Friday, February 28, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 16- திருமதி ஆதி வெங்கட் - பனீர் பராட்டா - Guest Post / Paneer Parota

திருமதி ஆதி வெங்கட் இவங்களிடமிருந்து சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்வதாய் மெயில் வந்த பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவங்களோட வலைப்பூவிற்கு நான் செல்வதும் அவர்கள் என் வலைப்பூவிற்கு வருவதுமாய் ஒரு நல்ல புரிந்துணர்வுடன் கூடிய பழக்கம். ஆதியின் கோவை2தில்லி வலைப்பூவிற்குச் சென்றால் ஒரு பத்திரிக்கையை திறந்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றும். பொழுது போக்காக பயனுள்ள பல விஷயங்களை அங்கு காணலாம், வாசிக்கலாம். நீங்களே போய் பாருங்க, அப்ப புரிஞ்சிப்பீங்க.


திருமதி ஆதி அவர்கள் அனுப்பிய சுய அறிமுகம்:-
சிவகங்கையில் பிறந்து, கோவையில் வளர்ந்து, திருமணமாகி தில்லியில் பத்து வருடங்கள் வாழ்க்கை. தற்போது புகுந்த வீட்டினருடன் திருவரங்கத்தில் வசிக்கிறேன். படித்தது இயந்திரவியல் துறையில் டிப்ளமோ. திருமணத்திற்கு முன்பு வரை வேலை பார்த்த அனுபவங்கள் உண்டு. அம்மாவிடமும், மாமியாரிடமும் கற்றுக் கொண்ட பாரம்பரிய சமையலும், தில்லி சென்ற பின் கணவரிடமும், அங்குள்ள தோழிகளிடமும் கற்றுக் கொண்ட வட இந்திய சமையலும் இதுவரை கை கொடுக்கிறது. 

இது என் மகளின் ஓவியம். தில்லியில் உள்ள எங்கள் நண்பரின் மகள், நாங்கள் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்த போது பத்து நிமிடத்தில் இதை பெரிய பேப்பர் ஒன்றில் வரைந்து கொடுத்தாள். அதை புகைப்படமெடுத்து தான் தற்சமயம் என் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளேன். 

கோவை2தில்லி என்பது என்னுடைய வலைத்தளம்.  இந்தியத் தலைநகரில் மத்திய அரசின் பணியில் சேவை செய்யும் என் கணவர், வெங்கட் நாகராஜ் என்று தன்னுடைய பெயரிலேயே வலைத்தளம் வைத்துள்ளார். என்னவரின் ஊக்குவிப்பால் தான் நான்கு வருடங்களாக வலையுலகில் உலா வருகிறேன். மூன்றாம் வகுப்பு படிக்கும் எங்கள் மகளுக்கும் ஒருவலைப்பூ உள்ளது. அதில் அவளது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

ஆதியின் அன்பான  மெயில் வாசகங்கள் ;

நீண்ட நாட்களாக தங்களது சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அம்மா, மாமியார் போன்றோரிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய சமையலும், வட இந்திய உணவுகள் மட்டுமே தெரிந்த எனக்கு புதிது புதிதாக சமைக்கும் தங்களைப் போன்றோர் முன் என்னுடைய குறிப்பை பகிர்வதில் சற்று தயக்கமாக இருந்தது. நேரமும் கிடைக்கவில்லை..

தங்களின் தளத்தில் பகிரும் சைவ குறிப்புகளுக்கு நானும் ஒரு ரசிகை. படிப்படியான செய்முறை குறிப்புகளை படங்களோடு பகிர்வதை பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கும். எப்படி நிதானமாக செய்ய முடிகிறது என்று. நான் வழக்கமாக செய்யும் சமையலில் தங்கள் தளத்தில் தந்திருக்கும் குறிப்புகளில் ஒத்து வருபவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதுண்டு. டிப்ஸ்களும் உபயோகமானவை.
நான்காம் ஆண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல பல குறிப்புகளையும், பகிர்வுகளையும் தாருங்கள். வாய்ப்பு தந்த தங்களுக்கு என் நன்றிகள்.

அருமையான சுயறிமுகம், அசத்தலான ப்ரஃபைல் பிக்சர். எனக்கு அனுப்பிய அன்பான மெயில் . ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
நல்வாழ்த்துக்கள் ஆதி. 

நான் ஆதியிடம் நம் தலைநகர் தில்லி ஸ்பெஷலாக ஒரு குறிப்பு அனுப்பி வையுங்கன்னு மெயில் செய்தேன். அதற்குத் தக்க உடனே இலகுவாக செய்யக் கூடிய சத்தான குறிப்பை அனுப்பி தந்தாங்க. மிக்க நன்றிபா.

