Tuesday, October 8, 2013

கூட்டாஞ்சோறு / Kootanchoru


நெல்லை கிராமப்புறங்களில் பாரம்பரிய உணவான  இந்த கூட்டாஞ்சோறு மிகவும் பிரசித்தமானது.அதனை எப்படி இலகுவாக செய்வது என்று இந்த வார தமிழர் சமையலில் பார்ப்போம்.

நாட்டுக்காய்கறிகள்,கீரை,அரிசி,பருப்பு, அரைத்த மசால் என்று கூட்டாக சேர்த்து சமைத்து அசத்துவது  தான் கூட்டாஞ்சோறு .

மலரும் நினவுகள்...35 வருடம்  பின்னோக்கி செல்கிறேன்.

இந்த கூட்டாஞ்சோறு எங்கள் சிறு வயதின் விளையாட்டு சமையலில் இடம் பெற்ற ஒரே உணவு. வட்டாரத்தில் தோழிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து  சமைத்து சாப்பிடுவோம். எப்பொழுதும் மூடி கிடக்கும் எங்கள் பழைய வீட்டை திறந்து விடுமுறை நாட்களில் நாங்களே அடுப்பு பற்றி ஆளுக்கொரு பொருளாய் கொண்டு வந்து சமைத்து உண்டோம் எனபதை நினைக்கும் பொழுது இப்பொழுது ஆச்சரியமாகத்தான் உள்ளது.அந்த வீட்டில், கருவேப்பிலை,தென்னை,முருங்கை மரம் பின்பக்கம் இருக்கும், திறந்த வெளியில் விறகு அடுப்பு பற்றி, ஒரே பானையில் சமைத்து உண்ட அந்தக்காலம் எல்லாம் இனி திரும்ப வரவா போகிறது ?

எங்கள் தெருவில் சுளுக்கு தடவும் ஒரு வைத்தியர் இருக்கிறார்.அவர் வீட்டில் வயதான பெத்தம்மா ஒருவர் இருந்தார். அவர் அம்மியில் மஞ்சள்,சீரகம், மிளகாய் வற்றல்,தேங்காய் அரைத்து வெங்காயம் தட்டித்தருவார்.அது தான் இந்த கூட்டாஞ்சோறுக்கு அடிப்படை ருசியை தரும்.கிட்ட தட்ட முப்பத்தைந்து வருடங்கள் முன்பு எங்கள் பால்ய விளையாட்டில் இந்த சமையலும் ஒன்றாக இருந்தது.
சரி அந்த சந்தோஷ நினைவுகளோடு இனி சமையலை கவனிப்போம்.


வீட்டில் உள்ள காய்கறிகளுள் பிடித்தமானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


இனி  சுலபமான செய்முறை:

புழுங்கல் அரிசி - 200 கிராம்
பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
காய்கறிகள் - கால் கிலோ
முருங்கைக்கீரை - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.

அரைத்த மசாலுக்கு:
தேங்காய்த் துருவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
சின்ன வெங்காயம் - 10

தாளிக்க:
எண்ணெய் - 1-2 மேஜைக்கரண்டி
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
வடகம் உடைத்தது - ஒன்று
பெருங்காயம் - கால் டீஸ்பூன்.

மேலே மணத்திற்கு விட  - 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்.

பரிமாறும் அளவு - 3 அல்லது 4 நபர்.

முதலில் அரிசி பருப்பை நன்கு களைந்து அலசி நான்கு  கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
தேவையான காய்கறிகளை நறுக்கி எடுக்கவும்.நான் கத்திரிக்காய் -4, முருங்கைக்காய் -1,கேரட் -1,உருளை -1 எடுத்துள்ளேன்.உங்களிடம் அவரைக்காய்,வாழைக்காய்,மாங்காய் போன்ற காய்கறிகள் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்சொன்னபடி மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.கீரையை ஆய்ந்து நன்கு அலசி காய்கறிகளுடன் தயாராக வைக்கவும்.

அடுப்பை பற்றவும்.குக்கரை ஏற்றி ஊற வைத்த அரிசி பருப்பு கொதி வரட்டும்
மூடி மட்டும் போட்டு அடுப்பை  சிம்மில் வைக்கவும்.
இப்படி அரிசி பருப்பு பாதி வெந்து வரும்.

அரிசி பருப்பை அடுப்பில் ஏற்றியவுடன், ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தயாராக நறுக்கிய காய்கறிகள் வதக்கவும்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.கீரை சேர்த்து வதக்கவும்.அரைத்த மசால் சேர்க்கவும்.கொதி வரட்டும்.

காய்கறிகள்  பாதி வேக்காடு ஆனவுடன்
புளித்தண்ணீர் சேர்க்கவும்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.ஒன்று சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.

