Friday, November 29, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 3 - செல்வி S. முபஷ்ஷரீனா - எலையாடை / Elaiyaadai

சிறப்பு விருந்தினர் பகுதிக்கு  வந்த மூன்றாவது பகிர்வு என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தியதோடல்லாமல்  மிகவும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. வலைப்பூ அல்லாத இவரிடமிருந்து வந்த மெயிலை மிகவும் ஆவலுடன் திறந்தேன்.கண்ணைக் கவர்ந்த அருமையான பாரம்பரிய உணவின் பகிர்வுடன், சிறிய சுய அறிமுகத்தோடு தொடங்கியிருந்தார்.
இதோ அதனை நீங்களே வாசியுங்களேன் !

அஸ்ஸலாமு அலைக்கும் வர்ரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ.
என் பெயர் S. முபஷ்ஷரீனா. ஃபேஸ்புக்கில் முபி ஜன்னத். உங்களோட எல்லா போஸ்ட்டையும் ரெகுலரா பார்த்துட்டு வருவேன் என்னால செய்யமுடியறதை முயற்சி செய்தும் பார்ப்பேன். அல்ஹம்துலில்லாஹ். கெஸ்ட் போஸ்ட் பார்த்தேன் என்னோட முதல் போஸ்ட் இது. இதை இதுக்கு முன்னால உங்க தளத்துல போட்டுருக்கீங்களானு தெரியாது. இது எங்க வீட்டுல செய்யுற ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம். ஈவினிங்க் போல சாப்புடுவோம். 

இது கூடவே PHOTOS ம் ஆட் பண்ணிருக்கேன். 

மிக இனிமையான இந்த பகிர்வின் செய்முறையை பார்ப்போமா?

எலையாடை:


தேவையான பொருட்கள் :-

வாழை இலை -  2 (பெரியது)
அரிசிமாவு - 3/4  கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - 1 (மீடியம் சைஸ்)    
தேங்காய் எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கு.                                     தயாரிக்க :-

1.     வாழை இலையை கழுவி சிறிய நோட்டின் ஒரு பகுதி அளவுக்கு கீரி வைத்துக் கொள்ளவும்.
2.   பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
3.   வெல்லத்தை பொடியாக்கி பாகு காய்ச்சி ( நீர் பதம் ) வடிக்கட்டி வைக்கவும்.
4.   தேங்காயை பொடியாக துருவிக் கொள்ளவும்


செய்முறை :-

1.     வேகவைத்த பாசிப்பருப்பு கலவையையும், வெல்லப்பாகையும், தேங்காயையும்  ஒன்றாக சேர்த்து கலக்கவும் இப்பொழுது பூரணம் தாயார்.
2.   அரிசி மாவில் ஒன்றுக்கு ஒன்று நீரை கொதிக்க வைக்கவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
3.   கொதித்த நீரை அரிசி மாவில் சிறிது சிறிதாக சேர்க்கவும் இடியாப்ப மாவு பதத்திற்கு தயார்படுத்தவும்.
4.   மாவை மீடியமா அளவிற்கு உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
5.   வாழை இலையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி மாவு உருண்டையை அதன் மேல் வைத்து கையினாலயே பரத்தவும்.
6.   அதில் ஒரு பெரிய ஸ்பூன் அளவிற்கு பூரணத்தை வைத்து மடிக்கவும். ஒரு புறத்தை மற்றொரு புறத்துடன் வைத்து மாவு ஒட்டிக்கொள்ளும்படி மடிக்கவும்.
7.   அதை இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவைக்கவும்.
8.   10 நிமிடம் கழித்து எடுக்கவும். இலையை திறக்கவும் .

சுவையான எலையாடை ரெடி. 


மிக அருமையான ஆரோக்கியமான இந்த ஸ்நாக்ஸ் -ஐ நீங்களும் செய்து பாருங்க. 

முபஷ்ஷரீனா அனுப்பிய 25 படங்களில் சில படங்களை மட்டும் தேர்வு செய்து  படங்களை  எடிட் செய்து அவருடைய பெயரை பதிவு செய்து பகிர்ந்திருக்கிறேன். அழகாக படிப்படியாக  படம் எடுத்து அதனை மெயில் செய்து செய்முறை எழுதி அனுப்ப அவர் எடுத்த சிரத்தையும் மிகவும் பாரட்டக்கூடியது.

எனக்கு ரெசிப்பி பெயரில் ஒரு சந்தேகம் வந்தது. இலையடையா அல்லது எலையாடையான்னு மெயில் செய்து கேட்டேன்.அதற்கு முபி, எங்கள்  வீட்டில் எலையாடை என்று தான் சொல்லுவோம் என்று தெரிவித்திருந்தார். 


நானும் கொஞ்சமாக செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. பக்குவமாக செய்ய வேண்டிய பதார்த்தம்.இனி அவருடனான கலந்துரையாடல் ;

ஆசியாக்கா,  என்னோட சமையல் குறிப்பையும் உங்கள் தளத்தில் பதிய இருப்பதற்கு ஜஸக்கல்லாஹ் க்ஹரைன். 

