாயில்களிலும் நிக்காஹ்வை நடத்திவிட்டு பெண்வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை பெண்ணிற்கு தாலி கட்டி அழைத்து வருவது தான் வழக்கத்தில் உள்ளது, இரு குடும்பமும் அவரவர்கள் வசதிக்கு தக்கவாறு தனித்தனியாக விருந்து வைத்துக்கொள்வர். களத்தில் (பெரிய தட்டில் மூன்று அல்லது நான்கு அமர்ந்து சாப்பிடுவது) வைத்து சாப்பாடு பரிமாறுவது தான் ஊர் பழக்கம். வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கு தனியாக இலைச் சாப்பாட்டிற்கோ அல்லது தனித்தட்டிலோ ஏற்பாடு செய்து விடுவார்கள்.

நூற்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தெருக்கள் கொண்ட ஊர் ஆதலால், அதற்கு தகுந்தபடி பள்ளிவாயில்களும் இருக்கின்றன. வீடுகள் பொதுச்சுவருடன் அடுத்தடுத்து இருக்கும். தெருவிலும் ஊர்த்தலைவர்கள் உண்டு, ஊர்ப்பஞ்சாயத்து மூலம் குடும்ப பிரச்சனைகள் மற்றும் சமூகப்பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படுகிறது. காவல் நிலையம் வரை மக்கள் செல்வது அரிது. பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தினரே இருந்து வந்தாலும் மற்ற சமூகத்தினரும் அங்கங்கு வசித்து வருகின்றனர். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள், தவிர தர்காக்களில் கந்தூரிகள், கொடியேற்றம் விஷேசமாக கொண்டாடுவதுண்டு. இது தவிர மற்ற மதப்பண்டிகைகளும் வேறுபாடின்றி எம்மூரிலும் களைகட்டும். ஊரின் சிறப்பாக ஊர் கந்தூரி கொண்டாடுவதை சொல்லலாம், வருடத்திற்கு இரு முறை ஊர் முழுவதும் அனைத்து தெருக்களிலும் ஒன்று கூடி சேர்ந்து சோறு ஆக்கி பகிர்ந்து உண்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியது.

இது எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற மினரா. நாகூர் ஆண்டவர் தர்கா (மீரா பள்ளிவாசல்) மினரா அமைந்திருக்கிற இடத்தில் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஷாகுல் ஹமீது ஆண்டவர்கள் ( நாகூர் ஆண்டவர்கள்) வந்து தங்கியிருந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. இந்தத் தர்காவில் இரட்டை யானைக்கொடி மிகவும் கொண்டாட்டமாக வருடந்தோறும் எடுக்கப்படும்.

கீழே காணப்படும் பாளயங் கால்வாய் தான் ஊரின் அனைத்து நீர் செலவிற்கும் ஆதாரமாக இருந்தது.


காயிதே மில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, இது எங்கள் தெருக்கள் அமைந்திருக்கும் பகுதியில் ஜின்னாஹ் திடலை அடுத்து உள்ளது.
பழமையான முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி.

மேலப்பாளையம் பேருந்து நிலையம்.

அரசு மருத்துவமனை. பேருந்து நிலையத்தின் மறுபுறத்தில் அமைந்திருக்கும்,ஆஸ்பத்திரி ஸ்டாப் என்று கூட பேருந்து நிலையத்தை சொல்வதுண்டு.

எங்கள் பகுதியின் நவாப் குத்பா பள்ளிவாசல். இன்னும் ஏகப்பட்ட பள்ளிவாசல்கள் உண்டு.

ஜின்னாதிடல் என்றழைக்கப்படும் இடம் எங்கள் பகுதியில்.

மேலப்பாளையம் பஜார்.

ஒரு டவுண் பஸ் ஊருக்குள் வந்தால் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடும்.மதியம் கடைகளை அடைத்து விட்டு சாப்பிடப்போன நேரம், இல்லாட்டி இப்படி ஆவென்று இருக்காது.

எங்கள் ஊரில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரயில் பாதை. எங்கள் தெருவில் இருந்து நேராக வயல்களை கடந்து நடந்து சென்றால் ஆற்றின் இந்தப்பகுதி வரும், பாலத்திற்கு அடியில் குளித்து அனுபவித்த காலம் நினைவிற்கு வருகிறது, பாலத்தில் மீது ஏறி ரயில் வரும் சமயம் சைடில் இருக்கும் ஒதுங்கி நிற்க அமைத்திருக்கும் சின்ன இரும்புக் கம்பிகளான பெட்டியில் நின்று கொண்டு இரயில் பாலத்தை கடக்கும் வரை தட தடக்கும் பாலத்தோடு பட படக்கும் நெஞ்சையும் பிடித்து கொண்டு த்ரில்லாக நின்றதுண்டு. கீழே பார்த்தால் தலைச்சுற்றும். பாலத்திற்கு அடியே விற்கும் வெள்ளரிப்பிஞ்சுகள் அசாத்திய சுவையுடன் இருக்கும். இதெல்லாம் என் சிறு வயதுப் பிராயத்தில்.

