Thursday, October 31, 2013

புதினா சாதம் / Mint Rice

 தேவையான பொருட்கள்;
வடித்த சாதம் - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
புதினா - அரை கப் அல்லது சிறிது அதிகமாக
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
புளி - பாக்களவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
(வதக்கியும் அரைக்கலாம்)

பரிமாறும் அளவு - 2 நபர்.

செய்முறை:

 அரைக்க கொடுத்தவைகளை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
 வாணலியில் எண்ணெய் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்க்கவும்.
 நன்கு தண்ணீர் சுண்டும் அளவு  வதக்கவும்.
 வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.
 சாதம், தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு ஒரு போல் பிரட்டவும்.
 அடுப்பை அணைக்கவும்.சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சுவையான புதினா சாதம் ரெடி.

உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

Sunday, October 27, 2013

வெண்டைக்காய் தக்காளி தயிர் பச்சடி / Vendaikkai thakkali thayir pachadi

வெண்டைக்காயில் பொரியல்,புளிக்குழம்பு, பச்சடி பொதுவாக சமைப்போம்.அந்தப் பச்சடியை சிறிய மாறுதலுடன் இங்கு செய்திருக்கிறேன்.
 தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
கெட்டி தயிர் - 1 -2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது.
உப்பு = தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்.

செய்முறை:
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு,வற்றல் கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.சிறிது வதக்கவும், நறுக்கிய வெண்டைக்காய் தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும், மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

 நறுக்கிய தக்காளி ,தயிர் சேர்க்கவும்.ஒரு போல் கலந்து வருமாறு பிரட்டவும்.
 ஒரு நிமிடம் சிம்மில் இருக்கட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை தூவவும்.பிரட்டி சூடாகப்  பரிமாறவும்.
சுவையான வெண்டைக்காய் தக்காளி தயிர் பச்சடி ரெடி.
இது சாதத்தில் பிரட்டி சாப்பிட  மற்றும்  பருப்பு விட்டு தொட்டு சாப்பிடவோ அல்லது சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.நிச்சயம் செய்து பாருங்க.சூப்பராக இருக்கும்.


இக்குறிப்பை Virunthunna Vanga Viji's Show your styles to world (SYS) SHOW YOUR INNOVATION  October - 2013 event -டிற்கு அனுப்புகிறேன்.

இந்த போட்டி வித்தியாசமான ஒன்று.முதலில் ஆறு நம்பர் கொடுத்து , விருப்பப் படுபவர்கள் 2 நம்பர்களை தேர்வு செய்ய வேண்டும்.பின்பு அந்த நம்பருக்கான பொருள் தரப்படும்.அந்தப் பொருளை வைத்து புதுமை புகுத்தி ஏதாவது சமைத்து அசத்த வேண்டும்.பொதுவாக வெண்டைக்காய் பச்சடிக்கு தயிர் அல்லது தக்காளி சேர்ப்பார்கள்.ஆனால்
நான் வெண்டைக்காய் பச்சடிக்கு இங்கு தயிரும் தக்காளியும் சேர்த்து முயற்சி செய்தேன்.மிக அருமையான ருசி.நீங்களும் செய்து பாருங்க.

Friday, October 25, 2013

போன்லெஸ் கிரீன் ஃபிஷ் ஃப்ரை / Boneless Green Fish Fry

 தேவையான பொருட்கள்;
நைல் பெர்ச் ஃப்ரெஷ் ஃபிஷ் ஃபில்லெட்- 1 கிலோ அல்லது ஹமூர் ஃபிஷ்
தேவைக்கு மஞ்சள் தூள் ,
மற்றும் உப்பு
நன்கு கழுவி எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
 அரைக்க:
பச்சை மிளகாய் - 6 - 8 (காரம் அவரவர் விருப்பம்)
மல்லி இலை - 2 கைப்பிடி
புதினா இலை - 1 ஒரு கைப்பிடி
விரும்பினால் கருவேப்பிலை
சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பொரிக்க தேவைக்கு எண்ணெய் .



 அரைத்த விழுதை ஒரு ப்லேட்டில் எடுத்து 
அத்துடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
1 அல்லது 2 டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,
அரை  அல்லது ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள்,
கால் அல்லது அரைடீஸ்பூன் கரம் மசாலா,
தேவைக்கு எலுமிச்சை ஜூஸ்(பெரிய பழம் )
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு சிறிது சேர்த்து விரவி வைக்கவும்.
 விரவிய மசாலாவை ஒவ்வொரு துண்டாக எடுத்து தடவி வைக்கவும்.
 ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் நிச்சயம் ஊற வேண்டும் அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்தாலும் சரி.

