Tuesday, November 29, 2011

ப்லைன் நாண் /Plain Naan

தேவையான பொருட்கள்;
மைதா மாவு - 2 கப்
இன்ஸ்டண்ட் ஈஸ்ட் - அரை-முக்கால்டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - கால்டீஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 டேபிள்ஸ்பூன்
சீனி - 1டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
பட்டர் - 2 டீஸ்பூன்

முக்கால் டீஸ்பூன் ஈஸ்ட்டை அரைகப் வெதுவெதுப்பானபால் அல்லது நீரில் கரைத்து 10 நிமிடம் வைக்கவும்.

மாவுடன் பேக்கிங் பவுடர்,சீனி,உப்பு முதலில் கலந்து கொள்ளவும்.பின்பு புளிக்காத தயிர்,பால்  2டேபிள்ஸ்பூன், எண்ணெய்,ஈஸ்ட் கலந்த நீர் சேர்த்து கலந்து மாவை தளர்வாய் பிணைந்து கொள்ளவும்.மாவு சப்பாத்திக்கு போல் இல்லாமல் சிறிது தளர்வாய் குழைக்க வேண்டும்.
மாவு குழைக்கும் பொழுது ஈஸ்டில் கலக்க வெது வெதுப்பான நீருக்கு பதில் வெது வெதுப்பான பால் கூட சேர்த்து கொள்ளலாம்.விரும்பினால் அத்துடன் முட்டை கூட சேர்க்கலாம்.



பின்பு மாவை மூடி 4 மணி நேரம் வைக்கவும்.

மாவு இப்படி பொங்கி இருமடங்காகி காணப்படும்.

நான் கேஸ் ஓவன் உபயோகித்து செய்தேன். எனவே பேக்கிங் ட்ரேயில் இவ்வாறு அலுமினியம் ஃபாயில் போட்டு எண்ணெய் அல்லது மாவு தடவி வைக்கவும்,நாண்ஸ்டிக் ட்ரே என்றால் அலுமினியம் ஃபாயில் வேண்டாம்.

மாவை உருண்டைகளாக பிரித்து சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.மாவை நீள்வட்டமாக மாவில் தோய்த்து பரத்தி கொள்ளவும்.

ஓவனை ப்ரீஹீட் செய்து வெப்பம் மேக்சிமம் செட் செய்து கொள்ளவும்.பரத்திய மாவை ட்ரேயில் வைக்கவும்.

நாண் இப்படி பொங்கி வரும்.உடன் திருப்பி போட்டு சிறிது நேரத்தில் எடுக்கவும்.5 நிமிடத்தில் ஆகிவிடும்.


சுவையான ப்லைன் நாண் ரெடி.விரும்பினால் சிறிது பட்டர் தடவி பரிமாறலாம்.இதனை நாம் சப்பாத்தி சுடுவது போல் தவாவிலும் சுடலாம்.நான் அடிக்கடி தவா நாண் தான் செய்வேன்,.

--ஆசியா உமர்..

Saturday, November 26, 2011

ஹிஜ்ரி 1433 -இஸ்லாமிய புத்தாண்டு


ஹிஜ்ரி ஆண்டு,முஹர்ரம் எனப்படும் அரபி மாதத்தில் துவங்கும்.இது 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும் ஆண்டின் மொத்த நாட்கள் 354 ஆக உள்ளது.காரணம் இது பிறையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது.

அனைவருக்கும் இந்த இனிய நாளில் அன்பான புத்தாண்டு
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

--ஆசியா உமர்.

ப்ரக்கோலி சூப் / Broccoli soup


தேவையான பொருட்கள்;
நறுக்கிய ப்ரக்கோலி - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
சிக்கன் சூப் கியூப் - 1
டொமட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 3 -4 டீஸ்பூன்
ப்ரெட் ஸ்லைஸ் - 2
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்

செய்முறை:
நறுக்கிய ப்ரக்கோலி, சூப் கியூப், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பின்பு சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

கார்ன் ஃப்லோரை சிறிது தண்ணீர்ல் கரைத்து விடவும்.சூப் கெட்டியாகி விடும்.

