Friday, September 30, 2011

மேலப்பாளையம்.


எங்க ஊரு நல்ல ஊரு - தொடர் பதிவுமே 11 ஆம் தேதி கொஞ்சம் பிஸின்னு போய்விட்டு கொஞ்சம் நீண்ட இடைவெளிக்கு பின்பு செப்டம்பர் 5ஆம் தேதி திரும்பி வந்தேன், எனவே நிறையவே திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் இணையம் தந்த இனிய தோழி ஸாதிகா அழைத்த தொடர்பதிவை எழுத வேண்டிய கடமை. ஆஹா ! சித்ரா கிருஷ்ணாவும் இதே தொடர் பதிவிற்கு அழைச்சிருக்காங்க ! கொஞ்சம் சோம்பல் தான் தாமதத்திற்கு காரணம். போதும் போதும் , மேட்டருக்கு வாம்மேன்னு யாரோ குரல் கொடுப்பது தெரியுது.

எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருநெல்வேலிச் சீமையில் அமைந்திருக்கின்ற முக்கியமான ஊர்களில் ஒன்றான மேன்மை மிகு மேலப்பாளயம் தாங்க எங்கள் ஊர்.

முன்னேறத் துடிக்கும் மக்கள் நிறைந்த ஊர் . எல்லாம் வல்ல இறைவன் எம் ஊருக்கும் மக்களுக்கும் சகலவித அருட்கொடைகளையும் வழங்கி அருள்வானாக!

எங்கள் ஊர் திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு அங்கமாக உள்ளது. கூகிள் மேப்பில் பார்த்தால் முயல் தலை அல்லது மான் தலை போல் காட்சியளிக்கும். 2x2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் மேல் மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஊர். தமிழ் நாட்டில் இஸ்லாமிய ஜனத்தொகை அதிகம் கொண்ட ஊர் என்றும் சொல்லலாம். 300 வருட வரலாற்று உண்மைகளைக் கொண்டுள்ள மிகப் பழமையான ஊர். இது பற்றிய தகவல்களை எங்கள் ஊர் புலவர்களுள் ஒருவரான த.மு.சா. காஜாமுகைதீன் அவர்கள் திரட்டி வருகிறார்கள். வெளிவரும் நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்தும் மற்றும் டவுண், பாளயங்கோட்டை - யிலிருந்தும் கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர், தொலைவில் தான் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. 10 ஆம் நம்பர் பஸ்,பாளை பஸ் நிலையம், ஜங்ஷனில் இருந்தும் 22 -ஆம் நம்பர் பஸ் டவுனில் இருந்தும் அடிக்கடி வந்து போகும் வசதி கொண்ட ஊர். திருநெல்வேலியைச் சுற்றி பரந்து ஓடும் தாமிரபரணியின் செழிப்பை எம்மூரிலும் காணலாம். ஒவ்வொரு தெருவின் முடிவிலும் பாளயங் கால்வாய் தொட்டு செல்லும். அந்த வாய்க்காலில் தான் நாங்கள் கும்மாளமாய் நீச்சல் அடித்து பழகியிருக்கிறோம். 1990 வரையிலும் ஊரில் பெரும்பாலும் அனைவரும் வாய்க்காலையும், ஆற்றையும் தான் குளிக்க, துணிதுவைக்க, வீட்டுக்கு தேவையான தண்ணீர் எடுக்க உபயோகித்து வந்தோம். தற்போதுள்ள தண்ணீர் சுத்தமில்லாததால் யாரும் பயன்படுத்தவில்லை. எம் ஊரைச் சுற்றிய வயல்வெளிகளுக்கு இந்தக் வாய்க்காலே ஆதாரம்.