திருமதி ஆதியின் விருந்தினர் பகிர்வு இதோ !

பனீர் பராட்டா

நான்கு வருடங்களாக பதிவுலகில் எனக்குத் தெரிந்த விஷயங்களையும், அனுபவங்களையும், சமையலையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நட்புகளிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சமையலை பொறுத்த வரை தற்போது மகளின் விருப்பம் தான். அவளுக்கு வட இந்திய உணவுகளில் தான் விருப்பம் அதிகம். இந்த பனீர் பராட்டா அவளுக்கு பிடித்ததில் ஒன்று. கணவர் எப்படியிருந்தாலும் சாப்பிட்டு விடுவார். குறை சொல்லும் பழக்கம் அவரிடம் இருந்ததில்லை. காரம் மட்டும் ஆகாது. முகத்தை பார்த்தே அதை தெரிந்து கொண்டு விடுவேன்....:))

வட இந்திய உணவுகளில் பனீருக்கு ஒரு சிறப்பான பங்கு இருக்கிறது. பாலை திரித்து தயாரிக்கப்படும் பனீரில் நம் உடலுக்கு தேவையான நல்ல பல சத்துகள் உள்ளன. பனீரை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் சப்ஜிகளில் பயன்படுத்துவார்கள். பிரபலமான பனீர் சப்ஜிகள் – பாலக் பனீர், மட்டர் பனீர், கடாய் பனீர், ஷாஹி பனீர் போன்றவை. ஆனால் அந்த பனீரை பயன்படுத்தி பராட்டா செய்வதை இன்று பார்க்கலாம். செய்வது மிகவும் எளிது.


தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு – 2 கப்
துருவிய பனீர் – 1 கப்
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
சீரகத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-
கோதுமை மாவை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவாக பிசைந்து மூடி வைக்கவும். பனீரை கேரட் துருவியில் துருவியோ, அல்லது உதிர்த்துக் கொண்டோ அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இது தான் பூரணம். இதை சப்பாத்திக்கு உள்ளே ஸ்டஃப் செய்ய வேண்டும்.
எலுமிச்சையளவு உருண்டைகளாக சப்பாத்தி மாவை உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து மாவைத் தொட்டுக் கொண்டு உள்ளங்கையளவு திரட்டி உள்ளே 1 தேக்கரண்டியளவு பனீர் கலவையை வைத்து மூடி மெலிதாக திரட்டிக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும். பனீர் பராட்டா தயார்.
 
ஊறுகாய், மற்றும் தயிருடன் சுவையான பனீர் பராட்டா ஜோராக இருக்கும். இதே போல் சீஸ் பராட்டாவும் செய்யலாம்.


என்னோட ஸ்பெஷல் பாலக் பனீர் குறிப்பை யும் உங்களிடம் பகிர விரும்புகிறேன். சமைக்க, ருசிக்க குறிப்பை கிளிக்கவும்.


நட்புடன்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.

திருமதி ஆதியின் பயனுள்ள பல டிப்ஸ்:
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டிருந்தால்  கோதுமை மாவை வாணலியில் போட்டு வறுத்து, துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். நல்லதொரு பயன் தரும்.

இருமலுக்கு மிளகும் சர்க்கரையும் சரி பாதியாக எடுத்துக் கொண்டு மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொண்டால், சிறிதளவு பொடியுடன் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் இரண்டு மூன்று நாட்களிலேயே சரியாகி விடும்.

வேர்க்கடலையின்  தோல் நீக்க - துணிப்பையில் கடலையைப் போட்டு நுனியை பிடித்துக் கொண்டு தரையில் அல்லது மேடையில் இரண்டு மூன்று தரம் அடித்தால் தோல் நீங்கியிருக்கும்.

இவையெல்லாமே என் மாமியார் சொல்லி அன்றாடம் நான் கடைபிடிப்பவை.

தேங்காயைத் துருவி பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைத்து விட்டால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். காலையில் எழுந்ததும் எடுத்து வெளியே வைத்து விட்டால் சமையலில் சேர்க்கும் போது சரியான தட்பவெப்பநிலைக்கு வந்து விடும்.

துவரம்பருப்பு வேகப் போடும் போது சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவிட்டால் குழைய வெந்து விடும். இது தில்லியில் இருந்தவரை நான் உபயோகித்த வழிமுறை.

காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.


