Friday, January 31, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 12 - திருமதி சிவகாமசுந்தரி ஜெயசங்கர் / அவகாடோ டிப்/ கோயுகமோல் / Guest post / Avacado Dip / Guacamole

திருமதி சிவகாமசுந்தரி  கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் அறிமுகமான ஒரு நல்ல படிப்பாளி, தோட்டக் கலையில் முதுகலை பயின்றவர். எங்கள் பிரிவு வேளாண்மை என்றாலும் கல்லூரி விடுதியிலும் தோட்டக் கலைத்துறை செல்லும் பொழுதும் எதேச்சையாக அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். சுறு சுறுப்பாக சுத்தமாக பளிச்சென்று வலம் வந்த தோழி. கிட்டதட்ட கால் நூற்றாண்டு கழிந்தாலும் கல்லூரியில் பார்த்த அதே முகம்,  அதே தோற்றம் இன்றும் என்னை ஆச்சரியப் பட வைத்ததென்னவோ உண்மை தான்.


சிவாவிடமிருந்து ஜனவரி 8 ஆம் தேதி ஒரு இனிய வேளையில் ஃபேஸ்புக் பேஜில் ஒரு செய்தி, உன்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு ரெசிப்பி அனுப்ப விருப்பம் என்று. என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை, உடனே அனுப்பி வை என்று பதில் அனுப்பினேன். ஆனால் அவர் அனுப்பி பதிவு  தயார் செய்து பகிர முடிந்தது  இன்று தான்.


தோழி சிவகாமசுந்தரியின் சுய அறிமுகம்:

சொந்த ஊர் லால்குடி, திருச்சி மாவட்டம் என்றாலும் அவருடைய தந்தையின் பணியின் காரணமாக தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் வசித்தவர். அவரின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வாழ்க்கை தர்மபுரியில்.தாயாரின் பூர்வீகம் நெல்லை என்றாலும், அவரின் குடும்பம் தாயாரின் 10 வயதில் நாக்பூர்,  மஹாராஷ்டிராவிற்கு  புலம் பெயர்ந்து விட்டதாகச் சொல்கிறார். கணவரின் சொந்த ஊர் காரைக்குடி.
தற்காலம் முதல் கிட்டதட்ட 23 வருடங்களாக வடஅமெரிக்காவில் வசித்து வருகிறார். 12 வருடங்களாக கனடாவில்,  இயற்கை அன்னையின் உலக அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி அமையப்பெற்ற இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
அதற்கு முன்பு 10 வருடங்களாக ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்திருக்கிறார்.
 
கணவர் டாக்டர்.ஜெயசங்கர் அவரும் தோட்டக் கலைத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்றவர் .இரண்டு அழகிய மகள்கள் வர்ஷா ஜெயஸ்ரீ, தீக்‌ஷா சிவஸ்ரீ (ஜெய ,சிவா என்று தம்பதியினரின் பெயரையும் இணைத்து குழந்தைகளின் பெயரை தேர்வு செய்ததாக சந்தோஷமாக் குறிப்பிடுகிறார்).1991 ஆம் வருடம் திருமணமான பின்பு  தனது மாமியார் திருமதி பர்வதவர்தினி  அவர்கள் தான் சமையலில் தன் குரு என்கிறார்.  புகுந்த வீட்டார் இவருக்கு கல்வியில் உள்ள ஆர்வம் கண்டு  மேலும் ஊக்கம் கொடுத்ததாகச் சொல்கிறார்.

