Wednesday, April 30, 2014

காளிப்ளவர் 65 / Gobi 65 / Cauliflower 65


இப்படி ஈசியாக செய்து பாருங்க,மொறு மொறுன்னு சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்;
காளிப்ளவர் - அரைக் கிலோ
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
(65 மசாலா இல்லாதவர்கள் சில்லி பவுடர்,கரம் மசாலா
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் பின்ச் - ரெட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்)
உப்பு - தேவைக்கு
தக்காளி சாஸ் அல்லது தக்காளி ப்யூரி - 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:
காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதி கொதிக்கும் நீரில்  போட்டுதேவைக்கு சிறிது உப்பு சேர்த்து  அடுப்பை அணைத்து விடவும்.அதனை 5 நிமிடம் கழித்து வடிகட்டி வைக்கவும்.

நன்கு குளிர்ந்த பிறகு முதலில் சிக்கன் 65 மசாலா தேவைக்கு மிகச் சிறிது உப்பு தக்காளி ப்யூரி சேர்த்து  பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு அத்துடன் மேற்கூறிய அனைத்து மாவு வகைகளையும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.தேவைப்பட்டால் மாவின் அளவை கூட்டிக் கொள்ளலாம். உப்பும் காரமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவைக்கு கடாயில் எண்ணெய் சூடேற்றி மிதமான நெருப்பில் காளிப்ளவரை இரண்டு மூன்று முறையாக போட்டு பொரித்து பொன் முறுகலாக எண்ணெய் வடித்து எடுக்கவும்.
பேப்பர் டவலில் வைத்தால் சுத்தமாக எண்ணெய் இருக்காது.

சுவையான மொறு மொறு கோபி 65 ரெடி.




இதனை சும்மாவும் ஸ்டார்டராகவும் சாப்பிடலாம் அல்லது புலாவ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடனும் பரிமாறலாம்.

நீங்களும் இந்த முறை பிடித்திருந்தால் செய்து பாருங்க.
வெஜிடேரியன்ஸ் சிக்கன் சாப்பிடாவிட்டாலும் சிக்கன் 65 மசாலா உபயோகிப்பீங்க தானே அப்படியில்லையெனில் தேவைக்கு சில்லி பவுடர்,கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கோங்க.

Monday, April 28, 2014

ஆந்திரா குண்டூர் சிக்கன் / Andhra Guntur Chicken


தேவையான பொருட்கள்:

சிக்கன் அரை கிலோ - முக்கால் கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 - 6 (காரம் அவரவர் விருப்பம்)
முழு மல்லி – 3 தேக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி
மல்லி இலை சிறிது
உப்பு – தேவைக்கு.

செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விடவும்.

அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.
கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
 சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.





சுவையான குண்டூர் சிக்கன் ரெடி. இதனை ப்ளைன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறினால் பொருத்தமாக இருக்கும். நான் இக்குறிப்பை முன்பே (2009) அறுசுவையில் பகிர்ந்திருக்கிறேன்.

Sunday, April 27, 2014

விதம் விதமான கீரை சமையல் குறிப்புகள் / Variety greens recipes.

விதம் விதமான கீரை சமையல்:
என் வலைப்பூவில் கொடுத்த ஒரு சில கீரை குறிப்புகளை தொகுத்து இங்கு தந்திருக்கிறேன். லின்க் கிளிக் செய்து குறிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை சால்னா
முருங்கைக்கீரை பாசிபருப்பு

பாலக் பனீர்

ஃப்ரை ஆலு பாலக்


மணத்தக்காளி கீரை மசியல்

கீரை பருப்பு

கீரை கோஸ் கேரட் பொரியல்

முருங்கைக்கீரை கூனி இறால் பொரியல்

பாலக் சிக்கன்

பாலக் கோஸ் பொரியல்

வெந்தயக்கீரை பனீர் பிரியாணி

ப்லைன் பாலக்

முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா


கோங்கூரா /புளிச்சக்கீரை பச்சடி

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு

Spinach dal

Moringa flowers egg fried rice

Kofta in spinach gravy

Dal Palak
லின்க் கிளிக் செய்து குறிப்பை பார்க்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Friday, April 25, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 18 -திருமதி பினுஷா ஆஷிக் - ட்ராகன் சிக்கன் - இந்தோ சைனீஸ் - Guest Post - Mrs Binusha Ashiq / Dragon Chicken (Indo- chinese)

