Wednesday, November 28, 2012

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு சால்னா / Brinjal Potato Salna

கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் பொதுவாக வீட்டில் எப்பொழுதும் இருக்கும் காய்கறிகள் தான்.இந்த இரண்டு காய்கறியும் எதனோடு சேர்த்து சமைத்தாலும் ருசியினைத் தரும்.தனியாக சமைத்தால் கேட்கவும் வேண்டுமா?

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் - 2
வெள்ளைக் கத்திரிக்காய்  மீடியம் சைஸ்- 3
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100கிராம்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்- அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 5  
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஜ்சள்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும்.தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து வைக்கவும்.


 கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.சிவந்து வரும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
 நறுக்கிய தக்காளி,மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்.
 நறுக்கிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்க்கவும். அல்லது கத்திரிக்காய் சேர்த்து வதக்கி விட்டு உருளைக்கிழங்கை வேக வைத்தும் சேர்க்கலாம்.மசாலா தூள் வகைகளைச் சேர்க்கவும்.

 பிரட்டி விடவும்.
 இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கால் மணி நேரம் வேக விடவும். வெந்து இப்படி காணப்படும்.பின்பு தேவைக்கு உப்பு சேர்க்கவும்.கலந்து விடவும்.

 தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்க்கவும்.சால்னா கெட்டித்தனமைக்கு ஏற்ப தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

 நன்கு கொதித்து தேங்காய் வாடை அடங்கட்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.லேசாக எண்ணெய் மேல் வரும்.அடுப்பை அணைக்கவும்.
சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு சால்னா ரெடி.
ப்லைன் ரைஸ், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

இது கிட்ட தட்ட போட்டி சால்னா போல் மணமாக இருக்கும்.பேச்சிலர்ஸ் ஈசியாக செய்து விடலாம்.

இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

Wednesday, November 21, 2012

சிக்கன் சாசேஜ் சாலட் /Chicken Sausage Salad

வாவ்  ! சாலட் என்று சொன்னாலே அதனை ருசிக்கனும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கை.பச்சை காய்கறிகளைக் கொண்டு செய்வது மிகவும்ஆரோக்கியம். அதனை நம் விருப்பம் போல் பலவிதமாக செய்து அசத்தலாம். பச்சைக்காய்கறிகளோடு வேக வைத்த சிக்கன், மீன்,மற்ற இறைச்சி வகைகள் சேர்த்து, மேலை நாடுகளில்  முழு நேர உணவாகவே சாப்பிடுவது வழக்கம். பொதுவாக என் வீட்டில் சாலட்,சாண்ட்விச் செய்வது என் பிள்ளைகள் வேலை.என் மகள் நேற்று செய்தது தான் இது.அவள் செய்யும் பொழுது நான் படமெடுத்தேன் அவ்வளவே. சாலட்டின் ருசி அதனை நறுக்குவதிலும் மிக்ஸ் செய்வதிலும் தான் இருக்கு. இனி உங்களுக்காக அந்த பகிர்வு.



தேவையான பொருட்கள்:
சிக்கன் சாசேஜ் - வேகவைத்து நறுக்கியது -4
லெட்டூஸ் இலைகள் நறுக்கியது - ஒரு கப்
கேரட் - துருவியது - 1
வெள்ளரி - மெலிதாக  நறுக்கியது - 1
வெங்காயம்  -மெலிதாக நறுக்கியது - 1
கருப்பு ஆலிவ் - உப்பில் ஊறியது - நறுக்கியது  - 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - மிளகுத்தூள் - உப்பு - ருசிக்கு தகுந்தபடி.

பரிமாறும் அளவு - 2 நபர்.

 செய்முறை:
சாசேஜை  கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து வடித்து எடுக்கவும்.ஆறியவுடன் மெலிதாக கட் செய்து வைக்கவும். மேற் சொன்ன அனைத்து காய்கறிகளையும் தயார் செய்து கொள்ளவும்.



ஒரு பவுலில் மேற் சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து தேவைக்கு உப்பு,மிளகுத்தூள்,எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

சுவையான சிக்கன் சாசேஜ் சாலட் ரெடி.
இதனை சும்மாவே ஸ்டார்டராக சாப்பிடலாம். பேச்சிலர்ஸ் ஈசியாக செய்து விடும் குறிப்பு இது.

