Monday, January 30, 2012

மஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy



தேவையான பொருட்கள்;
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்துடன்,தக்காளி,தேங்காய்,முந்திரி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி,நறுக்கி வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்,வதக்கவும்.

அத்துடன் மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது வதங்கட்டும்.

அத்துடன் நறுக்கிய காளான் சேர்க்கவும். வதக்கவும்.

காளானுடன் மல்லித்தூள்,சீரகத்தூள்,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.

சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிவந்தவுடன் அரைத்த வெங்காயம்,தக்காளி,தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

கலந்து விட்டு கொதிக்க விடவும்.சிம்மில் வைத்து குருமா கொதிக்கட்டும்,நன்கு அரைத்து விட்ட தேங்காய் வாடை மடங்க வேண்டும். காளானில் ஒரு கடுப்பு இருக்கும்,அதனால் உப்பு பார்த்து சிறிது சேர்க்கவும்.காரமும் ஏற்றுக் கொள்ளாது, குறைவாக தேவைக்கு காரம் சேர்த்தால் சரியாக இருக்கும்.


சுவையான சத்தான காளான் குருமா ரெடி.

சப்பாத்தி,பரோட்டா,நாண்,ஆப்பம்,தோசை,இட்லி,சாதம் வகைகளுடனும் பரிமாறலாம். இந்த கிரேவி சிக்கன்,மட்டன் குருமா மணம் இருக்கும்.


பத்து நிமிடத்தில் சாஃப்ட் சப்பாத்தி செய்ய கால் கிலோ கோதுமை மாவோடு கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர், தேவைக்கு உப்பு, 2டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.பின்பு அதனை 6 உருண்டையாக உடனே உருட்டி, மாவு போட்டு சப்பாத்தியாக தேய்த்தால் சாஃப்ட் சூப்பர் சப்பாத்தி விரைவில் ரெடி.

--ஆசியா உமர்.

Wednesday, January 25, 2012

வலி - சிறுகதை (ஆறுதல் பரிசு பெற்ற கதை)


நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை


மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..
ஏங்க,கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.
விறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி வந்தாள், பல்கீஸ் பெத்தா.சாயா கூட குடிக்காமல் தூறிக் கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாது குடையை எடுத்துக் கொண்டு தன் சைக்கிள் பழுது பார்க்கும் கடையை நோக்கி விரைந்தார் ஹைதர் சாஹிபு.
இப்படி சம்பாதிக்கும் ஹைதருக்கு ஒரே ஆண் குழந்தை தான். மகன் தங்களைப்போல் கஷ்டப்படக் கூடாது, எப்படியும் படிக்க வைத்து நல்ல நிலமைக்கு கொண்டு வரவேண்டும் என்று வைராக்கியத்தோடு போராடி வெற்றியும் பெற்றனர் இருவரும்.
அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்றாற் போல் மகன் ஹமீதும் பெரிய படிப்பு படித்து உயர்ந்த பதவியில் இருந்து அளவிலா நிம்மதியை இருவருக்கும் தந்து விட்டிருந்தான்.
பல்கீஸ் பெத்தா,ஹைதர் சாஹிபு வசிப்பது பழைய ஓட்டு வீட்டில்,ஆனால் மகனோ மற்றொரு தெருவில் புதிய வீடு கட்டி குழந்தைகளோடு குடியேறி வசதியாக வசித்து வருகிறார்.
பல்கீஸ் பெத்தாவும், ஹைதர் சாஹிபும் வைராக்கியமாக தாங்கள் வசித்த வீட்டை விட்டு மகனோடு போகாமல் மகன் அப்ப அப்ப செலவுக்கு தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, பெத்தா பொழுது போக்காக பீடி சுற்றியும், ஹைதர் சாஹிபு தன் பழைய சைக்கிள் கடையையும் கவனித்து வந்த வருமானத்தில் தனியாகவே நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
பல்கீஸ் பெத்தாவிற்கு தடப் புகையிலையும், வெற்றிலையும் போடும் பழக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது. ஹைதர் சாஹிபு எத்தனை எடுத்து சொல்லியும் கேட்காமல், புகையிலையை வாயில் ஒதுக்கி வைத்து கொண்டு எப்பவும் புளிச் புளிச் சென்று துப்பிக் கொண்டிருப்பாள். பக்கத்தில் துப்புகணிக்கம் வேறு அதில் துப்புவது போதாது என்று வீட்டின் முற்றத்தில், தெரு வாசலோரம் எங்கும் பெத்தாவின் வெற்றிலை துப்பானி கரை தான்.
இந்த வெற்றிலை புகையிலை போடும் பழக்கத்திற்கும் பெத்தா துப்பும் துப்பானிக்கும் அசிங்கப்பட்டே மருமகள் தனியாக போய்விட்டாள்.
கொஞ்ச நாளாய் ஆக்கிய சோறு அப்படியே பானையில் இருக்க,பெத்தா சாயா மட்டும் போட்டு குடிப்பதையும் சோற்றை தண்ணீர் ஊற்றி வாசலில் கிடாய்க்கு வைப்பதையும் ஹைதர் சாஹிபும் கவனித்து கொண்டு தான் வருகிறார்.
ஏம்மா,பல்கீஸ் சோறு இறங்கலையா? ஏதாவது இட்லி தோசை வாங்கி வரட்டுமா “ என்றவரிடம், “ஒண்ணும் திடமானதை முழுங்க முடியலைங்க, என்றாள்.
சரி,வைத்தியரை கூட்டியாரேன்,கை மருந்து சொல்வாரு கேட்டு சொல்படி நட, எல்லாம் சரியாயிடும்”, என்றார்.
ஊரில் பேர் போன மஞ்சி வைத்தியரை அழைத்து வந்தார் ஹைதர் சாஹிபு.
வைத்தியரும் பெத்தாவின் வாயை திறக்க சொல்ல, பெத்தாவால் வாயைக் கூட முழுமையாக திறக்க முடியலை,கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வலி உயிர் போவதாயும்,எரியுதுன்னு புலம்பிய பெத்தாவை அப்பொழுது தான் கவனித்தார் ஹைதர்,முகம் வெளிறி, தீ பட்ட மாதிரி திட்டு திட்டாய் இருப்பதையும் கண்டார்.
நல்ல கவனித்து பார்த்த வைத்தியர்,“இதை டவுணில் பெரிய டாக்டரிடம் தான் காட்டணும், நிலைமை கையை மீறி போயிட்ட மாதிரி தெரியுது சாஹிபு“ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
ஹைதர் சாஹிபிற்கு கையும் ஓடலை,காலும் ஓடலை, மகன் ஹமீதிடம் போய் விஷயத்தை சொல்ல, மகனும் எப்படியும் உம்மாவை பெரிய டாக்டரிடம் காட்டினால் குணமாகிடும் என்று தன் வாப்பாவை சமாதானப் படுத்தினார்.