திருமணமான புதிதில் ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளராக நான்கு வருடம் பணிபுரிந்து பின்பு முதல் மகள் பிறந்த பின்பு மகிழ்ச்சியான இல்லத்தரசியாக சிலவருடம் கழிந்ததாகவும்,அந்த நேரம் கூட சும்மா இருக்காமல்  கணினி சம்பந்தமானவைகளையும்,
மருத்துவச் சொற்களை அகராதிப்படுத்துதல் போன்ற துறைகளில் இரவுக்கல்லூரியில் சேர்ந்து படித்து தேறியிருக்கிறார். அதன் பின்பு கனடா, அமெரிக்க வரி சம்பந்தப்பட்ட துறையில் விருப்பம் கொண்டு அதில் கற்றுத் தேறி இன்று அந்த துறையில் ( Tax Preparer) பணி புரிவதாகவும் தெரிவிக்கிறார். என்றாலும் இன்று வரை தோட்டக்கலையில் தான்  தனக்கு அதீத ஆர்வம் என்கிறார்.


நம்முடன் அழகிய படங்களைப் பகிர்ந்த சிவகாமசுந்தரியின் குடும்பத்தினருக்கு நம்  நல்வாழ்த்துக்கள்.

சாப்பாடு சுத்த சைவம் என்பதால் வீட்டில் சமைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் அமெரிக்க வாழ்கைக்கு தகுந்தபடி தன் சைவச் சமையலிலும் பல புதுமைகளை முயற்சி செய்ததாகவும் அதில் ஹிட்டான ரெசிப்பி, மாங்காய் இஞ்சி மோர் குழம்பு, செலரி கிரேவி, சிவப்பு லெட்டூஸ் கிரேவி( Swiss chard gravy) செர்ரியோகரா(cherry rice),பாதாம் ரைஸ்(Almond rice), ஓட்ஸ் கொழுக்கட்டை போன்ற  பல குறிப்புக்கள் என்று தெரிவிக்கிறார்.கணவர் கொடுக்கும் ஊக்கத்தினால் மேலைநாட்டு பழங்கள்,காய்கறிகளை உபயோகித்து பல குறிப்புக்கள் செய்து அசத்துவதாக தெரிவிக்கிறார்.

// உணவு எப்படியோ உணர்வுகள் அப்படியே
உணர்வுகள் எப்படியோ எண்ணங்கள்   அப்படியே
எண்ணங்கள்   எப்படியோ செயல்கள் அப்படியே
செயல்கள் எப்படியோ பலன்கள் அப்படியே //
என்ற அற்புதமான வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.
என்னைப் பற்றி அவரின் ஒரு சில வார்த்தைகள்;-
நானும் ஆசியாவும் 1985 - 1989 வரை கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள். சமீபத்தில் ஃபேஸ் புக் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டோம். ஆசியாவின் சமையல் வலைப்பூ பற்றி அறிந்து அதனை அவ்வப்போது பார்த்தும் வருகிறேன். சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஆசியா வேளான்மை படித்து விட்டு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுக் குறிப்புக்களை பகிர்வது கூட அருமையாகத்தான் இருக்கிறது.
அழகான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சிவா.

இங்கே இன்று சிவகாமசுந்தரி  நம்முடன் பகிரபோவது அவகாடோ பழத்தில் செய்யும் ஹெல்தியான டிப் அதாவது சட்னி போன்ற ஒரு குறிப்பு.

இந்த அவகோடா பழத்திற்கு என்று எந்த தனிச்சுவையும் இல்லை, அதனால் இதனை இனிப்பு அல்லது காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்த்து கலந்து தான் சாப்பிட முடியும். இந்தப் பழம் இதய ஆரோக்கியத்தை தூண்டக் கூடியது,  அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் (anti inflammatory and high in carotenoids)செயல் படக்கூடியது, நிறப்பசையை கொடுக்கக் கூடியது.

கோயுகமோல் / Guacamole : தேவையான பொருட்கள்;
(அவகாடோ நடுத்தரமாக கனிந்தது - 3 அல்லது 4 பழங்களில் இருந்து)
அவகாடோ மசித்த சதைப் பகுதி - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப் (சிவப்பு வெங்காயம்)
நறுக்கிய தக்காளி - 1 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 3 - 4 டேபிள்ஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
நறுக்கிய மல்லிக்கீரை - 3/4 - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 3 - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
அவகாடோ நடுத்தரமாக பழுத்ததை தேர்வு செய்து நன்கு அலசி நீள்வாக்கில் வெட்டவும். உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் ஸ்பூன் கொண்டு எடுக்கவும். அதனை மத்து கொண்டு மசித்துக் கொள்ளவும்.


