Friday, February 28, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 16- திருமதி ஆதி வெங்கட் - பனீர் பராட்டா - Guest Post / Paneer Parota

திருமதி ஆதி வெங்கட் இவங்களிடமிருந்து சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்வதாய் மெயில் வந்த பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவங்களோட வலைப்பூவிற்கு நான் செல்வதும் அவர்கள் என் வலைப்பூவிற்கு வருவதுமாய் ஒரு நல்ல புரிந்துணர்வுடன் கூடிய பழக்கம். ஆதியின் கோவை2தில்லி வலைப்பூவிற்குச் சென்றால் ஒரு பத்திரிக்கையை திறந்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றும். பொழுது போக்காக பயனுள்ள பல விஷயங்களை அங்கு காணலாம், வாசிக்கலாம். நீங்களே போய் பாருங்க, அப்ப புரிஞ்சிப்பீங்க.


திருமதி ஆதி அவர்கள் அனுப்பிய சுய அறிமுகம்:-
சிவகங்கையில் பிறந்து, கோவையில் வளர்ந்து, திருமணமாகி தில்லியில் பத்து வருடங்கள் வாழ்க்கை. தற்போது புகுந்த வீட்டினருடன் திருவரங்கத்தில் வசிக்கிறேன். படித்தது இயந்திரவியல் துறையில் டிப்ளமோ. திருமணத்திற்கு முன்பு வரை வேலை பார்த்த அனுபவங்கள் உண்டு. அம்மாவிடமும், மாமியாரிடமும் கற்றுக் கொண்ட பாரம்பரிய சமையலும், தில்லி சென்ற பின் கணவரிடமும், அங்குள்ள தோழிகளிடமும் கற்றுக் கொண்ட வட இந்திய சமையலும் இதுவரை கை கொடுக்கிறது. 

இது என் மகளின் ஓவியம். தில்லியில் உள்ள எங்கள் நண்பரின் மகள், நாங்கள் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்த போது பத்து நிமிடத்தில் இதை பெரிய பேப்பர் ஒன்றில் வரைந்து கொடுத்தாள். அதை புகைப்படமெடுத்து தான் தற்சமயம் என் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளேன். 

கோவை2தில்லி என்பது என்னுடைய வலைத்தளம்.  இந்தியத் தலைநகரில் மத்திய அரசின் பணியில் சேவை செய்யும் என் கணவர், வெங்கட் நாகராஜ் என்று தன்னுடைய பெயரிலேயே வலைத்தளம் வைத்துள்ளார். என்னவரின் ஊக்குவிப்பால் தான் நான்கு வருடங்களாக வலையுலகில் உலா வருகிறேன். மூன்றாம் வகுப்பு படிக்கும் எங்கள் மகளுக்கும் ஒருவலைப்பூ உள்ளது. அதில் அவளது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

ஆதியின் அன்பான  மெயில் வாசகங்கள் ;

நீண்ட நாட்களாக தங்களது சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அம்மா, மாமியார் போன்றோரிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய சமையலும், வட இந்திய உணவுகள் மட்டுமே தெரிந்த எனக்கு புதிது புதிதாக சமைக்கும் தங்களைப் போன்றோர் முன் என்னுடைய குறிப்பை பகிர்வதில் சற்று தயக்கமாக இருந்தது. நேரமும் கிடைக்கவில்லை..

தங்களின் தளத்தில் பகிரும் சைவ குறிப்புகளுக்கு நானும் ஒரு ரசிகை. படிப்படியான செய்முறை குறிப்புகளை படங்களோடு பகிர்வதை பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கும். எப்படி நிதானமாக செய்ய முடிகிறது என்று. நான் வழக்கமாக செய்யும் சமையலில் தங்கள் தளத்தில் தந்திருக்கும் குறிப்புகளில் ஒத்து வருபவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதுண்டு. டிப்ஸ்களும் உபயோகமானவை.
நான்காம் ஆண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல பல குறிப்புகளையும், பகிர்வுகளையும் தாருங்கள். வாய்ப்பு தந்த தங்களுக்கு என் நன்றிகள்.

அருமையான சுயறிமுகம், அசத்தலான ப்ரஃபைல் பிக்சர். எனக்கு அனுப்பிய அன்பான மெயில் . ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
நல்வாழ்த்துக்கள் ஆதி. 

நான் ஆதியிடம் நம் தலைநகர் தில்லி ஸ்பெஷலாக ஒரு குறிப்பு அனுப்பி வையுங்கன்னு மெயில் செய்தேன். அதற்குத் தக்க உடனே இலகுவாக செய்யக் கூடிய சத்தான குறிப்பை அனுப்பி தந்தாங்க. மிக்க நன்றிபா.

