Wednesday, June 27, 2012

இறால் தங்க வறுவல் / பொரித்த இறால் /இறால் 65/ Prawn Fry / Prawn 65

தேவையான பொருட்கள் ;
இறால் - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்லோர் - 2 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - 1
ரெட் ஃபுட் கலர் - பின்ச்(விரும்பினால்)
எண்ணெய் - 3- 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

இறால் உரிக்கும் முன்பு நன்கு அலசிக் கொள்ளவும்.தலை,மேல் இருக்கும் ஓடு பகுதி உரித்து கருப்பாக இருக்கும் அழுக்கு போன்ற பகுதியை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் இறாலுடன் சேர்த்து கலந்து ஒரு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.


இறால் ஊறிய பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவிடவும்.காய்ந்தவுடன் நாம் விரவி வைத்த இறாலை போட்டு பொரிக்கவும்.அரைகிலோவை உறித்தால் 15 -முதல் 20 இறால் இருக்கும்.இரண்டு முறையாக பொரிக்கலாம்.

எண்ணெய் குடிக்காது, 5-6 நிமிடத்தில் இறால் வெந்து விடும்.ஒரு புறம் வெந்தவுடன் மறு புறம் திருப்பி போடவும்.

அத்துடன் இரண்டு இணுக்கு கருவேப்பிலை போடவும்.


இறால் நன்கு பொரிந்த பின்பு எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.
சுவையான  இறால் தங்க வறுவல் ரெடி. இதனை பக்க உணவாகப் பரிமாறலாம்.



Monday, June 25, 2012

பீன்ஸ் பாசிப்பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்;
பிஞ்சு பீன்ஸ் - கால் கிலோ
பாசிப்பருப்பு - 3-4 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 2மேஜைக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு


பீன்ஸ் நார் எடுத்து விளிம்பு கழித்து அலசிக் கொள்ளவும்.பொடியாக நறுக்கி ஆவியில் அல்லது அளவாக தண்ணீர் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
பாசிப்பருப்பை ஊற வைத்து வற்றல்,பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து ஓவனில் 2 நிமிடம் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.அதனை கையால் அல்லது மிக்சியில் உதிர்த்து கொள்ளவும்.


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், வேகவைத்து அரைத்து உதிர்த்த பாசிப்பருப்பு கலவையை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

பின்பு வேகவைத்த பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.அத்துடன் தேங்காய்துருவல் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.

சுவையான பீன்ஸ் பாசிப்பருப்பு உசிலி ரெடி.இதே போல் கொத்தவரங்காயிலும் செய்யலாம்.

Friday, June 22, 2012

மஷ்ரூம் பீஸ் ஃப்ரைட் ரைஸ் ( பிரியாணி ப்லேவர்)

தேவையான பொருட்கள்:
வேகவைத்த உதிரியான சாதம் - ஒரு பவுல்
நறுக்கிய காளான்- அரை கப்
பச்சை பட்டாணி - கால் கப்
நறுக்கிய சிறிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
தயிர் - 1டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர், கரம் மசாலா - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய மல்லி, புதினா - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஒரு பவுலில். இஞ்சி பூண்டு பேஸ்ட்,தயிர், சில்லி,கரம் மசாலா பவுடர்,டொமட்டோ சாஸ்,உப்பு,அத்துடன் காளான்,பச்சை பட்டாணி சேர்த்து கலந்து சிறிது நேரம் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.அத்துடன் ரெடி செய்த காளான்,பச்சை பட்டாணி கலவையை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்,தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

வதங்கியவுடன், வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும்.உப்பு சரி பார்க்கவும்.
நறுக்கிய மல்லி,புதினா தூவி சிறிது பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான மஷ்ரூம்,பீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.சூடாகப் பரிமாறவும்.
ஆனியன் ரைத்தா பொட்டட்டோ சிப்ஸ் உடன் பரிமாறவும்.



Wednesday, June 20, 2012

சுவையரசி போட்டி - ஒரு அனுபவம்

அமீரக தமிழ் மன்றம் நடத்திய சுவையரசி போட்டி பற்றிய மெயில் ஏப்ரல் மாதம் வந்தது.இதுவரை நானும் விதம் விதமாக வீட்டில் தான் சமைத்து உங்களோடு பகிர்ந்ததுண்டு. சமையல் போட்டி எதிலும் கலந்து கொண்டதில்லை. இந்தமுறை கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து நாங்களும் அல் ஐனில் இருந்து துபாய்க்கு சென்று வந்தோம்.
ஏப்ரல் 13 -ஆம் தேதி சுவையரசி போட்டி துபாய் கராமா சிவ்ஸ்டார்பவனில் நடந்தேறியது. மே 4 ஆம் தேதி நடந்த அமீரக தமிழ் மன்றம் நடத்திய கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பெண்கள் தின சிறப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.விழா பற்றிய விபரம் இன்னொரு பதிவாக வெளியிடுவேன்.முதல் மூன்று பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் அறிவித்தார்கள். கீழ்காணும் பரிசுப் பார்சல் எனக்கு கிடைத்தது தான்.


