Friday, December 6, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு 4 - திருமதி சித்ரா சாலமன் - முழு வான்கோழி ரோஸ்ட் / Whole Turkey Roast

கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் சிந்தனை,கொஞ்சம் சீரியஸ் என்று பதிவுலகில் பரபரப்பாக உலா வந்த கொஞ்சம் வெட்டி பேச்சு வலைப்பூ உரிமையாளர்  திருமதி. சித்ரா சாலமனைப் பற்றி நான்  சொல்வதை விட அவர் பக்கம் போய் நீங்களே நச்சென்ற அவரின் பகிர்வுகளை வாசித்துப் பாருங்கள் ஒரு வருட காலமாக பதிவுலகை விட்டு ஒதுங்கியிருந்தாலும் ஃபேஸ் புக் மூலம் பதிவுலக நட்புகளை சந்தித்து உரையாடுவதில் அவர் தவறுவதில்லை, 
அவர் தன்னைப் பற்றி சொல்லும் பொழுது பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம், தன் தந்தை திரு. பொ.ம.ராசாமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் எதையும் சில சமயம் ( மனிதர்களைக் கூட) சீரியஸ் பார்வையில் பார்க்காமல் சிரியஸ் பார்வையில் பார்த்து போய்கிட்டு இருப்பதாக சொல்கிறார், Now in USA, strongly believe in Jesus Christ, Who made me as special I can be.என்று சொல்லுகிறார்.

 ஒருநாள் இந்த சிறப்பு விருந்தினர் பக்கம் பற்றி அவருக்கு மெசேஜ் செய்து,  கலந்து கொள்ளும் படி கேட்டேன். 
உடனே பதில் தந்ததோடு மட்டுமில்லாமல், ஃபேஸ் புக் மெசேஜிலேயே  ஒரு சில நிமிடங்களில் அவர் அனுப்பிய பதிலைப் பாருங்களேன்.சமையல் குறிப்பு எல்லாம் சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு பெரிய பிஸ்தா நான் இல்லை, அக்கா. ஏதோ எங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் , அவங்க முகம் சுளிக்க வைக்காமல் சமைக்கிற அளவுக்குத் தெரியும். மத்தப்படி, நல்ல சாப்பாட்டை போட்டோல பார்த்து ஜொள்ளு விடுவதற்கே ரெண்டு கிலோ ஏறி விடும் இனம் தான், நான்.
நானும் திருமணம் ஆகி, ஒரு வருடம் வரைக்கும் சமைக்காம சமாளிச்சிட்டேன். அப்புறமும் சமைக்காம டபாய்க்கிரதற்கு காரணம் இல்லாம போய் , வேற வழியே இல்லாம சமைக்க ஆரம்பிச்சேன்.
எங்க பாட்டியம்மா கொடுத்த தைரியம் தான். என் திருமணத்திற்கு முன், ஒரு நாள் அவங்க கிட்ட பேசிக் கொண்டு இருந்த போது , சமையல் பற்றி பேச்சு வந்து , அவங்க அறிவுரை கேட்டேன்.
அவங்க சொன்னாங்க , "சமையல் குறிப்பு எல்லாம் - கொஞ்ச நாளைக்குத்தான். அதே உப்பு, புளி , மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு, தக்காளி, வெங்காயம், பட்டை, கிராம்பு, மசாலா, எண்ணை வகையறா தான். எது எதை எதோடு சேர்க்கக் கூடாது - எதை சேர்க்கணும் - எவ்வளவு சேர்க்கணும்னு உனக்கே ஒரு நிதானம் ஒரு கால கட்டத்துல வரும். அப்புறம், நீயும் பெரிய குக் தான். அது வரைக்கும், என்ன செய்தாலும், முதலிலேயே அதற்கு பேர் வைக்காத. என்னவா வருதுன்னு பாத்துக்கிட்டு, அப்புறம் பேர் வைச்சுக்கோ. கடலை மாவு, நெய் , சீனி எல்லாம் சேர்த்து கிண்டும் போது - கட்டியா வந்துச்சுனா மைசூர் பாகு - குழ குழ னு வந்துச்சுனா, பர்பி - நெழு நெழு னு வந்துச்சுனா கீர் - தண்ணியா நின்னுச்சுனா பாயாசம். அவ்வளவுதான். எல்லாம் பேர் வைக்கிறதுல இருக்குது. "
அந்த தைரியத்துல , நானும் சமைக்க ஆரம்பிச்சிட்டேன். முதல் முதலா சமைக்க ஆரம்பித்த போது , சாப்பிடுற மாதிரி வந்தால், டேபிள் மேல இருக்கும். இல்லைனா, சமைச்ச சுவடு தெரியாம, நேரா குப்பைத் தொட்டி தேடி போய்டும்.
இப்போ, நானும் சமையல் ரவுடினு சமையல்கட்டு ஜீப்ல ஏறிட்டேன். நான் எதை சமைக்கிறேனோ அதுதான் ரெசிப்பி - எதுவா வருதோ அதுதான் சமையல் - அதை என் வீட்டு மக்கள் சாப்பிடுறாங்க. அது அவங்க வயித்து (தலை) விதி .

