Monday, December 30, 2013

புளிச்சோறு / Pulichoru / Tamarind Rice

மாமி, நம்ம வீட்டு புளிச்சோறு ரெசிப்பி கொடுங்க என்று எங்க அண்ணன் பிள்ளைங்க கேட்டதால் இந்தப் பகிர்வு. நீங்களும் செய்து பாருங்க.


தேவையான பொருட்கள்;
புழுங்கல் அரிசி - 300 கிராம்
நல்லெண்ணெய் -  4- 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை
புளி ஊற வைக்க - பெரிய எலுமிச்சை அளவு ( ருசிக்கேற்ப)
தக்காளி சிறியது ஒன்று 
வெங்காயம் சிறியது - 1 
உப்பு - தேவைக்கு.

வறுத்துப்  பொடிக்க: 
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு
மிளகாய் வற்றல் - 3
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
எள்ளு - 1டீஸ்பூன்
முழு மல்லி - 1 டீஸ்பூன்

பரிமாறும் அளவு - 3 நபர்கள்.

செய்முறை:
முதலில் சோறை பக்குவமாக வடித்து வைக்கவும்.


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து தேவைக்கு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

வறுத்து பொடிப்பதற்கு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருவேப்பிலை வறுத்து எடுக்கவும்.வற்றலை கரியாமல் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே வாணலியில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,மல்லி,எள்ளு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
ஆற வைத்ததை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.அத்துடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

புளிச்சோறு கிண்ட ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் கடுகு போடவும்,கடுகு வெடிக்கவும் பெருங்காயப் பொடி சேர்த்து உடனே அரைத்த விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். 
எண்ணெய் பிரிந்து வரும்.

புளித்தண்ணீர் விடவும். சாதம் கொள்ளும் அளவு இருக்க வேண்டும்.

அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே பிரிந்து வரும்.
வடித்த சாதத்தை தட்டி கிண்டவும்.லூசாக இருக்க வேண்டும். சாப்பிடும் பொழுது இறுகி விடும்.


சுவையான எங்க வீட்டு புளிச்சோறு ரெடி. இப்படி செய்தால் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்காது. மசுமையாக இருக்கும். தக்காளி சேர்ப்பதால் தனி நிறமும் சுவையும் கிடைக்கும்.

இந்தச் சோறு இரண்டு நாள் வரை வெளியே வைத்தால் கூட கெடாது. கட்டு சாதம் கட்டும் பொழுது கொஞ்சம் இந்தப் புளிச்சோறு கொஞ்சம் லூசாக இருந்தால் சாப்பிடும் பொழுது சரியான பக்குவத்தில் இருக்கும். இல்லாவிட்டால் கேக் மாதிரி கட்டியாகிவிடும்.
இதற்கு சுருட்டு கறி சூப்பராக இருக்கும். 


வெஜ் சாப்பிடுபவர்கள் உருளைக்கிழங்கு வறுவல் புதினா துவையல் எடுத்து செல்லலாம்.

இந்தப் பக்குவத்தை எனக்கு என்னோட மூத்த (முதல்)அண்ணி பசீரா மைனி சொல்லித் தந்தது. அவங்க ஒவ்வொரு முறை பெங்களூர் பயணம் கிளம்பும் பொழுதும் பயணம் அனுப்பச் சென்றால் ஆசியாவிற்கு கொஞ்சம் புளிச்சோறு எடுத்து கொடு டேஸ்ட் பார்க்கட்டும்னு சொல்வாங்க.என்னதான் இருந்தாலும் கைப்பக்குவம்னு ஒண்ணு இருக்கே. நீங்க எல்லாரும் இனி எங்க வீட்டு புளிச்சோறை செய்து அசத்துவீங்க தானே !

