Friday, November 22, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு 2 - திருமதி .மேனகா சத்யா - செட்டிநாடு வெஜ் புலாவ் / Chettinadu Veg Pulav

மேனகா சத்யாவின் சஷிகா தமிழ் சமையல் வலைப்பூக்களில் மிகவும் பிரபலமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். புதிதாக பார்வையிடுவோர்களுக்காக இந்த அழகிய அறிமுகம். 2009 -பிப்ரவரியில் சஷிகா ஆரம்பிக்கப் பட்டு இன்று வரையில் தொய்வில்லாமல் நச்சென்ற படத்துடன் சுலபமான செய்முறை விளக்கத்தோடு கிட்டதட்ட 800 சமையல் குறிப்புக்களோடும்  832 பின் தொடர்பவர்களோடும் முன்னனியில் இருக்கிறார்.மேனகாவை எனக்கு வலையுலகில் நான்கு  வருடங்களுக்கு மேலாகத் தெரியும் .பழகுவதிலும் இனிமையானவர், நான் மெயில் செய்து வலைப்பூ சம்பந்தமாக எந்தவொரு சந்தேகம் கேட்டாலும் சிறிது கூட யோசிக்காமல் ஓடி வந்து உதவக் கூடியவர். புரிந்துணர்வுடன் பழகக் கூடியவர். அவரின் வலைப்பூவில்  சைவம்,அசைவம்,பாரம்பரியச் சமையல், பேக்கிங், அயல்நாட்டு உணவு வகைகள்  இப்படி சுவையான எண்ணிலடங்கா குறிப்புக்கள். அங்கு பக்க இணைப்பில் சுலபமாக தேர்வு செய்ய என்று தன் சமையல் வகைகளை வரிசைப் படுத்தியுள்ளார். இதோ அவரின் முகவரி,கிளிக்குங்கள், சமையுங்கள், ருசியுங்கள்.

விருந்தினர் சமையல் அறிமுகப் படுத்த வேண்டும் என்று என் நீண்ட நாள் ஆர்வம். ஆங்கில வலைப்பூவில் நிது கிச்சன் தான் எனக்கு இந்த ஆர்வம் வரக் காரணம்.  எனக்கும் ஆரம்பிக்க ஆர்வமாக இருக்கு மேனகா என்றேன். நிச்சயம் ஆரம்பியுங்கள் அக்கா,என் பங்களிப்பும் உண்டு என்று உடன் தெரிவித்ததை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.மேனகாவின் ப்ரஃபைல் படமே அவர்கள் வீட்டின்  குட்டிச் செல்லங்கள் தான். அவர்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.


மேனகாவிடம் நான் ஏதாவது வெஜ் ரெசிப்பி அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டேன். இனி சிறப்பு விருந்தினர் பகிர்விற்காக  அவர் சமைத்து அசத்திய செட்டிநாடு வெஜ் புலாவை ருசிப்போமா? தே.பொருட்கள்

பாஸ்மதி -2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் -1 கைப்பிடி
காய்கள் -1 1/2 கப் [ இதில் நான் கேரட்,பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்திருக்கேன்]
எலுமிச்சை சாறு -1 1/2 டேபிள்ஸ்பூன் 
தேங்காய்ப்பால் -2 கப்
நீர் -1 கப்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க

பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் -1
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -2
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் -5
சோம்பு -1 டீஸ்பூன்

தாளிக்க

பட்டை -1 துண்டு
பிரிஞ்சி இலை -2
ஏலக்காய் 3
கிராம்பு -3
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

அரிசியை கழுவி நீரை வடித்து 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+அரைத்த விழுது+புதினா இலை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

 பின் காய்கள்+உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி தேங்காய்ப்பால்+தண்ணீர்+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவுலம்.தண்ணீர் அளவு அரிசியைப் பொறுத்து சிறிது மாறுபடலாம்.

கொதித்ததும் எலுமிச்சை சாறு+அரிசியை சேர்த்து மீடியம்  நெருப்பில் 2 அல்லது  3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
அல்லது 
இங்கு நான் தம் சேர்த்து செய்துள்ளேன்.அரிசியை சேர்த்ததும் நீர் வற்றிய பிறகு தோசைகல்லை காயவைத்து அதன்மேல் குக்கர் வைத்து சிறுதீயில் 15- 20 நிமிடம் வரை தம் போடவும்.

