Friday, December 13, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 5 - திருமதி சாரதா - காளான் குழம்பு - Mushroom Curry

திருமதி சாரதா அவர்களின் வலைப்பூ  சாரதா சமையல் பற்றி சில மாதங்களுக்கு முன் தான் தெரியவந்தது,விளக்கப் படங்களுடன் பகிர்ந்திருந்த ஒவ்வொரு குறிப்பும் அருமையாக இருந்தது. தாங்கள் எதிர்பார்க்கும் ருசியில் பல அசத்தலான பாரம்பரியக் குறிப்புக்களைக் காணலாம். இதோ அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று ரசித்து ருசித்து கருத்துக்களைப் பகிர  கிளிக்கவும்.

சாரதா அக்காவிடம் இருந்து எனக்கு வந்த மெயில் சுருக்கம் இதோ!
உங்கள் சிறப்பு விருந்தினர் பக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூ மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். கீழே உள்ள காளான் குழம்பை உங்கள் வலைப்பூவில் பதிவு செய்ய ஆசைப் படுகிறேன். உங்களுக்கு இந்த ரெசிபியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக என்னை அணுகவும்.

இத்தனை அனுபவமிக்கவர்கள் மெயில் செய்து, குறிப்பும் தந்து பகிரச் சொன்னது கரும்பு தின்னக் கூலியும் தந்தது போல் தான் இருந்தது. அவர்கள் பற்றிய சுய அறிமுகம் பார்த்த பொழுது தான் அவர்களும் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று தெரிந்து கொண்டேன்.மகிழ்ச்சியாக இருந்தது.

இதோ அவர்களின் அழகான ப்ரஃபைல் படம். எத்தனை அழகான படம்.நிச்சயம் பழகுவதற்கும் அன்பானவர்களாகத்தான் இருப்பார்கள்.


சாரதா அக்கா பகிர்ந்த காளான் குழம்பின் பகிர்வு விளக்கப் படங்களுடன் இதோ!தேவையான பொருள்கள் -
 1. காளான் - 1/4 கிலோ 
 2. தக்காளி -1
 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
 4. உப்பு - தேவையான அளவு                           
வறுத்து அரைக்க -
 1. மிளகாய் வத்தல் - 2
 2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
 3. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
 4. மிளகு - 1/2 தேக்கரண்டி
 5. மல்லித்தழை - சிறிது 
 6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
 7. பூண்டு பல்- 3
அரைக்க: 
 1. தேங்காய் துருவல் - 50 கிராம் 
 2. சின்ன வெங்காயம் - 6         
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - ஒரு இன்ச் அளவு
  3. கிராம்பு - 3
  4. சோம்பு - 1 தேக்கரண்டி 
  5. வெங்காயம் - 1/4 பங்கு
  செய்முறை:
  1. முதலில் காளானை நன்றாக கழுவி நீள வாக்கில் வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
      
  2. அடுப்பில் கடாயை வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் மல்லித்தழையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.  

  3. தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.


  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,
   கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

  6. தக்காளி வதங்கியதும் காளான், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  7.மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்..

  சுவையான காளான் குழம்பு ரெடி. 
  நீங்களும் செய்து பாருங்க.அசத்தலாக இருக்கும்.


  இதோ நான் செய்து அசத்திய காளான் குழம்பின் படப்பகிர்வு. பாரம்பரியச் சுவையுடன் கூடிய காளான் குழம்பு அசத்தலாக இருந்தது.உங்க டேஸ்டிற்கு தகுந்த படி மசாலா சாமான் சேர்த்து செய்து கொள்ளலாம்.


  என்னவொரு மணம் ! சூப்பர் அக்கா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாரதா அக்காவுடனான மெயில் கலந்துரையாடல்:

  1. தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?

  எனது பெயர் சாரதா. நான் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருக்கிறேன். நான் சாரதா சமையல் என்ற பிளாக் வைத்திருக்கிறேன். எனது கணவர் பேங்க் மேனேஜர் பதவியில் இருந்து போன ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். எங்களுக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பையன் மருமகளுடன் பெங்களுரில் இருக்கிறார். இருவரும் சாப்ட்வேர் எஞ்சினியர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். மகளும், மருமகனும் அமெரிக்காவில் இருக்கின்றனர். மகளுக்கு ஒரு பையன் இருக்கிறான். எனக்கு முதலில் பிளாக்கர் பற்றி அவ்வளவாக தெரியாது. இவர்கள் எல்லார் உதவியோடு பிளாக்கை ஆரம்பித்தேன். எனது மகள் தான் எல்லா விவரமும் சொல்லிக் கொடுத்தாள். வாசகர்களும் என்னுடைய பிளாக்கின்  வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கின்றனர். இதன் மூலம் புது நட்புகளும் உருவாகியுள்ளது. சமையல் கலையை எனக்கு சொல்லி கொடுத்தது கண்டிப்பாக என் அம்மா தான். இன்று வரைக்கும் என் அம்மாவிடம் தான் சமையல் பத்தின சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வேன். சமையல் தவிர எனக்கு தையல் மிகவும் பிடிக்கும். 