அந்தக் காலத்தில் எங்க அம்மாவின் அம்மா(பாட்டி) புளிச்சோறு அத்தனை அருமையாக செய்வார்களாம். கொழும்பில் வியாபாரம், அங்கு பயணம் போகும் பொழுது எங்க மாமாவிற்கு செய்து கொடுத்தனுப்புவார்களாம்.  இரண்டு நாள் கழித்து சென்றாலும் மீதி வரும் புளிச்சோறுக்கு அங்கு உள்ள நட்புகள் காத்து இருப்பார்களாம்.
மாமா அடிக்கடி சொல்வதுண்டு எங்கும்மா பக்குவத்தில் யாருக்கும் புளிச்சோறு கிண்டத் தெரியவில்லை. என்ன செய்ய, நான் எல்லாம் பிறப்பதற்கு முன்பே அவங்க எல்லாம் போயாச்சு. அவங்களோட இருந்தவங்க கிட்ட எப்படியாவது அந்த ரெசிப்பியை கேட்டு தெரிந்து கொள்ளனும்னு ஆசை. எங்க பெரியம்மா மகள் ரஹ்மத் அக்கா கிட்ட கொஞ்சம் அவங்க பக்குவம் இருப்பதாய் சொல்லுவார்கள். அவங்க கிட்ட  அந்த ரெசிப்பியின் ரகசியத்தை கேட்டு தெரிஞ்சுக்கனும். பார்ப்போம்.


Friday, December 27, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 7 - திருமதி உமா சங்கர் - மும்பை ஸ்பெஷல் பாவ் பாஜி - Guest Post / Pav Bhaji

திருமதி உமா சங்கர், என் வீட்டிற்கு அருகே கடந்த அக்டோபர் மாதம் தான் குடிவந்தாங்க, நாங்கள் அபுதாபியில் இருந்து அல்-ஐன் வந்து கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது. இது வரை  பக்கத்தில்  பழக தமிழ் ஆட்கள் இல்லாமல் தான் இருந்து வந்தோம், ஏதோ இறைவன் கருணையால் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு நல்ல தோழி கிடைத்தது என்னைப் பொறுத்தவரை பெரிய பாக்கியமே.
நாங்கள் சேர்ந்து வாக்கிங் போவதுண்டு,ஒரு நாள் பேச்சு வாக்கில் சிறப்பு விருந்தினர் பகிர்வு பற்றி சொன்னேன், அவர்களும் அசத்தலான பாவ் பாஜி குறிப்பை மெயில் செய்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இதோ உமாவின் சுய அறிமுகம்:
நான் உமா. என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஏர்வாடி.என் கணவர் ஊர் பழவூர். திருமணம் முடிந்து 10 வருடமாக மும்பையில் வசித்து வந்தோம்.  அமீரகத்தில் என் கணவர் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச் சூழல் மேலாளராக பணி புரிந்து வருகிறார். எனவே தற்சமயம் நானும் குழந்தைகளும் 3 வருடங்களாக அமீரகத்தில்  அவருடன் வசித்து வருகிறோம்.
நான் ஓரளவு நன்கு சமைப்பேன். ஆசியாவின்  சிறப்பு விருந்தினர் பக்கம் பற்றி அறிந்து இந்த பாவ் பாஜி குறிப்பை செய்து அனுப்பியுள்ளேன். நீங்களும் செய்து பார்த்து  தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

இதோ உமாவின் அசத்தலான பாவ் பாஜி குறிப்பும் விளக்கப் படங்களும் :


தேவையான பொருட்கள்;
காய்கறிகள் - நறுக்கிய கேரட்,பீன்ஸ், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு,பச்சை பட்டாணி ஆகியவற்றை தலா ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 3
நறுக்கிய தக்காளி - 3
கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா- 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க வேண்டியது:
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 6  பல்

காரம் அவரவர் விருப்பம்.
மற்றும்
பாவ் பன் - 10 - 12
டோஸ்ட் செய்ய வெண்ணெய் - தேவையாள அளவு.

பரிமாறும் அளவு - 4 -6 நபர்கள்.