அல்லது 190 முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் வைத்தும் எடுக்கலாம்.

வெந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ராய்த்தா அல்லது குருமாவுடன் பரிமாறவும்.
பி.கு: 

1 கப் அரிசிக்கு  1 1/2 கப் நீர் என  2 கப்பிற்கு 3 கப் நீர்  சேர்த்து செய்துள்ளேன்.

புலாவ் வெள்ளையாக வேண்டுமெனில் மஞ்சள்தூள் சேர்க்காமல் செய்யலாம்.

எலுமிச்சை சாறுக்கு பதில்  1/2 கப் தயிர் சேர்க்கலாம்.

காய்கள் அதிகம் சேர்த்தாலும் புலாவ் சுவை மாறிவிடும்.

- மேனகா சத்யா .

செட்டிநாடு வெஜ் புலாவ் ருசியோ ருசி. பகிர்வுக்கு மிக்க நன்றி மேனகா. சுலபமாக டக்கென்று செய்யக் கூடியது, நீங்களும் செய்து பாருங்க.

நானும் செய்து பார்த்தேன், இங்கு என் படமும் இணைத்திருக்கிறேன்.டேஸ்ட் சிம்ப்ளி சூப்பர்ப். சமைக்கும் பொழுது வீடே மணந்தது.


என் மகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்தனுப்பினேன். அவளுக்கும்  பிடித்திருந்தது.


இனி மேனகா சத்யாவுடனான கலந்துரையாடல்:

1.தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா?  தங்களின் தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?

என் பெயர் மேனகா.சஷிகா என்னும் வலைப்பூவில் கடந்த 4 1/2 வருடங்களாக எழுதி வருகிறேன். தற்போது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ப்ரான்சில் வசிக்கிறேன். முதுகலை கணிதம் படித்திருந்தாலும் கணிதத்திற்கு பிறகு சமையலில் தான் அதிக ஆர்வம் உண்டு.நான் சமைத்து ருசித்த உணவுகளையை என் வலைப்பூவில் பகிர்கிறேன்.என் வlலைப்பூவில் உள்ளூர் முதல் இண்டர்நேஷனல் வரை எனக்கு பிடித்த உணவையை பகிர்கிறேன். பின்னல்  மற்றும் தையலிலும் ஆரவம் உண்டு.

2.தங்கள் வீட்டின் உணவுப் பழக்கம், பிறந்த ஊரின் ஸ்பெஷல் பதார்த்தங்கள் அவற்றில் தங்களுக்கு பிடித்த உணவுகள்.


 எங்கள் வீட்டில் வெஜ் மற்றும் நான் வெஜ் இரண்டுமே இருக்கும்.நான் பெரும்பாலும் வெஜ் உணவும் கணவர் அசைவமும் விரும்பி சாப்பிடுவோம். 
 குறிப்பிட்டு இதுதான் பிடிக்கும்னு சொல்லமுடியவில்லை.எல்லாமே பிடிக்கும்.ஸ்பெஷல்னு சொன்னால் வெண்ணெய் புட்டு. இன்னும் வலைப்பூவில் பகிரவில்லை] ,பொருளாங்கா உருண்டை  இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
பாண்டிச்சேரியில் கடல் உணவுகள் ப்ரெஷ்ஷாக கிடைப்பதால், கடல் உணவு சமையல் மிக பிரபலம்.பாண்டிச்சேரி சமையல் ப்ரெஞ்ச்,செட்டிநாடு, கோவா அனைத்தும் கலந்த கலவை.

3.சிறிய குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி ப்ளாக் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள் ? சிரமமாக இல்லையா? வீட்டு வேலைகள்,வலைப்பூ என்று schedule போட்டு நேரத்தை திட்டமிடுவீர்களா? இத்தனை வருடம் தொய்வில்லாமல்  பவனி வருவதற்கு  எது, யார் காரணம்? சொல்ல முடியுமா? 

