Thursday, October 27, 2011

முடியலை ஆனால் முடியும்...(சவால் சிறுகதை - 2011)

வராண்டாவில் திடு திடுவென்று ஓடும் சத்தம் கேட்டு, எதற்கும் பயப்படாத ரம்யா கூட அதிர்ந்து விட்டாள்.

படபடக்கும் நெஞ்சை பிடித்து கொண்டு கதவில் பொருத்திய லென்ஸ் வழியாக உற்று நோக்கினாள். வெளியே நிசப்தத்தை தவிர எதையும் பார்க்க முடியவில்லை.

மெதுவாக கதவை திறந்து பார்க்கலாமா என்று யோசித்தவள் தாழ்ப்பாளில் கைவைக்க தானாகவே திறந்து கொண்டது. மூடிய கதவு எப்படி திறந்தது ? என்று குழப்பத்துடன் பக்கத்து படுக்கையை பார்க்க காலியாக இருந்தது, ஏதோ விபரீதம் என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். தோழி சுதாவையும் காணவில்லை. இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியொன்றில் இருவருக்கும் வேலையாதலால் இருவரும் ஒரே ரூமில் தங்கி வேலைக்கு போய் வருகிறார்கள்.

தன்னிடம் கூட சொல்லாமல் இந்த சுதா அர்த்த ராத்திரியில் எங்கே போயிருப்பாள் என்ற கவலை ஆட்டி படைக்க திறந்திருந்த கதவை மூடிவிட்டு செல்போனை எடுத்தாள். சுதாவின் நம்பருக்கு டயல் செய்ய, போனை எடுத்தது ஒரு கனத்த குரல். சுதா தன்னுடன் இருப்பதாகவும், இதைப்பற்றி மூச்சு விட்டால் உன் கதி அதோகதி தான் என்றது, பயத்தில் ரம்யாவிற்கு வியர்த்துக் கொட்டியது.

அந்த மர்ம நபர் வேறு ஒரு நம்பரை கொடுத்து இனி அதற்கு போன் செய்யும் படியும் சுதாவின் நம்பரை தான் செயல் இழக்கச் செய்யப் போவதாகவும் சொல்லி போனை வைத்து விட்டான். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்தாள் ரம்யா.

இந்த செய்தியை எப்படி யாரிடமும் பகிராமல் இருப்பது, ஊரில் இருக்கும் சுதாவின் பெற்றோர் இவளிடம் கேட்டால் என்ன சொல்வது என்று உடனே தன் கார்டியனான எஸ்.பி கோகுலிற்கு செய்தியை தெரிவித்து ரகசியமாக சுதாவை தேடித்தரும்படி தெரிவித்தாள்.

காலையில் விழித்து தன் வேலைகளைப் பார்க்க முடியாமல் தவித்த ரம்யாவிற்கு நிம்மதியே போய்விட்டது.

எஸ்.பி. கோகுலிற்கு போன் செய்து விபரம் கேட்ட பொழுது இரண்டு நாட்களில் எப்படியும் கண்டு பிடித்து விடுவதாகச் சொன்னார்.

ரம்யாவிற்கு தன் மீது உயிரையே வைத்திருக்கும் விஷ்ணுவின் நினைவு வர அவனை தொடர்பு கொண்டு, நடந்த விபரங்களை சொன்னாள். விஷ்ணு படித்துக் கொண்டே போலீஸ் இன்பார்மராகவும் வேலை செய்து வருகிறான், எஸ்.பி. கோகுல் மூலமாத்தான் ரம்யாவிற்கு அறிமுகம், படிப்பு முடிந்தவுடன் ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தான்.

தன் காதலன் விஷ்ணுவிடமும் பொறுப்பை ஒப்புக்கொடுத்து விட்டதால் நிம்மதியாக ஆபிஸ் போய் வந்து கொண்டிருந்தாள், கேட்பவர்களிடம் எல்லாம் சுதா சொந்த ஊர் சென்று இருப்பதாக சொல்லி சமாளித்து வந்தாள்.

விஷ்ணு அடிக்கடி எஸ்.பி. கோகுலை கேஸ் விஷ்யமாக சந்திப்பது வழக்கம், ஆனால் விஷ்ணு எஸ்.பியை எங்கு தேடியும் காணாமல் ஸ்டேஷனில் கேட்க, அவர் லீவில் இருப்பதாக தெரிய வந்தது. இன்பார்மர் வேலை ஆபத்தானது என்றாலும் அவனுக்கு அதில் ஒரு திரில் இருந்தது.