செய்முறை:
காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து 3அல்லது 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.ஆவியடங்கிய பின்பு குக்கரை திறந்து வெந்த காய்கறிகளை மத்து வைத்து நன்கு மசித்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி பூண்டை மிக்ஸியில் அரைத்து தயாராக வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், சீரகம் போட்டு வெடிக்க விடவும். நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்கு வெங்காயம் வதங்கி வரும் பொழுது அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்க்கவும். ஒரு சேர தக்காளி வெங்காயம் மசிந்து வர வேண்டும். அத்துடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,பாவ் பாஜி மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி நன்கு கொதிக்க விடவும். மசித்து தயாராக உள்ள காய்கறிகளைச்  சேர்க்கவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.சிம்மில் வைத்து ஒரு சேர மூன்று  நிமிடம் கொதிக்க விடவும். உங்களுக்கு எந்தளவு கெட்டித் தன்மையில் இருக்க வேண்டுமோ அதன் படி செய்து கொள்ளவும்.
இப்போது பாவ் பாஜி ரெடியாகிவிட்டது.

இனி பாவ் பன்னை டோஸ்ட் செய்து உடன் பரிமாற வேண்டியது தான். பாவ் பன்னை பாதியாக கட் செய்து உட்புறம் வெளிப்புறம் தேவைக்கு வெண்ணெய் தடவி தோசைக் கலத்தில் மொறு மொறுப்பாக டோஸ்ட் செய்து எடுக்கவும். தயார் செய்த பாவ் பாஜியுடன்  பரிமாறவும்.சுவையான மும்பை  ஸ்பெஷலான பாவ் பாஜி ரெடி. 

பொடியாக நறுக்கிய மல்லித்தழை,வெங்காயம்,எலுமிச்சை பழத் துண்டுகளுடன் அலங்கரித்து தட்டில் வைத்து பரிமாறவும்.

நீங்களும் செய்து பாருங்க,  உமா இதனை செய்து,  என் வீட்டிற்கு கொடுத்து விட்டாங்க. செம சூப்பராக இருந்தது. நான் ருசித்து விட்டேன். நீங்க ருசிக்க வேண்டாமா?  நிச்சயம் செய்து அசத்துங்க.

உமா தன் குறிப்புடன் சிறப்பு பகிர்வாக  ஒரு சில டிப்ஸ் சொல்கிறேன் என்றதால் இந்த வாரம் கலந்துரையாடல் கிடையாது.

உமாவின் உபயோகமான டிப்ஸ் ;

கிச்சன் டிப்ஸ்;
1.கடலை, பயறு வகைகள் ஊறுவதற்கு 8-10 மணி நேரம் ஆகும்.சில சமயம்  மறந்து விட்டால் கடலை மற்றும் பயறை ஹாட்பேக்கில் போட்டு கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து விடுவேன். விரைவில் ஓரிரு மணி நேரத்தில் ஊறி சமைப்பதற்கு ரெடியாகி விடும்.

2.மண் சட்டியில் தயிருக்கு உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும்,புளிக்காமலும் ஜில்லென்றும் இருக்கும்.

3.வெளியூர் செல்லும் பொழுது கிச்சன் சின்க்கில் நாப்தலீன் உருண்டைகளை போட்டுச் சென்றால் சமையற் கட்டில் பூச்சிகளின் தொல்லை எட்டிப் பார்க்காது.

அழகு டிப்ஸ்;
1.சருமம் பொழிவு பெற மோர், இளநீர்,வெந்தயக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ,துளசி,    புதினா,ஓமவல்லி,தக்காளி,கேரட், பப்பாளி, தர்பூசனி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது ஆரோக்கிய பானங்களையும் குறிப்பிட்ட அளவு சேர்க்க வேண்டும். நீர்ம உணவு சேர்க்கும் பொழுது உடல் எடை கூடாமல் இருக்கும்.

3.கிரீன் டீ குடித்தால்  சரும சுருக்கம் குறைவதோடு, முதுமை தோற்றம் வராமல் தடுக்கும்  கூந்தலும் அடர்த்தியாக வளருமாம். 2 கப் முதல் 5 கப் வரை கிரீன் டீ ஒரு நாளைக்கு குடித்து  வரலாம்.

மருத்துவ டிப்ஸ்;
1.கொய்யா பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. வயிற்று வலி உண்டாகும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் எற்படும்.

