Wednesday, February 29, 2012

வெண்டைக்காய் சாம்பார் / Bhindi /Okra Sambar

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - 300 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி -1
மல்லி,கருவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - கால்டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்
சீரகம் அல்லது சீரகத்தூள் - கால்டீஸ்பூன்
பூண்டு - 4 பல்(விரும்பினால்)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு, வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு.

சாம்பார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி வைப்போம்.அதில் இது ஒரு முறை.

முதலில் பருப்பை குக்கரில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி,பூண்டு,
சீரகம்,பெருங்காயப்பொடி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.


வெண்டைக்காயை கழுவி துடைத்து சிறிது பெரிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெண்டைக்காயை 2 நிமிடம் ஓவனில் வைத்து எடுத்து சமைத்தால் சமைக்கும் பொழுது வழு வழுப்பு இருக்காது.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

புளித்தண்ணீர் விட்டு கொதிவரவும் சாம்பார் பொடி சேர்க்கவும்.மூடி நன்கு கொதி வரட்டும்.

வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.

கலந்து விட்டு நறுக்கிய மல்லி இலை தூவவும். நடுக் கொதி வரட்டும்.அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

சுவையான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.

வெறும் சாதத்துடன் வெண்டைக்காய் சாம்பார், அப்பளம் என்று பரிமாற அமோகமாக இருக்கும்.


--ஆசியா உமர்.


Monday, February 27, 2012

மஞ்சள் பூசணி பொரியல்/ Yellow Pumpkin Poriyal

தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசணி - முக்கால் கிலோ
(ஒருசிறிய துண்டு அதுவே இத்தனை எடை)
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சாம்பார் பொடி அல்லது பொரியல் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

மஞ்சள் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி இப்படி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிறிது காய்வெட்டாக பார்த்து வாங்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு போட்டு லேசாக சிவறவும், கீறிய அல்லது கிள்ளிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய மஞ்சள் பூசணியை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

சிறிது மூடி வைத்தால் உடன் வதங்கி விடும். சாம்பார் போடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
தேங்காய்த்துருவல் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.உப்பு சரி பார்க்கவும்.

நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான மஞ்சள் பூசணி பொரியல் ரெடி.
அப்படியே சும்மாவே சாப்பிடலாம்.

ப்லைன் ரைஸ், அப்பளம், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்புடன் பரிமாற இந்த பொரியல் அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.



Sunday, February 26, 2012

பேச்சிலர்ஸ் ஃப்ரைட் ஆனியன் நூடுல்ஸ் / Bachelor's Fried Onion Noodles

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் பேக் கறி ஃப்லேவர் -1
அல்லது ஃப்ரைட் நூடுல்ஸ்
நறுக்கிய வெங்காயம் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது
(விரும்பினால் முட்டை - 1)
நான் இங்கு முட்டை சேர்க்கவில்லை.

ஒரு நபருக்கு.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் வைத்து கொதி வந்தவுடன் நூடுல்ஸ் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி விடவும்.

ஒரு தவாவில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதில் இருக்கும் கறிமசாலா ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.வதக்கவும்.


வடித்த நூடுல்ஸ் போட்டு நன்கு பிரட்டி விடவும்.

சுவையான ஃப்ரைட் ஆனியன் நூடுல்ஸ் ரெடி.
விரும்பினால் வெங்காயம் வதக்கும் பொழுது முட்டையுடன் சிறிது மிளகு உப்பு தூவி சேர்க்கலாம்.உப்பு மசாலாவிலேயே இருக்கும்.தேவைப்பாட்டால் சேர்க்கவும்.

இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்.

Saturday, February 25, 2012

மீன் தலை ரசம்/ சூப் - Fish Rasam/ Soup

தேவையான பொருட்கள்:
மீன் தலை - சிறியது -6
(சங்கரா,விலைமீன்,விறால் மீன்)
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
பூண்டு - 4 பல் பெரியது
சின்ன வெங்காயம் - 6+4
தக்காளி - பெரியது 1
மல்லி கருவேப்பிலை - சிறிது
நல்ல எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு.

மீன் தலை, மஞ்சள் தூள், உப்பு சிறிது சேர்த்து நன்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொதிவரவும் மிளகு,சீரகம்,சின்ன வெங்காயம் 6,பூண்டு பல் சேர்த்து அரைத்த விழுதை போடவும்.

தக்காளியையும் அரைத்து விடவும்.