திருமதி பினுஷா ஆஷிக், இவங்களை சந்தித்த பொழுது என்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வு பற்றி சொல்லி ஏதாவது விரும்பினால் ரெசிப்பி பகிரலாம்னு சொன்னேன். சொன்ன அடுத்த நிமிடம் தன் மொபைலில் உள்ள இந்தப் படங்களை தந்து ரெசிபியும் சொன்னவுடன் அசந்து போனேன். பல வருடம் சமையலில் அனுபவம் உள்ளவங்க பலரிடம் நான் இது பற்றி சொல்லும் பொழுது கூட எல்லோரும் குறிப்பு தர தயங்கித் தான் பார்த்திருக்கிறேன.கேட்ட அடுத்த நிமிடமே சிறிதும் யோசிக்காமல் ரெசிபியை பகிர்ந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தியது. நிச்சயம் இந்தக் குறிப்பை பலர் செய்து பார்ப்பாங்க.மனமார்ந்த நன்றி பினுஷா. 

சுய அ றிமுகம்:
திருமதி.பினுஷா ஃபாத்திமா, சொந்த ஊர் நெல்லை,  கோவைக் கல்லூரியொன்றில் இண்டர்நேஷனல் பிஸினஸ் பட்டப்படிப்பு, புகுந்த இடம் சென்னை, திருமணமாகி இரண்டு வருடங்கள், கணவர் டாக்டர்.ஆஷிக்.வசிப்பது அபுதாபியில்,ஒரு வயது பெண் குழந்தை என்ற சந்தோஷமான குடும்பம்.

இவர் இன்று நம்முடன்  பகிரும்  குறிப்பு:
ட்ராகன் சிக்கன் - இந்தோ சைனீஸ்:


தேவையான பொருட்கள்;-
சிக்கன் போன்லெஸ் (சிறிய துண்டுகளாக்கியது) – 500 கிராம்
முதலில் சிக்கனை ஊற வைக்க:
இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1
கார்ன்ஃப்லோர் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு.
பின்பு தயார் செய்ய  தேவையானவை:
இஞ்சி பொடியாக நறுக்கியது – 1/2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது – 1/2 டேபிள்ஸ்பூன்
ரெட் சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் ,கொடைமிளகாய் துண்டுகளாக நறுக்கியது – தலா ஒன்று
டொமட்டோ சாஸ் – 4 - 6 டேபிள்ஸ்பூன் அல்லது  (உங்க டேஸ்டிற்கு)
சோயா சாஸ் 1 – 1 1/2  டேபிள்ஸ்பூன் அல்லது (உங்க டேஸ்டிற்கு)
உப்பு தேவைக்கு
சீனி – 1/2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் நறுக்கியது சிறிது
எண்ணெய் சிக்கன் ஃப்ரை செய்ய தேவையான அளவு.
செய்முறை:


 
1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
2. அத்துடன் சிக்கனை ஊற வைக்க மேற்சொன்ன பொருட்களை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
3. பின்பு எண்ணெயை நன்கு காய வைத்து பொன்னிறத்தில் கிரிஸ்பாக பொரித்து எடுக்கவும்.
4. ஒரு அடிகனமான தவாவில் பொரிக்க உபயோகித்த எண்ணெயில் 2 டேபிள்ஸ்பூன் விடவும். அதில் இஞ்சி,பூண்டு பொடியாக நறுக்கியதை சேர்த்து நன்கு பொன் முறுகலாக வதக்கவும். அத்துடன் சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும். சிறிது வதக்கவும்(30 செகண்ட்), நறுக்கிய ஆனியன்,கொடைமிளகாய் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.  டொமட்டோ சாஸ் சேர்க்கவும். பிரட்டி விடவும். சோயா சாஸ், சீனி சேர்க்கவும். நன்றாக பிரட்டவும்
5. அத்துடன் ஃப்ரை செய்த  சிக்கன் சேர்த்து நன்கு ஒரு சேர பிரட்டி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரிபார்க்கவும்.
6. நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். இது ட்ரையாகத்தான் இருக்கும். கிரேவி மாதிரி வேண்டுமானால் கார்ன் ஸ்டார்ச் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான ட்ராகன் சிக்கன் (இந்தோ சைனீஸ்) ரெடி.
சூடாக ஃப்ரைட் ரைஸ், நாண் அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம்.
வித்தியாசமாக சிக்கனில் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று நினைத்தால் இதைச் செய்து பாருங்க. சூப்பராக இருக்கும். வெஜிடேரியன்ஸ் காளிப்ளவர் உபயோகித்து இதை செய்து பார்க்கலாம்.
பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி பினுஷா. நல்வாழ்த்துக்கள்.
முக்கியக் குறிப்பு:
அடுத்து வரும் பகிர்வுகளுக்கு  உங்கள் குறிப்புகள் வரவேற்கப்படுகின்றன,  சுய அறிமுகம், குறிப்பின் படங்கள்  இவற்றை அனுப்ப வேண்டிய முகவரி asiyaomar@gmail.com. விபரமறிய இங்கே கிளிக்கவும்.
தற்செயலாக இன்று பார்க்கும் பொழுது இது என்னுடைய தமிழ் வலைப்பூவில் 600 -வது பகிர்வு. அனைவரும் தொடர்ந்து ஆதரவு தருவதற்கு என் மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


