Friday, February 7, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா கமால் - கார்ன் & பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் / Guest Post - Corn & Peas Money Bag

திருமதி ஜலீலா கமால் இவர்களை எனக்கு அறுசுவை.காம் மூலம் கிட்டதட்ட ஆறு வருடமாகத் தெரியும். எங்கள் நட்பு இன்று வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புடன் தொடர்கிறது . தமிழ் வலைப்பூ உலகில்  சமையல் என்றால் ஜலீலா, ஜலீலா என்றால் சமையல் என்ற அளவிற்கு அனைவருக்கும் பரிச்சயமானவங்க.

சமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பூவில் எண்ணற்ற சமையல் குறிப்புகள், பயனுள்ள வீட்டுக் குறிப்புகள், டிப்ஸ், குழந்தை வளர்ப்பு,துவா மற்றும் அனுபவம் எல்லாம் ஒரே இடத்தில்  பகிர்ந்து வராங்க.
சமையல் குறித்த வலைத்தளம் எங்கு இருந்தாலும் அங்கு  இவங்க குறிப்புகள் இருக்கும்.
தோழி ஜலீலாவைப் பற்றி நான் பகிர நினைத்த அனைத்தும் அவங்க சுய அறிமுகம் பகுதியில் இருக்கு. நான் இவங்களோட கடின உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். சமையலில் அவங்களோட கைப்பக்குவமே தனி. வேலைக்கும் போய்க் கொண்டு அதீத ஆர்வமாக அவங்க வலைப்பூவில்  பலருக்கும் பயன்படும் வகையில் குறிப்புகள் பகிர்ந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது, நம் அனைவர் சார்பாகவும் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜலீலா அனுப்பிய சுய அறிமுகம் :

சென்னையில் பிறந்து வளர்ந்த நான் துபாயில் வசிக்கிறேன். அன்பான கணவன் , பாசமான இரு மகன்கள்.


ஜலீலா  ப்ரஃபைல் படமாக அன்பு மகன்களின் போட்டோவை அனுப்பியிருக்காங்க. இருவரும் சகல சௌபாக்கியங்களோடு பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.

எங்க பூர்வீகம் திருநெல்வேலி தான், அம்மா சின்ன வயதிலேயே சென்னை வந்து வந்து விட்டதால் நாங்க இப்போது சென்னை வாசி. எங்க வாப்பா சில ஆண்டுகள் திண்டிவனத்தில் இருந்ததால் நாங்களும் அங்கு இருந்தோம். ஆகையால் என் சமையலில் எல்லா கலவைகளும் சேர்ந்துள்ளது. என் சமையல் பயணம் பத்து வயதில் இருந்து ஆரம்பம், சின்ன சின்ன சமையல்கள் தான் செய்து வந்தேன்.
கல்யாணம் ஆனதும் இஸ்லாமிய இல்லங்களில் அன்றாடம் செய்யும் பாரம்பரிய உணவு வகைகள் தான் எங்க வீடுகளில் செய்வார்கள். அது போல் தான் நானும் சமைத்து வந்தேன். இங்கு துபாய் வந்ததும் என் பெரிய பையனுக்கு எந்த சாப்பாடு கொடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டான். அவனுக்காகவே ஓவ்வொன்றாக வித விதமாக முயற்சிக்க ஆரம்பித்தேன் இப்போது கடந்த 23 வருடங்களாக பல சமையல் வகைகளை நானே என் விருப்பத்துக்கு மசாலாக்களை சேர்த்து செய்வது. என் சமையல் எல்லாமே குழந்தைகள் விரும்பி உண்ணுவது போல் தான் தயாரிப்பது. வீட்டுக்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்றால் வரும் குழந்தைகளுக்காக என்ன செய்யலாம் என்று தான் முதலில் யோசிப்பது.

நான் என் முயற்சியில் செய்து பார்த்த அனைத்து குறிப்புகளையும் இங்கும் (அறுசுவை.காம்) இப்போது என் சமையல் அட்டகாசங்கள் பிளாக்கரிலும் பகிர்ந்து வருகிறேன்.

கற்றது கை மண் அளவு தான் ஆனால்  கல்லாதது உலகளவு உள்ளது. என் வீட்டு இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல் வகைகளையும் அதனுடன் நான் செய்யும் புது புது வகையான சமையல்களையும் என் ஆங்கில ப்ளாக்கிலும் பகிர்ந்து வருகிறேன். 

Cookbookjaleela என்ற ஆங்கில பிளாக்கில் நேரம் கிடைக்கும் பொழுது தமிழ் பிளாக்கில் உள்ள சில பதிவுகளையும்சில ஈவண்டுகளுக்கு ஏற்ற சமையல்களும் அங்கு கொடுத்து வருகிறேன்.
முத்தான துஆக்கள் என்ற பிளாக்கில் எனக்கு தெரிந்த நான் இது வரை சேகரித்து வைத்துள்ள துஆக்களை பகிர்ந்து வருகிறேன்.

நான் வாங்கிய மறக்க முடியாத பரிசுகள்:-
இண்டி ப்ளாக்கர் மாஸ்டர் செஃப் – சமையல் போட்டியில்,  சமையல் அட்டகாசம் பிளாக் குறிப்புக்கு முதல் பரிசும்,
Cookbookjaleela  ஆங்கில பிளாக் குறிப்புக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது.

2011 நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு  
கட்டுரைகளில் நான் பெண்களுக்காக எழுதிய  ``புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் என்ற கட்டுரைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. 
நான் எழுதிய இந்த கட்டுரையை அனைத்து பெண்களும் படித்து அறிந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்கவேண்டும்.

நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் Receptionist cum Assistant Accountant  ஆக  பணி புரிந்து வருகிறேன்.

இதுவரை எங்க வாழ்க்கை சக்கரம் என்னுடைய விட்டு கொடுத்தலினாலும், என் கணவரின் பொறுமையான குணம் ஒற்றுமையினாலும் தான் ஏக வல்ல ஆண்டவனின் கிருபையால் நல்லபடியாக போய் கொண்டு இருக்கிறது, மேலும் தொடர துஆ செய்து கொள்ளுங்கள்.
சென்னையில் சென்னை ப்ளாசா   கடை  wholesale & Retail கடையை நானும் என் கணவரும் சேர்ந்து 3 வருடமாக நடத்தி வருகிறோம். சென்னை ப்ளாசா கடை வெப் சைட் ( பல பெண்கள் வீட்டில் இருந்தவாறு எங்களிடம் மொத்தமாக புர்கா வாங்கி விற்று பயனடைகின்றனர் ) சில கடைகளுக்கும் wholesale  ஆக கொடுத்து வருகிறோம்.

முன்பு பிளாக்கரே கெதி என கிடந்தேன், இப்போது சிறிதும் ஓய்வில்லாமல் படு பிஸியாக என் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது ஆபிஸ் வேலை , அடுத்து என் கடை வேலைகள் அதற்கு பிறகு நேரம் கிடைத்தால் பிளாக் பக்கம் வருகிறேன்.
இந்த அளவுக்கு என்னை செயல் பட வைத்து கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு நான் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
(எல்லாப் புகழும் இறைவனுக்கே ! )

 என்னைப் பற்றி ஜலீலாவிடமிருந்து ஒரு சில வரிகள்;
ஆசியாவை எனக்கு அறுசுவை.காம் மூலம்  தெரியும். என்னையும் சமைத்து அசத்தலாமில் சிறப்பு விருந்தினராக அழைத்த ஆசியாவுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
பொதுவாக சமையலை செய்து அதை படம் பிடித்து ஒரு போட்டோ போட்டு சமையல் குறிப்பு பகிர்வதே சிரமம் தான். அதில்  ஸ்டெப் பை ஸ்டெட் படத்துடனும்  சில வகைகளை வீடியோவாகவும் போட்டு அசத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது பல பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சமைத்து அசத்தலாமில் கத்திரிக்காய் குறிப்புகள் மற்றும் கிரில் வகைகள், மண் சட்டியில் செய்துள்ள மீன் குழம்பு வகைகள் எனக்கு ரொம்ப பிடிச்ச சமையல் வகைகள். வெங்காயம் பொடியாக அரிந்து வதக்கும் பதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 
அறுசுவையில்  ஆசியாவின் கேக் செய்து பார்த்து இருக்கிறேன். இங்கு பிளாக்கரில் வத்தக்குழம்பு ஒரு முறை செய்து பார்த்துள்ளேன். ருசி மிகவும் அருமை.
இங்கு பிளாக்கர் சந்திப்பின் போதும்,  அமீரக தமிழ் மன்ற ஆண்டு விழாவிலும்,மொத்தம் நான்கு முறை நேரில் சந்தித்துள்ளோம். சுவையரசி போட்டிக்கு இருவரும் சென்றிருந்த போது அங்கு  ஒருவர் நீங்கள் இருவரும் அக்கா தங்கைகளா என்றார்கள். நாங்கள்  சந்திக்கும் போது எனக்கு ஆசியா அன்பளிப்பாக  அழகான பவுல் வகைகளை கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி.