எங்கள் ஊரில் செவ்வாய்க் கிழமை நடக்கும் சந்தை சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். ஆடு, மாடு, கோழி போன்றவைகளை வாங்க,விற்க என்று உள்ளூர்,வெளியூர் கூட்டத்தால், சந்தையன்று மேலப்பாளையமே களை கட்டி விடும். மற்றும் உழவர் சந்தையும் உண்டு, நியாய விலையில் புத்தம் புதிதாய் காய்கறிகள் தினமும் விற்பனைக்கு வருகிறது. தற்சமயம் நடையின் முக்கியத்துவம் அறிந்த மக்கள்,பெண்கள் உட்பட, அதிகாலை கூட்டம் கூட்டமாக நடந்து சென்று காய்கறி வாங்கி வரும் அழகு நான் ரசித்த காட்சிகளுள் ஒன்று.

ஊரின் மையத்தில் இறைச்சி மார்க்கெட், மீன் மார்க்கெட்டில் வியாபாரம் மிகப் பலமாய் நடக்கும், நெல்லை ஜங்ஷன், டவுண். பாளையங்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து எங்க ஊர் மார்க்கெட்டிற்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம். மேலப்பாளயம் நெருக்கடியான ஜனத்தொகை கொண்ட ஊர் என்பதால், ஊர் கடைத்தெருவில் உள்ள ஆசாத் ரோடு எப்பவும் ஜே ஜே என்று இருக்கும். ஊரிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும் திருமண மற்றும் பண்டிகைக்கால விஷேச நாட்களுக்கு துணிமணிகள், பாத்திர பண்டங்கள் வாங்க பக்கத்தில் உள்ள நெல்லை டவுண், ஜங்ஷனுக்கு சென்று வருவதுண்டு. ஊரைச்சுற்றி சில கிலோமீட்டர் தொலைவில் சுற்றுலாத்தளங்கள் நிறைய உண்டு.

எங்கள் ஊரும் கல்வி வளர்ச்சியில் அதீத முன்னேற்றம் அடைந்துள்ளது. பழமையான முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி, ரஹ்மானிய்யா மேல்நிலைப்பள்ளி, கோல்டன் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி,காயிதே மில்லத் மாநகராட்சிப் பள்ளி, பெண்களுக்கான தனி மேல்நிலப்பள்ளி, அன்னை ஹாஜரா பெண்கள் கல்லூரி, ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி அரபி மதரஸாக்கள் என்று கல்வியில் சில அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளது. பெண்களுக்கான கல்லூரி ஆரம்பித்த பின்பு ஊரில் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதை நிச்சயம் மகிழ்ச்சியாக குறிப்பிடவேண்டும். இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், ப்ளஸ் 2தேர்வில் நான்காம் இடத்தையும் எம் ஊர் மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி தென்னகத்தின் ஆக்ஸ்போர்டான பாளையங்கோட்டை எம்மூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளதால் அங்கு மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, பழமை வாய்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இது தவிர தடுக்கி விழுந்தால் நல்ல கட்டுக்கோப்புள்ள தனியார் கல்லூரிகளின் அணிவகுப்பு வேறு என்று அனைத்து கல்வி வசதியும் அமைந்துள்ளது.

ஊர் மக்கள் பழங்காலம் தொட்டு ஆண்கள் லுங்கி, சட்டை, துண்டும், பெண்களூம் கூட லுங்கியும் துப்பட்டவும் அதிகம் உடுத்தி வந்தனர். அந்தக்காலத்தில் கொஞ்சம் நாகரீகமானவங்களை அங்குமிங்கும் சேலையில் பார்க்கலாம். பெண்கள் சேலையணிந்து முக்காடு போடும் முறை தான் எனக்கு தெரிந்து எங்க ஊரில் ரொம்ப நாளாய் இருந்தது, இப்ப அரபு நாடுகளுக்கு ஆண்கள் போய் வந்த பின்பு கருப்பு புர்கா போடும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் உள்ளூரிலேயே சம்பந்தம் செய்து வந்தனர், இந்த தலைமுறையில் தான் சிறிது சிறிதாக வெளியூர் பக்கம் எட்டிப் பார்க்க தொடங்கியிருக்கின்றனர் என்றாலும் பெரும்பாலும் வெளியூர் சம்பந்தத்தை விரும்புவதில்லை. ஊரிலேயே அம்மா வீடு, மாப்பிள்ளை வீடு என்று மாறி மாறி இருந்து சுகம் கண்டு விட்டதாலோ என்னவோ! ஊரிலேயே சம்பந்தம் செய்வதால் ஒரு சின்ன விஷேசம் என்றாலும் விருந்து பெரிய அளவாகத்தான் இருக்கும். எங்க ஊரில் நாளொன்றுக்கு சில ஆயிரக்கணக்கில் கிலோ இறைச்சி விற்று தீர்வதாக தகவல் சொல்கிறது. எங்க ஊர் மக்கள் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் அல்ல.

