Monday, January 5, 2015

நெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar

சாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும்  ஒவ்வொரு விதமாக செய்வாங்க.
ரெடிமேடு  சாம்பார் பொடி உபயோகிச்சோமா டக்கென்று சாம்பார் வைச்சோம்மான்னு ஒரு சிலநேரம் செய்வோம்.
ஆனால் வருஷப்பிறப்பு, பொங்கல் சமயம் இப்படி நாமே வறுத்து இடித்து எல்லாக்காயும் போட்டு சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் ருசியும் மணமும் தனி தான். இந்தக்குறிப்பை நம்மோடு பகிர்ந்து கொள்பவர் அன்புத்தோழி திருமதி. உமா சங்கர்.முன்பே இவங்க சிறப்பு விருந்தினர் பகிர்வில் பாவ் பாஜி செய்து காட்டியிருக்காங்க.
தேவையான பொருட்கள்;
துவரம் பருப்பு - 150 கிராம்
(கலவை காய்கறி - கத்திரி,முருங்கை,அவரை, வெண்டை, விரும்பினால் உருளை சேர்த்து )- 400 கிராம்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
புளி - எலுமிச்சையளவு.
தாளிக்க:
எண்ணெய் - 1 + 1  டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பால் பெருங்காயம் - பொடித்தது - அரை டீஸ்பூன்
சாம்பார் மேலே தூவ - நறுக்கிய மல்லி கருவேப்பிலை.

இடித்துக் கொள்ள அல்லது பொடித்துக் கொள்ள:
முழுமல்லி - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
அரிசி - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4 அல்லது 6
(சேர்மானப் பொருட்கள் அளவு உங்க ருசிக்கு தக்கபடி சேர்த்துக் கொள்ளலாம்)
வெறும் வாணலியில் நன்கு மணம் வரும் படி வறுத்துக் கொள்ள வேண்டும்.அரிசி லேசாக சிவற வறுபட வேண்டும்.
ஆற விட்டு உரல் இருந்தால் இடித்துக் கொள்ளவும் இல்லாவிட்டால் மிக்ஸி ஜாரில் போட்டு பர பரவென்று பொடித்துக் கொள்ளவும்.
வெறுமே பருப்பை குக்கரில் வேக வைத்து வைக்கவும்.

புளியை கரைத்து வைக்கவும்.
பருப்பின் மேல் வைத்து உருளைக்கிழங்கு சேர்ப்பதாய் இருந்தால்  வேக வைத்து எடுக்கலாம்.கத்திரி,முருங்கை, அவரை,வெண்டை,வெங்காயம்,தக்காளி  நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கத்திரி,அவரை,முருங்கை தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பின்பு நறுக்கிய தக்காளி வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்க்கவும்.புளித்தண்ணீர் சேர்க்கவும்.
பொடித்த சாம்பார் பொடி சேர்க்கவும்.

மஞ்சள் ,உப்புத்தூள்கள் சேர்க்கவும்.
கலந்து விட்டு கொதிக்க வைக்கவும்.
வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்,வெண்டைக்காய் வதக்கவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.கலந்து விடவும்.
வேகவைத்த பருப்பு சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
மூடி சிறிது நேரம் நன்கு கொதிக்க விடவும்.
தாளிக்க சொன்னவற்றை வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,பொடித்த பால் பெருங்காயம் சேர்த்து தாளித்து ரெடியான சாம்பாரில் கொட்டவும்.
நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.கலந்து விடவும்.
சுவையான நெல்லை இடி சாம்பார் ரெடி.
சூடாக சாதத்துடன்  பரிமாறவும்.
நாமே வறுத்து இடித்துச் சேர்த்து செய்த  சாம்பார் அமோகமாக இருக்கும்.
இது நெல்லை சைவாள் சாம்பார். இது மீதியானால் அதனுடன் அன்று வைத்த காய்கறிப்பொரியல்,அவியல், கூட்டு இவற்றை சேர்த்து சுண்ட வைத்து மறுநாள் இந்தப் பழங்கறியை தண்ணீர் விட்டு வைத்த பழைய சாதத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்குமாம்.
செய்து ருசித்துப் பாருங்க.

குறிப்பு :  திருமதி உமா சங்கர்.பகிர்வுக்கு  மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

5 comments:

-'பரிவை' சே.குமார் said...

அக்கா...
இப்போ அலைனில்... 15 நாள் இங்குதான்... ஹோட்டல் சாப்பாடு...
மீண்டும் அபுதாபி சென்றதும் செய்து பார்க்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் அட்டகாசமான விளக்கம்...

இன்றே செய்கிறேன் என்று வீட்டில் சொல்லி உள்ளார்கள்.... நன்றி....

Rasi Annanthi said...

Thanks asiya.

Suchi Sm said...

Super flavorful sambar..

ezhil said...

இதே காம்பினேஷனில்தான் ரெடிமேட் பொடி அரைத்து வைத்துள்ளேன். ஒரு நாளாவது ஃப்ரெஷ்ஷாக செய்யப் பார்க்கிறேன். என் தோழி இதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துச் செய்வார். அதுவும் ஒரு புதுமணம், புது ருசிதான்