மற்றும் என்னுடைய பதிவில் உள்ள கை வைத்தியங்கள் - 

சூப்பர் கஷாயம் - http://kovai2delhi.blogspot.in/2012/10/blog-post_10.html

கண்டந்திப்பிலி ரசம் - http://kovai2delhi.blogspot.in/2011/09/blog-post_12.html

கை வைத்தியங்கள் - http://kovai2delhi.blogspot.in/2011/04/2.html


அவசரத்துக்கு கை வைத்தியங்கள் - http://kovai2delhi.blogspot.in/2011/02/blog-post.html

மிக்க மகிழ்ச்சி ஆதி. நீங்களும் கலந்து கொண்டு இந்த சிறப்பு விருந்தினர் பகிர்வை கௌரவித்தமைக்கு  மனமார்ந்த நன்றி. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த வாரம் அசத்தலான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


Wednesday, February 26, 2014

மஞ்சள் அடை / Manjal Adai

கீழக்கரை ஸ்பெஷலான இந்த வித்தியாசமான மஞ்சள் அடையை நீங்களும் செய்து பாருங்க. சூப்பர் மணம்,ருசி.தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப் 
முட்டை - 1
தேங்காய்ப்பால் - 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது
மல்லி இலை - சிறிது
உப்பு , எண்ணெய் - தேவைக்கு


அரைக்க:

தேங்காய்த்துருவல் - :2 டேபிள் ஸ்பூன்
சோம்பு- 1 டேபிள்ஸ்பூன் ( உங்க ருசிக்கு தக்க)

மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்


செய்முறை:

தேங்காய்த்துருவலுடன் மஞ்சள் தூள் உப்பு சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

தேங்காய்ப்பாலில் உப்பு முட்டை சேர்த்து கலக்கி அரிசி மாவை சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.

அரைத்த விழுது மற்றும் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் மல்லி இலை அனைத்தையும் மாவுடன் நேர்த்து சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மாவின் பதம் இட்லிமாவு பதத்தில் இருக்க வேண்டும்.

தவாவில் எண்ணெய் விட்டு குழிக்கரண்டியால் அடையாக ஊற்றவும்

மேற்புறம் முறுகலானதும் திருப்பிப்போடவும்.


எடுத்து சூடாகப் பரிமாறவும்.

சுவையான மஞ்சள் அடையை குருமா,கிரேவியுடன் பரிமாறலாம்.

கீழக்கரையில் பிரபலமான உணவு.பெருநாள் தினங்கள்,புது மாப்பிள்ளைக்கு விருந்து என்றால் கண்டிப்பாக மஞ்சள் அடை இடம் பெற்று விடும்.

இக்குறிப்பை முகநூல் பக்கம் கீழை விருந்தில் பார்த்து செய்தேன்.அருமையாக இருந்தது. 
நன்றி கீழை விருந்து.

Tuesday, February 25, 2014

கம்பு இட்லி & அடை / வெங்காய சட்னி - Pearl Millet / Bajra Idli & Adai / Onion Chutney.

ஒரு நாள் என் தோழி உமாவுடன்   வாக்கிங் செல்லும் பொழுது இன்று என்ன டிஃபன் உங்க வீட்டில் என்று கேட்டதில்  அவங்க கம்பு இட்லின்னாங்க, ஆஹா அல் அயினில் கம்பு எங்கே கிடைக்கும்னு பார்த்தோம், பறவைகள் உணவுப்பகுதியை போய் பாருங்கன்னு சொன்னாங்க, அங்கே இல்லை சரின்னு என் கம்பு ஆசையை விட்டு விட்டேன், எங்க வேளாண் கல்லூரி விடுதிப்  பக்கம் தான் இந்த சிறு தானியங்கள் பயிரிடும் வயல்வெளிகள் , அங்கு தான் மாலை நேரம் அமர்ந்து படிப்போம், அப்பக் கூட இதை ருசிக்கனும்னு தோணலை.

தோழி உமா துபாய் சென்ற சமயம் எனக்கு நான் ஆசைப்பட்ட சில தானியங்களை வாங்கி வந்தாங்க, சரின்னு ரெசிப்பியையும் கேட்டேன், உமா மல்லிகா பத்ரிநாத் புத்தகம் பார்த்து செய்ததாக  ரெசிப்பி சொன்னங்க.அதன் படி உங்களுடன் பகிர்கிறேன்.

என் கணவரிடம் இன்று கம்பு இட்லி. உமா, கம்பு வாங்கி வந்தாங்கன்னு சொன்னேன், அட ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மூடை மூடையாக நாங்க கடலூரில் ஸ்டாக் வைத்து ஒரு மூடை வெறும் நூறு ருபாய்க்கு விற்று இருக்கிறோம், இப்ப துபாய் போய் வாங்கி வந்து சமைச்சு சாப்பிடப் போறோம், அப்பல்லாம் கம்பு நாம் சாப்பிடலாம்னு தோணினது கூட இல்லை கோழி,ஆடு மாடு உணவுன்னு நினைச்சேன் என்றார். 
நல்ல வரனுமேன்னு அவங்க சொன்ன அளவில் பாதி போட்டு செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது.அதனால் உங்களுடன் இந்தப் பகிர்வு. பக்குவமாக ஆட்டி பொங்கி வந்த பின்பு அவிக்கனும் , இதான் முக்கியம்.மற்றபடி இலகு தான்.