விஷ்ணுவிற்கு தானே துப்பறிந்தால் என்ன என்ற எண்ணம் வர, தனியாக இறங்குவதை விட, தன்னுடைய நண்பர் கிரைம் ப்ரான்ச் ஆபிஸர் குமாரிடம் விபரம் சொல்லி அவருடன் சேர்ந்து தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தான்.

விஷ்ணு ரம்யாவை, மீண்டும் மர்ம நபரின் மொபைலுக்கு அழைக்கும் படி சொல்ல, அந்த மர்ம நபர் கொடுத்த நம்பருக்கு டயல் செய்தாள்.

போனை எடுத்த அந்த மர்ம நபர், இன்னும் இரண்டு நாளில் சுதாவை விடுவித்து விடுவதாகவும் அதுவரை போலீஸ் பக்கம் எட்டிப் பார்த்தால் சுதாவை தீர்த்து விடுவேன் என்ற மிரட்டலோடு போனை துண்டித்து விட்டான்.சுதாவை அந்த மர்ம நபர் எதற்காக கடத்த வேண்டும்,என் சுதாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே, என்று கண்ணீர் மல்க விஷ்ணுவிற்கு போன் செய்தாள் ரம்யா.

விஷ்ணு தன் விசாரணையை ரம்யாவிடமிருந்தே ஆரம்பித்தான், இருவரிடமும் நெருக்கமாக பழகியவர்களைப் பற்றி விசாரித்தான்.ரம்யா சென்னை வந்து கொஞ்ச நாட்களே ஆனதால் தூரத்து சொந்தமான எஸ்.பி.கோகுலையும் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒரு சிலர் மட்டுமே தங்களுக்கு பழக்கம் என்றும் தெரிவித்தாள்.

எஸ்.பி. கோகுலுக்கு இதில் தொடர்பு இருப்பதாக படவே, அவரைப் பற்றி துப்பு துலக்கலாம் என்ற பொழுது அவர் ஊரில் இல்லாதது நினைவில் வர அவருக்கு போன் செய்து விசாரித்தான்,அவர் அவசரப்பட வேண்டாம், ரம்யா இது விஷயமாக தன்னிடம் சொன்னதாகவும். இன்னும் இரண்டு நாள் பொறுக்கும் படியும் சொன்னார். விஷ்ணுவிற்கு எஸ்.பி. கோகுல் மீது சிறு சந்தேகப் பொறி தட்டியது.ஆனால் ஒரு சூப்ரெண்டெண்ட் ஆப் போலீஸ் எப்படி இதில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற குழப்பமும் இருந்தது.மர்ம மனிதனும் எஸ்.பியும் ஒரே போல் இரண்டு நாள் என்று சொல்ல சந்தேகம் வலுத்தது.முதலில் யார் மீது சந்தேகம் ஏற்படுகிறதோ அது என்றுமே விஷ்ணுவை பொறுத்தவரை தவறுவதில்லை.

ரம்யாவிற்கு அந்த மர்ம நபரிடம் இருந்து கால் வர அச்சத்துடன் எடுத்தவளுக்கு, இந்த விஷயமாக இன்ஃபார்மர் விஷ்ணுவுடன் ரம்யா கொண்டிருக்கும் தொடர்பு தனக்கு தெரியும் என்றும், தன் சொல்படி கேட்டால் சுதாவை உயிருடன் மீட்கலாம் என்றும், விஷ்ணுவை குழப்ப தான் சொல்லும் சுதா இருக்கும் இடம் பற்றிய கோர்ட் வேர்டை தெரிவிக்கும் படி சொல்ல, அதனை குறித்துக் கொண்டவள் உடனே விஷ்ணுவிற்கு சொல்லி, அவனை பொறுமையாய் இருக்கும் படியும் வேண்டிக் கொண்டாள்.

இந்த கோர்ட் வேர்டெல்லாம் கண் துடைப்பு என்று விஷ்ணுவிற்கு தெரியும், எனவே சந்தேகம் ஊர்ஜிதமானது, காயை எப்படி நகர்த்தி,எஸ்.பிக்கு தொடர்பு இருக்கிற உண்மையை வெளிக் கொண்டு வருவது என்று யோசிக்க ஆரம்பித்தான். ஒன்றும் அறியாதது போல் ரம்யா தந்த கோர்ட் வேர்டை சிறிய திருத்தத்துடன் வேண்டுமென்றே எஸ்.பி. கோகுலிற்கும் போன் செய்து தெரிவித்தான்.
இன்பார்மர் விஷ்ணு, கிரைம் ப்ரான்ச் ஆபிஸர் குமாருக்கு, சார் எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறீயிட்டை தான் கொடுத்திருக்கிறேன்,கவலை வேண்டாம் என்ற ஒரு மெசேஜையும், எஸ்.பி. கோகுலிற்கு அனுப்பிய கோர்ட் வேர்ட் S W H2 6F நகலையும் உடன் அனுப்பினான்..