1. முபி, தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?

 என் பெயர் செல்வி. S. முபஷ்ஷரீனா. சொந்த ஊரு கோயமுத்தூர்.

அக்கவுண்டண்டா வொர்க் பண்றேன்.  பொழுது போக்கு புத்தகங்கள் 

வாசிப்பது.  

2. சமையலில் எத்தனை வருட அனுபவம், தங்களின் ரோல் மாடல் யார் ?

 அனுபவம் 3 வருடம் தான். அம்மா தான் ரோல் மாடல்.

3. தங்களின் முதல் சமையல், அந்த முயற்சியில் நடந்த ஏதாவது சுவாரசியம் ?

     முதல் சமையல் UG முடிச்சதும் ஒரு முறை பருப்புச்சாறு ( குழம்பு ) வச்சேன். சாறு லாம் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சு ஆனால் காய்கறியெல்லாம் பெருசு பெருசா கட் பண்ணி போட்டுருந்தேன். அதை எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. பருப்பு குழம்புல துவரம் பருப்புக்கு பதிலா கடலை பருப்பை போட்டு குழம்பு வச்சுட்டேன். ( எனக்கு அப்போ துவரம் பருப்பு எதுனே தெரியாது :P )

4. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள்.

     முட்டை கிரேவி, இட்லி குருமா, பரோட்டா, முட்டை பரோட்டா பூசணிக்கா ஹல்வா

     ஃப்ரெண்ட்ஸ் எப்போ மீட் பண்ணாலும் சிக்கன் கிரேவி, சில்லி சிக்கன் லாம் செஞ்சு கேப்பாங்க.

5. புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் டிப்ஸ்.

     சமைக்க ஆரம்பிக்கும் போது நல்லா வரணும்னு துவா செஞ்சுட்டு சமைக்க தொடங்குங்க.  ஆரம்பத்துல நிறைய தப்பா தான் வரும். வீட்ல இருக்குறவங்க கிண்டல் லாம் பண்ணதான் செய்வாங்க அதுக்காக அப்படியே விட்டுடாதீங்க திரும்ப திரும்ப முயற்சி செய்ங்க முதல்ல நம்ம வீட்ல எப்பவும் சமைக்கிற குழம்பு வகைகள், பொரியல் அதுலாம் முயற்சி செய்ங்க.  அப்புறம் நமக்கே ஒரு ஐடியா கிடைச்சிடும் அப்புறம் புது விதமா சமைக்கலாம். உப்பை எப்பவுமே குறைவா போடுங்க பத்தாட்டி திரும்ப கொஞ்சம் சேர்த்து போட்டுக்கங்க. 

6. தற்காலத்தில் வார இறுதியில் வெளியே செல்லுவது, அப்படியே ஹோட்டலில் சாப்பிடுவது என்பது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டதே ! உங்கள் கருத்து.

     நாங்க வெளில போறதும், ஹோட்டல்களில்  சாப்பிடுவதும் ரொம்ப குறைவு தான். வருஷத்துக்கு 2 முறை அதிக பட்சமா ஹோட்டல்ல சாப்பிட்டுருப்போம். வீட்லையே சமைச்சு சாப்பிடுறது தான் நம்ம ஆரோக்கியத்துக்கு நல்லது. ( வருமானத்துக்கும் அது தான் நல்லது :)  )

7. சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், குறிப்புக்கள் பற்றி சில வரிகள்.

     ஒவ்வொரு சமையலையும் பட விளக்கத்துடன் கொடுத்திருப்பது ரொம்ப பிடிச்சிருக்கு.  எளிமையா புரியவும் செய்யுது. முயற்சி செய்து பார்க்கும் போது ஈஸியா இருக்கு.   குறிப்புகள் நிறைய வித்தியாசமா இருக்கு அதுல வாழைக்காய் தோல் துவையல் ரொம்ப வித்தியாசமாபட்டுச்சு. தோலையும் வீணாக்காம செஞ்சுருந்த விதம் ரொம்ப பிடிச்சது நல்லா டேஸ்ட்டாவும் இருந்தது.  சட்னி அதிகமா (பெருக்கமா ) இருந்துச்சு. 

8. தங்களுக்கு வலைப்பூ ஆரம்பிக்கும் ஆர்வம் இருக்கிறதா? வரும்

 காலங்களில் எல்லோருக்கும் எப்படி ஒரு மெயில் முகவரி இருக்கிறதோ 

அது போல் வலைப்பூ இருப்பதும் சகஜமாகிவிடும் என்ற கருத்து 

நிலவுகிறதே ! நீங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாமே !

ஆர்வம் இருக்கு, ஆனால் அதை என்னால் சரியாக பராமரிக்க முடியாது 

என்பதால் ஆரம்பிக்கவில்லை.


மிக்க நன்றி, அருமையான பதில்கள், மீண்டும் சந்திப்போம் !