சரியான எரிச்சல் ஹமீதிற்கு, எத்தனை முறை உம்மாவிடம் இந்த புகையிலை போடும் பழக்கத்தை விடு, பீடி சுற்றாதே, பீடி இலையை போட்டு அடுப்பில் எரிக்காதேன்னு சொல்லியும் கேட்காமல் இப்படி வம்பை விலைக்கு வாங்கிட்டு முழிக்கிறாங்களேன்னு வருத்தம்.
டவுண் ஆஸ்பத்திரியில் பல்கீஸ் பெத்தாவை டாக்டர் சோதனை செய்து விட்டு, ஒரு டெஸ்ட் பாக்கி விடாமல் அனைத்தையும் எடுக்க சொல்ல, ஹைதர் சாஹிபிற்கு விஷயம் ஓரளவு புரிந்தது.
மகன், பெற்றோர் இருவரையும் தங்கள் வீட்டிற்கு வரும் படி அழைக்க, மறுத்து விட்டு இருவரும் தம் வீட்டிற்கே வந்து விட்டனர்.
ஆஸ்பத்திரிக்கு காலையில் போய் மாலை திரும்பியதால் அயர்ச்சியாக இருந்தும், இரவு தூக்கம் வராமல் இருவரும் விழித்தே இருந்தனர். மனைவி ஒன்றும் சாப்பிடாமல் இருக்க ஹைதர் சாஹிபும் மட்டும், கடையில் சாயா குடித்து விட்டு வந்து படுத்து கொண்டார். முக்கி முனகி தூங்காமல் இருந்த மனைவியின் வேதனையை அவரால் தாங்க முடியவில்லை.
காலையில் எழுந்து சுபூஹு தொழுது விட்டு வந்த ஹைதர் சாஹிபு சற்றே அசந்த மனைவியின் அருகே வந்தமர்ந்தார்.கன்னத்தில் இருந்து பிசு பிசுப்பான நீர் வடிந்து கொண்டிருந்தது. இரண்டு நாளில் இத்தனை சுகவீனமா? இது என்ன முசீபத்து யா அல்லாஹ்! என்று அப்படியே மனம் பதைத்துப் போனார்,ஹைதர். அதற்குள் உதடு,நாக்கு,வாயின் உட்பகுதி எல்லாம் புண் பரவி விட்டிருந்தது.
காலையில் வந்த மகனின் முகமும் வாட்டமாக இருக்க, ரிசல்ட் வந்தவுடன் தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் வாப்பா, எனக்கும் ரொம்ப கவலையாயிருக்கு, ஏதோ புண்ணு பொடின்னு டாக்டர் சொல்லி, மருந்து தந்து சரியாயிடக்கூடாதான்னு இருக்கு.
ஆனால் ஆளாளுக்கு சொல்றதைப் பார்த்தால் உம்மாவிற்கு வாயில் புற்றோன்னு தோணுது, இனி என்ன செய்ய முடியும்னு பார்க்கனும் என்றார் ஹமீது.
ஹைதர் சாஹிபும், ஹமீதும் பயந்த மாதிரியே ரிசல்ட்டும் வந்தது. வாயில் புற்று நோய் (Mouth Cancer )என்று டாக்டர் இலகுவாக சொல்ல,விஷயம் அக்கம் பக்கம் கசிந்து ஆட்கள் பார்க்க வரவும் போகவுமாக இருந்தனர்.
புற்று நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம் உஷாராய் இருப்பது அவசியம், இந்த இளவு பிடிச்ச புற்று நோய் தன் உம்மாவுக்கு வரணுமா? தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தவர், உருகி ஓடாய் தேய்வதை காணச் சகிக்காமல்,கவனிக்காது விட்டு விட்டேனே, என்று மனம் வருந்தினார் ஹமீது.
ஊணும் உறக்கமும் தொலைந்து பல்கீஸ் பெத்தா பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டதை கண்டு ஹைதர் சாஹிபு கடைகண்ணிக்கு கூட போகாமல் வீட்டில் மனைவி பக்கமே இருந்து வந்தார். பாங்கு சத்தம் கேட்டால் தெருவில் இருக்கும் பள்ளிக்கு மட்டும் தொழப் போய் வந்தார்.
டவுண் டாக்டரும் இனி ஒன்றும் செய்ய முடியாது, புற்று நோய் முற்றி விட்டது என்று பல்கீஸ் பெத்தாவிற்கு நாள் குறித்து விட்டார்.வேதனையுடன் மனைவி பல்கீஸ் தன்னோடு இருக்கப் போகும் நாட்களை எண்ணியபடி நேரத்தை கழித்தார்,ஹைதர் சாஹிபு.
சந்தோஷமாக வாழ்ந்த அந்த முதிய தம்பதியரின் வாழ்வில் புகையிலை என்ற கெட்ட பழக்கத்தால் பிரிவு என்ற கொடிய முடிவை அல்லாஹ் நாடிவிட்டானே!..
புற்று நோய்க்கு தீர்வு மரணம் தானா? இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காது விட்டது தன் தவறோ என்ற வேதனை அவரை ஆட்டி படைத்தது. நம்ம ஊரிலாவது, நாற்பது வயதை தாண்டியவர்கள் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மகனிடம் சொல்லி புற்றுநோய் விழிப்புணர்வைப் பற்றிய துண்டு பிரசுரம் ஒன்றை ஏற்பாடு செய்து, ஊர் முழுவதும் எல்லா ஜமாத்திற்கும் விநியோகிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.
மனதின் வலி சற்றே குறைந்தது ஹைதர் சாஹிபிற்கு.