கிரைம் குமாருக்கும் எஸ்.பி. கோகுல் மீது ஒரு சந்தேகக்கண் இருந்தது, சுதா ரம்யா இருவருக்கும் நெருக்கமாக அவரைத் தானே தெரியும், அப்படியிருக்க விஷ்ணு ஏன் கோகுலிற்கு கோர்ட் வேர்டை அனுப்ப வேண்டும், எஸ்.பி. கோகுலை குழப்பவே, இந்த கோர்ட் வேர்டை தெரிவித்திருப்பதை போன் மூலம் தெரிவித்தான் இன்பார்மர் விஷ்ணு.

இதற்கிடையில் ரம்யாவும் தனக்கு மனசு சரியில்லை என்றும், ஊர் வரை சென்று வருகிறேன் என்று விஷ்ணுவிடம் சொல்லி விட்டு கிளம்பினாள். மிகவும் அசதியாக இருக்க விஷ்ணுவும் ஓய்வு எடுக்க தன் அறைக்கு சென்றான்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விஷ்ணுவின் போன் அலற, போனில் கிரைம் குமார் தான் சொல்லும் இடத்திற்கு உடனே கிளம்பி வரும்படி சொல்லி விட்டு போனை துண்டித்து விட்டார்.

மனம் கொந்தளிக்க பைக்கை எடுத்துக் கொண்டு, குமார் சொன்ன இடத்திற்கு விரைந்தான் விஷ்ணு, கிரைம் குமார் ஒரு வீட்டின் முன் படபடப்புடன் காத்திருந்தார்.

வீட்டின் கேட் கதவு உட்புறமாக தாழிட்டு இருக்க, இருவரும் சத்தம் வராமல் ஏறி குதித்தனர்.வீட்டு வாயிலை அடைந்ததும் காலிங் பெல்லை அழுத்தலாமா என்று பார்வையாலேயே கேட்ட விஷ்ணுவிடம் சிறிது பொறுக்கும் படி சொன்னார் குமார். உள்ளே இரண்டு ஆண்குரலும் பெண்குரலும் கிசுகிசுப்பாக பேசுவது கேட்டது, ஆண்குரல் எஸ்.பி. தான், ஆனால் இந்த பெண் குரல்,மற்றும் இன்னொரு குரல் மர்ம நபராக இருக்குமோ என்று யோசித்து கொண்டிருக்கையிலேயே வாசல் கதவு திறக்கப்பட்டது, இருவரும் ஓடி சென்று உள்ளே நுழைந்து வெளியே வரவிருந்தவர்களை மீண்டும் உள்ளே தள்ளினர்.விஷ்ணுவிற்கு நம்ப முடியவில்லை, அவர்கள் யாரும் இல்லை, எஸ்.பி. கோகுலும், எஸ்.பியின் மகன் அரவிந்தும், காதலி ரம்யாவும் தான், உள்ளே முனகல் சத்தம் கேட்ட அறையை நோக்கி சென்ற விஷ்ணு ,சுதா மயக்கத்தில் இருப்பதை பார்த்து, குமார் சார், அரவிந்தை அரெஸ்ட் செய்யுங்கள், அவன் தான் குற்றவாளியாக இருக்க முடியும், என்றான்.

கிரைம் குமார் சிரித்த படி எனக்கு முன்பே ரம்யா, சுதாவை காப்பாற்ற முயற்சிப்பாள் என்ற சந்தேகம் இருந்தது, அவள் ஊர் செல்வதாக சொல்லவும் பின் தொடர்ந்தேன், என் கணிப்பு தவறவில்லை, அவள் இங்கு ஒரு பெட்டியுடன் வர, எஸ்.பி கோகுல் வந்து கதவை திறந்தார், உடனே தான் உனக்கு போன் செய்தேன்..

எஸ்.பி.மகன் அரவிந்தையும், ரம்யாவையும் விசாரிப்போம். உண்மையை கக்கி விடுவார்கள் என்றார் கிரைம் குமார் அசால்டாக..

ரம்யா தன் தோழி சுதாவை மீட்கவே இங்கு வந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பின் தொடர்ந்தான் விஷ்ணு.

--ஆசியா உமர்..

