Wednesday, January 30, 2013

சேனைக்கிழங்கு கடைசல் / புளிக்கறி / Tangy Yam Curry




தேவையான பொருட்கள்;
சேனைக்கிழங்கு - கால் கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி அல்லது குழம்பு மசாலா  - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3 -4 நபர்.

செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி எடுக்கவும்.வெங்காயம் நறுக்கி வைக்கவும்,புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
குக்கரில் சேனைக்கிழங்கு,அரிசி கழனி ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து
மூன்று விசில் வேகவைத்து எடுக்கவும்.




 வெந்த பின்பு தண்ணீர் வடிகட்டவும்.
 மசித்து விடவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 அத்துடன் புளித்தண்ணீர் சேர்க்கவும்.மஞ்சள் தூள்,சாம்பார் அல்லது குழம்பு மசாலா  பொடி சேர்க்கவும்.
 நன்கு கொதித்து புளி மசாலா வாடை மடங்க வேண்டும்.
 மசித்த சேனைக்கிழங்கை சேர்க்கவும்.
 கலந்து விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக ஒரு சேர கொதிக்கட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்.குழம்பு வைத்து குறைந்தது அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.கிழங்கு புளியை ஏற்று ருசியாக இருக்கும்.

சுடு சாதத்திற்கு ஊற்றி சாப்பிடவோ அல்லது கெட்டியாக தொட்டுக் கொள்ளவோ பரிமாறலாம்.
இப்படி தனியாக வேகவைத்து செய்யாமல் குக்கரிலேயே தாளித்தும் செய்யலாம்.
 சுவையான சேனைக்கிழங்கு கடைசல்ரெடி.

இதற்கு சாம்பார் பொடி தவிர வீட்டு குழம்பு மசாலாவும் உபயோகிக்கலாம்.எங்க வீட்டில் அண்ணி கருணைக்கிழங்கை இப்படி கடைந்து செய்வார்கள், பார்க்க கெட்டி பருப்பு போலவே இருக்கும்.நான் இங்கு சேனைக்கிழங்கை செய்து காட்டியிருக்கிறேன்.கழனி சேர்த்து சேனைக்கிழங்கு (பெரியதாக இருக்கும்) அல்லது கருணைக்கிழங்கை ( சிறியதாக உருளையாக இருக்கும்) வேக வைத்தால் அதில் உள்ள சொர சொரப்பு(அரிப்பு) இருக்காது.


Tuesday, January 29, 2013

கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை / Crispy Boneless Chicken Fry

தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300 கிராம்
கெட்டி தயிர் - 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
துளி ரெட் கலர்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் அல்லது குறைவாக தேவைக்கு.
உப்பு தேவைக்கு.

கோட்டிங் மிக்ஸ்;
மைதா 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் கிரெம்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
(கலந்து வைக்கவும்)

பரிமாறும் அளவு - 2 நபர்

செய்முறை:
சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
அத்துடன் தேவையான பொருட்களில் சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து விரவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

கோட்டிங் மிக்ஸ் தனியாக ஒரு ப்லேட்டில் ரெடி செய்யவும்.ஊறிய சிக்கனை அதனில் ஒரு போல் பிரட்டி எடுத்து வைக்கவும்.கோட்டிங் மிக்ஸ் மீதி இருந்தால் பத்திரப்படுத்தி மீண்டும் உபயோகிக்கலாம்.


ஒரு கடாயில் எண்ணெய் சூடேற்றவும்.ரெடி செய்த சிக்கன் துண்டுகளை போடவும்,.

 பக்குவமாக மிதமான நெருப்பில் பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.

சுவையான கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை ரெடி. 
வெளியே முறுகலாகவும் உள்ளே ஜூஸியாகவும் இருக்கும்.
வெங்காயம், லெமன் கட் செய்து அலங்கரித்து பரிமாறவும்.
பார்ட்டியில் ஸ்டார்டராக பரிமாறலாம்.







Sunday, January 27, 2013

உணக்க செம்மீன் மாங்காய் இட்டு வச்ச கறி / Dry prawns with Raw Mango Curry

 Thanks Faseela. இது என் ஆங்கில வலைப்பூ தோழி ஃபஸீலாவின் குறிப்பை பார்த்து செய்தது.

தேவையான பொருட்கள்;
காய்ந்த கூனி இறால் - அரை கப்
மாங்காய் - 1
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒன்னரை டீஸ்பூன்(காரம் அவரவர் ருசிக்கு தக்க)
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய்  - 3-4  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

காரம்,எண்ணெய் அளவு மட்டும் குறைத்து கொண்டேன்.அவரவர் விருப்பப்படி  சேர்த்து கொள்ளலாம்.
மாங்காய்,வெங்காயம்(வெங்காயத்தை அம்மியில்,குழவியில் இடித்தும் சேர்க்கலாம் ) ,தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்,கூனி இறாலை லேசாக வறுத்து எடுக்கவும்.


 ஒரு மண் சட்டியில் நறுக்கிய மாங்காய்,வெங்காயம்,தக்காளி ,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சிறிது ,ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
 பின்பு நன்றாக கலந்து கொள்ளவும்.
 இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.அடுப்பை பற்ற வைக்கவும்.கொதி வரும்

 நன்றாக 15-20  நிமிடம் மிதமான நெருப்பில் மூடி போட்டு வேக வைக்கவும்.

 வெந்த பின்பு வறுத்த கூனி இறாலை சேர்க்கவும்.கலந்து விடவும்.
கூனி இறால் சேர்த்து மீண்டும் மூடி ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும்.

