Friday, February 21, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 15 - திருமதி ஷமீலா முபீத் - இறால் அடை / Guest Post - Prawn Adai

திருமதி ஷமீலா முபீத், சொந்த ஊர் மயிலாடுதுறை, பொறியியல் பட்டதாரி, கடந்த இரண்டரை வருடங்களாக சிங்கப்பூரில் வசிப்பதாகவும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கிறார். இவரின் வலைப்பூ ஷமீஸ்கிச்சன்  அசத்தலாக இருக்கு.
ஷமீ எனக்கு மெயில் செய்திருந்தார், அதில் இருந்த வாசகங்கள் என்னை அளவிலா  மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனலாம்.
அதனை உங்களிடம் பகிர்கிறேன்.

//உங்கள் வலைப்பூவை கடந்த ஒரு வருட காலமாக பார்வையிடுகிறேன்.
எனது விருப்ப ப்ளாக்கில் உங்களது வலைப்பூவிற்குத்  தான் முதலிடம்.
புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.உண்மையாகத்  தான் சொல்கிறேன்.
சமீப காலமாக உங்கள் குறிப்புகளுக்கு ஷமீ என்ற பெயரில் கருத்துக்களும் கூறி இருப்பேன்.இணையத்தில் வரும் புதுவிதமான சமையல்களை முயற்சித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அதே சமயம் எங்கள் ஊர் உணவு வகைகளும் விரும்பி செய்வேன்.
நான் shameeskitchen.blogspot.com என்ற பெயரில் ப்ளாக்கில் எழுதி வருகிறேன்.
உங்கள் சிறப்பு விருந்தினர் பகிர்வில் பங்கேற்க விரும்புகின்றேன்.
அதற்காக இறால் அடை குறிப்பு அனுப்பியுள்ளேன்.//

அன்பான மெயிலிற்கு மனமார்ந்த நன்றி. மகிழ்ச்சி.


ஷமீலா தன் சித்தி மகன் மாசின் புகைப்படத்தை ப்ரஃபைல் படமாக அனுப்பியுள்ளார். நல்வாழ்த்துக்கள். 

இன்று ஷமீ நம்முடன் பகிரப் போகும் குறிப்பு.

இறால் அடை :
 தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கப் 
அரிசி மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
முட்டை - 1
துருவிய தேங்காய் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- 1/4 கப் அல்லது தேவைக்கு.

செய்முறை:

வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும்  நறுக்கி கொள்ளவும்.இறாலை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.தேங்காய் துருவி வைக்கவும்..

வெங்காயம் , பச்சை மிளகாய் , தேங்காய், முட்டை, உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி  இறாலுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள்  தூள்,மிளகாய் தூள் ,சிறிது உப்பு சேர்த்து பிரட்டி 5 நிமிடம் வேக விடவும்.
 அரிசி மாவில் இறால் கலவை, அரைத்த விழுது,பெருஞ்சீரக தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறி கொள்ளவும்.

 இதனை 1/2 மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ஒரு உருண்டை மாவு எடுத்து கல்லில் அடை போல் தட்டவும். சுற்றிலும்  எண்ணெய் விட்டு மூடி போட்டு வேக விடவும். அடையை திருப்பி போட்டு 1  ஸ்பூன்   எண்ணெய்  விடவும். அடை வெந்ததும் எடுக்கவும்.

வெங்காயம் ,மிளகாய் அரைக்காமல் பொடியாக நறுக்கியும் மாவில் கலந்து செய்யலாம்.
ருசியான இறால் அடை தயார்.
இதனை சும்மாவே சாப்பிடலாம். இதற்கு குருமா அல்லது கார சட்னி சுவையாக இருக்கும்.

இறாலே மணமாக இருக்கும்,அத்துடன் ருசிக்கு முட்டை மற்றும் பல பொருட்கள்  சேரும் பொழுது சுவையை கேட்க வேண்டுமா? இந்த வித்தியாசமான அடையை நீங்களும் செய்து பாருங்க.