இதோ ஜலீலா அவர்கள் அனுப்பிய அசத்தலான கார்ன் பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் குறிப்பு விளக்கப் படங்களுடன் :

 
தேவையான பொருட்கள்;
மாவு குழைக்க;
மைதா மாவு  -ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு - கால் தேக்கரண்டி 
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வெது வெதுப்பான வெந்நீர் -கால் டம்ளர்
என்ணை - ஒரு தேக்கரண்டி

செய்முறை ;-
வெந்நீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

 பில்லிங் ரெடி செய்ய;-

ப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன்  (சோளம்)  - அரை கப்
ப்ரோஸன் பட்டாணி -  கால் கப்
முட்டை கோஸ் - துருவியது கால் கப்
கேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி
கேப்சிகம் - பொடியாய அரிந்தது  - இரண்டு மேசைக் கரண்டி
பச்சைமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று
சர்க்கரை - 2 சிட்டிக்கை
வெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசைக் கரண்டி
உப்பு - தேவைக்கு
ஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
லெமன் சாறு  - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல் 
எண்ணை - இரண்டு தேக்கரண்டி.

 செய்முறை;-
ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.
பிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி  உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.
கடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.

 குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை போல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.

 அதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.


இரும்பு வாணலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சூப்பர் சுவையான கார்ன் பீஸ் வோண்டன்ஸ் ரெடி. ருசி மிக அருமையாக இருக்கும். இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்தும் சுருக்கு பை போல் இருக்கும்.


  பொரித்த பின்பும் உள்ளே பில்லிங் அப்படியே அழகாக இருக்கும்.


சுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிரிங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலையை பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.
இது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் வைத்துக்  கொள்ளலாம்.இது போல் நிறைய வெரைட்டி செய்து இருக்கிறேன்.எல்லாமே மிக அருமையாக இருக்கும்.

திருமதி ஜலீலாவின் திருமணநாள் இன்று என்பது கூடுதல் மகிழ்ச்சி. அன்பான நட்புகள் அனைவரும் தம்பதியினரை எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவோம் !ஜலீலாவின் பயனுள்ள சில டிப்ஸ்கள்:-
 1.   சமையல் ஒரு இனிய கலை அதை நாம் ஏனோ தானோன்னு கடமைக்கேன்னு செய்யாமல் விரும்பி செய்யவேண்டும் அப்போது தான் நாம் செய்யும் உணவில் சுவை அதிகமாக இருக்கும்.

2. நாம் சமைக்கும் குருமா ஹோட்டல்  ருசி போல் வர, வெங்காயமும் முந்திரியும்  பட்டரில் அல்லது எண்ணையில் வதக்கி அரைத்து சேர்த்து குருமா தயாரித்து பாருங்கள்சுவை அற்புதமாக இருக்கும்.

 3.  குழந்தைகள் புஷ்டியான கன்னங்களுடனும், எலும்புகள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால்மென்மையாக சுட்ட கோதுமை + பொட்டு கடலை சேர்த்து பிசைந்து மிருதுவான பரோட்டா தயாரித்து அதில்  சூடான பால் மற்றும் சிறிது சர்க்க்ரை சேர்த்து நன்கு ஊறவைத்து தேவைக்கு அரை பரோட்டா முதல் ஒரு பரோட்டா வரை அவர்கள் சாப்பிடும் அளவை பொறுத்து  தொடர்ந்து வாரம் ஒரு முறை கொடுத்து வாருங்கள், அவர்கள் நன்கு வளந்த பிறகும் உடலில் உள்ள எலும்புகள் வலுவுடன் இருக்கும்.

3.   ஆண்களுக்கு ஹிமோ குளோபின்  - இங்கு சென்று படிக்கவும்.

4.   குழந்தைகளின் சளி இருமலுக்கு இஞ்சி சாறு , மற்றும் குழந்தைகளின் வயிற்று பூச்சி அகல வேப்பிலை இஞ்சி சாறுமிக அருமையான கை மருந்து 

5.   கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்துக்கு. சுக்கு பால். பூண்டு முட்டை சாதம்.
Jaleela Banu, Dubai.