டிப்ஸ்;
காய்கறிகளை நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு எடுத்தால் கிரிஸ்பாக இருக்கும்.ஐஸ்பெர்க் லெட்டூஸ் கிடைத்தால் அதனையே உபயோகிக்கவும்.லெட்டூஸையும் குளிர்ந்த நீரில் அலசி எடுத்து பொடியாக நறுக்கினால் ஃப்ரெஷாக இருக்கும்.
சாசேஜ் விருப்பமில்லாதவர்கள் மேற் சொன்ன காய்கறிகள் மட்டும் சேர்த்து இந்த சிம்பிள் சாலட் செய்து சாப்பிடலாம்.



இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

Monday, November 19, 2012

கோழி மிளகு பிரட்டல் / Pepper Chicken


இது மனோ அக்காவின் கறி மிளகு பிரட்டல் குறிப்பு பார்த்து நான் சிக்கனில் செய்து பார்த்தேன் .மிக அருமை.வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இனி தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரைக்கிலோ
பரபரவென அரைத்த இஞ்சி,பூண்டு விழுது - தலா ஒரு மேஜைக்கரண்டி
மஞ்சள்,மல்லி,மிளகாய்த்தூள் - தலா அரை தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெங்காயம் - 2
தக்காளி நறுக்கியது - அரை கப்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு
தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு- தேவைக்கு.

 வறுத்து பொடிக்க:
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இஞ்ச் துண்டு
கிராம்பு - 2

மேற் சொன்ன பொருட்களை அடுப்பை சிம்மில் வைத்து மணம் வருமாறு வறுத்து எடுக்கவும்.வறுத்தவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.அத்துடன்  தேங்காய்த்துருவல் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
சிக்கனை  நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிக்கனுடன் மேலே குறிப்பிட்ட தூள் வகைகள், இஞ்சி பூண்டு சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து வெங்காயம் நன்கு வதக்கவும்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு மசிந்து வரும் வரை வதக்கி விடவும்.
அத்துடன் ரெடி செய்த மசாலா கலந்த சிக்கனை சேர்த்து சிறிது நேரம் நன்கு  பிரட்டி,தேவைக்கு உப்பு சேர்த்து  குக்கர் என்றால் இரண்டு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.அல்லது சிக்கன் வேகும் வரை சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி மூடி வேக வைக்கவும்.(நாம் இஞ்சி பூண்டு விழுதை சிக்கனுடன் சேர்த்து விரவாமல் வெங்காயம் வதங்கிய பின்பும் சேர்க்கலாம்).



சிக்கன் வெந்து இப்படி காணப்படும்.

 அத்துடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்கு பிரட்டி அடுப்பை குறைத்து வைக்கவும். கெட்டியாக பிரட்டியது போல் வரும்,எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.


 சுவையான கோழி மிளகு பிரட்டல் ரெடி.

மட்டனில் செய்ய மனோ அக்காவின் கறி மிளகு பிரட்டல் குறிப்பை பார்க்க கிளிக்கவும்.


இதனை ப்லைன் ரைஸ், புலாவ்,சாம்பார் சாதம்,சப்பாத்தி,பரோட்டவுடன் பரிமாறலாம்.

Saturday, November 17, 2012

அழகிய விருது...!

 விருந்து உண்ண வாங்க ஆங்கில வலைப்பூ நடத்திய  ஃபீஸ்ட் ஃபார் யுவர் குரு போட்டியில் பெஸ்ட் வெஜ் கிரேவி என்ற அருமையான விருது என்னுடைய உல்லித்தீயல் குறிப்பிற்கு கிடைத்திருக்கிறது.மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி விஜி..