அத்துடன் சோயாசாஸ், டொமட்டோ சாஸ் சேர்க்கவும், மிளகுத்தூள் தூவி கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
ப்ரெட் ஸ்லைசை சிறிய துண்டுகளாக்கி நெய் சேர்த்து அல்லது சும்மாவே மைக்ரோவேவில் ஒன்றரை நிமிடம் வைத்தால் ரஸ்க் போல் ஆகி விடும்.அல்லது ஒரு தோசைக்கலத்தில் கூட ப்ரெட் துண்டுகளை ரோஸ்ட் செய்து எடுக்கலாம்.
ரெடியான சூப்பில் ரோஸ்ட் செய்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.பரிமாறும் பொழுது தான் ரோஸ்டட் ப்ரெட் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

சுவையான ப்ரக்கோலி சூப் ரெடி.

--ஆசியா உமர்.

Wednesday, November 23, 2011

ப்ரக்கோலி எக் ஸ்டிர் ஃப்ரை / Broccoli egg stir fry


தேவையான பொருட்கள்;
நறுக்கிய ப்ரக்கோலி -2கப்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1டீஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - 1டீஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
முட்டை -1
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
உப்பு - மிகச்சிறிது தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

செய்முறை:

இஞ்சி,பூண்டு,வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும், இதழாக பிரித்த ப்ரக்கோலி,மற்றும் இளந்தண்டை மெலிதாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய ப்ரக்கோலியை சுடுநீரில் போட்டு உடன் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய இஞ்சி,பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும்.பின்பு ப்ரக்கோலியை சேர்க்கவும்.

நன்கு வதக்கவும்,மிகச்சிறிது உப்பு சேர்க்கவும்.

பின்பு சோயாசாஸ்,மிளகுத்தூள் சேர்க்கவும்.முட்டை சேர்க்காமல் இப்படியே பிரட்டியும் சாப்பிடலாம்.

முட்டையை கலந்து விடவும்.பிரட்டி விடவும்.

விரும்பினால் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான ப்ரக்கோலி எக் ஸ்டிர் ஃப்ரை ரெடி.

இதனை ப்ரெட்டுடன் சாப்பிடலாம்.விரும்பியவற்றுடன் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.


பின் குறிப்பு :
முட்டைக் கோஸ் முட்டைப் பொரியல், (கிளிக்)
சுவை மிக அருமையாக இருக்கும்.சத்தானதும் கூட.சாதத்திற்கும் தொட்டு சாப்பிட மிகப் பொருத்தமாக இருக்கும்.

--ஆசியா உமர்..

Tuesday, November 22, 2011

கிட்ஸ் போன்லெஸ் ஃபிஷ் ஃப்ரை



தேவையான பொருட்கள்;
முள்ளில்லாத சிறிய மீன் துண்டுகள் - 8
சிக்கன் 65 மசாலா -1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் -பாதி பழம்
கார்ன்ஃப்லோர் அல்லது அரிசிமாவு - அரைடீஸ்பூன்
கடலை மாவு - அரைடீஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


மீனை சுத்தம் செய்து கட் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிஎடுக்கவும், பின்பு மீனில் சிறிது உப்பு,லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

சிக்கன் 65 மசாலா சேர்த்து பிரட்டி வைக்கவும்.உப்பு பார்த்து கவனமாக சேர்க்கவும்.

அடுத்து மீனில் மிளகுத்தூள், கார்ன்ஃப்லோர்அல்லது கடலை மாவு அல்லது அரிசிமாவு சேர்த்து மீன் துண்டில் நன்கு படும் படி விரவி வைக்கவும்.

ரெடி செய்து ஃப்ரிட்ஜில் அரைமணி அல்லது ஒரு மணிநேரம் வைத்து எடுத்து பொரித்தால் அருமையாக இருக்கும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காயவும், மீன் துண்டுகளைப் போட்டு
இரண்டு புறமும் திருப்பி பொரித்து எடுக்கவும்.

சுவையான கிட்ஸ் போன்லெஸ் ஃபிஷ் ஃப்ரை ரெடி.


Saturday, November 19, 2011

புதினா அதிகமாகயிருந்தால்..

பொதுவாக புதினா வாங்கி சமையலுக்கு உபயோகித்து விட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய்விடும்.
என்னைப் போல் அன்றாடம் ஒரு சிலர் புதினாவை உபயோகிப்பதுண்டு. அவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன் தரும்.தேவைப்படும் பொழுது தான் நாம் புதினா வாங்குவோம்,எப்பவும் மற்ற உலர் பொருள் மாதிரி புதினாவையும் நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
சரி இப்ப உலர் புதினா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
புதினா நிறைய கிடைக்கும் பொழுது வாங்கி, பழுத்த,கருத்த இலைகளை நீக்கி விட்டு நல்ல இலைகளாக ஆய்ந்து சுத்தமாக கழுவி தண்ணீர் வடிகட்டவும்.


நன்றாக தண்ணீர் வடிந்த பின்பு ஒரு பேப்பரில் அல்லது கிச்சன் டவல் பயன்படுத்தி உலர வைக்கவும்.

சுத்தமாக ஈரத்தன்மை இல்லாமல் புதினா உலர்ந்த பிறகு ஒரு திறந்த டப்பாவில் எடுத்துக் கொள்ளவும்.

ஃப்ரிட்ஜில் அதனை மீடியம் டெம்பரேச்சரில் வைக்கவும். ஃப்ரிட்ஜ் டெம்பரேச்சர் அதிக ஜில்லுன்னு இருந்தால் புதினா கருத்து விடும்.டப்பா திறந்து இருக்க வேண்டும். மூன்று நான்கு நாட்கள் கழித்து எடுத்து பார்த்தால் காயந்த நிலையில் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.
அதனை நாம் பாட்டிலில் அடைத்து வைத்தால் எப்பவும் மணக்கும்
உலர் புதினா ரெடி.

இதனை நாம் தேவைக்கு எப்பொழுதும் போல சமையலில் குருமா,பிரியாணி,மட்டன் சிக்கன் சமையலில்,ப்ளாக் டீ போடும் பொழுது பயன் படுத்தினால் அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.


Wednesday, November 16, 2011

மெய்யாலுமே! இசையும் கதையும் -தொடர் பதிவு


அதிரா என்னை தொடர் பதிவிற்கு அழைத்திருக்காங்க.இசையும் கதையும் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா நடத்திய மிகவும் பிரசித்தமான நிகழ்ச்சியாம்.அவங்க எவ்வளவு அழகாக சொல்லியிருக்காங்க பாருங்க.

நானும் சின்னதாக ஒரு கதையை சொல்லி முடித்து விட்டேன்.

சுமதி கிராமத்தில் வளர்ந்த துறுதுறுப்பான குறும்பான பெண்.வயல் வெளியும் ஆறும் அருவியும் ஊர் மக்களும் அவள் நினைத்து நினைத்து பார்க்கும் விஷயங்கள்.அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று அந்த நினைவில் சிலாகித்து வாழ்பவள்.




ஏகப்பட்ட கனவுகளுடன் அவள வெளியூருக்கு படிக்க சென்றாள்.படித்து முடித்து வேலை தேட சென்னை சென்ற பொழுது அவளை வரவேற்று அவளுக்கு உதவ வந்த சொந்தக்கார பையன் சேகருடன் சுமதி அடித்த லூட்டி தான் இது

அவள் ஊர் திரும்பிய பின் அவனின் நினைவு மனதை விட்டு நீங்காமல் தவித்த அந்த உணர்விற்கு பெயர் தான் காதலோ! அவளின் தவிப்பு அந்த இறைவனுக்குப் பிடித்துப் போய் விட்டது போலும்.அதைத் தொடர்ந்து வீட்டிலும் சுமதிக்கும் சேகருக்கும் திருமணம் செய்தால் மிகவும் பொருத்தம் என்று பேசிக்கொண்டார்கள்.சேகர் வீட்டில் பெண் தருவதாய் சொன்ன பொழுது, படித்த வேலைக்குப் போகும் பெண் வேண்டாம் என்று சொல்லவே,வீட்டில் உள்ளவர்கள் வேலையை விட நல்ல வரனே முக்கியம் என்று சுமதியின் வேலைக்குச் செல்லும் ஆசைக்கு அணை போட்டனர்.



நிச்சயதார்த்தமும் நடந்தது,ஆனால் திருமணத்திற்கு பல தடைகள் வந்து சில வருடங்கள் காத்திருக்கும் கட்டாயம். சுமதியின் வீட்டில் வேறு வரன் பார்க்கலாமா என்று யோசிக்கவே என்ன செய்வது என்று புரியாமல் அந்த இறைவன் மீதே பாரத்தை போட்டு விட்டு, சேகரை பார்த்து பேசிய தருணங்களை எண்ணிய படி காலத்தை கடத்தி வந்தாள் சுமதி.இதற்கிடையில் அவர்கள் இருவரும் கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இதனை எண்ணி கலங்கிய சுமதி மனதளவில் காதலித்து விட்டு எப்படி இன்னொருவருக்கு கழுத்தை நீட்டுவது என்று குழம்பி தைரியமாக தன் சகோதரர்களிடம் வேறொருவரை மணக்க முடியாது, எத்தனை வருடம் காத்திருந்தாலும் சேகரையே மணப்பேன் என்றும் சொன்னதால் வேறு வரன் பார்ப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.சேகரும் எந்த சூழ்நிலையிலும் அவளையே மணப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்ததால் நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

காலமும் கனிந்தது,எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இருவருக்கும் திருமணம் முடிந்து மனமொத்த தம்பதிகளாய் வாழ்க்கையை தொடர்கின்றனர்.

இசையும் கதையும் இனிமையாக இருந்ததா?

இதனை தொடர மகி, ஆமினாவை அழைக்கிறேன்.அழகாக கதை சொல்லும் திறம் படைத்தவர்கள் என்பதாலும், தொடரை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையாலும்.

மெய்யாலுமே :) :)...

--ஆசியா உமர்.

பின் குறிப்பு :

பாடலை பார்க்க சிரமமாயிருந்தால் யுடியூபை கிளிக் செய்து பார்க்கவும்...


Sunday, November 13, 2011

கேபேஜ் சூப் / Cabbage Soup

தேவையான பொருட்கள்:
முட்டை கோஸ் நறுக்கியது - 1கப்
தண்ணீர் - 4கப்
சூப் கியூப் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஒயிட் வினிகர் - 1டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - 2டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
முட்டை வெள்ளைக்கரு - 1 (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
சூப் வைக்கும் பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சூப் கியூப் சேர்த்து சூடு படுத்தவும்.

நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்து வேக விடவும்.

கார்ன் ஃப்லோர் சிறிது தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.சூப் கெட்டியாகிவரும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இளஞ்சிவப்பாக வதக்கவும்.வதக்கிய வெங்காயத்தை கொதிக்கும் சூப்பில் சேர்த்து சோயாசாஸ்,வினிகர்,மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான கேபேஜ் சூப் ரெடி.
இது முட்டை வெள்ளைக்கரு சேர்க்காமல் செய்தது.


இப்ப எப்படி முட்டை வெள்ளைக்கரு சேர்ப்பதுன்னு பார்ப்போம்.

கார்ன் ப்லோர் கரைசல் சேர்த்து கொதிவரவும் அடித்து வைத்த முட்டை வெள்ளைக்கருவை கொடி போல் விட்டு கலந்து விடவும்.இப்படி காணப்படும்.

பின்பு சோயாசாஸ்,வினிகர்,தேவைக்கு மிளகுத்தூள்,தாளித்த வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். அடுப்பை அணைக்கவும்.சூடாக பரிமாறவும்.

சுவையான கேபேஜ் சூப் வித் எக் ஒயிட் ரெடி. செமையாக இருக்கும்.செய்து பாருங்க.

வெங்காயம் வதக்கி சேர்ப்பது தான் இந்த சூப்பிற்கு அதிக சுவையை கொடுக்கும்.சூப் கியூபில் உப்பு இருக்கும்,எனவே உப்பு சேர்க்க தேவையில்லை.தேவைப்பட்டால் உப்பு சிறிது சேர்த்து கொள்ளலாம்..நான் எந்த சூப் செய்தாலும் கேபேஜ் சேர்க்காமல் செய்வதில்லை.என் கணவருக்கு கேபேஜ் மிகவும் பிடிக்கும். மிகவும் சத்தானதும் கூட..


--ஆசியா உமர்..