'Suvai Arasi 2012' (Queen of Taste) COOKING COMPETITION
Title
‘Sweet 2012'
  • · Date: FRIDAY 13th April 2012 @ 3.30 PM SHIVSTAR BHAVAN, KARAMA
  • · COOK AT HOME AND BRING
  • Enter an original recipe that does not contains any readymade mix
  • You should cook / mix and bring the dessert on time please
  • The registration and the decoration should be completed before 4:00 pm before the judges’ arrival
  • All decisions of the Judges in any matter relating to this cooking competition shall be final .
  • Along with the cooked item you have to bring a written recipe for the dish
  • Name the dessert, put the receipe along, insert the registration number on desk and move.
  • You have to submit and finish decorating before 4.00 p.m. and we cannot accept any submission after that, as the judging time starts from 4.00 p.m.
  • The submitted dish will be scored according to the following criteria:
    i. Taste - 20 marks
    ii. Innovative idea – 10 marks
    iii. Delicious look, overall appearance and decoration – 20 marks
  • Result of the competition will be announced only on the Women's Day Celebration i.e. 4th May 2012.
  • All the participants will be receiving a gift.

கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசாக ஒரு ஹாட்பேக்கும்,ஆச்சி மசாலா கிஃப்ட் பேக்கும் வழங்கப்பட்டது.

இனி போட்டி பற்றிய அனுபவத்தை பார்ப்போம். இனிப்பு - 2012 என்பது தான் தலைப்பு. சரியான நேரத்திற்கு சென்று பாரம் நிரப்பி கட்டணமாக ரூ 150 திர்ஹம் செலுத்தி குடும்ப உறுப்பினராகிக் கொண்டோம்.
அழைப்பிதழ் படி அனைத்து ஏற்பாடும் சிறப்பாக செய்திருந்தார்கள். அப்பப்பா,விதம் விதமாக இனிப்புகளை செய்து கொண்டு வந்து கலந்து கொண்ட அனைவரும் அசத்தினார்கள்.
அனைவரும் பதார்த்தங்களை பார்வைக்கு வைத்தோம்.
எங்களுக்கு என்று கொடுத்த எண்ணை பதார்த்தம் பக்கம் வைத்து விட்டு நாங்கள் வெளியேறிவிட்டோம்.
நடுவர்கள் வரும் சமயம் நாங்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை.அவர்கள் சுவைத்து மதிப்பெண் போட்ட பின்பு நாங்கள் சென்று ஒருவருக்கொருவர் அனைத்து பதார்த்தத்தையும் சுவைத்து மகிழ்ந்தோம். ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த போட்டியின் முடிவு மே 4 ஆம் தேதி விழா மேடையில் அறிவிக்கப் பட்டது.ஆர்வமாக அனைவரும் விழாவிற்கு சென்று சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் கண்டு கழித்து இறுதியாக சுவையரசி- 2012 யார் என்ற அறிவிப்பு சிறப்பு விருந்தினரான நடிகை ரேகா முன்னிலையில் அறிவிக்கப் பட்டது. என் கேமராவில் நான் கிளிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு.அதிர்ஷ்டவசமாக பரிசு பெற்ற பதார்த்தங்களை எடுத்திருந்தேன். போட்டியில் 24 நபர்கள் பங்கேற்றார்கள். இனி சில போட்டிக்கு வந்திருந்த பதார்த்தங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு.

இது தான் முதல் பரிசு பெற்ற ஸ்ட்ராபெர்ரி ஜெம்ஸ் கேக்.பார்க்கவே சூப்பர்.
இரண்டாவது பரிசு மார்பிள் கேக்.கிவி,ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரித்திருந்தது.கடின உழைப்பு தெரிந்தது.

மூன்றாவது பரிசு ஷீர் குர்மாவிற்கு கிடைத்தது.நல்ல ரிச்சாக இருந்தது.
இனி நான் கிளிக்கிய சில பதார்த்தங்கள்.