2.வெந்தயத்தை வெயிலில் காயவைத்து பொடித்து ஒரு டீஸ்பூன் அளவு மோரில் கலந்து தினமும் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

3.தினமும் ஒன்றிரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.

4.காலை வேளை ஒரு டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு தண்ணீர் விட்டு விழுங்கி வந்தால் சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், நீர்க் கடுப்பு போன்றவை  குறையும்.

மேற் கூறிய டிப்ஸ்களை நீங்களும் முயற்சித்து பாருங்க.

பயன் மிக்க டிப்ஸ், சூப்பர் சமையல் என்ற அருமையான பகிர்வுக்கு  மிக்க மகிழ்ச்சி உமா. 

நீங்களும் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு அசத்தியமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.

மீண்டும் புது வருடத்தில் ஒரு அசத்தலான அட்டகாசமான பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Tuesday, December 24, 2013

சேமியா மட்டன் பிரியாணி / Semiya Mutton Briyani

இந்த வாரம் செவ்வாய் தமிழர் சமையல் இவென்ட்டிற்கு எங்க ஊர் ஸ்பெஷலான சேமியா மட்டன் பிரியாணியை பகிரலாம் என்று உள்ளேன்.

தேவையான பொருட்கள்;
  மட்டன் - அரைக் கிலோ
  சேமியா - அரைக் கிலோ
  எண்ணெய் - 100 மில்லி
  நெய் - 50 மில்லி
  இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
  கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி அல்லது 1 தேக்கரண்டி(காரம் அவரவர் விருப்பம்)
  தயிர் - 2 மேசைக்கரண்டி
  வெங்காயம் - 150 கிராம்
  தக்காளி - 200 கிராம்
  பச்சை மிளகாய் - 2
  மல்லி,புதினா - தலா கைபிடியளவு
  எலுமிச்சை - பாதி
  பெரிய தேங்காய் - பாதி துருவிக் கொள்ளவும்(பால் எடுக்கவும்)
  உப்பு - தேவைக்கு.

 • செய்முறை:
 • சேமியாவை முதலில் பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.ஒரிரு டீஸ்பூன் நேய் சேர்த்தும் வருக்கலாம்.

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மட்டனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
 
வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.
பின்பு மல்லி, புதினா, மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கி எல்லாம் சேர்ந்ததும் எண்ணெய் தெளிந்து வரும்.
 ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து,அரை கப் தண்ணீர் சேர்த்து  பிரட்டி விட்டு குக்கரை மூடி நான்கு விசில் வைத்து திறக்கவும்.
சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகிவிட்டது.

மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய் பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு தண்ணீர். பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும்.கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும்.
பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.உப்பு சரி பார்க்கவும்.

சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.அழகுக்கு சிறிது நறுக்கிய மல்லி,புதினா இலை விரும்பினால் தூவலாம்.அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.
பத்து நிமிடம் கழித்து திறந்து எடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

இதனை தமிழர் சமையல் செவ்வாய் இவென்ட்டிற்கு TST அனுப்புகிறேன்.
Friday, December 20, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 6- திருமதி சுஜிதா ரூபன் - Guest Post - சிக்கன் குரோகட்ஸ் / Chicken Croquettes

திருமதி சுஜிதா ரூபன், இவர்களிடமிருந்து மெயில் வந்தப்போ யார் இவங்க என்று ஆர்வத்தோடு திறந்து வாசித்தேன். கெஸ்ட் போஸ்ட் செய்ய விருப்பம் தெரிவித்து அவங்க ஆங்கில வலைப்பூ லின்க் அனுப்பி இருந்தாங்க, இதோ அவங்களோட சுஜிதா ஈசி குக்கிங் ( Sujitha Easy Cooking ) வலைப்பூ.
படங்களும் குறிப்புகளும் கண்ணைக் கவர்வது மட்டுமல்லாமல் மனதையும் கொள்ளை கொள்கிறது. நீங்கள் சென்று பார்க்க  இங்கு கிளிக்கவும்.