 2 -3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை இரண்டு இணுக்கு சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்.இது தான் முக்கியமான டிப்ஸ்.இது நல்ல மணத்தை தரும்.


 சுவையான உணக்க செம்மீன் மாங்காய் இட்டு வச்ச கறி ரெடி.
இதனை ப்லைன் சாதத்திற்கு பக்க உணவாகப் பரிமாறலாம். இது மாங்காய் ஊறுகாயில் கூனி இறால் சேர்த்தது போல் அத்தனை ருசி.தொக்கு அல்லது ஊறுகாய் மாதிரி ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு காரசாரமாக தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.



Thursday, January 24, 2013

பூரி ஃபிர்னி / Poori Firni


 பூரிக்கு:
தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு - 1கப்
மைதாமாவு - 1 கப்
ரவை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.

 முதலில் கோதுமை,மைதா,ரவை தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து பக்குவமாக குழைத்து கொள்ளவும்.மூடி அரைமணி நேரம் வைக்கவும்.
 சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை பிரித்து பூரிகளாக திரட்டி ,கடாயில் தேவைக்கு எண்ணெய் வைத்து சூடானவுடன் பூரியை சுட்டு எடுக்கவும்.ரவை சேர்ப்பதால் எண்ணெய் அதிகம் குடிக்காது.

சூப்பர் புஸு புஸு பூரி ரெடி.

ஃபிர்னி -2
தேவையான பொருட்கள்;
ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்
சேமியா - 3 டேபிள்ஸ்பூன்
ரவை - 1-2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 4
சீனி - 200 கிராம்
காய்ச்சிய பால் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உடைத்த முந்திரி, திராட்சை - தலா 1 டேபிஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - பின்ச்.

பரிமாறும் அளவு - 4 நபர்.

 தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் 3-4 கப் தண்ணீர்(600- 800 மில்லி) எடுத்து கொள்ளவும்.முதலில் ஊறிய ஜவ்வரிசியை சேர்க்கவும்.வெந்து வரட்டும்.
 பின்பு வறுத்த சேமியாவை சேர்க்கவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.
 பின்பு ரவை சேர்க்கவும்.அடுப்பை குறைத்து விடவும்.கீரிய ஏலக்காய் சேர்க்கவும்.எல்லாம் ஒரு சேர மணத்துடன் வெந்து வரும்.சீனி சேர்க்கவும்.கரைந்து வரும் பொழுது ஒரு கப் பால் சேர்க்கவும்.
 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
 கலந்து விடவும்,ஒரு பின்ச் உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் தேவைக்கு கொதி நீர் அல்லது காய்ச்சிய பால் சேர்க்கலாம்.
 தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி திராட்சை பக்குவமாக வறுக்கவும்.
 ரெடியான ஃபிர்னியில் கொட்டவும்.கலந்து விடவும்.
சுவையுள்ள ஃபிர்னி ரெடி.

ஃபிர்னியை பூரியுடன் பரிமாறவும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
இனிப்பு பிரியப்படாதவர்கள் மசாலுடன்  பரிமாறலாம்.






 Gayathri's 

Walk Through Memory Lane- January



அனைவருக்கும் இனிய மீலாது நபி வாழ்த்துக்கள்.

Monday, January 21, 2013

தூள் பக்கோடா / Shredded Onion Pakoda


தேவையான பொருட்கள்;
பெரிய வெங்காயம் - 2 (200 கிராம்)
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -1 அல்லது 2
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 பின்ச்
சோடா உப்பு - 1 பின்ச்
எண்ணெய் பொரிக்க -தேவையான அளவு
உப்பு - தேவைக்கு.

1.முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.அத்துடன் கடலை மாவு,அரிசி மாவு,பெருங்காயத்தூள், சோடா உப்பு,உப்பு சேர்த்து நன்றாக கையால் விரவவும்.தண்ணீர் தெளிக்க வேண்டாம்,வெங்காயத்தில் ஊறும் தண்ணீரே போதும்.தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
2.பொரிக்கத் தேவையான எண்ணெய்யை வாணலியில் சூடு செய்யவும்.
விரவிய பகோடா மாவில்  சூடான எண்ணெயை 2 டீஸ்பூன் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.சூடான எண்ணெய் சேர்ப்பதால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்..இப்ப தூள் பக்கோடாவிற்கான மாவு ரெடி.
அரிசி மாவு சேர்ப்பதும் மொறு மொறுப்பிற்கு தான்.


 வாணலியில் சூடான எண்ணெய்யில் பகோடா மாவை உதிர்த்து போடவும்.வெங்காயம் அதிகம் சேர்ப்பதால் சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்.வெங்காயம் அளவு கூட கூட இந்த தூள் பக்கோடா ருசியாக இருக்கும்.மிதமாப நெருப்பில் பொன்முறுகலாக பொரித்து எண்ணெய் வடிகட்டி எடுக்கவும்.


 சுவையான எங்க ஊர் தூள் பக்கோடா ரெடி.
விரும்பினால் மல்லி கருவேப்பிலை கூட நறுக்கி சேர்க்கலாம்.ஆனால் பாருங்க எங்க ஊரில் வெறும் வெங்காயம்,பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்ப்பாங்க.இரவு நேரங்களில் ஊர் பஜாரில் இந்த தூள் பக்கோடா வியாபாரம் பரபரப்பாக நடக்கும்.செய்தித்தாளில் பொட்டலம் கட்டி தருவாங்க,வாங்கி விட்டு வீடு வந்து சேர்வதற்குள் பக்கோடாவில் உள்ள எண்ணெய்யை தாள் உறிஞ்சி சாப்பிட பதமாக இருக்கும்.