Thursday, September 26, 2013

ஈசி ஆப்பம் / Easy Appam



தேவையான பொருட்கள்;
பச்சரிசி - 300 கிராம் (ஒரு டம்ளர்)
தோல் நீக்கிய உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - அரை அல்லது1 டீஸ்பூன்
சோறு - 1 சிறிய கப் (விரும்பினால்)
சோடா உப்பு - பெரிய பின்ச்
சீனி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்
12 - 15 ஆப்பம் வரும்.

செய்முறை:
அரிசி,உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
 தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.சாதம் சேர்க்காமல் அரைத்து வைத்து பொங்கி வந்த பின்பு சுட்டாலும் சூப்பராகத்தான் இருக்கும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து விடவும். உப்பு,சோடா உப்பு,சீனி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும்.முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.

 குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும்.மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால் லேசாக இருக்கும்.நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளக்கமாக கரைத்து கொள்ளவும்.

 ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு விடவும்.ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும்.



மூடி போடவும்.

 சுற்றி லேசாக சிவந்து ஆப்பம் வெந்து வரும்.

அகப்பையக் கொண்டு லேசாக சைடில் விட்டால் ஆப்பம் அப்படியே சூப்பராக சட்டியில் இருந்து எழும்பி வரும்.
எடுத்து சூடாக பரிமாறலாம்.

 நடுவில் ஸ்பாஞ்சாக சுற்றி முறுகலான ஆப்பம் ரெடி. விருப்பமான சைட் டிஷ் உடன் பரிமாறவும்.


ஆப்பம் தேங்காய்ப்பாலுடன் சூப்பர் காம்பினேஷன்.


 
சிக் பீஸ் ஸ்டூ ரெசிப்பிக்கு இங்கு கிளிக்கவும்.

Wednesday, September 25, 2013

கோங்கூரா பச்சடி / புளிச்சக்கீரை பச்சடி( மசியல்) / Sour Leaves Pachadi / Masiyal

 தேவையான பொருட்கள்;
நறுக்கிய புளிச்சக் கீரை - 2 கப்
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 10
கீரை புளிக்க வில்லை என்றால் பாக்களவு புளி சேர்க்கவும்.
உப்பு தேவைக்கு.

வறுத்து அரைக்க:
வறுக்க - 1 டீஸ்பூன் எண்ணெய்
உளுந்து - 1 டீஸ்பூன்
முழு மல்லி  - 1 டீஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3 அல்லது 4( காரம் அவரவர் விருப்பம்)

தாளிக்க :
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
செய்முறை:


 கீரையை ஆய்ந்து நன்கு மண் போக அலசி நறுக்கி வைக்கவும்.
 ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க குறிப்பிட்டவற்றை சிவற வறுத்து ஆற வைக்கவும்.
 மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.


 நறுக்கிய கீரை சேர்க்கவும்.
நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

 மிக்ஸியில் பொடித்தவற்றுடன் கீரையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளிக்கவும்.
 அரைத்த கீரை விழுதை சேர்க்கவும்.மிக்ஸி ஜாரில் கீரை ஒட்டியிருந்தால் சிறிது அலசி  விடவும்.உப்பு சரி பார்த்து போடவும்.
 சிறிது கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான சத்தான் கோங்கூரா பச்சடி ரெடி.
சுடு சாதத்தில் போட்டு சாப்பிட அல்லது தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.இதனை ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.

Tuesday, September 24, 2013

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu

இந்தச் செவ்வாய் தமிழர் சமையலுக்கு என்னுடைய பகிர்வு மணத்தக்காளிக் குழம்பு. நீங்களும் ஃப்ரெஷ் மணத்தக்காளி கிடைத்தால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளி - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.

தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ப்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 10
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -3 அல்லது 4
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மணத்தக்காளி காயை காம்பு நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல், உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு,மிளகு நன்கு மணம் வரும் படி சிவற வறுக்கவும்,அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்து லேசாக வதக்கவும்.


 ஆற விடவும்.
 சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு,கருவேப்பிலை,வெடிக்கவும் பெருங்காயம்,சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த மனத்தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 புளித்தண்ணீர்,தேவைக்கு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும், மணத்தக்காளி வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும். குழம்பு கெட்டியாகும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.விரும்பினால்  சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

 எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.சிறிது மூடி வைக்கவும்.
 சுவையான மணத்தக்காளிக் குழம்பு ரெடி.இத்துடன் சுடு  சாதம் பொரித்த அப்பளம்,கூட்டு என்று பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

தமிழ் நாட்டுக் கிராமங்களில் இந்த மணத்தக்காளியில் குழம்பு,கீரைக் கூட்டு, வற்றல் குழம்பு என்று பாரம்பரியமாக சமைப்பது வழக்கம். சத்து நிறைந்த இந்த மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணிற்கு  ஒரு நல்ல மருந்து.பசியைத் தூண்டும்.நீங்களும் செய்து பாருங்க.



இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
மற்றும் இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கும் அனுப்பி வைக்கிறேன்.



படம் சுமாராகத்தான் வந்துள்ளது.பொறுத்துக் கொள்ளவும்.அவசர கிளிக்குகள் தான் எப்பொழுதும்.