குறிப்பு :-
துப்பானி எச்சில
துப்புகணிக்கம் எச்சில் துப்பும் சொம்பு
சுபூஹூ அதிகாலை தொழுகை
முசீபத் கஷ்டம், இடையூறு
ஜமாத் - கூட்டமைப்பு.
முக்கியக் குறிப்பு:
புற்று நோயை ஒழிப்போம்! புதிய உலகைப் படைப்போம்!
இந்தக் காலத்தில் புற்று நோய் யாருக்கு,எப்படி,எதுக்கு வருது என்று கணிக்க முடியவில்லை.காலம் கடந்த பின்பு கவலைப்ப்ட்டு புண்ணியமில்லை.
உணவே மருந்துன்னு சொல்வாங்க,சத்தான,தரமான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடனும், உடலில் ஏதாவது சிறுமாற்றம், கட்டி, வீக்கம், வலி, உடல் நலக் குறைவு என்று வந்தால் உடனே நல்ல அனுபவமுள்ள மருத்துவரின் ஆலோசனை, மருத்துவத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
--ஆசியா உமர்.

Sunday, January 22, 2012

மட்டன் ஓட்ஸ் கட்லெட் / Mutton Oats Cutlet

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - கால் கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிள்கு,சீரகம்,சோம்பு பவுடர் - தலா கால்டீஸ்பூன்
வறுத்து பொடித்த ஓட்ஸ் - 3டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
எண்ணெய் ,உப்பு - தேவைக்கு.


எலும்பில்லாத மட்டன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டி,2டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட்,சில்லி பவுடர் 1டீஸ்பூன்,தயிர் - 1டேபிள்ஸ்பூன்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.அத்துடன் கரம் மசாலா,மஞ்சள் தூள், மிளகு,சீரக,சோம்பு தூள் அனைத்தும் தலா கால்ஸ்பூன் சேர்த்து கலந்து பிரட்டி வைக்கவும்.

மசாலா கலந்த மட்டனை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்க்காமல் நான்கு விசில் வைத்து எடுக்கவும்.வெந்த மட்டனில் தண்ணீர் ஊறி நிற்கும். இப்படி கறி சுருள வற்ற வைக்கவும்.


மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.


அரைத்த மட்டனுடன், லேசாக வறுத்து பொடித்த ஓட்ஸ் - 3டேபிள்ஸ்பூன்,முட்டை -1 ,அரைத்த வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,புதினா விழுது சேர்க்கவும்.
எல்லாம் கலந்தால் கெட்டியாக இருக்கும். உப்பு சரி பார்க்கவும்.

விரும்பிய வண்ணம் கட்லட்டை சேப் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும், ரெடி செய்த கட்லட்டை போட்டு மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த கட்லெட்டை டிஸ்யூ பேப்பரில் வைத்து எடுக்கவும்.