Tuesday, April 22, 2014

ப்ராயில்ட் ஸ்பைசி சிக்கன் விங்ஸ் / Broiled Spicy Chicken Wings


தேவையான பொருட்கள்;
ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் தோலுடன் - 500 கிராம் ( 12 எண்ணிக்கை)
கார்லிக் பேஸ்ட்  - 1-2 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1டீஸ்பூன்
பப்ரிகா பவுடர் - 1டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 -2 டீஸ்பூன் (விரும்பினால்)
ஒரிகானோ - 1 டீஸ்பூன் அல்லது விரும்பும் ஹெர்ப்ஸ்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி மேற்கூறிய எல்லா மசாலா பொருட்களும் சேர்த்து விரவி ஃப்ரிட்ஜில் 4மணி நேரம் வைக்கவும் அல்லது ஒருநாள் முன்பே ரெடி செய்து வைக்கலாம்.
எலெக்ட்ரிக் ஓவனை மீடியம் ப்லேம் செட் செய்து கொள்ளவும்.
ஒரு ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் விரித்து அதன் மேல் க்ரில் ப்லேட் வைக்கவும்.பின்பு ரெடி செய்த சிக்கன் விங்ஸ் அடுக்கவும்.
ஓவனில் ட்ரேயை கவனமாக வைக்கவும். ஒரு பக்கம் வெந்தவுடன் 20 நிமிடம் கழித்து திருப்பி வைக்கவும். கவனமாக முழுவதும் நன்கு வெந்து கோலடன் ப்ரவுன் கலர் வரவும் ஓவனில் இருந்து எடுக்கவும்.


விரும்பியவாறு பரிமாறவும். காய்கறி சாலட், ஜூஸ்  அல்லது சூப் உடன் ஸ்டார்டராகவும் பரிமாறலாம்.எலுமிச்சை துண்டுகளையும் உடன் வைத்து பரிமாறவும். சிக்கனை ஊற வைக்க, எலுமிச்சையோ தயிரோ தேவையில்லை. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.மேற் சொன்ன முறையில் செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.

பாப்பா ஜோன்ஸ் பிட்ஸாவுடன் தரும் சிக்கன் விங்ஸ் மணம் கிடைத்தது. இந்த ஒரிகானோ சேர்ப்பதால். ஒரிகானோ இல்லையென்றால் கசூரி மேத்தி கூட மணத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

சிக்கன் விங்ஸ் பதில் சிக்கன் தைஸ் கூட உபயோகித்து செய்யலாம்.பிடித்திருந்தால் செய்து பாருங்க.

Friday, April 18, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 17- திருமதி ஷாமா நாகராஜன் / மதுரை மட்டன் பிரியாணி / Guest Post - Mrs.Shama Nagarajan / Madurai Mutton Briyani


இந்த வெள்ளி சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்பவர் திருமதி ஷாமா நாகராஜன். சொந்த ஊர் மதுரை, திருமணத்திற்கு பின்பு வசிப்பது ஹைதராபாத்.இவர் எனக்கு தன்னுடைய இந்த குறிப்பை சென்ற ஃபிப்ரவரி மாதமே அனுப்பி விட்டார். மார்ச் 7 ஆம் தேதி பகிர வேண்டியது, பகிர முடியாத சூழலுக்கு மிக்க வருந்துகிறேன், காத்திருப்பிற்கு மிக்க மகிழ்ச்சி ஷாமா. நான் பலமுறை ஷாமாவிடம் அவரின்  ப்ளாக்கில் பகிரும்படி சொல்லியும் இது உங்களுக்குத் தான் அக்கா, எப்ப முடியுமோ அப்ப பகிருங்கள் என்ற அன்பைக் கண்டு நான் பிரம்மித்துப் போனதென்னவோ உண்மை தான். மனமார்ந்த நன்றி.