தக்காளியும் நடுத்தரமாக பழுத்திருக்க வேண்டும், பழம் கெட்டியாக இருக்க வேண்டும், உள்ளே உள்ள விதைப்பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.கொத்தமல்லிக்கீரையை நன்கு மண் போக அலசி பொடியாக நறுக்கி எடுக்கவும்.மிளகாயையும்  பொடியாக நறுக்கி கொள்ளவும்.எலுமிச்சை ஜூஸ் எடுத்து வைக்கவும். எல்லாவற்றையும் இப்படி தயார் செய்து கொள்ளவும்.


அவகாடோ மசித்தது தவிர தயார் செய்த அனைத்துப் பொருட்களையும்  ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். அத்துடன் அவகாடோ மசித்ததை சேர்த்து கையாலோ அல்லது கரண்டி கொண்டோ கலந்து விடவும். உப்பு சரிபார்க்கவும்.காரம் புளிப்பு அவரவர் விருப்பம்.


சுவையான அவகாடோ டிப் ரெடி.

நீங்களும் இந்த ஆரோக்கியமான குறிப்பை செய்து பாருங்க. இதனை சப்பாத்தியில் அல்லது ப்ரெட்டில் சீஸ் உடன் தடவி சாண்ட்விச் போல் சாப்பிடலாம்.வேக வைத்த பாஸ்தா காய்கறியுடன் கலந்தும் சாப்பிடலாம். கனடாவில் இதனை சிப்ஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது பிரசித்தம். அடுப்பில்லாமல் செய்து எளிதில் அசத்தக் கூடிய  குறிப்பு இது.

டிப்ஸ்;-
இதனை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை கைபடாமல்  ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் கெடாமல் இருக்கும்.
தக்காளி,வெங்காயம் போன்றவற்றை கையாலேயே பொடியாக நறுக்க வேண்டும். ப்லெண்டரில் சாப் செய்து எடுத்தால்   நறுக்கென்ற தன்மை இருக்காது. சாப்பிடும் பொழுது நறுக்கென்று வாயில் அகப்பட்டால் சுவை அருமையாக இருக்கும்.
நீக்கப் பட்ட தக்காளியின் உட்புறப்பகுதியை ரசத்தில் பயன்படுத்தலாம்.

   Guacamole (goo-yuk-a-mo-lae)

Avacado cannot be eaten alone. It doesn’t have a taste of its own. It should be eaten either with salt, spice or with sugar. Avacado has wide range of health benefits: Promotes heart health, anti inflammatory and high in carotenoids.

The recipe for Guacamole (goo-yuk-a-mo-lae) is: 
Avocado Medium ripe but not over ripe-3-4, cut longitudinally and scoop out the pulp. Mash it nicely with a ladle or with a potato masher.

For each cup of mashed Avocado make this following ready.

Finely chopped onion (preferably red to give good pungency)- 1 cup

Finely chopped Tomato (take out the core, use only the rind)- 1 cup
Make sure use a ripe but firm Tomato.
Finely chopped Coriander leaves- 3/4th to1 cup

Finely chopped Green chilies- 3-4 tablespoon can be adjusted according to your preference.
Freshly squeezed lime juice – 3-4 tablespoon
Salt- as needed. 
 Mix everything except the avocado pulp nicely and add the avocado pulp , blend them well with hand or ladle. Taste to check for salt, sour and spice. If you want add more green chilies/salt/lime juice. THAT'S IT, no cooking needed. It can be a dip, or spread over bagle or eaten with chapati or smeared on bread and made as sandwich with cheese or mixed with cooked pasta and vegetable (rated the best) It stores well for a week or ten days.

