Monday, April 29, 2013

ஹெல்தி பேக்ட் & ஃப்ரைட் ஃபிஷ் / Healthy Baked & Fried Fish

மீனை ஆரோக்கியமாகவும் சாப்பிடனும் ஆனால் ஃப்ரை செய்தும் சாப்பிடனும் என்ற நினைப்பவர்களுக்காகத்தான் இந்த ரெசிப்பி.

தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் முழு மீன் - அரைக் கிலோ(3 எண்ணம்)

மீனில் விரவ மசாலா:
சில்லி பவுடர் -1- 2 டீஸ்பூன்
மஞ்சள், சீரகம், மிளகுத் தூள்கள் - தலா அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  2 டீஸ்பூன்
அல்லது பூண்டு சின்ன வெங்காயம் பேஸ்ட் ருசிக்கு தக்க,
எலுமிச்சை ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் அல்லது மற்ற எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 செய்முறை:
மீனை செதில் எடுத்து வயிற்றை சுத்தம் செய்து,நன்கு அலசி,கல் உப்பு போட்டு உலசி, பல  தடவை வாடை போக அலசி கத்தியால் லேசாக இரு புறமும் கீறி விட்டு எடுத்து தண்ணீர் வடித்து எடுக்கவும்.
மேற் சொன்ன மசாலாவை விரவி மீனை ஒரு மணி நேரம் குறைந்தது ஊற வைக்கவும்.எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ அவ்வளவு ருசி.

 ஊற வைத்த மீனை மைக்ரோவேவில் என்றால் ஓவன் ஃப்ரூஃப்  தட்டில் 2 நிமிடம் வைத்தோ அல்லது எலெக்ட்ரிக் ஒவன் என்றால் அலுமினியம் ஃபாயிலில் வைத்து  பேக் செய்து எடுக்கவும்.
பேக் செய்து எடுத்த மீன் வெந்து  சிறிது தண்ணீர் கசிந்து இருக்கும்.அதனை அப்படியே கவனமாக எடுத்து சூடான நான்ஸ்டிக் பேனில் போடவும்.இரு புறமும்  திருப்பி போட்டு மீன் நன்கு வறுபட்டவுடன் எடுத்து பரிமாறலாம்.
அப்படியே பேனிலேயே சிஸ்லிங் எஃபெக்டுடன் கூட பரிமாறலாம்.

செய்து பாருங்க ,அருமையாக இருக்கும்.அப்படியே லட்டு மாதிரி புட்டு புட்டு சாப்பிடலாம்.முள் கூட தனியாக அப்படியே வந்து விடும்.

சுவையான ஹெல்தி பேக்ட் & ஃப்ரைட் ஃபிஷ் ரெடி.
மசாலா உங்க விருப்பம் தான்.இஞ்சி பூண்டுக்கு பதிலாக பூண்டு,சின்ன வெங்காயம்   கூட தட்டி சேர்க்கலாம்.


Sunday, April 28, 2013

கருவேப்பிலை சிக்கன் / Chicken in Curry Leaves.

 தேவையான பொருட்கள்;
ஊறவைக்க:
சிக்கன் - அரை கிலோ
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - அரை கப்
உப்பு - தேவைக்கு.

ஃப்ரை செய்ய:
பட்டர் - 50 கிராம்
கருவேப்பிலை - அரை கப்
பச்சை மிளகாய் - 1/3 கப் ( வட்டமாக பொடியாக நறுக்கியது)

(சில்லி பவுடர்,பச்சை மிளகாய் உங்கள் சுவைக்கு தகுந்த படி சேர்த்துக் கொள்ளவும்) நாங்கள் காரம் குறைவாக சாப்பிடுவதால் மேற்சொன்ன அளவை விட சிறிது குறைத்துக் கொண்டேன்.

Recipe Source -THANKS  Saute,  fry n bake - facebook page.

சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும்.அத்துடன் ஊற வைக்க சொன்ன பொருட்களை சேர்த்து இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் ஊற வைக்கவும்.

 ஊற வைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.
 இப்படி தண்ணீர் ஊறி அதிலேயே வெந்து வரும்.

 சிக்கன் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
 ஒரு கடாயில் 50 கிராம் பட்டர் சேர்க்கவும்.
 நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.
 ஊற வைத்து வேக வைத்த சிக்கனை சேர்த்து  ஃப்ரை செய்து எடுக்கவும்.
சுவையான கருவேப்பிலை சிக்கன் ரெடி.

இதில் இஞ்சி பூண்டு,கரம் மசாலா,வெங்காயம்,தக்காளி போன்ற பொருட்கள் சேர்க்காமலே சுவை அபாரமாக இருக்கும்.
பிரியப்பட்டால் செய்து பார்க்கவும்.