ஷமீலா கலந்துரையாடலில் பங்கு கொண்டதால் இதோ அந்தப் பகிர்வு.
1.தங்களுடைய சுயறிமுகம்தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள்.


எனது பெயர் ஷமீலா முபீத்.எனது சொந்த ஊர் மயிலாடுதுறை.பொறியியல் பட்டதாரி.
திருமணத்திற்கு பின் 2.5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசிக்கிறேன்.என்னுடைய கணவர் பெயர் முபீத்.
கணிப்பொறி துறையில் பணியாற்றுகிறார்.எங்களுக்கு மணமாகி 3 வருடங்கள் ஆகிறது.குழந்தைக்காக காத்திருக்கிறோம்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

எனக்கு புதுவிதமான சமையல்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம்.இணையத்தில் படிப்பதை வைத்து முயற்சி செய்து பார்ப்பேன்.

எனக்கு மெஹந்தி போடுவதில் மிகவும் விருப்பம் உண்டு.

திருமணத்திற்கு முன்பு வரை வரைவதில் ஆர்வம் உண்டு.இப்பொழுது நேரமின்மையால் வரைய முடிவதில்லை.


2. தங்களுக்கு எத்தனை வருட சமையல் அனுபவம்தங்கள் அனுபவத்தில் ஏதாவது சுவாரசியமான நிகழ்வுகள்.

எனக்கு சமையல் அனுபவம் 6 வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.ஆனால் முழு நேரமாக சமைப்பது 3 வருடங்களாகத் தான்.
சுவாரசியமான நிகழ்வு என்றால் என் உறவினர் குடும்பத்தை விருந்துக்கு அழைத்திருந்தோம்.பிரியாணிக்கான குருமா தயார் செய்துக் கொண்டு இருந்தேன்.எனக்கு உதவி செய்கிறேன் என்று என் கணவர் பிரியாணிக்கான அரிசியை உப்பு சேர்க்காமல் தயார் செய்து வைத்து விட்டார்கள்.கணவர் வழி உறவு வேறு.
கடைசி சமயத்தில் குருமாவில் இரண்டு பங்கு உப்பு சேர்த்து ஒரு வழியாக ஒப்பேற்றினேன்.
கடைசியில் அன்றைய விருந்து பெரிய ஹிட்.
மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

3..தங்கள் சமையலில் தங்கள் வீட்டினர் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகள் மற்றும் பிடிக்காத உணவு என்றால் எதை எல்லாம் குறிப்பிடுவீர்கள்.

நான் தயார் செய்யும் சிக்கன் பிரியாணி, பொறிச்ச கறி,முர்தபா, தால்ச்சா,நண்டு குருமா எல்லாம் என் தந்தை , கணவர் இருவருக்கும் மிகவும் விருப்பமான உணவுகள்.

பிடிக்காத உணவு என்று எதுவும் இல்லை.

4. சிங்கப்பூரில் வசிப்பதால் இந்தக் கேள்வி, அந்தாட்டின் சிறப்பம்சங்களாக  நீங்கள் கருதுவது, ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தாலும் பகிரலாம்.

சிங்கப்பூரின் சிறப்பம்சமாக நான் கருதுவது பெண்களுக்கான பாதுகாப்பு.இங்கு இரவு 12 மணிக்கு கூட வேலைக்கு சென்று விட்டு பெண்கள் தனியாக செல்லலாம்.எந்த பயமும் இருக்காது.
அதற்கு அடுத்த விஷயம் இங்கு எந்த இடத்திலும் லஞ்சம் என்ற பேச்சிற்க்கே இடமில்லை.அனைவரும் விதிகளை மதித்து நடப்பது மிகவும் பிடித்தமானது.

5. தாங்கள் வேலைக்கு செல்லும் பொழுது என்றாவது நாம் இல்லத்தரசியாகவே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்ததுண்டா? எதனால் ?