இந்தப்படத்தை கிளிக் செய்து பாருங்க,வாத்துக்கூட்டம் வரிசையாக நீந்தி செல்வதை ரசிக்கலாம். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் பொழுது வாய்க்கால் வழியாக வயலுக்கு தண்ணீர் பாயும். இது எங்க வாப்பா வீட்டு ரோட்டடி வயல்.

சுற்றி சுற்றி ஆறு தாங்க நினைவுக்கு வருது, என்ன செய்ய ! காலை சுபூஹ் தொழுவிட்டு கருக்கலில் ஆற்றுக்கு வயல் வழியாய் நடந்து சென்று ஆனந்தமாய் குளித்து வந்த காலமது.

இதெல்லாம் எங்க ஊர் நெற்பயிரு தான், தாமிரபரணியின் தண்ணீரில் செழித்து வளர்ந்திருக்கு.மூணு போகம் விளையும் பூமி, இரண்டு போகம் நெல்லு, ஒரு போகம் பயறு (உளுந்து, பாசிப்பயறு)
இன்னும் சொல்ல எத்தனையோ உள்ள போதிலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...முடிந்தால் நிச்சயம் பின்பு பகிர்வேன்.ப்ளாக்கில் களச்சாப்பாடு பற்றியும், ஊர்க்கந்தூரி பற்றியும் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.


இது என் மாமா அவர்கள் எடுத்த அந்தக் காலப் புகைப்படம்.

சமைத்து அசத்தலாம்னு பெயரை வச்சிட்டு சும்மா எப்படி அனுப்புவது, இது எங்கள் ஊர் ஸ்பெஷல் வட்டிலாப்பம், ஊரில் இருக்கும் பொழுது மேலப்பாளையத்து பக்குவத்தில் செய்தது, ரொம்ப எளிமையாக செய்யக்கூடியது. குறிப்பு மெதுவாக வெளியிடுறேன். வட்டிலாப்பம் சுவைக்கத் தவறாதீர்கள். (கூட இடியாப்பம் அல்லது தோசை இருந்தால் சூப்பராக இருக்குமேன்னு யாரோ சொலவது போல் இருக்கு)
இது என் முன்னூறாவது பதிவு.

படங்கள் உதவி : என் அக்கா மகன் சலீம் யூசுஃப். மிக்க நன்றி !..

-ஆசியா உமர்.

45 comments:

மகி said...

ada,naanthaan 1st comment-a? :)

super post asiyakkaa! thaamirabarani super-a irukku!:)

ஸாதிகா said...

அட தோழி லேட்டா தொடர்பதிவை எழுதினாலும் மேலப்பாளையத்திற்கு என்னை நேரில் அழித்து சென்று சுற்றி காண்பித்ததைப்போன்றதொரு பிரம்மை.உங்களுக்கே உரித்தான எளிமையான நடையில் அழகிய வர்ணனை.நன்றி தோழி.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் ஊர் பற்றி நிறைய தகவல்களோடும் படங்களோடும் பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோ..

தொடர்ந்து எழுதுங்கள்...

angelin said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசியா .எங்களை மேலப்பாளையதுக்கு சுற்றுலா அழைத்து சென்றதுக்கும் நன்றி .
எல்லாத்துக்கும் மேலே வட்டிலாப்பதையும் தந்து மறக்க முடியாதஅனுபவம் .வாழ்த்துக்கள் .

S.Menaga said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா!!உங்களுக்கே உரித்தான எழுத்து நடையில் அழகா சொல்லிருக்கீங்கள்..படங்கள் மிக அழகு....

Rathnavel said...

மேலப்பளையத்தைப் பற்றிய அருமையான பதிவு.
முழு விபரங்களும் அற்புதமாக கொடுத்திருக்கிறீர்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். தலைப்பு உங்கள் ஊர் பெயரையே கொடுத்திருக்கலாம்.
வாழ்த்துக்கள் அம்மா.

Mohamed G said...

ஊருக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்.இனிமையான பதிவு.

asiya omar said...

மகி முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

தோழி ஸாதிகா வந்திட்டீங்களா? உங்கள் அழைப்பிற்கிணங்கி ஒரு வழியாக எழுதி முடித்துவிட்டேன்..மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஏஞ்சலின் வாங்க,வாழ்த்திற்கு நன்றி.வட்டிலாப்பம் பிடிச்சிருக்கா? மிக்க மகிழ்ச்சி.

மேனகா வருகைக்கும் அழகிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ரத்தினவேல் ஐயா வருகைக்கு மகிழ்ச்சி.தலைப்பை ஊர் பெயராகவே மாற்றி கொடுத்து விட்டேன்.மிக்க நன்றி.


முஹம்மது உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

athira said...

அடடா தொடர்ப்பதிவு எழுத்தத் தொடங்கியாச்சோ ஆசியா?..

ஊர்ர்ப்பதிவு நன்றாக இருக்கு படங்களோடு கலக்கிட்டீங்க.

athira said...

300 ஆவதாஆஆஆஆஆஆஆ?:)) கண்படப்போகுது.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

உங்களுக்கே உரித்தான எழுத்து நடை.

படங்கள் அழகு.

Jaleela Kamal said...

ஆசியா 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
மேலும் பல 100 படைப்புகள் படைகக்வும் வாழ்த்துக்கள்.


மேலபாளையம் எங்க உம்மா பிறந்த ஊர், ஆனால் இதுவரை ஒரே ஒரு முறை தான் போயிருக்கேன்.ஆனால் விபரம் அறிந்ததில்லை

மற்ற பழக்க வழக்கங்கள் சாப்பாடு வகைகள் எல்லாம் இதே தான்.

ஆனால் ரொம்ப விளக்கமாக இங்கு ட்தெரிந்து கொண்டேன்ன்
பகிர்வு அருமை

முத்தரசன் said...

நானும் பக்கத்து ஊருதான்... ஆனா இவ்ளோ சிறப்பு நீங்க சொன்ன பிறகுதான் தெறியுது... நன்றி

மஞ்சுபாஷிணி said...

300 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் ஆசியா.... அடடே நீங்க ஸாதிகாவின் தோழியா....

மேலப்பாளையம் கைப்பிடிச்சு கூட்டிட்டு போய் எல்லா இடமும் சுத்தி காமிச்சு வட்டலாப்பம் கொடுத்தீங்க ரெசிப்பி கொடுக்கலை போங்க நீங்க...

சீக்கிரம் தாங்க.... அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சமீபத்தில் நானும் மேளப்பாளையம் வந்திருந்தேன் உறவினர் வீட்டுக்கு

தெருக்கு தெரு பள்ளிவாசல்கள் இருந்ததை கண்டு எனக்குமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது

மேலும் அழகாக பாசமாக பழகும் மக்கள், அல்வா, மினரல் வாட்டரை தோற்கடிக்கும் நீர் எல்லாமே நெஞ்சில் நீங்காதவை

வை.கோபாலகிருஷ்ணன் said...

300 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

மேலப்பாளையம் அழைத்துப்போய் சுற்றிக்காண்பித்து விட்டீர்கள்.

படங்களும் அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
vgk

asiya omar said...

அதிரா வாங்க,வாங்க வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

தம்பி குமார் கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

முத்தரசன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மஞ்சு உங்கள் அன்பான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.வட்டிலாப்பம் ரெசிப்பி தந்திட்டா போச்சு.வருகைக்கு நன்றி.

ஆமினா வாங்க, வாங்க எங்க ஊருக்கே வரவேற்கிற சந்தோஷம்,ஊருக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி.

asiya omar said...

விஜிகே சார் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மாதேவி said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் ஊர்படங்களுடன் அழகூட்டுகின்றது.

ChitraKrishna said...

அணு அணு-வா ரசித்து எழுதி இருக்கீங்க அக்கா. உங்க ஊர் திருமண முறை, சாப்பாடு, களத்தில் பரிமாறுவது பற்றி எல்லாம் அருமையா சொல்லிடீங்க.... ஒவ்வொரு தெரு கடைசியிலும் பாளயங் கால்வாயா? சூப்பர் தான் போங்க..... அப்புறம் 300 -வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் அக்கா.

கோவை2தில்லி said...

300க்கு வாழ்த்துகள்.

உங்கள் ஊரை அழகாக சுற்றி காண்பித்து விட்டீர்கள்.படங்களும் அழகாக இருந்தது.

asiya omar said...

மாதேவி வாங்க நலமா? கருத்திற்கு மகிழ்ச்சி.

சித்ரா கிருஷ்ணா வருகைக்கும் அன்பான கருத்திற்கும் மகிழ்ச்சி.

கோவை2தில்லி வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் நன்றிபா.

கீதா லட்சுமி said...

Hi i'm follower of ur blog.. all of ur recipes r sooo cool and mouthwatering.. pls tell how to prepare chicken sindhamani recipe..

கீதா லட்சுமி said...

Congratulations for 300th post.. Keep on writing..

எம் அப்துல் காதர் said...

ஊர் பெருமையை வர்ணித்ததோடு படங்களையும் இணைத்து அழகூட்டி அடடா..!!