Wednesday, April 24, 2013

மசாலா பீன்ஸ் / Masala Beans

பொதுவாக பீன்ஸ் என்றால் பொரியல் ,சாம்பார்,குருமா,கூட்டு,வெஜ் பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் இவற்றை செய்ய பயன் படுத்துவோம்.புதிதாக மசாலா பீன்ஸ் செய்திருக்கிறேன்.அருமையாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க.


தேவையான பொருட்கள்;
பீன்ஸ்- கால் கிலோ
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய தக்காளி - சிறியது 1
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்;
நறுக்கிய வெங்காயம் - சிறியது 1
பூண்டு - 3 பற்கள்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்
செய்முறை:

 அரைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.பின்பு அத்துடன் தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.எள்ளு அவ்வளவாக அரை படாது.பரவாயில்லை.
 காம்பு நார் எடுத்து நறுக்கிய பீன்ஸ் உடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.பீன்ஸ் நான் பொரியலுக்கு நறுக்குவது போல் மிகப் பொடியாக நறுக்கி விட்டேன்.நீங்கள் ஒரு இஞ்ச் அளவிற்கு நறுக்கினால்  பார்க்க அழகாக இருக்கும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு காய விடவும்,அரைத்த மசாலாவை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 வேக வைத்த பீன்ஸ் சேர்க்கவும்.வெந்த தண்ணீர் இருந்தாலும் சிறிது சேர்த்து மசாலா,  பீன்ஸ் சேர்ந்து பிரட்டியது போல் வர வேண்டும்.நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
 தக்காளி குழைந்து எல்லாம் சேர்ந்து பிரட்டியது போல் வரும்.

அத்துடன் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி விடவும்,அடுப்பை அணைக்கவும்.
 சுவையான மசாலா பீன்ஸ் ரெடி.இதனை பக்க உணவாக சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.சூடான சாதம்,கெட்டி பருப்பு,அப்பளம்,ரசத்துடன் பரிமாறினால் அபாரம்.காரம் உங்கள் விருப்பம்.
இந்த மசாலா உபயோகித்து உங்கள் விருப்ப காய்கறிகளை செய்து பார்க்கலாம்.

Sending this to 

  
Viji's Soul Food Show and Give Away.

Monday, April 22, 2013

மாங்காய் ஆப்பிள் தொக்கு / Mango Apple Thokku

மாங்காய் சீசன்,ஏதாவது புதுசாக முயற்சி செய்து பார்க்கலாம்னு செய்து பார்த்தது தான் இது.சத்தானதாகவும்,ஆரோக்கியமானதாகவும்  இருக்க வேண்டும் என்று அதனுடன்,ஆப்பிள்,காய்ந்த திராட்சை,இஞ்சி,பூண்டு என்று சேர்த்து செய்து பார்த்தது தான் இந்தக்  குறிப்பு.

 தேவையான பொருட்கள்;
காய் வெட்டான மாம்பழம் - 2
ஆப்பிள் - 1
காய்ந்த திராட்சை - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு -1- 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால்டீஸ்பூன் - அரை டீஸ்பூன்
உப்பு,சீனி - தலா கால் டீஸ்பூன் ( உங்க டேஸ்ட்டுக்கு)
வினிகர் - 1 டீஸ்பூன் ( கெடாமல் இருக்க)
உடனே காலி செய்வதாய் இருந்தால் வினிகர் கூட தேவையில்லை.

இஞ்சி பூண்டு விரும்பாதவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
 மாங்காயை நன்கு கழுவி தோல் சீவி ,கொட்டை அல்லது உள்ளே பருப்பு இருந்தால் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.


 வெங்காயம் ,இஞ்சி பூண்டு ,மாங்காய் ,ஆப்பிள் தோல் சீவி நறுக்கி தயாராய் இருக்க வேண்டும்.
 ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் விட்டு காய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிம்மில் வைத்து 5 நிமிடம் வதக்கவும்.
 பின்பு அத்துடன் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
 பின்பு நறுக்கிய ஆப்பிள் மாங்காய் சேர்க்கவும்.சிறிது வதங்க விடவும்.
 அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி ,காய்ந்த திராட்சை சேர்க்கவும்.
 நன்கு வதங்கட்டும்.
 கால் - அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மீடியமாக  வைத்து மூடி வேக விடவும்.நன்கு வெந்து சுண்டி வரும்.
 மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
 அடுப்பு சிம்மில் இருக்கட்டும். ருசிக்கு உப்பு,சீனி சிறிது சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.விரும்பினால் வினிகர் சேர்த்து நன்கு மீண்டும் கலந்து விடவும்.
 நன்கு இப்படி தொக்கு போல் திரண்டு வரும்.
அடுப்பை அணைக்கவும்.குளிர்ந்த பின்பு ஒரு பவுல் அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும். தேவைக்கு எடுத்து சாப்பிடலாம்.எங்கே எடுத்து வைப்பது ஆளுக்கு இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் உடனே காலியாகி விடும்.நல்ல ஹெல்தியான தொக்கு.வாயும் ருசி படும்.இனிப்பு,புளிப்பு,காரம்னு சுவை அசத்தலாக இருக்கும்.
முதலில் மாங்காய், ஆப்பிள் மட்டும் சேர்த்து தொக்கு செய்யலாம்னு யோசித்தேன்,பின்பு காய்ந்த திராட்சை வீட்டில் நிறைய இருந்ததால் அதனையும் சேர்த்து செய்து பார்த்தேன். சுவை நன்றாக இருந்தது.