படித்த கல்வியை வீணாக்காமல் வேலைக்கு செல்வதில் எனக்கு மகிழ்ச்சி தான்.ஒரு பொழுதும் அப்படி ஓர் எண்ணம் வந்ததே இல்லை.

கடந்த 1 மாதம் வேலை மாறும் பொருட்டு வீட்டில் தங்க நேர்ந்த பொழுது தான் சிரமமாக இருந்தது.

வேலைக்கு செல்வதால் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதே எனது கருத்து.

6. வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்வீர்களா? உங்கள் கணவர் எந்தெந்த வேலைகளில் உதவி செய்வார்?
வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வோம்.வீடு சுத்தம் செய்யும் வேலைகளில் உதவி செய்வார்.
வாரத்துக்கு தேவையான காய்கறிகள், அசைவ உணவு , சமையல் பொருட்கள் வாங்கும் பொழுது என் கணவரும் உடன் வருவது வழக்கம்.
அவருக்கு வேலை அதிகமாக இருக்கும் பொழுதும் தொந்தரவு இல்லாமல் இவற்றை நானே கவனிப்பதும் உண்டு.

7. ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தால் உங்கள் மெனுவில் இடம் பெறும் உணவு வகைகள் குறைந்தது ஏழு அயிட்டம்) இதில் சைவம் அசைவம் இருசாராரையும் கருத்தில் கொள்ளவும்.

நான் அதிகம் விருந்துகளுக்கு அசைவ உணவு வகைகளை செய்து தான் பழக்கம்.இருந்தாலும் எனக்கு தெரிந்தை சொல்கிறேன்.
சைவம்
ஹாட் & சோர் சூப்
வெஜிடபிள் பிரியாணி/வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்
நாண்
பனீர் மசாலா / பீஸ் மசாலா
கோபி மஞ்சூரியன்
சில்லி பராட்டா / ஆலூ பராட்டா
மஷ்ரூம் நூடுல்ஸ்
குலோப் ஜாமூன் / கேரட் அல்வா
ஐஸ்கிரீம்

அசைவம் (இது 2 மாதங்களுக்கு முன்னர் நான் என் விருந்தினருக்காக செய்த மெனு)
சிக்கன் சூப்
மட்டன் பிரியாணி
சிக்கன் 65
தால்ச்சா
மட்டன் ஃப்ரை / பெப்பர் சிக்கன்
முட்டை
தக்காளி / பைனாப்பிள் பச்சடி (இனிப்பு)
வெண்டைக்காய் / கத்திரிக்காய் பச்சடி (புளிப்பு)
ப்ரூட் கஸ்டர்ட்
ஐஸ்க்ரீம்

8. நான் சிங்கை வந்திருந்த சமயம் அங்கே பார்த்து வியந்தது அங்குள்ள உடை மற்றும் உணவு கலாச்சாரம். இதைப் பற்றிய உங்கள் கருத்து.

சிங்கப்பூரில் சைனீஸ் ,மலாய் ,தமிழ் மக்கள் கலந்து வசிக்கிறார்கள்.
உணவு விஷயத்தை பொறுத்தவரையில் அனைத்து தரப்பினரும் எல்லா உணவையும் விரும்புகின்றனர். தமிழ் உணவு விற்கப்படும் ஃபுட் கோர்ட்டில் சைனீஸ்மக்கள் விரும்பி வாங்குவார்கள்.
இங்கு அனைத்து உணவு பொருட்களிலும் ஹலால் சின்னம் இருப்பதால் நாம் பயமின்றி வாங்கலாம்.
உடை விஷயத்தில் மலாய் மக்களின் உடைகள் மிகுந்த அழகாகவும் , கண்ணியமாகவும் இருக்கும்..தமிழர்கள் நம் வழக்கப்படியும், சீன மக்கள் அவர்கள் விருப்பபடியும் உடை அணிகிறார்கள்.