நன்றாக கொதித்து சூப் இறங்கி வரவேண்டும்.

நறுக்கிய மல்லி இலை தூவவும்.

ஒரு கடாயில் நல்ல எண்ணெய் வீட்டு காயவும்,நறுக்கிய நான்கு சின்ன வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி ரெடியான சூப்பில் கொட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.


சுவையான மீன் தலை ரசம் /சூப் ரெடி.
மீன் வாடை அவ்வளவாக தெரியாது.அப்படியே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.மீன் தலையை ருசிக்க விரும்புபவர்கள் சூப் சாப்பிட்டு விட்டு மெதுவாக சாப்பிடலாம்.இல்லாவிடில் சூப் மட்டும் பருகலாம்.தொண்டைக்கு இதமாக வாய்க்கு ருசியாக இருக்கும்.சுத்தமாக ஆய்ந்து மீனை கழுவ வேண்டும் அது மிக முக்கியம்.


பொதுவாக மீன் தலையை குழம்பில்,பொரிக்க ஒரு சிலர் உபயோகிப்பதில்லை.அப்படி செய்பவர்கள் ஃபிஷ் ஸ்டாக் எடுத்து விரும்பிய வெஜிடபிள் சேர்த்தும் சூப்பாக பருகலாம்.


--ஆசியா உமர்.

Thursday, February 23, 2012

கானாங்கெழுத்தி மீன் வறுவல் / Mackerel Fish Fry



தேவையான பொருட்கள்;
கானாங்கெழுத்தி மீன் - 1கிலோ (8-10 எண்ணிக்கை)
மிளகாய்த்தூள் -3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
ஒயிட் வினிகர் அல்லது லைம் ஜூஸ் - 4 டீஸ்பூன்
ரெட் கலர் - பின்ச்
கடலை மாவு  அல்லது கார்ன் ஃப்லோர்- அரை கப் 
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

மீனின் வயிற்றை நன்கு சுத்தம் செய்து நாடி,செவுள் ஆகியவற்றை நீக்கி சுத்தமாக கழுவி உப்பு போட்டு உலசி தண்ணீர் வடிகட்டி மீனை கீறிவிட்டு வைக்கவும்.இப்படி பளிச்சென்று இருக்கும்.


கடலை மாவு எண்ணெய் தவிர மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து மீனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த மீனை கடலை மா அல்லது கார்ன்ஃப்லோரில்  பிரட்டி வைக்கவும்.விரும்பினால் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்தும் எடுத்து பொரிக்கலாம்.
வாணலியில் தேவைக்கு எண்ணெய் விட்டு காயவும் மீனை போடவும்.
ஒரு பக்கம் வெந்து சிவறவும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த மீனில் எண்ணெய் இருக்காது.மாவில் தோய்த்து போடுவதால் முறுகலாக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
சுவையான கானாங்கெழுத்தி மீன் வறுவல் ரெடி.ருசி சூப்பராக இருக்கும்.
இந்த சைஸில் மீன் ஃப்ரெஷாக கிடைத்தால் வாங்கி இப்படி பொரித்து பாருங்க.பேச்சிலர்ஸ் ரெடிமேட் மீன் மசாலாவில்,மிளகுத்தூள், வினிகர்,சிறிது தண்ணீர் தேவைக்கு உப்பு கலந்து மீனில் தடவியும் பொரிக்கலாம்.


--ஆசியா உமர்.

Monday, February 20, 2012

சீரக மீன் குழம்பு / Cumin Fish Gravy

தேவையான பொருட்கள்;
மீன் - 400 கிராம்
சின்ன வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பல்
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு,வெந்தயம்.சீரகம் - தலா அரைடீஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
(விரும்பினால் தேங்காய் விழுது- 2 டேபிள்ஸ்பூன்)

மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், சீரகம்,உளுத்தம் பருப்பு,வெந்தயம் போட்டு சிவறவும்,பச்சை மிளகாய்,பூண்டு,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.அத்துடன் உரித்த சின்ன வெங்காயம் ,நறுக்கிய தக்காளி,சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.

தக்காளி மசிந்து வரும் பொழுது மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.

புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மீனை சேர்க்கவும்.
பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

மீன் வெந்தவுடன் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.விரும்பினால் தேங்காய் சேர்த்தும் செய்யலாம்.
சுவையான சீரக மீன் குழம்பு ரெடி.

--ஆசியா உமர்.