சுவையான மட்டன் ஓட்ஸ் கட்லெட் ரெடி.
இதனை ஸ்நாக்ஸாகவும்,பார்ட்டியில் ஸ்டார்டராக விரும்பிய சாஸ் வகையுடன் பரிமாறலாம். அல்லது ஃப்ரைட் ரைஸ்,பிரியாணி,வெரைட்டி ரைஸ், ப்லைன் ரைஸ்,தால்,ரசம் உடனும் பரிமாறலாம்.

எப்பவும் கறிவடை,கட்லெட் செய்யும் பொழுது பொட்டுக்கடலை மாவு ,முட்டை சேர்ப்பது வழக்கம்,ஓட்ஸ் சேர்த்து பார்த்தேன்,கட்லெட் சூப்பராக எண்ணெய் குடிக்காமல் வந்தது. ஓட்ஸ் டேஸ்ட் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.

---ஆசியா உமர்.


Wednesday, January 18, 2012

சிக்கன் முள்ளங்கி தாள்ச்சா - Chicken Raddish Thalcha

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - கால் கிலோ
பருப்பு - 100 கிராம்
எலும்பு சிக்கன் துண்டு - கால் கிலோ
தக்காளி - 100கிராம்
வெங்காயம் - 100கிராம்
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
கறி மசாலாத்தூள் அல்லது கலந்த மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு.
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.நறுக்கி ரெடி செய்து கொள்ளவும்.

ஊறிய பருப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

முக்கால் பததில் வெந்த பருப்போடு,சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயத்தில் பாதி,தக்காளி,பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சிறிது, இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,கறிமசாலா தேவைக்கு சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வதக்கவும்.


கலந்து விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.
வெந்த சிக்கன் முள்ளங்கி தால்ச்சா இப்படி இருக்கும்.உப்பு சரி பார்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளித்து மீதி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.இளஞ்சிவப்பாக வெங்காயம் சிவந்ததும் ரெடியான தாள்ச்சாவில் சேர்த்து கலந்து விடவும்.

சுவையான சிக்கன் முள்ளங்கி தாள்ச்சா ரெடி.
இதனை ப்லைன் சாதம்,கீரைஸ்,தேங்காய்ச் சோறு
பிரியாணி,சப்பாத்தி,ஆப்பம்,இட்லி,தோசை எதற்கும் தொட்டு சாப்பிடலாம்.

பொதுவாக மட்டன்,கத்திரிக்காய் அல்லது வெறும் கத்திரிக்காய் போட்டு தாள்ச்சா செய்வோம்.நான் சிக்கன்,முள்ளங்கி போட்டு செய்திருக்கிறேன்.இதே முறையில் சிக்கனோடு கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.கத்திரிக்காய் சேர்த்து செய்தால் சிறிது புளி கரைத்து சேர்க்கவும்.

-ஆசியா உமர்.



Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல் !


அன்பான நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய பொங்கல் பகிர்வுகளை கிளிக் செய்து பார்க்கவும்.





--ஆசியா உமர்.






Friday, January 13, 2012

மாசித் துவையல்

தேவையான பொருட்கள்:
மாசி - சிறிய துண்டு
மிளகாய் வற்றல் - 3
சின்ன வெங்காயம் - 4
அல்லது பெரிய வெங்காயம் -பாதி
புளி - புளியங்கொட்டை அளவு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மாசி மற்றும் மிளகாய் வற்றலை எடுத்துக் கொள்ளவும்.மாசியை சிறிது தூளாக உடைத்து கொள்ளவும்.

பின்பு மிக்ஸியில் போட்டு மிளகாய் வற்றல்,உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.மூன்று டீஸ்பூன் மாசித்தூளை எடுத்துக் கொள்ளவும்.

மாசித்தூள்,தேங்காய் துருவல், உப்பு,புளி,வெங்காயம் எடுத்து கொள்ளவும்.

மிக்ஸி சிறிய ஜாரில் மேற்சொன்ன பொருட்களை போட்டு துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.காரம் தேவைப்படுவோர் ஒரு வற்றல் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


சுவையான மாசித்துவையல் ரெடி.