உணவு வகைகளில் பெரும்பாலும் அரிசியை அடிப்படையாக வைத்து செய்யும் பதார்த்தங்களான அரிசி மாவு ரொட்டி, புட்டு, கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் காரம்) இடியாப்பம், தக்கடி, சீனிப்பணியாரம், மடக்கு பணியாரம்,ஓட்டு மாவு மற்ற வகைகள் பார்க்கும் பொழுது கோதுமைப் பணியாரம், சேமியா பிரியாணி, மருந்து சோறு, தேங்காய்ச்சோறு, நெய் சோறு, பிரியாணி, வெறுஞ்சோறு கறி கத்திரிக்காய் ஆணம் இவையும் அடங்கும். பணியாரம் வகைகளை ஆர்டரின் பேரில் வாங்கி சீராகக் கொடுப்பதும் வழக்கம். நெல்லையின் பெயரைச் சொல்லும் அல்வாக் கடைகள் எங்க ஊரிலும் உண்டு. முகைதீன் ஸ்டோர், சீனி லாலா ஸ்வீட்ஸ் பிரசித்தம்.

ஆடம்பரமில்லாத மிக எளிமையான ஊர் தான் எங்கள் ஊர். எம்மூர் மக்கள் முந்தைய காலத்தில் முக்கியமாக நிழக்கிழார்களாக இருந்து வந்தனர், நெல்லையை சுற்றியுள்ள பல பல இடங்களை வளைத்து போட்டிருந்தனர், படிப்பறிவில்லாததால் முறையான பத்திரம், பாதுகாப்பு அவசியம் தெரியாமல் அத்தனையும் கையை விட்டு போனதாக தகவல் சொல்கிறது. 1970ஆம் ஆண்டு வரையிலும் நெசவுத் தொழில் பிரதானமாக இருந்தது, நெசவு செய்து இலங்கை,பர்மா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளாகவும் இருந்து வந்தனர். நெசவு நலிவடைந்த பிறகு பீடித்தொழில் பிரதானமாக உள்ளது. பலவிதமான வணிகத்தில் ஈடுபட்டும் வந்த எம் மக்கள் இப்பொழுது உள்ள தலைமுறையில் உள்நாடு, வெளிநாடு என்று படித்து வேலையில் அமர்ந்து முன்னேறி வருகின்றனர்.

திருமணத்தை பெரும்பாலும் வீட்டு முன்பாக பந்தல் போட்டும் அல்லது பள்ளிவாயில்களிலும் நிக்காஹ்வை நடத்திவிட்டு பெண்வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை பெண்ணிற்கு தாலி கட்டி அழைத்து வருவது தான் வழக்கத்தில் உள்ளது, இரு குடும்பமும் அவரவர்கள் வசதிக்கு தக்கவாறு தனித்தனியாக விருந்து வைத்துக்கொள்வர். களத்தில் (பெரிய தட்டில் மூன்று அல்லது நான்கு அமர்ந்து சாப்பிடுவது) வைத்து சாப்பாடு பரிமாறுவது தான் ஊர் பழக்கம். வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கு தனியாக இலைச் சாப்பாட்டிற்கோ அல்லது தனித்தட்டிலோ ஏற்பாடு செய்து விடுவார்கள்.