 தேவையான பொருட்கள்;
கம்பு - ஒரு கப் (குவித்து)
புழுங்கல் அரிசி - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
எண்ணெய் - 2 - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - கால்-அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சமையல் சோடா - கால் டீஸ்பூன் ( நான் சேர்க்க மறந்துட்டேன்)

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்.
செய்முறை:

 முதலில் கம்பு, அரிசி,பருப்பு  மூன்றையும் தனித் தனியாக எடுத்துக் கொள்ளவும்.நன்கு அலசிக் கொள்ளவும். கம்பையும் அரிசியையும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து  நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பை 1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.

 கம்பு அரிசியை சேர்த்து இட்லிக்கு அரிசி அரைப்பது போல் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக் கொள்ளவும். தேவைக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
கம்பு அரிசி மாவோடு அரைத்த பருப்பு கலவையை நன்றாக கலந்து வைக்கவும். மாவு பொங்கி வர 15 மணி நேரம் ஆகும்.


 மறு நாள் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய வைத்து கடுகு போட்டு தாளித்து  மாவில் கொட்டவும். சோடா உப்பும் சேர்த்து  மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
 இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லிக்கு மாவு வார்த்து வழக்கம் போல் அவித்து எடுக்கவும்.
ஆறியவுடன் ஸ்பூன் கொண்டு எடுத்தால் லட்டு மாதிரி சூப்பராக வந்து விடும்.
ஆரோக்கியமான சூப்பர் கம்பு இட்லி ரெடி. இதனை வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.
 என் மகளுக்கு அந்த மாவையே அடையாக சுட்டுக் கொடுத்தேன்.  சூப்பர்.
மகளை கட்டாயப் படுத்தி தான் சாப்பிட வைத்தேன்.

வெங்காய சட்னி செய்ய:
நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3  அல்லது அதிகமாக (காரம் அவரவர் விருப்பம்)
சிறிய தக்காளி - 1
புளி - புளிக் கொட்டையளவு
உப்பு - தேவைக்கு
நல்ல எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்.

முதலில் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் வெங்காயம், தக்காளி சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,ஆற விட்டு  புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். விரும்பினால் சிறிது நல்ல எண்ணெய் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
கம்பு இடலி அடைக்கு சூப்பர் காம்பினேஷன்.
உங்களுக்கு கம்பு கிடைத்து பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.
இந்தளவு மாவில் 8 இட்லி, 4 அடை சுடலாம்.
ஒரு இட்லி அல்லது அடை  கிட்டதட்ட 100 கலோரி.


இந்த வார நளினியின் தமிழர் சமையல் செவ்வாய் இவெண்ட்டிற்கு ( TST) இக்குறிப்பை அனுப்புகிறேன். மற்றும் இதனை  Gayathri's Walk through memory lane  @ Motions and Emotions அனுப்புகிறேன்.

Monday, February 24, 2014

காயல்பட்டினம் கீரைப்பொடி / Kayalpatnam Keerai Podi.

ஊரில் இருந்து கொண்டு வந்த மாசி நீண்ட நாட்கள் உபயோகிக்காமல் இருந்தது, இந்த கீரைப்பொடி பற்றி தெரிந்ததும் உடனே திரித்து வைத்தேன்.எங்கள் ஊரில் வெறும் வற்றல்,உப்பு சேர்த்து பொடித்து வைத்து தான் உபயோகிப்போம், இதில்  மல்லி,சோம்பு,வற்றல் என்று சேரும் பொழுது தனிமணமும் சுவையும் கிடைத்தது.

தேவையான பொருட்கள்;-

மாசி - 150 கிராம்

வத்தல்- 20 ( காரம் அவரவர் விருப்பம்)

கொத்தமல்லி- 25 கிராம்

பெருஞ்சீரகம் - 20 கிராம் 

உப்பு - சிறிது தேவைக்கு.

 இவையனைத்தையும் கறுத்துவிடாமல் வெறும் சட்டியில் வறுத்து கொள்ளவும்.மாசியை முதலில் உரலில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

 பின்பு மாசி உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்  அல்லது உரலில் போட்டும் இடித்தும் வைக்கலாம்.
 அரைத்த பின்பு ஒரு பேப்பரில் தட்டி ஆற விடவும்.
 பின்பு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து தேவைக்கு ஒரிரு ஸ்பூன் பயன்படுத்தவும்.

