Tuesday, January 28, 2014

மிளகு கறி / பொரிச்ச கறி - Pepper mutton / Mutton Fry

எங்க ஊர் பக்கம் பொரிச்ச கறி, மிளகுக் கறி சூப்பராக இருக்கும். இதனுடன் கட்டிப் பருப்பு, ரசம், அப்பளம், சுடு சோறு அமர்க்களமாக இருக்கும். 
இனி ஈசியாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.இந்த வார தமிழர் சமையலுக்கு (TST Event) இந்தக் குறிப்பைத் தான் இணைக்கப் போகிறேன்.

பொரிச்ச கறி:
 இஞ்சி பூண்டு அரைக்கும் பொழுது அதனுடன் ஏலம்,பட்டை கிராம்பும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வது வழக்கம். கொஞ்சமாக அப்ப அப்ப அரைத்து எடுத்துக் கொள்வோம்.நானே நிறைய தடவை அம்மியில் இருந்து அரைத்துக் கொடுத்திருக்கிறேன்.இப்ப மிக்ஸி,ஃப்ரிட்ஜ் என்று வந்துவிட்டதால் இஞ்சி பூண்டு பேஸ்ட் தனி, கரம் மசாலா தனியாக பொடித்து வைத்துக் கொள்கிறோம்.

இந்த இரண்டு குறிப்பும் செய்ய இஞ்சி பூண்டு அரவை தேவை.
50 கிராம் இஞ்சி பூண்டிற்கு சிறிய 2 ஏலக்காய் 2 கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டையை முதலில் அம்மியில் நுணுக்கிக் கொண்டு அதனோடு தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி பூண்டை அம்மியில் வைத்து தட்டி விழுதாக அரைத்து எடுக்க வேண்டும். அன்றைய தேவைக்கு அன்று அரைத்து இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

பொரிச்ச கறி:

தேவையான பொருட்கள்;
மட்டன் அல்லது பீஃப் - கால் கிலோ
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் - 1 டீஸ்பூன்
விரும்பினால் - 1 டீஸ்பூன் தயிர்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை 1 இணுக்கு( விரும்பினால்)
உப்பு  -தேவைக்கு.
( இஞ்சி பூண்டு பேஸ்ட் தனியாகவும்,ஏலம் பட்டை கிராம்பு தூள் தனியாகவும் இருந்தால் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1பெரிய  பின்ச் கரம் மசாலா சேர்க்கவும்)

செய்முறை:

மட்டன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.அதனுடன் சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.விரும்பினால் 1 டீஸ்பூன் தயிரும் சேர்த்து நன்கு விரவி சிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் கால் கப் தண்ணீர் சேர்த்து 4- 5 விசில் வைத்து கறி வெந்து எடுக்கவும்.

 கறியில்  தண்ணீர் ஊறும்.கறி வெந்து இப்படியிருக்கும்
 தண்ணீர் வற்ற வைக்கவும்.
 ஒரு பேனில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்த கறியை போட்டு நெருப்பை சிம்மில் வைத்து பிரட்டவும்.


 அழகுக்கும் மணத்திற்கும் கருவேப்பிலை சேர்க்கலாம்.
 நன்கு பிரட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

சுவையான பொரிச்ச கறி ரெடி.

அடுத்து பார்க்கப் போவது;-
மிளகு கறி:
மட்டன் - கால் கிலோ
நல்ல எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
அரைக்க:
மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சிறிய வெங்காயம் - 1
சிறிய தக்காளியில் பாதி
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரைக்க கொடுத்தவற்றை அரைத்து எடுக்கவும்.ஒரு சிலர் மிளகை சிறிது குறைத்துக் கொண்டு ஒரு சிறிய மிளகாய் வற்றலையும் உடன் வைத்து அரைப்பதுண்டு.
குக்கரில் எண்ணெய்  விடவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.பிரட்டவும். சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த கறியை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்க வேண்டும்.நன்கு பிரட்டி விடவும்.
அரைத்த மசால் சேர்க்கவும். பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் மீடியம் ப்லேமில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் திறந்து அடுப்பை திரும்ப பற்ற வைத்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து வரவும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான மிளகுக்கறி ரெடி.உப்பு அளவாய் சேர்க்கவும்.இல்லாவிடில் கடுத்த மாதிரி ஆகிவிடும்.


வெறும் சோறு கட்டிப் பருப்பு,ரசம் அப்பளத்துடன் பரிமாறவும்.
நாங்க பள்ளி செல்லும் காலங்களில் எங்களுக்கு பருப்பு சோறு, ரசம் சோறு அல்லது தயிர் சோற்றுடன் இந்தக் கறியும் இருக்கும்.
இது எங்க ஊர் செய்முறை, உங்க முறைப்படி மசாலா சேர்த்தும்  இந்த எளிய முறையில் செய்து பார்க்கலாம்.

அடுத்து இந்த மிளகுக்கறியை எப்படி வெஜ்ஜில் செய்து அசத்துவதுன்னு என் வெஜ் பிரியர்களுக்குச் சொல்லித்  தருகிறேன்.

10 comments:

Menaga sathia said...

2 குறிப்புகளுமே அருமை...மிளகு கறி நல்ல காரசாரமா இருக்கு!!

Shama Nagarajan said...

delicious ...

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டுமே அட்டகாசம்... நன்றி சகோதரி... வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

போட்டோவே பசியை தூண்டுதே மேடம்...!

Snow White said...

அற்புதமான குறிப்புகள் ... பார்க்கவே அருமையா இருக்கு அக்கா ...

Asiya Omar said...

மேனகா கருத்திற்கு நன்றி.எல்லோருமே உங்க சமையல் சப்பென்று இருக்கு என்று சொன்னதால் கொஞ்சம் காரம் அதிகம் கொடுப்பது வழக்கம்.ஆனால் எங்க வீட்டில் காரம் குறைத்து தான் போடுவேன்.

மிக்க நன்றி ஷாமா.

Asiya Omar said...

தனபாலன் சார் தொடர் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

நாஞ்சில் மனோ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஸ்நோ ஒயிட் நலமா? கருத்திற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

R. Mani said...

அக்கா,மிளகுக்கறியை வெஜ்ஜில் எப்படி செய்துவது என்று சொல்லித் தருகிறேன்னு சொன்னிங்க,எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
நன்றி அக்கா.

Asiya Omar said...

மணி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
http://asiyaomar.blogspot.ae/2014/01/plantain-pepper-curry.html
வாழைக்காய் மிளகு கறி தான் அது. எப்பவோ கொடுத்து விட்டேனே. சைட் பாரில் இருக்கும் வாழைப்பூ, வாழைக்காயை கிளிக் செய்து பாருங்க. அதன் கீழ் இந்த ரெசிப்பி காணப்படும்.