மெயிலில் எனக்கும் சுஜிதாவிற்கும் உள்ள சம்பாஷணை இப்படித்தான் ஆரம்பித்தது. உங்களுக்கு தமிழ் தெரியுமா? 
தமிழ் தெரியும், நல்லா பேசுவேன், வாசிப்பேன்,ஆனால் எழுதுவது தான் குறைவு.

சரி. நீங்க ரெசிப்பி அனுப்புங்க, நிச்சயம் பகிர்கிறேன்.முதலில் சுய அறிமுகம்,  ப்ரஃபைல் படம் அனுப்பி வைங்கன்னு சொன்னேன், தம்பதியர் சகிதம் அழகான படம் ஒன்றை அனுப்பி தந்தாங்க. என்றும் மனமொத்த தம்பதியினராய் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம் !

 சுய அறிமுகம்:
நான் சுஜிதா ரூபன், சொந்த ஊர் நாகர்கோவில், திருமணத்திற்கு பின் பெங்களூர் வாசம், 2 வயதில் ஒரு மகன், சாஃப்ட்வேர் இஞ்சினியர் (முன்பு),தற்சமயம் மகிழ்ச்சியான குடும்பத் தலைவி


இதோ அவங்க நமக்காக செய்து அனுப்பிய சிக்கன் குரோகட்ஸ் ரெசிப்பியின் பகிர்வு!

About Recipe:
This chicken croquettes is a easy snack and can be introduce this as a starter for your guest.. its a lovely nonveg recipe... chicken pieces blend in white sauce crunchy at outside and melting stuff inside the nuggets... thats a yummy combo... .. Kids love to have this at any time.. sure if you try this at one time love to prepare this for more.. 

Ingredients:
Chicken- 200gms
Butter- 1 tsp
Onion- 1 finely chopped
Ginger Garlic paste- 1 tsp
Maida- 3 tsp + 3 tsp
Milk- 1/2 cup
Green chillie- 1 finely chopped
Coriander leaves- a hand ful
Egg- 1 nos
Bread crumbs- 1 cup
Oil- for frying( 1/2 cup)

Method:

* Grab the ingredients..
* Boil the chicken pieces with 1 cup of water.. cook till the chicken cook and the water dries up
* Make them cool and chop the chicken pieces in to small, remove the bone pieces
* Heat the kadai with Butter and melt them..
* Saute the finely chopped onions, fry till they turn pink in color
* Add in the Ginger Garlic paste
*Add the 3tsp of maida and fry them with out any clumps
* Add the milk to the mixture and cook till they form a paste to thick.
* Add the chopped green chille and coriander leaves.. fry them for a minute
* Add the Chopped chicken pieces... take the mixture in a bowl and cool this for an hour in refrigerator.
* make even size ball of these..
* Roll in the remaining maida(3tsp), dip in the egg and again roll in the bread crumbs..
*Heat the kadai with oil, and fry the prepared balls till they turn golden brown in color.Drain and serve immediately.

இனி தமிழில்:

தேவையான பொருட்கள்;
சிக்கன் - 200 கிராம்
வெண்ணெய் - 1- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மைதா - 3  + 3 டீஸ்பூன்
பால் - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 அல்லது 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கையளவு
முட்டை - 1
உப்பு - தேவைக்கு.
ப்ரெட் க்ரெம்ஸ்-  1 கப்
எண்ணெய் பொரிக்க - அரை கப்.

செய்முறை:

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்

சிக்கன் துண்டுகளை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.தண்ணீர் நன்றாக வற்றி சிக்கன் வெந்து வரும். அடுப்பை அணைக்கவும்.சிக்கன் ஆறிய பின்பு எலும்பு இருந்தால் எடுத்து விட்டு அவற்றை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெயை உருக விடவும்.பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு வாடை மடங்க வேண்டும். 3 டீஸ்பூன் மைதா சேர்க்கவும். நன்கு கட்டி பிடிக்காமல் பிரட்டவும்.