நூற்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தெருக்கள் கொண்ட ஊர் ஆதலால், அதற்கு தகுந்தபடி பள்ளிவாயில்களும் இருக்கின்றன. வீடுகள் பொதுச்சுவருடன் அடுத்தடுத்து இருக்கும். தெருவிலும் ஊர்த்தலைவர்கள் உண்டு, ஊர்ப்பஞ்சாயத்து மூலம் குடும்ப பிரச்சனைகள் மற்றும் சமூகப்பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படுகிறது. காவல் நிலையம் வரை மக்கள் செல்வது அரிது. பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தினரே இருந்து வந்தாலும் மற்ற சமூகத்தினரும் அங்கங்கு வசித்து வருகின்றனர். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள், தவிர தர்காக்களில் கந்தூரிகள், கொடியேற்றம் விஷேசமாக கொண்டாடுவதுண்டு. இது தவிர மற்ற மதப்பண்டிகைகளும் வேறுபாடின்றி எம்மூரிலும் களைகட்டும். ஊரின் சிறப்பாக ஊர் கந்தூரி கொண்டாடுவதை சொல்லலாம், வருடத்திற்கு இரு முறை ஊர் முழுவதும் அனைத்து தெருக்களிலும் ஒன்று கூடி சேர்ந்து சோறு ஆக்கி பகிர்ந்து உண்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியது.

இது எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற மினரா. நாகூர் ஆண்டவர் தர்கா (மீரா பள்ளிவாசல்) மினரா அமைந்திருக்கிற இடத்தில் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஷாகுல் ஹமீது ஆண்டவர்கள் ( நாகூர் ஆண்டவர்கள்) வந்து தங்கியிருந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. இந்தத் தர்காவில் இரட்டை யானைக்கொடி மிகவும் கொண்டாட்டமாக வருடந்தோறும் எடுக்கப்படும்.

கீழே காணப்படும் பாளயங் கால்வாய் தான் ஊரின் அனைத்து நீர் செலவிற்கும் ஆதாரமாக இருந்தது.


காயிதே மில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, இது எங்கள் தெருக்கள் அமைந்திருக்கும் பகுதியில் ஜின்னாஹ் திடலை அடுத்து உள்ளது.
பழமையான முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி.

மேலப்பாளையம் பேருந்து நிலையம்.

அரசு மருத்துவமனை. பேருந்து நிலையத்தின் மறுபுறத்தில் அமைந்திருக்கும்,ஆஸ்பத்திரி ஸ்டாப் என்று கூட பேருந்து நிலையத்தை சொல்வதுண்டு.

எங்கள் பகுதியின் நவாப் குத்பா பள்ளிவாசல். இன்னும் ஏகப்பட்ட பள்ளிவாசல்கள் உண்டு.

ஜின்னாதிடல் என்றழைக்கப்படும் இடம் எங்கள் பகுதியில்.

மேலப்பாளையம் பஜார்.

ஒரு டவுண் பஸ் ஊருக்குள் வந்தால் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடும்.மதியம் கடைகளை அடைத்து விட்டு சாப்பிடப்போன நேரம், இல்லாட்டி இப்படி ஆவென்று இருக்காது.

எங்கள் ஊரில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரயில் பாதை. எங்கள் தெருவில் இருந்து நேராக வயல்களை கடந்து நடந்து சென்றால் ஆற்றின் இந்தப்பகுதி வரும், பாலத்திற்கு அடியில் குளித்து அனுபவித்த காலம் நினைவிற்கு வருகிறது, பாலத்தில் மீது ஏறி ரயில் வரும் சமயம் சைடில் இருக்கும் ஒதுங்கி நிற்க அமைத்திருக்கும் சின்ன இரும்புக் கம்பிகளான பெட்டியில் நின்று கொண்டு இரயில் பாலத்தை கடக்கும் வரை தட தடக்கும் பாலத்தோடு பட படக்கும் நெஞ்சையும் பிடித்து கொண்டு த்ரில்லாக நின்றதுண்டு. கீழே பார்த்தால் தலைச்சுற்றும். பாலத்திற்கு அடியே விற்கும் வெள்ளரிப்பிஞ்சுகள் அசாத்திய சுவையுடன் இருக்கும். இதெல்லாம் என் சிறு வயதுப் பிராயத்தில்.