Monday, November 12, 2012

சிக்கன் புலாவ் ( குக்கர் முறை) / Chicken Pulav



தேவையான பொருட்கள்;
சிக்கன் - 400 கிராம்
பாசுமதி அல்லது சீரக சம்பா - 2 கப் ( 400 கிராம்)
மீடியம் சைஸ் வெங்காயம் - 2
மீடியம் சைஸ் தக்காளி - 2
மல்லி புதினா தலா அரை கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
அல்லது தேங்காய்ப்பால் பவுடர் 2 மேஜைக்கரண்டி குவியலாக
எலுமிச்சை ஜூஸ் - 2 - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
நெய் ,எண்ணெய் - தலா 50 மில்லி
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு -3- 4 நபர்.
தயார் செய்ய சமைக்க ஆகும் நேரம் - அரை மணி நேரம்.

 முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு கழுவி வடிகட்டிக் கொள்ளவும்.சிக்கனுடன் தேவைக்கு உப்பு தயிர் 2 டேபிள்ஸ்பூன்அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு, பாதி டீஸ்பூன் கரம் மசாலா, கால்டீஸ்பூன் சில்லி பவுடர், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து விரவி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்.அரிசியை ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறத்தில் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்கியதும் கரம் மசாலா பாதி சேர்க்கவும்.நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது வதங்கட்டும்.தக்காளி,மிளகாய்த்தூள் சிறிது உப்பு சேர்த்து கூட்டு போல் ஆகட்டும்.விரவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது மூடி பாதி வேக விடவும்.


இப்படி காணப்படும்.இரண்டு கப் தண்ணீர் +  எடுத்த ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.அல்லது தேங்காய்ப்பால் பவுடரை வெது வெதுப்பான நீரில் கரைத்து அதனை சேர்க்கவும்.கிரேவியில் சிக்கனில் ஊறிய தண்ணீர் இருக்கும்.எனவே அரிசியின் அளவிற்கு ஒன்னரை அளவு தண்ணீர் வைக்கவும்.

 நன்கு கலந்து விட்டு உப்பு சரிபார்க்கவும்.

 சிறிது கொதி வரும் பொழுது அரிசியை தண்ணீர் சுத்தமாக வடித்து விட்டு சேர்க்கவும்.கொதிக்கும் பொழுது  எலுமிச்சை ஜூஸ் விடவும்.எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பது தனி ருசியையும் மணத்தையும் தரும்,சாதம் உடையாது.கலந்து விட்டு குக்கரை மூடவும்.அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைக்கவும் அல்லது  மீடியம் ப்லேமில் இரண்டு விசில் வந்தவுடன் அணைக்கவும்.
 குக்கரில் ஆவியடங்கியவுடன் திறந்தால் இப்படியிருக்கும்.ஒரு போல் சாதம்,சிக்கன்  உடையாதவாறு பிரட்டி விடவும்.

 திரும்ப மூடி வைத்து விடவும்.பின்பு பரிமாறலாம்.


சுவையான சூடான சிக்கன் புலாவ் ரெடி.

 இது மைல்டாக பிரியாணி மணத்துடன் இருக்கும். வெங்காயப்பச்சடியுடன் பரிமாறவும்.
வெங்காயப் பச்சடிக்கு இரண்டு மீடியம் சைஸ் வெங்காயம் ,ஒரு பச்சை மிளகாய், சிறிது மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.அத்துடன் கெட்டித்தயிர் 100- 200 மில்லி (உங்க ருசிக்கு தக்கபடி)சேர்க்கவும்.தேவைக்கு உப்பு,  ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து விரவவும்.வெங்காயப் பச்சடி ரெடி.

பேச்சிலர்ஸ்காகத்தான் இந்தக் குறிப்பு. ஈசியாக இப்படி செய்து பாருங்க மணமும் சுவையும் அசத்தலாக இருக்கும்.காரம் வேண்டுமானால் பச்சை மிளகாயோ அல்லது மிளகாய்த்தூளோ சிறிது கூட்டிக் கொள்ளவும்.இந்த அளவே சரியாக இருக்கும்.இஞ்சி பூண்டு காரம் வேறு இருக்கும்.