அத்துடன் பால் சேர்த்து நல்ல திக்கான பேஸ்ட் ஆகும் வரை கிண்டவும்.பொடியாக நறுக்கிய மல்லியிலை, மிளகாய் சேர்க்கவும்.வதக்கவும், அத்துடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.

தயார் செய்த சிக்கன் மிக்ஸை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.


பின்பு ஒரேயளவு உருண்டையாகப் பிடிக்கவும். மைதா, ப்ரெட் கிரம்ஸ், முட்டை அடித்தது இவற்றை தனித் தனி கிண்ணங்களில் தயாராக வைக்கவும். முதலில் தயார் செய்த உருண்டையை மைதாவில் பிரட்டி, பின்பு முட்டையில் தோய்த்து பின்பு ப்ரெட் கிரம்ஸ்சில் மீண்டும் பிரட்டி எடுத்து இப்படியே அனைத்து உருண்டைகளையும் ரெடி செய்யவும்.


வாணலியில் எண்ணெயை சூடு படுத்தவும். உருண்டைகளை பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் குரோகட்ஸ் ரெடி.நீங்களும் செய்து பாருங்க.

இது ஒரு ஈசி ஸ்நாக், இதனை பார்ட்டியில் ஸ்டார்டராகவும் பரிமாறலாம். குரோகட்ஸ் வெளியே முறுகலாகவும்,உட்புறம்  வாயில் போட்டால் கரையும் அளவு மெதுவாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.ஒரு தடவை செய்து பார்த்தீர்கள் என்றால் , மீண்டும் செய்யத்தூண்டுமாம்.
அவங்க ஆங்கிலத்தில் அனுப்பியதை நான் தமிழ் படுத்தி உங்களுக்கு தந்துள்ளேன்.

இதோ நான் செய்து அசத்திய சிக்கன் குரோகட்ஸ் படப் பகிர்வு.


நான் கொஞ்சம் ஸ்பைஸி ப்ரெட் கிரம்ஸ் உபயோகித்து செய்தேன்.சூப்பராக இருந்தது.என் வலைப்பூவில் இல்லாத அருமையான ரெசிப்பி.பகிர்வுக்கு மிக்க நன்றி சுஜிதா.

இது கிறிஸ்துமஸ், புது வருட சீசன் ஆதலால் அவங்க ப்ளாக்கில் இருந்து ஒரு கிறிஸ்துமஸ் கேக் குறிப்பு.


நீங்களும் செய்து பார்க்க  இங்கு  கிளிக்கவும். ருசியான கேக்  செய்து பாருங்க.

இனி சுஜியுடனான கலந்துரையாடல் :
நமக்காக சிரமப்பட்டு கலந்துரையாடல் பதிலை தமிழில் டைப் செய்து அனுப்பியிருக்காங்க,பாராட்டுக்கள் சுஜி.

வணக்கம் இது என்னுடைய முதல் விருந்தினர் பகிர்வு, இந்த வாய்ப்பை தந்த ஆசியா மேடத்திற்கு நன்றி. அவர்களது வலைப்பூவில் சிறப்பு விருந்தினர் அறிவிப்பை பார்த்து அவர்களை மெயில் மூலம் தொடர்பு கொண்டேன், மிகவும் உற்சாகமாக என்னை வரவேற்றார்கள், எனக்கு ஒர் புதிய அனுபவம் காத்திருக்கிறது என தோன்றிற்று, அப்படியே எனக்கு ஒர் நட்பும் கிடைத்தது.

இனி  என் கேள்விகளும் சுஜிதாவின்  பதில்களும்~


1.தங்களுடைய சுயறிமுகம், தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள்.
   என் பெயர் சுஜி, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே நாகர்கோவில், தற்பொழுது வசிப்பது பெங்களுரில், கைவினைப் பொருட்கள் செய்வது என்னுடைய பொழுதுபோக்கு (fur dolls, flower making, glass painting, embroidery, crochet)

2. தங்களுக்கு எத்தனை வருட சமையல் அனுபவம்? 
 ஆறு வருடங்களாக நான் சமைக்கிறேன்.