திருமதி ஆதியின் விருந்தினர் பகிர்வு இதோ !

பனீர் பராட்டா

நான்கு வருடங்களாக பதிவுலகில் எனக்குத் தெரிந்த விஷயங்களையும், அனுபவங்களையும், சமையலையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நட்புகளிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சமையலை பொறுத்த வரை தற்போது மகளின் விருப்பம் தான். அவளுக்கு வட இந்திய உணவுகளில் தான் விருப்பம் அதிகம். இந்த பனீர் பராட்டா அவளுக்கு பிடித்ததில் ஒன்று. கணவர் எப்படியிருந்தாலும் சாப்பிட்டு விடுவார். குறை சொல்லும் பழக்கம் அவரிடம் இருந்ததில்லை. காரம் மட்டும் ஆகாது. முகத்தை பார்த்தே அதை தெரிந்து கொண்டு விடுவேன்....:))

வட இந்திய உணவுகளில் பனீருக்கு ஒரு சிறப்பான பங்கு இருக்கிறது. பாலை திரித்து தயாரிக்கப்படும் பனீரில் நம் உடலுக்கு தேவையான நல்ல பல சத்துகள் உள்ளன. பனீரை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் சப்ஜிகளில் பயன்படுத்துவார்கள். பிரபலமான பனீர் சப்ஜிகள் – பாலக் பனீர், மட்டர் பனீர், கடாய் பனீர், ஷாஹி பனீர் போன்றவை. ஆனால் அந்த பனீரை பயன்படுத்தி பராட்டா செய்வதை இன்று பார்க்கலாம். செய்வது மிகவும் எளிது.


தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு – 2 கப்
துருவிய பனீர் – 1 கப்
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
சீரகத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-
கோதுமை மாவை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவாக பிசைந்து மூடி வைக்கவும். பனீரை கேரட் துருவியில் துருவியோ, அல்லது உதிர்த்துக் கொண்டோ அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இது தான் பூரணம். இதை சப்பாத்திக்கு உள்ளே ஸ்டஃப் செய்ய வேண்டும்.
எலுமிச்சையளவு உருண்டைகளாக சப்பாத்தி மாவை உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து மாவைத் தொட்டுக் கொண்டு உள்ளங்கையளவு திரட்டி உள்ளே 1 தேக்கரண்டியளவு பனீர் கலவையை வைத்து மூடி மெலிதாக திரட்டிக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும். பனீர் பராட்டா தயார்.
 
ஊறுகாய், மற்றும் தயிருடன் சுவையான பனீர் பராட்டா ஜோராக இருக்கும். இதே போல் சீஸ் பராட்டாவும் செய்யலாம்.


என்னோட ஸ்பெஷல் பாலக் பனீர் குறிப்பை யும் உங்களிடம் பகிர விரும்புகிறேன். சமைக்க, ருசிக்க குறிப்பை கிளிக்கவும்.


நட்புடன்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.

திருமதி ஆதியின் பயனுள்ள பல டிப்ஸ்:
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டிருந்தால்  கோதுமை மாவை வாணலியில் போட்டு வறுத்து, துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். நல்லதொரு பயன் தரும்.

இருமலுக்கு மிளகும் சர்க்கரையும் சரி பாதியாக எடுத்துக் கொண்டு மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொண்டால், சிறிதளவு பொடியுடன் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் இரண்டு மூன்று நாட்களிலேயே சரியாகி விடும்.

வேர்க்கடலையின்  தோல் நீக்க - துணிப்பையில் கடலையைப் போட்டு நுனியை பிடித்துக் கொண்டு தரையில் அல்லது மேடையில் இரண்டு மூன்று தரம் அடித்தால் தோல் நீங்கியிருக்கும்.

இவையெல்லாமே என் மாமியார் சொல்லி அன்றாடம் நான் கடைபிடிப்பவை.

தேங்காயைத் துருவி பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைத்து விட்டால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். காலையில் எழுந்ததும் எடுத்து வெளியே வைத்து விட்டால் சமையலில் சேர்க்கும் போது சரியான தட்பவெப்பநிலைக்கு வந்து விடும்.

துவரம்பருப்பு வேகப் போடும் போது சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவிட்டால் குழைய வெந்து விடும். இது தில்லியில் இருந்தவரை நான் உபயோகித்த வழிமுறை.

காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.