குறிப்பு:

சவால் சிறுகதை-2011 போட்டி பற்றிய விபரத்தைக் காண திரு.பரிசல்காரன்,திரு ஆதிமூலகிருஷ்ணன், யுடான்ஸ் ஆகியோரின் பதிவுகளைக் காணலாம்.

மேற்கண்ட படத்தை தந்து கதை எழுத அறிவிச்சிட்டாங்க, நாம என்ன பரம்பரை எழுத்தாளரா? சரி பார்டிசிபேஷன் சர்டிபிகேட்டாவது கிடைக்காதா என்ன? போன வருடமும் கலந்து,விபரம் தெரியாமல் சவால் வரிகளை அடுக்கி எழுதி அந்தக் கதை இப்ப எதுக்கு?

--ஆசியா உமர்..


Monday, October 24, 2011

ஆதாமிண்ட மகன் அபு - என் பார்வையில்..

ஆதாமிண்ட மகன் அபு படத்தை பார்க்கவேண்டும் என்று கொஞ்ச நாட்களாக நினைத்து கொண்டிருந்தேன்,எனது சகோதரர் இந்தப்படத்தைப் பார் என்று அதன் டிவிடியை கொடுக்கும் பொழுது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும், படம் பார்க்கும் பொழுது மேலுள்ள புகைப்படத்தை கிளிக் செய்தேன். முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இருப்பது போல் அமைந்த புகைப்படம் இது.

துபாயில் படத்தின் இயக்குனர் சலீம் அகமது அவர்களுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது எனது அண்ணன் இயக்குநருடன்.

ஆஸ்கார் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சார்பில் படங்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு மலையாள படமான 'ஆதாமிண்ட மகன் அபு' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'
ஆதாமிண்டே மகன் அபு' படத்தின் இயக்குனர் சலீம் அகமது. இப்படம் இந்த ஆண்டு 4 தேசிய விருதுகளை பெற்றது. ஆடுகளத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது நினைவிருக்கலாம்.

ஆதமிண்டே மகன் அபூ படத்தில் நாயகனாக நடித்த சலீம் குமார் சிறந்த தேசிய நடிகராக தேர்வு பெற்று, தனுஷுடன் சேர்த்து விருதளித்துக் கெளரவிக்கப்பட்டார்.இந்தப்படத்தின் இயக்குநர் இந்த கதைக்கான கரு பத்து வருடமாக தன் மனதில் உருபெற்று அது திரைபடமாக உருவானதாக தெரிவித்திருக்கிறார்.


படத்தில் அபூவாக மலையாள காமெடி நடிகர் சலீம் குமாரும்,ஆயிசும்மாவாக ஹிந்தி நடிகை ஸரீனா வஹாபும் நடித்துள்ளனர்.

அபூ,ஆயிசும்மா வயதான தம்பதியர்கள். அபூ அத்தர்(வாசனை திரவியம்) , இஸ்லாமிய புத்தகங்கள,கைமருந்துகளும் நடந்தே சென்று விற்றுவரும் வியாபாரி.ஆயிசும்மா மாடு கன்று வளர்த்தும், அதனின்று பாலைக்கறந்து விற்றும் பணம் ஈட்டி வருகிறார்.அவர்களுக்கு புனித ஹஜ்யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு பல வருடங்களாக பணம் சிறிது சிறிதாக சேமித்து வருகிறார்கள்.அபூவின் நண்பர்கள் உதவி செய்ய தயாராக இருந்தும், அபூ தம்பதியினர் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்கள் வருமானத்தில் சேமித்த பணத்தில் இருந்தே ஹஜ் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.அந்த முயற்சியே கதையாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை இயக்குனர் மிகவும் அழகாக சித்தரித்துள்ளார்.

படம் பாங்கு சத்தத்தோடு ஆரம்பித்து ஹஜ் பெருநாள் காலை தக்பீர் முழக்கத்துடனும், பாங்கு சத்தத்துடன் முடிகிறது.படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இனிமையானவை, இந்த மக்கா மதீனத்தில் பாடலை கேட்டுப்பாருங்க.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவும், இசையும் மிகவும் ரசிக்கும் படியிருக்கும்.

இந்த படத்தின் நாயகர் அபுவைப் போலவே உள்ள தோற்றத்துடன் எங்கள் ஊரில் அத்தர்,பத்தி விற்கும் ஒருவர் இன்னமும் இருந்து வருகிறார்.இந்தப் படத்தை பார்க்கும் பொழுது அவருடைய நினைவு வந்தது. தள்ளாத வயதிலும் நடந்து சென்று வியாபாரம் செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் தான்..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவிருக்கும் என் சகோதரர் ஜனாப்.கலந்தர் குடும்பத்தினருக்கு எங்களின் துவாக்களும் வாழ்த்துக்களும்.