மிக்க மகிழ்ச்சி ஜலீலா. அசத்தலான சுய அறிமுகம், என்னைப் பற்றிய அன்பான பகிர்வு, வித்தியாசமான குழந்தைகளைக் கவரும் ருசியான குறிப்பு, டிப்ஸ் என்று மிக அருமையான சிறப்பு விருந்தினர் பகிர்வை அளித்த அன்புத்தோழி ஜலீலாவிற்கு என் மனமார்ந்த நன்றி, நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

மீண்டும் ஒரு நல்ல அசத்தலான பகிர்வோடு சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

17 comments:

Sivagamasundhari Sikamani said...

Happy anniversary and Very glad to see your receipe. Initially Asiya gave this date for me. She requested me to have a change of date. Glad I was able to do so.

Sivagamasundhari

Suchi Sm said...

interesting money bag recipe... happy anniv too:)

Menaga sathia said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் தங்களை பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!

மணிபேக் ஸ்டப்பிங் பிடித்திருக்கு,ரெசிபியும் சூப்பர்!!

Shama Nagarajan said...

happy anniversary akka...delicious recipe

திண்டுக்கல் தனபாலன் said...

ஜலீலா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நாள்வாழ்த்துக்கள்...

இன்றைய பகிர்வு மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே...!

apsara-illam said...

திருமண நாள் நல்வாழ்த்துகள் ஜலீலா அக்கா...
அழகிய அறிமுகத்தோடு,நல்ல நல்ல டிப்ஸ்களோடும்,சுவையான குறிப்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு...பராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
இந்த பகுதியை இனிதே கொண்டு செல்கின்ற ஆசியா அக்கா அவர்களுக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல...

அப்சரா .

Jaleela Kamal said...

நான் அனுப்பியதோடு இங்கு மிக அருமையாக தொகுத்து இருப்பது மிக அருமை ஆசியா.
அழகிய பூங்கொத்துடன் எங்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

சிவகாமசுந்தரி கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

சுஜிதா வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.

Asiya Omar said...

மேனகா தொடர்ந்து வந்து கருத்து தெரிவித்து வருவத்ற்கு மனமார்ந்த நன்றி,வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

ஷாமா வாங்க, வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

தனபாலன் சார் தொடர் கருத்திற்கு நன்றி, வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

அப்சரா ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

ஜலீலா சிறப்பு விருந்தினர் பகுதியில் கலந்து கொண்டு கௌரவித்தமைக்கு மகிழ்ச்சி,நல்வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள், நீங்கள் அனுப்பியதை அப்படியே சரி பார்த்து போஸ்டிங் செய்தேன்,படங்களுக்கு பார்டர் அவ்வளவே, மற்றபடி நீங்கள் தான் உங்கள் பிஸியான வேலை சிரமத்திற்கு இடையே நேரம் ஒதுக்கி குறிப்பை தயார் செய்து அனுப்பி வைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.மனமார்ந்த நன்றி.மிக்க மகிழ்ச்சி.

Saratha said...

திருமதி ஜலீலா பற்றி நிறைய தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.அவங்க பதிவும் சூப்பர்!!அவங்களுக்கு எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

மிக்க நன்றி சாரதாக்கா, வருகைக்கு மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan said...

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.. சூப்பர் ஜலீலா.. அருமை ஆசியா பகிர்வுக்கு நன்றி :)

Asiya Omar said...

தேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகா.

ஸாதிகா said...

அடடா..இதை படித்தும் எப்படியோ கமண்ட் இடத்தவறிவிட்டேன்.அட்டகாச சமையலை அறிமுகப்படித்து அசத்தி விட்டீர்கள் ஆசியா.தோழி ஜலீலாவுக்கும் ஆசியவுக்கும் வாழ்த்துக்கள்.குடும்ப சகித போட்டோவைப்பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.அருமையான சமையல ஒன்றினையும் குறிப்புகளோடுன் ஆசியாவுக்கே உரித்தான மென்மையான பதிவுடன் பதிவிட்டு இருப்பது அழகு.

Asiya Omar said...

நன்றி தோழி ஸாதிகா, ஜலீ கெஸ்ட் போஸ்ட் என்பதால் உங்க கருத்தை காணோமேன்னு பார்த்தேன்.வந்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.