Sunday, September 22, 2013

நெத்திலி ஃப்ரை / Nethili fry / Anchovies Fry

சாச்சி, சுகமா இருக்கியளா? சின்ன சாச்சா பெரிய சாச்சா சுகமா? பாப்பா சுகமா ?என்று ஓடோடி வந்து விசாரிக்கும் அமலி அக்காவிற்காக இந்த பகிர்வு. ஊர் போகும் சமயம் எல்லாம் எங்கள் வீட்டுப் பக்கம் மீன் விற்று வரும் அமலி அக்காவின் அன்பிற்காகவே அடிக்கடி மீன் வாங்கி விடுவது வழக்கம்.பத்து வருடப் பழக்கம்.இந்த முறை சென்றிருந்த பொழுது அவர்கள் தந்த இந்த நெத்திலி மீனின் சுவையை இன்னும் நாக்கு தேடுகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மீன் ஃப்ரையை எத்தனை முறை தான் பதிவிடுவது என்று நினைத்து இதனை ட்ராஃப்டில் வைத்திருந்தேன்,முன்பே என் ஃபேஸ்புக் பேஜில் படங்களைப் பகிர்ந்திருந்தேன், குறிப்பு கொடுக்கவில்லை,என்றாலும் இதன் சுவைக்காக இந்த பகிர்வு.






தேவையான பொருட்கள்;
உருட்டு நெத்திலி மீன் - அரைக்கிலோ
மிளகாய்த்தூள் -1- 2 டீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்( விரவும் பொழுது சேர்த்தால் மசாலா அப்படியே மீனில் ஒட்டிக் கொண்டு விடும்.)
ரெட் கலர் - 2 பின்ச்
ஒயிட் வினிகர்  - 2 டீஸ்பூன் அல்லது ஒரு எலுமிச்சை சாறு
கார்ன் ஃப்லோர் - 1-2 டேபிள்ஸ்பூன்  அல்லது அரிசி மாவு அல்லது கடலை மாவு( வீட்டில் என்ன மாவு இருக்கோ அது உபயோகிக்கலாம் (மைதா, கோதுமை மாவு  உட்பட) உபயோகித்தால் கொஞ்சம் மொறு மொறுப்பாக பொரிக்கும் பொழுது எண்ணெயில் மசாலா கலக்காது.
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
சுத்தமாக ஆய்ந்து பலமுறை கழுவிய மீனை தண்ணீர் வடித்து மேற்சொன்ன பொருட்கள் விரவி ஃப்ரிட்ஜிலோ அல்லது வெளியிலோ ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
தேவைக்கு எண்ணெயை ஒரு கடாயில் காயவிடவும்.மொறுக பொரித்து எடுக்கவும்.கொஞ்சம் ஃப்ரெஷ் கருவேப்பிலையை மீனை பொரித்து எடுக்கும் பொழுது சேர்த்து பொரித்து எடுத்தால் அதன் சுவையே தனிதான்.
சுவையான நெத்திலி ஃப்ரை ரெடி.
சப்பை நெத்திலியில் முள் அதிகம் இருக்கும்,அதனால் பார்த்து உருட்டு நெத்திலி வாங்க வேண்டும்.

அமலி அக்கா தந்த  இந்த முழு மஞ்சப்பாறை மீன் அதன் சுவையும் அமோகம் தான்.

நெத்திலி மீன் சுத்தம் செய்வது எப்படி ? வீடியோ பார்க்க இங்கு கிளிக்கவும்.

Friday, September 20, 2013

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் / ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை / Cayenne Pepper Garlic Chicken Fry / Red Chilli Garlic Chicken Fry

கோழியை எப்படி சமைத்தாலும்  ருசியாகத்தான் இருக்கும். அதிலும் ஃப்ரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒரே மாதிரி ஃப்ரை செய்தாலும் கொஞ்சம் சலித்து விடும் தான்.ஒரு மாற்றமாக பழுத்த மிளகாய்,பூண்டு சேர்த்து செய்த கோழி வறுவல் எப்படி என்று பார்ப்போம்.எண்ணெயும் குறைவாகவே செல்லும்.


தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300  கிராம்
பழுத்த சிவப்பு மிளகாய் - 3- 4 (காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு - 6 பல்
மீடியம் சைஸ் வெங்காயம் - 1
மீடியம் சைஸ் - தக்காளி - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் - ரெட் கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை சிறிது.

செய்முறை:

 பழுத்த மிளகாய், தக்காளி,வெங்காயம்,பூண்டு,கெட்டி தயிர்,சேர்த்து மிக்ஸியில் கவனமாக அரைத்து எடுக்கவும்.

 சிக்கனை சிறு துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிக்கனுடன்  அரைத்த விழுது,தேவைக்கு சிறிது  உப்பு,கலர் சேர்க்கவும்.

 நன்கு விரவி ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.
 அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊறிய சிக்கனை போட்டு மூடி 15 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது. சிக்கனிலேயே தண்ணீர் ஊறும். தண்ணீர் நன்கு வற்ற வைக்கவும்.



 கடாயில் எண்ணெய் விடவும் நன்கு சூடானவுடன் கருவேப்பிலை போடவும்,வெந்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டி பிரட்டி  விடவும்.


 சிக்கனில் மசாலா எல்லாம் ஓட்டிக் கொண்டு ஃப்ரை ஆகி வரும்.

 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். பிரட்டி விட்டு பரிமாறவும்.


சூப்பர் சுவையுள்ள ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை ரெடி.

ரைஸ் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.சப்பாத்தியில் ரோல் செய்தும், ப்ரெட் சாண்ட்விச்சில் வைத்தும்  மற்றும் வெறும் ஸ்டார்டராகவும் கூட  பரிமாறலாம்.இதனையே எலும்புடன் கூடிய சிக்கன் என்றால் கொஞ்சம் கிரேவி மாதிரியும் செய்யலாம்.அதற்கு தக்காளி,வெங்காயம்,தயிர் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். விரும்பினால் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கலாம்.கிரேவி செய்முறை செய்த பின்பு படம் இணைக்கிறேன்.