ஆர்வத்துடன் கலந்து கொண்ட செல்வி S. முபஷ்ஷரீனாவை வாழ்த்தி 

விடைபெறுவோம்.

அடுத்த வாரமும் மிகவும் சுவாரசியமான சிறப்பு விருந்தினரோடு 

உங்களைச்சந்திக்கிறேன்.

வரும் வாரம் வெள்ளியன்று நகைச்சுவைத் தென்றல் இல்லையில்லை

நகைச்சுவைச் சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தித்த கலக்கல்

அனுபவம்.காத்திருங்கள்.;) ! 


முக்கியக் குறிப்பு:

சிறப்பு விருந்தினர் பகுதிக்கு குறிப்பு  அனுப்பும் பொழுது  சுய 

அறிமுகம் முக்கியம்,  அத்துடன் அனுப்பும் குறிப்பின் ஒரு 

படம் அல்லது பல படங்கள் இணைத்து முதலில் மெயில் செய்யவும். 

குறிப்புகள் எனக்கு மெயிலில்  வரும் வரிசைப்படி பிரதி வாரம் 

வெள்ளியன்று  பகிரப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் 

கொள்கிறேன், இது வரை சிறப்பு விருந்தினர் பகுதிக்கு மெயில் செய்து 

விருப்பம் தெரிவித்தும், குறிப்புகளை அனுப்பியும் வரும் 

நட்புகள் அனைவருக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றி.

Tuesday, November 26, 2013

உளுந்தஞ்சோறு + வரகொத்தமல்லித் துவையல் / Black gram Rice / Coriander Seed Thuvaiyal

நெல்லை கிராமப் புறங்களில் பாரம்பரியமாக சமைத்துப்  பரிமாறும் உளுந்தஞ்சோறும் வர கொத்தமல்லித்துவையலும்.


உளுந்தஞ்சோறு:

தேவையான பொருட்கள்;
புழுங்கல் அரிசி - 1 கப்
கருப்பு உடைத்த உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
(விரும்பினால் - 8 சிறிய பூண்டு பற்கள்)
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவைக்கு
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

விரும்பினால் சீரகம்,பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.எனக்கு இந்த குறிப்பை சொல்லி தந்த அன்புத்தோழி திருமதி உமா சங்கர்  பூண்டு, சீரகம்  சேர்க்காமல் தான் செய்வார்களாம்.

செய்முறை:
உடைத்த கருப்பு  உளுந்தை லேசாக சிவறாமல் மணம் வரும் படி வெதுப்பி வைக்கவும்.வறுக்காமலும்  சேர்க்கலாம்.
அரிசியை களைந்து கொள்ளவும்.
 ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.

 அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.விரும்பினால் அதிகமாக அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நான் மூனரை கப் தண்ணீர் வைத்தேன்.
 தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.பூண்டு விரும்பினால் சேர்க்கவும்.
 தேவைக்கு உப்பும் சேர்த்து கலந்து விடவும்.
 கொதி வரும் பொழுது குக்கரை மூடி மீடியம் நெருப்பில் இரண்டு விசில் வைத்து,சிம்மில் 5 நிமிடம் வைத்து  அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் திறந்தால் இப்படி இருக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து சூட்டோடு பிரட்டி விடவும்.


சுவையான சத்தான உளுந்தஞ்சோறு ரெடி.சூப்பராக இருக்கும் செய்து பாருங்க.அதற்கு காம்பினேஷன்  அவியல் குழம்பும், வர கொத்தமல்லித்துவையலுமாம்.என்னைக் கேட்டால் சும்மாவே சாப்பிடலாம் அல்லது துவையல் மட்டும் போதும்.அத்தனை ருசி.

வர கொத்தமல்லித்துவையல்:
 முழு கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
ஒரு வாணலியில் 2 துளி எண்ணெய் விட்டு வற்றல,கொத்தமல்லியை சிவக்க வறுக்கவும்,


 தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வறுக்கவும்.


 மிக்ஸி சிறிய ஜாரில் வறுத்தவைகளுடன், தேவைக்கு புளி உப்பும் சேர்த்து முதலில் சிறிது பொடிக்கவும்.பின்பு தேவைக்கு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

 சுவையான சத்தான வரகொத்தமல்லித் துவையல் ரெடி.

இதனை ஃப்ரிட்ஜில் அரைத்து வைத்து தேவைக்கு எடுத்து சாப்பிடலாம். கைபடாமல் எடுத்து உபயோகித்தால் .10 நாட்கள் கூட கெடாமல் இருக்கும்.

