Friday, February 14, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 14 திருமதி. காயத்ரி குமார் - வெனிலா சுவிஸ் ரோல் கேக் / Guest Post - Mrs.Gayathri Kumar / Swiss Role Cake

இன்று வலைப்பூ தொடங்கி நான்காம் ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு விருந்தினர் திருமதி காயத்ரி குமாரின் பகிர்வு எனக்கு மிக்க பெருமிதத்தைத் தருகிறது. ஆங்கில வலைப்பூ உலகில் அறிமுகமான ஒரு இனிய வலைப்பதிவர். இவரின் காயத்ரி குக்ஸ்பாட் வலைப்பூ தொடங்கி கிட்டதட்ட நான்கு வருடங்கள் ஆகிறது,  950 குறிப்புகள் பகிர்ந்திருக்காங்க.

வெஜ் சமையல், பண்டிகைக்கால பலகாரங்கள், மாநில உணவுகள், அயல்நாட்டு உணவுகள், முட்டை சேர்க்காத கேக் வகைகள் பிரசித்தம், தத்ரூபமான விளக்கப் படங்களுடன் பகிர்வுகள் எளிதில் புரியும் வண்ணமிருப்பது இவங்க வலைப்பூவின் சிறப்பம்சம்.  நிச்சயம் உங்களுக்கு தேவையான குறிப்புகள் பலவகைகள் அங்கு காணலாம். இவங்க நடத்தும் Walk Through Memory Lane Event மிகப் பிரபலமானது. மாதம் மாதம் நடத்தி சிறந்த குறிப்பிற்கு புத்தகப் பரிசு கொடுத்து வராங்க, நானும் என்னால் முடிகிற போது கலந்து வருகிறேன். சென்ற வருடம் மார்ச் மாதம் நான் அனுப்பிய முருங்கைக்காய் சாம்பார் குறிப்பிற்கு தர்லா தலாலின் ஒரு வருடம் பிரசுரமான புத்தகப் பரிசு கிடைத்தது. மகிழ்ச்சி கலந்த நன்றி காயத்ரி. சுய அறிமுகப்பகுதியில் இவங்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்.

காயத்ரியின் சுய அறிமுகம் :
என் பெயர் காயத்ரி. நான் காயத்ரிஸ்குக் ஸ்பாட் என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறேன். நான் தற்சமயம் கோவில் நகரம் மதுரையில் வசித்து வருகிறேன். அழகான குழந்தை ஸ்ருதியின் அம்மா நான். அவளுக்கு கேக் மற்றும்  பேக்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால் எனக்கும் அதில் மிகவும் விருப்பம் உண்டு. 

காயத்ரி தன்னோட ஃப்ரஃபைல் படமாக தன் அருமை மகள் ஸ்ருதியுடன்  இருக்கும் படத்தை பகிர்ந்திருக்காங்க. நல்வாழ்த்துக்கள்.
நான் பொழுதுபோக்காக மதுரையில் சமையல் வகுப்புகள் எடுக்கிறேன். கேக் ஆர்டர்களும் செய்து கொடுக்கிறேன். என்னுடைய facebook பக்கங்கள்  -

நான் முதலில் electronics டிப்ளமா படித்தேன். ஆனால் தையலில் ஆர்வம் இருந்ததால் ஃபேஷன் டிசைனிங் டிப்ளமா முடித்தேன். ஒரு Fashion Designing Instituteஐ 5 வருடங்கள் நடத்தினேன். ஸ்ருதி பிறந்தவுடன் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டேன். அவள் வளர்ந்தவுடன் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று வலைப்பூ தொடங்கினேன். சமையலில் எனக்கு இருந்த ஆர்வம் எனது வலைப்பூவிற்கு கை கொடுத்தது. மூன்று வருடங்களில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இப்போது மூன்று ப்ளாக் எழுதுகிறேன்:
Gayathri’s Cook Spot - http://gayathriscookspot.blogspot.in/
Gayathri’s Kitchen Basics - http://gayathriskitchenbasics.blogspot.in/
மீண்டும் கிளாஸ் எடுக்கலாம் என்ற ஆர்வம் வந்தவுடன் மாடியில் ஒரு அறையை க்ளாஸ் ரூம் ஆக்கி அங்கேயே Fashion Designing கற்றுத் தருகிறேன்.
என் வீட்டின் சமையல் அறையிலேயே Cooking Class எடுக்கிறேன். என்னுடைய எல்லா முயற்சிக்கும் என்னுடைய கணவர் பழனிகுமார் பக்க பலமாக இருக்கிறார். என் குழந்தையும் நன்றாக புரிந்து கொண்டு எனக்கு உதவி செய்கிறாள்.