வெந்த அரிசி பருப்பில் தயார் செய்த காய்கறிக்கலவை சேர்க்கவும்.
பிரட்டி விடவும்.மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.அளவாய் உப்பு சேர்க்க வேண்டும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து கொதி வரும்.அடுப்பை குறைத்து 7-10 நிமிடம், மூடி வெயிட் போட்டு சிம்மில் வைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
ஒரு சேர பிரட்டி விடவும்.அடியில் ஒட்டாமல் இப்படி வர வேண்டும். சோறு அதிகக் குழைவாக இல்லாமலும், ஒன்றொன்றாக இல்லாமலும் பக்குவமாக  இருக்க வேண்டும்.
தாளிக்க சொன்னபடி  அடுப்பில் வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெடிக்க விடவும், வடகம் சேர்த்து பொரிய விடவும்,பெருங்காயப் பொடி சேர்க்கவும்.தாளித்ததை ரெடியான கூட்டாஞ்சோறுவில் சேர்க்கவும்.

ஒரு போல் பிரட்டி விருப்பப்பட்டால் நெய் சேர்த்து மணக்க மணக்க சூடாக பொரித்த அப்பளம்,வடகம் ,வற்றலுடன் பரிமாறவும்.


சுவையான ஆரோக்கியமான கூட்டாஞ்சோறு ரெடி.நீங்களும் செய்து அசத்துங்க.


இந்த கூட்டாஞ்சோறுவை என் மகனை உண்டாயிருந்த(மாசமாக இருந்த) சமயம் எங்கள் கடையின் கணக்குப்பிள்ளை திரு,ஆண்டியா பிள்ளை அவர்களின்  வீட்டம்மா செய்து கொண்டு வந்து தந்தாங்க, வெரைட்டியாக மற்ற கட்டுச் சாதத்துடன் பெரிய டிபன் கேரியரில் அப்பப்பா, இப்ப நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.நிச்சயம் ஒரு முறையேனும் செய்து பாருங்க.இது முன்பே செய்து என் ஃபைலில் இருந்தது,இப்பொழுது தான் பகிர நேரம் வந்திருக்கிறது.
இக்குறிப்பை காரசாரம் ரேவா தன் ஆங்கில வலைப்பூவில் எத்தனை அழகாய் பகிர்ந்திருக்காங்க பாருங்க.நன்றி ரேவா.


இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.


17 comments:

கோவை2தில்லி said...

சுவையான கூட்டாஞ்சோறு, மலரும் நினைவுகளுடன் படிக்க இனிமையாக இருந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

கூட்டாஞ்சோறு சுவையே தனி...!

இளமதி said...

கூட்டாஞ் சோறு உண்மையிலேயே வாயூற வைக்கின்றது. மிக சுலபமானது.

கலரும் கண்ணைப் பறிக்குது ஆசியா!

அருமை! நல்ல குறிப்புப் பகிர்வு!
வாழ்த்துக்கள்!

Priya Suresh said...

Yennaku ippove kootanchoru saapidanam pola irruku Akka..Super dish.

S.Menaga said...

ஐயோ அக்கா நாக்கு ஊறுது...இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு.சீக்கிரம் செய்து பார்க்கனும்.

Amuds said...

Had tasted it several times at my friend's house in Tuty..was searching for the recipe..thanks for posting it..
Www.cookndine.blogspot.in

Vijayalakshmi Dharmaraj said...

miga arumaiyana kootanchoru... Kramathu manam... seekram seithu parkiren...

Savitha Ganesan said...

Naangalum koottanjoru seidhu sappiduvom akka.
unga post, wn ninaivugalai thatti ezhuppi vittadhu.

ஸாதிகா said...

இதுதான் கூட்டாஞ்சோறா?எங்கள் ஊரில் பல அடுப்புகள் மூட்டி பலரும் பலவிதமாக சமைத்து உண்பதைத்தான் கூட்டாஞ்சோறு என்போம்..

Manjula Bharath said...

I love this delicious kootanchoru looks super inviting and yummy :) so tempting me dear !!

Saratha said...

கூட்டாஞ்சோறுவுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை.

Mahi said...

ஆசியாக்கா, மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஒருமுறை செஞ்சு பார்ஸல்ல அனுப்பிவிடுங்க! ;)

அறுசுவைல பார்த்து ஒருமுறை செய்திருக்கேன். உங்க ரெசிப்பியும் அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கூட்டாஞ்சோறு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Nalini's Kitchen said...

Nice to read about your memories,looks very authentic..My grand mother used to make as my Grandpa is from Tirunelveli..I never tried on my own but had ii one of my friend's place.BTW kootanchoru looks tempting ,wonderful spread...

priyasaki said...

கூட்டாஞ்சோறு அசத்தலா இருக்கு ஆசியா. உங்க நினைவுடன் என் நினைவும் பின்னோக்கியதென்னவோ உண்மை.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி, வருகைக்கு மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

ஆசியா, திருநெல்வேலி கூட்டாஞ்சோறு அருமை.
மலரும் நினைவுகள் என்னையும் அந்த காலக் நினைவுகளுக்கு கொண்டு சென்றது.
மிக அருமையான் செய்முரை கொடுத்தீர்கள். எங்கள் வீடுகளில் விருந்தினர் வந்தால் ஒரு நாள் கூட்டாஞ்சோறு, சொதி எல்லாம் உண்டு.இவை விஷேச அயிட்டங்கள்.
பகிர்வுக்கு நன்றி.
தியாக திருநாள் பண்டிகை இனிமையாக கழிந்து இருக்கும்.
வாழ்த்துக்கள்.