இது நம்ம மாஸ்டர் செஃப் ஜலீலா செய்து அசத்திய ட்ரை கலர் அகார் அகார். நாங்கள் ருசித்து பார்த்தோம் மிக பக்குவமாக இருந்தது.













இது தான் நான் செய்த பேக்ட் ஆப்பிள் புட்டிங்.எனக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு கிடைத்தது.

ஒரு விஷயம் நடுவர்கள் சுவைத்த பின்பு என் பதார்தத்தை வந்து பார்த்தால் நான் எப்படி வைத்தேனோ அப்படியே இருந்தது. ஒரு ஸ்பூன் கூட எடுத்த மாதிரியில்லை.எடுக்கவில்லை. அருகில் ப்லேட்,ஸ்பூன் எல்லாம் வைத்திருந்தேன்.எப்படி என்னோடது விட்டுப் போனது என்று தெரியவில்லை.ருசிக்காமல் எப்படி மதிப்பெண் கொடுத்தார்கள் என்பது ஆச்சரியமே!

நான் கேட்டதற்கு நீங்கள் தனியாக எடுத்து வைக்கவில்லை என்று பதில் வந்தது.பெரும்பாலான பலகாரங்கள் ,பரிசு பெற்றவைகள் அப்படியே தான் பரிமாறியிருந்தார்கள். அது போல் தான் நானும் பரிமாறியிருந்தேன். என் கணவரும், மகளும் இத்தனை சிரமப்பட்டு செய்து அல் ஐனில் இருந்து துபாய் பயணித்து போய் கலந்து கொண்டாயே, நடுவர்கள் உன் பதார்த்தத்தை ருசிக்கவேயில்லை. என்ற படியே திரும்பி வந்தார்கள்.என்றாலும் நடுவர்கள் சென்ற பின்பு நான் அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் பவுலில் வைத்து பரிமாறி ருசி பார்க்க கொடுத்து, என்னை தேற்றி கொண்டேன்.இது எனக்கு முதல் முறை தானே!

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - அரைகிலோ (3)
தேன் - 4 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பட்டைத்தூள் - அரை தேக்கரண்டி
ப்ரெட் துண்டுகள் - 8 ( பெரிதாக இருந்தால் 5 )
வெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 4 மேஜைக் கரண்டி
உலர் திராட்சை - 3 மேஜைக் கரண்டி
நறுக்கிய வால்நட்ஸ் - 3 மேஜைக்கரண்டி
காய்ச்சிய பால் - அரை கப்.

செய்முறை:
1. ப்ரெட் துண்டுகளை சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.

2.ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் உருக விட்டு அதனுடன் ப்ரெட் துண்டுகள் சர்க்கரை சேர்த்து பிரட்டி விட்டு இளஞ்சிவப்பாக வரும் பொழுது பால் உலர் திராட்சை நறுக்கிய வால்நட் பருப்பு சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.

3.ஆப்பிளை தோல் விதை நீக்கி மெல்லிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிளை பரத்தி வைத்து எலுமிச்சை சாறில் பாதி,தேனி பாதி ,பட்டை தூளிலும் பாதி தூவி விடவும்.
திரும்பவும் இதே போல் ஆப்பிள் துண்டுகள் ,எலுமிச்சை சாறி,தேன்,பட்டை தூள் தூவி விடவும்.

4.அதன் மேல் ரெடி செய்த ப்ரெட் கலவையை பரத்தி வைத்து கொஞ்சம் பால் தெளித்து மூடி வைக்கவும்.ஆப்பிளில் வேகும் பொழுது தண்ணீர் ஊறும்.

5.எலெக்ட்ரிக் அவனை 250 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.30- 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.ஆறிய பின்பு அது இறுகி விடும் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து, வெளியே வைத்தும் பரிமாற்லாம்.ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.

சுவையான சத்தான ஆரோக்கியமான பேக்ட் ஆப்பிள் புட்டிங் ரெடி.

இதனை ஓவனில் வைக்காமல் அப்படியே ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பவுலில் செட் செய்து அலுமினியம் ஃபாயில் கொண்டு கவர் செய்து குக்கரில் ஆவியில் அரைமணி நேரம் வேக வைத்தும் எடுக்கலாம்.இது பேனசோனிக் ரெசிப்பி புத்தகத்தில் பார்த்து செய்தேன்.உங்கள் அனைவரின் சார்பாக நம்ம ஜலீலா ருசித்து விட்டு மிக அருமை என்று பாராட்டினார்கள்.