சமையல் ரெசிபி கொடுக்கிறதை விட, புதிதாக சமைப்பவர்களுக்கு 5 டிப்ஸ் (" சூது கவ்வும்" திரைப்படத்தில் வருவது போல இது "சூடு கவ்வும்" டிப்ஸ்) கொடுக்கிறேன். :
1. பசித்த பின் , சமையல் பற்றி யோசித்து, முடிவு எடுத்து , ஆய்வு எடுத்து - ஆராய்ச்சி - பரிசோதனை கூடத்தில் இறங்குவதை விட, பசிக்கும் முன்பே , சமைக்க "முயல்வது" புத்திசாலித்தனமாக இருக்கும்.
2. ரெசிபி எடுத்து பக்கத்தை கிளிப் போட்டு வைத்துக் கொள்ளவும் . பேஜ் மாறி விட்டது தெரியாமல், சமைப்பவர்கள் - ரவா கேசரி செய்ய ஆரம்பித்து விட்டு, ரவா உப்புமாவில் முடிவதை தவிர்க்கவே இந்த டிப்.
3. ரெசிபிக்கு அருகில், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் Pizza, மீல்ஸ் டெலிவரி, போன்ற emergency கடைகளின் போன் நம்பர்களை அருகில் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.
4. சமைக்கும் போது , அடுத்த கிச்சன் சூப்பர் ஸ்டார் நாம்தான் என்ற எண்ணத்தில் டென்ஷன் உடன் சமைக்காமல், எப்படியும் சொதப்பி விடுவோம் - அதனால் என்ன ? இது முயற்சி தான் - என்ற lower thy expectation மனப்பாங்கோடு சமைத்தால், அந்த உணவை சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு கெடுதல் வந்தாலும் - "நானும் சமைக்கலாம்" என்ற தன்னம்பிக்கைக்கு கெடுதல் வராது.
5. எடுத்த உடனேயே, Gobi manchurian fry , stuffed mushroom, schezwan capsicum என்று சொல்வதற்கும் சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் challenge ஆக இருக்கும் டிஷ் ஆக எடுக்காமல், கட்டிப் பருப்பு + ரசம் என்று களத்தில் இறங்கவும்.

இப்படியாகப்பட்ட அவங்க மெசேஜைப் பார்த்த நான்,  சித்ரா இதையே ஒரு பதிவாக தேத்தி விடுகிறேன்.ஒ.கே வா என்று கேட்டேன்,

அதற்கு சித்ரா, அக்கா, பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு, நீங்க  கேட்டதும் தோன்றியதை மெஸேஜ் செய்து, நோ.. சொல்ல வந்தேன், ஆனால் அதையே ஓ.கே சொல்லி என்னை உசுப்பேத்தி விட்டுட்டீங்க, மிக்க நன்றி அக்கா.
அப்படின்னு சொல்லிட்டு அவங்களோட ஒரு போட்டோவை எனக்கு அனுப்பி தந்தாங்க.