3..தங்கள் சமையலில் தங்கள் வீட்டினர் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகள் மற்றும் பிடிக்காத உணவு என்றால் எதை எல்லாம் குறிப்பிடுவீர்கள்.
 மீன் குழம்பு,மட்டன் பிரியாணி,சிக்கன் பிரியாணி, இவை கணவருக்கு மிக பிடித்தவைகள் அசைவம் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும், அதிக இனிப்பு கணவர் விரும்புவதில்லை..

4..உங்கள் கணவருக்கு அவரின் அம்மா சமையல் பிடிக்குமா ? அல்லது நீங்கள் செய்து அசத்தும் சமையல் பிடிக்குமா?
திருமணத்திற்கு பிறகு அம்மா(அத்தை) அவருக்கு என்ன பக்குவத்தில் சமையல் செயகிறார் என்பதை கவனித்து கற்றுக் கொண்டேன்.இது வரை அவர் சமையலை ஓப்பிட்டதில்லை.. நான் நிறைய விஷயஙகள் சமையலில் தெரிந்து கெண்டது என் அம்மா(அத்தை)யிடம் தான்.

5.திடீர் விருந்தினர் வந்தால் வெளியே வாங்கி பரிமாறுவீர்களா? அல்லது தேவையான பொருட்கள் வாங்கி வந்து அசத்தலாக  சமையல் செய்வீர்களா? அல்லது வீட்டில் இருப்பதை வைத்து நன்றாக சமைத்து அசத்துவீர்களா? எப்படி சமாளிப்பீர்கள்.
திடீர் விருந்தினர் வந்தால்,முடிந்தவரை இருக்கிறதை வைக்கப் பார்ப்பேன், இல்லையா அசைவம் (மீன்,கோழி,மட்டன்) வாங்கி அசத்திவிடுவோம், விருந்தினர் முகம் சுழிக்காதவாறு சமையல் செஞ்சுருவேன்..

6.சாப்பாடு மீதியானால் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டா? அல்லது மீதியாகாமல் சமைக்க பழகிக் கொண்டீர்களா? எப்படி?
பெரும்பாலும் தினசரி சமையலில் மீதி வராது,அனுபவம் தான் அளவாக சமைக்க கற்றுத் தந்தது, மீதி வந்தாலும் திரும்ப பரிமாறும் போது அதை புதிய ருசியில் மாற்றி பரிமாறிவிடுவேன் இதுவும் என் அம்மா(அத்தை)யிடம் தான் கற்றுக்கொண்டேன்..:)

7. தினப்படி சமையலை முன்பே யோசித்து, அட்டவணையிட்டு சமைக்கும் பழக்கம் உண்டா? அல்லது அன்றே யோசித்து அன்று சமைக்கும் பழக்கமா?
அட்டவணை போடும் வழக்கம் உண்டு. என் குடும்ப ஆரோக்கிய அட்டவணையில் வார நாட்களில் பெரும்பாலும் சைவம் தான் இருக்கும், சாம்பார், புளிக்குழம்பு, பருப்புகுழம்பு, வத்தக்குழம்பு, வெரைட்டி ரைஸ். இதில் காரட், பீன்ஸ்,முட்டை கோஸ்,   கத்திரிக்காய், கீரை, காளிஃப்ளவர்,காளான், பனீர், கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, காய்கறிகள் வழக்கமாக இடம் பெறுபவை.விடுமுறை நாள் என்றால் அது சந்தேகமே இல்லை அசைவம் தான்.

8. சமையல்  வலைப்பூ ஆரம்பிக்க எது காரணம்?
எனக்கு சமையல் குறிப்பெடுப்பதில் ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி, டிவி மற்றும் வார இதழ்களில் வரும் குறிப்பை டயரிகளில் சேகரித்து கொள்ளுவேன், அதையே இப்பொழுது வலைப்பூவில் சேகரிக்கிறேன். டயரி எனக்கு மட்டுமே பயன்படும், இது எல்லோருக்கும் பயன்படும் என்பதால் வலைப்பூவை ஆரம்பித்தேன்

