Friday, January 24, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 11- திருமதி சங்கீதா செந்தில் - சாத பக்கோடா / Guest Post - Rice Pakoda

திருமதி சங்கீதா செந்தில், இவங்க மெயில் செய்து என் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்த பொழுது மனது மிகவும் சந்தோஷப்பட்டது. அவங்களோட ஆர்வம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பதே உண்மை. இவங்களோட வலைப்பூ ஸ்னோஒயிட்சோனா (Snow White Sona) சென்று பார்க்க கிளிக்கவும். அசத்தலான  சுவையான குறிப்புகள்  இது தவிர கவிதை, ஓவியம், கோலம், கைவேலைப்பாடுகள் (கைவினைகள், காகித வேலைப்பாடு,பொம்மை வேலைப்பாடு,மெஹந்தி இன்னும் பல) பார்க்கப் பார்க்க  என் நேரம் போவது தெரியாமல் சில மணி நேரம் அவங்க வலைப்பூவிலேயே கழிந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மூன்று வருடமாக வலைப்பூவில் எழுதி வராங்க.சங்கீதாவை பின் தொடர்ந்து அவங்க பக்கம் போய் பார்க்கவும். அருமையான வலைப்பூ. நல்வாழ்த்துக்கள் சங்கீதா.

சங்கீதாவின் சுய அறிமுகம்:-

எனது பெயர் S.சங்கீதா.எனது கணவர் பெயர் செந்தில் காந்தி.
நாங்கள் காட்டுமன்னர்கோயில் அடுத்த மேலணிக்குழி கிராமத்தில் வசிக்கிறோம் .
எனது கணவர் Hindustan  Unilever distributor ஆக இருக்கிறார்.
எனக்கு சொந்தத்திலே திருமணம் நடந்ததால் நான் பிறந்த ,மற்றும் புகுந்த ஊர்  ஒரே ஊர் தான்.
திருமணத்திற்கு பிறகு தான் சமைக்க கூட கற்றுக்கொண்டேன் .(அதுவரை வெங்காயம் கூட நறுக்க தெரியாது )
சமையலில் எனது அனுபவம் 5 வருடங்கள் தான். எனக்கு 2 குழந்தைகள் பெரியவள் சோனா(profile pic ). 2 ஆம் வகுப்பு படிக்கிறாள்.
இரண்டாவது குழந்தை  நதிஷ். இப்போது 6 மாத குழந்தை.
சமையல் தவிர  கவிதைகள், கைவினைகள், கோலங்கள்,மெஹந்தி இவற்றில் விருப்பம் .
சங்கீதாவின் ப்ரஃபைல் படமாக மகள் சோனாவின் புகைப்படத்தை அனுப்பியிருக்காங்க, இந்த செல்லக் குட்டியை நட்புகள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவோம்.

என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஆச்சரியம், அவங்க என் வலைப்பூவிற்காக அனுப்பிய அசத்தலான கவிதை :

உங்களுக்கு ஒரு கவிதை இது எனது அன்பு பரிசு :-
கலைகளிலே சிறந்த
கலை சமையற்கலை 
அதை விளக்கிடவோ
இங்கேயுண்டு
ஆயிரம் வலை .

வலைகளிலே அசத்தும்வலை
அக்கா ஆசியாவின் வலை 
அதில் வகைவகையாய்
ருசிக்க உண்டு
ஆயிரம் சுவை .

அதை சுவைக்க எண்ணி
வழிதொடரும்,
வாசகரெல்லாம்
தேனாய் இனிக்கும்
பலாச்சுளை .

ஏற்ற இறக்கம்
ஏதுமின்றி,
எல்லோரையும் ஈர்க்கச்
செய்யும் வலைமலர்,
அது என்றும் வாடா மலர்...

உங்கள் பணி  மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அக்கா.
அசத்தலான கவிதை. மனமார்ந்த நன்றி. என்னுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.
இனி சமையல் பகிர்வு - சங்கீதாவின் சாத பக்கோடா 

திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டாங்களா ?  சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்கா?அட கவலைய விடுங்க ..... இப்போ மீந்து போன சாதம் கூட எளிதான சுவையான ஸ்நாக்ஸ் ஆ மாற்றலாம் ... ஆமாங்க சாத பகோடா விருந்தினர்களையும் கவர்ந்து விடும்.... இத எப்படி செய்வதுன்னு வாங்க பார்க்கலாம் .

தேவையான பொருட்கள் :-
சாதம் - 1 கப் 

வெங்காயம் - 1 ( பொடியாக  நறுக்கியது )

இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் - 1 சிறியது (பொடியாக நறுக்கியது )

மிளகாய் தூள் - காரத்துக்கு ஏற்ப 

கடலை மாவு - 2 ஸ்பூன் 

பஜ்ஜி மாவு- 2ஸ்பூன் 

கலர் பவுடர் - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது )

கருவேப்பிலை -சிறிதளவு  (நறுக்கியது )

செய்முறை:-

சாதத்தை  ஒரு பாத்திரத்தில் போட்டு  மசித்துக் கொள்ளவும் .

அதனுடன் ,வெங்காயம் ,இஞ்சி ,பச்சை மிளகாய் ,கடலை மாவு, பஜ்ஜி மாவு , கலர் பவுடர் , மிளகாய்த்தூள் ,உப்பு, கொத்தமல்லி ,கருவேப்பிள்ளை  எல்லாம் சேர்க்கவும்.

சேர்த்தவைகளை  நன்றாக பிசையவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும் (நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது )

பிசைந்தவற்றை  எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும் .


சுவையான சாத பக்கோடா ரெடி. 

எளிதாக செய்யக் கூடிய ருசியான குறிப்பு. நீங்களும் செய்து பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும்.


சில காணொளிகள் கூட பகிர்ந்திருக்காங்க அவங்க வலைப்பூவில் இக்குறிப்பை காணொளியாகக் காண இங்கே கிளிக்கவும்.

சங்கீதாவின் பல திறமைகள் அவங்க வலைப்பூவை ஆராய்ந்தாலே தெரிய வரும்.
இதோ நான் செய்த சாத பக்கோடாவின் படப் பகிர்வு, தெளிவாக படம் எடுப்பதற்குள் தட்டுக் காலி.

சங்கீதாவும்   டிப்ஸ் அனுப்பிவிட்டதால் இதோ உங்களுக்காக:

சங்கீதாவின் பயனுள்ள டிப்ஸ்:

அழகு ஆரோக்கியம் டிப்ஸ்:

குளிக்கும் வெந்நீரில் சிறிது வேப்பிலை போட்டு குளித்தால்,உடல் துர்நாற்றம் ,ஜுரம் ,சளி இவைகளுக்கு மிகவும் நல்லது. வேப்பிலை சிறந்த கிருமி நாசினி.

சளிக்கு இஞ்சி சாறு , தேன் கலந்து சாப்பிட சளி குறையும் .

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் ,தக்காளியை வட்டமாக வெட்டி அதை முகத்தில் தேய்த்து ,பத்து நிமிடங்கள் கழித்து கழுவலாம் . இதுபோல வாரம் ஒரு முறை செய்தால் முகம் பளிச் என்று இருக்கும்.

தலைக்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊரைவிட்டு அதை நன்றாக மிக்ஸ்யில் அரைத்து , தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இது இயற்கையான ஷாம்பூ .உடலுக்கு குளிர்ச்சி தரும் . பொடுகு ,முடி உதிர்தல் குறையும் .

இதே போல செம்பருத்தி இலையும் அரைத்து குளிக்கலாம் .

இது எல்லாமே நான் அடிக்கடி செய்வேன் .


சமையல் டிப்ஸ்;-

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது குக்கரில் சிறிது மஞ்சள் தூள் நெய் சேர்த்து வேக வைத்தால் ,சுவையும் ,மணமும் அபாரமாக இருக்கும்.

மீன் வறுவல் செய்யும் போது சிலவகை மீன்கள் கல்லில் ஒட்டும்.அதை தவிர்க்க ,மீன் துண்டுகளுடன் சிறிது கார்ன் மாவும்,அரிசி மாவும்  சேர்த்தால் ஒட்டாமல் வரும் .

சப்பாத்தி ,தோசைக்கு  சமையல் எண்ணைக்கு பதில் நல்லெண்ணெய் உபயோகிக்கலாம் . எல்லா வயதினருக்கும் மிகவும் நல்லது .

வாழைப்பூ கருக்காமல் இருக்க அதை  நறுக்கும்  போது அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அதில் வாழைப்பூவை  அரிந்து போடலாம். 

பச்சை மிளகாய் காம்பு பகுதியை நீக்கிவிட்டு பிறகு பிரிட்ஜ் ஜில் வைத்தால் சீக்கிரம் வீணாகாது.

உளுந்து வடை செய்யும் போது சிறிது வேகவைத்த உருளைகிழங்கை மசித்து வடை மாவுடன் கலந்து வடை செய்தால் நன்கு மொறு மொறு வென ருசியாக இருக்கும்.

குருமா செய்யும் போது தேங்காயுடன்  முந்திரி சேர்த்து அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.

வாழைப் பழங்களை பிற பழங்களுடன் சேர்த்து வைத்தால்  பிற பழங்கள் சீக்கிரம் பழுத்து விடும். எனவே வாழைபழத்தை தனியே வைப்பதே நல்லது.

கொத்த மல்லி ,புதினா இவைகளை அலுமினியம் பாயில் பேப்பர் சுற்றி பிரிட்ஜ்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

இது தவிர இன்னுமொரு டிப்ஸ் கடைசியாக:

வெள்ளி கொலுசுகள் சுத்தம் செய்ய அதை 1 மணி  நேரம் மோரில் ஊற வைத்து பழைய பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு ஷாம்பு தண்ணீர் கொண்டு தேய்த்தால் சுத்தமாகி விடும் .

மிக்க நன்றி சங்கீதா.  அசத்தலான பயனுள்ள டிப்ஸ் பகிர்வு. அருமையான குறிப்பு என்று உங்கள் சிறப்பு விருந்தினர் பகிர்வு  சூப்பராக இருந்தது, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

மீண்டும் நல்லதொரு அசத்தலான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


14 comments:

Saratha said...

திருமதி சங்கீதா செந்திலின் சாதபக்கோடா அருமை.அவரது கவிதையும்,சமையல்,அழகு டிப்ஸ்களும் மிக மிக அருமை!!அவரது திறமையை வெளிப்படுத்திய உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை மிகவும் அருமை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

சமையல் டிப்ஸ்கள் அனைத்தும் பயனுள்ளவை.... நன்றி...

சோனா செல்லத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்...

Shama Nagarajan said...

delicious and inviting akka

Menaga sathia said...

சூப்பர்ர் பகோடா மற்றும் அசத்தல் கவிதை.வாழ்த்துக்கள் சங்கீதா!!

அனைத்து டிப்ஸ்களும் பயனுள்ளவை.

பகிர்ந்த ஆசியாக்காவுக்கு பாராட்டுக்கள்!!

ADHI VENKAT said...

சாத பக்கோடா சூப்பர்... டிப்ஸ் அனைத்தும் உபயோகமானவை...

சங்கீதா அவர்களுக்கு பாராட்டுகள்...

Snow White said...

மிக்க மகிழ்ச்சி அக்கா ...இந்த நாள் எனக்கு இனிய நாள் . உங்கள் வலைப்பூவில் எனது இடுகை வந்ததே மிகவும் பெருமையாக இருக்கிறது ...
கருத்துக்களை அன்புடன் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....

Asiya Omar said...

சாரதா அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

தனபாலன் சார் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் தொடர் வருகைக்கும் நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஷாமா வங்க, கருத்திற்கு மிக்க நன்றி.

மேனகா தொடர் வருகைக்கும் தங்களுடைய ஊக்கமான கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Asiya Omar said...

வாங்க ஆதி, பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

ஸ்நோ ஒயிட் (சங்கீதா) வாங்க, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி.

Asiya Omar said...

வாங்க ஆதி, பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

ஸ்நோ ஒயிட் (சங்கீதா) வாங்க, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி.

priyasaki said...

முதலில் சோனா செல்லத்துக்கு அன்பு முத்தங்கள்.ஸோ ஸ்வீட்.
நானும் சங்கீதாவின் வலைப்பூ பார்த்தேன் மிக அருமையாக இருக்கு.
சாதபகோடா சிம்பிள்&ஈசியாக இருக்கு. செய்துபார்க்கிறேன்.
கவிதை அருமையா இருக்கு.பயனுள்ள டிப்ஸும் கூடவே. வாழ்த்துக்கள் சங்கீதா.ஆசியா மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

சாத பக்கோடா.... நல்லா இருக்கும்போல.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Jaleela Kamal said...

சாதப்பகோடா மிக அருமை,சங்கீதாவின் டிப்ஸ்கள் மற்றும் கவிதை மிக மிக அருமை

Asiya Omar said...

ப்ரியசகி வாங்க, வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஆமாம் சகோ.வெங்கட்,சாத பக்கோடா சூப்பர் தான்,கருத்திற்கு நன்றி.

ஜலீலா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.