--ஆசியா உமர்.

நன்றி கூகிள்...Sunday, October 23, 2011

சிக்கன் ஃப்ரான்க்ஸ் மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன் ஃப்ரான்க்ஸ் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிள்காய் -1
மல்லி இலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:


முதலில் சிக்கன் ஃப்ரான்க்ஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் போட்டு வேகவைத்து வடித்து கொள்ளவும்.5 நிமிடத்தில் வெந்து விடும்.ஆறியவுடன் சிறிய வட்டமாக கட் செய்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிள்காய், மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு வதக்கவும்.தக்காளி,நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும்.

கட் செய்த சிக்கன் ஃப்ரான்க்சை சேர்க்கவும்.சிக்கன் ப்ரான்க்ஸில் உப்பு இருக்கும்,எனவே உப்பு பார்த்து சேர்க்கவும்.

மஞ்சள்,மிளகாய்,மிளகு,சீரகத் தூள்களை சேர்க்கவும்.பிரட்டி விடவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி போடவும்.

இப்படி பிரட்டியது போல் வரும். நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான சிக்கன் ப்ரான்க்ஸ் மசாலா ரெடி.

இதனை சாதம், குபூஸ், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

எங்க உறவின பேச்சிலர்ஸ் ரூமில் அவசரத்திற்கு இப்படி மசாலா செய்து சாப்பிடுவதாக சொன்னார்கள். நான் என் முறையில் செய்து பார்த்தேன்.பிடித்திருந்தது..சிக்கன் ப்ரான்க்ஸ் வாங்கும் பொழுது பிடித்த குறிப்பிட்ட ப்ராண்ட் வாங்க வேண்டும். நான் சாதியா சிக்கன் ஃப்ரான்க்ஸ் உபயோகித்து செய்திருக்கிறேன்..


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்..

Tuesday, October 18, 2011

ஆட்டுக்கால் பிரியாணி

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - அரைக் கிலோ
ஆட்டுக்கால் - 2 செட் ( 8 எண்ணிக்கை)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)- அரை -   1 டீஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிள்காய் - 4
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் -50 மில்லி
நெய் -50மில்லி
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் -அரை 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன் (விரும்பினால்)
தயிர் - 2 - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

முதலில் சுத்தம் செய்த ஆட்டுக்காலை குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் வேகவைத்து எடுக்கவும்.மூன்று விசில் வந்தவுடன் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவைகளை நறுக்கி வைக்கவும்.

பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் இரண்டு இணுக்கு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சிவற வதக்கவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து சிறிது வேக விடவும்.

நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா,மிளகாய் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.

நன்கு மசிந்ததும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள் சேர்த்து
சிறிது வதக்கவும்.
வதங்கியவற்றுடன் தயிர் 2டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.

நன்றாக பிரட்டி விடவும்,எண்ணெய் தெளிந்து மேலே வரும்.

அரிசி அளவை பொருத்து ஒன்றுக்கு ஒன்றரை அல்லது இரண்டு அளவு தண்ணீர் சேர்க்கவும், வேக வைத்த ஆட்டுக்கலையும் சேர்க்கவும்.அதில் இருக்கும் தண்ணீரையும் கணக்கில் வைக்கவும்.

பிரியாணி மசாலா ,ஆட்டுக்கால் எல்லாம் சேர்ந்து கொதி வரவும், சுத்தம் செய்து கழுவிய அரிசியை சேர்க்கவும்.

உப்பு சரி பார்த்து மூடி விடவும்,தீயை மிதமாக வைக்கவும்,தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைக்கவும். நன்றாக அரிசி வெந்து பிரியாணி ரெடியானவுடன் அடுப்பை அணைக்கவும்.அடி பிடிக்காமல் இருக்க 10 நிமிடம் சிம்மில் அடுப்பை வைக்கும் பொழுது கீழே ஒரு பழைய தோசைக்கல்லை வைக்கலாம்.

சுவையான ஆட்டுக்கால் பிரியாணி ரெடி.ஆட்டுக்கால் பிரியாணி செய்து படம் அனுப்பிய திருமதி.உமாமா கலந்தருக்கு மிக்க நன்றி.
ஆட்டுக்காலின் சுவையிடனும் பிசுபிசுப்புடனும் இருக்கும். புதினா துவையல் , சிப்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.


Tuesday, October 11, 2011

நினைவெல்லாம் காவியம்...


