Monday, December 30, 2013

புளிச்சோறு / Pulichoru / Tamarind Rice

மாமி, நம்ம வீட்டு புளிச்சோறு ரெசிப்பி கொடுங்க என்று எங்க அண்ணன் பிள்ளைங்க கேட்டதால் இந்தப் பகிர்வு. நீங்களும் செய்து பாருங்க.


தேவையான பொருட்கள்;
புழுங்கல் அரிசி - 300 கிராம்
நல்லெண்ணெய் -  4- 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை
புளி ஊற வைக்க - பெரிய எலுமிச்சை அளவு ( ருசிக்கேற்ப)
தக்காளி சிறியது ஒன்று 
வெங்காயம் சிறியது - 1 
உப்பு - தேவைக்கு.

வறுத்துப்  பொடிக்க: 
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு
மிளகாய் வற்றல் - 3
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
எள்ளு - 1டீஸ்பூன்
முழு மல்லி - 1 டீஸ்பூன்

பரிமாறும் அளவு - 3 நபர்கள்.

செய்முறை:
முதலில் சோறை பக்குவமாக வடித்து வைக்கவும்.


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து தேவைக்கு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

வறுத்து பொடிப்பதற்கு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருவேப்பிலை வறுத்து எடுக்கவும்.வற்றலை கரியாமல் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே வாணலியில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,மல்லி,எள்ளு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
ஆற வைத்ததை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.அத்துடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

புளிச்சோறு கிண்ட ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் கடுகு போடவும்,கடுகு வெடிக்கவும் பெருங்காயப் பொடி சேர்த்து உடனே அரைத்த விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். 
எண்ணெய் பிரிந்து வரும்.

புளித்தண்ணீர் விடவும். சாதம் கொள்ளும் அளவு இருக்க வேண்டும்.

அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே பிரிந்து வரும்.
வடித்த சாதத்தை தட்டி கிண்டவும்.லூசாக இருக்க வேண்டும். சாப்பிடும் பொழுது இறுகி விடும்.


சுவையான எங்க வீட்டு புளிச்சோறு ரெடி. இப்படி செய்தால் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்காது. மசுமையாக இருக்கும். தக்காளி சேர்ப்பதால் தனி நிறமும் சுவையும் கிடைக்கும்.

இந்தச் சோறு இரண்டு நாள் வரை வெளியே வைத்தால் கூட கெடாது. கட்டு சாதம் கட்டும் பொழுது கொஞ்சம் இந்தப் புளிச்சோறு கொஞ்சம் லூசாக இருந்தால் சாப்பிடும் பொழுது சரியான பக்குவத்தில் இருக்கும். இல்லாவிட்டால் கேக் மாதிரி கட்டியாகிவிடும்.
இதற்கு சுருட்டு கறி சூப்பராக இருக்கும். 


வெஜ் சாப்பிடுபவர்கள் உருளைக்கிழங்கு வறுவல் புதினா துவையல் எடுத்து செல்லலாம்.

இந்தப் பக்குவத்தை எனக்கு என்னோட மூத்த (முதல்)அண்ணி பசீரா மைனி சொல்லித் தந்தது. அவங்க ஒவ்வொரு முறை பெங்களூர் பயணம் கிளம்பும் பொழுதும் பயணம் அனுப்பச் சென்றால் ஆசியாவிற்கு கொஞ்சம் புளிச்சோறு எடுத்து கொடு டேஸ்ட் பார்க்கட்டும்னு சொல்வாங்க.என்னதான் இருந்தாலும் கைப்பக்குவம்னு ஒண்ணு இருக்கே. நீங்க எல்லாரும் இனி எங்க வீட்டு புளிச்சோறை செய்து அசத்துவீங்க தானே !