9. என்னைப் பொறுத்தவரை நான் புகைப்படத்திற்காக அதிகம் நேரம் செலவழிப்பதில்லை, மொபைலில் எடுக்கும் படங்கள் எப்படியிருந்தாலும் பகிர்கிறேன்.தாங்கள்  பகிரும் புகைப்படத்திற்கு தனிக் கவனம் செலுத்துகிறீர்களா? என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்? எதாவது டிப்ஸ்.
எனக்கு எழுதும் திறன் கிடையாது மேடம், அதனால் புகைப்பட விளக்கப் படங்கள் எனக்கு கை கொடுக்கிறது..  CanonA620 Powershoot கேமரா உபயேகிக்கிறேன்,கூடிய மட்டும் புகைபட வேளை பகலில் தான் செய்வேன்.

10. .நீங்கள் வலைப்பூவிற்காக ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் செலவழிப்பீர்கள். வலைப்பூ ஆரம்பித்த பிறகு ஏதாவது உங்கள் தினசரி வாழ்வில் நல்ல மாற்றங்கள் அல்லது ஏற்பட்ட  அசௌகரியங்கள் பற்றியும் பகிரலாம்.
 ஒருமணி நேரம் தான் இப்போதைக்கு ஒதுக்குகிறேன், இங்கு நிறைய தோழிகள் கிடைத்துள்ளனர்.. சிலரது திறமைகளும் அனுபவங்களும் தைரியம் தருவதாக கருதுகிறேன் அசௌகரியம் ஒன்றுமில்லை, 

11. .சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், குறிப்புக்கள் பற்றி  சில வரிகள்.

சமைத்து அசத்தலாம் வலைப்பூவை கடந்த 5 மாதங்களாக பார்க்கிறேன்,அனுபவமிக்க குறிப்புகள் அட்டகாசம், குறிப்புகள் மிக எளிமையாகயிருக்கும், பிரியாணி வகைகள் என்னை மிக ஈர்த்தவை, பாரம்பரிய உணவான உழுந்து சோறு போன்ற குறிப்புகளும் அருமை, இன்னும் சமைத்து அசத்தலாம் வலைப்பூ வளர என் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி திருமதி சுஜிதா ரூபன். அருமையான பகிர்வுக்கும், சுவாரசியமான கலந்துரையாடலுக்கும் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம் !

முக்கியக் குறிப்பு:

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்பு அனுப்புவதாய் கருத்தில் தெரிவித்தவர்கள் குறிப்பை சுய அறிமுகத்தோடு என் மெயில் ஐடிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பகிர்வை தயார் செய்ய எடுத்துக் கொள்ள ஆகும் நேரம், மெயில் தொடர்பு என்கின்ற சிரமத்தை பொருட்படுத்தாமல் அன்புடன் கலந்து கொண்டவர்களுக்கும், தற்பொழுது குறிப்பை அனுப்பி வரும் நட்புகளுக்கும்  மீண்டும் என்  மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்புகள் மெயிலில் வரும் வரிசைப்படி பகிர்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்பதே இந்தப் பக்கத்தின் சிறப்பு அம்சம்.

அடுத்த வாரம் ஒரு வித்தியாசமான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

சிறப்பு விருந்தினர் பகிர்வு மிக பெரிதாக இருப்பதாகவும், சுருக்கி போஸ்டிங் போடும்படியும் பொதுவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இப்படியே தொடரட்டுமா? அல்லது ஏதும் மாற்றம் செய்யலாமா? உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். சுய அறிமுகம் மற்றும்  குறிப்பு பகிர்வு  மட்டும் போதுமா? மனம் திறந்து இப்பகுதி குறித்த ப்ளஸ் மைனஸ் - கருத்துக்ககளை தெரிவிக்கலாம். சிறப்பு விருந்தினர்கள் சமையற் குறிப்போடு கலந்துரையாடலுக்கு பதிலாக பயனுள்ள வகையில் ஹெல்த் டிப்ஸ், அழகு குறிப்பு, சமையல் டிப்ஸ் இப்படி எது வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதனையும் தெரிவிக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.