Wednesday, May 30, 2012

ஈசி பிஸிபேலாபாத் / Easy Bisi bele bath

தேவையான பொருட்கள்;
அரிசி - 250 கிராம்
பருப்பு - 125 கிராம்
காய்கறி கலவை - 250 கிராம் (விருப்பம் போல்)
(கேரட்,பீன்ஸ்,பீஸ்,காளிப்ளவர்,கத்திரிக்காய்)
வெங்காயம் -1
தக்காளி -1
மல்லி,கருவேப்பிலை - சிறிது
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் - தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - அரை கப்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை - 1 தேக்கரண்டி (ஏலம் பட்டை கிராம்புதூள்-சுவைக்கு தகுந்த படி)
(ஏலம்-2,கிராம்பு-3,பட்டை - சிறிய துண்டு)
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

தேவையான பொருட்களை முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.அரிசி,பருப்பை ஊற வைக்கவும்,காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.சமையல் விரைவில் முடிய வசதியாக இருக்கும். புளி கரைத்து வைக்கவும்.



குக்கரில் ஊறிய துவரம் பருப்பு தேவைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிவரவும், கழைந்த ஊறிய அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர்,கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்க்கவும்.கலந்து விடவும்.


நன்கு கொதி வரும் பொழுது மூடி அடுப்பை மீடியமாக வைத்து வெயிட் போடவும்.நான்கு விசில் வந்து அடுப்பை அணைக்கவும்.


ஒரு கடாயில்,தேங்காய் துருவல்,சாம்பார் பொடி,கரம் மசாலா பவுடர் சேர்த்து லேசாக சிவற வறுக்கவும்.


ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து எடுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் ,பெருங்காயப் பொடி,நறுக்கிய வெங்காயம்,காய்கறிகள்,தக்காளி சேர்த்து வதக்கவும்,பின்பு அத்துடன்,புளித்தண்ணீர், கால் தேக்கரண்டி மஞ்சத்தூள்,உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


குக்கர் விசில் அடங்கியவுடன் திற்ந்தால் சாதம் பருப்பு வெந்து இப்படி காணப்படும்.மசித்து விடவும்.


அத்துடன் வேகவைத்த காய்கறிகள், வறுத்து பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.


நறுக்கிய மல்லி இலை, நெய் சேர்க்கவும்.


எல்லாம் ஒருசேர கலந்து விடவும்.

சூடான சுவையான கமகமக்கும் பிஸிபேலாபாத் ரெடி.இதனை உருளை சிப்ஸ்,அப்பளம்,வடகத்துடன் பரிமாறலாம்.


இந்த குறிப்பை முன்பே என் ஆங்கில தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். அமீரக ஃபுஜைராவில் இருந்து பேச்சிலர்ஸ் கேட்டதால் மீண்டும் இந்த பகிர்வு.
இது வீட்டில் இருக்கும் சாம்பார் பொடி கரம் மசாலா பொடி வைத்து ஈசியாக செய்யக் கூடியது. பிஸிபேலாபாத் பொடி என்று தனியாக தயார் செய்ய வேண்டியது இல்லை.ரெடி மேட் பொடி இருந்தால் அதனையும் உபயோகிக்கலாம். என்றாலும் அதே சுவையும் மணமும் நிச்சயம் இதிலும் இருக்கும்.வாயுத் தொந்திரவு இருக்கும் பார்த்து அளவாக சாப்பிடவும்.





Monday, May 28, 2012

சீனி அவரைக்காய் / கொத்தவரங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:
சீனி அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 2 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

சீனி அவரைக்காயை நார் நீக்கி இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டு,பச்சை மிளகாய்,சீரகம் தட்டி வைக்கவும்,(விரும்பினால் இதனுடன் தேங்காயும் சேர்த்து துவைத்து கொள்ளலாம்) வெங்காயம் நறுக்கி வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிவரவும் நறுக்கிய சீனி அவரைக்காய், மஞ்சப்பொடி, உப்பு போட்டு வேகவைத்து தண்ணீர் வடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து, தட்டிய பூண்டு சீரகம்,பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.சிம்மில் வைத்து நன்கு வதக்கவும், வேக வைத்த சீனி அவரைக்காயை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,உப்பு சரி பார்க்கவும், தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.


சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெடி.

அல்லது தேங்காய் சீரகம் ,பச்சை மிளகாய் அரைத்து கடைசியிலும் சேர்க்கலாம்.