Tip: Please chop the veggies by hand rather than with a food processor. It mashes too much and the “chunky” feeling is missed. Use the left over core of the tomato for other cooking like making rasam etc.

என்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு அருமையான பகிர்வினை அனுப்பி கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி, மிக்க மகிழ்ச்சி தோழி.

பகிர்வு முழுவதும் ஆங்கிலத்தில் அனுப்பப் பட்டிருந்தது, நான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

மீண்டும் அடுத்த வாரம் ஒரு அருமையான அசத்தலான பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். பார்வையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

16 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் தோழியைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. அருமையான குறிப்புக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி...

திருமதி சிவகாமசுந்தரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

அமுதா கிருஷ்ணா said...

இந்த ஃபேஸ்புக்கால் எத்தனை பழைய உறவுகளை புதிப்பித்து கொள்ள முடிகிறது.இந்த அவகோடா பற்றி இணையம் மூலம் தான் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்கவில் நிறைய சாப்பிடுவார்கள் போல். உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்.

Princy Vinoth said...

Very nice dip and lovely guest post Asiya akka.

Snow White said...

அவகாடோ டிப் ரொம்ப நல்லா இருக்கு ...படங்கள் அனைத்தும் அழகு..

Menaga sathia said...

தங்கள் தோழியை பற்றி அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சிக்கா..

நல்லதொரு குறிப்பு தந்த அவருக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!...

கோமதி அரசு said...

அமெரிக்கா போய் இருந்த போது மருமகள் அவகோடாவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள செய்து இருந்தாள்.
புதுமாதிரி இருக்கே என்று கேட்டுக் கொண்டு இருந்தேன்.
அமெரிக்காவில் வாழும் உங்கள் தோழி திருமதி சிவகாமசுந்தரி அவர்கள் அவகோடாவில் எளிதான சமையல் செய்து அசத்தி விட்டார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உணவை பற்றி அவர்கள் சொன்ன வாக்கியங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.

Saratha said...

உங்களுடைய தோழி பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.பழைய உறவுகளை புதுப்பித்து தந்த பேஸ்புக்கை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கு!!உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Sivagamasundhari Sikamani said...

அருமையான மொழி பெயர்ப்பு ஆசியா....அதுவும் பனிரண்டு மணி நேரத்தில். எல்லோருடைய கருத்துக்களுக்கும் நன்றி. இங்கு in all get together பரிமாறப்படும் Dish . செய்து பாருங்கள்.
சிவகாமசுந்தரி

Sivagamasundhari Sikamani said...

அருமையான மொழிபெயர்ப்பு ஆசியா, அதுவும் 12 மணி நேரத்தில். வரும் ஞாயிறு இங்கு (வட அமெரிக்காவில்) கால் பந்து (Super Bowl) பார்பதற்கு சரியான உணவு. எல்லோருடைய கருத்துக்கள்/வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. செய்து பாருங்கள், .... கட்டாயம் விரும்புவீர்கள்.
சிவகாமசுந்தரி

ADHI VENKAT said...

தங்களுடைய தோழிக்கு பாராட்டுகள்.எளிமையான அதே சமயம் சத்தான குறிப்பாக கொடுத்துள்ளார்...

ஜெயஸ்ரீ, சிவஸ்ரீ பெயர்கள் அழகாக தேர்வு செய்துள்ளார்கள்..

Jaleela Kamal said...

மிக அருமையான பகிர்வு, குறிப்பும் மிக அருமை. மடிசாரில் சிவகாம சுந்ததி கலக்கல்.
உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் பாராட்டுகக்ள்

vanathy said...

Very good recipe.

Asiya Omar said...

வருகை புரிந்து வாழ்த்து தெரிவித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan said...

உங்க தோழி மற்றும் அவர் கொடுத்த சமையல் குறிப்பு ரெண்டுமே அற்புதம் பா :)

ஸாதிகா said...

அருமையான அறிமுகத்துடன் வித்த்யாசமான ரெசிப்பி