இது ஆறுமாதம் வரை கொடாமல் இருக்கும். காற்று புகாத டப்பாவில் 
அடைத்து உபயோகிக்கவும். கீரை, பொரியல்(கேரட்,பீன்ஸ், பீட்ரூட், 
முட்டைக் கோஸ்,வெண்டைக்காய்,பீர்க்கங்காய்,முள்ளங்கி)  செய்யும் 
பொழுது  இதை கடைசியில் சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும்.
இது சேர்ப்பதால் நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.மாசி 
விரும்பாதோர் அதை சேர்க்காமல் இந்த பொடியை தயார் செய்து 
கொள்ளலாம். வடை, பக்கோடா, வாடா , பெட்டீஸ் செய்யும் பொழுதும் 
மணத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.மாசிச் சம்பல்,மாசியாணத்திற்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.
இந்த ரெசிப்பியை காயல்பட்டினம் சமையல் தளம் பார்த்து செய்தேன்.முகநூல் பக்கத்திலும் குறிப்புகள் பகிர்ந்து வராங்க.
இது தோழி செய்யது கதீஜாவின் குறிப்பு. மிக்க நன்றி.

பின் குறிப்பு:
மாசி என்று பலசரக்கு கடையில் கேட்டால் கிடைக்கும். 
மாசி பற்றி அறிய இங்கு கிளிக்கவும்.

Friday, February 21, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 15 - திருமதி ஷமீலா முபீத் - இறால் அடை / Guest Post - Prawn Adai

திருமதி ஷமீலா முபீத், சொந்த ஊர் மயிலாடுதுறை, பொறியியல் பட்டதாரி, கடந்த இரண்டரை வருடங்களாக சிங்கப்பூரில் வசிப்பதாகவும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கிறார். இவரின் வலைப்பூ ஷமீஸ்கிச்சன்  அசத்தலாக இருக்கு.
ஷமீ எனக்கு மெயில் செய்திருந்தார், அதில் இருந்த வாசகங்கள் என்னை அளவிலா  மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனலாம்.
அதனை உங்களிடம் பகிர்கிறேன்.

//உங்கள் வலைப்பூவை கடந்த ஒரு வருட காலமாக பார்வையிடுகிறேன்.
எனது விருப்ப ப்ளாக்கில் உங்களது வலைப்பூவிற்குத்  தான் முதலிடம்.
புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.உண்மையாகத்  தான் சொல்கிறேன்.
சமீப காலமாக உங்கள் குறிப்புகளுக்கு ஷமீ என்ற பெயரில் கருத்துக்களும் கூறி இருப்பேன்.இணையத்தில் வரும் புதுவிதமான சமையல்களை முயற்சித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அதே சமயம் எங்கள் ஊர் உணவு வகைகளும் விரும்பி செய்வேன்.
நான் shameeskitchen.blogspot.com என்ற பெயரில் ப்ளாக்கில் எழுதி வருகிறேன்.
உங்கள் சிறப்பு விருந்தினர் பகிர்வில் பங்கேற்க விரும்புகின்றேன்.
அதற்காக இறால் அடை குறிப்பு அனுப்பியுள்ளேன்.//

அன்பான மெயிலிற்கு மனமார்ந்த நன்றி. மகிழ்ச்சி.


ஷமீலா தன் சித்தி மகன் மாசின் புகைப்படத்தை ப்ரஃபைல் படமாக அனுப்பியுள்ளார். நல்வாழ்த்துக்கள். 

இன்று ஷமீ நம்முடன் பகிரப் போகும் குறிப்பு.

இறால் அடை :
 தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கப் 
அரிசி மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
முட்டை - 1
துருவிய தேங்காய் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- 1/4 கப் அல்லது தேவைக்கு.

செய்முறை:

வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும்  நறுக்கி கொள்ளவும்.இறாலை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.தேங்காய் துருவி வைக்கவும்..

வெங்காயம் , பச்சை மிளகாய் , தேங்காய், முட்டை, உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி  இறாலுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள்  தூள்,மிளகாய் தூள் ,சிறிது உப்பு சேர்த்து பிரட்டி 5 நிமிடம் வேக விடவும்.
 அரிசி மாவில் இறால் கலவை, அரைத்த விழுது,பெருஞ்சீரக தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறி கொள்ளவும்.

 இதனை 1/2 மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ஒரு உருண்டை மாவு எடுத்து கல்லில் அடை போல் தட்டவும். சுற்றிலும்  எண்ணெய் விட்டு மூடி போட்டு வேக விடவும். அடையை திருப்பி போட்டு 1  ஸ்பூன்   எண்ணெய்  விடவும். அடை வெந்ததும் எடுக்கவும்.

வெங்காயம் ,மிளகாய் அரைக்காமல் பொடியாக நறுக்கியும் மாவில் கலந்து செய்யலாம்.
ருசியான இறால் அடை தயார்.
இதனை சும்மாவே சாப்பிடலாம். இதற்கு குருமா அல்லது கார சட்னி சுவையாக இருக்கும்.

இறாலே மணமாக இருக்கும்,அத்துடன் ருசிக்கு முட்டை மற்றும் பல பொருட்கள்  சேரும் பொழுது சுவையை கேட்க வேண்டுமா? இந்த வித்தியாசமான அடையை நீங்களும் செய்து பாருங்க.

ஷமீலா கலந்துரையாடலில் பங்கு கொண்டதால் இதோ அந்தப் பகிர்வு.
1.தங்களுடைய சுயறிமுகம்தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள்.


எனது பெயர் ஷமீலா முபீத்.எனது சொந்த ஊர் மயிலாடுதுறை.பொறியியல் பட்டதாரி.
திருமணத்திற்கு பின் 2.5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசிக்கிறேன்.என்னுடைய கணவர் பெயர் முபீத்.
கணிப்பொறி துறையில் பணியாற்றுகிறார்.எங்களுக்கு மணமாகி 3 வருடங்கள் ஆகிறது.குழந்தைக்காக காத்திருக்கிறோம்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

எனக்கு புதுவிதமான சமையல்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம்.இணையத்தில் படிப்பதை வைத்து முயற்சி செய்து பார்ப்பேன்.

எனக்கு மெஹந்தி போடுவதில் மிகவும் விருப்பம் உண்டு.

திருமணத்திற்கு முன்பு வரை வரைவதில் ஆர்வம் உண்டு.இப்பொழுது நேரமின்மையால் வரைய முடிவதில்லை.


2. தங்களுக்கு எத்தனை வருட சமையல் அனுபவம்தங்கள் அனுபவத்தில் ஏதாவது சுவாரசியமான நிகழ்வுகள்.

எனக்கு சமையல் அனுபவம் 6 வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.ஆனால் முழு நேரமாக சமைப்பது 3 வருடங்களாகத் தான்.
சுவாரசியமான நிகழ்வு என்றால் என் உறவினர் குடும்பத்தை விருந்துக்கு அழைத்திருந்தோம்.பிரியாணிக்கான குருமா தயார் செய்துக் கொண்டு இருந்தேன்.எனக்கு உதவி செய்கிறேன் என்று என் கணவர் பிரியாணிக்கான அரிசியை உப்பு சேர்க்காமல் தயார் செய்து வைத்து விட்டார்கள்.கணவர் வழி உறவு வேறு.
கடைசி சமயத்தில் குருமாவில் இரண்டு பங்கு உப்பு சேர்த்து ஒரு வழியாக ஒப்பேற்றினேன்.
கடைசியில் அன்றைய விருந்து பெரிய ஹிட்.
மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

3..தங்கள் சமையலில் தங்கள் வீட்டினர் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகள் மற்றும் பிடிக்காத உணவு என்றால் எதை எல்லாம் குறிப்பிடுவீர்கள்.

நான் தயார் செய்யும் சிக்கன் பிரியாணி, பொறிச்ச கறி,முர்தபா, தால்ச்சா,நண்டு குருமா எல்லாம் என் தந்தை , கணவர் இருவருக்கும் மிகவும் விருப்பமான உணவுகள்.

பிடிக்காத உணவு என்று எதுவும் இல்லை.

4. சிங்கப்பூரில் வசிப்பதால் இந்தக் கேள்வி, அந்தாட்டின் சிறப்பம்சங்களாக  நீங்கள் கருதுவது, ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தாலும் பகிரலாம்.

சிங்கப்பூரின் சிறப்பம்சமாக நான் கருதுவது பெண்களுக்கான பாதுகாப்பு.இங்கு இரவு 12 மணிக்கு கூட வேலைக்கு சென்று விட்டு பெண்கள் தனியாக செல்லலாம்.எந்த பயமும் இருக்காது.
அதற்கு அடுத்த விஷயம் இங்கு எந்த இடத்திலும் லஞ்சம் என்ற பேச்சிற்க்கே இடமில்லை.அனைவரும் விதிகளை மதித்து நடப்பது மிகவும் பிடித்தமானது.

5. தாங்கள் வேலைக்கு செல்லும் பொழுது என்றாவது நாம் இல்லத்தரசியாகவே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்ததுண்டா? எதனால் ?

படித்த கல்வியை வீணாக்காமல் வேலைக்கு செல்வதில் எனக்கு மகிழ்ச்சி தான்.ஒரு பொழுதும் அப்படி ஓர் எண்ணம் வந்ததே இல்லை.