 பாரம்பரியமாக நெல்லை சுற்று வட்டார கிராமங்களில் உளுந்தஞ்சோறு வரகொத்தமல்லித் துவையல் மிகவும் பிரசித்தம்.
நீங்களும் செய்து அசத்துங்க.வீட்டில் உள்ளவர்களுக்கு நிச்சயம் செய்து கொடுங்க.
எங்க ஊர் பக்கம் வயல் வெளிகளில் விளைச்சல் வருடத்திற்கு நெல் இரண்டு முறை,உளுந்து அல்லது பாசிப்பயறு ஒரு முறை என்ற பயிர் சுழற்சி இருப்பதால் ,அரிசி,உளுந்து பாசிப்பருப்பு சேர்த்த உணவுகள் அதிகம் இருக்கும். டயபடீஸ் உள்ளவங்க கூட இது சாப்பிடலாம். மிகவும் நல்லது. முக்கியமாக பெண்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

பின் குறிப்பு:

இது என் தோழி திருமதி உமா சங்கரின் குறிப்பு. நிச்சயம் அவர்களை என் சிறப்பு விருந்தினர் பகுதியில் சந்திக்கும் பொழுது நட்பின் விபரம் தெரிந்து கொள்வோம்.

Friday, November 22, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு 2 - திருமதி .மேனகா சத்யா - செட்டிநாடு வெஜ் புலாவ் / Chettinadu Veg Pulav

மேனகா சத்யாவின் சஷிகா தமிழ் சமையல் வலைப்பூக்களில் மிகவும் பிரபலமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். புதிதாக பார்வையிடுவோர்களுக்காக இந்த அழகிய அறிமுகம். 2009 -பிப்ரவரியில் சஷிகா ஆரம்பிக்கப் பட்டு இன்று வரையில் தொய்வில்லாமல் நச்சென்ற படத்துடன் சுலபமான செய்முறை விளக்கத்தோடு கிட்டதட்ட 800 சமையல் குறிப்புக்களோடும்  832 பின் தொடர்பவர்களோடும் முன்னனியில் இருக்கிறார்.மேனகாவை எனக்கு வலையுலகில் நான்கு  வருடங்களுக்கு மேலாகத் தெரியும் .பழகுவதிலும் இனிமையானவர், நான் மெயில் செய்து வலைப்பூ சம்பந்தமாக எந்தவொரு சந்தேகம் கேட்டாலும் சிறிது கூட யோசிக்காமல் ஓடி வந்து உதவக் கூடியவர். புரிந்துணர்வுடன் பழகக் கூடியவர். அவரின் வலைப்பூவில்  சைவம்,அசைவம்,பாரம்பரியச் சமையல், பேக்கிங், அயல்நாட்டு உணவு வகைகள்  இப்படி சுவையான எண்ணிலடங்கா குறிப்புக்கள். அங்கு பக்க இணைப்பில் சுலபமாக தேர்வு செய்ய என்று தன் சமையல் வகைகளை வரிசைப் படுத்தியுள்ளார். இதோ அவரின் முகவரி,கிளிக்குங்கள், சமையுங்கள், ருசியுங்கள்.

விருந்தினர் சமையல் அறிமுகப் படுத்த வேண்டும் என்று என் நீண்ட நாள் ஆர்வம். ஆங்கில வலைப்பூவில் நிது கிச்சன் தான் எனக்கு இந்த ஆர்வம் வரக் காரணம்.  எனக்கும் ஆரம்பிக்க ஆர்வமாக இருக்கு மேனகா என்றேன். நிச்சயம் ஆரம்பியுங்கள் அக்கா,என் பங்களிப்பும் உண்டு என்று உடன் தெரிவித்ததை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.மேனகாவின் ப்ரஃபைல் படமே அவர்கள் வீட்டின்  குட்டிச் செல்லங்கள் தான். அவர்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.


மேனகாவிடம் நான் ஏதாவது வெஜ் ரெசிப்பி அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டேன். இனி சிறப்பு விருந்தினர் பகிர்விற்காக  அவர் சமைத்து அசத்திய செட்டிநாடு வெஜ் புலாவை ருசிப்போமா? தே.பொருட்கள்

பாஸ்மதி -2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் -1 கைப்பிடி
காய்கள் -1 1/2 கப் [ இதில் நான் கேரட்,பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்திருக்கேன்]
எலுமிச்சை சாறு -1 1/2 டேபிள்ஸ்பூன் 
தேங்காய்ப்பால் -2 கப்
நீர் -1 கப்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க

பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் -1
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -2
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் -5
சோம்பு -1 டீஸ்பூன்

தாளிக்க

பட்டை -1 துண்டு
பிரிஞ்சி இலை -2
ஏலக்காய் 3
கிராம்பு -3
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

அரிசியை கழுவி நீரை வடித்து 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+அரைத்த விழுது+புதினா இலை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

 பின் காய்கள்+உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி தேங்காய்ப்பால்+தண்ணீர்+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவுலம்.தண்ணீர் அளவு அரிசியைப் பொறுத்து சிறிது மாறுபடலாம்.

கொதித்ததும் எலுமிச்சை சாறு+அரிசியை சேர்த்து மீடியம்  நெருப்பில் 2 அல்லது  3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
அல்லது 
இங்கு நான் தம் சேர்த்து செய்துள்ளேன்.அரிசியை சேர்த்ததும் நீர் வற்றிய பிறகு தோசைகல்லை காயவைத்து அதன்மேல் குக்கர் வைத்து சிறுதீயில் 15- 20 நிமிடம் வரை தம் போடவும்.