ஆஹா ! வான் கோழி ரோஸ்டா ? ரெசிப்பி தாங்க இதையே பகிர்ந்து விடுகிறேன், என்றேன்.


அதற்கு சித்ரா,

எனக்குள் தூங்கிகிட்டு இருந்த பதிவு டர்க்கியை (வான்கோழியை) தட்டி எழுப்பி விட்டுட்டீங்க, பொதுவாக யாரும் டர்க்கியை  ரோஸ்ட் செய்ய மாட்டாங்க, தேவையான்னு யோசிக்கிறேன், மேற்சொன்ன டிப்ஸ் மட்டும் போதும் அக்கா, நான் சமையல் குறிப்பு சொல்ல எதுவும் ஒரிஜினல் இல்லை, எல்லாம் உங்களை மாதிரி பல ப்ளாக்ஸ், சைட்ஸ், ஃப்ரண்ட்ஸ் கிட்ட கேட்டு செய்வது தான் என்று மெசேஜ் செய்தாங்க.

எத்தனை தன்னடக்கம் பாருங்க. சரி உங்க வான்கோழி ரோஸ்ட் ரெசிப்பி கொடுங்க, நான் செய்து பார்க்கிறேன் என்றேன்,உடனே ரெசிப்பியையும் மெசேஜிலேயே அனுப்பி வைச்சாங்க. 

சுலபமாக   நம்ம டேஸ்டிற்கு தகுந்த  மசாலா சேர்த்து செய்த வான்கோழி ரோஸ்ட் ரெசிப்பி இதோ!

தேவையான பொருட்கள்;


14 lbs. ( கிட்டத்தட்ட 6 1/4 கிலோ) வான்கோழி (தோல் உரித்தது - frozen என்றால், fridge லேயே மூன்று - நான்கு நாட்கள் வைத்து இருந்து thaw ஆக்கி கொள்ளவும்.
உள்ளிருக்கும் எல்லாம் கழிவுகள் மற்றும் உதிரி பாகங்கள் எல்லாவற்றையும் நீக்கி விடவும். நன்கு கழுவி நீரை வடிய விட்டு விடவும்.
வான்கோழியை ஊற வைக்க கலவை : (marinade )
3 எலுமிச்சை பழங்களின் சாறு தேவையான காரத்துக்கு ஏற்ப மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு (குறைந்தது நான்கைந்து டீஸ்பூன் அளவாவது தேவைப்படும்) மஞ்சள் தூள் 2 டீஸ்பூன்,சீரகத்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். 2 டேபிள்ஸ்பூன் எண்ணை
இந்த கலவையை , வான்கோழியின் மேலும், உள்ளும் நன்கு தடவி ஊற வைக்கவும். நெஞ்சு பகுதிகளிலும், அதிகம் சதை கொண்ட பகுதிகளிலும் சிறிது கீறி விட்டுக் கொள்ளலாம்.
இதை ஒரு பெரிய tray அல்லது பாத்திரத்தில் மாற்றி, நெஞ்சு பகுதி, கீழே இருக்குமாறு வைத்து மூடி , fridge இல் 24 - 48 மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும்.
அவன் (oven) சூடு 500 டிக்ரீஸ் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய அலுமினியம் அல்லது roasting pan க்குள் வான்கோழியை நெஞ்சு பகுதி மேலே பார்த்த வண்ணம் இருக்குமாறு வைத்து விடவும். மீதி இருக்கும் marinade எடுத்து, வான்கோழி முழுவதும் ஊற்றி விடவும்.
சிறிது எண்ணை அல்லது oil spray (like Pam non stick spray) வான்கோழி மேல் பூச விடவும்.
அவனில் (in oven) , நடு ராக் இல் (middle rack) , வான்கோழியின் கால்கள் கதவு பக்கம் இருக்குமாறு வைத்து விடவும்.
30 நிமிடங்கள் ஆனதும், அவன் (oven) வெப்பநிலையை 350 டிக்ரீஸ் குறைத்துக் கொள்ளவும். ஒரு அலுமினியம் foil எடுத்து லூசாக, வான்கோழியின் நெஞ்சு பகுதியின் மேல் மூடி விடவும். மீண்டும் வான்கோழியை அவனுக்குள் (inside oven) வைத்து 1 1/2 மணி நேரங்கள் முதல் 1 3/4 மணி நேரங்கள் வரை வைக்கவும்.
வான்கோழியை roasting pan or tray யுடன் வெளியே எடுத்து பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை, அப்படியே வைத்து விடவும். அதன் பின், வேண்டிய அளவுகளில் வெட்டி பரிமாறலாம்.