கிடைக்கும் நேரத்தில்  ப்ளாக்கில் எழுதுகிறேன்.ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.பிற்காலத்தில் என் மகளுக்கு கூட என் வலைப்பூ பயன்படலாம். சில நேரம் நானே என் குறிப்புகளை ப்ளாக் பார்த்து தான் சமைப்பேன். இது ஒரு டைரிக்குறிப்புன்னு கூட சொல்லலாம்.எல்லாவற்றுக்கும் நான் சொன்னது போல ஆர்வம் தான் காரணம்.

எதையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை.மாலை நேரத்தில் நான் அதிகநேரம் கணினியில் இருக்கமாட்டேன்.பசங்க கூடவே பொழுதை கழிப்பேன்.

4. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் எவை? உணவு,சமையல் குறித்து ஏதாவது திட்டமிடல், அட்டவணையிட்டு சமைப்பீர்களா? அல்லது அன்றன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பம் கேட்டு சமைப்பீர்களா? அல்லது சாப்பாடு விஷயத்தில் மெனு முடிவு செய்வது நீங்கள் தானா?

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் என் சமையல் அனைத்தையும்  விரும்புவார்கள்.தினமும் மெனுவை அன்றன்றைக்கு நானே  திட்டமிட்டு சமைப்பேன். சிலநேரம் கணவர் சொல்லும் மெனுவை சமைப்பேன்.

5. சாப்பாட்டு செலவு இவ்வளவு தான் செய்ய வேண்டும் என்ற பட்ஜெட் உண்டா? அல்லது நோ பட்ஜெட்டா?  வாசகர்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க விருப்பமிருந்தால் தெரிவிக்கலாம்.

சாப்பாட்டுக்குன்னு இதுவரை பட்ஜெட் போட்டதில்லை.அதற்காகதானே சாம்பாதிக்கிறோம் அதில் எதுக்கு பட்ஜெட்னு  நாங்க இதுவரை போட்டதில்லை.மளிகை பொருட்கள் மாதம் 1 முறையும் காய்கள் வாரத்தில் 1 முறையும் வாங்குவோம்.கறி,மீன் மட்டும் சமைக்கும் அன்று மட்டும் தேவைக்கு வாங்குவோம்.

6. சமையலில் எத்தனை வருட அனுபவம்? அனுபவம் கற்றுத் தந்த பாடம் என்ன?
புதிதாக சமைக்க தொடங்குபவர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?
சமையலில் அனுபவம்னு பார்த்தா அக்காவின் திருமணத்திற்குபின் தான் கத்துக்கிட்டேன்,அதற்கு முன் ரசம் தவிர எதுவும் தெரியாது.

சமைக்கும் போது சந்தோஷமாக சமைத்தாலே சிம்பிளான உணவு கூட சுவை தரும்.புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு நான் சொல்வது அனுபவம் தான் பாடம் கற்றுத்தரும். சமைக்க சமைக்கத் தான் நம் தவறுகளை திருத்த முடியும்.ஒருமுறை செய்யும் போது சமையல் சரியாக வரவில்லை எனில் அடுத்த முறையில் முன் செய்த தவறை திருத்தி செய்தால் நன்றாக வரும்.அதற்காக முதல்முறை செய்யும் பொழுது சரியாக வரவில்லை என விட்டுவிடக்கூடாது .முயற்சி+ஆர்வம் தான் முக்கியம்.எனக்கு தெரிந்த வரை சொல்லியிருக்கிறேன்.

7. சமைத்து அசத்தலாமில் ஏதாவது ஒரு குறிப்போ அல்லது பல குறிப்புக்களையோ செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டா? எதனால்? எது தங்களைக் கவர்ந்தது?செய்து பார்த்திருந்தால் அந்தக் குறிப்பின் பெயர்கள்.

உங்களை எனக்கு அறுசுவையிலிருந்து தெரியும் என்பதால் அங்கு உங்கள்  குறிப்புகளை செய்து பார்த்திருக்கேன். ஸ்பெஷலா நெல்லை தம் பிரியாணி செய்துருக்கேன், பரங்கிப்பேட்டை பிரியாணி அப்புறம் சில குறிப்புகள் பெயர் நினைவில்லை.உங்கள் குறிப்புகள் விளக்கபடங்களுடன் இருப்பதால், நான் சிலநேரம் செய்முறை படிக்கமாலேயே படத்தை மட்டும்  பார்த்து சமைத்து இருக்கிறேன்.