அல்லது 190 முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் வைத்தும் எடுக்கலாம்.

வெந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ராய்த்தா அல்லது குருமாவுடன் பரிமாறவும்.
பி.கு: 

1 கப் அரிசிக்கு  1 1/2 கப் நீர் என  2 கப்பிற்கு 3 கப் நீர்  சேர்த்து செய்துள்ளேன்.

புலாவ் வெள்ளையாக வேண்டுமெனில் மஞ்சள்தூள் சேர்க்காமல் செய்யலாம்.

எலுமிச்சை சாறுக்கு பதில்  1/2 கப் தயிர் சேர்க்கலாம்.

காய்கள் அதிகம் சேர்த்தாலும் புலாவ் சுவை மாறிவிடும்.

- மேனகா சத்யா .

செட்டிநாடு வெஜ் புலாவ் ருசியோ ருசி. பகிர்வுக்கு மிக்க நன்றி மேனகா. சுலபமாக டக்கென்று செய்யக் கூடியது, நீங்களும் செய்து பாருங்க.

நானும் செய்து பார்த்தேன், இங்கு என் படமும் இணைத்திருக்கிறேன்.டேஸ்ட் சிம்ப்ளி சூப்பர்ப். சமைக்கும் பொழுது வீடே மணந்தது.


என் மகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்தனுப்பினேன். அவளுக்கும்  பிடித்திருந்தது.


இனி மேனகா சத்யாவுடனான கலந்துரையாடல்:

1.தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா?  தங்களின் தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?

என் பெயர் மேனகா.சஷிகா என்னும் வலைப்பூவில் கடந்த 4 1/2 வருடங்களாக எழுதி வருகிறேன். தற்போது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ப்ரான்சில் வசிக்கிறேன். முதுகலை கணிதம் படித்திருந்தாலும் கணிதத்திற்கு பிறகு சமையலில் தான் அதிக ஆர்வம் உண்டு.நான் சமைத்து ருசித்த உணவுகளையை என் வலைப்பூவில் பகிர்கிறேன்.என் வlலைப்பூவில் உள்ளூர் முதல் இண்டர்நேஷனல் வரை எனக்கு பிடித்த உணவையை பகிர்கிறேன். பின்னல்  மற்றும் தையலிலும் ஆரவம் உண்டு.

2.தங்கள் வீட்டின் உணவுப் பழக்கம், பிறந்த ஊரின் ஸ்பெஷல் பதார்த்தங்கள் அவற்றில் தங்களுக்கு பிடித்த உணவுகள்.


 எங்கள் வீட்டில் வெஜ் மற்றும் நான் வெஜ் இரண்டுமே இருக்கும்.நான் பெரும்பாலும் வெஜ் உணவும் கணவர் அசைவமும் விரும்பி சாப்பிடுவோம். 
 குறிப்பிட்டு இதுதான் பிடிக்கும்னு சொல்லமுடியவில்லை.எல்லாமே பிடிக்கும்.ஸ்பெஷல்னு சொன்னால் வெண்ணெய் புட்டு. இன்னும் வலைப்பூவில் பகிரவில்லை] ,பொருளாங்கா உருண்டை  இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
பாண்டிச்சேரியில் கடல் உணவுகள் ப்ரெஷ்ஷாக கிடைப்பதால், கடல் உணவு சமையல் மிக பிரபலம்.பாண்டிச்சேரி சமையல் ப்ரெஞ்ச்,செட்டிநாடு, கோவா அனைத்தும் கலந்த கலவை.

3.சிறிய குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி ப்ளாக் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள் ? சிரமமாக இல்லையா? வீட்டு வேலைகள்,வலைப்பூ என்று schedule போட்டு நேரத்தை திட்டமிடுவீர்களா? இத்தனை வருடம் தொய்வில்லாமல்  பவனி வருவதற்கு  எது, யார் காரணம்? சொல்ல முடியுமா? 

கிடைக்கும் நேரத்தில்  ப்ளாக்கில் எழுதுகிறேன்.ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.பிற்காலத்தில் என் மகளுக்கு கூட என் வலைப்பூ பயன்படலாம். சில நேரம் நானே என் குறிப்புகளை ப்ளாக் பார்த்து தான் சமைப்பேன். இது ஒரு டைரிக்குறிப்புன்னு கூட சொல்லலாம்.எல்லாவற்றுக்கும் நான் சொன்னது போல ஆர்வம் தான் காரணம்.

எதையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை.மாலை நேரத்தில் நான் அதிகநேரம் கணினியில் இருக்கமாட்டேன்.பசங்க கூடவே பொழுதை கழிப்பேன்.

4. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் எவை? உணவு,சமையல் குறித்து ஏதாவது திட்டமிடல், அட்டவணையிட்டு சமைப்பீர்களா? அல்லது அன்றன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பம் கேட்டு சமைப்பீர்களா? அல்லது சாப்பாடு விஷயத்தில் மெனு முடிவு செய்வது நீங்கள் தானா?