இதனை ப்லைன் சாதம் ரசம் அப்பளத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். கொஞ்சம் சாதம் வழக்கத்தை விட அதிகம் வடித்து கொள்ளுங்கள். மாசியை பொதுவாக சம்பல் செய்வது வழக்கம்.மாசித்துவையல், சம்பல், சாதம் தவிர அரிசி மாவு ரொட்டிக்கு சூப்பர் காம்பினேஷன்.

மாசிச் சம்பல் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.

--ஆசியா உமர்.




Wednesday, January 11, 2012

மை ஹெல்தி ஹேப்பி கிச்சன்/ My Healthy Happy Kitchen


அன்பான வலைப்பூ நட்புள்ளங்களுக்கு,

நீண்ட நாட்களாக ஆங்கிலத்தில் ஒரு சமையல் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்று நிறைவேறியது. உங்களுடைய வருகையையும் ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.என்னுடைய கேரள, கன்னட, தெலுங்கு மற்றும் வடநாட்டு தோழிகளும் என் சமையற் குறிப்புக்களை ரசிக்க ருசிக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி.
நான் இனி முயற்சி செய்யும் புதிய குறிப்புக்கள் அங்கும் இடம் பெறும்.

என்றென்றும் அன்புடன்,
--ஆசியா உமர்.


Monday, January 9, 2012

நேந்திரங்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள்:
நேந்திரன் வாழைக்காய் - 2
எண்ணெய் - கால் லிட்டர்
மஞ்ச்ள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்

நேந்திரம் பழமாக எடுக்கக் கூடாது. காய்வெட்டாக இருக்க வேண்டும்.தோல் சீவி இப்படி மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.

விரும்பினால் மஞ்சப் பொடி,உப்பு இப்படி சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் (edible coconut oil) மட்டும் கூட உபயோகிக்கலாம்.நான் இங்கு தேங்காய் எண்ணெய் + சன்பிளவர் ஆயில் கலந்து உபயோகித்துள்ளேன்.வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் சீவி வைத்த நேந்திரங்காயை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.போட்டவுடன் எண்ணெய் வெள்ளை நிறமாக நுரையோடு பொங்கும் பயப்படாமல் கண் அகப்பை கொண்டு பிரட்டி பிரட்டி விடவும்.சீவிய காய் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.முடியுமானால் காயை எண்ணெயிலேயே நேரடியாக சீவினால் சூப்பராக வரும். எண்ணெயில் போட்ட சிப்ஸ் க்லகலன்னு பொரிந்து வரும் .

சிப்ஸ் பொரிந்து வரும் பொழுது மஞ்ச்ள் உப்பு நீரை சிறிது தெளிக்கவும். மஞ்ச்ள் உப்பு நீர் தெளிக்க பிரியப்படாதவர்கள் வெறும் உப்பை தேவைக்கு எண்ணெயில் சிறிது போட்டு விடலாம்.சிப்ஸில் உப்பு பிடித்து விடும்.

சிப்ஸ் பொரிந்து இப்படி பிரட்டும் பொழுது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலகலன்னு இருக்கும்.

ஆஹா மணக்க மண்க்க நேந்திரம் சிப்ஸ் ரெடியாயிடுச்சு.

பொரிந்த சிப்ஸை எண்ணெய் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

சுவையான நேந்திரங்காய் சிப்ஸ் ரெடி.
என்னாலேயே நம்ப முடியலை,அப்படியே கடையில் வாங்குவது போலவே இருந்தது.ஆறியவுடன் எடுத்து பாட்டிலில் போட்டு மூடி வைத்து தேவைக்கு எடுத்து சாப்பிடலாம்.

-ஆசியா உமர்.