இந்தப்படத்தை கிளிக் செய்து பாருங்க,வாத்துக்கூட்டம் வரிசையாக நீந்தி செல்வதை ரசிக்கலாம். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் பொழுது வாய்க்கால் வழியாக வயலுக்கு தண்ணீர் பாயும். இது எங்க வாப்பா வீட்டு ரோட்டடி வயல்.

சுற்றி சுற்றி ஆறு தாங்க நினைவுக்கு வருது, என்ன செய்ய ! காலை சுபூஹ் தொழுவிட்டு கருக்கலில் ஆற்றுக்கு வயல் வழியாய் நடந்து சென்று ஆனந்தமாய் குளித்து வந்த காலமது.

இதெல்லாம் எங்க ஊர் நெற்பயிரு தான், தாமிரபரணியின் தண்ணீரில் செழித்து வளர்ந்திருக்கு.மூணு போகம் விளையும் பூமி, இரண்டு போகம் நெல்லு, ஒரு போகம் பயறு (உளுந்து, பாசிப்பயறு)
இன்னும் சொல்ல எத்தனையோ உள்ள போதிலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...முடிந்தால் நிச்சயம் பின்பு பகிர்வேன்.ப்ளாக்கில் களச்சாப்பாடு பற்றியும், ஊர்க்கந்தூரி பற்றியும் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.


இது என் மாமா அவர்கள் எடுத்த அந்தக் காலப் புகைப்படம்.

சமைத்து அசத்தலாம்னு பெயரை வச்சிட்டு சும்மா எப்படி அனுப்புவது, இது எங்கள் ஊர் ஸ்பெஷல் வட்டிலாப்பம், ஊரில் இருக்கும் பொழுது மேலப்பாளையத்து பக்குவத்தில் செய்தது, ரொம்ப எளிமையாக செய்யக்கூடியது. குறிப்பு மெதுவாக வெளியிடுறேன். வட்டிலாப்பம் சுவைக்கத் தவறாதீர்கள். (கூட இடியாப்பம் அல்லது தோசை இருந்தால் சூப்பராக இருக்குமேன்னு யாரோ சொலவது போல் இருக்கு)
இது என் முன்னூறாவது பதிவு.

படங்கள் உதவி : என் அக்கா மகன் சலீம் யூசுஃப். மிக்க நன்றி !..

-ஆசியா உமர்.

Friday, September 16, 2011

கேப்ஸிகம் சிக்கன் / capsicum chicken

தேவையான பொருட்கள் ;
சிக்கன் - 300கிராம்
கொடைமிளகாய் - 100கிராம்
வெங்காயம் -100கிராம்
தக்காளி - 100கிராம்
இஞ்சிபூண்டு விழுது -1டீஸ்பூன்
கரம்மசாலா - கால்டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1டீஸ்பூன்
தயிர் - 1டீஸ்பூன்
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


சிக்கன் சுத்தம் செய்து துண்டுகளை கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும். எலும்பில்லாமல் இருந்தால் அருமையாக இருக்கும்.


சிக்கனோடு சில்லி பவுடர், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, தயிர், உப்பு சேர்த்து க்லந்து வைக்கவும்.


ரெடி செய்த சிக்கனை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்க்காமல் 3விசில் வைத்து எடுக்கவும்.தண்ணீர் ஊறியிருந்தால் வற்ற வைக்கவும்.
பக்குவமாக வெந்து எடுக்கவும்.


மீடியம் சைஸ் கொடைமிளகாய், வெங்காயம், தக்காளி மூன்றையும் விரும்பிய வண்ணம் நீளவாக்கிலோ சதுரமாகவோ கட் செய்து கொள்ளவும்.


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும் வெங்காயம் கொடைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி பின்பு தக்காளி சேர்க்கவும்.


தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். சிக்கனில் உப்பு சேர்த்து இருப்பதால் அளவாக சேர்க்கவும்.


கொடைமிளகாய், வெங்காயம் தக்காளி சிறிது வதங்கியதும் வேகவைத்த சிக்கனை சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும், மணம் சூப்பராக வரும்.

