Friday, September 13, 2013

முதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு

முதல் பதிவின் சந்தோஷம் ஸாதிகா தொடர்பதிவினை எழுதுமாறு அன்பாக அழைப்பு விடுத்து இருந்தாங்க.என் வலைப்பூவை திரும்பிப் பார்க்கச் செய்து என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்திய எல்லாப் புகழும் இறைவனுக்கே ! வலைப்பூ உரிமையாளர் தோழி ஸாதிகாவிற்கு மனமார்ந்த நன்றி.

2010 பிப்ரவரி 13 தான் நாமும் ஒரு வலைப்பூ தொடங்கலாம் என்று டக்கென்று முடிவெடுத்தேன். மாமாவிற்கு சுகக்குறைவு ஏற்பட்டதால் ஊரில் ஒரு வருடம் இருக்க நேரிட்டது. அந்த சமயம் என்னை வேறு சிக்கன் குனியா தாக்கி வீட்டை விட்டு வெளியே போக முடியாதளவு வலி, உடல் நலக் குறைவு என்று அவதிபட்டுக் கொண்டிருந்தேன். பொழுதும் போகலைதோழிகள் எல்லாம் வலைப்பூ தொடங்கி வந்த நேரம், வலைப்பூ ஆரம்பிக்கவில்லையா என்ற தோழிகளின் கேள்விக்கு, விடையாகவே நாமும் ஆரம்பித்து விடலாம் என்று நினைத்தேன். அறுசுவை, தமிழ்க்குடும்பத்தில் சமையல் குறிப்புக்கள் கொடுத்த அனுபவம் கை கொடுத்தது. பேசாமல் சமையல் வலைப்பூவே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. வலைப்பூ எப்படி உண்டாக்குவது, டெம்ப்லேட் எல்லாம் ரெடி செய்ய  வேண்டுமென்ற கவலை வேறு.

சரி என்று எங்கள் ஊரில் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட ஒரு கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்று  அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும், எனக்கு உதவ முடியுமா? என்று கேட்டேன்.ப்ளாக்கா? அப்படி என்றால் என்ன? என்று என்னிடமே திருப்பி கேட்டார், சரி என்று பல வலைப்பூக்களை திறந்து காட்டினேன். எனக்கு இது பற்றி தெரியவில்லையே! நாளைக்கு வாங்க, உங்களுக்கு நான் தெரிந்து கொண்டு சொல்லி தருகிறேன்,என்றார்.

மறுநாள் எங்கள் அக்கா மகன் ஹாஜி தற்செயலாக எங்கள் வீடு வரவே, அவரிடம் ப்ளாக் பற்றி தெரியுமான்னு கேட்டேன். அது ஒண்ணுமில்லை சாச்சி, நான் ஆரம்பித்து தருகிறேன்,என்று வழிகாட்டினார். மிக்க  நன்றி ஹாஜி. சமையல் வலைப்பூ என்று முடிவாகிவிட்டது, சரி என்ன பெயர் வைக்கலாம்? என்று பல தலைப்புக்கள் யோசித்ததில்  தோழி அதிரா அறுசுவையில் நடத்திய சமைத்து அசத்தலாம் என்ற பகுதி நினைவிற்கு வந்தது. இந்தப் பெயர் ரொம்ப அசத்தலாக இருக்கு என்று என்னுடன் இருந்த என் மைனி மகள் ரூஹியும் சொல்லவே இது தான் தலைப்பு என மனம் முடிவு செய்து விட்டது. தோழி அதிராவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

சமைத்து அசத்தலாம்

அழைப்பிதழ்திறப்புவிழா என்று அசத்தலாக வலைப்பூவை தொடங்கினேன். என்ன லோகோ வைப்பது என்று கூகிள் செய்த பொழுது இதயவடிவில் காய்கறிகளுடன் கூடிய என் இனிய லோகோவை கண்டுபிடித்து முடிவு செய்தேன். வலைப்பூவை என் உயிரினும் இனிய கணவருக்கும் என் கண்ணின் மணிகளாம் என்னுயிர்க் குழந்தைகளுக்கும் அன்புப் பரிசாக அளித்தேன். அறிவித்தேன். மகிழ்ந்தேன். வெளிநாட்டில் இருந்த என் கணவருக்கும், அறுசுவை அட்மின் பாபு, தமிழ்குடும்ப அட்மின் தமிழ்நேசன், அன்பான நட்புள்ளங்கள், மற்றும் அருமை உறவினர்களுக்கும் வலைப்பூ ஆரம்பிக்கப் போகும் விபரம், ஆரம்பித்த பின்பு அதன் லின்க் அனுப்பினேன். அனைவரும் மெயிலில் என்னை உற்சாகப்படுத்தினார்கள். முதல் மூன்று கருத்துக்களை அறுசுவை தோழி ஜலீலா,ஸாதிகா,செல்வியக்கா மற்றும் தோழிகளும்,சகோதரர்களும் உடன் வந்து கருத்து தெரிவித்து ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தார்கள்.