நட்பு குறித்த தொடர் பதிவை எழுத இணையம் தந்த இலங்கைத் தோழி அதிரா அழைப்பு விடுத்திருந்தார். மிக்க நன்றி அதிரா.இவர் எனக்கு அறுசுவை சமையற்தளத்தில் அறிமுகமானவர், எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்ற பழமொழியோடு வலம் வரும் தோழி. அவரின் அன்பான அழைப்பிற்கிணங்கி இத்தொடரை எழுதுகிறேன். இணையத்தில் கடந்த நான்கு வருடமாக எனக்கு நல்ல நட்புகள் பலர் கிடைத்து இருக்கிறார்கள். எல்லோரையும் இத்தருணத்தில் அன்போடு நினைத்துப் பார்க்கிறேன். முடிந்தளவு சுருக்கமாக எழுதுகிறேன்.


என்னுடன் உண்மையான பிரியத்தோடு பழகிய அனைவருமே முக்கியமானவர்கள் தான். என்றாலும் எல்லோருக்கும் உயிர்த்தோழி என்று ஒருத்தர் நிச்சயமாக இருப்பாங்க . அவள் தான் எங்கள் ஊரில் பெண்களில் முதன் முதலாக பொறியியல் கல்லூரி சென்று படித்தவள். இப்ப அவள் பொறியாளராய் அரசாங்கத்துறையில் பணி புரிந்து வருகிறாள். இது நான் எப்பவும் நினைத்து நினைத்து பெருமிதப்படும் விஷயம்.
அந்த வகையில் நட்பு என்று நினைக்கும் பொழுது என் சின்னஞ்சிறு வயது முதல் இன்று வரை மாறா அன்புடன் என்னுடன் பழகி வரும் என் இனிய தோழி தான் முதலில் நினைவிற்கு வருகிறாள். நல்ல நட்பை வாய் விட்டு விவரிக்க முடியாது அதனை அனுபவித்தவர்களுக்கு தான் அருமை தெரியும். நான் அவளுக்கு அள்ளியும் கொடுக்கலை, நுள்ளியும் கொடுக்கலை ஆனாலும் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்ற நட்பு எங்களோடது. இன்றைக்கும் என்னோட உயிர்தோழி யார் என்று கேட்டால் எங்கள் தெருவில் இலகுவாக யாரைக் கேட்டாலும் சொல்லிடுவாங்க. என்னைப் பொருத்தவரை எந்த சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்வது தான் நல்ல நட்புக்கு அறிகுறி.

என்னுடைய பள்ளிப்பருவத்த்தில் கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பகுதி. ஒன்பது முதல் ப்ளஸ் டூ வரை மறு பகுதி. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற பள்ளியில் சேர்த்தாங்க. எட்டாம் வகுப்பு வரை A செக்‌ஷன் தான். அதனால் அதே செக்‌ஷன் மாணவிகள் தான் தொடர்ந்து என்னோடு வருடாவருடம் எட்டு வருடமும் படிச்சாங்க, நீங்க நம்ப மாட்டீங்க, எனக்கென்று சொல்லிக்கொள்ளும் படி எட்டு வகுப்பிலும் நெருக்கமான தோழிகள் கிடையாது, நாங்க உறவினக் குழந்தைகள் ஒன்றாக மாட்டு வண்டியில் பள்ளிக்கு சென்று வந்தோம், வேறு வேறு செக்‌ஷனில் இருந்தாலும் சாப்பிடும் நேரம் நாங்களே ஒரு மரத்தடியில் ஒன்று கூடி சாப்பிட்டு விட்டு பிரிந்து சென்று விடுவோம். என் உயிர்த்தோழியும் அதே பள்ளி ஆதலால் அவள் மட்டுமே எனக்கு தோழியாக இருக்க வேண்டும் என்று நான் யாருடன் ஒட்டி பழகவில்லை போலும். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தாலும் நான் அவளுடன் தெருவிலும் வீட்டிலும் ஒன்று சேர்ந்து விளையாடுவது தான் வழக்கம். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் அவர்கள் வீட்டில் தான்.அவர்கள் வீட்டில் அனைவரும் பெண் குழந்தைகள் என்பதால் எங்க வாப்பாவும் அங்கே போக அனுமதிச்சாங்க. இப்படியிருந்த எங்கள் நட்பிற்கும் பிரிவு வந்தது.

