Tuesday, September 10, 2013

திருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi


என் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால்
நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தியாச்சு.
நெல்லையில் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் பக்குவப் படி இந்த சொதியை செய்வதுண்டு.நான் ருசியாகவும் அதன் தனித்தன்மை மிக்க சுவை மாறமலும் இருக்குமாறு செய்து பரிமாறியிருக்கிறேன்.

என்னவொரு ருசி ! நீங்களும் செய்து பாருங்க.இந்த பகிர்வில் தோழிகள் நீங்களும் கலந்து கொள்ளலாம்.


இனி தேவையான பொருட்கள்;
கேரட்,பீன்ஸ் அல்லது பச்சை பட்டாணி,உருளைக்கிழங்கு,முருங்கைக்காய் சேர்த்து கால் கிலோ.
இஞ்சி ஒரு இஞ்ச் துண்டு,பச்சை மிளகாய் - 3 ,சீரகம் அரை - 1டீஸ்பூன் நைசாக அரைத்து வைக்கவும்.
4 -6 பல் பூண்டு தட்டி வைக்கவும்.


 ஒரு பெரிய வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
ஒரு தேங்காயில் திக் தேங்காய் பால் ஒரு கப், பின்பு இரண்டாம் பால்,மூன்றாம் பால் எடுத்து வைக்கவும்.

50கிராம் பாசிப்பருப்பை லேசாக மணம் வரும் படி வறுத்து ஊறவைத்து நன்கு வேக வைத்து எடுத்து வைக்கவும்.


தாளிக்க :
எண்ணெய் - 2+2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு,
உப்பு தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4-6 நபர்கள்.

இனி செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும்.


 இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப்பால்  பால் சேர்த்து காய்கறியை சேர்க்கவும்.
 அரைத்த இஞ்சி,பச்சை மிளகாய்,சீரக விழுதை சேர்க்கவும்.
 நன்கு கொதி வந்து காய்கள் வெந்து வரும்.

 தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 வேக வைத்த பாசிப்பருப்பு சேர்க்கவும்.

 ஒரு சேர கொதித்து கெட்டியாக குழம்பு வரும்.

 கெட்டியான முதல் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

 கலந்து விடவும்.அடுப்பை அணைக்கவும்.கொதிக்க விடக் கூடாது.தேங்காய்ப்பால் திரிந்து விடும்.
 ஒரு தாளிப்பு கரண்டியில்  எண்ணெய் காயவிட்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.கலந்து விட்டு பரிமாறவும்.

ஆளை அசரடிக்கும் சுவையும் மணமுள்ள திருநெல்வேலி சொதி ரெடி.
இருக்க இருக்க இருகி கெட்டியாக சூப்பராக இருக்கும்.


இந்த சொதியை சூடான சாதம்,
புலாவ்,பிரியாணி,ஆப்பம்,இடியாப்பம்,சப்பாத்தி,பரோட்டா வகைகளுடன் பரிமாறலாம்.
நீங்களும் செய்து பாருங்க ஒரு வயது குழந்தை முதல் வீட்டில் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

29 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை... படங்களுடன் செய்முறைக்கு நன்றி...

இளமதி said...

ஆசியா...
//ஆளை அசரடிக்கும் சுவையும் மணமுள்ள திருநெல்வேலி சொதி ரெடி//

உங்க எழுத்துகளாலும், நல்ல குறிப்பு, அழகான படங்களாலும் அசரடிக்கிறீங்க...:)

அருமையான சொதி!
செய்து பார்க்கும் லிஸ்ட்டில் இதுவும்...

நன்றியும் வாழ்த்துக்களும்!

Priya Anandakumar said...

Simply superb Sothi akka, very very delicious...
Thanks for linking it to the wtml event akka...
Waiting for more and more delicious entries from you

Saratha said...

செய்முறை விளக்கம் அருமை.எங்க அம்மாவும் இதே முறையில் தான் செய்வாங்க.

Mrs.Mano Saminathan said...

ஊரிலிருந்து வந்ததுமே சுறுசுறுப்புடன் பதிவுகலைப்போட்டு அசத்துகிறீர்கள் ஆசியா! திருநெல்வெலி சொதி குறிப்பு மிக நன்றாக இருக்கிறது. செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுவரை சாப்பிட்டதில்லை.

அருமையான சொதி !

சாப்பிட்டால் என் கதி ? ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

திருநெல்வேலி சைவ குடும்பத்தில் திருமணம் முடிந்த மறுநாள் மறுவீடுசாப்பாட்டுக்கு சொதி நிச்சயம் உண்டு. காலை பலகார பந்தி மதியம்சொதி, இஞ்சி துவையல், வழைக்காய் வறுவல், உருளை காரப்பொரியல் அடைபிரதமன் பாயாசம் எல்லாம் சாப்பிட்ட பின் தான் எல்லோரும் ஊருக்கு போவார்கள்.
வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ஒரு நாள் சொதி கண்டிப்பாய் உண்டு.
எங்கள் ஊர் சொதி செய்முறையை அழகாய் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.
படங்கள் எல்லாம் அழகு.
முக்கிய குறிப்பு கொடுத்தீர்களே! அது தான் சொதியில் முக்கியமானது கொதிக்க விட்டுவிடக் கூடாது.
அருமை.

Asiya Omar said...