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் என் சமையல் அனைத்தையும்  விரும்புவார்கள்.தினமும் மெனுவை அன்றன்றைக்கு நானே  திட்டமிட்டு சமைப்பேன். சிலநேரம் கணவர் சொல்லும் மெனுவை சமைப்பேன்.

5. சாப்பாட்டு செலவு இவ்வளவு தான் செய்ய வேண்டும் என்ற பட்ஜெட் உண்டா? அல்லது நோ பட்ஜெட்டா?  வாசகர்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க விருப்பமிருந்தால் தெரிவிக்கலாம்.

சாப்பாட்டுக்குன்னு இதுவரை பட்ஜெட் போட்டதில்லை.அதற்காகதானே சாம்பாதிக்கிறோம் அதில் எதுக்கு பட்ஜெட்னு  நாங்க இதுவரை போட்டதில்லை.மளிகை பொருட்கள் மாதம் 1 முறையும் காய்கள் வாரத்தில் 1 முறையும் வாங்குவோம்.கறி,மீன் மட்டும் சமைக்கும் அன்று மட்டும் தேவைக்கு வாங்குவோம்.

6. சமையலில் எத்தனை வருட அனுபவம்? அனுபவம் கற்றுத் தந்த பாடம் என்ன?
புதிதாக சமைக்க தொடங்குபவர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?
சமையலில் அனுபவம்னு பார்த்தா அக்காவின் திருமணத்திற்குபின் தான் கத்துக்கிட்டேன்,அதற்கு முன் ரசம் தவிர எதுவும் தெரியாது.

சமைக்கும் போது சந்தோஷமாக சமைத்தாலே சிம்பிளான உணவு கூட சுவை தரும்.புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு நான் சொல்வது அனுபவம் தான் பாடம் கற்றுத்தரும். சமைக்க சமைக்கத் தான் நம் தவறுகளை திருத்த முடியும்.ஒருமுறை செய்யும் போது சமையல் சரியாக வரவில்லை எனில் அடுத்த முறையில் முன் செய்த தவறை திருத்தி செய்தால் நன்றாக வரும்.அதற்காக முதல்முறை செய்யும் பொழுது சரியாக வரவில்லை என விட்டுவிடக்கூடாது .முயற்சி+ஆர்வம் தான் முக்கியம்.எனக்கு தெரிந்த வரை சொல்லியிருக்கிறேன்.

7. சமைத்து அசத்தலாமில் ஏதாவது ஒரு குறிப்போ அல்லது பல குறிப்புக்களையோ செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டா? எதனால்? எது தங்களைக் கவர்ந்தது?செய்து பார்த்திருந்தால் அந்தக் குறிப்பின் பெயர்கள்.

உங்களை எனக்கு அறுசுவையிலிருந்து தெரியும் என்பதால் அங்கு உங்கள்  குறிப்புகளை செய்து பார்த்திருக்கேன். ஸ்பெஷலா நெல்லை தம் பிரியாணி செய்துருக்கேன், பரங்கிப்பேட்டை பிரியாணி அப்புறம் சில குறிப்புகள் பெயர் நினைவில்லை.உங்கள் குறிப்புகள் விளக்கபடங்களுடன் இருப்பதால், நான் சிலநேரம் செய்முறை படிக்கமாலேயே படத்தை மட்டும்  பார்த்து சமைத்து இருக்கிறேன்.

எனக்கு தங்கள் வலைப்பூவில்  ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி அக்கா.

மனமார்ந்த நன்றி மேனகா. கேட்ட கேள்விகளுக்கு நேரில் பேசுவது போல் எதார்த்தமான பதில்கள். பாராட்டுக்கள் மேனகா.  மேலும் தொடர்ந்து தாங்கள் அதிகம் நேசிக்கும் இந்த துறையில் சாதனை படைக்க வாழ்த்தி மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம் !

முக்கிய குறிப்பு:

நீங்களும் பங்கு பெற விபரத்திற்கு இதனை கிளிக்குங்கள்.
இது போல் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை  நம்மை சந்திக்கப் போகும் சிறப்பு விருந்தினர் யார் ? அவரின் ஸ்பெஷல் குறிப்பு என்ன? காத்திருப்போம்.. ஆதரவளித்தும் கருத்துக்கள் பகிர்ந்தும் வரும் அன்பான நட்புறவுகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

Wednesday, November 20, 2013

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு / Sivappu Thandu Keerai Kootu / Red Spinach Kootu


தேவையான பொருட்கள்;
சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டு
கடலை பருப்பு,பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைத்துக் கொள்ள:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை:
கீரையை நன்கு   3 தண்ணீர் வைத்து மண் போக அலசிக் தண்ணீர் வடித்து எடுக்கவும்.
 பருப்பை அரை மணி நேரம்  ஊற வைக்கவும். கீரையை தண்டோடு நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,பூண்டு பல், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 ஊறிய பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வெந்து வைக்கவும்.
தேங்காய் ,சீரகம்,வற்றல் சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்,கடுகு  வெடிக்கவும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்க்கவும்.வதக்கவும்.
பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.மசிய விடவும்.
வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.ஒன்று சேர்ந்து கொதி வரும்.அரைத்த தேங்காய் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது நேரம் அடுப்பில் சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி அடுப்பை அனைக்கவும்.