எனக்கு தங்கள் வலைப்பூவில்  ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி அக்கா.

மனமார்ந்த நன்றி மேனகா. கேட்ட கேள்விகளுக்கு நேரில் பேசுவது போல் எதார்த்தமான பதில்கள். பாராட்டுக்கள் மேனகா.  மேலும் தொடர்ந்து தாங்கள் அதிகம் நேசிக்கும் இந்த துறையில் சாதனை படைக்க வாழ்த்தி மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம் !

முக்கிய குறிப்பு:

நீங்களும் பங்கு பெற விபரத்திற்கு இதனை கிளிக்குங்கள்.
இது போல் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை  நம்மை சந்திக்கப் போகும் சிறப்பு விருந்தினர் யார் ? அவரின் ஸ்பெஷல் குறிப்பு என்ன? காத்திருப்போம்.. ஆதரவளித்தும் கருத்துக்கள் பகிர்ந்தும் வரும் அன்பான நட்புறவுகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

33 comments:

அமைதிச்சாரல் said...

புலாவ் பார்க்க கலர்ஃபுல்லா நல்லாயிருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் நன்றீஸ்..

திண்டுக்கல் தனபாலன் said...

கலந்துரையாடல் அருமை...

வாழ்த்துக்கள்... நன்றி...

Menaga sathia said...

தங்கள் வலைப்பூவில் எனக்கொரு வாய்ப்பு கொடுத்தமைக்கும்,பிள்ளைகளை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிக்கா!!

எப்படி கண்டுபிடித்தீங்கன்னு தெரியல இன்னும் 3 குறிப்புகள் போட்டால் விரைவில் 800வது பதிவு தொட்டுவிடுவேன்,மிக்க மகிழ்ச்சி!!

நம் நட்பு எப்போழுதும் தொடரட்டும்,தொடரவேண்டும்!!

Menaga sathia said...

குறிப்பினை செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கும்மனமார்ந்த நன்றிக்கா!!

Saratha said...

மேனகா குறிப்போடு நீங்கள் செய்து பார்த்த படமும் இணைத்திருப்பது அருமை.

Shama Nagarajan said...

good one

ஸாதிகா said...

மேனகாவின் பேட்டியும் சமையல் குறிப்பும் அபாரம்.இதுவரை யாருமே எடுக்காத முயற்சி ஆசியா.சிறப்பு விருந்தினர் பகிர்வு மிக நன்றாக அமைந்துள்ளது.தொடருங்கள்,வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி ஆசியாவுக்கும்,தங்கை மேனகாவுக்கும்.

இளமதி said...

ஆவ்வ்வ்... மனம் நிறைய மணம் பரப்பும்
அருமையான வெஜ் புலாவ்!

இன்றைய சிறப்பு விருந்தினர் சமையல் இராணி
மேனகா சத்யாவுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்!

இவரின் வலைப்பூவிற்குச் சென்றிருக்கின்றேன்.
கருத்துகள் பகிர்ந்ததில்லை. இதோ தொடர்கிறேன்.

அருமையான வெஜ் புலாவ் செய்து பார்க்கின்றேன் சகோதரிகளே!
நல்ல குறிப்பினைத் தந்தமைக்கு இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

ஆசியா.. நல்ல முயற்சி! அருமையான நேர்காணல் பதிவு!
ருசியான பகிர்வு! ஸ்பெஷல் நன்றி + வாழ்த்து உங்களுக்கும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான சமையல் பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Priya Anandakumar said...

Superb guest post Menaga, loved both of your conversation. Beautiful, both of you have done great job...

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு மேனகா.

கேள்விகளும் பதில்களும் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி ஆசியா.

Asiya Omar said...