இவரின் ஆங்கில சமையல் வலைப்பூ easy2cookrecipes  2008 -ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதில் வெற்றிகரமாக குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.எண்ணூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புக்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன, இவரின் தனித்தன்மை சுருக்கமாக குறிப்பை நச்சென்று பகிர்வது தான். நீங்கள் தேடும் பல குறிப்புகள்  நிச்சயம் இவரின் வலைப்பூவில்  இருக்கும். சென்று பார்க்க இங்கே கிளிக்கவும்.
இது தவிர myhandicraftscollection என்ற வலைப்பூவில் தன் மகளும் இவரும் ஆர்ட்& கிரஃப்ட் மற்றும் கைவேலைப்பாடுகள் பலவற்றை பகிர்ந்தும் வருகிறார். 

தன்னுடைய சுய அறிமுகமாக  அவர் தெரிவிப்பதை பார்க்க இங்கே கிளிக்கவும்.

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு ஷாமாவின் குறிப்பு:
மதுரை மட்டன் பிரியாணி:


தேவையான பொருட்கள்;
மட்டன் – அரைக்கிலோ
பிரியாணி ரைஸ் (சீரக சம்பா) – 2 கப்
நறுக்கிய வெங்காயம் – பெரியது - 2
நறுக்கிய தக்காளி –மீடியம் சைஸ் – 2
பச்சை மிளகாய் – 6
பொடியாக நறுக்கிய புதினா – அரைகப்
மல்லி இலை நறுக்கியது – ஒரு கையளவு
தயிர் – அரை கப்
எலுமிச்சை ஜூஸ் – 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 8 பல்( அரைத்துக் கொள்ளவும்)
கறிமசாலாத்தூள் – 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 - 2 டீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மல்லிப் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
சோம்புதூள் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
பட்டை – 4 -6 சிறிய துண்டு
பிரிஞ்சி இலை -2
அன்னாசிப்பூ – 2
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கு.
செய்முறை:
1.மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, மல்லி, புதினாவை  நறுக்கி வைக்கவும்.
2.இஞ்சி பூண்டு விழுது உப்பு மட்டன் சேர்த்து வேக வைக்கவும்.
3.அரிசியை நன்கு அலசி தண்ணீரில் ஊற வைக்கவும்.
4.ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்யவும்,ஏலம்,பட்டை,கிராம்பு,அன்னாசிப்பூ,பிரிஞ்சு இலை சேர்க்கவும். வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை அனைத்தும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி சிறிது வேக விடவும்.
5.நன்கு வெங்காயம், தக்காளி மசிந்து வரும் பொழுது  மேற்குறிப்பிட்ட மசாலா பொருட்கள், தயிர்  யாவும் சேர்க்கவும். நன்கு வதக்கவும். வேக வைத்த மட்டன் சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து குறைந்த தணலில் சில நிமிடம் எல்லாம் சேர்ந்து வேக விடவும்.
6.பிரியாணி செய்யும் பாத்திரத்தில் தாராளமாக தண்ணீர், தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஊறிய அரிசியை சேர்க்கவும்.அரிசி முக்கால் பதம் வெந்தவுடன், வடித்து விடவும்.
7. இத்துடன் வேக வைத்த மட்டன் மசாலாவை சேர்க்கவும். பக்குவமாக கலந்து விடவும். இத்துடன் எலுமிச்சை ஜூஸ், நெய் சேர்த்து சிக்கென்று மூடி மிகச் சிறிய நெருப்பில் 10 நிமிடம் மூடி  வைக்கவும்.
8.பிரியாணி நன்கு ரெடியாகி ஆவி வெளியே வர ஆரம்பிக்கும். அடுப்பை அணைக்கவும்.
9. மீண்டும் 10 நிமிடம் கழித்து திறந்து பக்குவமாக பிரட்டி பரிமாறவும்.
சூடான சுவையான கமகமக்கும் மதுரை மட்டன் பிரியாணி ரெடி.


சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி அக்கா.
ஷாமாவின் இந்த பாரம்பரிய மதுரை மட்டன் பிரியாணி குறிப்பை நீங்களும் செய்து பாருங்க. படத்தைப் பார்த்தாலே அசத்தலாக இருக்கு.
ஷாமா, தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அசத்தலான மதுரை மட்டன் பிரியாணி குறிப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.
பின் குறிப்பு:
சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் asiyaomar@gmail.com -ஐ தொடர்பு கொள்ளவும்.விபரம் இங்கே கிளிக்கவும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.