விருப்பம் போல் அலங்கரித்து பரிமாறலாம். நான் இதனை செர்ரி, பிஸ்தா,பாதாம் ப்ளேக்ஸ் உபயோகித்து அலங்கரித்து பரிமாறினேன்.கட் செய்து பரிமாறவும்.
என்னுடைய இந்த குறிப்பின் படிப்படியான புகைப்படத்தை காண இங்கு செல்லவும்.

எனது டேட் புட்டிங் குறிப்பையும் செய்து பாருங்கள். டேட் புட்டிங் போலவே இந்த ஆப்பிள் புட்டிங்கையும் ஸ்டீம் செய்து எடுக்கலாம்.

- ஆசியா உமர்.



Sunday, June 17, 2012

சிக்கன் கோலா உருண்டை / சிக்கன் ஃபிங்கர்ஸ் /Chicken balls / Fingers


தேவையான பொருட்கள்;
எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - கால் கிலோ
முட்டை - 1
பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய புதினா - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்,சீரக,சோம்பு,கரம்மசாலா - தலா கால்டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
உப்பு - தேவைக்கு.
(பரிமாறும் அளவு - 4 நபர்களுக்கு.)

சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி, உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும்.
பொட்டுக்கடலையை பொடித்து கொள்ளவும்.
வேக வைத்த சிக்கனை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
அடுத்து மிக்ஸியில் வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா, மல்லி இலையையும் பர பரவென்று சுற்றி எடுக்கவும்.

அரைத்த சிக்கன், பொட்டுக்கடலை மாவு, முட்டை, அரைத்த வெங்காயம்,மல்லி,புதினா,பச்சை மிளகாய் விழுது,மிளகு,சீரக,சோம்பு,கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.


கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காயவும் கோலா உருண்டைகளை மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.பொரிக்கும் பொழுது எண்ணெய் அவ்வளவாக குடிக்காது.


சுவையான சிக்கன் கோலா உருண்டை ரெடி. இதனை அப்படியே பண்டம் போல் சாப்பிடலாம், சைட் டிஷ் ஆகவும் பரிமாறலாம்.




பார்ட்டியில் பரிமாறினால் சிறு குழந்தைகளும் போட்டி போட்டி கொண்டு சாப்பிடுவார்கள்.கோலா உருண்டை உள்ளே சாஃப்டாக வெளியே கிரிஸ்பாக இருக்கும்.



இந்த கோலா உருண்டைக்கு ரெடி செய்தவற்றை இப்படி ஃபிங்கர்ஸ் மாதிரி உருட்டி ப்ரெட் கிரெம்ஸில் பிரட்டி நன்கு அழுத்தி ஷேப் செய்து இப்படியும் பொரித்து எடுக்கலாம்.ப்ரெட் கிரெம்ஸ் நன்கு பொடித்து இருக்க வேண்டும்.


சுவையான சிக்கன் ஃபிங்கர்ஸ் ரெடி. ப்ரெட் கிரெம்சில் பிரட்டாமல் உருண்டைகளாக பொரித்தால் கோலா உருண்டை.நீளவாக்கில் திரட்டி ப்ரெட் கிரெம்ஸில் தோய்த்து பொரித்தால் சிக்கன் ஃபிங்கர்ஸ்.(டூ இன் ஒன்.)குழந்தைகளுக்கு சிறிது காரம் குறைத்து இதே முறையில் செய்து கொடுக்கவும்.


சிக்கன் ஃபிங்கர்ஸ் டொமட்டோ சாஸ் உடன் பரிமாறலாம். மூன்று வயது குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

boneless chicken - 250 gm

egg - 1

roasted gram flour - 3 tbsp

chopped onion- 2 tbsp

chopped coriander leaves - 2 tbsp

chopped mint leaves - 1 tbsp

ginger garlic paste - 1 tsp

pepper powder - half tsp

turmeric,cumin, fennel,karam masala powder- each quarter tsp

oil - required

Bread crumbs - half - one cup

salt - to taste.

Steps to follow:

Wash, drain and cook the chicken pieces with salt, turmeric and ginger garlic paste. Grind the roasted channa dal. Then grind,onion,chillies,corinader and mint leaves.

Then mince the cooked chicken pieces.

In a bowl add cooked minced chicken, besan flour, beaten egg, ground onion,chilli,corinader,mint paste, pepper,cumin,fennel,karam masala and salt to taste.Mix well and make into small balls.

Heat oil in a pan pan and fry until golden brown colour. Drain and serve.

Tasty chicken balls are ready to serve.Serve this as a starter or side dish.