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெடி.
சாதத்தோடு பரிமாறவும்.
இந்த சிவப்பு கீரை ருசி மிக்கதும், வயிற்றுக்கு நல்லதும் கூட.பருப்பு சேர்க்காமல் மேற் சொன்ன பொருட்கள் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.இதில் கடலை பருப்பும் பாசிபருப்பும் சேர்ப்பது தனி சுவையை தருவதோடு  கடலை பருப்பு முழித்துக் கொண்டு பார்க்க அழகாகவும் இருக்கும். நீங்களும் செய்து அசத்துங்க.


Monday, November 18, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு 1 - திருமதி ஸாதிகா ஹஸனாவின் கீழக்கரை ஸ்பெஷல் - இடியாப்பச் சோறு / Idiyaappachoru .

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற  வலைப்பூவில் எழுதி வரும் திருமதி.ஸாதிகா ஹஸனா தமிழ் வலைப்பூ உலகில் மிகவும் பரிச்சையமானவர். அவர் தன் வலைப்பூவில் அனைத்து பொதுவான விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்து வருகிறார்.சுவையாக சுவாரசியமாக எழுதி, வாசிப்பவர்களின் மனதில்  ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. எனக்கு அவரை வலையுலகில் 5 வருடங்களாகத் தெரியும்.மாறாத அன்புடையவர். நிறைவான ஒரு நல்ல தோழி. அவருடைய வலைப்பூவில் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த பகுதி கதாபாத்திரங்கள்,உணவகம்,ஊர் சுற்றலாம்,விழிப்புணர்வு பகிர்வுகள் மற்றும் அவரின் வலைச்சர ஆசிரியர் பகுதி இப்படி எத்தனையோ குறிப்பிட்டு சொல்லலாம்.பொழுது போக்கு விஷயங்கள் தொடங்கி ஆக்கப் பூர்வமான படைப்புக்கள் என்று ஏராளமான பகிர்வுகள் காண அவரின் வலைப்பூ லின்க் இதோ!


தோழி ஸாதிகா அவர்கள் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு முதல் கருத்திட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் உடனே அவரின் சொந்த ஊரான கீழக்கரை ஸ்பெஷலான இடியாப்பச் சோறு குறிப்பை படத்துடன் அனுப்பி வைத்தது எனக்கு அளவிலா மகிழ்ச்சியை தந்தது. எங்கள் ஊரில் நெய்ச் சோறு, தேங்காய்ச் சோறு செயவதுண்டு, அதென்ன இடியாப்பச் சோறு என்று ஆர்வம் எழுந்ததென்னவோ உண்மை தான். இடியாப்பத்தை அவித்து அப்படியே ஏதாவது குருமா, சால்னா,வட்டிலாப்பம் வைத்து சாப்பிடுவோம்.ஆனால் கீழை வாசிகள் அதனை எத்தனை ருசியாக சமைத்து அசத்துகிறார்கள் என்று அறிய ஸாதிகா அனுப்பி வைத்த இந்த  குறிப்பை பார்க்கவும்.

இடியாப்பச் சோறு:


தேவையான பொருட்கள்;

இடியாப்ப மாவு - 3 டம்ளர்
தேங்காய் - 1
வெங்காயம் - 2
நெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
ரம்பை இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
ஏலம் - 6
கிராம்பு - 6
உப்பு - சுவைக்கு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
முந்திரி - 10
திராட்சை - 1 டீஸ்பூன்

செய்முறை:

உப்பு கலந்த கொதி நீர் விட்டு அரிசிமாவை கெட்டியாக பிசைந்து இடியாப்பங்களாக பிழியவும்.
இதனை நன்கு ஆற விடவும். அல்லது முதல் நாளே தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
தேங்காயை துருவி, கெட்டியாக பால் எடுக்கவும். இரண்டாம், மூன்றாம் பாலை வேறு எதற்காவது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கடாயில் நெய் விட்டு, பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பைஇலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிவந்து விடாமல் வதக்கவும்.
இடியாப்பத்தை, சிறுதுண்டங்களாக்கி உப்பு சேர்த்த தேங்காய்ப்பாலில் கலந்து கொள்ளவும்.
தேங்காய்ப்பாலில் கலந்த இடியாப்பத் துண்டங்களை தாளிப்பில் கொட்டி கிளறி, நன்கு சூடு படுத்தவும்.
பொடியாக அரிந்த மல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தூவி அலங்கரிக்கவும்.
மட்டன் குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


வாவ் ! உயர் ரக கீழக்கரை ஸ்பெஷல் இடியாப்பச் சோறு செய்முறையை தெரிந்து கொண்டீர்களா?