அமைதிச்சாரல் வாங்க,உங்களுக்கு எங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனபாலன் சார் வாங்க,வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

மேனகா சூப்பர் குறிப்பு அனுப்பி சிறப்பு விருந்தினர் பகுதியில் கலந்து கொண்டு கௌரவப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.நன்றி.

Asiya Omar said...

சாரதா வாங்க, தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

வருகைக்கு மகிழ்ச்சி,மிக்க நன்றி ஷாமா.

Asiya Omar said...

ஸாதிகா,சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு அழகான ஆரம்பம் கொடுத்து தொடங்கி வைத்து கௌரவப் படுத்தியமைக்கு மீண்டும் நன்றி தோழி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

இளமதி, வாங்க வாங்க,ஸ்பெஷல் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

Asiya Omar said...

வை.கோ ஐயா வாங்க, வாங்க, சிரமம் பார்க்காமல் வந்து ,வாழ்த்து பாராட்டு தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி.

Asiya Omar said...

ப்ரியா ஆனந்தகுமார்,வருகைக்கும் பாராட்டிற்கும் மகிழ்ச்சி.

ராமலஷ்மி வாங்க, கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி,நன்றி.

சே. குமார் said...

மேனகா அக்காவுக்கும் அவரது எங்க பக்கத்து செட்டிநாடு வெஜ் புலாவ்வை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

Raks anand said...

Wow sounds delicious. I should try this for my kid.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது..... ஒரு ப்ளேட் செட்டிநாடு வெஜ் புலாவ் தில்லிக்கு பார்சல் ப்ளீஸ்!

Mrs.Mano Saminathan said...

சிறப்பு விருந்தினர் பக்கம் அருமை ஆசியா! இனிய வாழ்த்துக்கள்!! புதிய முயற்சி என்றாலும் நிரைய வலைப்பதிவாளர்கள் இதனால் பயன் அடைவார்கள்!
கேள்விகள் மட்டும் இன்னும் அடர்ந்த கலரில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Asiya Omar said...

சே.குமார் கருத்திற்கு மிக்க நன்றி.

Raks anand வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

மனோ அக்கா வாங்க,வருகைக்கு மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.நிச்சயமாய் உங்கள் கருத்தை நினைவில் கொள்கிறேன்.நேரம் கிடைக்கும் பட்சத்தில் உங்கள் பகிர்வையும் எதிர்பார்க்கிறேன்.

Asiya Omar said...

சகோ.வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asha bhosle athira said...

ஆவ்வ் இம்முறை மேனகாவின் குறிப்போ? வாழ்த்துக்கள் மேனகா. வெஜ் புலாவ் சூப்பர்.

இதனை திறம்படச் செய்யும் ஆசியாவுக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

அருமையான செட்டிநாடு வெஜ் புலாவ். வாழ்த்துக்கள் மேனகாவிற்கு.
உங்கள் கலந்துரையாடல் மிக அருமை. புதிய சிறப்பு பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

Asiya Omar said...

அதிரா வாங்க, தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

கோமதியக்கா வாங்க, உங்கள் பகிர்வும் இருந்தால் மிக்க மகிழ்ச்சிக்கா,வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...

மேனகாவின் செட்டிநாடு புலாவ் வாசனை இங்கு வரை அடிக்கிறது...

Asiya Omar said...

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஜலீலா.

priyasaki said...

நான் இப்புலாவ் செய்து ருசித்துவிட்டேன்.மிகவும் டேஸ்டி. வீட்டில்பிடித்துவிட்டது. மிக அருமையான குறிப்பு. மிக்க நன்றி மேனகா. இம்முயற்சியினை மேற்கொள்ளும் ஆசியாவுக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.

Cherub Crafts said...

செய்து சாப்பிட்டோம்:) மிக மிக சுவையாக இருந்தது இந்த செட்டி நாட்டு வெஜ் புலாவ் ...வேலை பிசியால் தமிழ் ப்ளாகில் இப்பெல்லாம் ரசித்து ருசித்த நட்புக்களின் குறிப்புகளை பதிவிட முடியல்லை ஆனா விரைவில் படம் எடுத்தாவது போடறேன் .மேனகாவுக்கும் ஆசியாவுக்கும் நன்றி.

Angelin.