கடந்த 1 மாதம் வேலை மாறும் பொருட்டு வீட்டில் தங்க நேர்ந்த பொழுது தான் சிரமமாக இருந்தது.

வேலைக்கு செல்வதால் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதே எனது கருத்து.

6. வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்வீர்களா? உங்கள் கணவர் எந்தெந்த வேலைகளில் உதவி செய்வார்?
வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வோம்.வீடு சுத்தம் செய்யும் வேலைகளில் உதவி செய்வார்.
வாரத்துக்கு தேவையான காய்கறிகள், அசைவ உணவு , சமையல் பொருட்கள் வாங்கும் பொழுது என் கணவரும் உடன் வருவது வழக்கம்.
அவருக்கு வேலை அதிகமாக இருக்கும் பொழுதும் தொந்தரவு இல்லாமல் இவற்றை நானே கவனிப்பதும் உண்டு.

7. ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தால் உங்கள் மெனுவில் இடம் பெறும் உணவு வகைகள் குறைந்தது ஏழு அயிட்டம்) இதில் சைவம் அசைவம் இருசாராரையும் கருத்தில் கொள்ளவும்.

நான் அதிகம் விருந்துகளுக்கு அசைவ உணவு வகைகளை செய்து தான் பழக்கம்.இருந்தாலும் எனக்கு தெரிந்தை சொல்கிறேன்.
சைவம்
ஹாட் & சோர் சூப்
வெஜிடபிள் பிரியாணி/வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்
நாண்
பனீர் மசாலா / பீஸ் மசாலா
கோபி மஞ்சூரியன்
சில்லி பராட்டா / ஆலூ பராட்டா
மஷ்ரூம் நூடுல்ஸ்
குலோப் ஜாமூன் / கேரட் அல்வா
ஐஸ்கிரீம்

அசைவம் (இது 2 மாதங்களுக்கு முன்னர் நான் என் விருந்தினருக்காக செய்த மெனு)
சிக்கன் சூப்
மட்டன் பிரியாணி
சிக்கன் 65
தால்ச்சா
மட்டன் ஃப்ரை / பெப்பர் சிக்கன்
முட்டை
தக்காளி / பைனாப்பிள் பச்சடி (இனிப்பு)
வெண்டைக்காய் / கத்திரிக்காய் பச்சடி (புளிப்பு)
ப்ரூட் கஸ்டர்ட்
ஐஸ்க்ரீம்

8. நான் சிங்கை வந்திருந்த சமயம் அங்கே பார்த்து வியந்தது அங்குள்ள உடை மற்றும் உணவு கலாச்சாரம். இதைப் பற்றிய உங்கள் கருத்து.

சிங்கப்பூரில் சைனீஸ் ,மலாய் ,தமிழ் மக்கள் கலந்து வசிக்கிறார்கள்.
உணவு விஷயத்தை பொறுத்தவரையில் அனைத்து தரப்பினரும் எல்லா உணவையும் விரும்புகின்றனர். தமிழ் உணவு விற்கப்படும் ஃபுட் கோர்ட்டில் சைனீஸ்மக்கள் விரும்பி வாங்குவார்கள்.
இங்கு அனைத்து உணவு பொருட்களிலும் ஹலால் சின்னம் இருப்பதால் நாம் பயமின்றி வாங்கலாம்.
உடை விஷயத்தில் மலாய் மக்களின் உடைகள் மிகுந்த அழகாகவும் , கண்ணியமாகவும் இருக்கும்..தமிழர்கள் நம் வழக்கப்படியும், சீன மக்கள் அவர்கள் விருப்பபடியும் உடை அணிகிறார்கள்.

9. தாங்கள் வலைப்பூ ஆரம்பித்து குறிப்புகள் அவ்வளவாக பகிரப்படவில்லையே !

நான் இந்த வலைப்பூ ஆரம்பித்தது நவம்பர் மாதம் முதல் தான்.

ஒரு சில குறிப்புகள் மட்டுமே பதிவு போட்டுள்ளேன்.

என்னால் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி நிறைய குறிப்புகள் தர வேண்டும் என்பதே எனது ஆசை.10.சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள்குறிப்புகள் பற்றி  சில வரிகள்.

நான் உங்களது வலைப்பூவை கடந்த ஒரு வருட காலமாகப் பார்வையிடுகிறேன்.
சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கத்துடனும், எளிதில் செய்யகூடியதாகவும் இருக்கிறது.
இது தவிர வீடியோ குறிப்புகளும் உபயோகமானவையே.
நான் மீன் சுத்தம் செய்யும் வீடியோவை பார்த்து அதில் இருந்து நெத்திலி மீன் வாங்கி சமைக்கிறேன்.
இந்த விருந்தினர் பதிவு வர ஆரம்பித்ததிலிருந்து ஆர்வமுடன் படிக்கிறேன்.இதில் நானும் கலந்துக் கொண்டேன் என்பது உண்மையிலே என்னை போன்ற புதியவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்.
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா.