Saturday, May 26, 2012

கருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்:
கருவாடு - 50 கிராம்
கத்திரிக்காய் - 200 கிராம்
மொச்சை - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரக தூள்கள் - தலா அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் விழுது - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
வெங்காயம், தக்காளி,பூண்டு,கத்திரிக்காய் நறுக்கி வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும். புளிக்கரைசலும் தயார் செய்து வைக்கவும்.பச்ச மொச்சை என்றால் அப்படியே கழுவி போடலாம்.காய்ந்த மொச்சை என்றால் வறுத்து தண்ணீரில் ஊறவைத்து வேகவிட்டு தோல் பிதுக்கி சேர்க்க வேண்டும்.

கருவாட்டு துண்டை இப்படி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.நல்ல மணமாக இருக்கும்.நன்கு அலசி சிறிய துண்டாக போட்டுக் கொள்ளவும்.






வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும்,கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து,நறுக்கிய வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும், அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும், பின்பு தக்காளி பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு மிகச் சிறிதளவே போட்டு மூடியிட்டு வதங்க விடவும்.


புளிக்கரைசலோடு மசாலா தூள்கள் அனைத்தும் போட்டு,தேங்காய் விழுதும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் கலந்து வதங்கியவற்றுடன் சேர்க்கவும். வேக வைத்த மொச்சை சேர்க்கவும். நன்கு கொதித்து மசாலா புளி வாடை அடங்கட்டும். உப்பு சரி பார்க்கவும்.


சுத்தம் செய்த கருவாட்டை போடவும்.அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைக்கவும்.கொதி வரும்.கருவாடு விரைவில் வெந்து விடும். கடைசியில் தான் சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் கரைந்து விடும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான கருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய் ரெடி. இதனை வெறும் சோறு, பொரித்த அப்பளம், பொட்டுக்கடலை துவையலுடன் பரிமாறலாம்.


Wednesday, May 23, 2012

கத்திரிக்காய் கிரேவி / Brinjal Gravy

கத்திரிக்காய் என்றால் எனக்கு கொண்டாட்டம். காய்களில் எது இருக்கோ இல்லையோ கத்திரிக்காய் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.இந்த குறிப்பை சின்ன சின்ன வயலட் கத்திரிக்காயில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - கால் கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
எள்ளு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - கால் தேக்கரண்டி
மல்லி, கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.



வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும், அதில் கழுவி துடைத்து நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சேர்க்கவும்.திருப்பி திருப்பி பொரிய விடவும்.


பொரித்த கத்திரிக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.


வாண்லியில் தேங்காய்,எள்ளு,வேர்க்கடலை லேசாக வறுத்து எடுக்கவும், ஆறிய பின் அத்துடன் தக்காளி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.


கத்திரிக்காய் பொரித்த அதே எண்ணெயில் பட்டை சோம்பு,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்,அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு சேர்க்கவும்,வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்க்கவும்.வதக்கி விடவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்.


புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதி வரட்டும்.


கொதித்து மசாலா புளி வாடை அடங்கியதும் பொரித்த கத்திரிக்காய் போடவும்.சேர்ந்து கொதித்து வரும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.


அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்,தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.


நன்கு கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைக்கவும்.தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.


சுவையான கத்திரிக்காய் கிரேவி ரெடி, இதனை சப்பாத்தி, பிரியாணி, புலாவ், ப்லைன் ரைஸ்,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம். வயலட் கத்திரிக்காய் பிஞ்சாக இருந்தால் ருசி மிக அருமையாக இருக்கும். காரம் சுவைக்கு தகுந்தபடி சேர்த்துக் கொள்ளவும்.


Wednesday, May 16, 2012

பட்டர் காளான் / Butter Mushroom

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200கிராம்
பட்டர் - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி பருப்பு - 10
ஃப்ரெஷ் கிரீம் - 2 மேஜைக்கரண்டி
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
நறுக்கிய மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும், முந்திரி பருப்பை அரை கப் தண்ணீரில் ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.
பட்டன் காளானை நன்கு அலசி பாதியாக நறுக்கி கொள்ளவும்.அத்துடன்,சில்லி பவுடர்,கரம்மசாலா, இஞ்சி பூண்டுபேஸ்ட், உப்பு சேர்க்கவும்.நன்கு கலந்து ஊறட்டும்.


ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,தக்காளி வதக்கவும்.அத்துடன் கசூரி மேத்தி பவுடர், ஊறிய முந்திரிபருப்பை சேர்க்கவும்.நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்.


வாணலியில் பட்டர் விட்டு காய்ந்து வரும் பொழுது மசாலா கலந்த காளானை சேர்த்து வதக்கவும்.தண்ணீர் ஊறி வற்றி காளான் வெந்து வரும்.