9. தாங்கள் வலைப்பூ ஆரம்பித்து குறிப்புகள் அவ்வளவாக பகிரப்படவில்லையே !

நான் இந்த வலைப்பூ ஆரம்பித்தது நவம்பர் மாதம் முதல் தான்.

ஒரு சில குறிப்புகள் மட்டுமே பதிவு போட்டுள்ளேன்.

என்னால் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி நிறைய குறிப்புகள் தர வேண்டும் என்பதே எனது ஆசை.10.சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள்குறிப்புகள் பற்றி  சில வரிகள்.

நான் உங்களது வலைப்பூவை கடந்த ஒரு வருட காலமாகப் பார்வையிடுகிறேன்.
சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கத்துடனும், எளிதில் செய்யகூடியதாகவும் இருக்கிறது.
இது தவிர வீடியோ குறிப்புகளும் உபயோகமானவையே.
நான் மீன் சுத்தம் செய்யும் வீடியோவை பார்த்து அதில் இருந்து நெத்திலி மீன் வாங்கி சமைக்கிறேன்.
இந்த விருந்தினர் பதிவு வர ஆரம்பித்ததிலிருந்து ஆர்வமுடன் படிக்கிறேன்.இதில் நானும் கலந்துக் கொண்டேன் என்பது உண்மையிலே என்னை போன்ற புதியவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்.
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா.

அழகான  உயரிய கருத்தாழமிக்க பதில்கள். அருமையான பாரம்பரிய குறிப்புடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள் ஷமீலா.

மீண்டும் ஒரு நல்ல சிறப்பு விருந்தினர் பகிர்வுடன் சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

16 comments:

Jaleela Kamal said...

இறால் வடை என்றாலே ரொம்ப மணமாக , இரண்டு புடி சாப்பாடு கூட சாப்பிடலாம், ஆனால் அதிலிலும் இறால் அடை என்றால் கேட்கவே வேண்டாம்.
மிக அருமையான குறிப்பு.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இறால் அடை சூப்பர்... அருமையான பதில்கள்...

திருமதி ஷமீலா முபீத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

நல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி...

ஸாதிகா said...

மஞ்சடை வெள்ளடை கறி அடை என்றுதான் அறிந்துள்ளேன்.இறால் அடை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.அவசியம் செய்து பார்க்க வேண்டும்.அருமையானதொரு அறிமுகம்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

சே. குமார் said...

அருமையான இறால் அடைக் குறிப்பு...

குறிப்புக்கு சகோதரி ஷமீலா அவர்களுக்கு நன்றி.

பகிர்ந்த அக்காவுக்கும் நன்றி.

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மகிழ்ச்சி தனபாலன் சார்.நன்றி.

Asiya Omar said...

நன்றி தோழி ஸாதிகா. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

Asiya Omar said...

சே.குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

Shamee S said...

குறிப்பை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி ஆசியா அக்கா..சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை....
வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ...

Asiya Omar said...

ஷமீலா வாங்க, வருகைக்கு மகிழ்ச்சி. சிரமம் பார்க்காமல் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும், கருத்துக்கள் குறைவாக வந்திருந்தாலும் அதிகம் பேர் பார்வையிட்டு இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

Menaga sathia said...

இறால் அடை வித்தியாசமா இருக்கு..

ஷமிலாவுக்கும் தங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

மேனகா சிறப்பு விருந்தினர் பகுதிக்கு தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கும்,வாழ்த்திற்கும் மகிழ்ச்சி நன்றி.

jayanthi R.subbiah said...

அருமையான குறிப்பு.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ஜெயந்தி தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan said...

மிக அருமையா பார்க்கவே கலராவும் ருசியாவும் இருக்கே.

வாழ்த்துக்கள் ஷபி அண்ட் ஆசியா :)

Asiya Omar said...

வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி தேனக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்
masha Allah nice recipe,thanks sister