இதோ சித்ரா அவர்கள் பகிர்ந்த சுவையான வான்கோழி ரோஸ்ட் ரெடி.
வான்கோழி கிடைக்கும் பட்சத்தில் நீங்களும் செய்து பாருங்க.
 Thanks Giving , கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விருந்தில்  இந்த வான்கோழி ரோஸ்ட்டிற்கு முக்கிய இடம் என்று நாம் அனைவரும் அறிந்ததே ! 

அவங்க மகளுக்கு டிபிக்கல் அமெரிக்கன் டர்க்கி ரோஸ்ட் தான் பிடிக்குமாம், ஆனால் சித்ரா தான் அதன் வாடை எல்லாம் போக மஞ்சள் தூள்,காரத்திற்கு மிளகாய்த்தூள் எல்லாம் சேர்த்து நம்ம ருசிக்கு தக்க படி சமைச்சு கொடுப்பாங்களாம், இதுவும் அனைவருக்கும் மிகவும் பிடிக்குமாம்.

இப்போதைக்கு சித்ராவின் வான்கோழி ரோஸ்ட்டைப் பார்த்து ஜொள்ளு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.ஊரில் வான்கோழி பிரியாணி சாப்பிட்டிருக்கேன்.

நானும் அலைனில்  சின்னதாக ( ஹி,ஹி) ஒரு வான்கோழி கிடைக்குமா? என்று தேடிப்பார்த்தேன், ஒன்று கூட சிக்கலை, குறைந்தது ஐந்தரைக்கிலோ எடை கொண்டதாகவே இருந்தது. ஒரு கெட்டுகெதர் அரேஞ்ச் செய்தால் ரோஸ்ட் செய்யலாம்.பார்ப்போம்.
என்னால் முடிந்தது அதே ஸ்டைலில் ஒரு கோழி ரோஸ்ட் தான்.சித்ராவின்  வான்கோழி ரோஸ்ட் போலவே ,  நான் சிக்கனை ரோஸ்ட் செய்து பார்த்தேன், சூப்பர்.டேஸ்ட் செமையாக இருந்தது. இந்த ஈசி மசாலாவில் மேரினேட் செய்து ரோஸ்ட் செய்தது எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனது, நான் பலவிதமாக மசாலா மிக்ஸ் செய்து சிக்கன் ரோஸ்ட் செய்திருக்கேன்.ஆனால் இந்த நம்ம ஊர் மசாலா awesome. நீங்களும் நிச்சயம் செய்து பாருங்க.
இதனை படிப்படியான படங்களுடன் தனிப்பகிர்வாகவே அடுத்து பகிர்கிறேன்.

அசத்தலான பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி சித்ரா.விரைவில் மீண்டும் வலைப்பூவில் எழுதத் தொடங்குமாறு  அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.மீண்டும் அடுத்த வாரம்  அனுபவமிக்க ஒரு சிறப்பு விருந்தினரைச் சந்திப்போம் ! காத்திருங்கள்  !

முக்கியக் குறிப்பு:

சிறப்பு விருந்தினர் பக்கத்திற்கு குறிப்புக்கள் அனுப்பிவரும் அத்தனை அன்பான நட்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதிவாரம் வெள்ளிதோறும் நம்மில் பலரை இங்கு சிறப்பு விருந்தினராக சந்திக்கப் போகிறீர்கள்.நீங்களும் ரெடி என்றால் நானும் ரெடி. உங்களைப் பற்றிய சுய அறிமுகத்துடன், நீங்கள் இங்கு பகிரப் போகும் குறிப்பையும் இணைத்து asiyaomar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
37 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டிப்ஸ் மிகும் பயனுள்ளவை...