அரைத்த வெங்காயம்,தக்காளி,முந்திரி கசூரி மேத்தி விழுதை சேர்க்கவும்.மிக்ஸி ஜாரை அலம்பி அந்த தண்ணீரையும் சிறிது சேர்க்கவும்.நன்கு கொதித்து வரட்டும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.


உப்பு சரி பார்க்கவும்.


ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும், நறுக்கிய மல்லி இலை தூவவும்.கலந்து விட்டு பரிமாறவும்.


சுவையான பட்டர் காளான் ரெடி. இதனை நாண், பரோட்டா, சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம். காரம் குறைவாக விரும்புபவர்கள் அரைதேக்கரண்டி சில்லி பவுடர் சேர்க்கலாம்.


Sunday, May 13, 2012

கேரட் பீட்ரூட் பட்டாணி பொரியல்

தேவையான பொருட்கள்:
கேரட் - 1
பீட்ரூட்-1
உரித்த பச்சை பட்டாணி - 50 கிராம்
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - மேஜைக்கரண்டி
கடுகு,உ.பருப்பு - 1தேக்கரண்டி
மல்லி,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
கேரட், பீட்ரூட்,வெங்காயம், மல்லி இலை நறுக்கி ரெடி செய்து வைக்கவும்.பச்சைப் பட்டாணி உரித்து அலசி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு உ.பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கேரட், பீட்ரூட்,பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

திறந்து தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து பிரட்டி விடவும். தேங்காய்,பச்சை மிள்காய், சோம்பு கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்,பிரட்டி விட்டு சிறிய தீயில் சிறிது மூடி பின் திறக்கவும்.

நறுக்கிய மல்லி இலை தூவவும்.பிரட்டி விட்டு பரிமாறவும்.

சுவையான சத்தான கேரட் பீட்ரூட் பட்டாணி பொரியல் ரெடி.

Thursday, May 10, 2012

பாலும் பழமும் பாச்சோறும்


எங்கள் ஊர் வழக்கப்படி திருமணத்தின் போது நிக்காஹ் பள்ளிவாசலில் அல்லது மணப்பந்தலில் முடிந்து மாப்பிள்ளை, மணப்பெண் வீட்டிற்கு வந்து மாலை மாற்றிய பின்பு புதுமணத் தம்பதிகளுக்கு பாலும் பழமும் கொடுப்பது வழக்கம். திருமணம் முடிந்து மணமக்கள், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்த பின்பு அங்கு புதுமணத் தம்பதியருக்கு பாச்சோறு ஊட்டுவார்கள்.

பாச்சோறு செய்வதற்கு:

தேவையான பொருட்கள்:

வடித்த சோறு - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - பாதி கப்

கருப்பட்டி - 100 கிராம்

ஏலக்காய் -2

நெய் - 1 மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு - 1 மேஜைக்கரண்டி.

சாதத்தை பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும், கருப்பட்டி சில்லை தட்டி சிறிது தண்ணீர்,தட்டிய ஏலக்காய் சேர்த்து கெட்டியாக பாகு காய்ச்சி எடுக்கவும்.நெய்யில் முந்திரிவறுத்து எடுக்கவும்.தேங்காய் துருவிக் கொள்ளவும்.வாசனை சம்பா சோறு ஆக்கி எங்க ஊரில் செய்வாங்க.சூப்பர் மணமாக இருக்கும்.

வடித்த சாதத்தில் சூட்டோடு கருப்பட்டி பாகு, நெய்,வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும்.அதனை ஒரு தட்டில் எடுக்கவும்,மேல் தேங்காய்த்துருவல் தூவி அலங்கரிக்கவும்.

சுவையான பாச்சோறு ரெடி.எளிமையான இனிமையான சத்தான குறிப்பு. கருப்பட்டியில் இரும்புச்சத்து இருக்கு,குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாலும் பழமும் செய்வதற்கு:

பால் - ஒரு கப். மொந்தன் வாழைப்பழம் -1,சீனி - 2 மேஜைக்கரண்டி

பழம் சீனி சேர்த்து கலந்து அத்துடன் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

பொதுவாக மணமக்களுக்கு பாலும் பழமும், பாச்சோறும் கொடுத்த பின்பு அதனை திருமணவீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு மற்றவர்களுக்கு கொடுப்பது வழக்கம். பாலும் பழத்திலும் இருக்கும் சத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
நீங்களும் எடுத்து ருசித்து எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
இந்த குறிப்பை ஹெல்தி மார்ஷல்ஸ் சிறுகுழந்தை உணவுகள் இவென்ட்டிற்கு அனுப்புகிறேன்.