செய்து அசத்துங்க.நான் செய்து பார்த்தேன், அப்பப்பா ! சுவையோ சுவை ! மணமோ மணம். குருமா கிரேவி எதுவும் வேண்டாம்,

 அப்படியே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம். சேர்த்திருக்கும் பொருட்கள் என்ன லேசுப்பட்டதா? தேங்காய்ப் பால், நெய், முந்திரி திராட்சை, பட்டை,கிராம்பு ஏலக்காய், வெங்காயம் etc..
இடியாப்பம் இப்பொழுது பாக்கெட்டில் எங்கும் கிடைக்கிறது, வீட்டில் இடியாப்பம் செய்ய முடியவில்லை என்றாலும் வாங்கி இந்தக் குறிப்பை செய்து பாருங்க.

பகிர்வுக்கு மிக்க நன்றி ஸாதிகா.


ஸாதிகாவுடனான கலந்துரையாடல்:

1.தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா? தங்களின் தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?
என்னைப்பற்றித்தெரிய இந்த லின்கை கிளிக் செய்யுங்கள்.

2.தங்கள் வீட்டின் உணவுப் பழக்கம், பிறந்த ஊரின் ஸ்பெஷல் பதார்த்தங்கள் அவற்றில் தங்களுக்கு பிடித்த உணவுகள்.
கீழை ஸ்பெஷல்என்று ஒரு பெரிய லிஸ்டே உள்ளது அதை பதிவாக்கி உள்ளேன். சாப்பாடு எனும் பொழுது என் சித்தி நெய் மணக்க செய்யும் இடியாப்பபிரியாணி மிகவும் பிடிக்கும்.


3. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள். சமையல் குறித்து ஏதாவது திட்டமிடல்அட்டவணையிட்டு சமைப்பீர்களா? அல்லது அன்றன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பம் கேட்டு சமைப்பீர்களாசாப்பாடு விஷயத்தில் மெனு முடிவு செய்வது நீங்கள் தானா?
குடும்பத்தினர் பிரியாணியை விட பிரைட் ரைஸ்தான் விரும்பி சாப்பிடுவார்கள். மட்டனை விட சிக்கன் தான் மிகவும் பிடிக்கும். மீன் உணவு கொஞ்சமாக எடுத்துக்கொள்வோம். சாம்பார்,பொரியல் கூட்டு என்று வாரம் ஒரு முறை வைக்கும் சைவ சாப்பாடு என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். எண்ணெய் நெய் போன்றவற்றை எப்படி குறைவாக செலவு செய்ய வேண்டும் என்று நான் எடுக்கும் முயற்சிகள் தோற்றே வருகிறது. வீட்டில் மெனு என்ற பேச்சுக்கே இடமே இல்லை. வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் மெனுதான் சமைக்கப்படும்.

4.சமையலுக்கு தேவையான காய்கறிகள், மீன், கறி மற்ற பொருட்கள் அன்றாடம் வாங்குவீர்களாஅல்லது வாரம் ஒரிரு முறை என்ற பழக்கமா? சாப்பாட்டு செலவு இவ்வளவு தான் என்ற பட்ஜெட் உண்டாஅல்லது நோ பட்ஜெட்டா?  வாசகர்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க விருப்பமிருந்தால் தெரிவிக்கலாம். 
மளிகைப்பொருட்கள் மாதத்திற்கு ஒரு முறையும் அசைவப்பொருட்கள்,காய்கறி வாரம் ஒரு முறையும் வாங்குவது வழக்கம். சாப்பாடு செலவுக்கும் ஒரு திட்டமிடல் உண்டு.


5.சமைத்து அசத்தலாமில் ஏதாவது ஒரு குறிப்போ அல்லது பல குறிப்புக்களையோ செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டா
எதனால்? எது தங்களைக் கவர்ந்தது?செய்து பார்த்திருந்தால் அந்தக் குறிப்பின் பெயர்கள்.
ஏனெனில் உங்கள் வலைத்தளத்தில் எனது டேஸ்டுக்கு ஒத்துப்போகும் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
படங்களுடன் தெளிவாகவும்,விரிவாகவும் குறிப்புகள் கொடுப்பது பிளஸ்.
எண்ணற்ற குறிப்புகள் செய்து பார்த்துள்ளேன்.
உறவினர்களுக்கும் லின்கும் அனுப்பி உள்ளேன். நன்றி.


நான் அனுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தது அருமை. மிக்க நன்றி, மகிழ்ச்சி  ஸாதிகா. மீண்டும் சந்திப்போம் !

பின் குறிப்பு:
சிறப்பு விருந்தினர் பகுதி  விபரத்திற்கு கிளிக்கவும்.
இப்பகுதிக்கு சமையல் குறிப்பு அனுப்புவதாய் கருத்துக்கள் மூலமும், மெயில் மூலமும் தெரிவித்தவர்களுக்கும், அனுப்பி வருபவர்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து தரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif