Monday, April 30, 2012

முருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு

நான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Lecker and Yummy Recipes, Schemetterling Words மூவரும் சேர்ந்து நடத்திய கர்ப்பிணி பெண்களுக்கான ஆரோக்கியமான சமையல் நிகழ்வில் பகிர்ந்த தேர்வான என் குறிப்பை இங்கு கொடுப்பதில் மகிழ்ச்சி.
கர்ப்பிணி பெண்களுக்கான ஆரோக்கியமான சத்தான குறிப்புகளாக வந்த எண்ணற்ற குறிப்புகள் மத்தியில் அவர்கள் தேர்வு செய்த குறிப்புகளில் ஒன்றாக என்னுடைய Moringa Flowers Egg Fried Rice இடம் பெற்றிருக்கிறது.இவென்ட் பற்றிய விபரம், வந்த அனைத்து குறிப்பையும் காண இங்கு செல்லவும்.


இந்த விருது Token of Appreciation. குறிப்பு வெற்றி பெற இறுதி சுற்றில் தேர்வாக வேண்டும்.


தேவையான பொருட்கள்:


முருங்கைப்பூ ஒரு கைபிடியளவு


கொழுந்து முருங்கைக்கீரை ஒரு கைப்பிடியளவு


நறுக்கிய நாட்டு வெங்காயம் 2 மேஜைக்கரண்டி


நறுக்கிய நாட்டு பூண்டு 2 மேஜைக்கரண்டி


நாட்டுக் கோழி முட்டை - 1


முழு சீரகம் 1 தேக்கரண்டி


நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி


வேகவைத்த சாதம் பாதி கோப்பை


உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
தேவையான பொருட்களை தயார் செய்து இப்படி எடுத்து வைத்து கொள்ளவும்.


ஒரு வாண்லியில் நல்லெண்ணேய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு பொரியவும் , நறுக்கிய நாட்டு பூண்டு,நறுக்கிய நாட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.மிதமான நெருப்பில் நன்கு வதங்கட்டும் சிவற வேண்டாம்.அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ,கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

நாட்டு முட்டை ஒன்றை தேவைக்கு மிளகு, உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.க்லந்த முட்டையை சேர்க்கவும். குறைவான தணலில் வேக விடவும்.வெந்து வரும் பொழுது இப்படி பிரட்டி விடவும்.வடித்த அரைக்கோப்பை சாதத்தை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். உப்பு தேவைப்பட்டால் சிறித்து சேர்த்து பிரட்டிகொள்ளவும்.


சுவையான சத்தான முருங்கைப்பூ முட்டை சாதம் ரெடி.அப்படியே சூடாக எடுத்து பரிமாறவும்.இது ஒரு நபருக்கான அளவு.சாப்பிட்டு விட்டு வெது வெதுப்பான நீர் சாப்பிடலாம்.


முருங்கைப்பூ கிடைத்தால் பேறுகாலம் நெருங்கி வரும் நாட்களில் கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தது மூன்று நாட்களாவது இந்த சத்தான் சாதத்தை செய்து கொடுக்கவும். அண்ட வாயுவை ஒதுக்கி வலி எடுத்து சுகப் பிரசவம் ஆகும்.


வலி லேசாக இருக்கும் பொழுது தெம்புக்கு இந்த சாதம் செய்து கொடுத்தோ அல்லது பூண்டு கஞ்சி வைத்து கொடுத்தோ மருத்துவமனைக்கு பேறுகாலத்திற்கு அழைத்து செல்லலாம்.வலி வந்த பின்பு ஒன்றும் சாப்பிட முடியாது. மருத்துவமனையில் தெம்பிற்கு குளுக்கோஸ் (ட்ரிப்) ஏத்துவாங்க.சாப்பிட ஏதும் தரமாட்டாங்க.முக்கி சுகப் பிரசவம் ஆக தெம்பு வேண்டாமா? இது மாதிரி மருத்துவ குணமுள்ள உணவை கொடுத்து அழைத்து செல்வது நல்லது.இதுவென்று இல்லை மற்ற உணவுகள் கூட ஏதாவது கொடுத்து அழைத்து செல்லவும்.இரண்டு இட்லியாவது கொடுங்க.வெறும் வயிறாக மட்டும் பேறுகாலத்திற்கு கூட்டிட்டு போகாதீங்க.


ஹெல்தி மார்சல்ஸ்க்கு நான் குறிப்பு கொடுக்கனும், எனக்கு முருங்கைப்பூ வேண்டும் என்று என் கணவரிடம் சொல்ல அவர் இங்கு (அமீரகத்தில்) தேடி எனக்காக பறித்து எடுத்து வந்ததால் இந்த குறிப்பு கொடுக்க முடிந்தது.


கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இந்த சத்தான சாதம் செய்து ருசித்திடலாம். இது எங்க வீட்டு பாட்டி வைத்தியம்.


சைவப் பிரியர்கள் முட்டை சேர்க்காமல் செய்து சாப்பிடலாம்.


Friday, April 27, 2012

சோயா கீமா / Soya Keema.

தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - ஒரு கோப்பை
பச்சை பட்டாணி - அரை கோப்பை
நறுக்கிய த்க்காளி - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
நறுக்கிய மல்லி புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
அல்லது
(அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,
1 தேக்கரண்டி மல்லித்தூள்,
கால் தேக்கரண்டி - மஞ்சள் தூள்)
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


முதலில் சோயா உருண்டைகளை கொதிக்கும் நீர் விட்டு 10 நிமிடம் வைக்கவும்.பின் தண்ணீர் வடித்து பிழிந்து எடுக்கவும்.

மிக்ஸி கப்பில் போட்டு இப்படி துருவலாக இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

குக்கர் பேன் அல்லது வாண்லியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்,கரம் மசாலா சேர்க்கவும்,பிரட்டி விடவும்,தக்காளி, நறுக்கிய பச்சை மிள்காய்,மல்லி,புதினா சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.மசாலாத்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

வதங்கியவுடன் பச்சை பட்டாணி,சோயா கீமா சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.மூடி மூன்று விசில் வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
ஆவியடங்கியவுடன் பிரட்டி பரிமாறவும்.
சுவையான சோயா கீமா ரெடி.

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா,நாணுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
விரும்பினால் அரைத்த தேங்காய் முந்திரி விழுது 2 மேஜைக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட்டும் பரிமாறலாம்.வாயுத்தொந்திரவு உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடவும்.

Monday, April 23, 2012

கேரள வெண்டைக்காய் கிச்சடி ( பச்சடி) / Bhendi Pachadi

இந்த வருடம் விஷு விருந்திற்கு சென்ற பொழுது கேரள தோழி ப்ரியாவிடமிருந்து கற்றுக் கொண்டது.நன்றி ப்ரியா.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 100கிராம்
எண்ணெய் பொரிக்க தேவைக்கு
கெட்டி தயிர் - 1/2 - 3/4 கப்
உப்பு - தேவைக்கு


அரைக்க:
தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் -2 மட்டும்
கடுகு - அரை தேக்கரண்டி

தாளிக்க :
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு ,வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2இணுக்கு

தேங்காய் பச்சை மிளகாய் கடுகு,சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய பின் ஒவனில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் சுத்தமாக பிசு பிசுப்பே இருக்காது.

பின் தேவைக்கு ஒரு கடாயில் அளவாக எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த பின்பு நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நிதானமாக பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.எண்ணெய் குடிக்காது.

பொரித்த எண்ணெயை மற்ற குழம்பு வைக்க பயன் படுததலாம்.

பொரித்ததை தனியே வைக்கவும்.

பொரித்த எண்ணெயில் ஒரு மேஜைக்கரண்டி எடுத்து அதனில் கடுகு வெந்தயம் வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் பொரித்து வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்,அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.அத்துடன் தயிர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.தயிர் சேர்த்த பின்பு அடுப்பு எரியக் கூடாது.நன்கு கலந்து விடவும்.


சுவையான கேரள வெண்டைக்காய் கிச்சடி ரெடி.
நாம் பச்சடி என்று தான் சொல்வோம்.அவர்கள் கிச்சடி என்கிறார்கள்.ப்ழத்தில் செய்வதை தான் பச்சடி என்பார்களாம்.
இது போல் பாகற்காயிலும் செய்யலாம்.
இதனை ப்லைன் சாதம்,புலாவ்,சப்பாத்தியுடன் கூட சாப்பிடலாம்.நம்ம இஷ்டம்.விஷு சத்யா வின் போது இதுவும் ஒரு அயிட்டமாக பரிமாறியிருந்தாங்க.சுவை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.கடுகு அரைத்து சேர்ப்பதே தனி சுவை.

--ஆசியா உமர்.


Friday, April 20, 2012

தேங்காய் வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புளி - இரு புளிக்கொட்டை அளவு
வெங்காயம்(மீடியம் சைஸ்) -பாதி
உப்பு - தேவைக்கு.
தேங்காய்,பச்சைமிளகாய்,புளி, தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.அரைத்த பின்பு பாதி வெங்காயத்தை நறுக்கி போட்டு இரண்டு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும்.விரும்பினால் கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டலாம்.நான் இந்த சட்னியை தாளிக்காமல் தான் வைப்பதுண்டு.இது உளுந்து வடை,அரிசி மாவு ரொட்டி,நோன்பு கஞ்சி,இட்லி,தோசை,ஆப்பம்,பருப்பு சோற்றுக்கு நன்றாக இருக்கும்.இதைத்தான் நான் பரோட்டா,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்னு சொன்னேன்.

சுவையான தேங்காய் வெங்காய சட்னி ரெடி.
எங்க வீட்டு அவசர சட்னி இது.செய்து பாருங்க,பிடிச்சிருந்தால் மெனுவில் சேர்த்துக்கோங்க.

--ஆசியா உமர்.


Wednesday, April 18, 2012

ஈசியா பரோட்டா சுடலாம் வாங்க

பேச்சிலர்ஸ்க்காகத்தான் இந்த ஈசி பதிவு.வீட்டில் பரோட்டா சுடனும் என்றால் ஒரு சிலர் அதனை பெரிய மலையாகக் கருதி செய்வதேயில்லை.பரோட்டா வெளியில் சாப்பிட்டால் உடல் நலனுக்கு கேடு.நிறைய எண்ணெய் மற்றும் மேற்சாமான் சேர்ப்பாங்கன்னு பயம்.அதனையே நாம் எப்பவாவது வீட்டில் ஆசைக்கு செய்து சாப்பிடலாம் .சிம்பிளாக அரை மணி நேரத்தில் எப்படி பரோட்டா சுடுவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தரமான மைதா மாவு - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீனி - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன் (அல்லது சுவைக்கு)
தண்ணீர் - முக்கால் கப்

ஒரு பவுலில் தண்ணீர்,உப்பு,சீனி போடவும்.பின் மைதா மாவு சேர்க்கவும்.நன்கு கலந்து பிசைந்து எடுக்கவும்.அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உருண்டையாக்கி மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து கையால் சிறிது நிமிண்டி ஆறு உருண்டைகளாக பிரிக்கவும்.

ஒரு உருண்டையை எடுத்து சிறிய வட்டமாக பரத்தி சிறிது எண்ணெய் தடவி நான்காக இப்படி மடித்து வைக்கவும்.ஆறு உருண்டைகளையும் இப்படி செய்து கொள்ளவும்.இரண்டாவது ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை இப்படி மடிக்க தடவ பயன் படுத்த வேண்டும்.
பின்பு இப்படி சதுரமாக பரத்தி கொள்ளவும்.கையால் கூட பரத்தலாம்.கையால் பரத்தினால் நன்கு பொங்கி வரும்.
தவா சூடானவுடன் பரத்திய சதுர பரோட்டாவை போட்டு வேக விடவும்.இப்படி மேற்புறம் கலர் மாறி வரும்.

திருப்பி போடவும்.இப்படி திட்டு திட்டாக இளஞ்சிவப்பு புள்ளி வரும் பொழுது எண்ணெயை சிறிது சிறிதாக இருபக்கமும் தடவி சுட்டு எடுக்கவும்.அடுப்பை மீடியம் சிம்மில் வைத்து சுட வேண்டும்.மீதியுள்ள ஒர் டேபிள் ஸ்பூன் எண்ணெய் சுடும் பொழுது தடவ பயன்படுத்தலாம்.

ஆக ஆறு பரோட்டா செய்ய மொத்தம் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் தேவைப்படும் .