சிறப்பாக எழுதி உள்ளீர்கள்... திருமதி. சித்ரா சாலமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

மிக்க நன்றி தனபாலன் சார்,வழக்கம் போல் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Chitra said...

Dear akka, It is an honor for me to be in your blog. Thank you very much. Thank you for your loving care, support and blessings :-)

nellai ram said...

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்..

Asiya Omar said...

சித்ரா பகிர்வுக்கும் வருகைக்கும் மீண்டுன் என் மனமார்ந்த நன்றி,மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Menaga sathia said...

சூப்பர்ர்ர் சித்ரா..இதைதான் கிறிஸ்துமஸ் அன்று செய்ய்லாம்னு இருக்கோம்,கடைசில உங்க ரெசிபியே வந்துடுச்சு...வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

நெல்லை ராம்,வருகைக்கும் வாழ்த்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

வாங்க,மேனகா,வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.சித்ரா சொன்னபடி செய்து பாருங்க, சூப்பராக வரும்.உங்க விருப்பம் உள்ளே நீங்க விரும்பிய காயகறிகளை ஸ்டஃப் செய்யலாம்.

Saratha said...

இந்த பக்கிர்வும் அசத்தல்!திருமதி சித்ரா வும்,நீங்களும் சேர்த்து அசத்தி இருப்பது அருமை.டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Manickam sattanathan said...

நம்ம சித்ரா மீண்டும் தமிழ் பிளாக்கில் வருவது மகிழ்ச்சி. சீக்கிரம் வாங்க சித்ரா உங்களிடம் வம்படிச்சு நாளாச்சி.

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப சிம்பிளான மசாலாவா இருக்கு.நல்ல ரோஸ்ட் ஆகியிருக்கு.கோழி செய்து பார்க்கலாம்.

KParthasarathi said...

நான் கண்டவரை யாராவது கலகலப்பாக இருந்தால் சாதரணமாக சைய்யும் காரியத்தில் நேர்த்தி இராது..நேர்த்தியாக இருந்தாலோ கலகலப்பே இருக்காது. ​இரண்டும் சேர்ந்து இருப்பது மிக குறைவு.​ஆனால் .இந்த சித்ரா சாலமன் அவர்களிடம் இரண்டும் தூக்கலாகவே இருக்கும்.பண்ணும் காரியத்தில் ஆழ்ந்த கவனிப்பு,பேச்சில்/எழுத்தில் நல்ல நகைச்சுவை,பழகுவதில் இனிமை,தெளிவான எண்ணம் இதெல்லாம் இவரிடம் நான் கண்ட சிறப்பு.எனக்கு இவரிடம் உள்ள ஒரே குறை என்ன வென்றால் இவர் தன்னுடைய வலைப்பூவை நிறுத்தி வைத்து இருப்பதுதான்..
நான் சைவமானதால் கோழி ரோஸ்ட் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.,

சே. குமார் said...

வாங்கோழி ரோஸ்ட் செய்முறை சொன்ன சித்ரா அக்காவும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி அக்கா...

சித்ரா அக்கா மீண்டும் பதிவெழுத வாங்க...

Suchi Sm said...

super recipe.. parkum pothae taste panna thoonuthu....

Asiya Omar said...

வாங்க சாரதா அக்கா,பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

சகோ.கக்கு மாணிக்கம் கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

அமுதா கிருஷ்ணா வாங்க, நானும் முதலில் மசாலா சிம்பிளாக இருக்கேன்னு நினைச்சேன் ,ஆனால் செய்த பின்பு தான் அதன் ருசி தெரிந்தது,எப்பவுமே சாமான் குறைவாக சேர்த்து செய்யும் உணவின் ருசி அபாரமாக இருக்கும்.நிச்சயம் செய்து பாருங்க.

Asiya Omar said...

சகோ. பார்த்தசாரதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.நீங்கள் சொல்வது மிகச் சரி.இந்த பகிர்வு அனுப்ப சித்ரா எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 10 நிமிடம் தான்.நான் அனுப்பிய மெசேஜிற்கு உடன் பதில் மேசேஜில் இந்த அசத்தலான பகிர்வு.