சிக்கன் கொடைமிளகாய் வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்ந்து பார்க்கவே சூப்பராக இருக்கும்.
சுவையான கேப்ஸிகம் சிக்கன் ரெடி. வாவ் ! செமையாக இருக்கும்.

செய்து டேஸ்ட் பாருங்க. இது என் தங்கை நாச்சியாவோட ரெசிப்பி.

--ஆசியா உமர்.

Monday, September 12, 2011

சப்பாத்தி கல்

இந்த சப்பாத்திகல் எனக்கு பரிசாக வந்தது. எங்கள் ஊரைச் சார்ந்த இங்கு நீண்ட நாட்கள் வேலை பார்த்து சென்ற இஞ்சினியர் அவர்கள் பரிசாக தந்தது. எனக்கு ரொம்ப பிடித்தமானது. வீடு கட்டும் கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்ததால் அங்கு உள்ள மீதமான துண்டு மார்பிளில் அழகாக வடிவமைத்து தந்தது. அதனை நானும் பலவருடங்களாக பாதுகாத்து வருகிறேன். பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு எழுதி நாளாச்சு. விடுமுறைக்கு சென்றதால் இரண்டு மாதமாக சப்பாத்தி சுடுற வேலையே இல்லாமல் போச்சு. சுகமாக கையை அலம்பிட்டு நேரத்திற்கு சாப்பிட்டதில் சமையலே கொஞ்சம் மறந்து போச்சு. ஒரு வழியாக செட் ஆகி சமைக்க ஆரம்பிச்சாச்சு.


பொதுவாக என் பிள்ளைகளுக்கு கோதுமை மாவும் மைதாவும் சரிசமமாக கலந்து சுடுற பரோட்டோ போன்ற ரொட்டி தான் ரொம்பவும் பிடிக்கும்.


அதை தான் இப்ப இங்கு சுட்டு இருக்கிறேன். நீங்களும் கலந்து பரோட்டா சுட்டு பாருங்க. அருமையாக சாஃப்டாக இருக்கும், நிறைய எண்ணெய் தேவைப்படாது.

வீடு கட்டும் பொழுது மிச்சமாகும், கிரானைட், மார்பிள் அல்லது டைல்ஸில் அழகாக வசதியாக இதைப்போல ஒரு சப்பாத்தி கல் செய்து வாங்கிக்கோங்க. உபயோகமாக இருக்கும்.--ஆசியா உமர்.

Tuesday, September 6, 2011

கார்லிக் க்ரீன் சில்லி சிக்கன் / garlic green chilli chicken

தேவையான பொருட்கள் ;
சிக்கன் துண்டுகள் -1கிலோ
முழு பூண்டு -1
பச்சை மிளகாய் - 12
கொத்தமல்லி இலை -ஒருகையளவு
அஜினோமோட்டோ - கால்டீஸ்பூன்(விரும்பினால்)
சோயா சாஸ் - 2டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -4டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

6-8 நபர்களுக்கு

செய்முறை:

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி வைக்கவும்.


பச்சைமிள்காய், மல்லி இலையை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.


பூண்டுப்பல்லை இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.


பூண்டு சிறிது வதங்கியவுடன் அரைத்த மிளகாய் கொத்தமல்லி கலவை போட்டு சிறிது வதக்கவும்.


சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேகவிடவும், விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கவேண்டாம், சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும், சிக்கனிலேயே தண்ணீர் ஊறும்.கால்மணி நேரத்தில் சிக்கன் வெந்துவிடும்.


சிக்கன் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது சோயாசாஸ் ஊற்றி பிரட்டி விடவும். அடுத்து அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்லோரை விட்டு பிரட்டி விடவும். சிக்கனில் கார்ன்ஃப்லோர் கோட் ஆகி எண்ணெய் தெளிந்து வரும். அடுப்பை அணைக்கவும்.


சுவையான கார்லிக் கீரீன் சில்லி சிக்கன் ரெடி.