நினைத்தவுடன் கைக் கட்டிக் கொண்டு வரும் எழுத்துநடை... உங்களுக்கு கை கூடி வரும் இவ்வேளையில் எழுதாமலே யோசித்துக் கொண்டிருப்பதை போல், ஏன் இந்த பாவனை!

300 தொட்ட அசத்திய ஆசியாக்கா, இன்னும் நிறைய எழுத ... வாழ்த்துகள்!!

எம் அப்துல் காதர் said...

//எங்க ஊரில் நாளொன்றுக்கு சில ஆயிரக்கணக்கில் கிலோ இறைச்சி விற்று தீர்வதாக தகவல் சொல்கிறது. //

ம்ம்ம்ம் பார்த்தாலே தெரிகிறது. :-))

// ஆடம்பரமில்லாத மிக எளிமையான ஊர் தான் எங்கள் ஊர். //

நம்பிட்டோம். :-))

எம் அப்துல் காதர் said...

நீங்கள் திருநெல்வேலி தான் ப்ராப்பர் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இனி மேலப்பாளையம் என்றவுடன் நினைவுக்கு வருவது நீங்கள் தான் போல!! :-))

எம் அப்துல் காதர் said...

// வட்டிலாப்பம் ........ (கூட இடியாப்பம் அல்லது தோசை இருந்தால் சூப்பராக இருக்குமேன்னு யாரோ சொலவது போல் இருக்கு) //

அது நானல்ல!! அவுக 'புர்ஜ் டவர்' உச்சியில் தியானமிருப்பதாக 'பூஸ்' வழி செய்திகள் தெரிவிக்கின்றன அவ்வ்வ்வவ்... !!!!!!! :-))

saleemyousuf said...

salaam chachi.... congrats for your 300th post.
very happy that im a part of it...

asiya omar said...

கீதாலட்சுமி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
சிந்தாமணி சிக்கன் இது கொங்கு ஸ்பெஷல் நிச்சயம் கொடுக்கிறேன்.

asiya omar said...

சகோ.அப்துல் காதர், ஆஹா ! இப்பதான் தெரியுமா? ப்ளாக்கிலேயே மேலப்பாளயம் ஸ்பெஷல் என்ற பகுதியே இருக்கே!
என்றாலும் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

வாவ் சலீம் ! அசத்தலாக பல படங்களை இந்த பதிவிற்கு அனுப்பியமைக்கு நன்றி.மகிழ்ச்சி.

Mano Saminathan said...

முன்னூறாவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள் ஆசியா!
உங்க‌ள் ஊர் மேல‌ப்பாளைய‌த்தைப்ப‌ற்றி ரொம்ப‌வும் அனுப‌வித்து அருமையாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்! ம‌ட‌க்கு ப‌ணியார‌ம், ஓட்டு மாவு, சீனிப்ப‌ணியார‌ம்‍ எல்லாம் வித்தியாச‌மான‌ பெய‌ர்களாக‌ இருக்கிற‌‌தே? அவ‌ற்றின் குறிப்புக்க‌ளைப்போட‌லாமே?

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.குறிப்புக்கள் நிச்சயமாக கொடுக்க முயற்சி செய்கிறேன்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Asiya,i'm fro Tirunelveli D.T(nativity Nazareth and Arumuganeri but my parents r staying in Ambai.).Luv ur interesting posts in this yumm blog.Nice to know a fellow blogger frm Tirunelveli.Luv to follow U.

Alina said...

Salam Akka, So good to see u back. Its nice to know about to ur hometown. Lotsa time I came here n found the "coming soon" message and stopped visiting. Nice start again, keep rocking !!!
with luv Alina.

asiya omar said...

my kitchen flavors.

alina

thanks for your visit and lovely comments.

Jay said...

wow...very interesting post...beautiful cliks..:)
Tasty Appetite

asiya omar said...

thanks jay for your visit and the lovely comments.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - மேலப்பாளையம் - பதிவு நன்று - மலரும் நினைவுகளாக படங்களுடன் ( எத்தனை ? நான் எண்ண வில்லை ) - நானும் நான் பொறந்த ஊரைப்பத்தி எழுதி இருக்கேனே - நேரமிருந்தா படியுங்க ......நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

என் வலைத்தளம் - cheenakay.blogspot.com - மலரும் நினைவுகள் என்ற லேபிளில் இருக்கும் - தேடுறது கடினமா இருந்தா சுட்டி மெயில்ல அனுப்பறேன்

smart niyas said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உன்மை அழகான ஊர் ஊரை விட்டு வெளியேர மனசு வரவில்லை வெளிநாடு போனாலும் எங்கள் சின்ந்தனை அனைத்தும் ஊரை நோக்கியே இருக்கிறது

ஊரில் இருப்பது தினமும் பெருநாள் தான்