எட்டாம் வகுப்பு முடித்த பிறகு என்னுடைய சகோதரருடன் திருச்சிக்கு சென்று அங்கு அவர் பணியாற்றிய கல்லூரி வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடர்ந்தேன். அங்கு எனக்கு மூன்று தோழிகள் அமைந்தனர். நல்ல பழகினோம். மூவரும் செம லூட்டி. எங்கு பேச்சு போட்டி நடந்தாலும் அங்கெல்லாம் போய் பங்கு கொள்வது வழக்கம். அதில் ஒரு தோழியின் தந்தையார் மாரடைப்பால் எதிர்பாராமல் தவறியதால் படிப்பை பத்தாம் வகுப்பின் பாதியிலேயே நிறுத்தும் படியாகிவிட்டது. தந்தையார் நடத்திய ஊறுகாய் வியாபாரத்தை மூன்று பெண்களில் மூத்த பெண்ணான இவள் பொறுப்பெடுத்து செய்யும் படியாகிவிட்டது. தோழியின் குடும்பத்தினர் அந்நேரத்தில் பெற்ற துயரம் சொல்லி மாளாது. அவள் இன்னமும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளாள்.

ப்ளஸ் 2 வை மூன்று பள்ளிகளில் படித்தேன், அந்த அனுபவத்தை ஒரு தனி தொடராகவே எழுதலாம்.உடல் நலக் குறைவு, பள்ளிக் கூட மாற்றம் என்று கழிந்ததால் யாரிடமும் மிக நெருக்கமாக பழகவில்லை.

மருத்துவம் மற்றும் வேளாண்மைக்கும் சேர்த்து நுழைவுத்தேர்வு எழுதினேன். மருத்துவம் .06 மதிப்பெண் வித்தியாசத்தில் சீட் கைவிட்டுப்போனது. திருச்சியில் சீதாலஷ்மி ராமசாமி கல்லூரியில் சேர்ந்து சும்மா இருக்க வேண்டாம் என்று ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன், அங்கும் யாருடனும் நெருங்கி பழகவில்லை.ஒரு மாதத்தில் ஓப்பன் காம்பெட்டிஷனில் கோவை வேளாண் பலகலைக் கழகத்தில் இடம் கிடைத்தது. அங்கு என் மனதிற்கு நிறைவான நட்பு வட்டம் அமைந்தது.

எங்க செட்டில் அனைவருமே அன்புடன் பழகினோம். A,B,C & D என்று நான்கு பேட்ச். நான் பி பேட்ச். நாகர் கோவிலில் இருந்து வந்த பெண் சி பேட்சில், எனக்கு ஒரு நல்ல தோழியாக அமைந்தாள். அவளும் தற்சமயம் யு.ஏ.இயில் இருப்பதால் தொடர்பில் உள்ளோம்.

ரூம் மேட்ஸ் அனைவருடனுமே பிரியமாக பழகியதால் அனைவருமே தோழிகள் தான் என்றாலும் தோட்டக் கலைத்துறையை சேர்ந்த சேலத்து தோழி மெஸ்ஸில் பழகி தினமும் என்னை மெஸ் வந்து அழைத்து செல்வாள், அவளை எதிர்பார்த்து தான் மெஸ் செல்வேன். அவளின் ஒரே அண்ணன் திருமணத்திற்கு எங்க வீட்டில் அனுமதி வாங்கி சேலத்திற்கு அழைத்து சென்று, என்னை கவனித்த கவனிப்பு இருக்கிறதே, இன்றும் என்னால் மறக்க முடியாது.
அதன் பின்பு கல்லூரி இறுதியாண்டு முடிந்து ஊர் வந்த பின்பு அவள் தொடர்பு விட்டுப் போனது.


மதுரைக்கு TNPSC EXAM எழுத சென்றிருந்த பொழுது 1989 –தில் என் பேட்ச்மேட் சிலரை சந்தித்தேன், அத்துடன் சரி பின்பு யாரையும் பார்க்கவில்லை.

நான் 2000 ஆம் ஆண்டு துபாயில் இருந்த சமயம் தீடீரென்று போன், யாரென்று பார்த்தால் நாகர்கோவில் தோழி தான்.அவள் அபுதாபியில் பணிபுரிவதாயும் எங்கள் ஊர் தோழி ஒருவர் மூலம் நான் இங்கிருப்பது தெரியவந்தது எனவும் சொல்லி அந்த வார வெள்ளியே என்னை பார்க்க வருவதாய் தெரிவித்தாள். குடும்பத்துடன் வந்து என் கையால் சமைத்து சாப்பிட்டு, அந்த நெகிழ்வை சொல்லி முடியாது. இன்னமும் அந்த நட்பு அன்பாய் தொடர்கிறது.


