Tuesday, February 25, 2014

கம்பு இட்லி & அடை / வெங்காய சட்னி - Pearl Millet / Bajra Idli & Adai / Onion Chutney.

ஒரு நாள் என் தோழி உமாவுடன்   வாக்கிங் செல்லும் பொழுது இன்று என்ன டிஃபன் உங்க வீட்டில் என்று கேட்டதில்  அவங்க கம்பு இட்லின்னாங்க, ஆஹா அல் அயினில் கம்பு எங்கே கிடைக்கும்னு பார்த்தோம், பறவைகள் உணவுப்பகுதியை போய் பாருங்கன்னு சொன்னாங்க, அங்கே இல்லை சரின்னு என் கம்பு ஆசையை விட்டு விட்டேன், எங்க வேளாண் கல்லூரி விடுதிப்  பக்கம் தான் இந்த சிறு தானியங்கள் பயிரிடும் வயல்வெளிகள் , அங்கு தான் மாலை நேரம் அமர்ந்து படிப்போம், அப்பக் கூட இதை ருசிக்கனும்னு தோணலை.

தோழி உமா துபாய் சென்ற சமயம் எனக்கு நான் ஆசைப்பட்ட சில தானியங்களை வாங்கி வந்தாங்க, சரின்னு ரெசிப்பியையும் கேட்டேன், உமா மல்லிகா பத்ரிநாத் புத்தகம் பார்த்து செய்ததாக  ரெசிப்பி சொன்னங்க.அதன் படி உங்களுடன் பகிர்கிறேன்.

என் கணவரிடம் இன்று கம்பு இட்லி. உமா, கம்பு வாங்கி வந்தாங்கன்னு சொன்னேன், அட ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மூடை மூடையாக நாங்க கடலூரில் ஸ்டாக் வைத்து ஒரு மூடை வெறும் நூறு ருபாய்க்கு விற்று இருக்கிறோம், இப்ப துபாய் போய் வாங்கி வந்து சமைச்சு சாப்பிடப் போறோம், அப்பல்லாம் கம்பு நாம் சாப்பிடலாம்னு தோணினது கூட இல்லை கோழி,ஆடு மாடு உணவுன்னு நினைச்சேன் என்றார். 
நல்ல வரனுமேன்னு அவங்க சொன்ன அளவில் பாதி போட்டு செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது.அதனால் உங்களுடன் இந்தப் பகிர்வு. பக்குவமாக ஆட்டி பொங்கி வந்த பின்பு அவிக்கனும் , இதான் முக்கியம்.மற்றபடி இலகு தான்.


 தேவையான பொருட்கள்;
கம்பு - ஒரு கப் (குவித்து)
புழுங்கல் அரிசி - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
எண்ணெய் - 2 - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - கால்-அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சமையல் சோடா - கால் டீஸ்பூன் ( நான் சேர்க்க மறந்துட்டேன்)

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்.
செய்முறை:

 முதலில் கம்பு, அரிசி,பருப்பு  மூன்றையும் தனித் தனியாக எடுத்துக் கொள்ளவும்.நன்கு அலசிக் கொள்ளவும். கம்பையும் அரிசியையும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து  நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பை 1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.

 கம்பு அரிசியை சேர்த்து இட்லிக்கு அரிசி அரைப்பது போல் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக் கொள்ளவும். தேவைக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
கம்பு அரிசி மாவோடு அரைத்த பருப்பு கலவையை நன்றாக கலந்து வைக்கவும். மாவு பொங்கி வர 15 மணி நேரம் ஆகும்.


 மறு நாள் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய வைத்து கடுகு போட்டு தாளித்து  மாவில் கொட்டவும். சோடா உப்பும் சேர்த்து  மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
 இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லிக்கு மாவு வார்த்து வழக்கம் போல் அவித்து எடுக்கவும்.
ஆறியவுடன் ஸ்பூன் கொண்டு எடுத்தால் லட்டு மாதிரி சூப்பராக வந்து விடும்.
ஆரோக்கியமான சூப்பர் கம்பு இட்லி ரெடி. இதனை வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.
 என் மகளுக்கு அந்த மாவையே அடையாக சுட்டுக் கொடுத்தேன்.  சூப்பர்.
மகளை கட்டாயப் படுத்தி தான் சாப்பிட வைத்தேன்.

வெங்காய சட்னி செய்ய:
நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3  அல்லது அதிகமாக (காரம் அவரவர் விருப்பம்)
சிறிய தக்காளி - 1
புளி - புளிக் கொட்டையளவு
உப்பு - தேவைக்கு
நல்ல எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்.

முதலில் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் வெங்காயம், தக்காளி சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,ஆற விட்டு  புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். விரும்பினால் சிறிது நல்ல எண்ணெய் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
கம்பு இடலி அடைக்கு சூப்பர் காம்பினேஷன்.
உங்களுக்கு கம்பு கிடைத்து பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.
இந்தளவு மாவில் 8 இட்லி, 4 அடை சுடலாம்.
ஒரு இட்லி அல்லது அடை  கிட்டதட்ட 100 கலோரி.


இந்த வார நளினியின் தமிழர் சமையல் செவ்வாய் இவெண்ட்டிற்கு ( TST) இக்குறிப்பை அனுப்புகிறேன். மற்றும் இதனை  Gayathri's Walk through memory lane  @ Motions and Emotions அனுப்புகிறேன்.

11 comments:

Manjula Bharath said...

very healthy and delicious idli & adai :) tempting me dear !!

Asiya Omar said...

Thanks for your lovely comment & Visit Manjula.

ADHI VENKAT said...

சத்தான கம்பு இட்லியும், அடையும். செய்து பார்க்கத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சத்தான சமையல் குறிப்பு சகோதரி... நன்றி...

Menaga sathia said...

மிகவும் ருசியான மற்றும் சத்தான பகிர்வு!!

GEETHA ACHAL said...

ரொம்ப சத்தான இட்லி...சட்னி சூப்பராக இருக்கு...

Priya Anandakumar said...

very healthy and delicious kambu idli and looks tempting...

சே. குமார் said...

புதுமையான இட்லியா இருக்கே...
சத்தான உணவு...

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

prethika skm said...

healthy and very authentic food of tamil's

சுந்தரா முத்து said...

சத்தான சமையல் குறிப்புகளுக்கு நன்றி ஆசியா!

கம்பு மாவாகவும் (bajra atta)இங்கே கடைகளில் கிடைக்கும். சப்பாத்தி மாவுடன் கால்பங்கு கம்புமாவு கலந்து செய்தால் சுவைக்கு சுவையுமாச்சு, ஏகப்பட்ட இரும்புச் சத்துமாச்சு.