Thursday, November 8, 2012

சிக்கன் சாசேஜ் நூடுல்ஸ் / Chicken Sausage Noodles


 தேவையான பொருட்கள்:
மேகி கறி ஃப்லேவர் நூடுல்ஸ் - 79 கிராம் பாக்கெட் - 1
நறுக்கிய வெங்காயம் -1
உள்ளிருக்கும் மசாலா
சிக்கன் சாசேஜ்  - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

முதலில் 4 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.அதில் இரண்டு சிக்கன் சாசேஜ், நான்காக உடைத்த நூடுல்ஸ் பேக்  போடவும்.இரண்டு நிமிடம் கொதிக்கட்டும்.வடித்து விடவும். சாசேஜ் எடுத்து நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயந்து வரவும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், நறுக்கிய சாசேஜ் சேர்க்கவும்.பேக்கில் உள்ள மசாலாவில் பாதி சேர்க்கவும்.வதக்கவும்.
பின்பு வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.மீதி பேக்கில் உள்ள கறி மசாலாவை நூடுல்ஸ் மேல் தூவவும்.நன்கு கலந்து விடவும்.சூடு வரவும் அடுப்பை அணைக்கவும்.
..

சூடான சுவையான சிக்கன் சாசேஜ் நூடுல்ஸ் ரெடி.விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி இலை  அல்லது ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

Monday, November 5, 2012

கிரீமி சிக்கன் சாசேஜ் பாஸ்தா /Creamy Chicken Sausage Pasta

 தேவையான பொருட்கள் :
வேகவைத்து வடித்த மக்ரோனி/ பாஸ்தா - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய கொடைமிளகாய் - 1
நறுக்கிய பூண்டு பல் - 4
நறுக்கிய தக்காளி - 1
சிக்கன் சூப் கியூப் - 1
சில்லி ப்லேக்ஸ் - அரை டீஸ்பூன்
வேகவைத்த நறுக்கிய  சிக்கன் சாசேஜ் - 5
ஃப்ரெஷ் கிரீம் - 100 மில்லி
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

2 நபருக்கு பரிமாறலாம்.

மக்ரோனியை தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து பக்குவமாக வேகவைத்து வடித்து வைக்கவும்,நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும்.

நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது நறுக்கிய பூண்டு,வெங்காயம்,கொடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
பொடித்த சூப் கியூப் ஒன்று சேர்க்கவும்.ரெடி செய்த நறுக்கிய சிக்கன் சாசேஜ் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.வேக வைத்த மக்ரோனி சேர்க்கவும்.சில்லி ப்ளேக்ஸ் தூவவும்.நன்கு கலந்து விடவும்.சூப் கியூபில் உப்பு இருக்கும்,வேகவைத்த மக்ரோனியிலும் உப்பு போட்டிருப்பதால் உப்பு பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பின்பு ஃப்ரெஷ் கிரீம்  போட்டு நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான சூப்பர் கிரீமி சிக்கன் சாசேஜ் பாஸ்தா ரெடி.

இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

Saturday, November 3, 2012

ஆலு கோபி ஃப்ரை / Aloo Gobi Fry


தேவையான பொருட்கள்;
நறுக்கிய உருளைக்கிழங்கு - 1 கப்
நறுக்கிய காளிப்ளவர் - 1 கப்
சாம்பார் பொடி -1- 2 டீஸ்பூன்
எண்ணெய் -1-  2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல் அல்லது 2 பின்ச் பெருங்காயத்தூள்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

நறுக்கிய உருளைக்கிழங்கு, காளிப்ளவரை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பாதி வேக்காடு வெந்து தண்ணீர் வடித்து எடுக்கவும்.வேக வைத்து ஃப்ரை செய்யும் பொழுது வேலை சுலபமாகவும் முடிந்து விடும்.பக்குவமாகவும் வரும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு கருவேப்பிலை,தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு,காளிப்ளவரை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.வெந்து முறுகலாக வரும் பொழுது தேவைக்கு சாம்பார் பொடி,உப்பு சேர்த்து சிம்மில் வைத்து பிரட்டவும்.நன்கு வதங்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.


சுவையான ஆலுகோபி ஃப்ரை ரெடி.
இது சப்பாத்தி மற்றும் பருப்பு,சாம்பார்,தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.

என்னுடைய காளிப்ளவர் உருளை சப்ஜியை செய்து பார்க்க இங்கு கிளிக்கவும்.