  2. தற்கால நவீன சமையலின் தாக்கம் உங்கள் வீட்டு சமையல் அறைக்கு வந்து விட்டதா? பாரம்பரிய சமையல் அல்லாது நீங்கள் முயற்சி செய்து அருமையாக வந்து தங்கள் சமையலறையில் இடம் பிடித்த சில குறிப்புக்கள்.
       நவீன சமையல் தாக்கம் இன்னும் என் சமையல் அறைக்கு வரவில்லை. பாரம்பரிய சமையல் தான் என் சமையல் அறையில் இருக்கிறது. ஆனால் எனது மகளுக்கு நவீன முறையில் செய்யும் சமையல் பிடிக்கும். அவள் பனீர் வகைகள், ப்ரைட் ரைஸ், பிரட் சாண்ட்விச், கேக், ஸ்பகெட்டி போன்றவற்றை செய்வாள். 

  3. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள், பிடிக்கவே பிடிக்காது என்று ஒதுக்கும் உணவு வகைகள்.
        நான் வைக்கும் மீன் குழம்பு, இடியாப்பம், புளிக்குழம்பு, சாம்பார், இட்லி, மீன் வறுவல் இவை எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். ரவை உப்புமாவை யாருக்கும் பிடிக்காது.

  4. தீடீர் விருந்தினரை சமாளிக்க தாங்கள் சுலபமாக செய்து அசத்தும் சில உணவு அயிட்டங்கள்.  
        மதிய உணவு என்றால் அவசரமாக செய்து முடிக்கக்கூடியது சாதம் மற்றும் சாம்பார் தான். பலகாரம் என்றால் கேசரி செய்வேன். டிபன் என்றால் தோசை அல்லது இட்லி செய்து தேங்காய் சட்னியுடன் பரிமாறுவேன். தோசை மாவு இல்லை என்றால் கோதுமை தோசை செய்வேன். இது அனைத்தும் சீக்கிரமாக செய்யக் கூடியது.

  5. தங்களின் நீண்ட கால அனுபவத்தில் உங்கள் ஓட்டு எதற்கு? ஸ்டீல் அல்லது காப்பர் பாட்டம் பாத்திரம், அலுமினிய பாத்திரம், நான்ஸ்டிக் பாத்திரம். எதனால்?
        என்னுடைய ஓட்டு ஸ்டீல் பாத்திரம், அலுமினிய பாத்திரத்துக்குத்தான்! அதை தவிர எனக்கு பிடித்தது இரும்பு சட்டி. இப்போதும் தோசை சுடுவதற்கு இரும்பு தோசைக்கல் தான் பயன்படுத்துகிறேன். மீன் குழம்பு மண் சட்டியில் தான் வைப்பேன். அதன் ருசியே தனிதான். தற்போது ப்ரை பண்ண நான்ஸ்டிக் வசதியாக இருப்பதால் இப்போது நான்ஸ்டிக் உபயோகிக்கிறேன்.

  6. சமைக்க ஆரம்பித்தால் ஒரு சிலருக்கு அதிகம் பாத்திரம் சேரும், நீங்கள் எப்படி ? அதிகம் உபயோகிப்பவரா? அல்லது குறைவாக உபயோகிப்பவரா? பெண்கள் பெரும்பாலும் சலித்துக் கொள்ளும் விஷயம் இந்த பாத்திரம் கழுவுவது பற்றித் தானே ! பாத்திரம் பராமரிப்பு பற்றி சில டிப்ஸ்.
       முன்பு அதிக பாத்திரங்கள் சேரும். எப்பொழுதும் கழுவிக் கொண்டு இருக்கிற மாதிரியே இருக்கும். இப்பொழுது நான் சேர்த்து போடாமல் உடனுக்குடன் கழுவி விடுவேன். இருந்தாலும் பாத்திரம் கழுவுவது சலிப்பான விஷயம் தான். என் மகள் US-ல் இருப்பதால் அவள் வீட்டில் பாத்திரம் கழுவுவதற்கு மெசின் உள்ளது, ஆச்சர்யமாக உள்ளது !டிப்ஸ் - நாம் உபயோகிக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை சோப்புத்தூளில் ஒரு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் பாத்திரம் பளிச்சென்று ஆகி விடும்.