விரவிய மீனை பிரட்ட
மைதா, கார்ன்ஃப்லோர்,ப்ரெட் கிரம்ஸ் தலா 2 டேபிள்ஸ்பூன்,சிறிது உப்பு கலந்து வைக்கவும்.
 ஊறிய மீனை லேசாக மாவில் பிரட்டி எடுக்கவும்.( நான் எப்பவும்,மைதா,கார்ன்ஃப்லோர், ப்ரெட் கிரம்ஸ் சம அளவு போட்டு,உப்பு காரம் சேர்த்து  மிக்ஸ் செய்து ஒரு பாக்சில் வைத்திருப்பேன்)

 தவாவில் தேவைக்கு எண்ணெய் விட்டு சாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.
 நெருப்பு சரியான சூட்டில் வைத்து பதமாக இரு புறமும் சிவற வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.

சூப்பர் சுவையுள்ள ஆரோக்கியமான ஃபிஷ்  ஃபில்லட் ஃப்ரை ரெடி.
வித்தியாசமாக ஃபிஷ் ஃப்ரை செய்ய நினைத்தால் இதை செய்து பாருங்க.உப்பு காரம் அளவாய் இருக்க வேண்டும்.



Tuesday, October 22, 2013

பூண்டு சட்னி / Garlic Chutney


இந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பூண்டு - 6-8 பற்கள்(பெரிய பற்கள்)
மிளகாய் வற்றல் - 2
பெரிய தக்காளி - 1
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 பூண்டு பற்களைத் தோல் உரித்து வைக்கவும்.மிளகாய் வற்றலை சுட்டோ லேசாக எண்ணெயில் பொரித்தோ எடுக்கவும்.தாளிக்க வைத்துள்ள எண்ணெயிலேயே பொரித்து எடுக்கலாம்.
சிறிய மிக்ஸி ஜாரில்  பூண்டு,வற்றல், உப்பு போட்டு முதலில் அரைக்கவும்.

 பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
 நன்கு அரைத்து எடுக்கவும்.
 கடாயில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
 அரைத்த சட்னியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.
 இப்படி சட்னி வற்றி தொக்கு போல் ஆகும் அடுப்பை அணைக்கவும்.தக்காளி,பூண்டின் பச்சை வாடை சுத்தமாகப் போய் மணமாக இருக்கும்.

சுவையான சத்தான பூண்டு சட்னி  ரெடி.
இட்லி தோசையுடன் பரிமாறவும்.காரசாரமாக இருக்கும்.

Thursday, October 17, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் & உப்புக் கண்டம் மற்றும் ஒரு சில மட்டன் குறிப்புக்கள்


அன்பான நட்புள்ளங்கள் அனைவருக்கும் எங்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள்  வாழ்த்துக்கள்  மற்றும் நான் முன்பு எழுதிய என் குர்பானி கதை (கிளிக்கவும்)



இந்தப் பெருநாள்  சமயம் குர்பானி கொடுத்து எல்லோருடைய வீட்டிலும் கறி வந்த வண்ணம் இருக்கும்.அதனால் எங்க ஊரில் எப்படி உப்புக் கண்டம் செய்வார்கள்  என்று பார்ப்போம்.
நான் ஊரில் இருந்திருந்தால் படிப் படியான உப்புக் கண்டம் செய்முறை  புகைப்படங்களைப் பகிர்ந்திருப்பேன்.
என்றாலும் எனக்கு ஊரில் இருந்து என் இரண்டாவது அண்ணன் சென்ற வருடம் அனுப்பிய  உப்புக் கண்டம் பார்சல் பகிர்வு இதோ!

உப்புக் கண்டம் :


தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத மட்டன் அல்லது பீஃப் - 1 கிலோ
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
கறி கோர்ப்பதற்கு பெரிய சாக்கு தைக்கும் ஊசி, சணல் கயிறு.

செய்முறை:
கறியை சுத்தமாக 5  தண்ணீர் வைத்து அலசி நன்கு தண்ணீர் வடித்துக் கொள்ள வேண்டும்.
கறியுடன்,மிள்காய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு விரவி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்பு ஊசி  கோர்த்த சணல் கயிறில் விரவி வைத்த கறியை இடைவெளி விட்டு கோர்த்து கொடி போல் கட்டி காயப் போடவும்.குறைந்தது மூன்று நாட்கள் சுல்லென்று அடிக்கும் வெயில் காயப் போடவும்.பின்பு கறியை உதிர்த்து ஒரு பெரிய தட்டில் வைத்து காய வைத்து காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.இது 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை கூட கெடாமல் இருக்கும்.எறும்பு வரும் கவனம்.
அப்ப அப்ப தேவைக்கு தட்டி, பொரித்து சாப்பிடலாம். மீடியம் நெருப்பில் ஒரு கடாயில் தேவைக்கு எண்ணெய் காய விட்டால் கறி பொரிய 3 அல்லது ஐந்து நிமிடம் தான் ஆகும்.
சூப்பராக மொறு மொறு என்றும் சாஃப்டாகவும் இருக்கும்.
வெரைட்டி ரைஸ்க்கு,பருப்பு ,சாம்பார்,ரசம் தயிர் சாதத்திற்கு பக்க உணவாக ஒரு அவசரத்திற்கு பொரித்து அசத்தலாம்.