செய்து பாருங்க சுவை அபாரமாக இருக்கும்.

வெங்காயம், தக்காளி, தயிர், இஞ்சி, கரம்மசாலா எதுவும் கிடையாது,

ஆனாலும் ருசியாக இருக்கும், பூண்டு பிடிக்கவில்லை என்றால் கூட சேர்க்காமல் செய்தாலும் சூப்பராக இருக்கும்.காரம் தேவைப்படுவோர் இன்னும் மிளகாய் தேவைக்கு சேர்த்து கொள்ளலாம்.

இது சைட் டிஷ் ஆக ரைஸ் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

-ஆசியா உமர்.


Sunday, September 4, 2011

உம் அலி - UMM ALIதேவையான பொருட்கள் ;

குரோசண்ட் -5

ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 250மில்லி

ஃப்ரெஷ் கிரீம் -100கிராம்

காய்ந்த தேங்காய் துருவல் - 2டேபிள்ஸ்பூன்

கிஸ்மிஸ் - 2டேபிள்ஸ்பூன்

பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு - தலா 3டேபிள்ஸ்பூன்

(சிறியதாக நறுக்கி கொள்ளவும்)

வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்(விரும்பினால்)

குரோசண்ட்டை சிறிய சிறியதாக பிய்த்து ஒரு பேக்கிங் பவுலில் எடுத்து கொள்ளவும்.


குரோசண்ட்டுடன் பாதாம் பிஸ்தா முந்திரி கிஸ்மிஸ் உலர்ந்த தேங்காய் துருவல் கலந்து வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க்குடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும்.ரெடி செய்த கண்டென்ஸ்ட் மில்க்கை தயாராக இருக்கும் குரோசண்ட் நட்ஸ் மிக்ஸில் சேர்த்து விரும்பினால் வெனிலா எசென்ஸ் சேர்த்து சிறிது ஊற வைக்கவும்.


ரெடி செய்த குரோசண்ட் மிக்ஸில் ஃப்ரெஷ் கிரீமை பரத்தி ஊற்றி விடவும்.எலெக்ட்ரிக் அவனில் 150டிகிரி செட் செய்து 20நிமிடம் வைத்து எடுக்கவும்.


சுவையான தித்திப்பான உம் அலி ரெடி.

சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும். தயாரான உம் அலியை ஆறியவுடன் ப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம்.இது எகிப்து நாட்டின் பிரசித்தமான உணவாகும்.
இங்கு புஃபே பார்ட்டிக்கு போகும் பொழுதெல்லாம்

இந்த உம் அலி டெஸ்சர்ட் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும்.

நாமும் செய்து பார்ப்போமேன்னு இங்கே அங்கே கேட்டு செய்து அசத்தியாச்சு. நீங்களும் செய்து பாருங்க, குரோசண்ட் ரெடிமேடாக கிடைக்காதவங்க பஃப் பாஸ்ட்ரியை உபயோகிக்கலாம். ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் பதில், பால் தேவைக்கு சீனி சேர்த்து கெட்டியாக காய்ச்சியும் உபயோகிக்கலாம்.

இந்த வருட ரமலான் ஸ்பெஷலாக முயற்சி செய்த ரெசிப்பி..

--ஆசியா உமர்.

Saturday, September 3, 2011

விடை கொடு எங்கள் வீடே !

வழக்கத்தை விட இந்தமுறை கொஞ்சம் பிஸியாகி விட்டது.என்றாலும் சந்தர்ப்பம் கிடைத்த வேளையில் உங்களை எல்லாம் மனம் நினைக்கத் தவறவில்லை.

இந்த இடைவெளியில் மனம் திருப்தியாய் இருந்தது என்பதே உண்மை.

இனி நேரம் கிடைக்கும் பொழுது என்ன வேலை?

வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.

இப்ப நான் முதன் முதலாய் முன்பு கவிதை என்ற பெயரில் எழுதிய நிஜத்தை வாசித்து பாருங்க.

என்றென்றும் அன்புடன்,

ஆசியா உமர்..