சுவையான சத்தான மாங்காய் ஆப்பிள் தொக்கு ரெடி. ஏதாவது வித்தியாசமாய் தொக்கு செய்யலாம்னு நினைக்கிறவங்க செய்து பாருங்க.செய்து ஒரு மணி நேரமாவது கழித்து சாப்பிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து  ருசி அட்டகாசமாக இருக்கும்.and


Wednesday, April 17, 2013

வெந்தயக்கீரை பனீர் பிரியாணி / Methi Paneer Briyaniதேவையான பொருட்கள்;

வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு
(கீரை ஆய்ந்தால் முக்கால் - ஒரு கப் வரும்)
பனீர் துண்டுகள்- 100 கிராம்
பாசுமதி அரிசி - 300 கிராம்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் + நெய் -2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்
மல்லி புதினா நறுக்கியது - தலா ஒரு கை பிடியளவு
பச்சை மிளகாய் கீறியது - 3
தயிர் - அரை கப்
சாஃப்ரான் - 2பின்ச் அல்லது லெமன் எல்லோ கலர் - 1 பின்ச்
உப்பு தேவைக்கு.
3 நபர்களுக்கு:

செய்முறை:
அரிசியை அலசி, கால் மணி நேரம் ஊறவைத்து உதிரியாக உப்பு சேர்த்து வடித்து வைக்கவும்.

கீரையை சுத்தமாக ஆய்ந்து நன்கு மண்போக அலசி எடுக்கவும்.பனீரை குளிர் நீரில் போட்டு வைக்கவும்.

 தேவையானவற்றை நறுக்கி தயார் செய்யவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.இளஞ்சிவப்பாக சிவறும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.சிம்மில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும்.
 நறுக்கிய மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும். நன்கு சுருள வதக்கவும்.கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

 பின்பு அத்துடன் தயிர் சேர்க்கவும்.

 கலந்து விடவும்.
 சுத்தம் செய்து அலசிய வெந்தயக் கீரை சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.
 பனீர் சேர்க்கவும்.கலந்து விடவும்.உப்பு சிறிது தேவைக்கு சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.
 சிறிது கொதிக்கும் நீரில் சாஃப்ரான் அல்லது லெமன் எல்லோ கலரை கரைத்து வைக்கவும்.
 ரெடியான கீரையுடன் சூடான வடித்த சோறை தட்டி பரத்தி விடவும்.
சாஃப்ரான் கரைசலை மேலே பரவலாக ஊற்றி விடவும்.2 டீஸ்பூன் நெய் மேலே விடவும்.

 சிக்கென்று மூடி 10 நிமிடம் தம் போடவும்.அடுப்பை அணைக்கவும்.
 திரும்ப 10 நிமிடம் கழித்து திறந்து ஒரு போல் பிரட்டி பரிமாறவும்.அப்பளம், துவையல், சிப்ஸ் உடன் பரிமாறலாம்.


சுவையான மேத்தி பனீர் பிரியாணி ரெடி.
அப்பளம்,துவையல்,சிப்ஸ் உடன் பரிமாறலாம்.
ஆரோக்கியமான சத்தான குறிப்பு.விருப்பப்பட்டால் செய்து பாருங்க.அருமையாகயிருந்தது.
லஞ்ச் பாக்ஸில் எடுத்து செல்ல ஏற்றது.

வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து சாப்பிடலாம். வெந்தயக்கீரை உடல் நலத்திற்கு மிக நல்லது, அதனை பருப்புடன் சேர்த்து பொதுவாக சமைப்போம்.மாறுதலாக பனீருடன் சேர்த்து இந்த பிரியாணியாக  செய்து பாருங்க.
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. 
வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. இனி குறிப்பிற்கு வருவோம்.