Monday, July 8, 2013

மீண்டும் சந்திப்போம் !


ரமலான் நோன்பு மற்றும் பெருநாள் கழிந்து  மீண்டும் மகிழ்ச்சியுடன் விரைவில் சந்திப்போம் ! அனைவருக்கும் ரமலான் முபாரக்.!

Saturday, July 6, 2013

நோன்பு கஞ்சி - வீடியோ சமையல் / Iftar Porridge -Video Recipe


அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.
என்னுடைய வலைப்பூவில் நோன்பு கஞ்சி குறிப்புக்கள்  வெரைட்டியாக ஏற்கனவே கொடுத்துள்ளேன். தற்பொழுது சிம்பிளாக நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று நான் செய்யும் முறையை வீடியோ சமையலாக பகிர்ந்திருக்கிறேன். நிச்சயம் இது புதிதாக கஞ்சி செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

video



வெரைட்டி கஞ்சிப் பகிர்வுக்கு இங்கே கிளிக்கவும்.
மட்டன் போன்  கஞ்சி பகிர்வைக் காண இங்கே கிளிக்கவும்.

நோன்பு கஞ்சி செய்முறையை பார்த்தீர்களா? தங்கள் கருத்துக்களைப் பகிருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நீங்கள் பகிரும் கருத்துக்கள் எனக்கு மேலும் பல வீடியோ சமையல் வெளியிடும் ஊக்கத்தைத் தரும். இதுவரை என் சமையலை பார்வையிட்டு செல்பவர்களுக்கும், அன்போடு கருத்துக்களையும் மகிழ்ச்சியினையும் தவறாமல்  தெரிவித்து செல்பவர்களுக்கும் மிக்க நன்றி.

Wednesday, July 3, 2013

மீன் குழம்பு / Fish kuzhambu


மீன் குழம்பு விதம் விதமாக செய்து ருசிக்க எனக்குப் பிடிக்கும்.முன்பொரு முறை மனோ அக்கா வலைப்பூவில் பார்த்த அந்த மீன் குழம்பின் நிறம் என்னை செய்யத் தூண்டியதால் தேடி எடுத்து  செய்து பார்த்தேன் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.சிம்ப்ளி சூப்பர்.நீங்களும் செய்து பாருங்க.
இதோ ஒரிஜினல் ரெசிப்பி பார்க்க இங்கே கிளிக்கவும்.பகிர்வுக்கு மிக்க  நன்றி மனோ அக்கா.

தேவையான பொருட்கள்;
மீன் -  10 துண்டுகள்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 1  டேபிள்ஸ்பூன் ( காரம் அவரவர் விருப்பம்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1  1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்+ 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 அல்லது 1 . 1/2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 20
தக்காளி பொடியாக நறுக்கியது - அரை கப்
மாங்காய் - 4 துண்டுகள் ( விரும்பினால்)

செய்முறை:
புளியை 2 கப்  கொதி நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி ரெடியாக வைக்கவும்.
மீன் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும்.எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் போடவும்,பொன்னிறமாக சிவந்து வரும் பொழுது வெங்காயம்,கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.


வெங்காயம் சிவந்து வரும் பொழுது நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் சேர்க்கவும்.

நன்கு தக்காளி வதங்கி எண்ணெய் மேலே வரும்.
புளிக்கரைசலுடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள் ,உப்பு தேவைக்குச் சேர்க்கவும்.
நன்கு கொதித்து மசாலா வாடை மடங்கி வற்றி வரும்.மாங்காய் சேர்க்கவும்.மாங்காய் பாதி வெந்து வரும் பொழுது மீன் துண்டுகளை கவனமாகச் சேர்க்கவும்.
மீன் நன்கு வெந்து குழம்பு கெட்டியாக வரும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.மீதியுள்ள ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையை விடவும்.
அடுப்பை அணைக்கவும்.மூடி வைக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.பார்க்கவே நாவில் எச்சில் ஊறுகிறதா? செய்து ருசி பாருங்க,நான் காரம் கொஞ்சம் குறைத்துக் கொண்டேன். உங்கள் டேஸ்டிற்கு நீங்க செய்து அசத்துங்க.
தேங்காய் விடாமல்,பூண்டு,பச்சை மிள்காய்  சேர்க்காமல் நான் மீன் குழம்பு செய்ததில்லை,ஆனால் மனோ அக்கா அதெல்லாம் சேர்க்கவிலை.என்றாலும் சுவை அபாரம். இரண்டு நாள் வைத்து திருப்தியாக சாப்பிட்ட பின்பே இந்த பகிர்வு.


Monday, July 1, 2013

ஒட்ஸ் பிரட்டிய சுறா மீன் வறுவல் / Oats coated shark fish fry



பொதுவாக சுறா மீனில் புட்டோ அல்லது  மிளகு வைத்து ஆணம் செய்வோம்.ஆனால் இந்த ஃப்ரை சூப்பர் சுவையாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
 சுறா மீன் துண்டுகள்( போன்லெஸ்) - 500 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1-  2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - ஒரு சிறிய பழம்
உப்பு - தேவைக்கு

ஊறிய மீனில் பிரட்ட:
முட்டை - 1
(விருப்பமானால் 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து முட்டையுடன் கரைத்துக் கொள்ளலாம்)
பொடித்த ஓட்ஸ் - ஒரு கப் அல்லது தேவைக்கு

பொரிக்க தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை:

தோல் நீக்கி முள் நீக்கி கட் செய்து வாங்கிய சுறா மீன் துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.சுத்தமாக தண்ணீர் இருக்கக் கூடாது.
பின்பு மீன் துண்டுகளோடு மேற்சொன்ன தேவையான பொருட்கள் சேர்த்து விரவி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

நன்கு ஊறிய மீனை கலக்கிய முட்டைக் கரைசலில் முக்கி எடுத்து மிக்ஸியில் பொடித்த ஒட்ஸில் பிரட்டி வைக்கவும்.ஃப்ரிட்ஜில் அல்லது ஃப்ரீசரில் கூட இப்படி முன்பே ரெடி செய்து வைத்துக் கொண்டு குளிர் போன பின்பு பொரிக்கலாம்.


ஒரு வாணலியில் எண்ணெய் காய விடவும்.
எண்ணெய் பக்குவமாக காய்ந்து வரும் பொழுது ரெடி செய்த மீன் துண்டுகளைப் போட்டு  பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
கிச்சன் பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடிய விடவும்.
உடனே பரிமாறவும்.மொறு மொறுவென்று வெளியேயும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
சுவையான ஓட்ஸ் பிரட்டிய சுறா மீன் வறுவல் ரெடி.

இது அபுதாபி போயிருந்த சமயம் என் தங்கை ஸாஹிதா செய்து பரிமாறியது. சூப்பராக இருந்தது. நீங்களும் நல்ல பால் சுறாவாக இருந்தால் வாங்கி இப்படி குட்டீஸ்க்கு செய்து கொடுங்க. ஆறினாலும் வெளியே மொறு மொறுப்பு அப்படியே இருக்கும். சுறாவில் நான் முயற்சி செய்ததில்லை என்பதால் உடனே மொபைலில் கிளிக்கினேன் உங்களுடன் பகிர்வதற்காக.