  7.நவீன மாடுலர் கிச்சனால் சமையல் வேலை சுலபமாகும்னு சொல்றாங்களே ! உங்கள் கருத்து, (மைனஸ்,ப்ளஸ் இரண்டு கருத்துக்களும் தெரிவிக்கலாம்.) 
  ப்ளஸ் - பார்ப்பதற்கு மிக நன்றாக உள்ளது, அனைத்து பொருட்களையும் அடுக்கி வைக்க வசதியாக இருக்கும், சுத்தப் படுத்துவது எளிது. dish washer, oven வைத்து விட்டால் வேலை சுலபம்.
  மைனஸ் - விலை உயர்ந்ததாக இருக்கிறது, வைத்த பிறகு ஏதேனும் மாற்றம் அல்லது ரிப்பேர் செய்தாலும் நிறைய செலவு ஆகும்னு நினைக்கிறேன். 


  8..பலரோடு சேர்ந்து சமையல் செய்த அனுபவத்தில் சுவாரசியமாய் ஏதாவது நிகழ்வு.
       நாங்கள் எங்கள் குழந்தைகளோடு ராஜபாளையத்திலிருக்கும் போது நானும், எனது இரு தோழிகளும் சேர்ந்து தீபாவளிக்கு மிக்சர், லட்டு என்று செய்து மூன்று பேரும் பங்கு வைத்துக் கொண்டோம். அந்த நாளை இன்று வரை என்னால் மறக்க முடியாது. ஏனென்றால் தோழிகளுடன் பேசி கொண்டே செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  9...விருந்தினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதைக் காட்டிலும் பார்ட்டி என்ற பெயரில் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்து கொடுக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறதே ! உங்கள் கருத்து.
       நான் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு நானே தான் செய்து கொடுப்பேன். ஹோட்டல்களுக்கு அழைத்து செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

  10. தாங்கள் வலைப்பூ பற்றி எப்பொழுது தெரிந்து கொண்டீர்கள்? ஆரம்பித்ததின் நோக்கம், தாங்கள் வலைப்பூவில் பகிர்ந்த  முதல் குறிப்பு, அதன் அனுபவம்.
         மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆகி அவரவர் இடத்திற்கு சென்றவுடன் எனக்கு தனியாக இருப்பது போல இருந்தது. அப்போது என் மகள் சென்னையில் இருந்தாள். அவள் வீட்டிற்கு சென்றிந்த போது கூகுளில் சர்ச் பண்ணுவது குறித்து சொல்லிக் கொடுத்தாள். நானும் எனக்கு வேண்டிய சமையல் குறிப்புகள், கோலங்கள், தையல் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சில மாதங்கள் கழித்து உங்களுக்கும் வலைப்பூ ஆரம்பிக்கலாம் வீட்டில் செய்வதை பகிருங்கள் என்று சொல்லி சாரதா சமையல் என்ற வலைப்பூவை ஆரம்பித்துக் கொடுத்தார்கள். எல்லா காய்களும் சேர்த்து சாம்பார் செய்யும் முறையை முதல் பகிர்வாக கொடுத்தேன். இப்போது 121 பகிர்வுகள் கொடுத்திருக்கிறேன். 

  11. சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், குறிப்புக்கள் பற்றி சில வரிகள்.
       நான் உங்கள் வலைப்பூவை ஒரு வருடமாக பார்த்து வருகிறேன். உங்களுடைய குறிப்பு எளிமையாகவும் வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்து செய்யக் கூடியதாக இருக்கும். அது என்னை மிகவும் கவர்ந்தது. நீங்கள் விவரிக்கும் முறையும் நன்றாக புரியும்படி உள்ளது. சில பகிர்வுகள் எங்க அம்மாவின் கைப்பக்குவம் போல இருக்கும். குறிப்பாக சொதி குழம்பு, வரகொத்தமல்லித்துவையல், மணத்தக்காளி வத்தல் குழம்பு இவற்றை சொல்லலாம். ஈசி பரோட்டா வீடியோ சமையலை பார்த்து நானும், என் மகளும் செய்து பார்த்திருக்கிறோம். சிறப்பு விருந்தினர் பக்கமும் மிக அருமை. கலந்துரையாடல் மூலம் நல்ல நட்பும் வளர்கிறது. உங்களின் வலைப்பூ மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  எனக்கு உங்கள் வலைப்பூவில் வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி ஆசியா. இன்னொரு மகிழ்ச்சியான செய்தி ! நீங்கள் இதை Dec 13 வெளியிடுவதாகச் சொன்னீர்கள். அன்று எனது பேத்திக்கு முதலாவது பிறந்த நாள் என்று உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி.
  சாரதா. 