மற்றும் என்னுடைய பதிவில் உள்ள கை வைத்தியங்கள் - 

சூப்பர் கஷாயம் - http://kovai2delhi.blogspot.in/2012/10/blog-post_10.html

கண்டந்திப்பிலி ரசம் - http://kovai2delhi.blogspot.in/2011/09/blog-post_12.html

கை வைத்தியங்கள் - http://kovai2delhi.blogspot.in/2011/04/2.html


அவசரத்துக்கு கை வைத்தியங்கள் - http://kovai2delhi.blogspot.in/2011/02/blog-post.html

மிக்க மகிழ்ச்சி ஆதி. நீங்களும் கலந்து கொண்டு இந்த சிறப்பு விருந்தினர் பகிர்வை கௌரவித்தமைக்கு  மனமார்ந்த நன்றி. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த வாரம் அசத்தலான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பான கடிதம்... பனீர் பராட்டா செய்முறைக்கு நன்றி... திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

Narumi Ohno said...

Nice receipe that too from my home town Srirangam.

priyasaki said...

ஈசியான பனீர்பரோட்டா குறிப்பு.அதை தந்து, இம்முறை சிறப்பு விருந்தினர் பக்கத்தை அலங்கரிக்கும் ஆதிவெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

ADHI VENKAT said...

சிறப்பு விருந்தினர் பகிர்வில் நானும் பங்கேற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு. ஆதி ,, வெங்கட் நாகராஜ் உங்க கணவரா.. மிக்க மகிழ்ச்சி.. என்னோட வலைத்தளத்தைப் படித்து ஊக்குவிக்கும் அன்பு சகோதரருள் அவரும் ஒருவர்.

உங்க குடும்பமே வலையுலகில் உலா வருவது குறித்து மகிழ்ச்சி.உங்க மகளுக்கும் என் அன்பு..

மிக அருமையான அறிமுகத்துக்கு நன்றி ஆசியா. :)

ஸாதிகா said...

ஏற்கனவே அறிமுகமான ஆதி உங்களின் அறிமுகத்தில் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.ஒரு நல்ல ரெஸிப்பியும் குறிப்புகளும் கொடுத்தது நன்று.வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

மிக அருமையான பனீர் பராட்டா, உங்கள் மாமியாரின் டிப்ஸ்களும் அருமை

Saratha said...

நானும் ஆதியின் வலைப்பூவை பார்த்திருக்கிறேன்.பனீர் பரோட்டா அருமையான குறிப்பு.ஆதிக்கும் அவங்க குறிப்பை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

ஆசியா! சிறப்பு விருந்தினர் பகிர்வு சிறப்பாகவே போய்க்கொண்டிருக்கிறது! வாழ்த்துக்கள்! ஆதிக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

கொஞ்ச நாட்களாகவே வலைப்பக்கம் வர முடியவில்லை. இப்போது தான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். கம்பு இட்லி, மஞ்சள் அடை எல்லாம் அசத்தலாக இருக்கின்றன! செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்!!

Menaga sathia said...

பனீர் பரோட்டா மிக அருமையாக இருக்கு..

ஆதியைப்பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி..டிப்ஸ்களுக்கு மிக்க நன்றி!!

GEETHA ACHAL said...

கலக்குறிங்க ஆதி...ரொம்ப சூப்பராக பரோட்டா செய்து இருக்கின்றிங்க...குட்டி பொன்னு வரைந்த ஓவியம் மிகவும் அழகு...வாழ்த்துகள்..

ADHI VENKAT said...

என்னுடைய பகிர்வை வாசித்து கருத்து தெரிவித்துள்ள நட்புள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

வாய்ப்பளித்த தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள். இதில் கலந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

மிக்க நன்றி தனபாலன் சார்.

மிக்க நன்றி Narumi Ohno.

மிக்க நன்றி ப்ரியசகி.

Asiya Omar said...

மிக்க நன்றி ஆதி.கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி தேனக்கா.

மிக்க நன்றி ஸாதிகா.

மிக்க நன்றி ஜலீலா.

மிக்க நன்றி சாரதாக்கா.

Asiya Omar said...

நீண்ட நாள் கழித்து வந்திருக்கீங்க,மகிழ்ச்சி. மிக்க நன்றி மனோ அக்கா.

மேனகா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

Snow White said...

முதலில் குட்டிப்பெண் வரைந்த ஓவியத்துக்கு பாராட்டுக்கள் ..பத்து நிமிடத்தில் வரைந்த படமா ? ஆச்சர்யமா இருக்கு ...
உங்க பனீர் பராட்டா குறிப்பு மிக அருமை ...அதே போல உங்க குறிப்புகளும் பிரமாதம் ...
உங்கள் வலைப்பூவும் அருமை ..
அழகான பதிவை அளித்த அக்காவிற்கு எனது நன்றிகள் ...

maha lakshmi said...

yesterday unga blog open panna mudiyala romba kashtam agitu enna achu

மாதேவி said...

வாழ்த்துக்கள்.