We can make chicken fingers with the same mix. Shape like kabab and roll it in bread crumbs and fry until golden brown colour.

Serve the chicken fingers with tomato sauce. Small Children would love to have this.

Monday, June 11, 2012

பூண்டு சாஸ் (Garlic Sauce) /மை ஹேண்ட் ப்ளெண்டர்

பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு பதிவிட்டு நாளாகுது, எனவே கார்லிக் சாஸ் குறிப்போடு என்னுடைய ஹேண்ட் ப்ளெண்டர் பற்றிய ஒரு பகிர்வு.

இந்த ப்ளெண்டர் சாப், மிக்ஸ், விஷ்க் ஆகிய மூன்று வேலையும் செய்யும்.கீரை கடைய,பருப்பு கடைய, கலக்க,முட்டை அடிக்க, வெங்காயம்,தக்காளி, காய்கறி,இஞ்சி பூண்டு பொடியாக சிதைக்க என்று பல வேலை செய்யும். எங்க வீட்டில் அடிக்கடி கிரில் சிக்கன் செய்வதால் இந்த கார்லிக் சாஸ், ஹமூஸ், முதப்பல் தேவைப்படும். ஹமூஸ் முதப்பல் எல்லாம் மிக்ஸியில் செய்து விடலாம். ஆனால் இந்த கார்லிக் சாஸ் கூட மிக்ஸி பெரிய ஜார் உபயோகித்து செய்யலாம்.ஆனால் இந்த ப்ளெண்டர் இருந்தால் வசதியாக இருக்கும் எனப்பட்டதால் இதுவும் வாங்கி ஒரு வருஷமாக ஒரிரு தடவை செய்து விட்டு மூலையில் இருந்தது. செய்ய சோம்பல் பட்டு வெளியே செல்லும் பொழுது சூப்பர் பூண்டு சாஸ் தான் கிடைக்குதேன்னு வாங்கி வந்து விடுவது வழக்கம். அந்த ப்ளெண்டர் அழுதுகிட்டு இருக்கு, அதை என்னன்னு பாருன்னு அவர் சொன்னதால் இப்ப வெளியே எடுத்தாச்சு.


பூண்டு சாஸ் :


தேவையான பொருட்கள்:


பூண்டு - 3 பெரிய பல்


முட்டை வெள்ளைக்கரு - 2


எலுமிச்சை ஜூஸ் - 2   டீஸ்பூன்அல்லது சுவைக்கு.


 ரிஃபைண்ட் ஆயில் - 150 மில்லி


உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு பின்ச் (சுவைக்கு தக்க)


அடிக்கும் முட்டை வெள்ளைக்கரு,எண்ணெய்,லைம் ஜூஸ் எல்லாம் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்தால் ஜில்லுன்னு இருக்கும். அதன் பின்பு எடுத்து உபயோகிக்கவும்.

முதலில் பூண்டு பல்லை பாதி வேக்காடாக ஓவன் அல்லது சிறிது ஆவியில் அல்லது தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதை பின்ச் உப்பு சேர்த்து நசுக்கி கொள்ளவும். பின்பு அதனை ப்ளெண்டரில் போட்டு லைம் ஜூஸ் விட்டு சுற்ற விடவும், பின்பு எண்ணெய்,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும். மயோனைஸ் போல் வரும்.அதனை முன்பே செய்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் பொழுது பரிமாறலாம்.

அப்படியே வெள்ளையாக சூப்பராக இருக்கும். சிக்கன் கிரில்,  ஃபிஷ் கிரில் (அல்லது பேக்கிங், பார்பிகியூ) செய்யும் பொழுது சப்பாத்தி, ப்ரெட், நாண், குபூஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இப்படியேயும் பரிமாறலாம்.நான் கொஞ்சம் கெட்டியாக இருக்க அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு,சிறிது மிளகுத்தூள் சேர்த்தும் செய்து பார்த்தேன் .சூப்பராக இருந்தது.



(விரும்பினால்: இப்படியும் செய்யலாம்.
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 டேபிள்ஸ்பூன்(தேவைக்கு))
சுவையான மசித்த உருளைக்கிழங்கு சேர்த்த பூண்டு சாஸ் ரெடி.விருப்பமான உணவுடன் பரிமாறலாம். சாண்ட்விச்,ஷவர்மா செய்யும் பொழுதும் உபயோகித்தால் சூப்பர் சுவையாக இருக்கும். இந்த பூண்டு சாஸ் அரேபிய உணவு வகையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.