அழகான  உயரிய கருத்தாழமிக்க பதில்கள். அருமையான பாரம்பரிய குறிப்புடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள் ஷமீலா.

மீண்டும் ஒரு நல்ல சிறப்பு விருந்தினர் பகிர்வுடன் சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Thursday, February 20, 2014

மஞ்சள் பூசணி கீர் & ஹல்வா / Pumpkin Kheer & Halwa ( 2 in 1)


தேவையான பொருட்கள்;
மஞ்சள் பூசணி துருவியது - 2 கப்
பால் - கால் - அரை லிட்டர்
நெய் - 2 மேஜைக்கரண்டி அல்லது விருப்பம் போல்
பாதாம்,முந்திரி, பிஸ்தா - நறுக்கியது தலா 1 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் - 10
சாஃப்ரான் - பின்ச்
ஏலக்காய் பவுடர் - கால் டீஸ்பூன்
ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் - 200 கிராம்
அல்லது சீனி தேவைக்கு.

செய்முறை:
நல்ல நிறமான மஞ்சள் பூசணியை தோல் சீவி அலசி துண்டு செய்து துருவிக் கொள்ளவும்.


தோல் நீக்கிய  பாதான்பிஸ்தா முந்திரி பருப்பை சிறிதாக நறுக்கி வைக்கவும். சாஃப்ரானை சூடு நீரில் கரைத்து வைக்கவும்.


 ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு  துருவிய பூசணியை நன்கு வதக்கவும்.பாதி வெந்து விடும்.

 நன்கு வதங்கியவுடன் ஏலக்காய் பொடி காய்ச்சிய பால் சேர்க்கவும்.
 அத்துடன் நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்க்கவும்.அந்த பாலிலேயே சிறிது வேக வேண்டும்.


 பால் வற்றி பூசணி மற்றும் நட்ஸ் வெந்து வரும்.

ஸ்வீட்டெண்ட்  கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும். அல்லது சீனி கூட தேவைக்கு சேர்க்கலாம்.


சாஃப்ரான் கரைசல் சேர்க்கவும்.சாஃப்ரான் சேர்ப்பதால் நல்ல நிறமும் மணமும் கிடைக்கும்.

 நெய் சேர்க்கவும்.விரும்பினால் சிறிது நெய்யில் கிஸ்மிஸ் வறுத்து மேலே தூவி அலங்கரிக்கவும்.
இதை இப்படியே ஊற்றினால் பூசணி கீர். உங்களுக்கு இன்னும் லூசாக வேண்டும் என்றால் காய்ச்சிய பால் அல்லது கொதி நீர் சேர்த்துக் கொள்ளலாம்.


சுவையான பூசணி கீர் ரெடி.
அப்படியே ஒரு பவுலில் ஊற்றி பரிமாறவும்.
தேவைக்கு சின்னக் கிண்ணங்களில் ஸ்பூன் போட்டும் பரிமாறலாம்.

அதனை அப்படியே வற்ற வைத்து கிண்டி எடுத்தால் பூசணி ஹல்வா.
செமையாக இருக்கும்.


நெய் உங்கள் விருப்பம் தான்.


சுவையான பூசணி ஹல்வா ரெடி.
நீங்களும் செய்து பாருங்க.பிரியாணி செய்யும் பொழுது இனிப்பிற்கு இந்த அல்வாவோ அல்லது கீரோ செய்யலாம்.

முக்கியக் குறிப்பு:
கீர் என்றால் பால் அரை லிட்டர் அல்லது கொஞ்சம் அதிகமாகக் கூட சேர்க்கலாம். ஹல்வா போல் செய்ய பால் கால் லிட்டர் குறைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் கொஞ்சம் பால் கோவா டேஸ்ட் வந்து விடும்.
நான் இங்கு 2 இன் 1 ஆக செய்து காட்டியிருக்கிறேன்.பிடித்திருந்தால் செய்து பாருங்க.

என்னுடைய ஆங்கில ப்ளாக்கில் 
Pumpkin Kheer,
Pumpkin Poriyal,
Pumpkin soup
Pumpkin Pulao

இன்னும் பல மஞ்சள் பூசணி குறிப்புக்கள்  (கிளிக்கவும்)

மத்தங்கா புளின்கறி
மஞ்சள் பூசணி பொரியல்
மஞ்சள் பூசணி கறி
எரிசேரி - மஞ்சள் பூசணி கூட்டு

Sending this to Gayathri's Walk through memory lane happening @ Motions and Emotions.