சுட்டு எடுத்த பரோட்டாவை இப்படி தட்டி எடுத்து பாரிமாறவும்.அடுக்காக சூப்பராக வரும்.வீச்சு பரோட்டா செய்ய தெரியாதவங்க இப்படி செய்து அசத்தலாம்.
சும்மாவே சீனி தொட்டு சாப்பிடலாம்.அல்லது தேங்காய் வெங்காய சட்னி கூட போதும்.அடுத்து சட்னி பதிவு .ஒ.கே வா?
அல்லது எனக்கு குருமா தான் பிடிக்கும் என்றால் சிக்கன் உருளைக்கிழங்கு குருமா சூப்பர் காம்பினேஷன்.
சாஃப்ட் குவிக் சப்பாத்தி செய்முறைக்கு இங்கு கிளிக்கவும்.
வீச்சு பரோட்டா சுட இங்கு செல்லவும்.

ஈசி பரோட்டா வீடியோ சமையல் காண இங்கு கிளிக்கவும்.வீடியோ பகிர்வு இங்கே..
--ஆசியா உமர்.

Sunday, April 15, 2012

மரவள்ளிக்கிழங்கு கட்லெட் / Tapioca Cutlet


தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - மீடியம் சைஸ் (300 கிராம்)
பச்சைமிளகாய் - 1
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
மல்லி இலை - 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
விரும்பினால் முழு சீரகம் - கால் டீஸ்பூன்
மைதா - 3 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் கிரெம்ஸ் - ஒரு கப்
உப்பு - எண்ணெய் - தேவைக்கு.

மரவள்ளிக்கிழங்கை மண் போகக் கழுவி சிறிது நேரம் தண்ணீரில் ஊற விடவும்.துண்டு போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேக விடவும்.குக்கரில் என்றால் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆவியில் இரண்டு விசிலில் இறக்கவும்.

தோல் நீக்கி இப்படி மசித்து கொள்ளவும்.
அத்துடன்,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,மல்லி இலை,மஞ்சப் பொடி,சீரகம் தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


12 உருண்டைகளாக பிடித்து ரெடி செய்து வைக்கவும்.மைதாவை அரை கப் தண்ணீரில் கரைத்து மரவள்ளிக்கிழங்கு உருண்டைகளை விரும்பிய வடிவில் தட்டி கரைத்த மைதாவில் முக்கி எடுத்து ப்ரெட் கிரெம்ஸ் மிக்ஸில் உருட்டி கால் மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.செட் ஆகிவிடும்.

பின்பு ஒரு சாலோ ப்ரை பேனில் எண்ணெய் காயவைத்து பக்குவமாக மீடியம் சிம்மில் பொரித்து எடுக்கவும்.இரு பக்கமும் திருப்பி போட்டு கோல்டன் ப்ரவுன் வரவும் எடுத்து பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடித்து டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்.

சுவையான மரவள்ளிக்கிழங்கு கட்லெட் ரெடி
குட்டீஸ்க்கு மிகவும் பிடிக்கும்.அதன் ருசி நம்மையும் சாப்பிடத்தூண்டும்.
எப்பவும் உருளைக்கிழங்கு சேர்த்து தான் கட்லெட் செய்வோம், இந்த மரவள்ளிக்கிழங்கு என்ன பாவம் செய்தது? அதனால் தான் அதை வைத்து முயற்சி செய்து அசத்தியாச்சு.

--ஆசியா உமர்.

Friday, April 13, 2012

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துக்கள்...

அன்பான வலையுலக நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துக்கள்..

-அன்புடன்
ஆசியா உமர்.


Monday, April 9, 2012

பேச்சிலர்ஸ் சிக்கன் சில்லி ப்ரை / Bachelor's Chicken Chilli Fry.

தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு அலசி,தண்ணீர் வடிகட்டி,மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
பின்பு அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய்,தக்காளி,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்..
அத்துடன் விரவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிக்கனில் தண்ணீர் ஊறும்.சிறிது மூடி வேக விடவும்.
நன்கு வெந்து தண்ணீர் சுண்டி ட்ரையாக வர வேண்டும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான சிக்கன் சில்லி ஃப்ரை ரெடி.இதனை சாதம் வகைகளுடன் பரிமாற அருமையாக இருக்கும்.சிக்கன் எலும்போடு உள்ள துண்டுகளை குழம்பு வைத்து விட்டு எலும்பில்லாத நெஞ்சுப் பதியை இப்படி வைத்து அசத்தலாம்.--ஆசியா உமர்.