ஆனால் நெருக்கமான சேலத்து தோழியோ என் திருமணத்திற்கும் கூட வரவில்லை. நானும் அப்ப அப்ப நினைப்பதோடு சரி,அப்படியே மறந்து விட்டேன், என் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து என் வீட்டு அட்ரஸிக்கு கடிதம் வந்தது. அவள் என்னை பார்க்க விரும்புவதாயும், என் இருப்பிடத்தை தெரிவிக்கும் படியும் , நாங்கள் அப்பொழுது தூத்துக்குடியில் இருந்தோம், உடனே அங்கு வரும்படி எழுதினேன், கணவர் பெண் குழந்தையுடன் வந்த அவள் என்னுடன் மூன்று நாட்கள் தங்கி ஆனந்தமாக பழைய கதைகளை பேசி தீர்த்தோம். அதன் பின்பு இன்னமும் சந்திக்கவில்லை. அவள் திருச்சியில் இருப்பதாய் தெரிவித்தாள்,வீடு கட்டிக்கொண்டு இருப்பதாயும் வீடு முடிந்து புது அட்ரஸ் தருவதாய் சொன்னாள், பழைய அட்ரஸிற்கு கடிதம் எழுதினேன் பதில் இல்லை, நான் சந்திக்க விரும்பும் தோழி அவள் தான், என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்....

இந்த பாட்டை கேளுங்க, எனக்கு மிகவும் பிடித்த கல்லூரி நட்பை குறிக்கும் பாடல்.

மனசே மனசே மனசில் பாரம்


மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
(மனசே..)

என் வகுப்பு தோழ தோழியர்களை கடந்த 21 வருடங்களாக நான் எங்கும் யாரையும் சந்திக்கவில்லை. நாங்கள் பிரியும் பொழுது ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம், தமிழ் நாட்டில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையங்களில் பணி நிமித்தமாக எப்படியாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பார்த்து கொள்ளலாம் என்று விடைபெற்றோம். நான் தான் பணிக்கே செல்லவில்லையே ! பிறகு எப்படி சந்திப்பதாம்.

கோவையில் பயின்ற அந்த நான்கு வருடம் என் வாழ்வில் வசந்த காலம் எனலாம். நான் யாரையும் மறக்கவில்லை, அது போலவே என்னையும் அவர்கள் நினைவு வைத்திருப்பார்களா? ....

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோன்னு இருக்கு.

--ஆசியா உமர்.

Monday, October 10, 2011

ஃபிஷ் மஞ்சூரியன்/ fish manchurian

தேவையான பொருட்கள் ;

போன்லெஸ் ஃபிஷ் - 300கிராம்
சில்லி பவுடர் - அரை டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் - தேவைக்கு
வெங்காயம் - 1
கொடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பெரிய பல்
சிக்கன் சூப் கியூப் - 1
டொமட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்


நான் இங்கு ஃப்ரோசன் ஒயிட் ஃபிஷ் உபயோகித்து இருக்கிறேன். நன்கு கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். மீனை துண்டுகளாக்கி கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம்,கொடைமிளகாயை சதுரமாகவோ நீள்மாகவோ நறுக்கி கொள்ளவும்.கார்ன்ஃப்லோரை கரைத்து ரெடி செய்து வைக்கவும்.

மீன் துண்டுடன் தேவைக்கு உப்பு,லைம் ஜூஸ், சில்லி பவுடர், மைதா மாவு,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து சிறிது ஊற வைக்கவும்.

ரெடி செய்த மீனை தேவைக்கு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய பூண்டு,இஞ்சி,பச்சை மிள்காய் ஒன்றன் பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.சிறிது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பின் கொடைமிளகாய் சேர்க்கவும்,சூப் கியூப் பொடித்து போடவும். சூப் கியூப்பில் உப்பு இருக்கும். எனவே உப்பு சேர்க்க வேண்டாம். பொரித்த மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.அடுத்து சோயா சாஸ் சேர்க்கவும்.

டொமட்டோ சாஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். கார்ன்ஃப்லோரை ஒரு கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்க விடவும். ரொம்ப திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு கிரேவி திக்கானவுடன் அடுப்பை அணைக்கவும். விரும்பினால் சில்லி கார்லிக் சாஸ் கூட சேர்க்க்லாம். நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

சுவையான ஃபிஷ் மஞ்சூரியன் ரெடி.
நான் எல்லாம் ரெடி செய்து பரிமாறுவதற்குள் சூடாக ரொட்டி சுடச் சுட வாவ் ! மக்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்சு.

--ஆசியா உமர்.