ஆர்வக் கோளாறில் வலைப்பூ ஆரம்பித்த அன்று எங்கள் வீட்டில் செய்த அயிரை மீன் கூட்டையே முதலில் மொபைலில் படம் பிடித்தேன். எப்படி அப்லோட் செய்வது என்று தெரியவில்லை, மருமகள் ரூஹியின் உதவியுடன் எல்லாம் முடிந்து முதல் குறிப்பும் கொடுத்தேன். அதில் தான் செல்விக்கா வந்து முதன் முதலாய் ஒரு இனிப்பு பகிர்ந்திருக்கலாமேன்னு சொன்னாங்க, அப்ப தான் ஆமா ,பகிர்ந்திருக்கலாம் தான் என்று தோன்றியது. என்றாலும் அயிரை மீன் அரிதாக கிடைப்பது என்பதால் அது கூட சந்தோஷமாகத்தான் இருந்தது. தங்கை சுஹைனா வந்து சமையல் தவிர உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அவற்றை எல்லாம் பகிருங்கள், என்றார். நன்றி சுஹைனா. அதன் பின்பு அனுபவம், கதை, கவிதை என்றும் பகிர ஆரம்பித்தேன். 

சமைத்து அசத்தலாமில் இன்று வரை உங்கள் அனைவரின் ஆதரவுடன் நல்லவிதமாக குறிப்புக்கள் மற்றும் என் மனதிற்கு பிடித்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து வருகிறேன். ஆதரவளிக்கும் அனைத்து அன்பு நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.என் வலைப்பூவில் முதல் பதிவிடும் பொழுது ஏற்பட்ட உணர்ச்சிக் களிப்பை இன்று இந்த தொடர் பதிவின் மூலம் என்னை நினைக்கச் செய்த தோழி ஸாதிகாவிற்கு மீண்டும் என் அன்பார்ந்த நன்றி.  என்னால் முடியும் வரை என் குறிப்புக்கள் தொடரும் என்ற நம்பிக்கையோடு, 
என்றென்றும் அன்புடன்,
திருமதி.ஆசியா உமர்.

பின்குறிப்பு ; விருப்பப்படும் வலைப்பூ நட்புள்ளங்கள் இத்தொடர் பதிவினை தொடரலாம்.

18 comments:

கோமதி அரசு said...

முதல் பதிவிடும் பொழுது ஏற்பட்ட உணர்ச்சிக் களிப்பை படித்தேன் மகிழ்ந்தேன்.

பதிவு மிக நன்றாக இருக்கிறது ஆசியா.

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

தொடர்ந்து அசத்திட்டு தான் இருக்கீங்க! முதல் பதிவின் சந்தோஷம் நிச்சயம் மனதிற்கினிய ஒன்று தான்......

Mahi said...

தொடர்ந்து சமைத்து அசத்த வாழ்த்துக்கள் ஆசியாக்கா! மலரும் நினைவுகளைப் படிக்க நன்றாக இருந்தது. :)

ஸாதிகா said...

நன்றி ஆசியா.அழைப்பை உடன் ஏற்று பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி.வலைப்பூ ஆரம்பித்ததற்கு ஏதுவாக இருந்த அன்புள்ளங்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்து இருப்பது உங்கள் பண்பினை காட்டுகிறது தோழி.அனுபவங்களை படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக உள்ளது.தொடருங்கள் தோழி,

கோவை2தில்லி said...

முதல் பதிவு இட்ட சந்தோஷம் இன்னும் உங்களிடத்தில் இருக்கு...

தொடர்ந்து அசத்துங்க...உங்க லோகோவும் வெகுவே அழகு.

Jaleela Kamal said...

முதல் குறிப்பு போட்டு அது பப்லிஷ் பண்னதும் ஹே நாமும் வெப்சைட் போலவே ஒரு பதிவு போட்டு விட்டோம் என்று நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை, அதே சந்தோஷம் இங்கும் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

Saratha said...

மலரும் நினைவுகளை அப்படியே கொடுத்திருக்கீங்க.எனக்கும் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது.

S.Menaga said...

தொடர்ந்து சமைத்து அசத்த வாழ்த்துக்கள் அக்கா,முதல் பதிவின் சந்தோஷமே தனிதான்..

athira said...

அடடா முதல் படிவின் சந்தோசம் இப்பவரை தெரிகிறது.. கிட்டத்தட்ட இது ஒரு, பிரசவம்போலதான் அனைவருக்கும் இருக்கிறது:). வலைப்பூ ஆரம்பித்தமையால்ல்.. மனதுக்கும் உடலுக்கும் எவ்ளோ புத்துணர்வு கிடைக்கிறது எமக்கு.

athira said...

ஓ தலைப்புக்கு என், “கொப்பிவலதை” வைத்தமையால் எனக்கு அதுக்கு பீஸ் தரோணும் ஆசியா:) .

தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

கோமதியக்கா கருத்திற்கு மிக்க நன்றி.

தனபாலன் சார் நன்றி,மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

மஹி மிக்க நன்றி.

Asiya Omar said...

ஸாதிகா தொடர் அழைப்பிற்கு நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

சாரதா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

Asiya Omar said...

அதிரா வாங்க,மிக்க மகிழ்ச்சி,நன்றி.ஃபீஸ் தானே தந்து விட்டால் போச்சு.வாழ்த்திற்கு மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் பதிவிடும் பொழுது ஏற்பட்ட உணர்ச்சிக் களிப்பினை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Asiya Omar said...

மிக்க நன்றி வைகோ சார், வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

VijiParthiban said...

தொடர்ந்து சமைத்து அசத்த வாழ்த்துக்கள் ஆசியாக்கா....

இமா said...

அட! அட! அட! சூப்பர் ஆசியா.
பெயர் உபயம் அதிரா & அறுசுவையா! முன்பு நினைப்பேன், இது அதிராட ட்ரெய்ன் போல இருக்கே என்று. சந்தோஷம்.
சுவாரசியமான இடுகைகள் பல கொடுக்க என் அன்பு வாழ்த்துகள்.