Wednesday, January 4, 2012

சர்க்கரைப் பொங்கல்/ வெண் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் :
தேவையான பொருட்கள்;
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - 2டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப்
அச்சு வெல்லம் - 350கிராம்
நெய் - ஒரு குழிக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 15
திராட்சை - 20
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். பாசிப்பருப்பை மணம் வர வறுத்து கொள்ளவும்.

வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஏலக்காயை தட்டி போட்டு பாகு எடுக்கவும்.

குத்து மதிப்பாக மூன்று பெரிய அச்சு வெல்லம் சேர்த்தேன்.இனிப்பு சரியாக இருந்தது.

ஏலக்காயை இப்படி வெல்லத்தில் தட்டி போட்டு வடிகட்டி விடுவதால் வாயில் அகப்படாது.

குக்கரில் ஒரு கப் பால் மூன்று கப் தண்ணீர், தண்ணீர் வடித்த பச்சரிசி,வறுத்த பாசிப்பருப்பு,கடலை பருப்பு சேர்த்து வேகவைக்கவும். கொதிவந்தவுடன் அடுப்பை குறைத்து வெயிட் போட்டு மூன்று நான்கு விசில் வைத்து எடுத்து, ஆவி அடங்கியவுடன் மசித்து விடவும்.அரிசியின் தரத்தை பொறுத்து தண்ணீர் அளவு மாறுபடும். புது அரிசி என்றால் தண்ணீர் அளவு குறைத்து கொள்ளவும்.

வெல்லப்பாகை வடிகட்டி மசித்த பொங்கலுடன் சேர்க்கவும்.

நன்கு கலந்து விடவும்.வெல்லம் அவரவர் ருசிக்கு கூடகுறைய சேர்க்கலாம்.


நெய் தாளிப்பு கரண்டியில் விட்டு முந்திரி திராட்சையை பக்குவமாக வறுத்து ரெடியான சர்க்கரைப் பொங்கலில் கொட்டவும்.

கலந்து பரிமாறவும்.
சுவையான தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெடி.
இப்படி தாங்க நான் செய்வேன்.கடலைப்பருப்பு மசியாமல் தூரத்திற்கு ஒன்று பார்க்க அழகாய் ருசியாய் இருக்கும்.


வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்;
பச்சரிசி- கால் கிலோ
பாசிப்பருப்பு - 100கிராம்
நெய் - ஒரு குழிக்கரண்டி
முழு மிளகு - 1டீஸ்பூன்
முழு சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1டீஸ்பூன் (விரும்பினால்)
முந்திரி - 10-15
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - தேவைக்கு.

பச்சரிசி பாசிப்பருப்பை ஊற வைக்கவும்.

குக்கரில் அரிசியின் அளவிற்கு நான்கு மடங்கு தண்ணீர் வைத்து,அரிசி,பாசிப்பருப்பு,இஞ்சி துருவல்(விரும்பினால்) சேர்த்து வேக வைக்கவும்.நான்கு விசில் விடவும்.

குக்கர் ஆவியடங்கி இப்படி வெந்தவுடன் தேவைக்கு உப்பு சேர்த்து அகப்பையால் மசித்து விடவும்.

தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு காயவும், மிளகு. சீரகம்,முந்திரி,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.நெய் தாராளமாக சேர்க்கலாம்.மிளகு சீரகம் அவரவர் விருப்பம்,அதிகம் சேர்க்க விரும்பினால் சிறிது கூட்டி கொள்ளலாம்.

சுடச் சுட சுவையான பொங்கல் ரெடி. தேங்காய் சட்னி,சாம்பார்,உளுந்து வடையுடன் பரிமாற செமையாக இருக்கும்.

பொங்கல் எப்பவாவது தான் செய்வதுண்டு, அப்படியே ஹோட்டலில் போய் சுடச்சுட பொங்கல் வடை சாப்பிடப் பிடிக்கும். எங்க வீட்டில் வெண் பொங்கல் ரொம்பவும் இஷ்டம்.

--ஆசியா உமர்.