அந்தக் காலத்தில் எங்க அம்மாவின் அம்மா(பாட்டி) புளிச்சோறு அத்தனை அருமையாக செய்வார்களாம். கொழும்பில் வியாபாரம், அங்கு பயணம் போகும் பொழுது எங்க மாமாவிற்கு செய்து கொடுத்தனுப்புவார்களாம்.  இரண்டு நாள் கழித்து சென்றாலும் மீதி வரும் புளிச்சோறுக்கு அங்கு உள்ள நட்புகள் காத்து இருப்பார்களாம்.
மாமா அடிக்கடி சொல்வதுண்டு எங்கும்மா பக்குவத்தில் யாருக்கும் புளிச்சோறு கிண்டத் தெரியவில்லை. என்ன செய்ய, நான் எல்லாம் பிறப்பதற்கு முன்பே அவங்க எல்லாம் போயாச்சு. அவங்களோட இருந்தவங்க கிட்ட எப்படியாவது அந்த ரெசிப்பியை கேட்டு தெரிந்து கொள்ளனும்னு ஆசை. எங்க பெரியம்மா மகள் ரஹ்மத் அக்கா கிட்ட கொஞ்சம் அவங்க பக்குவம் இருப்பதாய் சொல்லுவார்கள். அவங்க கிட்ட  அந்த ரெசிப்பியின் ரகசியத்தை கேட்டு தெரிஞ்சுக்கனும். பார்ப்போம்.


18 comments:

ADHI VENKAT said...

வித்தியாசமா இருக்கு... வெங்காயம் தக்காளி சேர்த்து செய்ததில்லை... ஒருமுறை செய்து சாப்பிடத் தூண்டுகிறது..

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் மிகவும் அருமை சகோ... நன்றி...

வாழ்த்துக்கள்....

Saratha said...

நான் வெங்காயம்,தக்காளி சேர்த்து செய்ததில்லை.இதே முறையில் செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ஆதி.சிறிய தக்காளி,வெங்காயம் தான் சேர்க்க வேண்டும். நன்கு அரைத்த மசால் வதக்க வேண்டும் செய்து பாருங்க.உங்க ஆத்து புளியோதரையை அடிச்சிக்க முடியுமா?

Asiya Omar said...

தனபாலன் சார் கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

சாரதாக்கா செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கலாம்.வருகைக்கு மகிழ்ச்சி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் சொல்லியுள்ள

புளிச்சோறு படா ஜோரு ! ;)

பகிர்வுக்கு நன்றிகள்.

Asiya Omar said...

வை.கோ சார் வாங்கோ!கருத்திற்கு மகிழ்ச்சி நன்றி.

கோமதி அரசு said...

புளிச்சோறு செய்து பார்த்து விடுகிறேன்.
உங்கள் செய்முறை வித்தியசமாய் இருக்கிறது.

Vikis Kitchen said...

புளி சாதம் ரொம்ப அருமையா இருக்கு. பாட்டி அவர்கள் கைப்பக்குவம் பற்றி நீங்கள் எழுதியது மிகவும் ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான புளிச் சோறு....

பகிர்ந்தமைக்கு நன்றி.

//உங்காத்து// - இது அவசியமா ஆசியா..... :)))

Asiya Omar said...

கோமதிக்கா செய்து பாருங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

விக்கி வாங்க, உங்களை நீண்ட நாட்கள் கழித்து பார்க்கிறேன்.
கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

சகோ. வெங்கட் வருகைக்கு நன்றி.அது உண்மை தானே:)!

Radha Rani said...

தக்காளி, வெங்காயம் அரைத்து சேர்ப்பது புதுமை. செய்து பாக்கிறேன் ஆசியா..:)

priyasaki said...

ரெசிப்பி படங்கள் அனைத்தும் அருமை ஆசியா. பகிர்வுக்கு நன்றி.

Shama Nagarajan said...

yummy akka...all time favourite

மாதேவி said...

புளிச்சோறு அருமை.

உங்களுக்கும்குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துகள்.

பிசியாக இருப்பதால் ஓரிருமாதம் தொடரமுடியாது மன்னியுங்கள் சற்று பின்பு வருகிறேன்.

பதிவுகளும் தரமுடியவில்லை. கடமைகள் முக்கியமல்லவா.

Asiya Omar said...

ராதா கருத்திற்கு மிக்க நன்றி.

ப்ரியசகி கருத்திற்கு மிக்க நன்றி.

ஷாமா கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

மாதேவி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் பகிர்வுகளை தொடருங்கள்.

சே. குமார் said...

புளிச்சோறு...

படங்களுடன் மிகவும் அருமையான விளக்கம்....