  எதார்த்தமான கலந்துரையாடல், மிக்க நன்றி  அக்கா. உங்கள் பகிர்வு வெளியிட்ட இன்றே உங்கள் பேத்திக்கும் பிறந்தநாள் என்று அறிந்து மிக்க சந்தோஷம்.உங்கள் பேத்திக்கு எங்களின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் !

  உங்களின் பகிர்வுக்கும்  ஆதரவிற்கும்,காத்திருப்பிற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
  என்றென்றும் அன்புடன்,
  ஆசியா உமர்.

  முக்கியக் குறிப்பு:
  சிறப்பு விருந்தினர் பக்கத்திற்கு குறிப்புக்கள் அனுப்பிவரும் அன்பான நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதிவாரம் வெள்ளிதோறும் நம்மில் பலரை இங்கு சிறப்பு விருந்தினராகச் சந்திக்கப் போகிறீர்கள். நீங்களும் ரெடி என்றால் நானும் ரெடி. உங்களைப் பற்றிய சுய அறிமுகத்துடன், நீங்கள் இங்கு பகிரப் போகும் குறிப்பையும் இணைத்து என் ஈமெயில் முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  17 comments:

  Menaga sathia said...

  சாரதா மேடம் பற்றி மேலும் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி..காளான் குழம்பு அருமை,கைவசம் எல்லாம் இருக்கு,செய்து பார்க்கிறென்...

  அவர்களின் பேத்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  Asiya Omar said...

  மிக்க நன்றி மேனகா, முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

  Ranjani Narayanan said...

  வணக்கம் ஆசியா.
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.சிறப்பு விருந்தினரின் பேட்டி அவர் கூறியுள்ள காளான் குழம்பு போலவே (படங்களைப்பார்த்துவிட்டு சொல்லுகிறேன்) ருசியாக இருந்தது. இந்த வலைபதிவுகள் எத்தனை திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
  உங்கள் விருந்தினர் பக்கம் என்ற முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ADHI VENKAT said...

  சாரதா அவர்களுக்கு பாராட்டுகள்... அவர்களின் பேத்திக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...

  இன்று புதிதாக ஒரு தளத்தை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...நன்றி..

  கேள்விகள் சிறப்பாக இருந்தன..

  ஸாதிகா said...

  திருமதி சாரதாவின் பேட்டி மிகவும் பயனுள்ளது.பல தகவல்கள் குறிப்புகளாக எடுத்துக்கொள்ளலாம்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  Jaleela Kamal said...

  சாரதா உங்கள் காளான் குழம்பு மிக அருமை, உங்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்சி.

  Jaleela Kamal said...

  உங்க பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  Saratha said...

  சகோதரி ஆசியாவுக்கு தங்கள் வலைப்பூவில் எனது பதிவை பகிர்ந்ததற்கும்,எனது பேத்தியின் பிறந்த நாளை தெரியப்படுத்திய உங்களுக்கும்,கருத்து தெரிவித்த நட்புள்ளங்களுக்கும்,எனது பேத்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய நட்புள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நமது நட்பு இதே போல் வளர வேண்டும்.

  Shamee S said...

  காளான் குழம்பு பார்க்கவே அசத்தலா இருக்கு....சாரதா அம்மா, ஆசியா அக்கா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  அக்கா உங்கள் பேட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது.....இருவரின் உரையாடலும் மிகவும் யதார்த்தமாக அருமையாக உள்ளது....
  உங்கள் பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  Asiya Omar said...

  ரஞ்சனி அக்கா, வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

  ஆதி வாங்க, கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி,மகிழ்ச்சி.

  Asiya Omar said...

  ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி.

  ஜலீலா வாழ்த்திற்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

  Asiya Omar said...

  சாரதா அக்கா,தங்கள் பகிர்வுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சிகா.

  Asiya Omar said...

  ஷமீ வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

  சே. குமார் said...

  சமையல் குறிப்பை பகிர்ந்து கொண்ட சாரதா அம்மாவுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரின் பேத்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  Asiya Omar said...

  சகோ.குமார் வாங்க,கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

  SIVA MALAIYAPPAN said...

  மிகவும் நன்றி, நாங்கள் இந்த முறையில் செய்தோம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

  Saratha J said...

  என்னுடைய பதிவாகிய காளான் குழம்பை செய்து பார்த்து சொன்ன கருத்துக்கு மிக்க நன்றி. கருத்தை வெளியிட்ட ஆசியாவுக்கும் மிக்க நன்றி.