எனக்கு எப்பொழுதுமே தமிழில் வலைப்பூ எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் தமிழில் சரியாக எழுத தெரியாததால் இன்னும் முயற்சிக்காமல் இருக்கிறேன். ஆசியா அக்கா எனக்கு தமிழில் எழுத ஒரு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அதற்கு மிக்க நன்றி. ஆசியா அக்காவின் வலைப்பூவின் நான்காம் ஆண்டு நிறைவு நாளன்று எனது இந்த பகிர்வு அவர்கள் வலைப்பூவில் வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஆசியா அக்கா. இந்த வலைப்பூ மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள். 
அழகான பகிர்வுக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றி காயத்ரி.

இதோ காயத்ரியின் அசத்தலான விளக்கப் படங்களுடன் கூடிய இனிய பகிர்வு :-
இன்று நாம் பார்க்க இருக்கும் குறிப்பு – வெனிலா சுவிஸ் ரோல் கேக் – இது எனக்கு சிறு வயதிலேயே மிகவும் பிடித்த கேக். இந்த சுவிஸ் ரோல் பிரெஷ் கிரீம் வைத்து ரோல் செய்யப்பட்டுள்ளது. சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


நான் சைவம் என்பதால்  எப்போதும் முட்டை இல்லாமல் பேக்கிங் செய்வதையே விரும்புவேன். சமீபத்தில் நான் சமையலில் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருப்பதால் அதன் பொருட்டு முட்டைகளை பயன்படுத்தி பேக்கிங் செய்ய ஆரம்பித்துள்ளேன். இந்த கேக் செய்ய முட்டை அவசியம். முட்டை இல்லாமல் இந்த கேக் இன்னும் சரியாக  செய்ய வரவில்லை.
வெனிலா சுவிஸ் ரோல் கேக் :-

தேவையான பொருட்கள்:
காஸ்டர் சர்க்கரை - 125 கிராம்
மைதா -125 கிராம்
முட்டைகள் -3
வெண்ணிலா எசென்ஸ் -  1 தேக்கரண்டி
வெது வெதுப்பான நீர் 1 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு மர்மலேட் - 1/2 கப்
கிரீம் - 200 மில்லி
ஐசிங் சுகர் - 4-5 மேஜைக்கரண்டி

செய்முறை :
1. ஓவனை 200 டிகிரி சென்டிக்ரேடில் ப்ரிஹீட் செய்யவும்.

2. ஒரு 33 செமீ * 23 செமீ பேக்கிங் தட்டில் வெண்ணை தடவி அதன் மேல் பேகிங் பேப்பரை ஒட்டவும். .

3. அந்த பேப்பர் மேல் வெண்ணை தடவி மாவை சலித்து தூவவும்.

4. ஒரு கிண்ணத்தில், முட்டை, சர்க்கரை எடுத்துக்கொண்டு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.


5. 10 நிமிடங்கள் நிறுத்தாமல் அடித்தால், முட்டை பஞ்சுபோன்று வரும்.

6. அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
7. மாவை அடித்த முட்டையின் மேல் சலித்து விடவும். ஒரு மரக்கரண்டியால் மிகவும் மெதுவாக கலக்கவும்.

8. இறுதியாக சூடான நீர் சேர்த்து மெதுவாக கலக்கவும்.

9. தயாராக உள்ள தட்டில் தயார் செய்து வைத்துள்ள மாவை சமமாக பரப்பி விடவும்.


10. 8-10 நிமிடங்கள் ஓவனில் பேக் செய்யவும். லைட்டாக பிரவுன் ஆக ஆரம்பிக்கும் பொழுது எடுத்து விடவும்.

11. அதிகமாக பேக் செய்தால் கிராக் விழுந்து விடும்.

12. மேஜையில் ஒரு வெள்ளை துண்டு விரித்து அதன் மேல் ஐசிங் சுகரை சலித்து விடவும்.

13. இப்போது துண்டின் மேல் பேகிங் தட்டை கவிழ்க்கவும். மெதுவாக தட்டை எடுத்து விடவும்.
14. மெதுவாக பேகிங் பேப்பரை எடுத்து விடவும்.
15. சீரற்ற பக்கங்களை வெட்டி சீராக்கவும்.

16. இப்போது துண்டோடு சேர்த்து ஒரு இறுக்கமான ரோலாக கேக்கை ரோல் செய்யவும். அது சூடு ஆறும் வரை ஒரு வலை தட்டில் வைத்து விடவும்.