தனபாலன் சார் உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நன்றி இ(ஈ)ளமதி.உங்க கவிதைகளை விடவா?பாராடிற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

ப்ரியா வருகைக்கும் கொடுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சாரதா கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

மனோ அக்கா வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.ஆமாம் அக்கா,அனைவரும் தினமும் காலையில் கிளம்பி சென்ற பிறகு நான் என் வலைப்பூ அலுவலுக்கு வந்துவிட்டு தான் மற்ற வேலை.சொதி ஆப்பம்,இடியாப்பத்திற்கு மிகப் பொருத்தம்.

Asiya Omar said...

வை.கோ சார் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
//அருமையான சொதி !

சாப்பிட்டால் என் கதி ? ;)//

ஒன்றும் ஆகாது,சாப்பிட்டு விட்டு உங்க வீட்டுப் பக்கம் இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மட்டும் சோம்பாமல் ஏறி இறங்கிடுங்க.:)

Asiya Omar said...

கோமதியக்கா வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.சொதி செய்து பகிர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.அபாரச் சுவை.

Manjubashini Sampathkumar said...

ஆஹா....

நான் வெஜ் பிரியாணி செய்யும்போது தொட்டுக்க ஒவ்வொரு முறையும் குருமா செய்வேன். இனி இந்த முறை இப்படி செய்து பார்க்கிறேன்பா.. பார்க்கவே இத்தனை அழகா இருக்கே. ப்யூர் வைட் கலர்ல குழம்பு பார்த்து எவ்ளோ நாளாச்சு.. அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு... கண்டிப்பா இந்த வெள்ளி வெஜ் பிரியாணிக்கு தொட்டுக்க சொதி தான்..

ஸாதிகா said...

இதுதா சொதியா.இங்கே வரை மணமணக்கிறது.

Kalpana Sareesh said...

wow good one..bookmarked

Jaleela Kamal said...

சொதி மிக அருமை

S.Menaga said...

சூப்பர்ர்க்கா...என் இதே பதிவு ஒன்றும் டிராப்டில் இருக்கு

Vimitha Anand said...

Aapathukku super a irukkum

priyasaki said...

நாங்க இடியாப்பம் என்றா சொதிதான் .ஆனா இப்படியில்லை..இம்முறையில்
செய்துபார்க்கிறேன். மிக அழகாக பதிவிடுறீங்க.நன்றி.

Priya Suresh said...

Idyappamum sothiyum, nenachale pasikuthu..

mymoon said...

Mouthwatering Asiya akka,
will try this soon...

How to take first,second&third milk from scrapped coconut akka...I tried once but I got only one time milk..(remaining all spoiled)

If time permits,just advice me this milk getting process akka.

THANKS,
MYMOONMOHIDEEN

Asiya Omar said...

மஞ்சுளா மிக்க நன்றி.செய்து பாருங்க கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் இருக்கும்,பச்சை மிளகாய் விருப்பப்ட்டால் கூட்டிக் கொள்ளலாம்.

ஸாதிகா மிக்க நன்றி.

கல்பனா மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

விமிதா மிக்க நன்றி.

ப்ரியசகி மிக்க நன்றி.உங்க செய்முறையையும் பகிருங்களேன்.கருத்திற்கு மகிழ்ச்சி.

ப்ரியா மிக்க நன்றி.

Asiya Omar said...

மைமூன் ,வருகைக்கு நன்றி.
பொதுவாக தேங்காய்த்துருவலை சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மூன்று சுற்று சுற்றி பின்பு நன்கு ஒரு காட்டன் அல்லது பழைய பனியன் துண்டில் போட்டு பிழிந்து முதல் பால் எடுத்து விடுவேன்.இரண்டாம்,மூன்றாம் பால் சிறிது உப்பு சேர்த்து வெது வெதுப்பான நீர் சேர்த்து நன்கு பிணைந்தோ அல்லது மிக்ஸியில் இரண்டு சுற்றியோ பின்பு பிழிந்து எடுக்க வேண்டும் பால் முழுவதும் வந்து விட்டால் தேங்காய்ப்பூ வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறதிற்கு மாறிவிடும்.அவ்வளவே!

mymoon said...

How nicely explained.unga works ku between en doubtsaium clear panniteenga..Thank you soo much akka....seekramae senju paarthu sollugiren...

Thanks&regards,
mymoonmohideen

Mahi said...

Sodhi looks delicious Akka! I never dare to extract fresh coconut milk so far! ;) to be frank, am so lazy to do that! :) ;)

Dhuruvam DM said...

இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்தால் திரிந்து போகாதா?
எனது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார் அவருக்கு இப்படி முதல் தேங்காய் சேர்த்து கொடுக்கலாமா ?
நன்றி

Asiya Omar said...

மிக்க நன்றி மகி.

துருவன் வருகைக்கு நன்றி.இரண்டாம்,மூன்றாம் பால் சேர்ந்து 3 கப் அளவு பால் தண்ணியாக இருப்பதால் அவ்வளவாக திரியாது.
படங்களைப்பாருங்க,பொங்கி வரும்,கவனமாக வழியாத படி வேக வைக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கலாம் தான்,ஏதோ சமைப்பதில் கொஞ்சம் சாப்பிடுவாங்க,இதில் ஏதும் ஏற்பட்டு விடாது என்றே நான் நினைக்கிறேன்.

மாதேவி said...

இது நம்மஊரு ஸ்பெசலும் கூட.

ஒருமாற்றம் நாங்கள் பருப்பு சேர்க்க மாட்டோம். எனது பகிர்வில் முன்பு பகிர்ந்திருக்கின்றேன்.

கோவை2தில்லி said...

என்னவர் சொதி பற்றி சொல்லிக் கேட்டிருக்கிறேன். நான் இதுவரை செய்ததில்லை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.