Asiya Omar said...

சே.குமார் வாங்க, கருத்திற்கும் தொடர் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

சுஜிதா வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

வாவ்..தோழி,நட்புக்கள் சமைக்கும் குறிப்பை ஒவ்வொரு வாரமும் செய்து சாப்பிட்டு வெயிட் ஏறிடப்போகிறது..ஹா ஹா...ஊரில் வான்கோழி டோஸ்ட் பண்ணும் பொழுது எனக்கும் அழைப்பு உண்டுதானே.?சகோதரி சித்ராவின் பேட்டி அருமை.இருவருக்கும் வாழ்த்துகக்ள்.பதிவுகௌ பக்கமே வராத சித்ரவை இழுத்து விட்டீர்கள்.இனியாவது தொடர்ந்து அவர் வெட்டிப்பேச்சில் வருவார் என்று நினைக்கிறேன்.

VijiParthiban said...

மிகும் பயனுள்ளவை...வாழ்த்துக்கள்..

Cherub Crafts said...

ஆஆஅவ் :)) இதுக்குதான் நான் காத்திட்டிருந்தேன் :) ஆசியாவுக்கும் சித்ராவுக்கும் நன்றி ..ஆசியா போன கிறிஸ்மசுக்கு உங்க ரோஸ்ட் சிக்கன் ரெசிப்பி செஞ்சேன் ..இம்முறை மகளும் கணவரும் டர்க்கி கேட்டாங்க ..இப்போ ரெசிப்பி கிடைச்சாச்சி செய்து விடுவேன் ..


இங்கே கிறிஸ்மஸ் என்றாலே எல்லா சூப்பர் மார்கட்லயும் மற்றும் அனைத்து ஆசியர்களின் அங்காடிகளிலும் டர்க்கி ஆர்டர் கொடுக்கலாம் :) ..


எனக்கு சாப்பிட இதுபோல ஆனா சுத்த சைவத்தில் ஒரு FESTIVE RECIPE கிறிஸ்மசுக்கு முன் ஒரு ரெசிப்பி பதிவு தரவேண்டுமென வேண்டிகின்றேன் :)
Angelin

FOOD NELLAI said...

ஆஹா, பதிவுலகம் களை கட்டுதே! :) வருக தங்கையே.

asha bhosle athira said...

ஆவ் கிரிஸ்மஸ் ரைமுக்கு ஏற்ப நல்ல ரெசிப்பி. அழகாக, நல்ல கலராக வந்திருக்கு. வாழ்த்துக்கள் சித்ரா.

நானும் கிரிஸ்மஸ் ரமில் செய்தேன் ஒரு முறை, ஆனா எமக்கு ரேர்க்கியின் சுவை பிடிக்கவில்லை. அதனால எப்பவும் சிக்கினிலேயே செய்து கொள்வது.

வெளிநாடுகளில் எப்பவுமே ஃபுரோஷினாக ரேர்க்கி வாங்கலாம்.

கிரிஸ்மஸ் ரைம் எனில்.. பெரிசு பெரிசாக வந்திருக்கும் சூப்ப மார்கட்டுகளுக்கு.

asha bhosle athira said...

///எனக்கு சாப்பிட இதுபோல ஆனா சுத்த சைவத்தில் ஒரு FESTIVE RECIPE கிறிஸ்மசுக்கு முன் ஒரு ரெசிப்பி பதிவு தரவேண்டுமென வேண்டிகின்றேன் :)
Angelin//

நான் பதில் சொல்றேன் ... நான் பதில் சொல்றேன்ன்ன்ன்:))..

ஒரு பெரீய முழுப் பூசணிக்காயை இப்புடி செய்து வையுங்க அஞ்சு:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்...