17. ஆறியவுடன் ரோலை பிரித்து விடவும்.  கேக் மீது சமமாக ஆரஞ்சு மர்மலேட் தடவவும்.

18. 2 மணி நேரம் கிரீம், பீட்டர் ப்ளேட் மற்றும் ஒரு பௌல் ஆகியவற்றை பிரிட்ஜில் வைக்கவும்.
19. குளிர்ந்த கிண்ணத்தில் கிரீம் ஊற்றி பீட்டரால் மென்மையான சிகரங்கள் வரும் வரை அடிக்கவும்.

20. ஐசிங் சர்க்கரை சேர்த்து கிரீமை கெட்டியாகும் வரை பீட் செய்யவும்.


21. ஜாம் தடவிய கேக் மேல் இந்த கிரீமை தடவவும்.

22. இப்போது துண்டை தவிர்த்து மீண்டும் கேக்கை மட்டும் இறுக்கமாக  ரோல் செய்யவும்.

23. 8 மணி நேரம் ஒரு கிளிங் ராப்பால் கவர் செய்து பிரிட்ஜில் வைக்கவும்.

24. அடுத்த நாள்கிளிங் ராப்பை எடுத்து விட்டு ரோலை தட்டில் வைத்து, அதன் மேல் ஐசிங் சர்க்கரை சலித்து , 1 1/2 " தடிமனான துண்டுகளாக அதை ஸ்லைஸ் செய்து உடனடியாக பரிமாறவும்.



சுவையான வெனிலா சுவிஸ் ரோல் கேக் ரெடி. 



ஆசியா  அக்கா  வாய்ப்பிற்கு மிக்க நன்றி .

நிச்சயமாக நாம் அனைவருக்கும் இந்த அழகான ருசியான கேக்கை சுவைக்க வேண்டும் என்ற ஆசை வரும். நீங்களும் செய்து பாருங்க. முடியாதவங்க காயத்ரிக்கு பார்சல் அனுப்பச் சொல்லுங்க. 


 காயத்ரியின் பயனுள்ள  பேக்கிங் டிப்ஸ்;-

இந்தப் பகுதியில் பேக்கிங் செய்யும் போது  பயன்படுத்த சில டிப்ஸ்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1 . எப்போதும் பேக்கிங் செய்யும் முன் ஓவனை ப்ரீஹீட் செய்யவும் . ப்ரீஹீட் இல்லை என்றால், உங்கள் கேக்  நன்றாக வராது .
2 . கேக்கை ஓவனில் வைத்து முதல் 20 நிமிடங்கள் ஓவனின் கதவை திறக்க வேண்டாம் . கேக்கில் பள்ளம் விழுந்து விடும்.
3 . கருப்பு நிற தட்டு அல்லது கேக் டின் பயன்படுத்தும் போது, 15 டிகிரி குறைத்து வைக்கவும். ரெசிப்பியில் 180 C என்றிருந்தால், 165 C வைக்கவும். இல்லாவிட்டால் கேக் அல்லது குக்கீஸ் கருகி விடும்.
4 . பட்டர் கலவையில் மாவை கலந்த பின், அடித்து  கலக்கக் கூடாது.  அடித்தால் கேக் சாப்டாக வராது . ஒரு மரக்கரண்டியை கொண்டு மெதுவாக கலக்கவும்.
5 . முட்டையை எவ்வளவு அடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு கேக் சாப்டாக வரும் .
6 . முட்டை இல்லாமல் தயார் செய்யும் கேக்கிற்கு தயிர் சேர்க்க வேண்டும். நான் வழக்கமாக 1 முட்டைக்கு பதில்  ¼ கப் தயிர் பயன்படுத்துவேன்.
7 . குக்கீஸ் தயாரிக்கும் போது, குறிப்பிட்ட நேரத்தில் குக்கீசை ஓவனில் இருந்து எடுத்து விட வேண்டும்  . எடுக்கும் போது குகீஸ் மிகவும் மென்மையாக இருக்கும்.  10 நிமிடங்களுக்கு பிறகு கிரிஸ்பாக மாறும் . அதிக நேரம் பேகிங் செய்தால் மிகவும் கடினமாகிவிடும்.
8 . எப்போதும் கேக்குகள்  குளிர்விக்க ஒரு வயர் ரேக் பயன்படுத்த வேண்டும். கேக்கை தட்டில் வைத்தால் சூட்டில் தண்ணீர் விட்டு சொத சொத என்றாகிவிடும்
9 . கேக் மாவை டின்னில் சேர்ப்பதற்கு முன், டின்னில் வெண்ணை தடவவும். அதன் மேல் பட்டர் பேப்பரை வைத்து மறுபடியும் பட்டர் தடவி மாவை தூவி நன்றாக பரவும் வரை தட்டவும். இவ்வாறு செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

10 . நீங்கள் எவ்வளவு பேகிங் செய்தாலும், உங்கள் ஓவனை நன்றாக அறியாதவரை பேக்கிங் சிரமமாக இருக்கும். ஒவ்வொரு ஓவனும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆகையால் ஓவனை பற்றி நன்றாக அறிய நிறைய பேக்கிங் செய்ய வேண்டும். கேக் நன்றாக வரவில்லை என்றால் சமையல் குறிப்பை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. நாம் என்ன தவறு செய்திருக்கிறோம் என்று ஆராய்ந்தால் தவறை திருத்திக் கொள்ளலாம். பிறகு பேக்கிங்கில் நீங்கள் ராணிதான்.

மிக்க நன்றி காயத்ரி, இந்த டிப்ஸ் நிச்சயம் பேக்கிங் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இன்று இந்த வலைப்பூ தொடங்கி நான்கு வருடங்கள் பூர்த்தியாகி ஐந்தாம் வருடம் தொடங்குகிறது. இந்த இனிமையான நாள் தற்செயலாக 
வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட என்னோட சிறப்பு விருந்தினர் பகிர்வில் அதனைக் கொண்டாட வேண்டிய பாக்கியம், அதற்கு தகுந்தாற் போல் அசத்தலான கேக் குறிப்பை காயத்ரி பகிர்ந்தது எனக்கு அளவிலா மகிழ்ச்சி.  சிரமம் பார்க்காமல் அழகான விளக்கப் படங்களுடன் அசத்தலான குறிப்பை பகிர்ந்து இன்றைய நாளை மறக்க முடியாத நாளாய்  ஆக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி காயத்ரி.

இந்நாள் வரை எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து மாறா அன்போடு வருகை புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நானும் வலைப்பூவில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு, என்னால் முடியும் வரை  உங்கள் ஆதரவோடு குறிப்புகள் தொடரும். காலம் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.





என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

முக்கியக் குறிப்பு:-

அடுத்த வார சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு  இதுவரை  யாரும் பகிர்வுகள் அனுப்பவில்லை. எனவே பகிர்வுகள்  வரும் பட்சத்தில் வரிசைப்படி பகிர்வேன். அனுப்ப வேண்டிய முகவரி asiyaomar@gmail.com. தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அடுத்தப் பகிர்வு நான்காவது வருட நிறைவையொட்டி ஒரு எளிய இனிப்பான  குறிப்பு உங்களுக்காக ..விரைவில் !



27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எனது துணைவிற்காக திருமதி. காயத்ரி குமார் அவர்களின் தளத்தை அறிமுகம் செய்து வைத்து bookmark-ம் செய்து விட்டேன்... இனி எனக்கு கணினி கிடைக்குமா...? என்பது சந்தேகம் தான்... ஹிஹி... நன்றி சகோதரி...

அன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

வாழ்த்துக்கள்...

priyasaki said...

5ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூ மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ஆசியா.
வெனிலா சுவிஸ் ரோல் பார்க்க யம்மி.பயனுள்ள டிப்ஸ்.
காயத்திரிகுமாருக்கு வாழ்த்துக்கள்.

prethika skm said...

clear demonstration..guest post is awesome ...

Jaleela Kamal said...

4 வருடமாக சிரமம் பார்க்காமல் தொடர்ந்து படிப்படியான சமையலை கொடுத்து அசத்தி இருக்கீங்க ஆசியா, வாழ்த்துக்கள், மேலும் பல ஆயிரம் குறிப்பாக கொடுக்க வாழ்த்துக்கள்

காயத்திரியின் ஸ்விஸ் ரோல் மிக அருமை , அவர்களை பற்றியும் இங்கு அறிய வாய்ப்பு கிடைத்தது,உங்களுக்கும் வாழ்த்துக்கள் காயத்திரி.

Shamee S said...

நான்காம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் ஆசியா அக்கா.....
கேக் மிகவும் அருமை காயத்ரி...படங்கள் கொள்ளை அழகு...உபயோகமான டிப்ஸ்கள்..உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Menaga sathia said...

4 ஆம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

காயத்ரியை பற்றி மேலும் தெரிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..எனக்கும் இந்த ஸ்விஸ் ரோல் கேக் பிடித்த ஒன்று. கேக் பற்றிய டிப்ஸ்களுக்கு மிக்க நன்றி காயத்ரி!!

இமா said...

நான்காவது ஆண்டு நிறைவையிட்டு என் அன்பு வாழ்த்துக்கள் ஆசியா.

// காயத்ரியின் பயனுள்ள பேக்கிங் டிப்ஸ்// அருமை.

Shama Nagarajan said...

super cake akka

Saratha said...

ஆசியா உங்கள் வலைப்பூ ஆரம்பித்து நான்கு ஆண்டு நிறைவுக்கும் ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திற்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!உங்களுடைய திறமை,பணிவு,எல்லோரிடமும் பழகும் விதம் எல்லாம் என்னை பிரமிக்க வைத்தது.

திருமதி காயத்திரியின் கேக்கும் சூப்பர்!!

Suchi Sm said...

congrats for ur 5th blog anniv madam... easy swiss roll lovely tips....

GEETHA ACHAL said...

ரொம்ப அருமையாக இருக்கின்றது காயத்ரி..வாழ்த்துகள்..

இதனை பகுதியினை வழங்கும் உங்களும் வாழ்த்துகள் அக்கா..சூப்பர்ப்..

chikkus Kitchen said...

Congrats for your blog anniversary akka :)Awesome swiss roll and very useful tips Gayathri :)

Snow White said...

நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தமைக்கு வாழ்த்துக்கள் ...

சுவிஸ் ரோல் மிக பிரமாதம் ...செய்து காட்டிய விதம் அழகோ அழகு .. குறிப்புகள் எல்லாம் பயனுள்ளவையாக இருக்கு ...
அவங்க பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு ...அது தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

உங்கள் வலைப்பூவை மிகவும் ரசிக்கிறேன் .. தயவு செய்து முடிந்தவரை குறிப்ப்புகள் போடவும் அக்கா .. எனது அன்பு வேண்டுகோள் இது ..

Savitha Ganesan said...

Happy 4 th anniversary Akka. Love to see Gayathri's swiss roll.

Thenammai Lakshmanan said...

செம டேஸ்ட். பகிர்வுக்கு நன்றி ஆசியா. காயத்ரிக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் சில நாட்களில் என் குறிப்பு அனுப்புகிறேன் ஆசியா முடிந்தால் இன்றிரவே. :)

Thenammai Lakshmanan said...

நான்காம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்டா.

ADHI VENKAT said...

நான்காம் ஆண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

காயத்ரி குமார் அவர்களின் குறிப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். தீபாவளி சமயத்தில் அவர்களின் ”மலாய் லட்டு” குறிப்பை செய்து பார்த்து பகிர்ந்திருந்தேன். படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாய் இருக்கும்.

இந்த சிறப்பு பகுதியை தொடர்ந்து பகிர்ந்து வரும் தங்களுக்கும், பங்களிப்பவர்களுக்கும் வாழ்த்துகள்.

Gayathri Kumar said...

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா. Happy blog anniversary..

Asiya Omar said...

தனபாலன் சார் தங்களின் தொடர் கருத்திற்கு மகிழ்ச்சி .வாழ்த்திற்கு மிக்க நன்றி.

ப்ரியசகி வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.

ப்ரீதிகா கருத்திற்கு மகிழ்ச்சி,மிக்க நன்றி.

Asiya Omar said...

ஜலீலா வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி, மிக்க நன்றி.

ஷமீ வாங்க, வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி.

மேனகா வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி, கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

இமா வாங்க, வருகைக்கும் வாழ்த்திற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி.

ஷாமா தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,மகிழ்ச்சி.

சாரதா அக்கா, வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.

Asiya Omar said...

சுஜி வாங்க, வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.

கீதா ஆச்சல் வாங்க,நீண்ட நாட்கள் கழித்த வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.


சிக்குஸ்கிச்சன் வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.

Asiya Omar said...

ஸ்நோ ஒயிட் மிக்க நன்றிபா. உங்கள் வேண்டுகோளுக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

சவீதா வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.

Asiya Omar said...

தேனக்கா வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சிகா.

ஆதி வாங்க, கருத்திற்கு மிக்க நன்றி, வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

காயத்ரி வாழ்த்திற்கு மகிழ்ச்சி. நான் தான் உங்கள் சிறப்பான பகிர்வுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.பாராட்டுக்கள் பல.எப்படியும் ஒருநாள் இக்குறிப்பை செய்து பார்ப்பேன் பா.

வெங்கட் நாகராஜ் said...

நான்கு ஆண்டுகள்.... - வாழ்த்துகள் சகோ....

இன்றைய பகிர்வில் சமைத்து அசத்தியவருக்கும் வாழ்த்துகள்.

Asiya Omar said...

நன்றி சகோ.வெங்கட்.வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.