ஒரு சில மட்டன் குறிப்புகளின் லின்க்  இங்கு பகிர்ந்துள்ளேன்.வீட்டில் மட்டன் இருந்தால் செய்து அசத்துங்க.பிரியாணி குறிப்புக்கள் இங்கு பகிரவில்லை.அதற்கு என் வீடியோ பகிர்வே இருக்கு.வெரைட்டிக்கு சைட் பாரில் இருக்கும் பிரியாணி லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஈசி சுருட்டு கறி

ஈசி ஈரல் கூட்டு

மட்டன் குழம்பு கறிக்குழம்பு

மட்டன் ஒட்ஸ் கட்லெட்

மட்டன் விண்டாலு

மட்டன் தால்ச்சா

மட்டன் போன் சால்னா

நெல்லை மட்டன் தக்கடி

கறி வடை 

மட்டன் சுக்கா 

கொத்துக்கறி கடலை பருப்பு 

மட்டன் கீமா கட்லெட்

முள்ளானம்

மட்டன் மக்ரோனி 

தலைக்கறி மஜா

ஆட்டுக்கால் கிளியர் சூப்

மட்டன் அக்னி குருமா

கொத்துக்கறி கோஸ்

பெருநாள் சமயம் ஸ்பெஷலாக ஏதாவது குறிப்பு செய்து பகிரலாம் என்று நினைத்திருந்தேன், பெருநாள் கொண்டாட்டம்,விருந்தினர், கெட்டுகெதர், அவுட்டிங் என்று நேரம் பறந்து விட்டது.படம் எடுக்கவோ பகிரவோ நேரமே அமையவில்லை, விரைவில் நல்ல நல்ல குறிப்புக்களோடு மீண்டும் வருவேன்.

Thursday, October 10, 2013

போன்லெஸ் சிக்கன் மந்தி / Boneless Chicken Mandi

அரபு நாடுகளில் எப்படி சவர்மா, பார்பிகியூ பிரசித்தமோ அதே போல் இந்த மந்தி ரைஸ், கப்ஸா ரைஸ் போன்றவையும் மிகப் பிரபலம்.ஏற்கனவே நான் சிக்கன் கப்ஸா ரைஸ் , மட்டன் கப்ஸா குறிப்பை என் அரேபிய உணவுகள் பகுதிகளில் பகிர்ந்திருக்கேன்.
நம் நாட்டில் பிரியாணி போல் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மந்தி ரைஸ் பிரபலம்.நாம் இங்கு நிறைய மசாலா எல்லாம் சேர்த்து பிரியாணி செய்கிறோம்.ஆனால் அரபு நாடுகளில் காரம் ,மசாலா அதிகம் இல்லாமல் மைல்டாக ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது வழக்கம்.
சிக்கன், மட்டன், மீன் என்று எல்லாவற்றிலும் இதனை வெரைட்டியாக செய்யலாம்.முழுக் கோழியை பாதியாக வெட்டி தோலோடு கிரில் செய்தோ அல்லது அரிசியுடன் வெந்தோ இந்த மந்தி ரைஸ் செய்வார்கள்

இப்ப சிக்கன் மந்தி சிம்பிளாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.
நான் இங்கு ஒரு மாற்றமாக எலும்பில்லாத சிக்கனை பேக் செய்து   மந்தி ரைஸ் செய்திருக்கேன்.
மந்தி ரைஸ்க்கு தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் நெஞ்சுப்பகுதி - 800 கிராம்.
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
எண்ணெய் நெய் - 50+ 50 (100 மில்லி)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
பட்டை  -2 துண்டு,
கிராம்பு, ஏலக்காய்  - தலா 4
(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
காய்ந்த எலுமிச்சை - 1 அல்லது இரண்டு
knorr ஆல் ஸ்பைஸ் மிக்ஸ்(சிறிய பேக் 2 ) அல்லது சிக்கன் ஸ்டாக் - 2
உப்பு  சேர்க்க வேண்டாம், இவற்றிலேயே உப்பு இருக்கும்.நான் இங்கு knorr ஆல் இன் ஒன் ஸ்பைஸ் சேர்த்து செய்தேன்.
பால் - 50 மில்லி, 2 பின்ச் சாஃப்ரான்.
அலங்கரிக்க:
எண்ணெயில் வறுத்த முந்திரி,காய்ந்த திராட்சை,சிவற வறுத்த  வெங்காயம் ரெடி செய்து கொள்ளவும்.

தேவையான பொருட்களை இப்படி முதலியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.


இனி சிக்கன் பேக் செய்வதற்கு எப்படி சிக்கனை தயார் செய்வது என்று பார்ப்போம்.

 கோழி நெஞ்சுப் பகுதியை நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்.
 800 கிராம் சிக்கனுக்கு சிக்கன்  பார்பிகியூ மசாலா 4 டீஸ்பூன்,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு எலுமிச்சை ஜூஸ், 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில்,தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு விரவி வைக்கவும்.பார்பிகியூ மசாலா இல்லாதவர்கள் 2 டீஸ்பூன் சில்லி பவுடர் ,இஞ்சி பூண்டு மட்டும் கூட உபயோகிக்கலாம்.

 சிக்கனை பேக் செய்ய ஒரு நான்ஸ்டிக் பேக்கிங் ட்ரேயில் ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன் தடவி ரெடி செய்த சிக்கன் துண்டுகளை வைக்கவும்.

 முற்சூடு செய்த எலெக்ட்ரிக் ஓவனில் 250 டிகிரிக்கு செட் செய்து பேக் செய்ய வேண்டும்.அனலை மேலும் கீழும் செட் செய்ய வேண்டும்.சிக்கன் வைத்த ட்ரேயை ஓவனில் வைத்து இருபது நிமிடம் கழித்து திற்ந்து பார்க்கவும்.
 சிக்கன் துண்டுகள் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி மறுபுறம் வைக்கவும்.
 ஓவனுக்கு ஓவன் செய்முறைக்கு தகுந்த படி நேரம் மாறுபடும்.உங்கள் பக்குவப் படி பேக் செய்து எடுக்கவும். தோலோடு சிக்கன் உபயோகித்தால்  கிரில் ப்லேட் வைத்து கிரில் செய்து எடுக்கலாம்.
 சிக்கன் நன்கு வெந்த பிறகு கவனமாக கையுறை போட்டு வெளியே எடுக்கவும்.

இனி மந்தி ரைஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும். பட்டை,கிராம்பு,ஏலக்காய் போடவும்.லேசாக வெடிக்க ஆரம்பிக்கும்.(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)
நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
 நன்கு வதக்கவும் லேசாக சிவறட்டும்.
 இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.

 ஊறிய அரிசி சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும்.காய்ந்த எலுமிச்சையை ஃபோர்க்கால் துளை செய்து போடவும்.knorr ஆல் ஸ்பைஸ் சேர்க்கவும்( 2 அல்லது 3டீஸ்பூன்) உப்பு சேர்க்கவில்லை.அதுவே அதிக உப்பு கரிப்புடன் இருக்கும்.
 அரிசி ஒரு சேர கொதித்து முக்கால் வேக்காடு வெந்து வரும் பொழுது தயாராக உள்ள பேக்ட் சிக்கனை மேலே பரத்தி வைக்கவும்.

50 மில்லி சூடு பாலில் 2 பின்ச் சாஃப்ரான் போட்டு காய்ச்சி வைக்கவும்.ஒரு அடுப்பு கறி துண்டை அடுப்பில் கங்காக தயார் செய்யவும்.
 சாஃப்ரான் மில்க்கை தயார் செய்து வைத்த மந்தி சோற்றின் மீது ஊற்றவும்.ஒரு சிறிய தட்டில் அனலாக இருக்கும் கங்கை வைக்கவும். அடுப்புக்கரி மணம் மந்தி ரைஸில் பரவும்.
 அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.
 மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து நன்கு பிரட்டி பரிமாறவும்.

 வறுத்த வெங்காயம் முந்திரி திராட்சை அலங்கரித்து ஒரு பெரிய சகன் (பவுல்)அல்லது ப்லேட்டில் பரிமாறவும்.

சுவையான சிக்கன் மந்தி ரெடி.

இதற்கு பக்க உணவாக ஃப்ரெஷ் கிரீன் சாலட், ஃப்ரெஷ் தக்காளி வெங்காய சட்னி தான் காம்பினேஷன்.

என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு இது. இந்த மந்தி ரைஸில் இந்த சாலட்டை போட்டு கொஞ்சம் அந்த தக்காளி வெங்காய சட்னி சிக்கன் மிக்ஸ் செய்து எல்லாம் கலந்து சாப்பிடுவதுண்டு.சும்மா மிக்ஸ் செய்யாமல் தனித்தனியாகவும் சாப்பிடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க. எப்பவும் மந்தி ரைஸ் விடுமுறை நாட்களில் வெளியே வாங்கி விடுவதுண்டு. ஆனால் உங்கள் எல்லோருக்காகவும் செய்து பகிர வேண்டும் என்பதாலேயே இந்த ரெசிப்பி பகிர்வு. அல்ஹம்துலில்லாஹ்!