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி தோழி ஸாதிகா,அடுத்த முறை நீங்க துபாய் வரும் பொழுது எங்க வீட்டில் ஒரு ப்ளாக்கர்ஸ் கெட்டுகெதர் அரேஞ்ச் செய்து சித்ராவின் டர்க்கி ரோஸ்ட் செய்து விடலாம்.சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு அவர்கள் அனுப்புவதை நான் செய்து பார்ப்பது ஒரு மகிழ்ச்சி தான்.பேசாமல் அனுப்புபவரகளை டயட் குறிப்பை பகிரும் படி சொல்லிவிடலாமா?ஹி.ஹி.தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

விஜி வாங்க,பார்த்து ரொம்ப நாளாச்சு.கருத்திற்கு மிக்க நன்றி.

ஏஞ்சலின், வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.நிச்சயம்
நீங்க கேட்ட படி குறிப்புக்கள் பகிர்கிறேன்.

Asiya Omar said...

ஆஹா ! அதிராவை காணோமேன்னு நினைக்கையில் உங்கள் கருத்து நன்றி,மகிழ்ச்சி.பேக்ட் பூசணிக்காய் இதுவும் நல்லாத்தான் இருக்கும்.ஆனால் கொஞ்சம் வாய்க்கு ருசியாய் ஏஞ்சலுக்காக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.பார்ப்போம்.

Asiya Omar said...

Food Nellai,சங்கரலிங்கம் சார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

vanathy said...

Super recipe. Thanks, chitra and Asiya Akka.

இராஜராஜேஸ்வரி said...

சித்ரா அவர்களை நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி ..

முழுவதும் பூசணிகாய் மட்டும் விற்றுக்கொண்டிருந்த கடை கண்கொள்ளாக்காட்சி .. !ஆஸ்திரேலியாவில் கிடைத்தது ..!!

அதிரா சொன்னது போல் சைவமான எனக்கு ஒரு டாலருக்கு கிடைத்த முழுப்பூசணிக்காயை ஆயில் ஸ்பிரே செய்து அவனில் வைத்து பக்குவம் செய்து உப்பு மிளகு மசாலா தூவி தந்தார் மகன் .. மிகவும் அருமையாக இருந்தது ..!

Asiya Omar said...

வாங்க வானதி, கருத்திற்கு மகிழ்ச்சி நன்றி.

வாங்க இராஜராஜேஸ்வரி, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி.

Thenammai Lakshmanan said...

wowwwwwwwwwwww சித்ராவா.. அசத்திட்டே போ...பலநாள் கழிச்சு உன் எழுத்தைப் படிச்சு உணர்ச்சி வசப்பட்டு அழுதுட்டேன்.. ஹாஹாஹா... ஒரெ ஜொள்ஸ் வேற.. அது கண்ணீரா ஜொள்சான்னு வேற தெரில.. :)

சித்துவை எழுத வச்சதுக்காகவும் சுவையான ரெசிப்பீயை கொடுத்ததுக்காகவும் தாங்ஸ் ஆசியா. :)

Asiya Omar said...

வருகைக்கு மிக்க நன்றி தேனக்கா, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இந்த பகிர்வுக்காக சித்ரா மெனக்கெடவே இல்லை.டக்கென்று ஒரே நேர மெசேஜ்.அதில் தெளித்த நகைச்சுவையான பகிர்வே இது.

Cherub Crafts said...

கர்ர்ர்ர் for அதிராவ் ..
தாங்க்ஸ் ஆசியா :) கணவரும் மகளும் டர்க்கி சாப்பிடும்போது நான் அதுக்கு ஈக்வலண்டா வெஜ்ஜில் சாப்பிடனும் ..வெயிட்டிங் for a yummy recipe :)

Jaleela Kamal said...

வாவ் சித்ரா கலக்கலான வான்கோழி ரோஸ்ட் இப்பவாவது வந்தீங்களே ரொம்ப சந்தோஷம்.

ராமலக்ஷ்மி said...

@சித்ரா, சூடு கவ்வும் டிப்ஸ் அருமை:)!

@ஆசியா, சிறப்பு விருந்தினர் பக்கம் தொடரட்டும்.

Asiya Omar said...

வாங்க ஏஞ்சல்,நிச்சயம் சூப்பர் குறிப்பு உங்களுக்காகவே வரும்.மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி.

ஜலீலா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

ராமலஷ்மி வாங்க, கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.